முனைவர்.த.பாலமுருன்

  உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய

    கலை அறிவியல் கல்லூரி

                        கோயம்புத்தூர்-20

                மனித உடலில் இரத்தம் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வொட்டம் சீராகவும் மாறியும் ஓடும். இவ்வாறு ஓடும் ஓட்டத்தினை கருதல் அளவையால் ஆராய்ந்து கணக்கிடும் முறைக்கு நாடி எனலாம். நாடிகளின் செயலால் உடல் இயக்கம் நடைறுகிறது. மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் உள்ளன எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். மூலாதாரத்திலிருந்து எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் கிளம்பி உடல் முழுவதும் பரவி,பெருக்கின்றன.

                நாடிகள் 72000 என்றும் அவற்றுள் முக்கியமானவை 500 என்றும் அவற்றுள் சிறந்தவை 10 என்றும்  அவற்றுள் மிகச் சிறந்தவை மூன்று எனத் திருமூலர் கூறுகிறார். இதனை,

                                “கால்- அது ஐந்நூற்று ஒருபத்து மூன்றையும்

                                கால்- அது எண்மடி கொண்ட இவ்வாறே1”

என்னும் பாடலின் மூலம் அறியலாம்.

சிவயோகச் சாரம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நாடிகள் எழுபத்திராயிரம் இருக்கின்றன என்று கூறுகிறது.2  அவற்றுள் முக்கியமானது இருப்பது நான்கு. இந்நாடிகள் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன. குண்டலி என்னும் சக்திக்கு நடுவில் பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழ்ழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்த இருபத்து நான்கு நாடிகளுள் பத்து  நாடிகளை முக்கியமானதாகக் கூறுகின்றது.

                மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் இருப்பதாகவும் அவற்றில் பத்து நாடிகள் மட்டும் சிறந்தவை எனத் திருமூலர் கூறுகின்றனர். இதனை,

                                “எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்

                                மற்றதில் பத்து வளமான நாடியே.3”

என்னும் பாடலால்அறியலாம்.

அவை, 1. இடகலை  2. பிங்கலை  3. சுழுமுனை  4. புருடன்  5. காந்தாரி  6. அத்தி  7. அலம்புருடன்  8. சங்குனி 9. சிங்குவை  10. குரு  என்பனவாகும். இந்த பத்து நாடிகளுள் மூன்று நாடிகளைச் சியோகச்சாரம் முக்கியமானதாகவும் கருதுகின்றது.4  அவை, இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாகும்.

மூவகை நாடிகளின் தோற்றம்

                திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600 என்னும் நூலில் மூவகை நாடிகள் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இதனை,

                “பாரும் இடைகலை பின்கலை மாறியே

                தாரும் பெருவிரல் காலொடு தானேறி

                காரும் கழுத்தில் கபாலம் வரை நின்று

                வாரும் இடமாய் வலக்கரம் சாருமே5”

என்னும் பாடலால் அறியலாம்.

  • இடக்கலை நாடி வலது கால் பெருவிரலிலிருந்து மேல் எழுப்பி மூலாதாரம் வழியாய் இதயத்துக்கு இடப்பக்கமாய் ஓடிகத்திரிக்கோலைப் போல் மாறித் தலையின் இடது பக்கமாய் நின்று, பின் இடது கையில் நிற்கும்.
  • பிங்கலை நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் எழும்பி மூலாதாரத்தின் வழியாக இதயத்துக்கு வலப்பக்கமாய் ஓடிகத்தரிக்கோலைப் போல் மாறிக் தலையின் வலது பக்கமாய் நின்று, வலது கையில் நிற்கும்.
  • சுழுமுனை நாடியானது முதுகெலும்புத் தண்டுவடத்தின் வழியாக மூலாதாரத்திலிருந்து தலையின் உச்சி வரை பாய்ந்து நிற்கும். இதனை,

                “வலக்கரம் தன்னில் வளமான பின்கலை

                நிலைத்த இடக்கரம் நின்றது இடைகலை

                துலக்க நடுமையச் சுழிமுனை ஓடிடும்

                பிலக்க இவை மூன்றால் பிறந்தது தாதுவே6”

என்னும் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

மேற்கண்ட பாடலின் மூலம் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூவகை நாடிகளின் இருப்பிடத்தை அறியமுடிகிறது.

மூன்று நாடிகள்

                நாடிகள் இயக்கத்தினால் ஒருவனின் வாழ்நாள் அதிகமாகவும் குறையவும் செய்யும். அதனால் அந்நாடிகளின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு மூச்சை சீராக இயக்க வேண்டும். நாடிகளின் இயக்கம், வாயுக்களைப் பொறுத்தே அமையும் எனலாம்.

