வாழ்ந்து பார்க்கலாமே -9
க. பாலசுப்பிரமணியன்
முயற்சி வேண்டும்… அவசரம் அல்ல !
“முயற்சி திருவினையாக்கும்” என்றும் “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்றும் நம் தமிழ் நூல்கள் முயற்சியின் அவசியத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் எங்கே தன்னம்பிக்கையிருக்கிறதோ அங்கேதான் முயற்சியின் சுவடுகளை நாம் காண முடியும். இளம் வயதிலிருந்தே இந்தத் தன்னம்பிக்கைக்கான வித்துக்களை விதைப்பதிலும் முயற்சிக்கான ஆர்வத்தை வளர்ப்பதிலும் பள்ளிகளும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுதல் அவசியம். இந்த இரண்டும் இல்லாத ஒரு மனிதன் எந்த உயர்வான கல்வி கற்றிருந்தாலும் தோல்வியைத் தழுவுவதில் முதன்மையாக இருப்பான். இல்லாவிடில், தோல்வியைக் கண்டு துவண்டு தன்னுடைய வளர்ச்சிப்பாதையை மறந்து “கிடைத்தது போதும் ” என்ற மனக்குறையோடோ அல்லது “இதுதான் என் விதி” என்று அங்கலாய்த்துக்கொண்டோ வாழ்க்கையை வீணடித்து விடுவான். இதனால்தான் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) என்பவர் கூறினார் “ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும் எழுந்து மீண்டும் நமது பாதையைத் தொடர்வதுதான் உண்மையான மேன்மையின் அறிகுறி.”
தன்னுடைய முயற்சிகளில் பலநூறு முறைகள் தோல்வி அடைந்த சர் ஐசக் நியூட்டன் (Sir Issac Newton) மின்விளக்கினைக் கண்டுபிடித்தவுடன் கூறினார் “நான் இதை எவ்வாறு 999 வகைகளில் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்.” முதல் முயற்சியிலேயே ஒருவருக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அவர் பாராட்டுக்குரியவராக இருக்கலாம் ஆனால் அந்த வெற்றியின் மகத்துவத்தை அவரால் சரியாக உணர முடியாது. தமிழ்நாட்டிலே இதுபோல் தன்னம்பிக்கையும் துணிவும் முயற்சியும் கொண்டு முன்னேறியவர்கள் வரிசையிலே நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், வீ ஜீ பீ சகோதர்கள் போன்று பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் உண்டு.
அமெரிக்காவிலே பிராங்க் வூல்ஒர்த் (Frank Woolworth) என்பவர் இளம் வயதிலே மிகவும் துன்ப நிலையில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி “ஐந்து சென்ட் விற்பனை நிலையம்” என்ற பெயரில் எல்லாப் பொருள்களையும் ஐந்து சென்டிற்கு விற்க ஆரம்பித்து தன்னுடைய விடா முயற்சியினால் அமெரிக்காவிலேயே பெரிய வியாபாரக் கட்டிடத்தை கட்டியதுமட்டுமின்றி தன்னுடைய கடைகளை 563 இடங்களில் திறந்து மிகப்பெரிய பெயர் பெற்றார்.
எத்தனையோ பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியவைகளை பிரசுரத்திற்கு அனுப்பி பல முறை திரும்பப் பெற்று தன்னுடைய இந்தத் திறனை முழுவதுமாக இழந்து நிற்கின்றனர். எத்தனையோ பல இசை வல்லுநர்கள் தங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாதததால் மனம் நொந்து ஒதுங்கி நிற்கின்றனர். எத்தனையோப் பல தொழில் வல்லுநர்கள் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையினால் தங்கள் வியாபாரத்தைப் பெருக்காமல் அடங்கி வாழ்கின்றனர்.
