Year: 2018

  • தலைமக்கட்கு உரித்தான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0. முன்னுரை

    தலைமக்கட்கு உரித்தான, உரித்தாகாத குணங்களைத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். (தொல்.மெய்.25-26) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியலில் ஆராயப்படவுள்ளது.

    1:1. தலைமக்கட்குரித்தான குணங்களும் அகநானூறும்

    தலைமக்கட்குரித்தான குணங்களாகத் தொல்காப்பியர், பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்தையும் கூறியுள்ளார். (தொல்.மெய்.25) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

    இவ்விடத்துக் கூறப்படும் மெய்ப்பாடுகளனைத்தும் தலைமக்களிடத்து அமைய வேண்டுமென்பதையும் அவையெல்லாம் எவ்வாறமையும் என்பதையும் பேராசிரியர்,

    ”இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு ‘வகை’ யென்றதனான் ஆண்மைவகை பெண்மை வகையெனவுங், குடிமைவகை யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை யென்பது அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ‘ஏவன்மரபின் ஏனோர்’ (தொல்.பொருள்.24) பாங்கினும் ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்’ (தொல்.பொருள்.23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது, அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயினவற்றை இலேசினாற் கொண்டான்;  அவை பிறழ்ந்து வருமாகலினென்பது” (பேரா.மெய்.25) எனக் கூறியுள்ளார். மேலும் பாரதி,

    ”ஈற்றேகாரம் அசை மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச் சொற்கள் முன் களவியலில், ”ஒன்றே வேறே என்றிரு பால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” எனும் சூத்திரத்தில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியதால், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும் ஆண்டுக் கூறாமையால் ஒத்தக் காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து, அவை நிலைத்த மெய்க்காதற்கே யுரியலாதலின், அக்காதல் நிலைக் குரியதென முன்தொகுத்துக் கூறிய ஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது இவை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையில் தெளியப்படும்” (பாரதி, மெய்.25) எனக் கூறியுள்ளார். களவியலில் காதலர்களின் இயல்பைக் கூறிய தொல்காப்பியர், இவ்விடத்தே அவர்களுக்கான ஒப்புமையை விளக்கியுள்ளார். மேலும் குழந்தை,

    தலைமகனது பிறப்பு முதலாயின தன் பிறப்பு முதலியவற்றோடு ஒத்ததாயின் தலைமகட்குக் காமக்குறிப்புத் தோன்றும். பிறப்பு முதலியன பற்றி மனத்தின்கட் பிறக்கும் தருக்குணர்ச்சி மெய்ப்பாடெனப்படும். இது, தலைமகற்கும் உண்டேனும், ‘ஒப்பினது வகை’  என்றதனால், தலைமகட்கே உரிமை கொள்ளப்படும். ஒருவர்க்குள்ள பிறப்பு முதலியன மற்றவர்க்கும் இருக்கின் அவ்வொப்பினால் இருவர்க்கும் காமக் குறிப்புத் தோன்றுமேனும், தலைமகனே தலைமகளைக் காண்பானாகையால் தலைமகள்பாலே இவ்வொப்புமைக் கேதுவாகிய உள்ள வுணர்ச்சி தோன்றித் தலைமகனைக் காதலிக்க வேண்டுதலின் அவளுக்கே சிறப்புடையன இவையென்பதாம்.  இப்பத்தில் குடிமை, ஆண்டு, உரு, அன்பு, அருள் என்பன இருவரும் எதிர்ப்பட்டதும் ஒத்துப் பார்க்கப்படும் மற்றவை பின்னர் வெளிப்படும். இப்பத்தினுள், உருவும், அவற்றுவழித் தோன்றும் அன்பும் மிகுதியும் ஒத்திருக்க வேண்டும்” (குழந்தை, மெய்.25).

    எனக் குழந்தை கூறியுள்ளார். இவர் கருத்துப்படி இவ்விடத்துக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.

    1:1:1. பிறப்பு

    பிறப்பென்பது, “ஒத்த பிறப்பு – குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “தோன்றிய குடிநிலை” (பாரதி, மெய்.25) எனவும், ”நற்குடிப்பிறத்தல்” (குழந்தை, மெய்.25) எனவும், “குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த அந்தணர் முதலிய நாற்குலம். “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்” என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி விளக்குதல் புலனாகும்.” (பாலசுந். மெய்.25) எனவும், “அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றார்போல வரும் குலம்” (தாசன், மெய்.25) எனவும், “குடிப்பிறப்பு”” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    பிறப்பென்பது தலைமக்களின் ஒத்த பிறப்பு. இதனை விளக்கப் பேராசிரியர், கலி.39, 94 ஆகிய பாடல்களையும், குழந்தையும் பாலசுந்தரமும், கலி.39 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:2. குடிமை

    குடிமையென்பது, “ஒத்த ஒழுக்கம்; அதற்குத்தக்க (குடிபிறத்தல்) ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிபிறந்தாரது  தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப.” (பேரா. மெய்.25) எனவும், “ஒழுக்கநிலை; “ஒழுக்க முடைமை குடிமை” என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இது குடிமை ஒழுக்கம் குறிக்கும்.” (பாரதி, மெய்.25) எனவும், “பண்பாடு. அதாவது குலனுடையார்க்குரியவை எனச் சான்றோர் வகுத்துக்கொண்ட சால்பு. குலம், குடிமை, என்பன ஒரோவழி ஒத்த பொருளினவாய் வரும் எனினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு என்பதனை இலக்கண வகையான் உணர்த்தற்பொருட்டுக் குலத்தைப் பிறப்பென்று சிறப்பித்தோதினர் என அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வருமெனக் கொள்க.” (பாலசுந்., மெய்.25) எனவும், “குலத்தினுள்ளும் சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவு.(குடிவரவு குடிமை எனப்படும்).” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    குடிமையென்பது உயர்குடிப் பிறத்தலின் வழி எய்திய ஒழுக்கம். இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் நற்.3 ஆம் பாடலையும், பாலசுந்தரம் நற்.1 ஆம் பாடலையும், தாசன் குறள்.972–ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:3. ஆண்மை

    ஆண்மையென்பது “ஒத்த ஆண்மை; ஆண்மை புருடர்க்காம் – அஃது ஆள்வினையெனப்படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின், குடியாண்மை யென்புழி ஆண்மை யென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது” (பேரா. மெய்.25) எனவும், “ஆளுந்திறம்; இது காதலர்க் கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலர்க்கும் பொதுவாதல் தேற்றம் மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பனவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஆளுமைத்திறன் ஆண்தன்மை வேறு;  ஆளுதல் தன்மை வேறு இதன் முதனிலை உரிச்சொல் ”ஆள்” அதன் முன்னிலை உரிச்சொல் ‘ஆண்’ என்று அறிக. இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும், “ஆண்மைத் தன்மை அஃதாவது ஆள்வினையுடைமையும் வலிபெயராமையும். ‘முட்டின்று முடித்தல்’ என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்குரிய நாணம்” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    ஆண்மையென்பது ஆண்களுக்கான ஆள்வினையுடைமையும் பெண்களுக்கான நால்வகை குணங்களும் சிறந்திருத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.11 ஆம் பாடலையும், பேராசிரியரும் குழந்தையும்,

    கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
    கேளல்
    கேளிர் கெழீஇயின ரொழுகவு
    மாள்வினைக்
    கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து”   (அகம்.93)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தன் சுற்றத்தாரது கேட்டைப் பாதுகாக்கவும் அவர்களுண்ணவும் சுற்றமில்லாத சுற்றத்தாரை (நண்பர்களை) நண்பு செய்து ஒழுகவும் தம் ஆள்வினைக்கு எதிர்ப்பட்ட உள்ளத்தொடு விரும்பி வந்தோமென வினைமுற்றி மீளலுறும் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதனை, “தன் ஆண்டினைக்குத் தக்க, “பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள்” என்பதூஉம், கருதிய கருத்தினாற் காமக் குறிப்பும் பிறந்தமை” என்பர் பேராசிரியர்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, களிற்றியானைநிரை, ப.179) என புலியூர்க் கேசிகனும், “பேராசிரியர், ”பிறப்பே குடிமை” என்ற சூத்திரத்து ஆண்மையால் தலைமகனொடு தலைமகள் ஒத்தமைக்குக் ”கேள்கே டூன்றவும் இறைஞர் ஆரவுமட்…… புகல் சிறந்து” என்ற அடிகளைக் காட்டி, இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினைமுடிந்தன மாயினும், அவளை முயங்குகம் சென்மோ என்றமையின், தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தா ளென்பதூஉம் கருதிய கருதினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று.” (மா.பரமசிவம், அகநானூறு, ப.9) என மா.பரமசிவனும் கூறியுள்ளனர். இவற்றில் ஆணுக்குரிய வினைமேற் செல்லலும் பெண்மைக்குரிய ஆற்றியிருத்தலும் வெளிப்பட்டுள்ளமையால் ஆண்மையாயிற்று.

