தொல்தமிழரின் சகுன நம்பிக்கைச் சுவடுகள்

முனைவர் ம. தமிழ்வாணன்

முதுநிலை ஆய்வு வல்லுநர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

தரமணி, சென்னை – 113

 

பொதுவாகச் சகுனம் அல்லது நிமித்தம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாக விளங்குகிறது. பண்டைத் தமிழக மக்களிடையே மரபாகச் சில நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. அவ்வகையில், தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானவையாகும். அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பிற்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை சார்ந்ததாகவோ இருப்பதாகப் பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான செவ்விலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. இவை பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

சகுனம்(நிமித்தம்)

சகுனம் அல்லது நிமித்தம் என்ற சொல்லுக்குக் காரணம், சகுனம், அடையாளம், பொருட்டு ஆகிய பொருள்கள் உள்ளன. சகுனம் என்பது இயற்கையின் மொழி! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவதாகும். மனிதன் எவ்வளவோ நவீன  வாழ்க்கை முறைகளுக்கு போயிருந்தாலும் தவிர்க்க முடியாதவைகளாக சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சகுனங்கள் மற்றும் நிமித்தங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூடச் சகுனங்கள், நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவையாகும். இவற்றை இரண்டாகப் பகுப்பர் அவை, 1. சுபசகுனங்கள் 2. அசுப சகுனங்கள் ஆகும்.

சுபசகுனங்கள்

மக்களால் சுபசகுனமாகக் கருதப்படுவது வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பதும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலயமணி ஓசை, விளக்கு, தாமரைப்பூ, நாய் தன் உடலைச் சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் போன்றவைகளாகும்.

அசுப சகுனங்கள்

மக்களால் அசுபசகுனமாகக் கருதப்படுவது அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது, விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு ஆகியவையாகும்.

சகுனங்களாகக் கருதப்படுபவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால், அதை நாம் நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போதுதான் இந்த ஆராய்ச்சியில் இறங்குகிறோம். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்கிறார்கள். நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல்லாட்சி வழங்கப்படவில்லை. ஆனால் புள்(பறவை) என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அக்காலத்தில் புள் பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது. [தொல்காப்பியம் பொருளதிகாரம் 88:16-17] சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது.[ சிலப்பதிகாரம் 16-165-169]

செவ்விலக்கியத்தில் சகுனச் செய்திகள்

அங்கத்துடிப்புகள்

தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும்.

செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்” (தொல்.கற்பு.36:3-4)

 என்று தொல்காப்பியர் பதிவிட்டுள்ளார். தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய(மிகுதியாக) கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. அதனால் தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை அடிகள் சுட்டக்காணலாம்.

இரவு நேரங்களில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. அதனால் பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி போன்றவற்றைக் கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலனைக்  கண்டறிந்துள்ளனர். இதனை,

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி” (தொல்.புறத்.3:1)

என்னும் தொல்காப்பிய அடி வெளிப்படுத்துகின்றன. ஆண்களுக்கு வலதுபுறமும் பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல சகுனமாகும்.

பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,

வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்

கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள்.” (கம்ப,சுந்தரகாண்டம்.202:2-4)

மற்றொரு பாட்டில் பெண்களுக்கு இடக்கண்ணும் ஆண்களுக்கு வலக்கண்ணும் துடித்தால் நன்மை என இன்றும் நம் தமிழர்களின் வழக்குகளில் இருப்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது.

 “கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன

எண்ணுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநா ளதன்” (சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை 236-240)

இதில், கண்ணகி கோவலனைப் பிரிந்து வருத்தமுற்றிருந்தபோது, இந்திர விழாவில் கோவலனும் மாதவியும் கலந்து இன்புற்றிருக்கின்ற அவ்வேளையில், கண்ணகிக்கு வலக்கண்ணும் அதே நேரத்தில் மாதவிக்கு இடக்கண்ணும் துடித்தன என இளங்காவடிகள் கூற்றின் மூலம் பழந்தமிழர் வாழ்வில் நீண்ட பழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனினும் ஏனைய செவ்வியல் நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கச் செய்தியாகும்.