இவர்களுக்குத் திறன் இல்லையா என்ன? தன்னுடைய “திறன் மட்டும் போதாது” (Talent is Never Enough) என்ற தலைப்புடைய புத்தகத்தில் மால்கம் கிளாட்வெல் (Malcolm Gladwell) என்ற மேதை கூறுகின்றார் “எப்பொழுது திறன் கடினமாக உழைக்கவில்லையோ அப்பொழுது கடின உழைப்பு, திறனை வென்றுவிடுகின்றது”
“தன்னைப் பற்றிய அறிவு, (Self-knowledge) திறன்,(Talent) உழைப்பு, (Hard work) தெளிவு (Clarity of vision) மற்றும் சரியானப் பாதை'(right direction) ஆகியவை வெற்றியின் பல்முனை அங்கங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளன.
இன்று பல பேர்களுக்கு நல்ல அறிவும் திறனும் இருந்தாலும், முயற்சி செய்யக்கூடிய ஆர்வம் இருந்தாலும் வாழ்க்கையில் பொறுமையும் நிதானமும் இருப்பதில்லை. விதையிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கும் ‘அவசர’ வாழ்க்கைக்கு அடிமையாகி நிற்கின்றனர். இந்த அவசரம் அவர்களுக்குப் பொறுமையின்மை, வேகம், போட்டி போன்ற பல தேவையற்ற உணர்வுகளை ஏற்படுத்தித் துயரத்தில் ஆழ்த்துகின்றது. மரம் வைத்தவுடன் பழம் கிடைப்பதில்லை! காலமே கேள்வி… காலமே பதில்.. என்ற கூற்றிற்கேற்ப வாழ்க்கையில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்தல் அவசியம். “அவசரம்” பல தவறுகளுக்கு முன்னோடியாக இருப்பது மட்டுமின்றி பல மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. “அவசரம்” நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான உறுதி அல்ல .. வழியும் அல்ல. விழிப்புணர்வும் தெளிவும் விடாமுயற்சியும் இருக்கவேண்டுமே தவிர அவசரம் தேவையில்லை. இந்த “அவசரம்” வாழ்க்கையில் நமக்கு ஒரு போலியான ‘நிறைவு’ மனப்பான்மைக்கு (Gratification urge) அழைத்துச் சென்று ஏமாற்றுகின்றது. மனநல மருத்துவர்கள் “அவசரம்” எவ்வாறு பழக்கமாகி மன உளைச்சல்களுக்கும், (Stress) நிதானமின்மைக்கும், (Restlessness) உறவுகளின் வீழ்ச்சிக்கும் (Failure of Relationships) வழி வகுக்கின்றது என்பதைத் தெளிவு படுத்துகின்றனர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) பல ஆண்டுகளுக்கு முன்பு மன இயல் பிரிவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை. அதற்கு “மார்ஷ்மல்லோ பரிசோதனை” (Marshmallow experiment) என்ற பெயர். மார்ஷ்மல்லோ என்பது நமது ஊரில் உள்ள பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு இனிப்புப் பண்டம். ஒரு அறையில் இந்த இனிப்பை மேசையில் நிரப்பி வைத்து அங்கிருந்த சுமார் நாற்பது மாணவர்களிடம் “உங்களில் யாருக்கு இதை உடனே உண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளதோ அவர்கள் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்குப் பின் யாருக்கு இதை உண்ண வேண்டுமோ அவர்கள் இதில் இரண்டை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. பின் இதில் எத்தனை பேர் உடனே எடுத்துக்கொண்டார்கள் என்றும், எத்தனை பேர் கால அவகாசத்திற்குப் பின் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கண்டறியப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்க்கை போக்கு மற்றும் சாதனைகள் கண்டறியப்பட்டன.
இதில் எவரெல்லாம் உடனே எடுத்துக்கொண்டார்களோ அவர்களை விட பொறுமையாக இருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக்கொண்டவர்கள் தேர்வுகளில் அதிக விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்களாகவும், வாழ்க்கையின் சவால்களைப் பொறுமையுடன் எதிர்கொண்டவர்களாகவும், அதிக அளவில் சாதனை படைப்பவர்களாகவும் கண்டறியப்பட்டனர். இதிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில் ‘பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பதில் உண்மை பொதிந்து கிடக்கின்றது என்பதே.
வாழ்க்கை மிகவும் அழகானது… பொறுமையாக வாழ்ந்து பார்க்கலாமே !
(தொடர்வோம்)