பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

28000560_1566358386751688_1370885477_n

ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி (150)

  1. பகிர்வதே அமிர்தம்!!
    ???????????
    காக்கா காட்டுது தாய்பாசம்_அவை
    கத்துக்கொடுக்கிறபள்ளிக்கூடம்!!
    சோக்காவாழ்கிற பாலபாடம்_அதை
    சொல்லிக்கொடுக்கிறகுருபீடம்!!
    இயற்கைஇடர் வந்த நேரம்
    இன்னல் நீக்க இணைந்தோம்!
    அதனால் அதிலே மீண்டோம்
    ஆறுதல் நாமே ஆனோம்!!!
    இன்னும் இருக்குது ஏழ்மை
    இருப்போர்இதயம் கூர்மை
    அன்பில் விலகும் வறுமை
    அப்படி வாழ்ந்தால் பெருமை!!
    கோடிகோடியாச்சம்பாதிச்சுட்டு
    கொட்டிவச்சுட்டு செத்துட்டாலும்
    கொண்டுபோறது ஒன்னுமில்ல!!
    கொடுத்துச்சிவப்பவர்மரிப்பதில்ல!!
    பாவம்செய்கிற மனிதருக்கும்
    பலனைத்ததருவது செய்தருமம்!
    பண்ணிடும்புண்ணியம்கூடவரும்
    முன்னையவினைகளும்ஓடிவிடும்!
    அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால்
    துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி!!
    சல்லிக்காசில் ஆனந்தமில்லை
    வள்ளல்களுக்கு வானமேஎல்லை!!
    ???????????????
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
    பவானி…ஈரோடு….
    9442637264…)
    ??????????????

  2. காக்கையிடம் கற்றுக்கொள்வோம்..!
    -ஆ. செந்தில் குமார்

    காகாவெனக் கரைந்து கருஞ்சிறகை விரித்துப் பறந்து..
    காகமொன்று அலைந்து கண்டுபிடித்த இரையினை..
    கனத்த அலகைக் கொண்டு கௌவிப் பிடித்துச் சென்று..
    காத்திருக்கும் தன் குஞ்சிற்கு கருணையோடு தந்தது..!
    அகல விரித்த வாய்க்குள்ளே அழகாய் காக்கை திணிக்கவே..
    அமுது போன்ற இரையினை அக்குஞ்சு ஆசைத்தீர உண்டது..!

    சுள்ளி விறகு சிறுகச்சிறுக சேர்த்துக் கூட்டைக் கட்டி..
    சின்னச் சின்ன முட்டையிட்டு அடைகாக்க அதில் அமர்ந்து..
    தான் பொறித்த குஞ்சிற்கு தீங் கிழைக்க நினைத்தால்..
    தன் கூட்டத்தோடு சேர்ந்து கொத்தி கொத்தி துரத்தும்..!
    தன் இனத்தில் ஒன்று தன் இன்னுயிரை நீத்தால்..
    தாங்க முடியா துயரத்துடன் சேர்ந்து கூடி கரையும்..!

    பகுத் துணரும் அறிவு இருந்தும் சில மாந்தர்..
    பகுத் துண்டு வாழும் காக்கைக் குள்ள அறிவு..
    கல்வி பல கற்றும் அதுதனக் கில்லாமற் போனதேனோ?
    கூடி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும்….
    கூட்டு உணர்வு மறந்தால் அமைதி எங்கே நிலைக்கும்?
    காக்கையிடம் படிப்போம் கருத்து மிக்க பாடம்..!

  3. ஊட்டி விடும் அழகு
    அன்றிலிருந்து இன்றுவரை
    நாகரீகம் எனும் சொல்லுக்கு
    விலை போகாத அன்பு
    காலம் காலமாய் தமக்குள்ள
    கடமையை கேள்விகள் எனும்
    பெயரில் சிதைத்திடாமல்
    தலைமுறையைக் காத்திடும் பண்பு
    இயற்கை எனும் இறை உலகில்
    ஈந்தது அனைவர்க்கும் ஒன்றே
    மனிதர் எனும் இனம் மட்டும்
    அறிவால் உணர்ந்து விட்டோம் எனும்
    ஆணவத்தால் தம் அடிப்படைப்
    பண்புகளை ஆழமாய்ப் புதைத்து விட்டு
    கொக்கரித்து நிற்கும் வேளையில்
    சிறிய இந்தப் பறவைகள் எமக்கு
    சிந்தையில் புகுத்துவது ஏனோ
    முள் போல் தைக்கிறது

