Month: May 2018

  • சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    கதிரவனின் சினம் எல்லை மீறி
    கனல் நாக்குகள் நீளும் !
    கூர்ந்து நோக்கின் பரிதியும்
    ஓர் தீக்கனல்
    போர்க் கோளம் !
    நெற்றிக் கண்கள் திறந்து
    கற்றைச் சுடரொளி பாயும் !
    பொல்லாச் சிறகை விரித்து
    மில்லியன் மைல் தாவும் !
    வீரியம் மிக்க தீக்கதிர்கள் !
    பீறிட்டெழும் ஒளிப் பிழம்பு !
    மீறி வெளிப்படும்
    மின்காந்தப் புயல்கள் !
    குதித் தெழும்பும் தீப்பொறிகள்
    வட துருவ வான் திரையில்
    வண்ணக் கோலமிடும்
    வையகத்தில் !
    வடுக்களே முகத் தேமல்கள்
    சுடுங் கொப்புளம் !
    இரு விண்ணுளவி நெருங்கிச் சென்று
    பரிதியின் பண்பா டறியும் !
    புவியைச் சூடாக்குவதும்
    குளிராக் குவதும்
    கதிரவன் நெற்றிக் கண்ணே !

    ++++++++++++++++++++++

    ++++++++++++++++++
    +++++++++++++++++
    +++++++++++++++++
    2020 ஆண்டில் நிகழப் போகும் இரு சூரிய விண்ணுளவித் திட்டங்கள்
    இதுவரைச் சூரியனை நெருங்கிச் செய்யாத நேர்முகத் தேர்வு விண்ணுளவிகளை முறையே அமெரிக்க நாசாவும், ஐரோப்பிய ஈசாவும் அனுப்பத் திட்டமிட்டுள்ளன.  நாசா ஏவும் விண்ணுளவி யின் பெயர் :  நாசா பார்க்கர் பரிதி உளவி, ஈசா   [NASA  Parker Solar Probe] ; ஈசாவின் சூரியச் சுற்றுளவி   [ESA Solar Orbiter].  இவை இரண்டும் சூரியனின் சிக்கலான இயக்கங்களையும், புரியாத தனித்துவப் பண்பாடுகளையும் ஆராயும்.  அவற்றின் மூலம் பிற சூரியன்களைப் பற்றி விபரங்கள் அறிய முடியும்.  உலக வானியல் விஞ்ஞானிகள் பல்லாண்டுகளாய் நமது சூரியனின் உட்புற இயக்கங்களைப் பற்றி ஆழ்ந்தறிய  இந்த இரு விண்ணுளவிகள் விளக்கம் அளிக்கும்.
    புவியில் வாழும் மனிதருக்கும், உயிரினங்களுக்கும், சூரிய ஒளிக்கதிர்களே வினையூக்கியாக சக்தி கொடுக்கிறது.  பூமியிலும், மற்ற கோள்களிலும் பருவக்கால சுற்று நிகழ்ச்சி களை உண்டாக்குவதும் சூரியனே.  அந்தப் பருவக் காலப் பாதிப்பே வானலைத் தொடர்பு, துணைக்கோள் இயக்கம்,  நமது மின்சாரப் பரிமாற்று இணைப்பு போன்றவற்றில் பிறழ்ச்சியை உண்டாக்குகிறது.
    ஈசாவின் சூரியச் சுற்றுளவி, பரிதியின் துருவங்களைக் கூர்ந்து ஆராயும்.  நாசாவின் பார்க்கர் சூரிய உளவியுடன், பரிதிப் புயலைச் [Solar Wind] சோதிப்பதில் ஈசாவின் சூரியச் சுற்றுளவியும் ஒத்து ஆராயும். பரிதியின் பல்வேறு மட்டரேகைகளில்  [Solar Latitudes]  வாயு அமைப்பு, புயலின் வேகம் எப்படி மாறுகின்றன என்பதும் பதிவு செய்யப்படும்.  முக்கியமாக பரிதியின் காந்த தளச்சக்தி துருவங்களில் திணிவு அடர்த்தியாக உள்ளதை ஈசாவின் சூரியச் சுற்றுளவி பதிவு செய்யும்.  நாசா, ஈசா இரண்டு விண்ணுளவிகளும்  சூரியனின் தீவிர இயக்கச் சூழ்வெளியை [Solar Dynamic Corona] ஆழ்ந்து ஆராயும்.

    +++++++++++++++++


     

    “சூரிய சக்தி வெளியேற்றம் குன்றிப் போகிறதென்றால் பரிதி சுருங்கி வருகிறது என்பது தெளிவாகிறது.  பரிதியின் விண்ணுளவிகள் அனுப்பிய தகவல் அதை உறுதிப் படுத்தினாலும் அந்த முடிவில் இன்னும் முரண்பாடு காணப்படுகிறது.”

    ஜெரார்டு துயில்லியர் (Pierre & Marie Curie University, Paris)

    “பரிதியின் தீ வீச்சுகள் (Solar Flares) விண்வெளிப் புயலாய் எப்போதாவது ஒருமுறைப் பூமியைத் தாக்கினால் நெடுங்காலம், துணைக் கோள்களின் தொலைத் தொடர்பு சமிக்கைகள் யாவும் தடைப்படும் !  பூமியில் மின்சக்திப் பரிமாற்றம் நிறுத்தமாகி நகரங்களில் இருட்டடிப்பு உண்டாகி மக்களுக்குப் பேரிடர்கள் நேர்ந்திடும்.”

    ரிச்சர்டு ஃபிஸ்ஸர் (Director NASA’s Heliophysics Division)

     


    “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது.  ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    “கடவுள் படைக்கும் போது நான் இருந்திருந்தால், பிரபஞ்சத்திற்கு மிகச் செம்மையான ஒழுங்கமைப்பு பற்றிப் பயன்படும் சில குறிப்புகளைக் கூறி இருப்பேன்.

    மேதை அல்ஃபான்ஸோ (Alfonso The Wise)

    “பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை.  அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”

    ஜே.பி.எஸ். ஹால்தேன் (J.B.S. Haldane, British-born Indian Geneticist & Evolutionary Biologist) (1892-1964)


    1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன !  அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும்.  ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன !  அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின !

    புரூஸ் சுருடானி (Bruce Tsurutani, NASA Plasma Physicist, JET Propulsion Lab)

    “சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,.  எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை.  தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும்.  ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”

    புரூஸ் சுருடானி (NASA Plasma Physicist)


    “சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”

    ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA)

    சிறுகச் சிறுகப் பரிதியின் சக்தி சுருங்கி வருகிறதா ?

    நாசாவின் “சோகோ” (SOHO -Solar & Heliospheric Observatory) என்னும் பரிதிக் கோள விண்ணுளவி இரண்டு பரிதி வடுக்கள் சுழற்சிகளைப் (Sun Spots Cycles) பதிவு செய்தது. 1996 இல் தன் விர்கோ (Virgo) கருவியால் “பரிதியின் மொத்தக் கதிரூட்டம்” (Total Solar Irradiance -TSI) அதாவது சூரியன் வெளியேற்றிய சக்தியை அளந்தது.  30 வருடப் பதிவுகளை எடுத்துக் கொண்டால் சூரியனின் தணிவுச் சுழற்சி சமயத்தில் (Solar Minimum Cycle) அதன் சக்தி வெளியேற்றம் முந்தய தணிவுச் சுழற்சி சமயத்தை விட 0.015 % குன்றி இருந்ததாக அறியப்பட்டது.

    பின்னத்தின் அளவு சின்னதாகத் தோன்றினும் சக்திக் குறைவு மொத்தத்தில் பேரளவானது.  நாமெல்லாம் பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறாது என்று நினைப்போம்.  1980 இல் நாசாவின் பரிதி உச்சத் திட்டவுளவி (Solar Maximum Mission) ஏவிய பிறகு அந்தக் கருத்து மாறியது.  அதன் தகவல்படி ஒருசில நாட்களில் அல்லது ஒரு சுழற்சி சமய வாரங்களில் பரிதியின் சக்திப் படைப்பு 0.1 % அளவு மாறுபடும் என்று விஞ்ஞானிகள் கண்டுள்ளார்.

    சக்தி வெளியேற்றத்தில் மாறுபாடுகள் இருந்தாலும் மூன்றாண்டு காலம் சூரிய நீச்ச சமயத்தில் (Solar Minima) பரிதியின் மொத்தக் கதிரூட்ட (Total Solar Irradiance -TSI) வெளியேற்றம் அதே அளவு (0.015 %) குறைந்தது.  ஆனால் தற்போதைய நீண்ட சூரிய நீச்ச நிலையில் அவ்விதம் நேரவில்லை.  குன்றிய அளவு மிகச் சிறிதாயினும் அந்தக் குறைவு பரிதியில் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப் பட்டது.  பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறினால், அதன் உஷ்ணமும் ஏறி இறங்கும் ! பரிதியின் மேற்தளம் எத்துணை அளவு குளிர்ந்து போகிறதோ அத்துணை அளவு சக்தி வெளியேற்றமும் குன்றும்.  சூரியனின் வெப்ப வீச்சுப் பரிமாணத்தில் குழி விழும்போது, பரிதி சுருங்கி வருகிறது என்பது அறியப் படுகிறது.

    பரிதி முக வடுக்கள் மிகையாகும், குறைவாகும் விந்தைகள்

    நாமிந்த பூகோளத்தில் ஒவ்வொரு விநாடியும் உயிர்வாழப் பரிதி ஒளியுடன் கதிர்கள் வீச விநாடிக்கு 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுப் பிழம்பைப் (Plasma) பிணைத்து ஹீலியமாக்க வேண்டும்.  இந்த வெப்ப சக்தி இழப்பு வீதத்தில் பரிதி இன்னும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க அதனிடம் எரிவாயு உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  பரிதியில் முகத் தேமல்கள் (Sun Spots) தெரியும், மறையும். கூடும், குறையும்.  இது இயற்கை விதி.  சமீபத்தில் முக வடுக்கள் பெரும்பான்மையானவை பரிதியில் மறைந்து போயின.  பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பரிதியின் மீது கருந் தேமல்கள் எப்போது தோன்றும், சில நாட்களிலா, சில வாரங்களிலா அல்லது சில மாதங்களுக்குப் பிறகா எப்போது மறையும் என்று தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்திருக்கிறார்.  இப்போது விஞ்ஞானிகள் பரிதியின் முக வடுக்களின் எண்ணிக்கை ஏறி இறங்கும் ஒவ்வோர் பதினோர் ஆண்டு கால நீடிப்புக்கும் பதிவு செய்திருக்கிறார்.  சூரியனின் மின்காந்த சக்தி ஏற்ற இறக்கச் சுழற்சி (Magnetic Energy Cycle) 22 ஆண்டுக்கு ஒருமுறை உச்சமடையும்.

    விரிந்து போகும் இந்தப் பிரபஞ்சம் ஒருபோதும் முறிந்து போகாது.  அதனுள் இருக்கும் கோடான கோடி காலாக்ஸிகள் தமது ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்திப் பிரபஞ்ச விரிவைத் தடுக்க முடியாது.  விண்வெளியே விரிவை விரைவாக்கும் ஒருவித விலக்கு விசையுடன் (Repulsive Force) இணைந்து கொண்டுள்ளது.  பிரபஞ்சம் எப்போதும் விரிவதோடு விரைவாக்கம் மிகுதியாகி குளிர்ந்து போன இருட்டை நோக்கிச் செல்கிறது.  அதன் விளைவு வானியல் விஞ்ஞானிகளின் சூனிய எதிர்காலம் !  அடுத்த 150 பில்லியன் ஆண்டுகளில் 99.9999 சதவீத காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் காட்சியிலிருந்து நழுவிப் போய்விடும் !

    சூரியனைப் பற்றிச் சில வானியல் பண்பாடுகள்

    சூரிய குடும்பத்தில் பரிதியே ஏறக்குறைய 98.8% பரிமாண நிறையைக் கொண்டுள்ளது. 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே வாயு முகிலிலிருந்து சூரிய நிபுலாவாக (Solar Nebula) பேரளவுக் கோளமாய் வடிவான பரிதி அசுர ஈர்ப்பு விசை பெற்று பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள அனைத்து அண்டங்களையும், பிண்டங்களையும் தன்வசம் இழுத்துக் கொண்டது ! உருண்டு திரண்ட ஒழுங்குக் கோள்களும், ஒழுங்கற்ற முரண் கோள்களும், உடைந்த பாறைகளும், சிதறிய துணுக்குகளும் பரிதியைச் சுற்றிவரத் துவங்கின.  வியப்பாகச் சூரிய குடும்பத்தின் “தொகுப்பு மையம்” (Barycenter) புறத்தே விழாமல் பரிதியின் சூழ்வெளியிலே அடங்குகிறது.

    பரிதி பேரளவு உஷ்ணமுள்ள ஓர் அசுர பிளாஸ்மா பந்து (Ball of Plasma).  மின்னூட்டம் ஏறிய பேரளவு ஹைடிரஜன், சிறிதளவு ஹீலிய வாயுக்கள் நிரம்பிய கோளம். பரிதியின் விட்டம் 864,000 மைல் (1391,000 கி.மீ).  பூமியைப் போல் 333,000 மடங்கு பெரியது பரிதி.  ஒரு மில்லியன் பூமியைத் தன்னுள் அடக்கும் பூதப் பரிமாணம் கொண்டது பரிதி.  பூமியில் 100 பவுண்டு (45 கி.கி.) கனமுள்ள ஒரு மனிதன், பரிதியில் நிற்க முடிந்தால் 2800 பவுண்டு (1270 கி.கி) பளுவில் இருப்பான்.  பூமியிலிருந்து பரிதியின் தூரம் : 93 மில்லியன் மைல் (150 மில்லியன் கி.மீ).  நமது சூரியன் ஒரு நடுத்தர விண்மீன்.  அதன் எரிவாயு சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கும் அளவுக்குப் பெரிய விண்மீன்.  இதுவரை வானியல் விஞ்ஞானிகள் நமது பரிதி போல் 3500 மடங்கு பெரிய ஒரு விண்மீனைக் கண்டு பிடித்துள்ளார்.

    அணுப்பிணைவு சக்தியே சூரியனை ஒரு பெரும் அசுரத் தீக்கோளமாய் ஆக்கி மின்காந்த சக்தியை உற்பத்தி செய்து வருகிறது.  அதன் உட்கரு உலையில் விநாடிக்கு அரை பில்லியன் டன் ஹைடிரஜன் அணுக்கரு பிணைந்து ஹீலியமாக மாறி வருகிறது.  உட்கரு உலையின் உஷ்ணம் : 15.7 மில்லியன் டிகிரி கெல்வின் (28 மில்லியன் டிகிரி ·பாரன்ஹீட்).  பரிதியின் மேற்தள உஷ்ணம் : 5800 டிகிரி கெல்வின் (10,000 டிகிரி ·பாரன்ஹீட்).  சூரியனின் ஈர்ப்பு விசை பரிதி மண்டலத்தைத் தாண்டி 200,000 AU (1 AU = Sun – Earth Distance) (1 Astronomical Unit) தூரத்தில் உள்ள வால்மீன் ஓர்ட் முகில் வரை (Oort Cloud of Comets) நீடிக்கிறது.

    பரிதியால் பூமிக்கு ஒளிமயமான எதிர்காலம் !

    4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சூரியன் நியதிக்கு உட்பட்டுப் பூமிக்குத் தொடர்ந்து ஒளியும் வெப்பமும் அளித்து வருகிறது.  பரிதியின் மையமே ஹைடிரஜன் எரிவாயுவை ஹீலியமாக்கும் அணுப்பிணைவு இயக்கத்தில் இந்த அசுர சக்தியை உண்டாக்கி வருகிறது.  புதிதாக இருக்கும் பரிதியில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயும், அணுப்பிணைவில் விளைந்த சிறுபான்மை ஹீலியமும் சேர்ந்துள்ளன.  ஆனால் மையத்தில் எரிவாயு எரிந்து தணிவதால், சூரிய ஒளி மெதுவாக மிகை யாகிறது !  இப்போது பரிதியின் ஒளிமயம் 40% அளவு தோன்றிய காலத்து ஒளியை விட அதிகரித்துள்ளது.  இது ஒரு பெரும் வியப்பே !