  • பத்து நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறந்த நாடிகள். இவற்றின் வழியாய் மூச்சு (சுவாசம்) ஓடுகிறது.
  • இடகலை என்பது இடது மூக்கு வழியாக ஓடும் மூச்சு ஆகும். இதனைச் சந்திரக்கலை என்பர்.
  • பிங்கலை என்பது வலது பக்க மூக்கில் வரும் மூச்சு ஆகும். இதனைச் சூரியக்கலை என்பர்.
  • சுழுமுனை என்பது நடுநாடியாகும். இதனை அக்கினிக் கலை எனக்கூறுவர். இது இரண்டு நாசியிலும் பரவியோடும்.

                இடகலை என்னும் சந்திரக்கலையைப் பெண் எனக் குறிப்பிடுவர். இதன் நிறம் கருமையாகும். பிங்கலை என்று சொல்லப்படும் சூரியக்கலையை ஆணாகக் கூறுவர். இதன் நிறம் வெண்மை ஆகும். சுழுமுனை எனப்படும் நாடியை அலி நாடி எனவும் கூறுவர்.

இடகலை

                இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும். இடகலையில் சுவாசம் சரிவர நடந்தால் உடல் நலத்துடன் இருக்கலாம்; இடகலையில் சுவாசம் நடக்கும் பொழுது, தாகம் நீர்விருத்தி, தீர்மானம் செய்தல், வேலை செய்தல், நகை செய்தல், நகை அணிந்து கொள்ளுதல், கோயில் கட்டுதல், தருமம் செய்தல், புதிய வீட்டிற்குக் குடிப்போகுதல் போன்ற செயல்களைச் செய்யும் பொழுது பயன்களைப் பெறலாம்.

பிங்கலை

                பிங்கலை என்பது வலப்பக்க நாசி, இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் செய்யும். இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும் பொழுது செய்யத்தக்கவையாக ஞானச்சர நூல் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.7

                குருவின் உபதேசம் பெறல், ஒருவரை வணங்குதல், எதிரியின் படையைத் துரத்தல், பயிர் விளைவித்தல், வியாபாரம் செய்தல், திருடல், தோடல், சவாரிப் போதல், சங்கீதம் பாடல் போன்ற செயல்களைச் செய்தால் நன்மை விளையும். இடகலை அல்லது பிங்கலையில் செல்லும் மூச்சின் அளவைப் பொறுத்து ஒருவரின் ஆயுள் நீளவோ அல்லது குறையவோ செய்கிறது. திருமூலர் கூறும் இச்செய்தியினைத்  தெளிவாக அறியலாம்.8

           இடகலை அல்லது பிங்கலை

         வழி இயங்கும் மூச்சின் அளவு                                        ஆயுள்

  1. 4 விரல் கட்டை அளவு                                 உயிர் இறைவனாகும் (ஆயுளை

                                                                                                                   நிர்ணயிக்க இயலாது)

  1. 5 விரல் கட்டை அளவு    100 ஆண்டு
  2. 6 விரல் கட்டை அளவு   80 ஆண்டு
  3. 7 விரல் கட்டை அளவு   60 ஆண்டு
  4. 8 விரல் கட்டை அளவு   50 ஆண்டு
  5. 9 விரல் கட்டை அளவு 33 ஆண்டு
  6. 10 விரல் கட்டை அளவு 28 ஆண்டு
  7. 15 விரல் கட்டை அளவு 25 ஆண்டு

சுழுமுனை

                சுழுமுனை நாடி என்பது இரண்டு நாசியிலும் வரும் சுவாசம், இதனை அக்கினிக் கலை என்றும் குறிப்பிடுவர். இதனின் நிறம் சிவப்பு. இந்நாடியை அஃறிணைப்பால் அல்லது அலி எனக் குறிப்பிடுவர். இந்த நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சுவாசத்தைக் கட்டினால் (அளவு குறைந்தால்) மனத்திற்கும் உடலுக்கும் இன்பம் உண்டாகும். இந்நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சமாதி யோகம் செய்தால் நன்மை நடக்கும், எனச் ஞானச்சார நூல் குறிப்பிடுகின்றது.9

                சிவவாக்கியர் நாடிகள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இடகலை, பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளுக்குள் இடகலை பிங்கலை என்னும் நாடிகள் மட்டும் நாகப் பிணையில் போலப் பின்னிக் கிடக்கும் என்றும் இவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லும் எனவும் கூறுகின்றார். இடகலை, பிங்கலை நாடிகள் சங்கின் ஒசைப் போலவும் சுழுமுனை நாடி தாரை போலவும் நீளமாக இருக்கும் எனவும் கூறுகின்றார். இதனை,

                                “சங்கு இரண்டு தாரையென்று சன்ன பின்னல் ஆகையால்

                                மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை

                                சங்கு இரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்

                                கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழ்லா குமே10”

இடகலை, பிங்கலை நாடிகளைத் தவிர்த்து சுழுமுனை நாடி வழியாகச் சுவாசத்தை வரவும் போகவும் செய்தால் சிவனுடன் அதாவது இறைநிலையை அடையலாம் எனவும் கூறுகிறார்.  இடகலை, பிங்கலை என்றும் இரண்டு நாடிகளையும் தவிர்த்து சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது இறைவனைக் காணலாம் எனத் திருமூலரும்  குறிப்பிடுகிறார்.