    1:1:4. ஆண்டு

    ஆண்டென்பது, “ஒத்த பிராயம்; யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஒத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும்” (பேரா. மெய்.25) எனவும், “பருவம்; அதாவது வயது” (பாரதி, மெய்.25) எனவும், “காமக் குறிப்புத் தோன்றிய பருவம்” (குழந்தை, மெய்.25) எனவும், “அகவை அஃது ஈண்டுப் பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது. அஃதாவது தலைவற்குப் பதினாறு ஆண்டும் தலைவிக்குப் பன்னிரண்டாண்டும் நிரம்பி நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம் தலைவன் அகவையிற் காற்கூறு குறைதல் ஒப்புமை யகவை (ஆண்டு) என்றுணர்க. இதனை “மிக்கோனாயினும் கடிவரை யின்றே” எனக் களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    ஆண்டென்பது திருமணத்திற்குரிய பருவமெய்தும் வயது. இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் கலி.18 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.256 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    1:1:5. உருவு

    உருவென்பது, “ஒத்த உருவு…’உருவு நிறுத்த காமவாயி’ லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு…….. உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறென்னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும்” (பேரா. மெய்.25) எனவும், “வடிவம்; அதாவது “மூப்போ டிளமைமுரணா” வனப்பு” (பாரதி, மெய்.25) எனவும், “உருவும், அன்பும் அதாவது பெண்மை வடிவும், ஆண்மை வரவும் நன்கு அமைந்த வழி அவற்றின்கண் நிகழும் இன்பத்திற்கு அன்பு வாயின் போறலின், அன்பு காமவாயில் எனப்பட்டது. அன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையின், உருவும் அதன்கட் டோன்றும் அன்பும் என இரண்டாகப் பகுக்கப்பட்டது. உருவின்கண் நிலைபெற்ற காமத்திற்கு வாயில் போன்ற அன்பென்க” (குழந்தை, மெய்.25) எனவும், “வனப்பு அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    உருவென்பது காதலுக்குரிய வனப்பும், வடிவும் அன்பும் நிறைவெய்தல். இதனை விளக்க பேராசிரியர், குறள்.632, கலி.108 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.108 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.299 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    1:1:6 நிறுத்த காமவாயில்

    நிறுத்தகாமவாயிலென்பது, “ஒத்த அன்பு” (பேரா. மெய்.25) எனவும், “நிலைத்த காதல் நிலை” (பாரதி, மெய்.25) எனவும், “நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில் அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறுத்தகாமவாயிலென்பது, இருவர்மாட்டும் பயின்று வரும் காமத்திற்கேதுவாகிய அன்பு. இதனை விளக்க பாலசுந்தரம் குறுந்.70 ஆம் படலையும், பேராசிரியரும் குழந்தையும்,

    நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச்
    சென்றோன்
    மன்றவக் குன்றுகிழ வோனே
    பகன்மா
    யந்திப் படுசுட ரமையத்
    தவன்மறை
    தேஎ நோக்கி மற்றிவன்
    மகனே
    தோழி யென்றனள்”    (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நின்மகளது மையுண்ட கண்களைப் பலதரம் மாட்சிமைப்பட நோக்கி அக்குன்று நாட்டுக்குரியோன் சென்றான். பகல் நீங்கும் அந்தியாகிய சுடர்படுகின்ற காலத்து அவன் மறைந்த திக்குநோக்கித் தோழீ! இவன் ஒரு சிறந்த ஆடவனே என வியந்து கூறினாள் என்பதன்வழி இதில் தலைவி தலைவன்மேற் கொண்ட காதல் வெளிப்பட்டுள்ளமையின் நிறுத்தகாம வாயிலாயிற்று.

    1:1:7. நிறை

    நிறையென்பது, “ஒத்த நிறை;  நிறையென்பது மறைபிறரறியாமை (கலி.133) நெஞ்சினை நிறுத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “சால்பு அடக்கமெனினும் ஒக்கும். அஃதாவது மறை பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்தல்” (பாலசுந்., மெய்.25) எனவும், “உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறையென்பது பிறர் அறிய கூறக்கூடாதவற்றை மறைத்தொழுகுதல். இதனை விளக்க பேராசிரியர் கலி.133, 37 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.37 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.9, கலி.47 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    1:1:8. அருள்

    அருளென்பது, “எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல் அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு” (பேரா. மெய்.25) எனவும், “பிறவுயிர்க் குண்டான துன்பங் கண்டிரங்குதல், துன்பஞ் செய்யாமை” (குழந்தை, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும் மனமாட்சி அருளுடைமை என்னும் பொதுக்குணம் ஈண்டுச் சிறப்புப் பொருள் படநின்றது. பொறை வேறு; குறையை நிறையாகக் கொள்ளும் பண்புவேறென அறிக” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    அருளென்பது எல்லாவுயிரிடத்தும் அன்போடு நெருங்குதல். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.88, குறுந்.196 ஆகிய பாடல்களும், பேராசிரியரும் குழந்தையும்,

    தாதுண் பறவை பேதுற லஞ்சி
    மணிநா
    வார்த்த மாண்வினைத் தேரன்”   (அகம்-4)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாதை உண்ணுகின்ற பறவை (வண்டு) வருந்துதலுக்கு அஞ்சி மணியின் நாவை ஒலி எழுப்பாவண்ணம் கட்டிய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த தேரையுடையவன். என்பதில் தன் தேரின் ஒலி வண்டினையும் துன்புறுத்த கூடாது என்ற உயர்ந்த நோக்குடையவனாக தலைவன் கூறப்படமையான் இஃது அருளானது.

    1:1:9. உணர்வு

    உணர்வென்பது, “ஒத்த அறிவு; …. உணர்வென்பது அறிவுடைமை;  அஃதாவது உலகியலாற் செய்யத்தகுவது அறிதல்” (பேரா. மெய்.25) எனவும், “அறிவு;  உணர்ச்சி எனினும் அமையும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவர்தம் உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு” (பாலசுந்., மெய்.25) எனவும், “உணர்வினை மதித்தல்” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    உணர்வென்பது ஒருவர் குறிப்பை மற்றொருவர் அறிந்தொழுகும் அறிவு. இதனை விளக்க பாலசுந்தரம் குறள்.1100 ஐயும், பேராசிரியர், தொல்.பொருள்.259 ஆம் நூற்பாவையும், மேலும் பேராசிரியரும் குழந்தையும்,

    தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப.”    (அகம்.22)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “தனது வேட்கை நிறைந்த உள்ளத்தின்கண் எமது வேட்கையும் வாய்ப்ப என்பது பேராசிரியர் கருத்து. (காவலரறியாமல்) தன்னை நச்சுதலையுடைய உள்ளத்தில் எம்முடை நசை (வேட்கை) வாய்ப்ப என்பது அகநானுற்றுக் குறிப்புரைகாரர் கருத்து.” (கணேசையர், தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் இரண்டாம் பாகம், ப.க0க) என கணேசையர் கூறியுள்ளார். இது உள்ளத்துணர்வின் பாற்பட்டது.

    1:1:10. திரு

    திருவென்பது, “ஒத்த செல்வம்; திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி; அது வினையுள்ளுடைமையெனவும் படும்” (பேரா. மெய்.25) எனவும், “செல்வம்; இது பொருள் பற்றியதன்று;  உள்ள மலர்ச்சி; ”செல்வ மென்பது சிந்தையினிறைவே” என்பதனாலும் இப்பொருட்டாதலறிக” (பாரதி, மெய்.25) எனவும், “தெய்வந்தன்மை, அஃதாவது கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி என அவர் கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக” (பாலசுந்., மெய்.25) எனவும், “நல்லதையே எண்ணும் உளநிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    திருவென்பது நிறைவெய்தும் மனநிகழ்வு. இதனை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும் கலி.143ஆம் பாடலையும், பாலசுந்தரம் திணைமாலை.71ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    இதுகாறும் கூறப்பட்ட பத்து மெய்ப்பாடுகளும் தலைமக்கட்குரித்தான ஓப்புமைகளாகும். இதனை,

    “இதுகளவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று” (இளம்., மெய்.25) என இளம்பூரணரும்,

    “மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக ஓதப்பெற்ற பொருள் யாவும் பண்பும் செயலுமே ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாய குடிமையையும் பிறப்பையும் ஒப்பினது வகையுள் தலைமையுடையவை என்பது தோன்ற முதற்கண் வைத்தோதினார் என்க. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (கள-2) என்ற ஒப்புமையை விதந்து கூறுகின்றது. ஐந்திணை மருங்கின் காமக் கூட்டமாவது, துணையமை நல்யாழ்த் துணைமை யோரயல்பெனவும் (களவு-1) அத்துணைவராவார் ஒத்த கிழவனும் கிழத்தியுமெனவும் அவர்தாம் ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் காண்ப. (களவு-2) எனவும், அவருள் தலைமகன் பெருமையும் உரனுமாகிய குணங்களையுடையான் (கள.7) எனவும் தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையுடையாள் (களவு-8) எனவும் கூறி அவர்தாம் இருவகைக் கைகோளானும் ஒழுகும். ஒழுக்கமே  ‘மன்னிய வினை’ என்றும் ஆசிரியர் புலப்படுத்திப் புகுமுகம் புரிதல் முதலாகக் கலகம் ஈறாக ஓதப் பெற்றவை களவிற்குரிய நிமித்தமாம் என்றும் முட்டுவயிற்கழறல் முதலிய எட்டும் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்குரிய நிமித்தமாம் என்றும் தெய்வமஞ்சல் முதலிய பத்தும் கற்பிற்குரிய பொருள்களாம் என்றும் கூறி அவையும் அவைபோல்வன பிறவுமெல்லாம் எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய அடிப்படைப் பொருள்களாம் எனவும், இதுகாறும் எடுத்தோதினார் அங்ஙனம் மன்னியவினை பற்றி வரும் பொருள்கள் யாவும் மேற்கூறிய கிழவனும் கிழத்தியும் அத்தகைய சால்புடையராகிய வழியே நிகழுமாதலின் அச்சால்புடைமைக்கு அடிப்படை இவை என்பது விளங்கும். எனவே அகத்திணைக்கண் எண்முறை நிலையாய மெய்ப்பாடுகள் தோன்றுதற்கு அடிப்படைப் பொருள்கள் புகுமுகம் புரிதல் முதலாயவை என்பதும் புகுமுகம் புரிதல் முதலாய பொருள்கள் நிகழ்தற்கு அடிப்படை தலைமக்கட்குரிய குணங்கள் என்பதும் அக்குணங்கள் அமைதற்குரிய அடிப்படை பிறப்பு முதலாய ஒப்புமைகள் என்பதும் தெளிவாம். அவற்றுள் குணங்கள் தலைமக்கட்குரிய இலக்கணமாக நிற்றலின் அவற்றைக் களவியலுள் விதத்து கூறி, பிறப்பு முதலாய இப்பத்தும் தலைமக்கட்குரிய இலக்கணமன்மையான் ஆண்டுக் கூறாமல் மெய்ப்பாட்டுப் பொருள் தோன்றுதற்குக் காரணமாதல் பற்றி ஈண்டு அமைத்தார் என்க” (பாலசுந்., மெய்.25) என பாலசுந்தரமும்,

    “இப்பத்தும் ஒத்த அன்பராய்த் தம்முள் கூடும் தலைவன் – தலைவி ஆகிய இருவர்பாலும் இருக்க வேண்டும் ஒப்புநிலைகளாகும்” (இராசா, மெய்.25)) என இராசாவும் கூறியுள்ளனர்.