கனவும் விளைவும்

பொதுவாகக் கனவு என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வினை உணர்த்துவதாக இருக்கின்றன என இலக்கியங்களின் வாயிலாக நாம் பல்வேறு இடங்களில் காணலாம். புறநானூற்றிலும் கனவினால் ஏற்பட்ட ஓர் அச்சத்தைப் பற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்

களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்

வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்    

கனவின் அரியன காணா நனவின்” (புறம்.41:8-11)

இப்பாடலால் சோழன் கிள்ளிவளவனின் பகைவர்களுக்கு வற்றிய மரம் தீப்பிடித்து எரிவது போலவும் எரிகொல்லி விழுவது போலவும் யாரோ ஒருவர் தன் தலையில் எண்ணெய் வார்ப்பது போலவும் தன் படையானது முழுமையாக வீழ்ந்தன போலவும் கனவு கண்டதாக புலவர் கோவூர் கிழார் பதிவு செய்திருத்தலின் மூலம் கனவில் நிகழ்ந்த நிகழ்வு அவர்களது எதிர்கால வினைகளுக்குக் குறிப்புணர்வாக அமைந்திருப்பதனை இங்கே காணமுடிகிறது. மேலும் கனவு நிகழ்வின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது விளக்கப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் (சிலம்பு.15:97-98) கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் (சிலம்பு.20:1-7) தீய நிமித்த குறிகளாக காட்டப்பட்டுள்ளன. இராமாயணத்தில் சீதைக்கு இடம் துடித்ததினால் ஏற்படப்போகும் நன்மையை திரிசடை வாயிலாகக் கூறும் பாடல்வரிகள் கொண்டும் அறியலாம். பொன்வண்டு ஒன்று செவியினிடத்தில் இன்னிசையைப் பாடிச் சென்றதன் வாயிலாகவும் சிங்கம் கூட்டத்தோடு வந்து சீதையை அழைத்துச் செல்வது போல் கண்ட கனவின் வாயிலாகவும் சீதைக்கு நன்மை ஏற்படப்போகிறது என்பதனைத் திரிசடை உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. திரிசடையின் கனவில் தனது பத்துத்தலைகளிலும் இராவணன் எண்ணெய்த்தேய்த்துக் கொண்டு கழுதையும் பேயும் பூட்டியத் தேரின் மீதேறி இரத்த ஆடையுடன் தென் திசை நோக்கி செல்வது போல் கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறியாக சொல்லப்பட்டுள்ளது.

கணியரும் கணித்தலும்

தொல்தமிழ் மக்கள் நாள், கிழமைப் பார்த்து தங்களது செயலினைத் தொடங்கியுள்ளனர். செவ்வியல் நூலில் போர் தொடங்குவதற்குமுன் நல்ல நாள் பார்த்தனர் என்றும் அதற்கென அரண்மனை கணியர் என அழைக்கப்படும் கணியர் நாளைக் கணித்துக் கூறினர் என்றும் புறநானூற்றுப் பாடல் சொல்கின்றது.

புலவர்களும் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறவேண்டி, நாளையும் கோளையும் பார்த்துச் சென்றனர் என புறநானூறு மூலம் நாம் அறியலாம்.

நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்

பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,” (புறம்.124:1-2)

இதற்கு தொல்காப்பிய நூலிலும் சான்று உள்ளது. “குடையும் வாளும் நாள்கோள்”(தொல்.பொருள்.புறத்.11:1) என கூறுவதன் மூலம், போர் தொடுத்து செல்ல வேண்டிய திசையை நோக்கி, நல்ல நாளில் தன் வலிமையான வாளினை வலம் வரச் செய்தனர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையை முழுத்தும் என அழைத்தனர். அதுவே தற்போது சுபமுகூர்த்தம் என அழைக்கப்படுவதைக் காணலாம்.

குடைநாட் கோள்

மறவர் எல்லாரும் நற்சகுனம் பார்த்துப் போர்க்கெனப் புறப்படுதல் என்பது இயலாதது. ஆதலின், குடை, வாள், முரசு ஆகியவற்றை நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் புறவீடு செய்வதென்ற வழக்கம் வந்தது. அவ்வழக்கம் பற்றிக் குடையைப் புறவீடு செய்த இந்நிகழ்வு குடைநாட் கோள் என்பதாயிற்று.

சென்று அடையார் மதில் கருதிக்

கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.” (புற.வெண்பா.6:96)

(அடையார் = பகைவர்)

வாள்நாட் கோள்

முன்பு கூறியது போலவே நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் வாளினைப் புறவீடு செய்தலின் வாள்நாட் கோள் எனப் பெற்றது.

கலந்துஅடையார் மதில்கருதி

வலம்தருவாள் நாட்கொண்டன்று” (புற.வெண்பா.6:97)

(வலம் = வெற்றி)

தொல்தமிழர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களைத் திங்களும் உரோகினியும் கூடிய நாளில் நடத்தி வைத்துள்ளனர்.

கனையிருள் அகன்ற கவின்பெறு காலை

கோல்களால் நீங்கிய கொடு வெண்டிங்கள்

கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அகம்.86:5-7)

நல்லாவூர் கிழார் பாடிய இவ்வடிகளில்  “வெண்டிங்கள் (திங்கள்) மற்றும் கேடில் விழுப்புகழ் (உரோகினி) நாடலை” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளின் வழி அறிந்து கொள்ளலாம். மற்றொரு அகப்பாடலிலும் விற்றூற்று மூதெயினனார் பதிவு செய்துள்ளமை சுட்டத்தக்கது.