சுழுமுனை நாடியின் பயன்

                சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது ஓர் ஒளித் தோன்றும். அந்த ஒளியை நான்கு நாழிகை நேரம் உள்ளே நிறுத்தினால் முதியவர்களும் இளையவர் ஆவர். அப்பொழுது இறைவனைக் காணலாம். இது உண்மை உண்மை எனச் சிவவாக்கியர் வலியுறுத்திக் கூறுகிறார். அதனை,

                                “மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை

                                நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்

                                பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்

ஆலமுண்ட கண்டராணை யம்மை யாணை யுண்மையே11”

என்னும் பாடலால் அறியலாம்.

நீண்ட நாள் உயிர் வாழ பன்னிரு அங்குலக் கனம் உள்ள மூச்சுக்காற்றை அடக்கி இடகலை என்னும் சந்திரக்கலையின் அமுதத்தை உண்ணக் கூடியவர் உடல், அழியாமல் நீண்ட காலம் இருக்கும் எனத் திருமூலர் கூறுகின்றார்.  எனவே, அந்நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாக மூச்சுக் காற்றினைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். ஆறு விரற்கடை அளவு மூச்சுக் காற்று வெளியேறினால் எண்பது ஆண்டு ஆயுள் அமையும். ஏழு விரற்கடை மூச்சுக் காற்று வெளியேறினால் அறுபதாண்டு வாழலாம். இதனை,

“ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்

                                தெறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்

                                ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்

                                தெறியே நின்று தெளி இவ்வகையே12”

என்னும் பாடலின் வழி அறியலாம்.

எனவே,  நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாகச் சுவாசத்தைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். சுழுமுனை நாடி வழியாகச் சுவாசம் இயங்கினால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.

   சுழுமுனை இயங்கும்

   நாட்கள்                                                 பயன்கள்

  1. 2 நாள்                          அபானனும், சந்திரனும் உயிருக்கு உதவும்
  2. 3 நாள்                           விந்து செயம் உண்டாகி ஆயுள் நீளும்
  3. 4 நாள்                            நாதம், சிவம், விந்து, சக்தி, ஆகிய

     நான்கும் அருவமாக உடல் தோன்றும்

  1. 5 நாள்                            சதாசிவம், பரசிவம், பராசத்தி காணலாம்
  2. 10 நாள்                            பராசத்தியுடன்,பரசிவத்தையும்

                                                                     தரிசிக்கலாம்

  1. 15 நாள்                            ஏகசிவத்தைக் காணலாம்
  2. 20 நாள்                           சகஸ்காரத்தையும், ஆறு

           ஆதாரங்களையும் காணலாம்

  1. 25 நாள்                            மூலாதாரம், சுவாதிட்டானம் என்ற

     இரண்டையும் கடந்து  பிறவற்றில்

                                                                           அனுபவம் பெறலாம்

  1. 26 நாள்                            விசுத்தி, ஆக்ஞை என்ற இரண்டின்

                                                                     அனுபவம் எய்தும்.

  1. 27 நாள்                           சிவத்தைப் பிறருக்குக் காட்டலாம்
  2. 28 நாள்                            ஆன்மா, சிவத்தோடு கலந்திருக்கப்

           பிறருக்கு உணர்த்தலாம்.

நாடியும் கிழமையும்

                ஒருவனுக்குச் சுவாசத்தின் இயக்கத்தைப் பொருத்து ஆயுள் வரையறை செய்யப்படும். அதனால் சுவாசத்தை ஒழுங்குப்படுத்தி எந்நாளுக்கு எந்நாடியில் சுவாசத்தின் இயக்கம் இருக்க வேண்டும் என அறிந்து, அந்நாட்களுக்குத் தகுந்த சுவாசத்தின் இயக்கம் இருந்தால் ஆயுள் நீளுவதுடன் இறைவனையும் அடைய வழி கிடைக்கும்.

  • இடகலை நாடியின் சுவாசம் வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
  • பிங்கலை நாடியின் சுவாசம் சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
  • வளர்பிறை வியாழனில் இடகலையிலும் தேய்பிறை வியாழனில் பிங்கலையிலும் சுவாசத்தை இயக்க வேண்டும்.

மேற்குறித்த நாட்களில்  நாடிகளின் சுவாச இயக்கம் இருந்தால் நன்மைகள் பெறலாம் என்பது வெளிப்படை.

  அடிக்குறிப்பு

  1. திருமந்திரம், பா. 687.
  2. பெரிய ஞானக் கோவை, சிவயோகச்சாரம், ப.267.
  3. திருமந்திரம், பா.890.
  4. பெரிய ஞானக் கோவை, சிவயோகச் சாரம், ப. 268.
  5. திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600, பா. 20.
  6. மேலது. பா. 21.
  7. பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 36.
  8. திருமந்திரம், பா.658.
  9. பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 369.
  10. சிவவாக்கியர், பா. 21.
  11. பெரிய ஞானக் கோவை, சிவவாக்கியர், பா. 70.
  12. மேலது. பா. 767.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.