    1:2. முடிவுரை

    1. தலைமக்கட்குரித்தானதாகக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் குழந்தை கருத்துப்படி தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.
    2. தலைமக்கட்குரிய ஒப்புமைகளாகக் கூறப்படும் பத்துமெய்ப்பாடுகளுள் ஆண்மை, நிறுத்தகாம வாயில், அருள், உணர்வு எனும் நான்கினை மட்டும் விளக்க அகநானூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் இவையனைத்தும் உரையாசிரியர்களால் பொருந்த ஆளப்பட்டுள்ளன.

    *****

    கட்டுரையாளர்,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

    Share
  • தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா

     

    மூன்று நாட்கள் 36 ஹோமங்கள் துவங்கியது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 விதமான யாகங்கள் யாகத் திருவிழா நடைபெறுகின்றன.

    மேற்கண்ட வைபவம் நேற்று 26.02.2018 திங்கட் கிழமை மாலை 6.00 மணியளவில் மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, சர்வ தேவதா ஆக்வாண பூஜை, கோலக்ஷ்மி பூஜை, தீப லக்ஷ்மி பூஜை, யாகசாலை பிரவேசம், மஹா சங்கல்பம், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், சதுர்வேத உபச்சாரம் ஆகிய விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் துவங்கியது.

    இதனை தொடர்ந்து இன்று 27.02.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், காளி யாகம், சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், மண்ய சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ அன்னபூரணி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, ஆகிய் பூஜைகளும் ஹோமங்களும் இரண்டு காலமாக நடைபெற்றது.

    மேலும் செவ்வாய் கிழமை பூசம் நட்சத்திரத்தில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகள் அகல பெண்களின் தாயாகவும் வைத்திய ஈஸ்வரியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்களகௌரி ஹோமத்துடன் மாதுளம் பழம் சாறு கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்வாமிகள் திருக்கரங்களால் பக்தர்களுக்கு ஹோம பிரசாததுடன் கஷாயம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த யாகத்தில் ஸ்ரீ வடபாதி சித்தர், தொழிலதிபர் Dr.J.லட்சுமணன், துர்காபவன் உடமையாளர் திரு. உதயசங்கர், ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜம், விழுப்புரம் சம்பத் குமார், குடியாத்தம் விஜயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாளை 28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் மூன்றாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

    மாலை 4.30 மணி முதல் லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் நான்காம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற பல்வேறு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180227 – Vanvihari -lr watercolour 24x32cms

    அண்ணாத்தே ஆடுறார் கண்ணாலே ஒத்திக்கோ
    தென்நாட்டு சிங்கத்தின் தூணாட்டம் -நன்னாக்க:
    மென்னாத்தான் ’’ஆ’’உனக்கு மோட்சம், வனவி’ஹரி’
    காண்ணாவுன் கால்களைக் காட்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (263)

    1970களில் எம்ஜிஆர், சிவாஜி அலை ஓயும் சமயம் மூன்று இளம் நட்சத்திரங்கள் அறிமுகம் ஆகினர். ரஜினி, கமல், ஸ்ரீ தேவி. மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் போட்டி போட்டு நடித்து மூவரும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்திய திரையுலகில் தமக்கென ஒரு இடம் பிடித்தனர். இதில் இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லக்கூடிய அளவு உயர்ந்தவர் ஸ்ரீ தேவி.

    இவருக்கு முன் எந்த பெண்ணும் திரையுலகில் இத்தனை உயரத்தை அடைந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஒவ்வொரு மொழியினரும் இவர் தம் மொழி நடிகை என சொந்தம் கொண்டாடும் அளவு இவரை தவிர வேறு யாரும் இருப்பார்களா என்பது கேள்விக்குரியது

    இவரது சொந்த ஊர் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி. ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் முதன்முதலில் அறிமுகமான படம் துணைவன். அதே ஆண்டிலேயே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரம். அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகம். இப்படியாக தமிழில் துவங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் அந்தந்த மொழி நடிகையாகவே பிரபலமான கதாநாயகிகள் இந்தியாவில் வேறு யாருமே இல்லை.

    தமிழில் துணைவன் துவங்கி, 2015ல் வெளிவந்த புலி வரை, 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவருக்கு முதல் படம், 1975ல் வெளிவந்த ஜூலி. மரணமடைவதற்கு முன்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்துக்கொடுத்திருக்கும் ஸீரோ திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். ஜூலி முதல் ஸீரோ வரை இந்தியில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் 72தான்.

    ஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வந்த காலகட்டத்தில், லதா, மஞ்சுளா, சாரதா, சுஜாதா, ஸ்ரீ பிரியா என பலரும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் யாரிடமும் ஸ்ரீதேவியிடம் இருந்த ஒரு அப்பாவித்தனமும் அழகும் இருந்ததில்லை. அதுவே அவரைத் தனித்துவமானவராகக் காட்டியது என்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி.

    16 வயதினிலே படத்தில் மயிலு, மூன்று முடிச்சு படத்தில் செல்வி, சிவப்பு ரோஜாக்கள் சாரதா என ஆரம்பகாலப் படங்களில், ஒரு நெருக்கடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்ணாக அவர் தொடர்ந்து நடித்து வந்தது, அந்த காலகட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது என்கிறார் தேவிபாரதி.

    தமிழ்த் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடித்தக்கொண்டிருந்த பல கதாநாயகிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. 75களிலிருந்து 80களின் மத்திவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பல வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீதேவியே கதாநாயகியாக இருந்தார்.

    மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளையராணி ராஜலட்சுமி, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், லட்சுமி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிகலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவிக்கு வாய்த்த பாத்திரங்கள் அந்த காலகட்ட நடிகைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.

    மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த குழந்தை நடத்திரம்

    “அந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை. அழகு, அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு என அந்தக் காலத்து தமிழ் ஆண்களின் மனதில் பெண் தேவதையாக ஸ்ரீதேவி உருப்பெற்றிருந்தார். ஸ்ரீ பிரியா, சுஜாதா ஆகியோரை அப்படிச் சொல்ல முடியாது” என்கிறார் தேவிபாரதி.

    ஸ்ரீ தேவியின் கண்களில் ஒரு அழகும் அப்பாவித்தனமும் இருந்தது. அதனை தமிழ் சினிமா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது என்கிறார் தேவிபாரதி. அதற்கு உதாரணமாக, 16 வயதினேலே படத்தில், துவக்கத்திலேயே ஸ்ரீ தேவியின் கண்களின் க்ளோஸப் நீண்ட நேரத்திற்கு திரையில் காண்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

    “ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது பேபி ராணி, பேபி ஷகிலா ஆகியோரும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், ஸ்ரீ தேவி இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெண் குழந்தைகள், பெரும்பாலும் பெரிய நட்சத்திரமாக பிற்காலத்தில் வருவதில்லை. ஸ்ரீ தேவி ஒரு விதிவிலக்கு” என்கிறார் ராஜசேகர்.

    ஸ்ரீதேவி நடிக்கவந்த காலகட்டமும் அவருக்கு மிக உதவிகரமாக இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரது காலகட்டம் முடிவுக்கு வந்து, ரஜினி – கமல் காலகட்டம் துவங்கியிருந்தது. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை பாரதிராஜாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவராக ஸ்ரீ தேவி மட்டுமே இருந்தார் என்கிறார் ராஜசேகர்.

    தெலுங்குப் படங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளே இந்தித் திரையுலகிற்கு அவரை அழைத்துச் சென்றன என்கிறார் ராஜசேகர். தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், இந்திப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்கவைத்தார்கள். ஆனால், வெகுவிரைவிலேயே தனது சொந்த பலத்தில் இந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. 1983ல் வெளிவந்த ஹிம்மத்வாலா திரைப்படத்தின் வெற்றி அவரை எங்கோ கொண்டுசென்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த வாரிசு, சந்திப்பு, நான் அடிமை இல்லை என மூன்று தமிழ்ப் படங்களில் ஸ்ரீ தேவி நடித்தார்.

    “அது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகம். அவரது உடல்கூட தமிழகத்திற்கு வராது என்பது இன்னும் பெரிய வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார் தேவிபாரதி.

    ஸ்ரீ தேவிக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்கள், 70களின் ஸ்ரீ தேவியை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Thanks: BBC

    Share
  • படக்கவிதைப் போட்டி 149-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அண்ணாந்து எதையோ ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் வண்ணக்கிளியைத் தன் சின்ன படப்பெட்டிக்குள் அடைத்துவந்திருக்கிறார் திரு. சாய். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றி!

    ”மண்ணில் வந்த நிலவோ
    மணம் பரப்பும் மலரோ
    கண்ணில் வழியும் அழகோ
    எண்ண இனிக்கும் தமிழோ”
    என்று இந்த மழலையைப் புகழ்ந்து பிள்ளைத்தமிழ் பாடத் தோன்றுகின்றது.

    கொள்ளையோடு அழகோடு நெஞ்சையள்ளும் இந்தக் குழவியைப் பாடக் கவிஞர்கள் குழாம் அடுத்து வருகின்றது.

    *****

    ”ஆகாயம் நோக்கும் அழகுச் செல்லமே! சந்திர மண்டலமும், செவ்வாய் மண்டலமும் தொட்டுவிடும் தூரமாகிவிட்ட இக்காலத்தில், நீ துணிவைத் துணையாக்கினால் உலகுக்குத் தூணாவாய்” என்று குழந்தைக்கு வீரமூட்டுகின்றார் திரு. ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.

    ஆனந்த வாசல்

    ஆகாயத்த அண்ணாந்து பாத்து
    அதிசயிக்கும் செல்லமே!!!
    அது தொட்டுவிடுந்தூரந்தான்!
    ஆழ்ந்த சிந்தனையில்
    அமிழ்ந்திருக்கும் ஆரணங்கே!!
    கள்ளிப்பாலு..வரதட்சணை
    கட்டையில போயாச்சு!!!
    பொண்ணோ..ஆணோ…
    போதும் ஒண்ணுன்னு..
    புரிஞ்சுக்கிறகாலம்வந்தாச்சு!
    சந்திராயன் ஏறி நிலவுக்கு
    சுற்றுலா போகலாமா??
    மங்கள்யானில் பயணித்து
    செவ்வாய்தோசம் கழிக்கலாமா?
    மங்கையரின் பேராண்மை
    கங்கையைப்போல் பிரவாகித்து
    எங்கும் பிரகாசிக்கும்
    இந்த நூற்றாண்டில் உதித்து
    மந்தகாசப் புன்னகையில்
    எதிர்கால யோசனையோ??
    துணிவையே துணையாக்கி
    துயரங்களை உரமாக்கி
    துவளாமல் நீ வளர்ந்து
    தூணாவாய் உலகத்துக்கு!!

