சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் கு.நா. கவின் முருகுவின் சுவரெழுத்து
முனைவர். சு. செல்வகுமாரன்
தமிழ் உதவிப் பேராசிாியர்,
அரசு கலைக்கல்லுாாி ,
பரமக்குடி – 623701
யாப்பின் “பா” வகைகளை அடியொற்றி எழுதப்பட்டு வந்த தமிழ்க்கவிதை பாரதிக்குப்பின் வசனக்கவிதை என்றும், புதுக்கவிதை என்றும் ஒருவித உரைநடைச் சாயலில் வெளிவரத் துவங்கின. இக்கவிதைகள் புதிய பாடு பொருட்களில் சமூக அவலங்களை எடுத்துரைப்பினும் தனது கவிதைத் தன்மையினை இழந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல” எனும் பழமொழிக்கிணங்க இன்று நாம் எல்லோரும் கவிஞர்களாகி விட்டோம். ஆம் கவிதைக்கான அழகியலற்ற உரைநடைக் கவிதையின் கவிஞர்களாகி விட்டோம். காலம் மரபுக் கவிதைகள் /கவிதையினை மறுத்து இன்னொரு தளத்தில் வேகமாக ஓடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் கவிஞர் கு.நா. கவின் முருகு இன்றும் மாறவில்லை. தமிழ்க் கவிதையின் தடம் மாறாமல் நின்று தமது கவிதைகளை பெரிதும் ஆசிரிய விருத்தப்பாவினால் யாத்து தந்துள்ளார். இயல்பாகவே மிக எளிய இசை வடிவத்தோடு எளிய மக்களையும் கவிதையை வாசிக்கத்தூண்டும் ஒரு வடிவமாகும் இது. இன்னும் சொல்லப் போனால் மொழியின் அழகியல் தன்மையினையும் இவரது கவிதைகள் நிரம்பக் கொண்டுள்ளன.
“சொற்களிலும் சொற்றொடர்களிலும் மேலும் சற்று விரிவான பகர்வுகளிலும் செய்யப்படுகின்ற அல்லது நிகழ்கின்ற வித்தியாசப் படுத்தல்கள் மொழியை அழகுறுத்திக் கலையாக ஆக்கி விடுகின்றன. உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை. இலக்கியம் என்ற மொழிசார் கலை, மொழியின் பிரத்தியேகப் பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கின்றது. இலக்கியத்திற்கு இது ஒரு விசேடத் தன்மையைத் தந்து விடுகிறது. இத்தகைய தன்மைதான் கவிதைத்தனம் அல்லது இலக்கியத் தனம் (Poeticalness / Literariness) என்று பேசப்படுகிறது. இதனால் மொழி சார்ந்த பொருள், மொழி சார்ந்த கலையாகி விடுகின்றது” (தமிழ் அழகியல், பக் – 25,26)
என்று தி.சு. நடராசன் சொல்வது போல ஒரு குறிப்பிட்ட நிலையில் கவின்முருகுவின் கவிதைகள் அழகியல்நிரம்பிய கவிதையாக மாற்றம் பெறுகின்றது. எல்லா படைப்புகளும் அழகியல்ரீதியில் முழுமை பெறுவதில்லை என்பதும் இங்கு கவனத்திற்குரியது. தனது முதல் கவிதையிலேயே அம்மா, அப்பா, ஆசானை எப்படி மறப்பேன் என கேள்வி எழுப்பும் கவின்முருகு அவர்களை மறக்கப்படக் கூடியவர்கள் அல்ல என்பதை சுட்டுவதோடு, அவர் மறக்கவில்லை என்பதும் நாமும் இவர்களை மறக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் தருகின்றன. ஆக கவிதை முழுமையும் கலைத்துவத்தை அழகியலை மீறி சீர்கெட்டு போகும் இன்றைய சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் அரிய கருத்துக்களின் பெட்டகமாக விளங்குகின்றன.