இருவிசும்பு விளங்கத் திங்கள்

சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

கடிநகர் புனைந்து கடவுட் பேணி

படுமண முழவோடு பரூஉப்பணை இமிழ” (அகம்.136:4-7)

மக்கள் திங்களும் உரோகினியும் கூடிய நாளை குற்றமற்ற நன்னாள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்றும் அத்தகைய நாளிலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. (திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் – திங்களை உரோகினி கூடிய நன்னாள்).

வெள்ளியும் பிறவும்

தூமகேது (கரந்துறை கோள் எனவும் கூறுவர்) என்னும் கோளின் தோற்றம் உலகிற்கு பெருந்தீங்கு என்பர். மைம்மீன் ஆனது சனிக்கோளைக் குறிப்பதாகும். புறநானூற்றில் பாரி மன்னனின் பண்புகளைப் பாடுகின்றபோது, ‘சனிமீன் புகையினும்’ – எல்லா திசையிலும் புகை தோன்றி, வெள்ளி தெற்கே நோக்கி ஓடினால் உன் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று புலவர் கபிலர் போற்றிக் கூறியுள்ளதன் மூலம் இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது என அறிவிக்கின்றன.

                “மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்

                தென்திசை மறுங்கின் வெள்ளி ஓடினும்” (புறம்.117:1-2)

செவ்விலக்கியத்தில் ஒன்றான முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (சிலம்பு.நாடுகாண்.102-103)

இதனால் இந்நம்பிக்கையானது வாழ்வியலில் தொடர்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

புள்ளின ஒலிகள்

ஓர் தனிமனிதப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாற்றம் பெறலாம். ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் என்றும் மாற்றம் பெறாது. நற்றிணை முல்லைத்திணைப் பாடலொன்றில் பறவை நிமித்தத்தைக் கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறுத்தினவோ என்று கூறுவதாக அமைந்துள்ளது.

            “தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்

          புள்அறி வுறீஇயின கொல்லோ”  (நற்.161:8-9)

அக்காலத்தில் தன்னுடைய இல்லத்தருகிலே காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது இதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாட்டில் காணலாம். இன்றும் கிராமப்புறங்களில் அந்த நம்பிக்கை நீங்கா இடம்பெற்று விளங்குவதைக் காணமுடியும்.

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு       

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”    (குறுந்.210:5-6)

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்து சேருவான் என முன்னமையே தெரிவிக்கும் செயலாகக் குயில் கூவுதல் பார்க்கப்படுகிறது. இதில் குயில் கூவுதல் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இதனை நற்றிணைப் பாடலில் காப்பியஞ்சேந்தனார் குறிப்பிடுகிறார்.

                “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

                வினைமான் இருங்குயில்; பயிற்றலும் பயிற்றும்” (நற்.246:3-4)

வீரர்கள் போருக்குச் செல்லும்போது சில பறவைகளின் ஒலியைக் கேட்டும் சகுனம் பார்த்தார்கள். அவை வீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளன. இதனைக் கபிலர் பாட்டிலும் கழைதின் யானையார் பாட்டிலும் காணலாம்.

                “புள்ளிடைத் தட்ப” (புறம்.124:1)

                “புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை” (புறம்.204:10)

பதிற்றுப்பத்து பாடல் கரிக்குருவியின் ஒலி அழிவுக்கு அறிகுறியாகக் கருதப்பட்டதைக் காட்டுகின்றது. ஆந்தையின் அலறலை தீய சகுனம் என நம்பினர்.

                “கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க

                நேய்த்தோர் தூஉயநிறை மகிழ் இரும்பலி

                எறும்பும் மூலசா இறும்பூது மரபின்

                கருங்கண் காக்கையொடு பருந்து இருந்துஆர

                ஓடாப் புட்கை ஒண்பொறிக் கழல்கால்” (பதிற்.30:36-40)

முரசுக் கடவுளுக்கு பலிகொடுத்து அவற்றை காக்கையும் பருந்தும் உண்டால் பெரும் வெற்றி கிட்டும் எனவும், மேலும் பேய் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் எனவும் “கருங்கண் பேய் மகள் கைபுடைய” எனும் வரியின் மூலம் நாம் அறியலாம்.

குறிகூறும் கட்டுவிச்சி

கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் வழக்கம் தொல்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருக்கின்றது. குறி சொல்கின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பினார்கள். குறி சொல்லும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் சொல்கின்ற முறை  இருந்திருக்கிறது. குறுந்தொகைப் பாட்டில் குறி சொல்கின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று அழைத்தமையை ஒளவையார் விளக்குகிறார்.

அகவன் மகளே! அகவன் மகளே!

மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்

அகவன் மகளே! பாடுக பாட்டே”     (குறுந்.23:1-3)

இப்பாட்டில் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்து அழகாகச் சுட்டப்பட்டுள்ளது.

பல்லியின் ஒலிபலன்

பல்லி எழுப்பும் ஒலியை நற்சகுனமாகக் கருதுவது வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செவிலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும்போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை அறிவித்ததாம்.

     “முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்

     வருவம் என்னும் பருவரல் தீரப்

     படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி” (நற்.169:1-3)

பன்றியும் பல்லி சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 ஆகிய பாடல்களும் நற்றிணையில் 98ஆம் பாடலும் 169, 246 ஆகிய பாடல்களும் சகுனத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆண் பல்லி ஒன்று தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியையும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,

     “உகிர்நுதி புரட்டும் ஓசை போல

     செங்காற் பல்லி தன்துணை பயிரும்

     அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”  (குறுந்.16:3-5)

என்று புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார். பல்லியின் ஒலியைக் கேட்டு சகுனம் பார்த்தல், இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருகிறது. தற்காலத்தில் அதற்கென பஞ்சாங்க நூல்கள் கூட விற்கப்படுகின்றன. அவற்றில் மேனியில் பல்லி விழுகின்ற இடத்தினைப் பொறுத்து பஞ்சாங்கத்தில் அதன் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அகநானூற்றின் 389ஆம் பாடல் பல்லியின் சொல் கேட்டு தன் பயணத்தைச் சிறிது நிறுத்தி பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் எனவும் தெரியவருகின்றது.

விரிச்சியும் உன்னமும்

ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு ஒரு செயலை தொடங்குகின்ற பொழுது பிறர் கூறும் சொற்களையே சகுனமாகக் கொள்வதாகும். இவ்வழக்கம் தொல்தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. விரிச்சி என்பதன் பொருள் நற்சொல் கூறுதல் என்பதே ஆகும்.

நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்

செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.280:6-7)

மற்றொரு செவ்வியல் நூலான முல்லைப்பாட்டிலும் இதற்கான சான்று காணப்படுகின்றன.

                “நாழி கொண்ட நறுவீ முல்லை

                அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

                பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்.9-11)

தற்காலத்திலும் தமிழர் இல்ல நிகழ்ச்சிகளில் முதலில் வாழ்த்துபவர்களாக முதுமை, வயதான பெண்களே ஆவர். ஒரு செயலைத் தொடங்கும் முன் பெரியோர்களிடம் ஆசிபெறுதல் இதனுடன் தொடர்புடையதாகும். இம்முறை இன்றும் வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உன்னம் என்பது ஒருவகை மரம் ஆகும். இம்மரம் தழைத்து வளர்ந்திருக்குமாயின் தாங்கள் தொடங்க இருக்கின்ற செயல் வெற்றி பெறும் எனவும் வாடி இருக்குமாயின் தீய செயலில் முடியக்கூடும் எனவும் குறிப்பு உணர்த்துவதாக நம்பப்பட்டது.

                “பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்

                புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ” (பதிற்.61:5-6)

மேற்குறிப்பிட்ட செய்திகளின் வாயிலாகத் தொல்தமிழ் மக்களிடத்தே சகுனம் பார்க்கும் வழக்கம் வாழ்வியலோடு இணைந்து பிரிக்க முடியாத அங்கமாக இருந்ததை நன்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் தொல்தமிழர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வானியல் சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்குக் கோள்களைக் கொண்டு ஆராய்ந்தறியும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதையும் நம்மால் மறுத்துவிடமுடியாது. எனவே தொல்தமிழரின் நம்பிக்கைகள் பல நம்மையும் அறியாமலேயே நம்முடன் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. அவற்றிற்குச் சான்றாகச் செவ்வியல் நூல்களின் வாயிலாக நம்பத்தகுந்த சான்றுகளின் மூலம் நாம் அறிந்தும் அவற்றினை அனுபவ ரீதியிலும் காண்கிறோம். இப்பழக்கங்கள் பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்விலும் தொடர்ந்து வருபவை என இங்கே அறியவும் முடிகிறது. எனினும் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்து நேரத்தைக் கழிப்பதை விட தான் மேற்கொள்ளும் செயலில் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிட்டும். நல்ல குணத்துக்கு சகுனம் ஒரு பொருட்டல்ல. “தீதும் நன்றும் பிறர்தர வாரா”(புறம்.192:2), “இடரிலும் தளரினும்” (தேவாரம்.ஆவடுதுறைப் பதிகம்.10) சகுனமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது.

துணைநூற்கள்

  1. வையாபுரிப்பிள்ளை, ச., சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940
  2. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958
  3. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
  4. தட்சிணாமூர்த்தி, அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.