    *****

    ”மின்னிடும் விண்மீனும், தண்ணிலவும், தணற் சூரியனும் அந்தரக் கோள்களும் காட்டும் சுந்தர வித்தைகளின் காரணத்தைக் கற்றுத்தெளிவாய் கண்மணியே” என்று குழந்தையிடம் வேண்டுகின்றார் திரு. ஆ.  செந்தில் குமார். 

    சிந்தித்துத் தெளிவாய் பாப்பா…!

    அண்ணார்ந்துப் பார்த்து அதிசயிக்க
    ஆயிரம் உண்டிங்கு பாப்பா…

    ஒளியை உமிழும் கதிரவன்
    உலகுக்கே ஆதாரம் பாப்பா…

    முகிலில் உறைந்து மறைந்த
    மழைத்துளி அதிசயம் பாப்பா…

    வெள்ளொளிச் சிதறல் வானவில்
    வானின் அதிசயம் பாப்பா…

    எல்லையேயின்றி நீளும் பெருவெளி
    எத்தனை அதிசயம் பாப்பா…

    அங்கு அந்தரத்திலிருக்கும் கோள்கள்
    அனைத்தும் அதிசயம் பாப்பா…

    மனதின் சிறகுகள் விரிந்தால்
    மலையும் மடுவாகும் பாப்பா…

    மின்னிடும் விண்மீன் கூட்டம்!
    தண்ணொளி வழங்கிடும் நிலவு!
    தனலாய்க் கொதிக்கும் ஆதவன்!
    பளிச்சென வெட்டும் மின்னல்!
    பொழிந்திடும் தூய மழைத்துளி! இன்னும் 
    எத்தனை! எத்தனை! எத்தனை!
    எத்தனை அதிசயம் இயற்கையில்!
    இவையனைத்துக்கும் காரணம் யாதென 
    சிந்தித்து தெளிவாய் பாப்பா…!

    *****

    ”குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்; கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூடச் சொக்கும்” என்று வண்ணமகளின் வடிவழகை எண்ணத் தூரிகையால் எழிலாய் வரைந்துகாட்டியிருக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    வண்ணமகள் வடிவுகண்டு வானவில்லும் நிமிரும்
    வானம்கூட கீழிறங்கி வணக்கம்சொல்லி சிரிக்கும்
    கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூட சிலிர்க்கும்
    குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்!

    கன்னங்குழி சிரிப்பினிலே கவிதைகளும் விளையும்
    காலையிளங் கதிர்போல கண்கள்கூட ஒளிரும்
    பிஞ்சுமகள் ஸ்பரிசத்தில் பிரளயங்கள் அடங்கும்
    பஞ்சுநிகர் மெல்லடியில் பாவங்கள் கரையும்!

    குழலோடு யாழொலியும் கூடி நின்று ஒலிக்கும்
    குழந்தையிவள் மழலையிலே இசையரங்கு நடக்கும்
    குட்டிமகள் அணைப்பினிலே கோடைகூட குளிரும்
    குற்றால சாரலென கொஞ்சும் மொழி பேசும்!

    எழுந்திவள் நடக்கையிலே என்நாடு உயரும்
    எட்டெட்டுத் திசையெங்கும் என்தமிழும் மிளிரும்
    அழகியிவள் கைகளாலேஅற்புதங்கள் நிகழும்
    அனைவரையும் ஒன்றாக்கி அகிலத்தை வெல்லும்!

    *****

    ”சின்ன நிலாவின் எண்ணத்தில் உலா வருவதென்ன? காசுக்கு விலைபோகும் கல்வியா? தாய்வழிக் கல்வியின் புறக்கணிப்பா? முதியோரின் அவல வாழ்வா?” என வினாத் தொடுக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    பெண் தெய்வம்

    வானத்து நிலவை ரசிக்கின்றதோ!
    இந்த அழகுச் சின்ன நிலா!
    அழகுக் கண்ணம்மா உன்னை நிலா என நினைத்து!
    நட்சத்திரக் கூட்டம் பூமிக்கு வந்து விடப் போகிறது!
    ஆசைக் கண்ணம்மா! வானத்து நிலா, உன் அழகில் நாணி!
    ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறது!
    சின்னக் கண்ணம்மா! உன் முகத்தை மலரென நினைத்து!
    வண்டுகள் தேனெடுக்க வந்து விடப் போகிறது!
    அது சரி! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்!
    காசுக்கு கல்வியை விற்கும் நிலையை நினைத்தாயோ!
    தமிழ் வழிக் கல்வியை புறக்கணிப்பதை நினைத்தாயோ!
    ஓடி விளையாட மறந்த பிள்ளைகளை நினைத்தாயோ!
    ஆண், பெண் அனைவரும் அலை பேசிக்கு அடிமையானதை
    நினைத்தாயோ!
    தாத்தா, பாட்டிக்கு, முதியோர் இல்லம், நிரந்தரமானதை
    நினைத்தாயோ!
    அனைத்தும் மாறும் மயங்காதே!
    நல்லதே நடக்கும் கலங்காதே!
    நாளைய உலகம் உங்கள் கையில்!
    ஆண் உயர்வு பெறுவது பெண்ணாலே!
    நல்லது நடப்பது பெண்ணாலே!
    கருவில் சுமப்பது பெண் தானே!
    பெற்றுக் கொடுப்பது பெண் தானே!
    தாயாய்,தமக்கையாய், தங்கையாய்!
    மனைவியாய், தோழியாய், மகளாய்!
    பல உருவெடுத்து, உலகைக் காக்கும்!
    தெய்வமும் பெண் தானே!

    *****

    கள்ளிப்பாலுக்குத் தப்பிய பெண் குழந்தைகள், வளர்ந்தபின் காமுகரின் கைகளிலிருந்து தப்ப வேண்டும்; மணவாழ்வில் மாமியார்க் கொடுமையிலிருந்து தப்ப வேண்டும் என்று எதிர்காலத்தை எண்ணிக் கலங்கும் பெண் மகவைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    குழந்தையின் கேள்வி

    கள்ளிப் பாலுக்கும்
    கழனி நெல்லுக்கும்,
    கடை மாத்திரைக்கும்
    தப்பிப் பிறந்துவிட்டோம்..

    பிஞ்சென்றும் பாராத
    வஞ்சகரின்
    காமக் கண்களில் படாமல்
    கவனமாய் வளரவேண்டும்..

    பாகுபாட்டுடனே
    கிடைக்கும் கல்வியிலும்,
    பணியினிலும்
    கிடைப்பதில்லை பாதுகாப்பு..

    தடைகள் மிக்கக்
    காதல் வாழ்வைக் கடந்து,
    காலடி வைக்கும்
    மணவாழ்விலும்
    மலைபோல் தடைகள்-
    மாமியார்,
    மண்ணெண்ணெயென்று பல..

    பெரும்பாடுபட்டு
    பிள்ளைகளை வளர்த்துவிட்டு,
    பின்னாளில்
    போவோமோ முதியோர் இல்லம்..

    இப்படி இருக்குது
    பல கேள்வி எம்போலப்
    பெண்கள் வாழ்வினிலே..

    இதற்கென்ன பதில்,
    இறைவா நீசொல்
    இப்போதே…!

    *****

    மங்குலை யொத்த குழலோடும், முகையவிழ் மலர் சிரிப்போடும், செங்கனிவாய் சிந்தும் முறுவலோடும் சிந்தைகவரும் பெண்மகவுக்கு சுந்தரத் தமிழில் தாலாட்டுப் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    தாலாட்டு!

    மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
    ………..மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
    மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
    ………..மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!

    மங்குலை யொத்த கருங் குழலொடும்
    ……….. முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
    செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
    ………..சிரிக்கு மென் செல்லமே கண்ணுறங்கு.!

    ஐயமில் வளர்ந்து நாளைநீ வீட்டையும்
    ………..ஆளப் போகும் முத்தே முத்தாரமே
    வையகமே மாதரால் சுகம் பெறுமாம்
    ………..பொய்யிலா நிலை யுறுவாய் தாலேலே.!

    பாராய் எனை…உனைநான் புகழ்வேன்
    ………..பாங்குடன் உனைத் தாலாட் டுவேன்.!
    ஆராயென் மனதை வளைய வருவாய்
    ……….ஆர் கண்ணும்படு முன்நீ கண்ணுறங்கு.!

    விரும் பியே நானுனைப் பாடுவேன்
    ……….விரலால் தூளி யசைத்து அயர்ந்தேன்
    துரும்பாவேன் நீயும் தூங்கவிலை யெனின்
    ……….சோதியே சுகமாய் நீ கண்ணுறங்கு.!

    அம்மா வெனும் மழலைச் சொல்லால்
    ……….அனைத் தையும் நானுடன் மறப்பேன்
    சும்மா நானினி இருப்பேனோ என்
    ……….சுகமானது சூரியன் போலுதய மாகும்.!

    *****

    ”பிணையேர் மடநோக்கை விட்டு, நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையொடு பாரதியின் புதுமைப்பெண்ணாய்ப் பாரில் வாழ்ந்து, வரலாற்றில் தடம் பதிப்பாய்!” என்று அண்ணாந்துபார்க்கும் எழில்நிலவுக்கு நன்மொழி புகட்டுகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    அண்ணாந்து பார்க்கும் அழகுப் பெண்ணே!

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டு
    பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாய்
    பாரினில் வாழ பழகு இப்போதே.

    பிணைநேர் மடநோக்கும் நாணும் உனக்கு
    அணியல்ல அவை பிணிகள்
    ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்‘
    என்றுரைத்த பாரதியின் இலட்சியப் பெண் நீயன்றோ!

    புலி விரட்ட முறமெடுத்தாள் அக்காலத் தமிழச்சி
    பகை விரட்டப் புலியானாள் தற்காலத் தமிழச்சி.
    அந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் பூத்தவள் நீ –உன்
    சொந்த வரலாற்றைப் பொன்னெழுத்திற் பொறி.

    காற்றிலேறு விண்ணைச்சாடு ககனமெங்கும் தாவித்திரிந்து
    ஆற்றல் மிக்குற அண்டமளந்து
    அறிவின் திருவாய் அவனியில் மிளிர்

    ஆழக்கடலின் அடிவரை சென்று வா
    அகிலத்திருக்கும் மலைமுடிகளிலே
    ஏறிச் சென்று இயற்கையை அளந்திடு
    இருக்கும் அனைத்திலும் உன்தடம் பதித்திடு

    புதிய கலைகள் பூத நுட்ப
    விதிகள் கூறும் வேதியல், இயற்பியல்
    எதிலும் சளையாதுன்றன் திறனை
    எடுத்துக்காட்டி எங்கும் வியாபி.

    *****

    குழந்தையின் எழிற்தோற்றத்தில் ஈடுபட்டு, அற்புதக் கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்கட்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வானது இனி…

    ஆற்றலென்றனை பால சக்தி!

    காந்தப் பார்வையில் ஆகாச கோசமோ
    காந்தள் பிடியில் பிரிந்த வஞ்சுருளோ
    மோந்தா மூச்சில் எதிர்விசைச் சாடலோ
    ஏந்தாப் புதிர் விடுக்கும் செந்தாள் ஊசலோ

    அந்தாரத்திலெழும் மந்தார மாயத்தால்
    சாந்தாச் சிமிழியில் புலவாத பேச்சோ
    சேந்தாவடுக்கில் வெளிநிலை விளக்கமோ
    சிந்தாச்சிந்தையே ஆற்றலென்றனை பால சக்தி!

    சின்னஞ்சிறு மழலையின் காந்தப் பார்வையையும் அதன் காந்தள் பிடியினின்று பிரிந்துநிற்கும் காகிதச் சுருளையும் கவினோடு காட்சிப்படுத்தியிருக்கின்றது இக்கவிதை.

    கவிதைக்கு அழகு சொற்சிக்கனமும்; கருத்துச் செறிவும். அவ்வகையில் சிறிய சொற்களில் விரிந்த பொருளை நுட்பமாய் அடக்கித் தந்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. அவ்வைமகளை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180226 -Guruvayoorappa -watercolour-lr 24x32cms ekadashi

     

    வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
    குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
    பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
    போடுநீ ஆமாம்சா மி….

    பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
    தாங்கிய தோள்வா தபுரீசா -சாங்கிய
    யோகமகள் பாதாதி கேசமதை நீயுரைக்க
    வாகனமாம் புள்ளேறி வா….

    கள்ளா குருவாயூர் பிள்ளாய் வருவாயே
    உள்ளம் நிறைவாக என்முன்னே – தெள்ளிய
    மாமுனிக்கு மாதவா, காமினிக்கு காதலா
    யாமினிக்க வாயாத வா….கிரேசி மோகன்….!

    நாரணச் சாற்றினை நன்கு பிழிந்தெடுத்த
    கேரளக் கோயில் குருவாயூர் -பூரணத்தை
    ஓவியத்தில் கொண்டுவந்தாய், ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்
    காவியத்தில் கேசவ் கவி….!

    ”சந்தன வண்ணதில், சங்கு சுதர்ஸனம்,
    தெண்டா யுதம்,தாங்கு தாமரை -செங்கண்மால்
    விட்டனர் நீலநிறம் ,விட்டலன் நிர்மால்யம்,
    தொட்டதுன் தூரிகை டாப்(brush நுனி)….!

    புதைபா கவத விதைநா ரணராம்
    அதன்வேர் பிரமன் அடிநா -ரதனாம்
    முனிவியாசன் அம்மரம் மூண்ட கிளைகள்
    கனிவாசு தேவன் கதை….!

    தீரநோய் பட்டத் திரியன்று ஏற்றிய
    நாரா யணீயத்தை நாள்தோறும் -பாரா
    யணம்செய்ய, வந்த யமன்பைய(மெள்ள ஒதுங்க), பொல்லாத்
    தனம்செய்வான் பாகவதத் தார்….!

    Share
  • பிரிட்டனில் பேய்மழை !

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    unnamed

    மழை வந்தால் ஓடி ஒளிகிறார்

    தலை காக்க குடை தேடுறார்.

    மழை வந்து விட்டால், இங்கே

    மழை வந்து விட்டால்

    மரணம் வருவது மேலானது !

    வெய்யில் அடித்தால் மனிதர்

    மர நிழல் தேடுவார்.

    குளிர்பானம் குடிப்பார் !

    வெய்யிலில் காய்ந்தால், நான்

    வெய்யிலில் சாய்ந்தால்

    பெய்யும் மழை பொறுப்பேன் !

    கதிரோன் பொழியும் வெய்யிலா,

    காலநிலை இனியது !

    எப்போது மழை பெய்யுமென

    தப்பாது காட்டுவேன் !

    எல்லாம் ஒரு மாதிரி யாக

    இருப்பது தெரியுது.

    மழைக்குக் கவலைப் படேன்.

    கதிரோன் கடும் வெய்யிலா

    காலநிலை இனிதே !

    கேட்குதா நான் சொல்வது ?

    மழை பொழியுதோ, வெய்யில் எரிக்குதோ

    மன உணர்வு தான் அது !

    சொல்வது புரியுதா ?

    +++++++++++++++++++++

    Share
  • தமிழ் பால் கொண்ட ஈர்ப்பால்…!

     

    ஆ. செந்தில் குமார்

     

    இலக்கணத்தில் இருப்பது
    ஆண்பால் பெண்பால்
    பலர்பால் ஒன்றன்பால்
    பலவின்பால் எனும் ஐம்பால்…
    இவற்றுள் முதல் மூன்றும்
    உயர்திணைப்பால்…
    அடுத்த இரண்டும்
    அஃறிணைப்பால்…

    வள்ளுவன் தந்த
    அறத்துப்பால் பொருட்பால்
    இன்பத்துப்பால் எனும் முப்பால்…
    ஆண்பால் பெண்பால் என்ற
    இருபால் புலவரும்
    தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால்…
    வடித்த பாக்களின் படைப்பால்…
    மொழி வளர்ந்தது வனப்பால்!

    அன்னையின் அன்பால்…
    தந்தையின் அரவணைப்பால்…
    பிள்ளைகளின் நற்பண்பால்…
    பெரியோரின் ஆர்பரிப்பால்…
    உறவினரின் இருப்பால்…
    குடும்பம் திளைக்கும் பூரிப்பால்!

    பாட்டாளிகளின் உழைப்பால்…
    படைப்பாளிகளின் படைப்பால்…
    ஆட்சியாளர்களின் பொறுப்பால்…செல்வங்களின் கையிருப்பால்…
    வளங்களின் அதிகரிப்பால்….
    நாடு வளரும் செழிப்பால்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180225 -Compass Krishna -lr - experiments with ivory black
    180225 -Compass Krishna -lr – experiments with ivory black

    ’’ ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
    ஊழியி லுண்டவா, வெண்ணைநெய்த் -தாழிபோல்(வெண்ணைமோர்த் தாழி),
    compassion(வாத்ஸல்யக்) கண்ணனே, கப்பல்நான் ஆடுகிறேன்!
    compassநீ! காட்டு கரை’’….!

    (OR)

    அறியாமை கொண்டேன் அகங்கார முற்றேன்
    அரிஆமை தோற்றம் எடுத்தோய் -உறியாக,
    compassion கண்ணனே கப்பல்நான் ஆடுகிறேன்!
    compassநீ! காட்டு கரை’’….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (150)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    28000560_1566358386751688_1370885477_n

    ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 1

     

    இன்னம்பூரான்

    26 02 2018

    நாத்திகமும், அதுவும் அற்ற வாழ்வியலும் மதாபிமானங்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக அறிக. மனிதன் தோன்றியபோதே, இயற்கையின் கூற்றுகள் அவனுடைய சிந்தனையை பாதித்தன; தூண்டுவித்தன; அலைபாய விட்டன; அச்சமூட்டின; கற்பனைக்கு வித்திட்டன; படைப்பாற்றலுக்கு உரமிட்டன. மின்னலடித்த மானம் அவனை, அவளை பயமுறுத்தியது; உடனுறைந்த இடி பீதியடையவைத்தது; அடுத்து வந்த மழை வியப்பைக் கூட்டியது. ஆண்-பெண் உறவு மனிதன் தோன்றுவது பலகோடி வருடங்களுக்கு முன்பே இயற்கை அன்னையின் வரமாக அமைந்தது. கானகத்தே வாழ்ந்த பழங்குடிகள் சிங்கம், புலிகளின் இனப்பெருக்கத்தைக் கண்டார்கள். தாங்கள் வளர்த்த கால்நடைகளின் வாழ்வியலை பாடமாக கற்றார்கள்; ஆதாம்-ஈவாள்-ஆப்பிள்-அரவம்-சாத்தான் கதை பிறப்புதற்கு முன், தொல்காப்பியர் பிற்காலம் பாராட்டிய கலவி பேரின்பத்தை சுவைத்தார்கள். அது ஒரு தொடர்கதை. தொன்மை இலக்கியம். அது செவி வாழ் இலக்கியமாகவும், பின்னர் எழுத்து இலக்கியமாகவும் பிறந்தது. சில வகையில் அது மதாபிமானத்துக்கு வித்திட்டது என்றாலும், தொன்மம் என்ற வாழ்வியல் இலக்கியம், மதாபிமானங்கள் போல் (நாத்திகம் உள்பட) மூளைச்சலவையில் ஈடுபடவில்லை. மதாபிமானங்கள் எல்லாம் தாழ்ந்தவை அல்ல. அவற்றில் வைணவம், பெளதம் போன்றவை, ஏன் எல்லா மதாபிமானங்களும் (நாத்திகம் உள்பட) வாழ்வியலின் உன்னதமான நிலைப்பாடுகளை போதித்திருப்பதை தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.

    எனக்கு வயது 85. மூன்று வாரங்களுக்கு முன் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது கவனக்குறைவால் (?) ஒரு கான்கிரீட் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தேன். எனவே, சில சொற்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. சிறிய பகுதிகளை பதிவு செய்வதை வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். வழக்கம் போல் சித்திரம் போடவில்லை. காட்டாறு போல் சிந்தனையாறு பெருக்கெடுக்கும்போது, சித்திரம் ஏதுக்கடி குதம்பாய்!

    ஒரு இறுதி வரி. திறந்த மனம் வேண்டும். போலி பகுத்தறிவு போறாது.

    -#-
    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • குறளின் கதிர்களாய்…(204)

    -செண்பக ஜெகதீசன் 

    அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
    வியந்தான் விரைந்து கெடும். (திருக்குறள் -474: வலியறிதல்) 

    புதுக் கவிதையில்… 

    மனம் ஒன்றிப்
    பிறருடன் பழகாதவன்,
    தன் வலிமையின்
    அளவை அறியாதவன்,
    தன்னையே வியந்துபேசிப்
    பிறரைப் பகைத்த அரசன்
    கெடுவான் விரைவில்…! 

    குறும்பாவில்… 

    பிறருடன் பழகாது தன்வலிமை அறியாமல்,
    தன்பெருமை பேசிப் பகைவளர்க்கும்
    மன்னன் கெடுவான் விரைவில்…! 

    மரபுக் கவிதையில் 

    மன்னன் என்போன் தன்னையொத்த
    மன்னர் பலருடன் பழகவேண்டும்
    என்பதை மறந்தே, தன்வலிமை
    என்ன யென்பதை யறியாதே,
    தன்னைப் பற்றியே பெருமையாகத்
    தினமும் பேசிப் பகைவளர்த்தால்,
    முன்னே வந்து முகங்ககட்டும்
    முடிவைத் தந்திடும் கேடதுவே…! 

    லிமரைக்கூ… 

    பழகிடப் பிறரையென்றும் நாடு,
    தன்பலமறியாது தற்பெருமை பேசும்
    மன்னனுக்கு வரும்விரைவில் கேடு…! 

    கிராமிய பாணியில்… 

    தெரியணும் தெரியணும்
    நம்மபெலம் நமக்குத் தெரியணும்…

    நாடளும் ராசாண்ணாலும்
    நாலுபேரோட நல்லாப்பழகணும்,
    நம்ம பெலத்த நல்லாத்தெரியணும்…

    இதுயில்லாம
    தற்பெரும பேசித்திரிஞ்சா
    நாடு வெளங்காது
    கேடுதான் வருமே…

    அதால
    தெரியணும் தெரியணும்
    நம்மபெலம் நமக்குத் தெரியணும்…!

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -9

    க. பாலசுப்பிரமணியன்

    முயற்சி வேண்டும்… அவசரம் அல்ல !

    வாழ்ந்து-பார்க்கலாமே-1

    “முயற்சி திருவினையாக்கும்” என்றும் “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்றும் நம் தமிழ் நூல்கள் முயற்சியின் அவசியத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் எங்கே தன்னம்பிக்கையிருக்கிறதோ அங்கேதான் முயற்சியின் சுவடுகளை நாம் காண முடியும். இளம் வயதிலிருந்தே இந்தத் தன்னம்பிக்கைக்கான வித்துக்களை விதைப்பதிலும் முயற்சிக்கான ஆர்வத்தை வளர்ப்பதிலும் பள்ளிகளும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுதல் அவசியம். இந்த இரண்டும் இல்லாத ஒரு மனிதன் எந்த உயர்வான கல்வி கற்றிருந்தாலும் தோல்வியைத் தழுவுவதில் முதன்மையாக இருப்பான். இல்லாவிடில், தோல்வியைக் கண்டு துவண்டு   தன்னுடைய வளர்ச்சிப்பாதையை மறந்து “கிடைத்தது போதும் ” என்ற மனக்குறையோடோ அல்லது “இதுதான் என் விதி” என்று அங்கலாய்த்துக்கொண்டோ வாழ்க்கையை வீணடித்து விடுவான். இதனால்தான் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) என்பவர் கூறினார் “ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும் எழுந்து மீண்டும் நமது பாதையைத் தொடர்வதுதான் உண்மையான மேன்மையின் அறிகுறி.”

    தன்னுடைய முயற்சிகளில் பலநூறு முறைகள் தோல்வி அடைந்த சர் ஐசக் நியூட்டன்   (Sir Issac Newton)  மின்விளக்கினைக் கண்டுபிடித்தவுடன் கூறினார்     “நான் இதை எவ்வாறு 999 வகைகளில் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்.” முதல் முயற்சியிலேயே ஒருவருக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அவர் பாராட்டுக்குரியவராக இருக்கலாம் ஆனால் அந்த வெற்றியின் மகத்துவத்தை அவரால் சரியாக உணர முடியாது. தமிழ்நாட்டிலே இதுபோல் தன்னம்பிக்கையும் துணிவும் முயற்சியும் கொண்டு முன்னேறியவர்கள் வரிசையிலே நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், வீ ஜீ பீ சகோதர்கள் போன்று பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் உண்டு.

    அமெரிக்காவிலே பிராங்க் வூல்ஒர்த் (Frank Woolworth) என்பவர் இளம் வயதிலே மிகவும் துன்ப நிலையில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி “ஐந்து சென்ட் விற்பனை நிலையம்” என்ற பெயரில் எல்லாப் பொருள்களையும் ஐந்து சென்டிற்கு விற்க ஆரம்பித்து தன்னுடைய விடா முயற்சியினால் அமெரிக்காவிலேயே பெரிய வியாபாரக் கட்டிடத்தை கட்டியதுமட்டுமின்றி தன்னுடைய கடைகளை  563 இடங்களில் திறந்து மிகப்பெரிய பெயர் பெற்றார்.

    எத்தனையோ பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியவைகளை பிரசுரத்திற்கு அனுப்பி பல முறை திரும்பப் பெற்று தன்னுடைய இந்தத் திறனை முழுவதுமாக இழந்து நிற்கின்றனர். எத்தனையோ பல இசை வல்லுநர்கள் தங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாதததால் மனம் நொந்து ஒதுங்கி நிற்கின்றனர். எத்தனையோப் பல தொழில் வல்லுநர்கள் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையினால் தங்கள் வியாபாரத்தைப் பெருக்காமல் அடங்கி வாழ்கின்றனர்.

    இவர்களுக்குத் திறன் இல்லையா என்ன?  தன்னுடைய “திறன் மட்டும் போதாது” (Talent is Never Enough) என்ற தலைப்புடைய புத்தகத்தில் மால்கம் கிளாட்வெல் (Malcolm Gladwell) என்ற மேதை கூறுகின்றார் “எப்பொழுது திறன் கடினமாக உழைக்கவில்லையோ அப்பொழுது கடின உழைப்பு, திறனை வென்றுவிடுகின்றது”

    “தன்னைப் பற்றிய அறிவு, (Self-knowledge) திறன்,(Talent) உழைப்பு, (Hard work) தெளிவு (Clarity of vision) மற்றும் சரியானப் பாதை'(right direction)  ஆகியவை வெற்றியின் பல்முனை அங்கங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளன.

    இன்று பல பேர்களுக்கு நல்ல அறிவும் திறனும் இருந்தாலும், முயற்சி செய்யக்கூடிய ஆர்வம் இருந்தாலும் வாழ்க்கையில் பொறுமையும் நிதானமும் இருப்பதில்லை. விதையிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கும் ‘அவசர’ வாழ்க்கைக்கு அடிமையாகி நிற்கின்றனர். இந்த அவசரம் அவர்களுக்குப் பொறுமையின்மை, வேகம், போட்டி போன்ற பல தேவையற்ற உணர்வுகளை ஏற்படுத்தித் துயரத்தில் ஆழ்த்துகின்றது. மரம் வைத்தவுடன் பழம் கிடைப்பதில்லை! காலமே கேள்வி… காலமே பதில்.. என்ற கூற்றிற்கேற்ப வாழ்க்கையில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்தல் அவசியம். “அவசரம்” பல தவறுகளுக்கு முன்னோடியாக இருப்பது மட்டுமின்றி  பல மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. “அவசரம்” நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான உறுதி அல்ல .. வழியும் அல்ல. விழிப்புணர்வும் தெளிவும் விடாமுயற்சியும் இருக்கவேண்டுமே தவிர அவசரம் தேவையில்லை.   இந்த “அவசரம்” வாழ்க்கையில் நமக்கு ஒரு போலியான ‘நிறைவு’ மனப்பான்மைக்கு (Gratification urge) அழைத்துச் சென்று ஏமாற்றுகின்றது. மனநல மருத்துவர்கள் “அவசரம்”  எவ்வாறு பழக்கமாகி மன உளைச்சல்களுக்கும், (Stress)  நிதானமின்மைக்கும், (Restlessness) உறவுகளின் வீழ்ச்சிக்கும் (Failure of Relationships) வழி வகுக்கின்றது என்பதைத் தெளிவு படுத்துகின்றனர்.

    ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) பல ஆண்டுகளுக்கு முன்பு மன இயல் பிரிவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை. அதற்கு “மார்ஷ்மல்லோ பரிசோதனை” (Marshmallow experiment) என்ற பெயர். மார்ஷ்மல்லோ என்பது நமது ஊரில் உள்ள பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு இனிப்புப் பண்டம்.  ஒரு அறையில் இந்த இனிப்பை மேசையில் நிரப்பி வைத்து அங்கிருந்த சுமார் நாற்பது மாணவர்களிடம் “உங்களில் யாருக்கு இதை உடனே உண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளதோ அவர்கள் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்குப் பின் யாருக்கு இதை உண்ண வேண்டுமோ அவர்கள் இதில் இரண்டை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. பின் இதில் எத்தனை பேர் உடனே எடுத்துக்கொண்டார்கள் என்றும், எத்தனை பேர் கால அவகாசத்திற்குப் பின் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கண்டறியப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்க்கை போக்கு மற்றும் சாதனைகள் கண்டறியப்பட்டன.

    இதில் எவரெல்லாம் உடனே எடுத்துக்கொண்டார்களோ அவர்களை விட பொறுமையாக இருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக்கொண்டவர்கள் தேர்வுகளில் அதிக விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்களாகவும், வாழ்க்கையின் சவால்களைப் பொறுமையுடன் எதிர்கொண்டவர்களாகவும், அதிக அளவில் சாதனை படைப்பவர்களாகவும் கண்டறியப்பட்டனர். இதிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில் ‘பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பதில் உண்மை பொதிந்து கிடக்கின்றது என்பதே.

    வாழ்க்கை மிகவும் அழகானது… பொறுமையாக வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடர்வோம்)

    Share
  • அந்நாளே திருநாள்!

    -பெருவை பார்த்தசாரதி

    எண்ணும் நல்மனத்தினுள் நற் சிந்தனையும்
    ……..எழுவது நின்று அழுக்காற்றால் சீர்கெட்டது..!
    உண்ணும் உணவில் கலப்படம் மிகுந்ததால்
    ……..உண்ட நம்முடலும் நோயால் கெட்டழிகிறது..!
    கொண்ட வாழ்வில் பேராசையால் குறிதவறிய
    ……..குறிக்கோளை மீட்டெடுப்பது எந் நாளோ..?
    மண்ணியல் வளம் மறைந்ததெலாம் மீண்டும்
    ……..மாறும்நிலை நமக்கு..அந்நாளே திருநாளாம்..!

    பாயும் ஏவுகணை கொண்டு பயமுறுத்துவார்
    ……..பக்கத்து நாடாயிருந்தும் பகையே கொள்வார்..!
    யுதமேந்திய கப்பலைக் கடலில் நிறுத்துவார்
    ……..அண்டை நாடுகளைக் குலைநடுங்க வைப்பார்..!
    தாயும் குழந்தையும் தவித்திருக்கும் போதில்
    ……..தன்கை யெறிகுண்டை வீசிக்கலகம் செய்வார்..!
    வாயும்முகமும் துணியால் மூடிய கயவரின்தீய
    ……..வெண்ணம்..! மாறும் அந்நாளே திருநாளாம்..!

    நடமாடும் தெய்வமாம் ஞானியரும் தேவரும்
    ……..நாளும் தவமிருந்தாரன்று பொதுநலம் கருதி..!
    உடலாலும் உள்ளத்தாலும் நாட்டுநலன் மீது
    ……..உறுதிபூண்ட நல்லோரும் பின்னர் தோன்றினர்..!
    இடவசதி பொருள்வசதி இல்லாத ஏழைக்கு
    ……..ஈயும் செயலையே எந்நாளும் செய்தனரவர்..!
    கடவுளாக இச்செயலனைத்தும் தன் மனத்துளே
    ……..காணும் அன்பர்க்கு அந்நாளே திருநாளாம்..!

    *****
    நன்றி:: தினமணி கவிதைமணி:: 17-02-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 1

    -பீ.பெரியசாமி

    1.0 – முன்னுரை

    எண்வகை மெய்ப்பாடுகளையும் அதன் விரிகளையும் periyasamiமுதலில் கூறிய தொல்காப்பியர், அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான, உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் எனும் மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். ( தொல். மெய்-12)   இவ்வியலில் தொல்காப்பியர் கூறியுள்ள இம்மெய்ப்பாடுகளும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்களின் வழிநின்று ஆராயப்படவுள்ளன.

    1:1. அகத்திற்கும் புறத்திற்குமுரிய நிலைகளன்கள்

    மேலே கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளும் அதனைத் தொடர்ந்து கூறப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்குமான நிலைக்களன்களாகும் இதனை, “இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க” (பேரா, மெய்.12) என பேராசிரியர் கூறியுள்ளார்.

    1:1:1. உடைமை

    உடைமையென்பது “யாதானு மொருபொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “உடைமையென்பது, செல்வம்; செல்வநுகர்ச்சியாயின் உவகைப் பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச்செல்வந்தன்னை நினைந்தின்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மரம்போலச் செல்வமுடைமையான்வரும் மெய்வேறுபாடு” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “மேற்கூறிய துய்க்கப்படும் செல்வத்தின் வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம். இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும்” (பாலசுந், மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.  உடைமை என்பது யாதானும் ஒரு பொருளுக்கு உரிமை கொண்டவழி மனத்தில் தோன்றும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணரும், பாலசுந்தரரும், புறம்.72-ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம் புறம்.188-ஆம் பாடலையும்;  தாசன், புறம்.2ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:2. இன்புறல்

    இன்புறலாவது, “நாட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது” (இளம்., மெய்.12) எனவும், “அவ்வுடைமையை நினையுந்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனநிகழ்ச்சி” (பேரா., மெய்.12) எனவும், “அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும்.” (பாரதி, மெய்.12) எனவும், “தமது உடைமைகளையும் செயல்களையும் பற்றித் தாமே எண்ணி மகிழ்தல் இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இன்புறலென்பது தனக்கு உரிமையுடைய நபரையும் உடைமைகளையும் செயல்களையும் எண்ணி தாமே தமக்குள் மகிழும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணர், நற்.182, 3  – ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் குறள். 66, 228 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:3. நடுவுநிலைமை

    நடுவுநிலையாவது, “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” (இளம், தாசன், ராசா., மெய்.12) எனவும், “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது “செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந்தோடா நிலைமை” அது காம வெகுளி மயக்க நீங்கினோர் கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்றாகலான் அவற்றோடு கூறினான்.” (பேரா.குழந்தை., மெய்.12) எனவும், “தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு. இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம் என்னும் சுவையாகக் கருதி விளக்குவர் உரையாசிரியன்மார். சாந்தம் வேறு; நடுவுநிலை வேறு என அறிக.”( பாலசுந்., மெய்.12) எனவும், “காதலும் கடனும் மோதக்  கோடா மனச் செப்பம்; விழைவுக்கடிமையாகாது அறமறவாக் காதற் செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணார்வையே  குறிக்கும்” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. ஏனெனில் நடுநிலைமை எனும் திருக்குறள் அதிகாரத்தை விளக்கும் பரிமேலழகர், “பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை.” (திருக்குறள், பரிமேலழகார்  உரை., ப.46) என்கிறார். ஆகவே, சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை.  இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறள்.118-ஐ எடுத்தாண்டுள்ளனர். மேலும், பாலசுந்தரம் புறம்.192-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:4. அருளல்

    அருளலென்பது “எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “தவறுணரா அன்பின் பெருக்கம்.”( பேரா.குழந்தை, மெய்.12) எனவும், “எல்லா உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய கனிவுள்ளத்தாற் புரியும் செயல். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். வடநூலார் கூறும் கருணையை ஒப்புடை ஒக்கும். இரக்கம் வேறு; இவ்வருள் வேறு என அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலே அருள் எனப்படும். இது வடநூலார் கூறும் கருணையின் பாற்படும். இதனை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், தாசன் ஆகியோர் கலி.11-ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.141-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:5. தன்மை

    தன்மையென்பது, “சாதியியல்பு” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைகொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென்று இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க.” (பேரா., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்வழிப்படும் எனக்கொள்க. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், புறம்.13, 315, கலி.108 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.152, 154, முருகு.50-51, முருகு.126-137 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:6. அடக்கம்

    அடக்கமென்பது, “மனமொழிமெய்யினடங்குதல். அது பணிந்தமொழியும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் போல்வன.” (இளம், பேரா, குழந்தை, தாசன், இராசா, மெய்.12) எனவும், “தன் தலைமை நிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். “ஞாட்பினு ணண்ணாரும் உட்குமென்பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது” எனவும், “நாணொடு நல்லாண்மை காதலுக்கு முன் பண்டுடையேன்” எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருதலறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும்.” (பாரதி., மெய்.12) எனவும், “செல்வமும் ஒளியும் மிகினும், இகலும் இகழ்ச்சியும் நேரினும் பொங்காது நிற்கும் பொறையும் உயர்ந்தோர் மாட்டுப் பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அடக்கமென்பது ஐம்புலன்களை அடக்குதலும், தன்னுடைய குறைகளைப் பிறர் அறியாதவாறு காத்தலும்; செல்வம் போன்றன மிகுந்தாலும் குறைந்தாலும் தன் நிலையிலிருந்து மாறாத இயல்பும்;  பெரியோரை மதித்து நடத்தலுமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.124, 126, 127 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.191, 216 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:7. வரைதல்

    வரைதலென்பது “காப்பன காத்து கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்; அவை: பார்ப்பாராயினும் முத்தீ வேட்டலும் புரவுங்கள்ளும் முதலாயின கடிதலுமென்று இன்னோரன்ன கொள்க வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப்படாது.” (பேரா., மெய்.12)  என பேராசிரியர் கூறியுள்ளார். இளம்பூரணர், குழந்தை, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோரின் உரையும் இதன்வழிப்படும். மேலும் பாரதி, “நாணுவரை யிறந்துமுன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது.” (பாரதி, மெய்.12) என கூறியுள்ளார். வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணார்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், திரிகடுகம்.29-ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:8. அன்பு

    அன்பென்பது, “பயின்றார் மாட்டுச் செல்லுங் காதல்” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “அருட்கு முதலாகி மனத்தினிகழு நேயம்; அஃதுடையார்க்குப் பிறர் கட்டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தினிகழ்ச்சியை வெளிப்படுவனவாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃதொக்கும்.” (பேரா, பாரதி, குழந்தை, மெய்.12) எனவும், “தொடார்புடையார் மாட்டும், நட்டார் மாட்டும் தம் விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அன்பென்பது தான் அறிந்தவர்களிடமும், உறவுகளிடமும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிடம் வெளிப்படும் ஓர் மனிதநேய உணார்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.79-ஐயும்; பாலசுந்தரம் புறம்.91, குறுந்.181 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:9. கைம்மிகல்

    கைம்மிகலென்பது, “குற்றமாயினும் குணமாயினும் அளவில் மிகுதல்” (இளம், இராசா, தாசன், பாலசுந்., மெய்.12) எனவும், “ஒழுக்கக்கேடு; அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல்.” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “அடங்காக் காதற்பெருக்கு.  “நோய் மவி நெஞ்சமொடு இணையல் தோழி” என்பதும், “ஆற்றார் காதல் நோயட இவளணி வாட” என்பதும் போல வருவன காண்க. “காதல் கைம்மிகல்” எனக் களவியலிலும் சூ.116 முன் இவ்வியலிலும் சூ-23 சுட்டுவதானுமுணர்க.” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கைம்மிகலென்பது, அளவில் மிகுதல் அது காதலாயினும் கடமையாயினும் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், மெய்.23, குறள்.868 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.44, குறள்.567, குறள்.539 ஆகியபாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:10. நலிதல்