‘தந்தை சொல்லை மந்திரமாய் கொள்வேன் யானே’ என்று தந்தைக்கு கட்டுப்படும் மகனின் கூற்றாகவும், ‘அழுக்காடை நானுடுத்த மனந்தாளாதாள்’ என்னும் அம்மாவின் பாசத்தை யதார்த்தப்படுத்தும் ஒரு பிள்ளையின் குரலாகவும்,
“பொல்லாங்கும் அழுக்காறும் இல்லாக் கல்வி
பூத்திடவெ கற்பிக்கும் ஆசான்…” (சுவரெழுத்து, ப – 21)
என்பதோடு
“வல்லமையை நாட்டிடவே எழுதும் பாட்டில்
வந்தமர்ந்து சொல்தருவார் புனைய நற்பா” (சுவரெழுத்து, ப – 21)
என ஆசானின், ஆசிரியரின் பெருமையை ஆற்றலை எடுத்துரைக்கும் நல் மாணவனின் சொல்லாகவும் விளங்குகிறது சுவரெழுத்து. மேலும் அழியாத, அழியக் கூடாத கல்வெட்டெழுத்தாகவும், மக்கள் மனதில் பதிய வேண்டிய சுவரில் சித்திரப்படுத்தப்பட்ட விளம்பர எழுத்தாகவும் சுவரெழுத்து விளங்குகின்றது என்றால் மிகையல்ல.
நூலில் தமிழ் வணக்கம் துவங்கி தமிழுக்கென்றே சில கவிதைகளை படைத்தளித்துள்ளார். இவை கவிஞரின் தமிழ்ப்பற்றை, தமிழ் ஈடுபாட்டை வெளிக்காட்டி நிற்கின்றன. மட்டுமல்லாது இறைத்துதியாய் சிவத்துதியை அமைத்திருப்பதும் அவர்தம் இறை நம்பிக்கையை அடையாளப்படுத்தும் இடமாய் அமைகின்றது. “தனித்தமிழ் வாழ்க” எனும் கவிதை தனித்தமிழின் தேவையை, தாய் மொழியின் முக்கியத்துவத்தை புலப்படுத்தும் முதன்மையான கவிதையாக உள்ளது.
“தனித்தமிழின் ஆட்சியிங்கு வேண்டும், எல்லாம்
தமிழென்ப தாகிடவே வேண்டும், இன்பம்!
இனித்தமிழ்த்தாய் பேசிடவே தமிழும் ஓங்கும்
இன்பமாகித் திளைத்திடவே இனிது காப்போம்!
தனியாட்சி செய்திடவே மொழியும் உண்டு!
தமிழின்றி நமக்கென்று என்ன உண்டு!
கனியாகப் பகிர்ந்திடுவோம் அலைகள் தாண்டி
கருநமக்கே அடையாளம் தமிழே என்போம்!” (சுவரெழுத்து, ப – 72)
மேலும் இக்கவிதையின் தொடர்ச்சியாய் நம் தேசம் தமிழ் தேசம் மறக்க வேண்டாம் என்பதும், தமிழ் மட்டுமே நம் சொத்து அதனை இழக்க வேண்டாம் என்பதாகவும் வலியுறுத்தி பேசுகின்றார். அத்தோடு “பைந்தமிழே”, “தமிழைக் காப்போம்” போன்ற கவிதைகளின் வழி தமிழை உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாகவும், உலகத்தின் ஒளி நல்கும் பொருளாகவும் பார்ப்பதும், தமிழை தாய் போல காத்திடவே உயிரும் ஈவோம். தமிழ் மணக்கும் சாம்பலாவோம் உயிரையேயீந்து என்று குறிப்பிடுவதும், கு.நா. கவின் முருகுவின் அடர்த்தியான தமிழ்ப்பற்றை உணர்த்தி நிற்கிறது. இதன் நீட்சியாகவே “தனி மாநிலம் தமிழ் மாநிலம்” கவிதையும் ஒலிப்பதைக் காண முடிகிறது.