    சக்தி சக்திதாசன்

  4. பொது நலப் பறவை ::::::: காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி!
    பாசத்தின் மேன்மைக்கு இதுவே சாட்சி!
    உணவைப் பார்த்ததும்! அனைத்தும் மறந்து போகும் மனிதனுக்கு!
    உணவைப் பார்த்ததும்! சுற்றம் நினைவு வரும் காகத்துக்கு!
    தனித்துண்ணும் மனிதனைப் பார்ப்பது வழக்கமான காட்சி !
    பகிர்ந்துண்ணும் காக்கை கூட்டத்தைப் பார்ப்பது!
    கண் கொள்ளா காட்சி!
    குயிலின் முட்டையை அடை காப்பது காகத்தின் வழக்கம்!
    பெற்றோரை கை விடுவது பிள்ளைகள் பழக்கம்!
    காகம் ஒன்று மரணித்தால், காக்கைகள் ஒன்று கூடி!
    ஓலமிடும்!:
    மனிதன் ஒருவன் மரணித்தால் ,மனித இனம்!
    வேடிக்கை பார்த்து நிற்கும்!
    இயற்கை இடரை இனம் கண்டு, மனிதருக்கு,
    எச்சரிக்கை ஒலி எழுப்பும் காக்கை இனம்!
    காக்கையை கொன்றழித்து!
    கறி விருந்து, தின்றிருக்கும் மனித இனம்!
    காரியம் முடிப்பதற்கு, பொய்யாய் புகழுரைக்கும் செய்கை தனை!
    காக்காய் பிடிப்பதாய் உரைப்பது முறையாமோ!
    சுயநலச் செயலுக்கு! பொது நல காக்கை தனை!
    ஈடாய் சொல்வது சரியாமோ!
    காக்கை வாழ்க்கையை அடி ஒற்றி மனிதன் நடந்திட்டால்!
    பொது நல சமுதாயம் நிச்சயம் உருவாகும்!

  5. பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட தாய்மைப் பண்பு

    -ஆ. செந்தில் குமார்.

    மைவண்ணம் கொண்ட அக்காக்கை தன்
    கைவண்ணம் கொண்டொரு கூட்டைக் கட்டி யாரும்
    இலாவண்ணம் பார்த்து தன்னிணையோடு சேர்ந்து
    நிலாவண்ணம் கொண்டநல் முட்டைகளை இட்டு
    நிலைவண்ணம் கொண்டதை அடைகாத்துப் பேணி
    கலைவண்ணம் கொண்டதன் குஞ்சொன்றை பொறித்தது!

    கண்ணைக் காக்கின்ற இமைகளைப் போன்று
    விண்முட்டும் அளவுக்கு பேரன்பைக் கொண்டு
    எண்ணத்தில் தன்குஞ்சின் பசிப்போக்க உன்னி
    மண்முழுதும் பறந்தோடி உழன்று தான்
    உண்ணாது கொணர்ந்த இரையை தன்குஞ்சின்
    தொண்டைக்குள் திணித்து அன்பைச் சொரிந்தது!

    கண்ணுக்கு இனிதாகி விளங்கும் இக்காட்சி
    விண்போற்றும் தாய்மைக்கு சிறந்ததோர் அடையாளம்
    எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது தாயின் அன்பு
    மண்ணுலகில் இருக்கின்ற அனைத்துயிர்க்கும் தாய்மை
    உணர்வென்பது இயல்பான ஒன்று பகுத்தறிவும்
    உணரஇயலாது தாய்மை யெனும் பண்பு!

  6. உதாரணமாய்…

    குயிலதன் முட்டையும் சேர்த்தேதான்
    கூட்டில் வைத்தே அடைகாக்கும்,
    பயில வில்லைப் பண்பிதனைப்
    பள்ளி யெதிலும் சேர்ந்தேதான்,
    செயலில் ஒற்றுமை காட்டுமினம்
    சேயைப் பேணிடும் சிறப்பைப்பார்,
    உயர்ந்த தாய்மைச் சிறப்பினுக்கே
    உதாரணம் என்றும் காக்கையாமே…!

    -செண்பக ஜெகதீசன்…

  7. காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு..!
    =============================

    கடைச் சங்ககாலப் பெண்புலவரும் “விருந்துவரக்
    ……….கரைந்த காக்கையது பலி’யெனப் புகழ்ந்துரைத்தார்.!
    உடனொத்த பொய்யாமொழிப் புலவன் மிகையாக
    ……….இதனைக் ‘கரவா கரைந்துண்ணும்’ குணமென்றான்.!
    ‘நடப்பதுவே நிற்பதுவே’ எனப்பாடிய மகாகவியோ
    ……….நந்த லாலாவைக் கண்டான் ‘காக்கைச் சிறகினிலே’.!
    படத்தினிலேநான் காணுகிறேன்!பகுத்தறிவுளக் கரிய
    ……….பகிர்ந்துண்ணும் ஜீவியாக! பகவானின் வாகனமாக.!

    பாட்டி வடைசுட்ட காக்காக்கதையும் காலத்துக்கும்
    ……….பகன்றுரைத்த பாடம்தானந்த “காகத்தின் தந்திரம்”.!
    கொட்டிக் கிடக்கும் பணமிருந்தும் ‘எச்சிற்கையால்
    ……….காக்கா ஓட்டாதார்’ எனச்சிலருக்குப் பெயருண்டு.!
    வேட்டியை மடித்துக்கட்டி அரசியல் சூழ்ச்சிசெயும்
    ……….வித்தகரை ‘காக்கா பிடித்து’ முன்னேரியவரென்பார்.!
    வேட்டையாடி உண்ணும் ‘கருத்த மனமுடையோர்’
    ……….விட்டு வைக்கவில்லை குணமுடைய காக்கையும்.!