    நலிதல் என்பது, “பிறரை நெருக்குதல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின்கண் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது.” (பேரா., மெய்.12) எனவும், “இடுக்கணுறுதலும் உறுத்தலுமாம். இஃது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நலிதலென்பது பிறரை துன்புறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், நெடுநல்.இறுதிவெண்பாவும், பாலசுந்தரம், புறம்.19, 276 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:11. சூழ்ச்சி

    சூழ்ச்சி என்பது, “எண்ணம்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட் டோன்றின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம்.” (பேரா, குழந்தை, மெய்.12)எனவும் “நேராக் கூட்டம் நிகழவழியாராய்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “புறநிகழ்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுதல். இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். சூழ்ச்சி என்பது மனதில் உதிக்கும் ஆழ்ந்த சிந்தனை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.445 -ஐயும்; பாலசுந்தரம், புறம்.246, குறள்.639 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:12. வாழ்த்தல்

    வாழ்த்தலென்பது, “பிறனை வாழ்த்துதல்” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறரால் வாழ்த்தப்படுதல்” (பேரா, குழந்தை, மெய்.12) எனவும், “இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்பது” (பேரா., மெய்.12) எனவும், “காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல் “வாழி என்னெஞ்சே”, “நீ வாழிபொழுது”, “வாழிஅனிச்சமே”, “காதலை வாழிமதி”, “புண்கண்ணை வாழி மருண்மாலை” என வருவன காண்க”  (பாரதி, மெய்.12) எனவும், “உலகநலங் கருதி இறையையும் தெய்வ முதலியவற்றையும் போற்றுதல் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இவற்றுள் பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியர்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். வாழ்த்து என்பதற்கு கழகத் தமிழராதி “ஆசி; துதி; மங்களம்” (க.த.அ.,ப.840) என பொருள் கூறியுள்ள வழி இதனை அறியலாம். இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர், ஐங்குறு.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், ஐங்குறு.1, சிலம்பு.கடவுள் வாழ்த்து பாடல்களையும்; தாசன் ஐங்குறு.1, புறம்.9 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:13. நாணல்

    நாணலென்பது, “தமக்குப் பழி வருவன செய்யாமை” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “வெண்குதல், காமமும்; நாணும் உயிர்க்காவாத் தூங்கும் என்நோனா உடம்பினகத்து எனவும், “பல்லோர்கூற யாம் நாணுதுஞ்சிறிதே” எனவும், “யானோக்குங் காலை நிலனோக்கும்” எனவும், “கொண்க னுர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்…………………… காணவந்த நாணப்பெயரும்” எனவும் வருவன காண்க.”( பாரதி., மெய்.12) எனவும், “சான்றோர் பழிப்பனவற்றை ஏலாமையும் புரியாமையுமாம். தன்புகழ் கேட்டவழி எய்தும் மென்மையும் இதன்கண் அடங்கும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நாணலென்பது பழிவருவன செய்யாமை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1015, 1017 ஆகிய குறள்களையும்; பாலசுந்தரம், புறம்.65, 394, 43, கலி.119 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:14. துஞ்சல்

    துஞ்சலென்பது, “உறக்கம் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.” (இளம்., மெய்.12) ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். துஞ்சலென்பது உறக்கம். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.2, 159 – ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:15. அரற்று

    அரற்றென்பது, “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு அதுவும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது.” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழு செல்விக்கும் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “அறிவொடுபடாது வெருவுதலும் உறக்கத்தின்கண் வாய் சோர்தலுமாம். இது மருட்கைக்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அரற்று என்பது உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு ஆகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.198 -ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை

    1:1:16. கனவு

    கனவென்பது, “நனவுபோலாமையின் மெய்ப்பாடாயிற்று” (இளம்., மெய்.12) எனவும், “வாய்வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்டறறியப்படும்.”(பேரா, குழந்தை, தாசன், மெய்.12)  எனவும், “தூக்கத்திற்றோற்றுவது இதுவும் காதலில் கனிவது”(பாரதி., மெய்.12)  எனவும், “உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. இது பெரும்பாண்மை உவகைக்கும் சிறுபான்மை மருட்கைக்கும் ஏனையவற்றிற்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கனவென்பது உறக்கத்தின்போது நனவுபோல வெளிப்படுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1215-ஐயும்; பாரதி குறுந்.147-ஐயும்; பாலசுந்தரம்       கலி.49-ஆம் பாடல் மற்றும்,

    கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
    கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
    வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து” (அகம்-170)

    எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், தாழையின் தாழ்ந்த கிளையில் கடல்காக்கைத் தன் பெடையோடு பசிக்கு ஒன்றும் பெறாமல் சோர்வாய் அமர்ந்திருக்கும். அப்போது கடலில் பரதவர் வேட்டையாடாத இடத்தில் சுறாமீனைத் தான் பிடித்துத் தின்பதாகக் கனவுக் காணும் என தலைவி நண்டிடம் கூறியுள்ளாள். இதில் கனவு எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது. “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி தலைவனுடன் கூடி, முன்பு, பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு,(மணிமிடைபவளம்), ப.11) என நா.மீனவன் கூறியுள்ளார்.

    1:1:17. முனிதல்

    முனிதலென்பது, “வெறுத்தல்” (இளம், பேரா, குழந்தை, இராசா, தாசன், மெய்.12) எனவும், “அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்தாதல். ‘வாழ்க்கை முனிந்தா’ எனவும், “உறையுண் முனியுமவன் செல்லுமூரே” எனவுஞ் சொல்லுபவாகலின்” (பேரா., மெய்.12) எனவும், “உளம் கொள்ளாவழியும் மாறுபட்ட வழியும் எய்தும் வெறுப்பு. இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். முனிதலென்பது ஒன்றனை வெறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.45-ஆம் பாடலையும், பேராசிரியர், புறம்.96-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.208, 176 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:18. நினைத்தல்

    நினைத்தலென்பது, “கழிந்ததனை நினைத்தல் அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோன்றுதலின் மெய்ப்படாயிற்று” (இளம், தாசன், மெய்.12) எனவும், “விருப்புற்று நினைத்தல், நின்னை மிகவும், நினைத்தேனென்பது, வழக்காதலின்; அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடாயிற்று”( பேரா., மெய்.12) எனவும், “ஒன்றனது பயனை விரும்பி அதனை இடைவிடாது எண்ணுதல் கழிந்ததனை மீள எண்ணுதலுமாம். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர் ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். நினைத்தலென்பது நீங்கிய நினைவுகளை மீள நினைக்கும்போது ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1203-ஐயும்; பாரதி, குறுந்.102, 99, நற்.253 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:19. வெரூஉதல்

    வெரூஉதலென்பது, “அச்சம் போல நீடுநில்லாது  கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது.” (இளம்., தாசன், மெய்.12) எனவும், “விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி; அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “பிரிவும் ஊறும் அஞ்சுதல்”( பாரதி., மெய்.12) எனவும், “விரும்பத்தகாதன கண்டுழியும் நிகழ்வழியும் எய்தும் விதிர்ப்பு. இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். வெரூஉதல் என்பது பிரிவின் கண்ணும், துன்பத்தின் கண்ணும் அச்சம் போல தோன்றி திடிரென மறையும் ஓர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,           கலி.87-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.117, 300, 217, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,

    காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
    அதற்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு
    மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
    இனந்தலை மயங்கிய நனந்தலைப்” (அகம்-39)

    எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், உன்னை மறக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று தருகிறேன் கேள். காட்டுவழியில் மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தேய்வதால் மூங்கில் சொரியும் தீப்பொறிகள் அங்கு கீழே விழுந்துள்ள சறுகுகள் மறையும்படி தீப்பற்றி எழுந்து ஊகம் புல்லின் பகுதிகளையும் எரியில் உண்டாக்கிக் காற்று பரவும் இடமெல்லாம் பறந்து எரிந்தது. அதைக்கண்டு அலறி அழும் வணிகக் கூட்டம் பயந்து ஓடியது. அதோடு செருக்கை உடைய புலியைக் கண்டு யானைக் கூட்டம் பல இடங்களுக்கும் சென்றது. அந்நிலையில் கதிரவன் மறைந்தான் என தலைவன் தலைமகளிடம் கூறினான். இதில் வெரூஉதல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:1:20. மடிமை

    மடிமையென்பது, “சோம்புதல்” (இளம், பேரா, குழந்தை, தாசன், மெய்.12) எனவும், “ஆற்றாமையின் அயர்வு” (பாரதி., மெய்.12) எனவும், “செய்தற்குரியவற்றைச் செய்யாது சோர்ந்திருத்தல். அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். மடிமையென்பது செய்ய வேண்டிய செயலை செய்யாது சோம்பி கிடத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.608-ஐயும்; பாரதி, குறுந்.396, 316 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம்,

    அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த
    கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
    வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில்”  ( அகம்.173)

    எனும் அகப் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேலே கூறப்பட்ட அகப்பாடலில், இல்வாழ்வை முறைப்படி நடத்துதல், சுற்றத்தாரின் துன்பம் நீக்குதல் ஆகிய இரண்டும் முயற்சி இன்றி ஊக்கமின்றி இருந்தவர்க்கு இல்லை என்று கருதி நம் தலைவர் பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டார் எனத் தோழி தலைமகளுக்குக் கூறியது. இதில் மடிமையினால் என்ன நேரும் என்பது வெளிப்பட்டுள்ளது.

    1:1:21. கருதல்

    கருதலென்பது, “குறிப்பு” (இளம், பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “மறந்ததனை நினைத்தல்” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கருதலென்பது, குறிப்பு  – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என பொருள் கொள்வர். ஏற்கனவே நினைத்தல் என்பதற்கு இவ்வாறு பாடம் கொண்டுள்ளதால் இங்கு இது பொருந்தாது. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1095-ஐயும்; பாரதி, குறள்.1097, குறுந்.298 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.236-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:22. ஆராய்ச்சி

    ஆராய்ச்சியென்பது, “ஒரு பொருளைக் குறித்த அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல்” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல்.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “காதலரன்பு கனி வழிசூழ்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஒன்றனது நலந்தீங்குகளை நடுவுநின்று நோக்கியறிதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். ஆராய்ச்சி என்பது ஒரு செயலினால் பின்விளையும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.73 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.276, கலி.84 ஆகியப் பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    (தொடரும்)

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

     

    Share