“பேசிடவே தமிழென்ற மொழியின் பாலே
பெருமையுண்டாம் நாட்டிற்கும் தமிழ் நாடென்றால்
தேசியத்தில் தனித்து நிற்கத் தமிழ் நாடென்று
தீவிரமாய் தனி மாநிலமாகச் செய்ய
மாசில்லாத் தலைவர்கள் ஈந்த நாளாம்
மகிழ்கின்றோம் இந்நாளில் தமிழனென்று
பேசிடவும் வாழ்ந்திடவும் தமிழேயென்போம்
பிரிவினைகள் இல்லாத நிலையில் நின்று” (சுவரெழுத்து, ப -90)
மட்டுமின்றி வணக்கம் தமிழே, இனிமைத் தமிழே, ஈடில்லாத் தமிழ் மொழி, தமிழுக்கு ஏற்றமுண்டு, தமிழே ஆளும், செந்தமிழால் வாழ்வு என்பதாய் பொருள்பட “தமிழே நம் ஆளுமை” என்பதாய் பதிவாகியுள்ள கவிதையும் தமிழ் மொழி – இனம் – நாடு என்ற நிலையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
“எந்தாயின் தமிழ்ப்பாலால் வாழும் நாங்கள்
ஈடில்லா எம்மொழியால் உலகாள்வோரும்” (சுவரெழுத்து, ப -56)
மேற்சுட்டிய நிலையில் தமிழ், தமிழனின் மேம்பாட்டிற்காய் அரண் அமைக்கும் சுவரெழுத்து அத்தோடு நின்று விடவில்லை. மாறாகத் தமிழ்ச்சமூகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ச்சிகாண சாதி மத வேறுபாட்டை களையவும், அகிம்சையை, அறத்தை நிலை நிறுத்தவும், தீது கண்டால் ரௌத்திரம் கொள்ளவும், நாளையப்பொழுதை நமதுபொழுதாய் மாற்றவும் கவிதைவழி முயற்சிக்கின்றது.
கவிஞர் தமிழின் சிறப்பை கற்பிப்பது போலவே சாதியின் அவலங்களை எதிர்த்தும் அயராது குரல் கொடுக்கின்றார். தம் சுயச்சிந்தனையை சாதி எதிர்ப்புக்காய் முன்னெடுப்பதோடு, பாரதி போன்ற போராளிகளின் செயலினையும், சொல்லையும் தம் துணைக்கு அழைக்கின்றார். இனியொரு பிறவி வேண்டாம் எனும் கவிதையில்
“இழி குலத்தில் பிறப்பெடுக்கும் பிறவி வேண்டாம்
இன்னல்கள் தேற்றிடும் சாதி வேண்டாம்
அழிகின்ற உடல் தானே என்றும் ஈதாம்
அதிலென்ன சாதியென்றும் மதங்களென்றும்
பழிசொல்லக் கீழ்சாதி மட்டுமென்ன
பரத்தையரை வன்புணர நீங்கள் யாரோ
ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல்
உறித்தெறிய ஆணவமும் உடைகள் தானே” (சுவரெழுத்து, ப – 31)
என்று சாதிஒழிப்பு குறித்த கருத்தியலை முன்னெடுக்கின்றார். இங்கு ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல் உரித்தெறிய ஆணவமும் உடைகள்தானே என அடையாளப்படுத்துவதன் மூலம் மனமிருந்தால் மார்க்கம்உண்டு என்பதையும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் இங்கு துரதிருஷ்டவசமாய் சாதியை ஒழிக்கின்ற மனம்தான் யாரிடமும் இல்லை என்பதை கவிதை நிறுவுகிறது.
“தீமையை எரித்திடு” எனும் கவிதையில் தீயோர்களை நாட்டுக்கு கிடைத்த சாபப் பொருளாகப் பார்ப்பதும், ஆயுதமில்லாத தேசம் காண அன்பு அடிப்படைத் தேவையாக இருப்பதையும் அதற்கு ஆலயங்கள் சென்று வழிபட்டால் போதுமென்பதும், அவரின் நம்பிக்கை, அனுபவங்கள் சார்ந்ததாக மிளிர்கிறது. மேலும் மரங்களின் சிறப்பை பேசும் கவிதை, சமூகத்தின் அவலங்களை எடுத்துரைக்கும் “முற்றுப்புள்ளி” உள்ளிட்ட பல கவிதைகள் கவிஞரின் சமூக ஈடுபாட்டை கவிதை வழி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
இன்றைய நவீன வாழ்வில் மனிதனின் வாழிடம், வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, சடங்கு என எல்லாமே மாறிப் போயுள்ளன. குறிப்பாக மக்கள் இன்று பெரிய அளவில் பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக புதிய நுகர்வுப் பொருட்களின் மீது அசை உள்ளவர்களாக விளங்குகின்றனர். உண்மையான மனமகிழ்வை விட்டு போலிகளை நாடிச் சென்று தம் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனை பதிவு செய்யும் கவிதை,
“யாரிடந்தான் தேடுவதோ நேர்மை தன்னை
யாரைத்தான் நம்புவதோ ஞாலந்தன்னில் ”
என்பதும்
“நீதி சொல்லும் நிலையுமற்றுப் போனாரிங்கே
நியாயங்கள் சவக்கிடங்குகள் பிணமாய்த் தூங்க”
“வன்புணர்வு களவு கொலை கொள்ளை யென்றே
வகையற்றுப் போகின்றார் மனிதரிங்கே” (சுவரெழுத்து, ப -54)
என்பதாகக் கூறி மனம் வருந்துகின்றார். மேலும் நிலமழித்து நிலம் விற்று மனைகள் கட்டி. நேர்த்தியான மாளிகைகள் வானுயரக்கட்டி கலங்களின்றி குவித்து விட்ட நெல் மணிகளின்றி உழவுத் தொழில் அழிந்து போகும் அவலத்தை புலப்படுத்துகின்றார்.
கவிதையில் சாதிமத பேதங்களை கடுமையாகச் சாடும் அவர் ஓதி வைத்த மதநெறிகள் மறந்ததேனோ என மதநெறிகளின் மீது நம்பிக்கை கொள்வதும், கடவுள் வாழ்த்திற்காக சிவத்துதியை அமைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேலும் தன்மானம் அற்ற மக்கள் உலகையாள இவர்களுக்கென சரித்திரம் எழுத என்ன இருக்கிறது என்பதாக சிந்திப்பதும், நிகழும் தவறினை சுட்டி என்னவென்று கேட்க யாருமில்லாத நிலையில் ஏமாற்றும் பித்தர்களே நலமாக வாழ்வதனையும் பேசும் கவிதை தன்மானம் காத்திட இந்த சமூகம் முடிவெடுத்து தரணியில் இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது.
ஆக மேற்சுட்டியவாறு மனிதம் அவலமாகிப் போயுள்ளதை பேசும் சூழலில் விதைக்க மறந்த மனித நேயம் என்றே ஒரு கவிதையில் என் தேசம் எங்கே போகிறது என கேள்வி கேட்கும் அவர் இழிநிலை நோக்கி போகத்தான் மனிதம் போல என தனக்குத் தாமே பதிலை இயலாமையாகத் தருகின்றார். கல்வி சந்தையாக்கப்பட்டு திருட்டுக் கொள்ளைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணாத்துகின்றார். மேலும் சாதி மதம் குறித்து விவாதிக்கின்ற போது இனி உதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி பார்த்துத் தான் தோன்றும் போல என ஐயுறுகின்றார். இறுதியாக அடுக்கடுக்காக மனித அவலங்களை வரிசைப்படுத்தும் கவி இறுதியாக மானமற்றுக் கேவலமாய் உலகில் வாழ மக்களாகிப் போனவர்கள் தான் இன்றைய மக்கள் என்பதாக உரைப்பது காலரீதியில் குறிப்பிடத்தக்கப் பதிவாகும்.
வள்ளுவரின் அறத்துப்பாலை போதிக்கையில் கொன்றார்க்கும் உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாகும் மாற்றம் இல்லை என்பதும், அகிம்சையை கற்பிக்கையில்
“வாய்மையது வீழ்வதில்லை என்றும் எங்கும்
வந்தனையும் செய்வார்கள் யாரோ நம்மில்
மாய்ந்திடினும் மறவாமல் காக்க வேண்டும்
மனிதருக்குள் அகிம்சை என்றும் உயிராய் மேவும்” (சுவரெழுத்து, ப -69)
என்றும், மேலும் வாழ்வில் நம்பிக்கை பயக்கும் விதமாகவும், சிந்தனையோடு வழங்கியிருப்பதையும் பார்க்கமுடிகிறது.
“எட்டிவிடும் தூரம்தான் வானம் என்றால்
இனியென்ன மிச்சங்கள் இருக்குதிங்கே!
இட்டுவிடு உச்சத்தில் கனவை வான
எல்லைக்கே அப்பாலும் இல்லை உலகு
தொட்டுவிடு நினைவாகும் கனவை உன்னுள்
தொடரட்டும் செயலாக்கம் வெல்லும் நினைவு” (சுவரெழுத்து, ப -82)
தொகுப்பின் இறுதியாக “அவளென்பா” எனும் அருமையான ஒரு சிறுகாதல் காவியத்தையும் தந்துள்ளார். பாரதிபோல், பாரதிதாசன் போல் அதில் பயின்று வரும் மொழியின் அழகோ அழகு. தமிழ்ப் பண்பாட்டு மரபுக்குள் நின்று அவர் கவிதையில் கொண்டு சேர்க்கும் சொற்கள் மிக இனிமை. ஒரு ஆண் காதலில் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகும் இடத்தை சுட்டும் வரிகள் வாசிக்கின்ற போது ஒரு ஆண்மகனை திரும்பி பார்த்து அசை போட வைக்கின்ற இடமாகிறது.
“விழி தொடுக்கும் அம்புகளே போர்வாள் என்றால்
வீழ்ந்திடுவேன் உன் மடியில் தோற்ற பின்னே
மொழி தொடுத்தே இனிதாக்கி செப்பியாங்கு
மோசத்தை விளைத்திட்ட விந்தை யாது
பழித்தாலும் என் செய்வேன் பருவச் சீற்றம்
பந்தியிட்டு முன்வருதே காதல் சொல்ல
அழித்தாலும் அழியாது எழுதி வைத்த
அன்பிற்கினிய காதல் என்று மென்னுள்” (சுவரெழுத்து, ப – 93)
தொடர்ந்து வாடையிலே வீசுதுங்க குளிர்ந்த காற்று வசமாக வந்து சேர்ந்தா மாமன் பொண்ணு. சாடையிலே பேசுறாளே சமஞ்சபொண்ணு. கொசுவத்த இடுப்போடு செருகிவச்சா. ஓடையிலே தப்பி வந்த மீன் போல ஓசையற்று துள்ளுறேனே என்ன செய்ய என காதல் தன்னை ஆட்கொண்டுள்ள இயல்பை விவரிக்கின்றார். மட்டுமின்றி காதலின் அன்பையும், அதற்கு எழும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் அவர் உரிய நேரத்தில் ஓலை வைச்சி ஊருக்கு சொல்லிவிடுவேன் பரிசம் போட என்கிறார்.
“யாருக்குச் சொல்வாயோ கனிந்த அன்பை
யார் யாரும் சுடுவாரே தீஞ்சொல் கொண்டு
போருக்கு எழுவாரே கொன்று வீழ்த்த
பூவுக்கும் வேரறுக்க அஞ்சிடாரே
தேருக்கு வடங்கட்டி இழுக்க யாரோ
தேவதைக்கே அத்தை மகள் நானே தானே
ஊருக்குச் சொல்லி விட நேரம் வந்தா
ஓலை வச்சி சொல்லி விடுவேன் பரிசம் போட” (சுவரெழுத்து, ப -94)
இவ்வாறாக பல்வேறு வர்ணனைகளோடு தொடரும் காவியத்தில் இறுதியாக இடைவளைய செங்கமம் எய்த அம்பாய் இன்மனத்தில் இன்னல்கள் தந்த பெண்ணாய் குடை விரிந்த வானமென மழையாய் பெய்து குணவதியாய் பூத்தாளே மனதில் நின்று என்பதாய் நிறைவடையச் செய்கிறார்.
ஆக சுவரெழுத்து முற்றிலும் சமூகமேம்பாடு சார்ந்தும் இயற்கை, காதல், தமிழ், இறை சார்ந்தும் போலித்தன்மையற்ற கோட்பாட்டு கொண்டாட்டங்களற்ற தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டு, வாழ்வியல் மரபுக்குட்பட்ட நல்ல பல கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார். இதனை அவரது தமிழ்ச்சமூக கரிசனத்தின் வெளிப்பாடு என கொண்டாடலாம்.
துணை நூற்பட்டியல்
- கு.நா. கவின்முருகு – சுவரெழுத்து, பூவரசி, முதல் பதிப்பு – 2017
- தி.சு. நடராசன் – தமிழ் அழகியல், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு – 2012
- சாந்தன் – இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம், மூன்றாவது மனிதன், முதல் பதிப்பு – 2015
- மிலிட்டரி பொன்னுசாமி (தமிழில்) – கலையின் அவசியம், பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு – 2014.
- தி.சு. நடராசன், க.பஞ்சாங்கம் – தமிழில் திறனாய்வு பனுவல்கள், முதல் பதிப்பு – 2014.