    அண்டத்தில் பறைவையினம் ஆயிரமாம்! அதிலே
    ……….அருங் குணமுளது காக்கையினம்!அதனால்தானோ.!
    அண்டங்காக்கை பரிமளம் மணிக்காக்கை எனப்பல
    ……….உருவமதில் வடிவம் கொண்டாராம் காகபுஜண்டர்.!
    அண்டமுழுதும் பரந்துதிரிந்து கொண்ட ஞானத்தால்
    ……….அழியாத்தமிழில் உபநிடத மொன்றைப் படைத்தார்.!
    அண்டத்தின் தேவையறிந்த மகேஸ்வரனும் அதை
    ……….ஆதாரத் தத்துவமாக்க அவருக்கருள் செய்தானே.!

  8. பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

    பட்சி பறக்கா பசி பறக்க, புசிக்க பரக்காய் அலகெடுக்க
    தட்சி நெருங்கி புயம் நெருக்கி நல்லுடல் நெளிய நின்றிருக்க
    புட்சி ரசொக்க, கவளம் தர, ரசமும் ருசியும் செரிசொரிக்க
    தீட்சி கொடுக்கும் காட்சிமையில் அன்பெனுமூற்று பெருக்கெடுக்க
    கட்சி கரத்தொரு கருத்துயர பசிப்பிணியென்னும் பாவமற
    குட்சி நிறைக்க அமுது கொடை நற்கருமங்கள் நாளுமெழ
    முட்சி குறைக்க ஊட்டமிடும் சத்துச் சோற்றில் கவனமுற
    நீட்சி விளைக்கும் மாட்சியொடு, ஈலாக்குழவி முகங்கண்டிரங்கும்
    தேட்சி பெருக்கும் பிதாமகரும் ஈங்காயிரமாய் அறச்சாலையொடு
    ஆட்சி மேவினர், காகம் போற்றினர், காக்கை சூத்திரம் கற்று தேறினர்
    வீட்சி காணா பெருவரலாறும் அவனியில் ஆங்கே அவரெழுப்பினர்!
    தாட்சி வந்தது, தளர்ச்சி மிகுந்தது, அன்னைதந்தையர் பலரும் இல்லமொழிந்தனர்
    பிட்சி மலிந்தது அவலமிகுந்தது ஊட்டும் கதைக்கும் முறையும் ஒழிந்தது
    உட்சி கோதி உள்ளம் கலக்க பெற்றோர் இல்லா முறைமை வளர்ந்தது
    காட்சிப் பொருளாய் கடைப் பொருளாய்ப் பிள்ளைகள் பேணும் இழிவுமிகுந்தது
    திட்சி கழித்து நல்லடிசிலிட்டு பார்த்துப் பரிமாறாக் கேடும் வந்தது
    மாட்சிமை மறத்தல் வாடிக்கையென்றே மானுடப்பாதை மாறலானது!
    வெட்சி மலராம் எம்மக்கள் ஊட்டல் துறந்தனர் ஓட்டல் புகுந்தனர்!
    காட்சி காட்டும் அனைத்துணவும் திணிந்தன அவர்தம் இரைப்பைதனில்
    நெட்சி நிகழுது, மானுடம் வீழுது! உண்டியும் திண்டியும் நாசம் செய்யுது!
    இரட்சி போற்றுதல் ஈங்கிலையென்றால் முழுதாய் அழிவு நேருதல் உறுதி!
    வேட்சி வேண்டும் அவா மீதுறவேண்டும் மக்கட்ச்செல்வம் நாம் பேணுதல் வேண்டும்!
    மீட்சி நிறுத்தும் வேகமெழ ஞானக் கமண்டலமிங்கே உருண்டுருள காகப்
    பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

  9. பொன்குஞ்சு

    சி. ஜெயபாரதன், கனடா.

    கறுத்த நிறமாயினும், காண
    வெறுப்பளிப்பினும்,
    வாயில் முத்தமிட மனம்
    மறுப்பினும்,
    பஞ்ச வர்ணக் கிளிபோல்
    பிஞ்சு பிறக்காத போதினும்,
    காக்கைக்கும்
    தன்குஞ்சு பொன்குஞ்சே !
    அண்டவெளி நோக்கின்
    அதுவும் கறுப்பு !
    கருந்துளை ஒன்றில்
    பிரபஞ்சம் உருவானது !
    காரிருள்
    கர்ப்பத்தில் உதயம் ஆவது
    காலைப் பொழுது !
    கதிரோன் கண்மூடினால்
    காரிருள் திறக்கும் !
    காரிருள் இல்லாத தாரணியில்
    பேரொளிக்குப்
    பிழைப்பில்லை ! சிறப்பில்லை !
    என் புதல்வியின் நிறம்
    அடுப்புக் கரி !
    பிறந்த என் பேத்தியோ
    பொன்னிலா !

    +++++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *