“கன்னி”யும் “கஜா”வும்
வாய் பேச வன்மத்தில்
பெண் பொறுமைக்காரி!
நிலம் இயங்கு தன்மையில்
உழவுக் காரி…..
நிலமும் பெண்ணும் போர் புரிந்தால்
கன்னியும் கஜாவாகும்…….
நான்கு நாட்களுக்கு முன்
வேதாரண்யத்தில் வேசமிட்டு
பட்டுக்கோட்டையில் கஜவாக மாறி
காடு மேடுகளை புரட்டி
கானகப் பயிர்களை வளைத்து
வாழை,தென்னையை ஒடித்து,
வானுயர கம்பங்களில்
ஊஞ்சல் கட்டி மகிழ்ந்து
இரவு நேரங்களில் கறுமை சூழ்ந்து
காரணத்தோடு சுற்றித் திரிந்தேன்
கஜா வெனும் பெயரோடு…..
கன்னியின் சாபம் காதுகளுக்கு
செவிமடுத்ததோ – இல்லை
தீட்டுப்பட்ட கன்னியைத் திடுக்கிடச்செய்து
திட்டத்தை நிறைவேற்றினேன்
கண்ணியமான கஜவாக…..
எனது தோற்றம் எது வென்றால்?
அணைக்காடு கிராமத்தில்
ஆறிரண்டு வயதில்
ஏழாவது படிக்கையில் – எனது
தீட்டு இனம் கண்டு
வீட்டு வெளியே
சாதியக் குடிசை அமைத்து
தனிக் தெருவில்லா இடத்தில் அமா்த்தப் பட்டேன்
தீட்டுக் கன்னியாக……..
கன்னியின் சாபம்
கருணை மறம் மாறாமல்
கலகக் குறல் எழுப்பி
கானகத்திற்கு எல்லாம் தூதனுப்பி
இருள் சூழ்ந்த இரண்டு மணியில்
பேயாட்டத்தைக் காட்டி கஜாவாகப் பறந்தேன்…..
எனது பயம் பேரிடியாய்
மரங்களுக்கும் மாசு கழிய மங்கைக்கும் கேட்டிட
அவள் அலறல் அவளுக்கு மட்டுமே
தீட்டு தீண்டாமைக்கு உட்பட்டது. இதனைக் கண்டு
தென்னையும் பேசியது
வாழையும் பேசியது
வாய் பேச சீவராசிகளும் பேசியது
தீட்டு எங்களுக்குப் பிடிக்கும்
வா! கஜாவோடு கண்ணியமாகலாம்…..
கன்னியும் கஜாவும் பிரியவில்லை
தீட்டும் கன்னியும் பிரியவில்லை
மரங்களும் கானகமும் பிரியவில்லை
மனித இனம் பிரிக்கிறது.
மரங்களுக்கு இடையே மாண்ட
கன்னியும் கஜாவையும்
மீண்டும் பேசுவேன்
காடுகள் எல்லாம் வீடானபின்பு
இந்த இடம் கன்னி மாண்டதென்று………
முனைவா். இரா. மூர்த்தி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -20
E-Mail: ramvini2009@gmail.com