    பரிதிக்கு வயதாக வயதாக ஒளிகுன்றாமல் மிகையாகிறது !  இவ்விதம் இடைத்தர விண்மீனான நமது சூரியனின் சுடரொளி மிகுவது தொடரும்.  இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் நமது பரிதியின் ஒளித்திரட்சி தற்போதைய ஒளிவீச்சை விட 10% அளவு மிகைப்படும் !  அத்தகைய ஒளிச் சூடேற்றம் மெதுவாகப் பூமியில் கடல் வெப்பத்தை அதிகமாக்கி முடிவில் கடல் வெள்ளம் கொதிக்க ஆரம்பிக்க லாம்.  அவ்விதமே வெள்ளிக் கோளின் தள உஷ்ணம் 860 டிகிரி F (460 C) வரை ஏறிச் சென்று நீர் வற்றி அது ஒரு பாலை வெளியானது.  பூமியில் உயிரினத்துக்கு உயிரூட்டும் ஒளி வெப்பமே இறுதியில் அவற்றை முற்றிலும் அழிக்கிறது !

    6 பில்லியன் ஆண்டுகள் கழித்து நமது பரிதி மிகப் பெரும் மாறுதல்களில் சிதை வடையும்.  கடல் வெள்ளக் கொதிப்போடு மானிட வசிப்புக்கே நிரந்தமாய்ப் பெருங் கேடு உண்டாகும்.  சூரிய மையக் கருவில் உள்ள எரிவாயு ஹைடிரஜன் தீர்ந்து போய்க் கருவுக்குக் கவசமாய் உள்ள எரிவாயு அடுத்து எரியத் துவங்கும் ! அதன் விளைவு : சூரியன் உடல் உப்பிடும் ! ஒளி பெருகிடும் ! ஆனால் உஷ்ணம் குளிர்ந்திடும் !  முடிவில் ஒரு செம்பூத விண்மீனாய் (Swelling into a Red Ginat Star) உடல் பெருக்கும் !  விரியும் செம்மீன் 100 மடங்கு ஒளிமயத்தில் அருகில் சுற்றிவரும் புதன் கோளைத் தின்றுவிடும் ! ஏன் சுக்கிரனையும் விழுங்கலாம்.  அப்போது பூமிக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது !  கொதிக்கும் பரிதி பூமியை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடும் !  பூமியின் உயிரினங்கள் பிழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பூமி சனிக் கோள் இருக்கும் சுற்றுப் பாதைக்குத் தள்ளப்பட வேண்டும் !

    சூரியனுக்கு அடுத்து என்ன நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஊகிக்க முடியாது !  பெரும்பான்மையான விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் நேர்ந்தது போல் பரிதித் தேமல் ஏற்ற இறக்க சுழற்சியைத் (Sun Spots Cycles) தொடரும் என்று சொல்கிறார்.  மேலும் சூரியன் தேமல்கள் உண்டாக்கும் சக்தியின்றிப் போகிறது என்பதற்குச் சான்றுகள் தோன்றியுள்ளன !  2015 ஆண்டுக்குள் எல்லாத் தேமல் வடுக்களும் மறைந்து புதிய “மாண்டர் வடுக்கள் நீச்சம்” (Maunder Sun Spots Minimum) உண்டாகி ஏன் புதிய சிறு பனியுகம் பூமியிலே தோன்றலாம் !

    *********************

    தகவல் & படங்கள் :

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American, The New Scientist & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What will Happen to the Sun ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 National Geographic Magazine : Sun Bursts – Hot News from Our Stormy Star (July 2004)
    25 Scientific American Magazine : The Paradox of the Sun’s Hot Corona By : Bhola N. Dwivedi & Kenneth Philips (June 2001)
    26 Scientific American Magazine : The Steller Dynamo By Elizab eth Nesme-Ribes (2004)
    27 Solar Superstorm – A NASA Report (Oct 23, 2003)
    28 Scientists Worry About Solar Superstorm By : Leonard David (www.Space.com) (May 2, 2006)
    29 Solar Storms Strip Water in Mars – Planetary Geology – Geotimes By : Sara Pratt
    30 The Science Behind Solar Storms By : Noelle Paredes\
    31 Bracing for a Solar Storm – http://www.unexpected-mysteries.com/
    32 What Causes Irradiance Variations ? (http://sdo.gsfc.nasa.gov/missiom/irradiance.php)
    33 The Solar Spectral Irradiance & Its Vaiations.
    34 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html(திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ?
    35 http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006272&format=html((திண்ணைக் கட்டுரை – சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ?
    36 New Scientist : Exodus on the Exploding Earth (April 17, 2010)
    37 Astronomy Magazine : Is the Sun an Oddball Star ? (June 2010)
    38 New Scientist Magazine – What is up Sunshine ? By : Stuart Clark (June 12, 2010)
    39 Daily Galaxy (The Daily Telegraph, UK) : Huge Solar Storms to Impact Earth NASA Warns By : Casey Kazan (June 17, 2010)
    40 Reader’s Digest – The Universe & How to see it By : Giles Sparrow (2001)
    41 The Universe at Midnight – Observations Illuminating the Cosmos By : Ken Croswell (2001)
    42. The National Geographic – The New Universe Here, Now & Beyond (August – November Issue 2010)

    43. https://phys.org/news/2018-05-views-sun-missions-closer-star.html  [May 10, 2018]

    44. http://scienceofcycles.com/tag/two-missions-will-go-closer-to-our-sun-than-ever-before/  [May 17, 2018]

    45.  https://www.nasa.gov/feature/goddard/2018/new-views-of-sun-2-missions-will-go-closer-to-our-star-than-ever-before  [May 16, 2018]

    46. https://www.nasa.gov/content/goddard/parker-solar-

    47. probehttps://en.wikipedia.org/wiki/Solar_Orbiter

    ******************

    S. Jayabarathan [ jayabarathans@gmail.com] (May 20, 2018)
    https://jayabarathan.wordpress.com/

    Attachments area

    Preview YouTube video Parker Solar Probe

    Preview YouTube video BREAKING: NASA Sending a Mission to TOUCH the SUN

    Preview YouTube video This NASA Probe Will Fly Closer to The Sun Than Anything Ever Before

    Preview YouTube video Naked Science – Death of the Sun

    Preview YouTube video NASA’s Parker Solar Probe Will Fly Fast and Close to Sun

    Preview YouTube video Heliospheric Future: Solar Probe Plus & Solar Orbiter

    Share
  • சற்றே சிந்தித்துப்பார் மனிதா

    சற்றே சிந்தித்துப் பார் மனிதா !

    பலத்த காற்றிலும் நாணல் வளைந்து கொடுக்கின்றதே
    மனிதா வளைந்து கொடுக்க கற்றுக்கொள் !

    காகங்கள் கற்றுக்கொடுக்கின்றன ஒற்றுமையுடன் கூடி வாழ
    எறும்புகள் கற்றுக்கொடுக்கின்றன சேமிப்பின் சிறப்பை !

    தேனீக்கள் கற்றுக்கொடுக்கின்றன சுறு சுறுப்பின் சூட்சமத்தை
    ஆமைகள் கற்றுக்கொடுக்கின்றன விடாமுயற்சி எனும் பண்பை !

    நாயும், பசுவும் செய்ந்நன்றி என்ன என்பதை அறிவுறுத்துகின்றன
    எருதுகள் தனது கடினஉழைப்பை உதாரணமாக காட்டுகின்றது!

    சிங்கமும்,யானையும், வீரத்திற்கும்,பலத்திற்கும் உவமையாகின்றன
    மயிலும், குயிலும் அழகுக்கும், குரலுக்கும் எடுத்துக்காட்டாகின்றன!

    ஐந்தறிவு ஜீவன்களே நமக்கு நல்லவைகளையே கற்றுக்கொடுக்கின்றன
    ஆறறிவு உள்ள மனிதனே, நீ மட்டும் கெட்டதையே கற்றுக்கொடுக்கின்றாய்!

    ரா.பார்த்தசாரதி

    Share
  • படக்கவிதைப் போட்டி 161-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உழைப்பின் உயர்வை உலகுக்குணர்த்தும் உழைப்பாளர் சிலையைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. வெங்கட்ராமன். எம். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    ”காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கியும்
    கல்பிளந்து மலைபிளந்து கனிகள்வெட்டித் தந்தும்
    ஆலைகள் மலர்ச்சோலைகள் கல்விச்சாலைகள் அமைத்தும்
    நாட்டையும் வீட்டையும் நலமடையச் செய்வோர் உழைப்பாளிகள்!”

    அவர்தம் பெருமையை மேலும் தம் கவிதைகளில் விரித்துரைக்கக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    ”பாட்டாளிக் கூட்டத்தால் உருவானோரே பெரும் பணக்காரர்கள்! ஆகவே வீட்டுக்கு வீடு கூட்டாய் உழைப்போம்; சோம்பல் எனும் கேட்டை ஒழிப்போம்!” என்று பாட்டாளிகளின் பலத்தைத் தன் பாட்டால் விளக்குகின்றார் ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

    பாட்டாளிகளே பலம்!!!!

    எட்டாத தூரமந்த இமயமலை _ அதைக்
    கிட்டால கொண்டுவர தொடர்ந்து உழை!
    பட்டாளத்தார் பணியில் நாட்டின் எல்லை
    கெட்டியாயிருப்பதினால் ஏது தொல்லை!
    வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
    கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
    சட்டங்களைப் போடுகிற அரசாங்கமும்
    சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
    விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
    முட்டாளாயில்லாமல் செயலாற்றினால்
    துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
    இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
    எட்டும் அறிவினில் ஆணும்பெண்ணும்
    கூட்டாயியங்கையிலே வெற்றிபெறலாம்!
    காட்டைவெட்டி நிலமாக்கிப் பயிரிடுவோர்!
    ராட்டைநூத்துத் தறியாலே நெய்திடுவோர்!
    போட்டிபோட்டுத் தொழிற்சாலைதோறும்
    ஈட்டுகிற பொருள்களை அள்ளிவழங்கி
    நாட்டுக்கு வளம்தரும் தொழிலாளிகள்!!
    டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
    பாட்டாளிக் கூட்டத்தால் உருவாகுவார்!!
    ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
    வீட்டுக்கு வீடு உழைப்பாலுயர்வோம்!!!
    சூட்டிடுவோம் மகிழ்வினை மக்களுக்கே!

    ”ஊழலை ஒழிக்க ஏற்றவழி உழைப்பவர் குரலை மதிப்பதே! உழைக்கும் கரங்கள் மன்பதைக்குக் கிடைத்த வரங்கள்!” என்று உழைப்பாளிகள் புகழ்பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உழைக்கும் கரங்கள்…

    உழைக்கும் கரங்களை உழைக்கவிடு
    உதவிக் கரங்களாய்ச் சேர்ந்துவிடு,
    மழையைத் தந்திடும் மேகம்போல்
    மன்பதை காத்திடும் கரங்களவை,
    உழைப்பைச் சுரண்டிடும் கூட்டத்தினர்
    உண்மை நிலையைக் காட்டிவிடு,
    உழைப்பவர் குரலதை மதித்திருந்தால்
    ஊழல் உலகினில் வாராதே…!

    ”வாய்ப் புரட்டை வெட்டிப்போடு! ஊழல்செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு! உழைக்கும்வர்க்கம் ஆளவும், ஆளும்வர்க்கம் உழைக்கவும் வழிதேடு!” என்று நடைமுறைப்படுத்தவேண்டிய நல்ல மாற்றங்களைத் தன் கவிதையில் பட்டியலிடுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    பெயர்த்துப்போடு புரட்டிப்போடு புரட்டியதை வகுத்துப்போடு
    வகுத்துப்போட்ட தத்தனையும் வாரிவாரி நிரவிப்போடு – நீ
    மேடறுத்துச் சமனம் நாட்டு! மேடறுத்துச் சமனம் நாட்டு!வீழ்ந்தவற்றை நிமிர்த்திப்போடு நிமிர்ந்தவற்றைப் பதித்துப்போடு
    பதிப்புகளை மாற்றியாக்கி ஏழை மதிப்புயர வாய்ப்புச் சேரு – நீ
    வாய்ப்புரட்டை வெட்டிப்போடு! வாய்ப்புரட்டை வெட்டிப்போடு!
    தளங்கள் போட்டுக் களங்கள் கூட்டு களங்களிலே மக்கள் கூட்டு

    கூட்டம் போட்டு அத்தனைக்கும் காட்டமான திட்டம்போடு – நீ
    திட்டங்களை முழுச் செயலிலாக்கு! திட்டங்களை முழுச் செயலிலாக்கு!
    உழைப்பவர்க்கு ஊதியத்தை உண்மையாக வழங்கலாக்கு

    வழங்கலிலே ஊழல் செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு – நீ
    தட்டும் தடைகள் இடித்துப்போடு! தட்டும் தடைகள் இடித்துப்போடு!
    வாட்டம் போக்கு கட்டம் போக்கு வேலைவாய்ப்பு பெருகலாக்கு

    பெருத்தப் பணமுதலைகளை, ஈனர்களை வளைத்து வீழ்த்து – நீ
    வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு! வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு!
    அரசியலைப் புரட்டிப்போட்டு புரட்டி அதை நிறுத்திப்போடு
    நிறுத்திப்போட்டு உழைக்கும் வர்க்கம் ஆளுமாறு மாற்றிப்போடு – நீ
    ஆளவந்தார் உழைக்கக் கோரு! ஆளவந்தார் உழைக்கக் கோரு!
    எஃகு உடல் வைரமனம் மானுடர்க்கு நல்பாடம் காட்டு
    காட்டுமாறு கட்டுடலை வாட்டமாக வளர்க்கக்காட்டு – நீ
    வளர் நலவாழ்வை வளமையாக்கு! வளர் நலவாழ்வை வளமையாக்கு!
    பாறைகாத்து தரையைக் காத்து, மேகம் காத்து, மாரி காத்து

    மாரிசேரும் நீர் நிலைகள் காத்து – நீ
    காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு! காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு!

    தன் பிறிதொரு கவிதையில், ”உழைப்பின் கானமே உதிர கானம்! உழைப்பாளர் உறுதிமுன்னே பெரும்பாறையும் பணியுது; கருங்கடலும் கைத்தட்டுது! இத்தகு உழைப்பாளர் வாழ்வுயர உதவிகள் புரிந்திடுவோம்!” என்று நன்மொழிகள் பகர்ந்திருக்கின்றார் அவர்.

    ஏஏய்———! ய்—–ஏஏய் –! ம்ம்ம்ம்ம்!
    இன்னும் போடு! வலிடா! இசுடா! டேய் நிறுத்து!

    உழைப்பின் கானம் உதிர கானம்
    வேர்வை ஊற்றம் நாற்றம் பாடுது
    பாரம் தூக்குமவர் கானம்தானே
    பாரைக்கூட நகர்த்தி இயக்குது

    உடலின் உரமும் மனதின் பலமும்
    இணைந்தசைந்திசைந்தோர் அபிநயம்
    எலும்பு தசை நரம்பு சிரைதமனி
    புருவ கண்நெளிவின் சுருதிலயம்

    நெம்புகோல்கள் நெட்டித்தள்ள
    அவர் மூச்சு சுவாசம் தேங்குது
    விலாக்குள்ளே முணுக்குமிதயம்
    நொடித்தவாறுயிரும் சேர்ந்தியங்குது

    பெரும்பாறையங்கே பணியுது
    பெருங்கடலும் கைதட்டி மகிழுது
    சேர்ந்தியக்கும் அவர் தவநிலையைக்
    கருடன் சேர்ந்து வந்து வணங்குது

    அமர்ந்தவாறு பணமுதலையங்கே
    பல குட்டிபோட்டுப் பெருக்குது
    சிம்மாட்டு கோவணாண்டியாக இவர்
    மறைவர் நீதியெங்கிருக்குது?

    உழைப்பு மட்டும் மூலதனம்
    உடைக்கலமாய்ப் போகவிடுவதா?
    உழைக்கும் மாந்தர் வாழ்வினிக்க
    மேலும் பெருக்கிடுவோம் உதவிகள்!

    ”வாழ்வில்சூழ் தீவினைகளை ஊழ்வினை என்றெண்ணி மருளாமல், உடலுழைப்பால் உயரவேண்டும்! புல்லர்களின் பேச்சால் பொன்னான வாழ்வை இழக்கக்கூடாது” என்று உழைப்பின் உயர்வைச் சிறப்பாய் உரைக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைப்பின்றி இல்லை உயர்வு..!

    சூழ்ந்திருக்குது நம்மைச் சுற்றி வட்டமாய்
    ……சூழ்ச்சி வலைகளெங்கும் சிதறிக் கிடக்குது..!
    வாழ் வனைத்தும் துன்பங்கள் வினைகள்
    ……வஞ்சனை நிறைந்த வழியாகவே தெரியுது..!
    ஊழ்வினை இதெல்லாம் என்று நினையாது
    ……உடலுழைப்பால் உயரும் வகை அறிவீர்..!
    ஏழ்பிறப்பும் மனிதனாய்ப் பிறந்து வாழ்வில்
    ……ஏற்றமுற நித்தமுமே உழைக்கமுன் வருவீர்..!

    இரும்புக் கரங்களால் உழைத்து உருவாகி
    ……எழுந்து நிற்கிறது விண்முட்டும் கோபுரம்..!
    இருநூறடிக்கு மேல் எண்பதாயிரம் கிலோ
    ……எடையை உழைப்பிலே காணும் அதிசயம்..!
    அரும் பெரும் உழைப்பால் உருவானது
    ……ஆயிர மாண்டாக அதிசயமாய்த் திகழ்கிறது..!
    பெரு வுடையார் கோவிலின் புகழாலதற்குப்
    ……பெரிதாய் உழைத்த வரின்றும் வாழ்கிறார்..!

    எல்லாமிங்கே இனாமாகக் கிட்டும் போது
    ……எதற் குழைக்க வேணுமென எண்ணாதே..!
    புல்லர்களின் பயனற்ற பேச்சில் மயங்கிப்
    ……பொன்னான வாழ்வையும் நீஇழந் திடாதே..!
    பொல்லாப்பு யாரிடமும் வேணாம் தம்பி
    ……பொறுப்பாக நடந்து கொள்ள முயலுவாய்..!
    நல்லொழுக்கம் ஒன்றுதான் நாமுயர வழி
    ……நாட்டில் இன்றிது முக்கியத் தேவையப்பா..!

    பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் உயர்வு! ஆதலால் உழைக்கும் கரங்களே! நீங்கள் உங்கள் உரிமைக்குக் குரல்கொடுங்கள்! வெற்றியைப் பெற்றிடுங்கள்!” எனப் பாட்டாளி மக்களின் உழைப்பைத் தன் கவிதையில் உருக்கமாய் உரைத்திருக்கின்றார் திரு. ரா.பார்த்தசாரதி. 

    பாட்டாளி மக்கள்!

    நான்குபேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
    நம் மனதில் அவன்படும் துன்பத்தைக் காண்கின்றோம்
    மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும் மிக கஷ்டம்
    நான்காம் நெம்புகோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே
    அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
    உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை
    பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
    பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்
    படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
    நேரம் காலமின்றிக் கடுமையாக உழைக்கின்ற கூட்டம்
    உழைத்தால்தான் ஊதியம் பெறமுடியும்

    உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்?
    […]
    அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்

    உடல் உழைப்பைக் கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு
    இமயமலைப் பனிமலையில் நின்று
    அயல்நாட்டு ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும்

    பட்டாளத்துப் பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்
    நம் பசியைத் தீர்க்கும் விவசாயியும் ஒரு பாட்டாளிதான்

    அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான்!
    உழைக்கும் கரங்களே, உரிமைக்குக் குரல் கொடுங்கள்

    அடக்குவோரை எதிர்த்துநின்று வெற்றி வாகை சூடுங்கள்! 

    ”விதிக்கே விதி செய்த தேசம்; இன்று விக்கித் திணறுவது மோசம்! கறுப்புப்பணமே நாம்கண்ட வளர்ச்சி; அதைவைத்துச் செய்கிறாரே வெற்றுப் புரட்சி!” என்று நாட்டுநடப்பைத் தன் கவிதையில் போட்டுடைத்திருக்கின்றார் திரு. சத்தியமணி. 

    தடைக்கல் த‌டைகளைப் புறம் சாய்ப்போம் – அது
    சாயாதிடின் உடைத்தெறிவோம்!
    உடைகல் உடைகளை உடன்கிழித்தால் – அது
    கரையும்வரை வியர்த்துழைப்போம்!

    கரிகள் பூசி நமைச் சேர்ப்பார் – பெரும்
    வரிகள் விதித்து நலம் கேட்பார்
    நரிக ளாளும் இந்த நாட்டில் – எங்கு
    நியாயம் தர்மங்களைப் பார்ப்பார்?
    உழைக்கும் சிலையதற்கு மாலை, பின்னர்
    ஊழல் அணிவகுப்பில் சாலை!
    விதிக்கும் விதிசெய்த தேசம் – இன்று
    விக்கித் திணறுகிற மோசம்!

    வானங் கறுக்கவில்லை வறட்சி – சிலர்
    மனத்தில் கற்பழிக்கும் உணர்ச்சி!
    கறுப்புப் பணக்குவியல் வளர்ச்சி அதைக்
    காட்டி நடத்தும் இவர் புரட்சி!
    தனக்குத் தேவை வருமானம் அதை
    மடக்கிப் பிடுங்கும் அவமானம்!
    கிடைத்த பேர்க்கு வெகுமானம் – அது
    கிட்டாவிடின் ஏது பிரமாணம்?

    ”ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை; வேளாண்மை இல்லையேல் வாழ்வே இல்லை. ஆதலால் கனிவுமிக்க மனிதராய்க் கழனிகளில் பயிர்த்தொழில் செய்து உயிர்கள் காப்போம்” என்று உழவின் பெருமையை உரக்கப் பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன். 

    ஏர் முனைக்கு நேரில்லை

    அங்கிங்கு எனாதபடி எங்குநாம்
    நோக்கித் தொழிற்துறைச்
    சாதனங்களைச்
    சீர்தூக்கிப் பார்த்தால்
    ஏர் முனைக்கு நேராக
    எதுவுமே இல்லே!
    வேளாண்மை இல்லையேல்
    வாழ்வே இல்லை
    தலை அறுக்கும் கூரிய
    வாளை எல்லாம் நெளித்து
    ஏர் முனை ஆக்கு!
    வேலை எல்லாம் வளைத்து
    ஏர் முனை ஆக்கு!
    மடிவெடித் தட்டி அப்பாவிக்
    குடிகளைத் துண்டாக்கும்
    மூர்க்கரைப் பற்றிச் சிறையில்
    சேர்க்காது,
    ஏர்முனை பிடித்து, நிலம்
    உழுது பயிரிட்டு
    உயிர்களை வளர்க்கும்,
    கனிவு மனிதராய் ஆக்கு!
    இனிமேல் அதுவே
    பணி நமக்கு! பாசம் நமக்கு!
    பாதை நமக்கு!

    உழைப்பாளர் சிறப்பை உயரிய வகையில் விதந்தோதியிருக்கும் கவிஞர்கள் குழாத்துக்கு என் கனிவான பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இனி…

    வெற்றியின் வேதம்

    முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
    முடியாததில்லை எதுவும் முயன்றாலே
    முடியுமென்று முன்னேறு – உன்னாலே
    முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே

    கடமையை மட்டும் செய் கவனமாய்
    கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
    கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
    கடினமாய்ப் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வுகொள்!

    வெம்மை காட்டும் சுடுபொழுதில் உடல்
    வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
    வளைந்த முதுகின் வலிமையால்
    விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை!

    காடு மலை மேடு எல்லாம் உன்
    கடும் உழைப்பால் காட்சிபெறும்!
    கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்க்
    காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்!

    நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை
    தெம்புகொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு!
    நம்பு நீ ஒரு நெருப்புக்கோள் – சிற்றுளி
    அம்புகள் பிளக்கும் பெருமலைப் பாறைகள் ஏராளம்!

    உழைத்துக் களை! உடல் இளைக்க உழை! யாருக்கும்
    சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
    விளைவித்துக் காட்டு என்னாலும் முடியும் என்று – ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை!

    ”நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை! தெம்புகொண்டு போராடினால் உப்புக் கரிக்கும் வேர்வைக்கிடையில் வெற்றிகள் வேர் வைக்கும்! ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை வெற்றியின் வேதத்தை மேதினிக்குப் போதிக்கும்!” என்று உழைப்பினால் கிட்டும் உறுதிகளைச் சுவைபடத் தன் கவிதையில் இழைத்துத் தந்திருக்கும் திரு. சு. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • மொரீசியசில் தமிழரும் வாழ்வும் 

    முனைவர் த. மகாலெட்சுமி

    முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

    தரமணி, சென்னை – 113

     

                தொல் பழங்காலத்தில் குமரிக்கண்டத்தில் தோன்றிய மனிதன் உலகமெல்லாம் பரவினான் என்பது வரலாற்றாசிரியர் பலரின் கருத்து. இவ்வாறு இருக்கையில் மிக அண்மைக்காலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர் புலம்பெயர் நிகழ்வு ஏற்பட்டது. அத்தகைய நாடுகளில் மொரீசியசும் ஒன்று. மொரீசியசு தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இங்கு தமிழுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழ்மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், கலை பண்பாட்டு சூழ்நிலைகள் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். எனவே மொரீசியசு நாட்டில் தமிழரும் வாழ்வும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

    மொரீசியசு அறிமுகம்

                 ‘மொரீசியசு’ என்னும் பெயர் மொரீசியசு தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்சு, அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டுள்ளது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்சு, மொரீசியசு தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அகலேகா, மொரீசியசின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச்சிறிய தீவு. இது மொரீசியசு தீவின் தென் மேற்கே 400 கி.மீ தொலைவில் இருக்கிறது. மொரீசியசு ஒரு விவசாய நாடாகும். இந்நாட்டின் தேசிய வரவு செலவு திட்டம் முக்கியமான விளைபொருள்களான கரும்பையும், தேயிலையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.

                மொரீசியசு ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய தீவுக்கு 370 ஆண்டுகாலம் தொடர்ச்சியான குடியேற்ற வரலாறு காணப்படுகிறது. டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் இத்தீவை ஆண்டுள்ளனர். மொரீசியஸ் நாடு 1968ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றுள்ளது. இந்நாடு பல்வேறு இனங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களடங்கிய ஒருபன்மைச் சமுதாய நாடு எனலாம். வரலாற்றுக் காலந்தொட்டு மொரீசியசிலே பிறந்த மொரீசியர்களோடு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இங்கு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பியர்கள், இந்தியர்கள், கிரியோல்கள், சீனர்கள், ஆப்ரிக்க அடிமைகள் எனப் பிரிக்கலாம். 1983ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 88 சமயங்களைச் சேர்ந்தவர்களும் 66 மொழிகளைப் பேசுகின்றவர்களும் உள்ளனர். (எஸ்.ராஜாராம்.1991, ப.307)

    கிரியோல் மக்கள்

     ‘கிரியோல்’ என்பது ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர், ஐரோப்பிய வம்சாவழியினரோடு கலந்ததால் உருவான கலப்பின மொரீசியசு மக்களைக் குறிக்கிறது. பிரெஞ்சு இலக்கண அமைப்பு உடையதும் பெரும்பாலான ஆப்ரிக்க மொழிச் சொற்களையுமுடைய ‘மொரீசியன் கிரியோல்’ என்னும் கலப்பு மொழியே இவர்களது தாய்மொழியாகும்.

    தமிழர் குடிபெயர்வுகள்

                தமிழர்கள் பழங்காலத்திலிருந்து வணிகத்தின் பொருட்டும், 18,19ஆம் நூற்றாண்டுகளில் பிரஞ்சு, போர்ச்சுகீசிய, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் தோட்ட வேலைகளுக்குக் கூலி தொழிலாளர்களாகவும் கொண்டு செல்லப்பட்டவர்கள் குடியேற்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். அவைபோன்ற குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்றுதான் மொரீசியசு தீவாகும்.

                தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தவுடன் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், ஆர்க்காட்டு நவாப்பு போன்றோர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிறுவ தென்தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையப்பட்டுக்காரர்களுடன் ஓயாத போரினைச் செய்து வந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும், அதனைச் சார்ந்த விவசாய தொழிலாளர்களுமே எனலாம் . நாட்டில் தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக் கொடுமை, கிராமப்புறங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வட்டிக் கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கொத்தடிமைத்தனம், அடிமை முறை போன்றவற்றைத் தாங்கமுடியாமல், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் நாடு விட்டு வெளியேறி குடியேறலாயினர். ‘தமிழ்நாட்டில் நிலவிய வறுமை, கொத்தடிமை, சமூக நெருக்கடி போன்ற நிலவரங்களாலும், முகவர்களின் கவர்ச்சியான வார்த்தைகளாலும் வெளிநாடு சென்று பிழைப்பதற்கு இவர்கள் முற்பட்டனர்.’ (முரசு நெடுமாறன். 1997, ப.55)

    மொரீசியசில் தமிழர் குடியேறியமை

    1. முதலாவது காலகட்டம் : மொரீசியசின் கட்டட பணிகளுக்கும் பிற கைவினை தொழில்நுட்ப வேலைக்காகவும் கைவினைத் திறன் கொண்ட தமிழர்களைக் குடியேற்றியமை.
    2. இரண்டாவது காலகட்டம் : ஒப்பந்தக் கூலி முறையில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்களைக் குடியேற்றியமை.
    3. மூன்றாவது காலகட்டம் : ஒப்பந்தக் கூலி முறையோ அல்லது வேறெந்த நிபந்தனையோ இன்றி வணிகத்தின் பொருட்டுத் தமிழர்கள் குடியேறியமை.
    4. மொரீசியசின் ஆளுனராகப் பெநுவா தூய்மா என்பவர் 1728ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தவர். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1735ஆம் ஆண்டு மயே தெ லபோர் தொன்னே புதுச்சேரியிலிருந்து கப்பல் கட்டுவதற்காகவும் கட்டடங்கள் கட்டுவதற்காகவும் தமிழர்களை அழைத்துச் சென்றார். இத்தமிழர்கள் போர்ட்லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஆப்ரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. இவர்கள் கெளரவமாக நடத்தப்பட்டுள்ளனர்.

     மொரீசியசு என்னும் பிரான்ஸ் தீவை ஒரு நாடாக உருவாக்கியவர் லபோர் தொன்னே என்பராவார். இவரது உயரிய பணிகளுக்கு உதவியாக நின்றவர்கள் தமிழர்கள். “இத்தமிழர்கள் கைவினைத் திறனும் சிறந்த தொழில் நுட்பமும் உடையவர்கள் என்றும் மொரீசியஸ் வளர்ச்சியில் இவர்களது பங்கு கணிசமானது” என்று வரலாற்றாய்வாளர் முனிந்திரநாத் வர்மா குறிப்பிடுகிறார். லபோர் தொன்னேயின் நண்பரும், ‘பாலுவும் வர்ஜினியாவும்’ என்ற காதல் காவியத்தின் ஆசிரியருமான பெர்னார்தென் தென் சென் பியே “புதுச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் சாதுவானவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருந்தனர்” என்று குறிப்பிடுகிறார். பல தமிழர்கள் இக்காலத்தில் அலுவலங்களில் பணிபுரிந்ததை நபால் குறிப்பிடுகிறார்.

                பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாக இருந்தது. கிழக்குப் பகுதியில் ‘மலபாரிகள்’ என்றழைக்கப்பட்ட தமிழர்களும் பிற தென்னிந்தியரும் வாழ்ந்தனர். இப்பகுதியை பிரஞ்சுக்காரர்கள் ‘மலபாரிகள் முகாம்’ (Camp des Malabars) என்றழைத்தனர். 1810ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் இருவர் பக்கமும் நின்று தமிழர்கள் போராடியுள்ளனர். ஆங்கிலேயர் தம் படைக்கு ‘உச்சமுடி’ என்ற தமிழரைத் தளபதியாக்க எண்ணி இருந்ததை அறிய முடிகிறது. 1829 முதல் 1830 வரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகம் வாயிலாக மொரீசியசில் குடியேற ஃபர்குவார் என்ற ஆங்கிலேயர் ஏற்பாடு செய்தார். 1833ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு மொரீசியசில் அமுலாக்கப்பட்டது.

    1. புலம்பெயரும் தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றமானது 1835ஆம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றது என்பர். 1843ஆம் ஆண்டு மட்டும் 14,634 பேர் குடியேறினர். 1845 முதல் 49 வரை சென்னைத் துறைமுகம் வாயிலாக குடிபெயர்வு நடைபெறவில்லை. 1843இல் இருந்து 52 வரை 30,334 பேர் குடிபெயர்ந்ததாக அறிகிறோம். குடிபெயர்ந்த தமிழர்களில் பறையரும், வன்னியரும் அதிகமிருந்தனர் என்று பினியோ குறிப்பிடுகிறார். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். முகவர்கள் (Agents) குடியேறுபவர்களுக்கு ஆசைகாட்டி அழைத்து வந்து ஏமாற்றியதை உணர ஆரம்பித்து, அதன் விளைவாக பிற்காலத்தில் பல்வேறு தொழில்களும் செய்பவர்களாக இவர்கள் மாறினர். தோட்டத்தில் இவர்கள் பட்டபாட்டை ‘கரும்புத் தோட்டத்தில்’ என்ற பாரதியின் பாடல்கள் மூலம் உணரலாம். “……அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! -துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? -அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர்”  என்கிறார்.

    தனிநாயகம் அடிகளார் அவர்கள் “1810ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மொரீசியசு தீவைக் கைப்பற்றியதும் மொரீசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப் பத்திரம் சவரிமுத்து, சின்னத்தம்பி, துரைச்சாமி என்று பலர் தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியேறினர். மொரீசியஸ் தீவில் தமிழ் மக்கள் தம்முடைய பண்டைய நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு இழந்து விட்டனர் என்றே கூறவேண்டும்” என்கிறார்.

    1. மொரீசியசு நாட்டின் தலைநகரான போர்ட் லூயியின் மத்திய சந்தையிலேயே ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிபம் செய்து வந்துள்ளனர். இச்சந்தை 1845இல் திறக்கப்பட்டுள்ளது. 1853இல் காப்ரீசி என்ற கப்பலிலும், 1854இல் ஆஸ்திரேலியா என்ற கப்பலிலும் 1855இல் ஆர்லிகென் என்ற கப்பலிலும் தமிழ் வணிகர்கள் மொரீசியஸ் வந்தனர். 1862-66 ஆம் ஆண்டுக்குள் 749 வணிகர்கள் வந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. சிறந்த வணிகர்களாக இராம சூரியமூர்த்தி குறிப்பிடுபவர்கள் : எம். கைலாசம் பிள்ளை நல்லசாமி மருதை படையாச்சி, ஏ. சிவராமன், பரிமணம், ஜி.பொன்னுசாமி, டி.வேலாயுதம் பிள்ளை முதலியோர். 1860ஆம் ஆண்டு மொரீசியசிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த போது, பல்வேறு தமிழ் வணிகர்களும் குடிபெயர்ந்துள்ளனர் அவர்களில் ஏ.எஸ்.அய்யாசாமி, ஏ.ஆர்.நல்லதம்பி, எம்.பொன்னுசாமி, ஆறுமுகம் செட்டி அண்ட் கோ, வையாபுரி செட்டி கம்பெனி, ஐ.வேலாயுதன் அண்ட் கோ, இருளப் பிள்ளை அண்ட் கோ ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கும், புதுச்சேரி, ரீயூனியன், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்றனர் என்னும் செய்திகள் வெளிப்படுகின்றன.

     

     

    கரும்புத் தோட்டத்தில் தமிழர்

    இங்கு கரும்பு முக்கியப் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. இங்கு வேலைசெய்ய கூலிகளாக அமர்த்தப்பட்டனர். அங்கு உண்மை உழைப்பைக் கொடுத்து விளைச்சல் பெருக உதவினர். இங்கு வேலை செய்த தமிழர்கள் பல்வேறு சவால்கள், துன்பங்களுக்கிடையே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். தனது மொழி, சமயம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத சூழல் இருந்தது.

    மொரிசீயசு விடுதலையும், மொழிக்கொள்கையும்

                ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 1968 –ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. இங்கு பல்வேறு இனத்தினர் வாழ்வதற்கேற்ப பல்வகை மொழிகள் வழங்கும் நிலையே இருக்கிறது.  தொன்றுதொட்டு இம்மண்ணிலேயே வாழுகின்ற மக்களோடு உலகில் பல பாகங்களிருந்து வந்துள்ள மக்களும் கலந்துள்ளனர். அவர்கள் இந்தியர், ஐரோப்பியர், ஆப்பிரிக்கர், சீனர்கள் ஆகிய இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

                இங்குள்ள மக்களின் தொடர்புமொழி ‘கிரியோல்’ என்பதாகும். இம்மொழியானது தகுநிலை பெறாமொழி (Non Standard Language) என்பதால் ஆட்சிமொழியாகத் தகுதிபெறவில்லை. எனினும் மக்களின் பேச்சுமொழியாகவும் பல்வகை இனமக்களின் தொடர்பு மொழியாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், பிரெஞ்சுமொழி பண்பாட்டு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இத்துடன் மூதாதையர் மொழி என்றும் தற்போது பேசப்பட்டுவரும் மொழிகள் என்றும் சொல்லப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்ட மொழிகள் இந்தி, குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் சீனம் ஆகும்.

    தமிழ்க்கல்வியின் தோற்றம் வளர்ச்சி

                மொரீசியசு நாட்டில் தமிழர்களின் புலப்பெயர்ச்சி 1735ஆம் ஆண்டு தொடங்கியது. காலப்போக்கில் அங்குள்ள குடிமக்களாகவே மாறினர். அங்கேயே சமூக அமைப்பு ஏற்பட்டு விட்டதால் தமிழ்க்கல்வி, சமயம், பண்பாடு, கலை முதலியவற்றை வளர்த்துக்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. தங்களின் மொழி, சமயம், பண்பாடு, கலை பொன்றவற்றை எதிர்காலச் சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனை உதித்தது. ஆனால் தாய்மொழிப் பள்ளிகள் அமைத்துத்தரவோ பண்பாடு சமய நிகழ்ச்சிகள் நடத்தவோ ஆங்கிலேய அரசு முன்வரவில்லை. இந்நிலையில் தாய்மொழிப்பற்றும், பாரம்பரிய உணர்வும் கொண்டோர் தன்னார்வ முறையில் தன்னுடைய மொழியையும், சமயத்தையும் காக்கத் தொடங்கினர்.

                தன்னார்வம் கொண்டத் தமிழர்கள் திட்டங்களை வகுத்துத் திண்ணைப் பள்ளிகளை ஏற்படுத்தினர். இத்திண்ணைப்பள்ளிகள் மாலை வேளையில் நடத்தப்பட்டன. இங்கு தமிழ், கணிதம் ஆகிய பாடங்களோடு கூத்து, நாடகம், பாட்டு முதலிய கலைப்பாடங்களும், சமயம் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்பட்டன. இந்நிலை 1850ஆம் ஆண்டுக்குப் பிறகு மாறுபட்டு, அரசாங்கமே தமிழ்க்கல்வி மீது கவனம் கொண்டது. அதன் பயனாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு 1864ஆம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்ட கல்வித்திட்டம் உருவானது.  இதில் தமிழ், இந்தி, மராத்தி, உருது மொழிகள் கற்பிக்கப்பட்டன. எனினும் இத்திட்டம் முழுமை பெறவில்லை எனலாம்.

                வணிகத்தின் பொருட்டு 1900ஆம் ஆண்டுகளில் குடியேறிய தமிழர்கள் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கு நிதியளித்து ஊக்கமளித்தனர். 1970ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கு தமிழிலக்கியத்தில் புலமை கொண்டோர் வகுப்புகள் நடத்தினர்.

                நாட்டில் 1948இல் நடைபெற்ற தேர்தல் இந்தியக் குடியேறிகளின் பலத்தை நிரூபிப்பதாக அமைந்தது. இவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படத் தொடங்கியது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த அரசாங்கம் இந்திய மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்தி மொழியோடு தமிழ் மொழிக்கும் உரிய இடம் வழங்கினர். தமிழ்க்கல்விக்கென முழுநேரப் பள்ளிகள் நிறுவப்பட்டு, அங்கு தமிழாசிரியர்களைப் பணியில் அமர்த்தினர். மேலும் தமிழ்ச்சங்கங்கள், இயக்கங்கள், கோயில்கள் முதலிய இடங்களில் மாலைநேர வகுப்புகள் நடைபெற்றன. இதனால் தமிழ்க்கல்வி வலுப்பெற ஆரம்பித்தது. தமிழைப் பயிற்றுவிக்க அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படலாயினர்.

                நாடு 1968இல் விடுதலை அடைந்ததும் இந்திய மொழி கல்விக் கலைத்திட்டத்தில் முக்கிய இடம் பெற்றது. ஆரம்பப்பள்ளி முதல் தமிழ் வகுப்புகள் நடைபெற உறுதியான வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க தமிழகத்தின் உதவி பெறப்பட்டது. அதற்கு வழிவகை செய்தவர்களில் திரு. தங்கணமுத்து அவர்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. மொரீசியசில் குடியேறிய இந்தியர்களின் இந்தியர்களின் மொழி, பண்பாடு, கலை, இலக்கிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டி இந்திய அரசு அங்கு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியது. அதன் பெயர் மகாத்மா காந்தி நிறுவனம் (MGT) என்பதாகும். இந்த நிறுவனத்தில் இந்திய மொழிகள் மையம் உருவாக்கப்பட்டது. இம்மையத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, உருது, சமஸ்கிருதம், சீனம் முதலிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. இதனால் மொழிவளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரித்தன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மொரீசியசில் 7ஆவது உலகத்தமிழ் மாநாடு சிறப்புற நடைபெற்றமை தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாக அமைந்தது.

    நாணயத்தாள்களில் தமிழும் எண்களும்

    உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம்பெற்றுள்ளன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்கள் எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியது எனலாம்.  (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் சான்றாக ரூ.10 தமிழில் ௧௦ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மொரீசியசு, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிறப்பாக மொரீசியசு நாட்டு நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆத்திரேலிய அரசு தமிழ் மொழியைத் தேசிய மொழியாக அறிவித்துள்ளது. இச்செயல் கடல்கடந்த நிலையில் தமிழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது.

    உணவு முறைகள்

    சமையலில் தமிழர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறு பொருள்களுக்கும், தமிழ்ப் பெயர்களே இங்கு வழங்கப்படுகின்றன.  இந்நாட்டில் ‘விரதச் சாப்பாடு’ சிறப்பானது. புலால் உணவை விரும்பும் இந்நாட்டு தமிழ் மக்கள் விரதச் சாப்பாட்டில் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள். சோறுடன் சாம்பார், ரசம், பலவகைக்காய்கறிகள், பச்சடி, அப்பளம், வடை, பாயாசம் அனைத்தும் வாழை இலையில் வைத்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலான விரதங்களில் இச்சாப்பாடு அல்லது சைவ பிரியாணி சமைக்கப்படும். சமையல் தொடர்பான அனைத்து சொற்களும் அதே பெயரில் இன்றும் வழக்கத்தில் இருப்பது சுட்டத்தக்கது எனலாம். மேலும் இங்கு தமிழ்ச்சமையலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

    ஆடை-அணிகலன்கள்

    அங்கு அன்றாட வாழ்வில் பெண்கள் கவுனிலும், ஆண்கள் பேண்ட், மேல்சட்டையுடனும் உலா வருகின்றனர். மகளிர் கும்மி, கோலாட்டம் ஆடும்போது கால்பாதம் வரை பாவாடை, மேல் சாக்கெட், தாவணி போன்றவற்றை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காதில் தோடு, ஜிமிக்கி, மாட்டல், நெற்றிச் சுட்டி, நீண்ட பின்னல் அதில் குஞ்சம், மூக்குத்தி கை நிறைய வளையல்  முதலியவற்றை அணிந்து தலைநிறையப் பூச்சூடி மகிழ்கிறார்கள். ஆனால் அப்பூவானது காதிதப்பூவாகும். திருமணத்தன்று ஒட்டியாணம் முதல் காசுமாலை வரை அவள் அணியாத அணிகலன்களே இல்லை எனலாம். மணக்கோலத்திற்காக மணமகள் பட்டுப்புடவை கட்டுகிறாள். மணமகன் பட்டுவேட்டி, சட்டை, துண்டு அணிகின்றனர்.

    குடும்ப உறவு முறைகள்

    தமிழர்கள் “கிரியோல் மொழி” பேசினாலும் கூட உறவுப் பெயர்களைக் கையாளும்போது  தமிழிலேயே அழைத்து மகிழ்கின்றனர். சிற்றப்பா, அண்ணன், மாமாவை மட்டும் சற்றே மாற்றி ‘மாமே’ என்றும் மற்றும் அத்தான், அத்தை, அப்பாயி, அம்மாயி, பாட்டி, தாத்தா என்றும் அழைக்கின்றனர். மொத்தத்தில் தமிழக மக்களின் உறவுமுறைப் பழக்கவழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர்.

    பழக்கவழக்கங்கள்

                ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் முப்பது நாட்கள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். அதாவது இங்கு பிறப்பு, இறப்பு தீட்டுச்சடங்கு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காது குத்தும் சடங்கு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. திருமணத்தில் நிச்சயம் செய்தல், மஞ்சள் பூசுதல் (நலுங்கு வைத்தல், பரிசம் போடுதல், தாரை வார்த்தல், கன்னி காதானம் செய்து கொடுத்தல், மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுதல், சீர்வரிசை வைத்தல், பாதபூசை செய்தல், நாத்தனார் மிஞ்சி அணிவித்தல், மாலை மாற்றுதல் போன்ற அனைத்துச் சடங்குகளும் தமிழ் மரபை அப்படியே காத்து வருகின்றனர். இறப்பின் போது கோடி போடுதல், எட்டுப் படைத்தல், கருமாதி வைத்தல், சோறு ஆக்கிப் போடுதல், மகன் மொட்டை அடித்தல் (கொல்லி வைத்தல்) போன்றவை அனைத்தையும்  மொரீசியசு தமிழ்ச் சமூகத்தினர் கடைப்பிடித்து வருவது சிறப்பிற்குரியது.

    வழங்கும்  பெயர்கள்

                கருப்பன், சங்கிலி, சுப்பையா, சந்நியாசி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. வெள்ளிவீதி, நம்பி, நக்கீரன், மங்கையற்கரசி, கண்ணகி, மணிமேகலை, மாதவி, மீனாட்சி, சிவகாமி போன்ற பெயர்கள் வழக்கில் இருந்து வருவதைக் காணமுடிகிறது. இங்கு மொழித்திரிபுடைய பெயர்களும் வைக்கப்படுகின்றன. இதற்குச் சான்றாக முருகன்-மூர்கன், முத்தையா-மூச்சியா, வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் எனப்படும் நல்ல தமிழ்ப் பெயர்களும் பிரஞ்சு மொழித்தொடர்பினால் திரிந்தும் வழங்கப்பட்டு வருவதைக் கூறலாம்.

    தமிழர் சமய முறைகள்

    மொரீசியசு நாட்டில் இந்து மதத்தின் கோயில்கள் சுமார் 125  இருக்கின்றன. இங்கு சிவன், முருகன், மாரியம்மன், விநாயகர், கிருஷ்ணன், துர்க்கை, வீரமாகாளி, இராமன்,  முனீஸ்வரர், மதுரைவீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களை வணங்கி வருகின்றனர். தலைநகரத்திலுள்ள சொக்கலிங்கம் – மீனாட்சியம்மன் கோயில் மிகப்பெரியது. தைப்பூசத்தில் காவடி எடுப்பது வழக்கில் இருக்கிறது. இங்கு தைபூசமே மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பொது விடுமுறை நாளாகும். கொடியேற்றம் தொடங்கி, விரதம் எடுத்து, காவடி எடுப்பார்கள். முருகனுக்குப் பூக்காவடி, இளநீர்க்காவடி, பால்காவடிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவடியோடு மாவிளக்கு, பால்குடம் எடுப்போரும் உள்ளனர். பெண்கள் மஞ்சள் ஆடையும், ஆண்கள் காவிநிற ஆடையும் அணிகின்றனர். பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் அலகு குத்திக் கொள்கின்றனர். இதனை மக்கள் ‘நாக்குக் குத்துதல்’ என்று அழைக்கின்றனர்.

    மாரியம்மன் கோயில்களில் ‘தீ மிதித்தல்’ என்னும் திருவிழா பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது. திரௌபதையம்மனுக்கும் தீமிதி திருவிழா நடத்துகின்றனர்.  அம்மனைப் பாடி, நோன்பிருந்து விழா நடத்துவார்கள். தாலாட்டு, அரிச்சுவடி பாடி, கும்மி கோலாட்டம் அடித்து கரகாட்டம் ஆடிக்களிப்பார்களாம்.  அம்மன் கோயில்களில் தீமிதி, கஞ்சி, கத்தி பூசை முதலிய சடங்குகள் செய்யப்படுகின்றன. மற்றொரு முக்கிய விழா கோவிந்தன் விழாவாகும். (புரட்டாசி விரதம்) புரட்டாசித் திங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழர்கள் விரதமிருப்பதுண்டு. ஆடித்திங்களில் 18ஆம் நாளன்று திருமணம் ஆன மகளிர் தங்கள் தாலிக்கயிற்றைப் புதுப்பித்துக் கொள்ளும் விழா நடைபெறுகிறது. இங்கு தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தெய்வாலயங்களுக்குத் தமிழர்கள் அனைவரும் செல்கின்றனர். சிறப்பு பூசையுடன் முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காமண்டி (காமன்பண்டிகை) கதையாட்ட மாடி, இலாவணிபாடி, பொங்கல் கொண்டாடுகின்றனர். தீபாவளி, சிவன்ராத்திரி ஆகிய திருவிழாக்களையும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    இக்கட்டுரையில், தரணியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்துவிரிந்து வாழும் தமிழர்கள் புலம்பெயர்வால் ஏற்பட்ட கடினமான சூழலிலும் தனது மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றினைப் போற்றிப் பாதுகாக்கத் தவறவில்லை என்பது மொரீசியசு தமிழர்களின் வாழ்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களால் புலம்பெயர் படைப்புக்கள் (Diaspora Literature) உருவாகியுள்ளன. அவை கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை – பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாச்சார செயற்பாடுகள் என்பன முக்கியமானவையாக உள்ளன. எனவே இதன் வாயிலாக உலகில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழ்மக்களின்  பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது நன்கு விளங்கும்.

     

    துணைநூற்கள்

    1. இராசாராம்.சு, (1991) மொரீசியஸ் தமிழரும் தமிழும். தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    2. இராமசாமி.பி, (1997) மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும், செம்பருத்திப் பதிப்பகம், கோலாலம்பூர்.
    3. Ponsamy Tiromalachetty (2007) Tamils in Mauritirus. Language culture and Identity. Artile in tamil language souvenir Magazine.
    4. Danalutchmee cheman (2007) Evolution of Tamil culture in Mauritirus. Article in Tamil language souvenir Magazine.

    Share
  • படக்கவிதைப் போட்டி (162)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     ரகுநாத் மோகனன் எடுத்து, ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கும் இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (108)

    நிர்மலா ராகவன்

    வசப்படுத்தும் இசை

    இசையே சிம்ரன் (அதாவது, தியானம்!)

    இசையை ரசிப்பவர்கள் ஒருவித தியான நிலைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். இவர்களால் பாடகர்களுக்கும் உற்சாகம் வரும்.

    கதை

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் ராமநவமி உற்சவத்தை ஒட்டி, இலவச இசைக்கச்சேரிகள் நடக்கும் — நாற்பது நாட்களுக்குமேல். பிரபல வித்வான்கள் கலந்துகொள்வார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பித்து, சிலர் அடுத்த நாள் காலைவரைகூடப் பாடியிருக்கிறார்கள்.

    `கடைசி பஸ் போயிடும்,’ என்று அம்மா கவலைப்பட, `பரவாயில்லே. நடந்தே போகலாம்,’ என்று நான் சமாதானப்படுத்துவேன். சுமார் மூன்று மைல் வீட்டுக்கு நடப்போம். எங்களைப்போல் பலரும் கூட நடப்பார்கள்.

    `இங்கிருக்கும் ரசிகர்களைப்போல் வேறு எங்கும் கண்டதில்லை! அவர்களுக்காகப் பாடுவதே சுகம்!’ என்று மகிழ்ந்து பாராட்டுவார்கள் சங்கீத வித்வான்கள். அவர்களுக்குச் சன்மானம் கிடையாது. இருந்தாலும், வருடந்தவறாது வந்து, உற்சாகமாகப் பாடுவார்கள்.

    சங்கீதம் என்பது ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும், காசுக்காக மட்டுமே அல்ல என்பதற்கு இன்னொரு கதை.

    அடுத்த நாள் கல்யாணம். வீடே பரபரப்பாக இருந்தது. முதல்நாள் மாப்பிள்ளை வீட்டார், “இன்றிரவு பாட்டுக்கச்சேரி இருக்கவேண்டும். இல்லாவிட்டால், கல்யாணம் நடக்காது!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்கள். பெண்ணின் தந்தை மிரண்டுபோய்விட்டார். கடைசி நிமிஷத்தில் சங்கீத வித்வான் ஒருவரை எங்குபோய் தேடுவது?

    அப்போது யாரோ, “அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி செய்ய நம் ஊருக்கு வந்திருக்கிறார்,” என்று தெரிவித்தார்கள்.

    தந்தை பாடகரிடம் போய் நடந்ததைச் சொல்லி, கலங்கியிருக்கிறார். அபயகரம் அளித்த ஐயங்கார் அன்று மாலை கல்யாண வீட்டில் நீண்ட கச்சேரி செய்தாராம்.

    ஆனந்தமும் நன்றியும் பெருக, “ஏதோ, என்னால் முடிந்தது!” என்று பெண்ணின் தந்தை நூறு ரூபாயைத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க, பிரபல சங்கீத வித்வான் ஒரு ரூபாயைத் தன் சன்மானமாக எடுத்துக்கொண்டு, “உங்கள் பெண்ணுக்கு ஏதாவது நகை வாங்கிப்போடுங்கள்!” என்றுவிட்டார்.

    கர்னாடக இசையில், ஸ்ருதி மாதா, லயம் பிதா என்பார்கள்.

    ஸ்ருதியா, என்ன அது?

    பொதுவாக குழந்தைகளுக்கும், சிறு பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுவரை ஆண்பிள்ளைகளுக்கும் குரல் கீச்சுமூச்சென்று இருக்கிறதல்லவா? அவர்களுக்கு `மேல் ஸ்ருதி’ என்கிறோம். வயதாக ஆக, பெண்களின் குரல் கட்டையாகிவிடுகிறது. (ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்களுக்கான ஹார்மோன் குறைவால்). அதனால் ஸ்ருதி இறங்கிவிடக்கூடும்.

    ஸ்ருதியைக் குறிக்க எண்களைப் பயன்படுத்துகிறோம். ஐந்து கட்டை என்பது பெண்களுக்கு சாதாரணமாக அமைவது. மூன்று கட்டை ஸ்ருதி என்றால் கீழ் ஸ்ருதி. ஆண்களுக்கு ஒரு கட்டைகூட உண்டு.

    லயம்

    லயம் என்பது தொடையில் கையால் அடித்துப்போடும் தாளத்தைக் குறிக்கிறது. இது கணக்கைச் சேர்ந்தது. ஆகையால், இசை கற்கும் இளவயதினர் கணக்கில் நல்ல தேர்ச்சி பெறமுடியும். பொதுவாகவே, இசை வல்லுனர்கள் கணக்கிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிருதங்கம், கடம், கஞ்சிரா போன்ற தாளவாத்தியங்கள் வாசிப்பவர்கள் கணக்கில் புலியாக இருக்கவேண்டும். எந்த வாத்தியமாக இருந்தாலும், வாசிப்பவர்களின் கண்ணும், கையும் ஒருங்கே வேலைசெய்யும்.

    வெறும் பொழுதுபோக்கல்ல

    ரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது கர்னாடக இசை. பாடும்போது, முதலில் மூச்சை நன்கு உள்ளே இழுத்துக்கொண்டு, வெளியே விடும்போது குரல் ஒலிக்கவேண்டும். இதனால் மன இறுக்கம் குறைந்து, அமைதியாகும்.

    ஆசிரியர் ஒரு பாட்டைக் கற்பிக்கையில், மாணவி கூர்ந்து கவனிக்கவேண்டும் அல்லவா? இத்தகைய கவனிப்பு பிற துறைகளிலும் பரவு, அறிவுத்திறன் விருத்தியடைகிறது. வேண்டாத யோசனைகள் வராது.

    பாடுபவர்களுக்கு மட்டுமல்லாது, ரசிப்பவர்களுக்கும் இசை நல்ல பயனைத் தருகிறது. `என்ன ராகம்?’ என்று தெரிந்த பாடல்களுடன் ஒப்பிட்டு, சரியாகக் கண்டுபிடிப்பது ஞாபகசக்தியை வளர்க்கிறது. பாட்டை ரசித்துக் கேட்பவர்களை முதுமை அண்டாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    பொழுதுக்கேற்ற ராகங்கள்

    கர்னாடக இசையில், ஒரு தினத்தின் வெவ்வேறு வேளைகளுக்கேற்ற ராகங்கள் உள்ளன. (உதாரணம்: அதிகாலையில், கோயிலில் திருப்பள்ளியெழுச்சிக்கு இசைக்கப்படும் ராகம் பூபாளம். உறங்கவைக்க நீலாம்பரி). சில ராகங்கள் எப்போதும் பாடக்கூடியவை.

    நவரசங்களைக் குறிக்கும் ராகங்களும் உள்ளன. (`ப்ரோசேவாரெவருரா’ என்று சங்கராபரணம் படத்தில் வரும் பாடல் கமாஸ் ராகத்தில் அமைந்தது. சிருங்காரத்திற்கு இந்த ராகம் ஏற்றது).

    கற்பனைத்திறன்

    குருவிடம் சில பாடல்களைக் கற்று, அப்படியே திரும்பப் பாடுவதோடு நின்றுவிடுவதில்லை கர்னாடக இசை.

    ஒரு பாடலுக்குமுன், `ததரின்ன..’ என ராக ஆலாபனை செய்கிறார்களே! குறிப்பிட்ட ராகத்தை இசைப்பவர் தன் மனோதர்மத்துக்கு ஏற்ப அதைப் பாடவேண்டும். (சில பாக்கியசாலிகள் எந்த குருவிடமும் கற்காது, கேள்வி ஞானத்தைக்கொண்டே இதைச் செய்வார்கள்). பாடலின் நடுவே ஓரிரு வரிகளை குறிப்பிட்ட காலப்பிரமாணத்திற்குள் வித விதமாக மாற்றிப் பாடுவது `நிரவல்’. அதன்பின், கற்பனை ஸ்வரம். இது ஒருவரின் ராக, தாள ஞானத்தை வெளிப்படுத்துவது.

    `ஞானம்’ என்பது இயற்கையிலேயேயே அமைந்திருப்பது. இதை வலுக்கட்டாயமாக ஒருவருள் புகுத்த முடியாது.

    ஸ்ருதி சுத்தமாக ரசித்துப் பாடுவதும், இன்ன ராகம் என்று கண்டுபிடிப்பதும் ஞானத்தைப் பொறுத்தது. வயது, குரல் வளம், ஆர்வம் ஆகியவற்றிற்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஞானம் ஒரு வரம். எல்லாருக்கும் அமைவதில்லை.

    மிருகங்களுக்கு இயற்கையிலேயே இசை ஞானம் அமைந்திருக்கிறது. எல்லாப் பூனைகளும் நாம் பாடும்போது அசையாது செவிமடுக்கும். வேறு சில, ஸ்ருதி தவறாமல், நாம் பாடும் ஸ்வரத்தை, நம்மையே பிரமிக்கவைக்கும் வகையில், திரும்பப் பாடும். வாலால் தாளம் போடும் பூனைகளும் உண்டு! அத்தருணங்களில் அவைகளுடன் விளையாட இன்னொரு பூனை வந்தால்கூட கவனம் கலையாது, இசையை ரசிக்கும். இது எங்கள் வீட்டில் வளர்ந்த, வளரும், பூனைகள் எனக்குக் கற்பித்த பாடம்.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர் அல்லாதவர்களும் கர்னாடக இசையை ரசித்துக் கேட்கிறார்கள். இந்தியர்களுக்கோ, நம் கலாசாரத்தை விடாமல் இருக்கவேண்டும் என்ற முனைப்பு. “We are more Indian in America than in India!” என்றாள் ஒரு மங்கை, மகிழ்ச்சியுடன். அங்கு பல குழந்தைகள், வீட்டில் ஆங்கிலத்தில் பேசினாலும், தேவாரம் பயில்கிறார்கள், கர்னாடக இசை கற்கிறார்கள்.

    இசைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாடல்கள்மூலம் இதிகாச புராணக்கதைகளைக் கற்க முடிகிறது. இதனால் மொழிவளம் கூடும். (முறையான உச்சரிப்புக்குச் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்).

    செய்யக்கூடாதது

    சிறு குழந்தைகள் இயல்பாக, நிமிர்ந்து உட்கார்ந்து, தலை அசங்காது பாடுவார்கள். இதுதான் சரியான முறை. அதைவிட்டு, பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்குமே என்று தலையையும், கையையும் மிகையாக ஆட்டியபடி பாடுவதால் சக்திதான் விரயமாகிறது.

    பாடும்போது தொண்டையைக் கனைத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் குரல் வள நிபுணர்கள். அதற்குப் பதிலாக, அவ்வப்போது ஒரு தேக்கரண்டி நீர் குடித்தால் குரல் வறளாது. மூச்சுப்பயிற்சி நன்மை பயக்கும்.

    பக்தியுடன், வார்த்தைகளின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டு பாடினால்தான் பாட்டில் பாவம் இருக்கும். கேட்பவருக்கு ராகமோ, பாட்டின் அர்த்தமோ புரியாவிட்டால்கூட, அப்படி ஒருவர் பாடுவதுதான் மனதைத் தொடும். பாடகரின் குரல்வளம் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது.

    சமீபத்தில், ஒரு பத்து வயதுச்சிறுமி மிக நன்றாகப் பாடியதைப் பாராட்டினேன். “என் ஆசிரியை எப்போதும் என்னைத் திருத்துவார்!” என்றாள்.

    தான் அதிபுத்திசாலி என்று கர்வம் கொள்ளாது, அல்லது, `ஓயாமல் தப்பு கண்டுபிடிக்கிறாரே!’ என்று ஆசிரியைமேல் கோபம் கொள்ளாது பேசிய அச்சிறுமியின் அடக்கம் எனக்கு வியப்பை அளித்தது. அகங்காரம் இருந்தால், எந்தக் கலையும் நம்மை விட்டுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே!

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(214)

     -செண்பக ஜெகதீசன்

    பொறுத்த லிறப்பினை யென்று மதனை
    மறத்த லதனினும் நன்று. (திருக்குறள் -152: பொறையுடைமை) 

    புதுக் கவிதையில்…

    பிறர் தீங்கு செய்கையில்,
    அவரை
    ஒறுக்கும் திறனிருந்தும்
    பொறுத்துப் போதல் நன்று… 

    அத் தீமையை
    அடியோடு மறந்திடுதல்
    அதனினும் நன்று…! 

    குறும்பாவில்…

    பிறர் செய்த தீமைகளைப்
    பொறுத்துக்கொள்ளுதல் நல்லது,
    மறந்துவிடுதல் மிகநல்லது…! 

    மரபுக் கவிதையில்…

    நமக்குத் தீங்கு செய்தவரை
         -நம்மால் ஒறுக்க முடிந்தாலும்,
    அமைதி காத்துப் பொறுமையாக
         -அடங்கி யிருத்தல் நன்றாகும்,
    சுமக்கும் சுமையாய் நெஞ்சினிலே
         -செய்த தீமையைக் கொள்ளாமல்,
    நமக்கு வேண்டாம் சுமையெனவே
          -நாமே மறப்பது மிகநன்றே…! 

    லிமரைக்கூ…

    பொறுத்திடு பிறர்செய்தாலும் தீங்கு,
    மறத்தலதை மிகநல்லதென மறந்துவிட்டு
    நல்ல பெயர்தனை வாங்கு…! 

    கிராமிய பாணியில்…

    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்க்கயில பொறுமவேணும்…
    தீங்கு நமக்குச் செஞ்சவனத்
    தண்டிக்கத் தெறம நமக்கிருந்தாலும்,
    அதப்
    பொறுத்துப்போறது நல்லகொணம்… 

    அதயே மனசுல வச்சிக்காம
    அப்புடியே மறந்துபோறது
    மிகவும் நல்ல கொணம்… 

    அதால,
    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்க்கயில பொறுமவேணும்…!

     

     

    Share
  • தொன்னூல் விளக்கம் – இலக்கண விளக்கம் யாப்புக் கோட்பாடுகள்

    -ம.சிவபாலன்

    முன்னுரை

    தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரையிலான இலக்கணக் கோட்பாடுகள் மரபுச் செய்யுள் வழியோ அல்லது உரைநடை வழியோ இவைதாம் இலக்கணங்கள் என்று இலக்கிய மரபை அறிவுறுத்திக் கொண்டே வருகிறது.   தமிழில் தோய்ந்தவர் அதனை முற்றுமறிந்து இலக்கணம் யாப்பதிற்கும், அவ்வழியினின்று தமிழைத் தாய் மொழியாக அல்லாதோர் அம்மொழியினைக் கற்று அதில் இலக்கணம் யாப்பதற்கும் மரபும் மாற்றமும் உள்ளனவா என்பதை நாயக்கர் காலத்தில் தோன்றிய ஐந்திலக்கண நூல்களானத் தொன்னூல் விளக்கம், இலக்கண விளக்கம் என்ற நூல்களின் வழியே புலப்படும் வெண்பா யாப்புக் கோட்பாடுகள் இக்கட்டுரையின் வழியே ஆராயப்படுகிறது.

    நாயக்கர் காலம்

    நாயக்கர் கால ஆட்சியில் தமிழ்ப் புலவர்கள் பலர் இருந்துள்ளனர்.  கி.பி. 1529இல் மதுரை நாயக்கனாக சுயஅதிகாரத்துடன் விசுவநாதன் பதவியேற்றான் எனவும் கி.பி. 1736இல் மீனாட்சி இறந்தபோது அது முடிவுக்கு வந்தது என்பது வரலாறாகும். அவற்றுள் அதிவீரராம பாண்டியர் (1558), வரதுங்கராம பாண்டியர் இருவரும் அரசர்கள் ஆவர்.  குமரகுருபரர், சுப்ரதீபக்கவிராயர் (வீரமாமுனிவரின் தமிழாசிரியர்) வீரமாமுனிவர், உமறுப்புலவர், திருக்குருகைப்பெருமாள் கவிராயர், குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

    விளக்கம் பொய்க்காரணம்

     ‘மேவிய ஐம்பொருள் விளக்கல் உணர்ந்து
    விரிவிலாத் தொன்னூல் விளக்கம்என பெயர்த்து”.  (பொதுப்பாயிரம்)

    பழைய இலக்கியங்களை விளக்குவதற்குரிய விளக்கு போன்றும், தொன்மை இலக்கண நூல்களைப் புரிந்து கொள்வதற்குத் துணையாக நிற்கும் விளக்குப் போன்றும் அமைய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் படைத்து ‘தொன்னூல் விளக்கம்” எனக் காரணப் பெயரையும் விளக்கியுள்ளார். 

    ‘முன்னோர் நூலின் முடிவு நோக்கிச்
    சொல்லும் பொருளும் நல்வன தழீஇப்
    பல் சுவைக் கரும்பின் ஒருவட்டு ஏய்ப்ப
    இலக்கண விளக்கம் என்று ஒரு பெயர் நிறீஇப்
    புலப்படுத்து இயலஉறப் பொருள் விரித்து உரைத்தனன்”

                                                     (இ.வி. சிறப்புப்பாயிரம்)

    முன்னோர் கூறிய முடிவுகளை எண்ணியே அதன் மரபு மாறாது இலக்கண விளக்கம் என்ற பெயர்நெறிப் பொருள் விரித்து இயல்புறப் புலப்படுத்தும் என்ற வகையின் மரபுகளை விளக்குவதாக அமைகின்றது. ஆகையால்தான் இலக்கண விளக்க நூலில் தொல்காப்பியம், நன்னூல் வீரசோழிய நூற்பாக்கள் வடிவம் மாறாது பயின்றுவந்துள்ளது எணலாம்.

    இலக்கண விளக்கம்

    குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்பெறும். இந்நூல் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலை நாயக்கர் மன்னரின் செயலாளராக விளங்கிய கயத்தாற்றுத் திருவேங்கடநாதையர் என்பவரின் குழந்தைக்குக் கல்விகற்பிக்கச் சென்றிருந்த காலத்தில் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களைத் தெளிவாகக் கற்று அவற்றின் முரண்பாடுகளையெல்லாம் தெரிந்து, தாம் ஓர் இலக்கண நூல் உருவாக்க வேண்டும் என்று எண்ணியே இதனை இயற்றினார்  (பதிப்புரை).

    படிக்காசுப் புலவர் இவரின் மாணக்கர் என்று கூறுவர்.  மயிலமலை முருகன் மேல் மயிலம் பிள்ளைத் தமிழ், சிவஞான பாலய சுவாமிகள் மேல் பாசவதைப் பரணி என்ற நூல்களும், சிற்றிலக்கியங்கள், புராணம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

    எழுத்து, சொல், பொருள் என முறையே மூன்று அதிகாரங்களையும் 15 இயல்களையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைகின்றது.

    தொன்னூல் விளக்கம்

          கி.பி 1730இல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலானது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து அதிகாரங்களையும் 18 பகுப்புகளையும் கொண்டுள்ளது.  தேம்பாவணிக் காப்பியமும் பிற சிற்றிலக்கியங்களும், இலக்கணம், அகராதிகள் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். 

    பா வகை

    ‘பாவிரி மருங்கிணைப் பண்புறத் தொகுப்பின்
    ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு
    ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப”
    (தொல். பொ – 419)

    ‘ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
    வெண்பா நடைத்தே கலிஎன மொழிப”
    (தொல். பொரு – 420)

    ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
    நாலியற்று என்ப பாவகை விரியே”  
    (தொல். பொரு – 417)

    ‘வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சிஎனப்
    பண்புஆய்ந்து உரைத்த பா நான்கு ஆகும்”      
    (இ.வி – 726)

    வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் எனத் தத்தம் தன்மையான தெரிந்து சொல்லப்பட்ட பா நான்கு வகைப்படும் என்று இலக்கண விளக்கம் தொல்காப்பியத்தின் கண் மொழியப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

    ‘வெண்பா அகவல் விரிகலி வஞ்சி
    மருட்பா என ஐவகைப்பா அன்றியும்”.      
    (தொ.வி.219)

    எனத் தொன்னூல் விளக்கம் இலக்கண விளக்கத்தினின்று மாறுபட்டு ஐந்து என உரைக்கின்றது.

    பா இனம்

    ‘தாழிசை துறையே விருத்தம் என்று இவை
    பாவினம் பாவொடு பாற்பட்டு இயலும்”
    (இ.வி – 727)

    தாழிசை, துறை, விருத்தம்  எனப் பா இனம் மூன்று வகைப்படினும், பா இனம் பாவொடு இணைந்து வெண்தாழிசை, வெண்துறை, வெளிவிருத்தம் எனவும் முறையே பாவின் பெயரினை முன்னொட்டாக ஏற்று வருவதாகும்.  இந்நூற்பா யாப்பருங்கலம் நூற்பாவினை அப்படியே ஏற்றுக் கூறுவதாக அமைந்துள்ளது.

           ‘தாழிசை துறையே விருத்தம் என்றிவை
           பாவினம் பாவொடு பாற்பட்டியலும்”.  (யாப் -56)

           ‘துறை தாழிசை விருத்தம் தூக்கினம் மூன்றே” (தொ.வி – 219)

    இவற்றிலும் பா இனம் மூன்றாகவே சுட்டப்பெறுகிறது.  மேலும் தூக்கு என்ற சொல்லை ‘பா” என்றுமுதன் முதலில் இந்நூலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    வெண்பா – இலக்கணம்

    வீரமாமுனிவர் வெண்பாவின் இலக்கணத்தை,

    ‘வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி
    ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி
    ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்”.      
    (தொ.வி – 220)

    என்று கூறுகிறார்.  வெண்பா, இயற்சீரும் வெண்சீரும் பயின்றுவரும், ஈற்றடிக்கு முந்தைய அடிகள் நான்கு சீர் கொண்ட அளவடியாகவும் ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓர்அசைச்சீராகவும் அவ்வசைச்சீர் உகரம் மிகுந்தும் வரும் என வரையறுக்கின்றது.

    ‘அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி
    அந்தம் அசைச்சீர் ஆகவும் பெறுமே” 
    (இ.வி – 728)

    இக்கருத்தானது தொன்னூல் விளக்கம் வரையறுக்கும் வெண்பா இலக்கணத்தை அடியொற்றியதாகவே அமைகின்றது.  ஆனால் இது யாப்பருங்கலம் நூற்பாவின் (57) அப்படியே ஏற்று மாறாமல் உரைக்கின்றது.

    ஓசை

    ‘வெள்ளையுள் பிறதளை விரா வெண்டளை
    ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம் அஃதே
    ஏந்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை
    ஒழுகிசை இரண்டும் உளஎனில் ஆகும்”.
    (தொ.வி – 221)

    வெண்பாவினுள் பிற தளைகள் வராது என்னும், வெண்தளை வருவதினால் அது செப்பலோசை பெற்றது எனவும் உணரமுடிகிறது.

      ‘செப்பல் இசையன வெண்பா”.  (இ.வி – 728)

    செப்பல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையன வெண்பா என்றவாறு உணர்த்திற்று.  மேலும் ஓசை மூவகைப்படும் என்பதினை இந்நூல் விளக்கவில்லை. ஆயினும் உரைகளின் வழியே மூவகை ஓசை வெண்பாவில் பயின்று வரும் என்பது புலனாகின்றது.

    ஈற்றடி இறுதி அசைச்சீரின் முடிவை ஏனைய இலக்கண நூல்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    ‘சிந்தடி யானே இறுதலும், அவ்வடி
    அந்தம் அசைச்சீர் வருதலும், யாப்புற
    வந்தது வெள்ளை வழங்கியல் தானே”.
    (காக்கை)

           ‘முச்சீர் அடியான் இறுதலும், நேர்நிறை
    அச்சீர் இயல்பின் அசையின் இறுதியாம்”.      
    (அவிநயம்)

    ‘காசும் பிறப்புமே காட்டாது தேமாவும்
    மாசில் புளிமாவு மாயுரைத்தல் – ஓசைமேல்
    தேறித்தாம் செப்பல் தெளிவிப்பான் அன்றாசிக்
    கூற்ற்றே கூறாக் கொணர்ந்து”.       
    (யா.வி -57) 

    ‘ஒன்றும் இடைச்சீர் வருஞ்சீரொடு முதற்சீர்கள் தெற்றும்
    என்றும் அளவடி ஈற்றடி அல்லன; ஈற்றடியும்
    நன்று மலர் காசு நாள் பிறப் பென்றிற்ற சிந்தடியே;
    துன்றும் கடைச்சீர் புகா என்பர் வெள்ளையில் தூமொழியே”.
    (வீ.சோ – 111)

    நேர் அசைச்சீர்

    ‘செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார். 
    (குறள் – 26).

    நிரை அசைச்சீர்

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
    (குறள் – 151).

    நிரைபு அசைச்சீர்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
    .  (குறள் – 1)

    நேர்பு அசைச்சீர்

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 
    (குறள் – 127)

    ஏந்திசைச் செப்பல்

    யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்
    சாந்துணையும் கல்லாத ஆறு. 
    (குறள் – 397)

    தூங்கிசைச் செப்பல்

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி லூறிய நீர்.    
    (குறள் – 1121)

    ஒழுகிசைச் செப்பல்

    எதுவும் சிலகாலம் என்ப தறிந்தேன்
    இதுவும் கடக்கும் இழப்பில்லை – எத்துணை
    மாற்றம் அடைந்தாலும் மாற்றம் எனும்மொன்றே
    மாறிடாத் தன்மையாம் மெய்”. 
    (அதி அந்தாதி – அதிமெய்ப்பொருள்)

    வெண்பா – வகை

    யாப்பருங்கலம் வெண்பா வகையினை ஐந்து என்றே குறிப்பிடுகிறது இதனை அமிர்தசாகரர்,

    குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை
    எணவைற் தாகும் வெண்பாத் தானே”.
    (யாப் – 58)

    என்று குறிப்பிடுகிறார். வீரசோழியம் ஐவகையுடன் ஆறாக,

    வேண்டிய ஈறடி யாற்குறள்ஆம்; மிக்க மூவடியால்
    தூண்டிய சிந்தியல்; நான்கடி நேரிசை; தொக்கதனின்
    நீண்டிய பாதத்துப் பஃறொடையாம்; இதனேறிசையே
    நீண்டிசை யாங்கலி; நேரிசை பேதிக்கிலின்னிசையே”.
    (வி.யா -112)

    எனவும், ஆனால் தொன்னூல் விளக்கம் கலி வெண்பாவினைவிடுத்துச் சவலை என்ற வெண்பா வகையினை இணைத்து ஆறு என்றே குறிப்பிடுகிறது.

    குறள் சிந்து இன்னிசை நேரிசை சவலை
    பஃறொடை என வெண்பா ஆறு அவற்றுள்
    ஈரடி குறளே இருகுறள் சவலை”.
    (தொ.வி – 222)

    இருகுறள் இணைந்து இடையே தனிச்சொல்லின்றி வருமேயாயின் அது சவலை எனப்படுகிறது.  வீரசோழியத்தில் ஆறுவகை என்று வரையறுக்கப்பட்டிருப்பினும் சவலை வெண்பா என்று தனி வகையாக குறிப்பிடப்படவில்லை. ஆனால்,

    இடையு முதலுங் கடையுங் குறைந்து மிடையிடையே
    அடையு மடிகுறைந் தும்வரி னான்கடி யப்பெயரால்
    நடைமுந் தியன்ற சவலையென் றோதுவர்”.
          (வீர – 128)

    என்பதின் வழியே சவலை என்பது அடியளவு அல்லது சீர் அளபு மிக்கும் குறைந்தும் வரும் என்பது புலனாகின்றது.  ஆயினும் இவை தனியாக வெண்பா வகையினுள் சுட்டப்பெறவில்லை.

    குறளே நேரிசை இன்னிசை பஃறொடை
    சிந்தியல் என அஃது ஐந்துஎன மொழிப”.      
    (இ.வி. 729)

    என இலக்கண விளக்கத்தில் வெண்பாவின் வகைகள் ஐந்து என்றே கூறப்பட்டுள்ளது. ஆயினும் வீரசோழியம் உரைத்த சவலை என்ற பாவிகற்ப வகையினைத் தொன்னூல் விளக்கம் கூறுகின்றது.  எனினும் சிந்தியல் வெண்பாவில் நேரிசை, இன்னிசை ஆகிய இரு வகைகளை யாப்பருங்கலக் காரிகைபோலக் கொண்டாலும் அவற்றைத் தனித்தனி வகையாகக் கருதாது ‘சிந்தியல்” என ஒரே வகையில் அடக்குவதாக அமைந்துள்ளது.

    குறள் வெண்பா

    குறள் வெண்பாவிற்கான வரையறையை இரு நூல்களும் ஒன்றுபட்டே உரைக்கின்றன.

           ‘ஈரடியான் வரின் குறள்…….”     (இ.வி 730 வ.1)
           ‘………
    ஈரடி குறளே……”   
    (தொ.வி. 222 வ.2)

    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி அன்னார் உடைத்து”  
    (குறள் – 667)

    உடையோர்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
    கடையரே கல்லா தவர்”    
    (குறள் – 395)

    என்பவை ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வந்த குறள் வெண்பாக்களாகும்.

    நேரிசை வெண்பா

    நேரிசை வெண்பாவிற்கான இலக்கணத்தை இருநூல்களும் மரபு மாறாமலே கூறியிருக்கின்றன.

    ”…. குறள்; அஃது இரண்டாய்ச்
    சீரிய வான்தனிச் சொல்இடை சிவணி
    இருவிகற்பானும், ஒரு விகற்பானும்
    செப்பல் ஓசையின் சிதையா தாகி
    அத்திறம் வரின்நே ரிசை”      
    (இ.வி. 730 வரி 15)

    என இலக்கண விளக்கமும்,

           ‘இருகுறள் இடைக்கூன் இயை நேரிசையே”       (தொ.வி. 222. வரி 4)

    எனத் தொன்னூல் விளக்கமும் விளக்கமளிக்கிறது. இதன்வழி நேரிசை வெண்பாவினை வரையறுப்பின் அது ஒரு, இரு, பல விகற்பமாயினும் செப்பல் ஓசையினைச் சிதையாது பயின்று வருவதாக அமைகின்றது.

    ஒரு விகற்ப நேரிசை

    ”நான்கொண்ட காதல் நெடுங்காலம் அல்ல
    உனைப்பாட என்னை உணர்ந்தேன்  நினையுங்கால்
    வான்மண்ணில் வாரா விழுந்தேனே உன்னுள்
    எனதோடு நீபாட வா”.     
    (அதி அந்தாதி – 42)

    முதல் இரண்டு அடிகளிலும் எதுகையானது ஒன்றாகவே வருகிறது.  அது தனிச்சொல் பின்னரும் அடுத்த இரு அடிகளிலும் மேற் பயின்று வந்த எதுகையே பயின்று வந்துள்ளதால் இது ஒரு விகற்பத்தான் வந்த நேரிசையாகும்.

    இரு விகற்ப நேரிசை

    ”கணினிவிடு தூதாம் கவிதையின் நூற்பேர்
    அணியிது சேர்த்திடும் அன்னைக்கே – மண்ணில்
    விளங்கும் சிவனின் வித்தகக் காதல்
    விளக்கும் கவிதையின் மாண்பு”.

    முதல்இரண்டு அடிகள், தனிச்சொல்லில் ஒரே எதுகையும் அடுத்த இரண்டு அடிகளில் வேறு எதுகையும் பயின்று வந்துள்ளதால் இது இரு விகற்பத்தான் அமைந்த நேரிடை வெண்பாவாகும்.

    பல விகற்ப நேரிசை

    இந்நேரிசை வெண்பாவினுள் எதுகைகள் இரண்டிற்கும் மேற்பட்டதாய் விளங்குவதாக அமைகின்றது.

    இன்னிசை வெண்பா

    மேற்கூறப்பட்ட நேரிசை வெண்பாவிற்கான இலக்கணங்களைப் பெற்று தனிசொல் இன்றி வறுவது இன்னிசை வெண்பாவும் இதனை,

    ‘நாலடி விகற்ப நடை இன்னிசையே”  (தொ.வி -222 – வ. 5)

    என்றும்,

    ‘………. அடி நான்காய்
    ஒன்றும் பலவும் விகற்பாய்த்தனிசொல்
    இன்றி நடப்பின் இன்னிசை”    
    (இ.வி. 730 .வரி. 5-7)

    என இலக்கண விளக்கம் உரைக்கின்றது.

    ஒரு விகற்பத்தான் இன்னிசை வெண்பா

    ”வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது ணரார்
    வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
    வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
    வைகலை வைத்துணரா தார்”. 
    (யா.கா.25-மே. நாலடி…39)

    அடிதோரும் ஒரே வகையான எதுகையைப் பெற்று தனிச்சொல்லின்றி அமைந்த இன்னிசை வெண்பாவாகும்.

    இருவிகற்பத்தான் இன்னிசை வெண்பா

    ”இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது
    பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி
    ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
    மருவுபின் மாண்டார் அறம்”.   
    (யா.கா – 25 மே.நாலடி 36)

    முதல் இரண்டடிகள் ஓர் எதுகையும் அடுத்து வரும் இரண்டடிகள் வேறு எதுகையும் பயின்று வந்துள்ளதால் இது இரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவாகும்.

    பல விகற்பத்தான் இன்னிசை வெண்பா

    ”கடற்குட்டம் போழ்வர் கலவர், படைக்குட்டம்
    பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில்
    தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும், அவைக்குட்டம்
    கற்றான் கடந்து விடும்
    “.     (யா.கா – 25 – மே.நாண்மணி 18)

    இதில் அடிகள் தோறும் முதற்சீரில் பயின்று வரும் எதுகையானது இரண்டிற்கும் மேற்பட்டதால் இது பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாகும், மேலும் இவ்வகையில் இரண்டாமடி தனிச்சொல் பெற்ற மூன்று விகற்பமாகவும், மூன்றாமடி தனிச்சொல்பெற்று இரு விகற்பமாகவும், மூன்றாமடி தனிச்சொல் பெற்று இரு விகற்பமாகவும், அடிதோறும் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பமாகவும் வரும், சான்றாக,

    ”இன்னாமை வேண்டின் இரவெழுக – இந்நிலத்து
    மன்னுதல் வேண்டின் இசைநடுக – தன்னொடு
    செல்வது வேண்டின் அறஞ்செய்க – வெல்வது
    வேண்டின் வெகுளி விடல்”.    
    (யா.கா – 25 மே.நான்மணி 17)

    என்ற பாடல் அமைகின்றது.

    பஃறொடை வெண்பா

           பஃறொடை வெண்பாவின் இலக்கணத்தை கூறுகையில்,

           ‘…………. அடிபல
    துன்னின் பஃறொடை……..”      
    (இ.வி.730 வரி -78)

           ‘நாலடி மிக்கஅ டிநண்ணில் பஃறொடை” (தொ.வி. 222 வ.7)

    என்றவாறு உரைக்கின்றது. இவ்வொண்பா வகையிலும் ஒன்று, இரண்டு, பல என விகற்ப வகைகளும் காட்டப்பெறுகின்றன.

    சிந்தியல் வெண்பா

    சிந்தியல் வகை இரு வகையாக விளக்கப்பட்டுள்ளது.

    1. நேரிசைச் சிந்தியல்
      2. இன்னிசைச் சிந்தியல்

           ‘….நேரிசை இன்னிசை
    அன்னவாய் மூன்றடி பயான்வரின் சிந்தியல்”.
    (இ.வி. 730.வரி. 8-9) ‘நேரிசை இன்னிசை நேர் மூவடி சிந்தே”       (தொ.வி. 222. வ. 6)

    நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பாவின் இலக்கணங்களைப் பெற்று மூவடியாய் வரின் அது சிந்தியல் வெண்பாவாகும்.

    ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

    ”அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
    செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் – சிறந்தார்
    சிறந்தமை ஆராய்ந்து கொண்டு”.     
    (யா.கா. 26மே)

    அடிதோறும் ஒரே வகையான எதுகையைக் கொண்டுள்ளமையாலும் இரண்டாமடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளமையாலும் இது ஒரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவாகும்.  இதனைப் போலவே இரு விகற்பத்தானும் மூன்று விகற்பத்தானும் அமைந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாக்களும் உள.

    மூன்று விகற்பத்தான் இன்னிசைச் சிந்தியல் வெண்பா

    ”முல்லை முறுவலித்துக் காட்டின – மெல்லவே
    சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற – போயினார்
    திண்தேர் வரவுரைக்கும் கார்”.        
    (யா.கா. 26.மே)

    அடிதோறும் வெவ்வேறு எதுகைகள் பயின்றுவர இது மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாகப் பயின்று வந்துள்ளது.  நேரிசைச் சிந்தியல் வெண்பாவில் காணப்பட்டதுபோல இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலும் ஒன்று, இரண்டு விகற்பத்தான் அமைந்த பாக்களும் உண்டென்பதை அறியமுடிகிறது.

    சவலை வெண்பா

    பாக்களை முற்கூறிய பெயர்களால் அல்லாமல் வேறு பெயர்களால் வகுத்து, இலக்கணமும் கூறும் வீரசோழிய ஆசிரியர்,

    ”மேவுங் குறள்சிந் தொடு பாதிவெண் பாத்திலதம்
    மேவும் விருந்தஞ் சவலையென் றேழு”.      
    (தொ.வி.222)

    என இவ்வேழு வகைகளையும் பாக்களில் பயின்று வரும் எனவும் குறிப்பிடுகின்றார்  வீரமாமுனிவர். இவ்வகையைத் தனி வெண்பா வகையெனவே வரையறுக்கின்றார்.  இலக்கண விளக்கம் ஐந்து என்ற போதும் சவலை வகையைக் கூட்டி வெண்பாவின் வகை ஆறு என்று இலக்கணம் வகுக்கின்றார்.  அதற்கான விளக்கம் கூறுகையில்,

           ‘ஈரடி குறளே இருகுறள் சவலை”       (தொ.வி.222 வ.3)

    அதாவது இரு குறள் இணைந்து தனிச்சொல்லின்றி பாக்களில் பயின்றுவந்தால் அது சவலை வெண்பா எனப்படும்.

    ”அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
    நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்”. 
    (மூதுரை -4)

    அளவியல் வெண்பாவைப் பொறுத்தவரை 15 சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.  பதினைந்து சீர்கள் கொண்ட அளவியல் வெண்பாவில் பதினான்கு சீர்கள் பயின்றுவரின் அவ்வெண்பா சவலை வெண்பாவாகக் கருதப்பெறும்.

    பா – இனம்

    பொதுவாக யாப்பிலக்கணங்கள் ஒவ்வொரு பாவையும விளக்கி வகைகளை விவரித்த பின்னர் அப்பாக்களின் மூவினங்களையும விவரிப்பது இயல்பு அவ்வாறு இணைத்துக் கூறாது பாக்களைக் சேர்த்தும் பாவினங்களைச் சேர்த்தும் ஒரு தனி வகையாகவும் தொன்னூல் விளக்கம் கூறுகின்றது.  மேலும், தாழிசை, துறை, விருத்தம், என்ற வரிசை முறையை மாற்றித் துறை, தாழிசை, விருத்தம் என்று கட்டமைக்கின்றது.

    தாழிசை

    ”அடிஒரு மூன்று வந்து அந்தடி சிந்தாய்
    விடின் அது வெள்ளொத் தாழிசை ஆதலும்”.      
    (இ.வி. 731. வ 1-2)

    மூன்றடி வரைப் பயின்று ஈற்றடி முச்சீராய் முடியின் அது வெள்ளொத்தாழிசை ஆகும்.  இது ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வருவதும்.  இவை வெண்பா போலத் தோன்றினாலும வெண்டளைகள் செப்பலோசை இல்லாது ஈற்றடி சிந்தடி யாகவே வருதலாகும்.

    துறை

    ”மூன்றடி முதலா ஏழடி காறும் வந்து
    ஈற்றடி சில சில சீர்குன்றினும் அவை
    வேற்றஒலி விரவினும்வெண்துறை ஆதலும்”.      
    (இ.வி 731 வரி 3-5)

           ‘……. மூன்றுஅடி
    ஆதி ஏழு அடி அந்தம் ஆய் ஈற்றில்
    சில அடிதம் சீர்சில குறைந்து இறுமே”      
    (தொ.வி.239 வரி -5-7)

    என்பதினை மூன்றடிமுதல் ஏழடி வரையில் சில அடியில் சீர் குறைந்து காணப்படினும், வேற்று ஒலி விரவி வருவினும் வெண்துறை எனக் கொள்ளப்படுகிறது.

     ”தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்காய் என்னாம் என்னாம்
    யாளியைக் கண்டஞ்சி யானை தன் கோடிரண்டும்
    பீலிபோல் சாய்த்துவிடும் பிளிற்று ஆங்கே”.       
    (யா.கா. 28 மே)

    இது மூன்றடியான் வந்த வெண்செந்துறை ஆகும்.

    விருத்தம்

    ”ஒரு மூன்று ஒரு நான்கு அடிஅடி தோறும்
    தனிச்சொல் தழுவி நடப்பது வெள்ளை
    விருத்தம் எனப்பெயர் வேண்டலும்”.         
    (இ.வி731 வரி 6-8)

    ”விருத்தம் என்பது விரவிய எல்லாக்
    சீரும் அடியும் சிதையாக் கொளினும்
    அவை ஒத்தனவாய் அடி நான்கு அணையுமே”.      
    (தொ.வி. 247 வரி 1-3)

    இவை மூன்று அல்லது நான்கு அடிகளாய் வரும்.  ஒவ்வொரு அடியின் இறுதியிலும் (நான்கு சீர்களைத் தாண்டி) ஒரு தனிச்சொல் வரும்.

    ”அவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்; – ஒரு சாரார்
    கூகூ என்றே கூவிளி கொண்டார்; – ஒரு சாரர்
    மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார்; – ஒரு சாரர்
    ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார்; – ஒரு சாரர்”.
    (யா.கா 28 மே)

    இது நான்கடியான் வந்த வெளி விருத்தம் ஆகும்.

    குறள் வெண்பா

    குறள் வெண்பாவின் வகையினை இரண்டு என்றும் மூன்று என்றும் இலக்கண நூல்கள் வேறுபட்டுக் கூறுகின்றன. இலக்கண விளக்கம்,

    ”ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய்
    விழுமிய பொருள்தரும் வெண்செந் துறையும்
    அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
    சந்தழி குறளுமாம் தாழிசைக் குறளும்
    குறட்பா இனமாம் கூறுங் காலே”    
    (இ.வி.750) என்று வறையறுக்கின்றது.

    குறள்வெண் செந்துறை

    ”வெண்செந்துறை குறள் வெண்பா இனமாய்”       (தொ.வி.239.வ2)

    எனத் தொன்னூல் விளக்கம் சுட்டுகிறது. இஃது ஒழுகிய ஓசையின் இரண்டடி ஒத்தும் வரும். மேலும், விழுமிய பொருள்தருவதாகவும் அமைகின்றது.

     ”ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
    ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”.      
    (முதுமொழிக்காஞ்சி -1)

    மேற்காட்டிய பாடல் இரண்டடியாய் தம்முள் அளவொத்து வருவதாயும் உயர்ந்த கருத்தினைக் கொண்டதாகவும் அமைகின்றது.

    குறட்டாழிசை

    அளவடிகள் நான்கு சீர்களுக்கு அதிகமான சீர்களைப் பெற்று முதலடியை விட ஈற்றடி சிற்சில சீர்கள் குறைவாகக் கொண்டிருக்கம் என்பதை தொன்னூல் விளக்கம்,

    ”குறள் தாழிசை ஒலி குன்றும் குறளும்
    அந்தடி குறைநவும் செந்துறை சிதைவுமாம்”       
    (தொ.வி – 243)

    என்று கூறுகின்றது.

    முடிவுகள்

    ஒரே காலகட்டத்தில் எழுதப்பெற்ற இருவேறு ஐந்திலக்கண நூல்களில் முறையே மரபும் மாற்றமும் பயின்று வந்துள்ளது என்பதும், இலக்கண விளக்கம் சில நூற்பாக்களை பொருள், வடிவம் மாறாமல் பயன்படுத்தியுள்ள பாங்கையும் காண முடிகிறது. பா வகையை கூறுகின்றபோது முறையே ஐந்து ஆறு என்று வேறுபடுகின்றது. தொன்னூல் விளக்கத்தில் பா என்பதற்கு தூக்கு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பா இனம் கூறுகின்ற பொழுது முறைமாற்றிக் காணப்படுகிறது. வெண்பாவிற்கான ஓசையைத் தொன்னூல் விளக்கம் விளக்கமாகக் கூறுகின்றது. வெண்பாவின் வகையில் இரு நூல்களும் வேறுபடுகின்றன வீரசோழியம் எடுத்துரைத்த சவலை என்ற பா விகற்பம்,  இதில் வெண்பாவின் ஒரு வகையாக வீரமாமுனிவர் கூறுகின்றார்.

    துணை நின்றவை

    1. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், (2011), சாரதா பதிப்பகம், ஜி-4. சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை – 600014
    2. சுப்பிரமணியன் ச.வே, தமிழ் இலக்கண நூல்கள், (2009), மெய்யப்பன் பதிப்பகம், 15, புதுத்தெரு, சிதம்பரம் – 608001
    3. சுப்பிரமணியன் ச.வே, (ப.ஆ), தொன்னூல் விளக்கம், (1978), தமிழ் பதிப்பகம், கஸ்தூரிபாய் நகர், அடையார், சென்னை – 600020
    4. சுவாமிநாதன். பேராசிரியர், தமிழக வரலாறு (2000 வரை), தீபா பதிப்பகம், 99, வீர வாஞ்சிநாதன் தெரு, பெருங்குடி, சென்னை – 600096
    5. நெடுஞ்செழியன். தே (ப.ஆ), திருக்குறள், (1985), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    6. புத்தமித்திரனார், வீரசோழியம், (2011), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098
    7. இலக்கண விளக்கம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,
    8. மசிவன், கணினிவிடு தூதூ, அதி அந்தாதி, (2016), மசிவன் பதிப்பகம், விழுப்புரம் – 605755

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 641046

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 21

    க. பாலசுப்பிரமணியன்

    சிந்தனைகளும் திறன்களும்

    சிந்தனைகள் வேண்டும். வளமான சிந்தனைகள் வேண்டும். பலன் தரக்கூடிய சிந்தனைகள் வேண்டும். ஆனால் வெறும் சிந்தனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

    சிந்தனைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தரலாம்

    சிந்தனைகள் தெறியாத கேள்விகளுக்குப் பதில்கள் தரலாம்.

    சிந்தனைகள் புதிய கருத்துக்களுக்கு உரமாக அமையலாம்

    சிந்தனைகள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு உதவி செய்யலாம்

    சிந்தனைகள், சில நேரங்களில், ஒரு மனிதனின் உள்ளுணர்வுகளுக்கும் காயங்களுக்கும் மருந்தாக அமையலாம்

    சிந்தனைகள் அறிவை வளர்க்கின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் வெறும் சிந்தைகளின் உலகத்தில் தங்களைத் தொலைத்துவிட்ட சிலர் அறிவுஜீவிகளாக மாறி நடைமுறை உலகத்திலிருந்து விலகி நிற்கின்றனர்.

    சிந்தனைகள் பல நேரங்களில் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. சிந்தனைகள் பல நேரங்களில் வளர்ச்சிக்கு வித்தாக அமைகின்றன.சமூக முன்னேற்றங்களிலும் வாழ்வியல் ஆதாரங்களை மாற்றி அமைப்பதற்கும் சிந்தனைகள் வழி வகுக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சிந்தனைகளே முன்னோடிகள்.

    ஆனால் எல்லாச் சிந்தனைகளும் பயனுள்ளதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் அமைவதில்லை. எனவே ஒரு தனி மனிதனுக்குத் தன் சிந்தனைகளின் பாதைகளை அறிந்து வழிப்படுத்தி இலக்குகள் நோக்கிச் செயல்படுத்துக்கொடிய திறன் தேவைப்படுகின்றது.

    சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் என்ன உறவு? கற்பனைகள் இலக்கற்ற சிந்தனைகள். அவைகள் கனவுகளாகவும் இருக்கலாம். நிறைவேறாத ஆசைகள் மற்றும் உணர்வுகளின் விழித்தெழுந்த வழிப்பயன்களாக இருக்கலாம். ஆயினும் கற்பனைகளும்

    சிந்தனைகளே. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு உளவியல் மேதை கூறுகின்றார் “கற்பனைகளனைத்தும் சிந்தனைகளே. ஆனால் சிந்தனைகள் அனைத்தும் கற்பனைகள் அல்ல.

    வளரும் பருவத்தில் பொதுவாகக் கற்பனைகளுக்கும்  சிந்தனைகளுக்கும் உள்ள தூரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. அது மட்டுமல்ல,  கற்பனைகளை ஆக்க பூர்வமான சிந்தனைகளாக எண்ணித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுபவர்கள் சிலர் உண்டு. கனவுகளும் கற்பனைகளும் வாழ்க்கைக்கு மிக்க அவசியம். ஆனால் அவற்றின் பரிமாணங்களையும் அவற்றின் ஆக்கத்தையும் சாத்தியக்கூறுகளையும் அலசிப் பார்த்து அவைகளை வளர்ச்சிப் பாதைக்கு எவ்வாறு துணையாகக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    கற்பனைகளாக இருந்தாலும் சரி, சிந்தனைகளாக இருந்தாலும் சரி அவைகளைத் திறன்களாக மாற்றாதவரை அவைகளுக்கு உயிரோட்டம் கிடைப்பதில்லை. எனவே சிந்திக்காத தெரிந்த அனைவரும் தங்கள் சிந்தனைகளின் வடிவங்களை திறன்களாக வளர்க்கவும் மாற்றவும் கற்றுக்கொள்ளவேண்டும்.

    திறன்கள் சிந்தனைகளின் நடைப்பயணத்தை வலுவுள்ளதாகவும் வளமுள்ளதாகவும் ஆக்குகின்றன. வாழ்க்கையின் வெற்றிக்கு நேர்த்தியான வளமான திறன்கள் தேவை. “உங்களுடைய திறன்கள் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள். அவைகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பது நீங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய பரிசு.” என்பது மேலை நாட்டுப் பழமொழி

    திறன்கள் தாமாக நமக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு மட்டும் அவர்கள் மூதாதையர்களின் வழிவந்த மரபணுக்களின் தாக்கத்தில் சில திறன்களுக்கான வித்துக்கள் உள்ளுணர்வில் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. பொதுவாகத் திறன்களை நாம்தான் தேடி வளர்த்துக்கொள்ள வேண்டும். பட்டப்படிப்புக்களும் பாராட்டுக்களும் நமக்குத் திறன்களை வாரி வழங்குவதில்லை. திறன்களாலே தான் நாமக்குப் பாராட்டுக்களும் பெருமையும் கிடைக்கின்றன.

    திறன்களை எப்படி வளர்த்துக்கொள்ளுவது?

    1. முதலில் நம்முடைய ஆர்வங்கள் எந்தத் துறையில் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
    2. அத்தகைய ஆர்வங்களின் வளர்ச்சிப்பாதையில் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
    3. அந்த வாய்ப்புக்களை அடைவதற்கான திறன்களும் அறிவாற்றல்களும் எப்படிப் பெற முடியும் என்பதைத் தேடி அறிய வேண்டும்.
    4. அந்தத் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகள் எங்கே எப்படிக் கிடைக்கும் என்பதை அறிய வேண்டும்.
    5. அந்தத் திறன்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தங்களால் செய்ய முடியுமா அல்லது அதை அடைவதில் உள்ள தடங்கல்களை வென்று சாதனையாளராக முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

    திறன்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மிகவே பயனுள்ளதாக இருக்கும். திறன்களில்லாத சிந்தனை திசைதெரியாத கப்பல் பயணம் போன்றது.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு கப்பல் ஒரு துறைமுகத்தில் பயணத்திற்குத் தயாராக உள்ளது. அதனுடைய கேப்டன் அதை இயக்க முயற்சிக்கின்றார். ஆனால் அந்தக் கப்பல் இயங்கவில்லை. பல பொறியாளர்கள் வந்து அதைச் சோதனை செய்து காரணத்தைக் கண்டுபிடிக்க முயலுகின்றனர். அவர்களால் முடியவில்லை. அந்தநேரத்தில் அங்குள்ள உள்ளூர்வாசி அந்தக் கேப்டனிடம்  உள்ளூரில் ஒரு பழுதுபார்க்கும் தொழிலாளி இருப்பதாகவும் அவர் வயதானவராக இருந்தாலும் திறமை உள்ளவர் என்றும் கூறுகின்றார். உடனே அந்தத் தொழிலாளி அங்கே அழைக்கப்படுகின்றார்.

    அந்த வயதான தொழிலாளி அந்தக் கப்பலை ஒரு முறை வலம்வந்து பார்த்துவிட்டு ஒரு மூலைக்குச் சென்று அங்குள்ள ஒரு இயந்திரத்தை மெல்லத் தட்டுகின்றார். பின் அந்தக் கேப்டனிடம் “இப்பொழுது கப்பலை இயக்குங்கள் ” என்று கூற அந்தக் கப்பல் முயன்றவுடன் இயங்க ஆரம்பித்து விடுகின்றது.

    தன்னுடைய வேலைக்கான கூலியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்க அந்தக் கேப்டனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

    “நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தட்டியதற்க்கா ஆயிரம் டாலர்கள் கேட்கின்றீர்கள்?”

    “இல்லை. நான் தட்டியதற்கான கூலி இரண்டு டாலர்கள்தான். ஆனால் எங்கே தட்ட வேண்டும் என்று கண்டுபிடித்தற்கான கூலி 998 டாலர்கள்.’

    திறன்கள் மலிவானவை அல்ல. திறன்களின் மதிப்புக்களை வெறும் பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது..

    ஒரு பாடகருக்கு என்ன பணம் கிடைத்தாலும் அது அவர் பலருக்கு கொடுத்த மகிழ்வுக்கும் நிறைவுக்கு ஈடு அல்ல.

    ஒரு சிற்பியின் கலையை பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது.

    ஒரு மருத்துவரின் நேர்மையான தொழிலையும் திறனையும் பணத்தால் ஈடு செய்ய இயலாது.

    ஒரு ஆசிரியரின் வாழ்க்கைப் பயணத்தில் வளர்ச்சி அடைந்தவர்களின் சரித்திரங்கள் அவருடைய சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது.

    திறன்கள் ஒரு மனிதனின் ஆன்மாவின் அறைகூவல்.. அதை உணர்ந்து நம்முடைய திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாமே !

    தொடருவோம்

    Share
  • நாலடியார் யாப்பியல்: யாப்பருங்கல விருத்தியுரை

    முனைவர் ப.திருஞானசம்பந்தம், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21

    எண்ணாயிரம் சமண முனிவர்கள் பாடிய பாடல்களிலிருந்து நானூறு பாடல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட பழம்பனுவல் நாலடியார். எண்ணாயிரம் என்னும் ஊரைச் சேர்ந்த சமண முனிவர்கள் பாடிய நூல் என்றொரு கருத்தும் உண்டு. முழுக்கச் சமணப் பொருண்மையை மையமிட்டதாக இருப்பினும், சமணர்களால் இன்பத்தைப் பேசும் நூலைப் படைக்க முடியும் என்பதற்கு முன்னோடி நூல் நாலடியார். தமிழ்ச் சூழலில் திருக்குறளோடு இணைத்துப் பேசப்படும் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் நாலடியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருக்குறளைப்போல மூன்று பால்களாகப் பகுத்துப் பதுமனாரால் தொகுக்கப்பட்ட நூல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 1812இல் திருக்குறள், திருவள்ளுவமாலை ஆகிய இரண்டு நூல்களும் சேர்த்துத் ‘திருக்குறள் மூலபாடம்’ என்ற பெயரில் முதன்முதல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் நாலடியாரும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிற்காலங்களில் நாலடியார் தனித்துப் பதிப்பிக்கும் பொழுது முனிவர்கள் அருளிச் செய்த / ஜைன முனிவர்களால் இயற்றப்பட்ட நூல் என்ற அடையாளத்தோடு வெளிவந்துள்ளது. கீழ்க்கணக்கு நூற்றொகுதியில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் என்பதும் தனித்துச் சுட்டத்தக்கது.

    தொல்காப்பியம் முதல் பல்வேறு இலக்கணிகளால் மேற்கோள் காட்டப்பட்ட நூல் திருக்குறள்; நாலடியார் மற்றும் வேறு சில கீழ்க்கணக்கு நூல்களும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இலக்கணிகளால் திருக்குறள் முதன்மைப்படுத்தப்பட்டதற்கான காரணத்தைச் சோ.ந.கந்தசாமி, ‘தலைமையும் பன்மையும் கருதித் திருக்குறள் உதாரணங்களையே மேற்கோள் காட்டுதல் யாப்பிலக்கண உரையாசிரியர் தம் இயல்பு’ (1989:607) என்கிறார். இதனடிப்படையில் திருக்குறள் உரையாசிரியர்களால் தலைமை நிலையில் வைத்துப் போற்றப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் நாலடியார் உள்ளது.

    யாப்புக்கென்றே தனித்துத் தோன்றிய காக்கைபாடினிய மரபைப் பின்பற்றித் தோன்றிய நூல் யாப்பருங்கலம். இந்நூலுக்கு எழுந்த விருத்தியுரை தொல்காப்பிய மூவர் உரைகளுக்கும் முன்தோன்றியது. யாப்பருங்கலம் மூலம் மட்டும், மூலமும் பழைய விருத்தியுரையோடும் என இரு நிலைகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தாண்டவராய முதலியார் (1858), ஜி.யு.போப் (1858), தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகம் (1924), த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1940) ஆகியோரால் யாப்பருங்கல மூலம் மட்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மூலமும் பழைய விருத்தியுரையும் சேர்ந்த பதிப்புகளாகச் ச.பவானந்தம் பிள்ளை (இரு தொகுதிகள் – 1916, 1917), மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (1960, 1998), இரா.இளங்குமரன் (1973, 2009) ஆகியோராலும் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இக்கட்டுரைக்குச் ச.பவானந்தம் பிள்ளையின் பதிப்பு (1998), மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பதிப்பு (1998), இரா.இளங்குமரனின் பதிப்பு (2009) ஆகியன தரவுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. விருத்தியுரைகாரர் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், நாலடி நானூறு, நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, வளையாபதி, இராமாயணம், பாரதம், பிங்கலகேசி, காலகேசி முதலான இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விதிகளை விளக்கியுள்ளார். இவ்வாறு மேற்கோள்காட்டும் மரபில் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்களுள் திருக்குறளும் நாலடியாரும் முதன்மைப் பெறுகின்றன. இவற்றுள் நாலடியாரின் இடம் குறித்து விவரிப்பதாக இக்கட்டுரை உள்ளது.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அடிகளால் பெயர்பெற்ற நூல் நாலடியார். இதில் நான்கடிகளாலான நானூறு வெண்பாக்கள் உள்ளன. இவை வெண்பாவின் இன்னிசை, நேரிசை வகைகளைப் பெற்று அமைந்திருக்கின்றன. நாலடியாரின் நானூறு வெண்பாக்களில் பதின்மூன்று வெண்பாக்கள் விருத்தியுரைகாரரால் பல்வேறு இலக்கணக் கூறிற்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. நாலடியாரின் இரண்டு வெண்பாக்களைத் தனித்தனியே இரண்டு இலக்கணக் கூறிற்கு விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டியிருக்கின்றார். நாலடியார் விருத்தியுரைகாரரால் மேற்கோள் காட்டப்பட்ட நிலையைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

    • செய்யுளுக்கு அடிப்படையாக அமைவன உறுப்புகள். இச்செய்யுள் உறுப்புகளுள் அசை, அடி, தொடை முதலியவற்றிக்கு நாலடியாரின் வெண்பாக்களைச் சான்றுகாட்டியுள்ளமை.
    • பாக்களுக்கு இனிமையைக் கூட்டுவது ஓசை. ஒவ்வொரு பாவிற்கும் தனித்த ஓசைகள் இலக்கணிகளால் வகுக்கப்பட்டுள்ளன. இதில் வெண்பாவிற்கான செப்பல் ஓசைக்கு நாலடியாரின் பாடல்களைச் சான்றுகாட்டி விளக்கியுள்ளமை.
    • ஐவகைப் பாக்களுள் முதன்மைப் பாவாக இருப்பது வெண்பா. இவ்வெண்பா யாப்பின் வகைகளுக்கு நாலடியாரின் வெண்பாக்களைச் சான்று காட்டியுள்ளமை.

    தொல்காப்பியர் முப்பத்து நான்கு செய்யுள் உறுப்புகளைக் குறிப்பிட்டு, அவற்றை இரு தொகுதிகளாகப் பகுத்துள்ளார். மாத்திரை முதல் வண்ணம் ஈறாக உள்ள இருபத்தாறு உறுப்புகளை ஒரு தொகுதியாகவும், அம்மை முதல் இழைபு வரையிலான எட்டு வனப்புகளை மற்றொரு தொகுதியாகவும் பகுத்து அதன் இலக்கணத்தைச் செய்யுளியலில் விரிவாக விளக்கியுள்ளார். இவற்றுள் வடிவம் சார்ந்த உறுப்புகளே பிற்கால இலக்கணிகளால் செய்யுள் உறுப்புகளாகக் கொள்ளப்பட்டன. இதை, “(1) மாத்திரை (2) மாத்திரையாலாகிய ஒலி எழுத்து (3) எழுத்துக்கள் சேர்ந்தமைந்த அசை (4) அசை சேர்ந்த சீர் (5) சீரால் தளைக்கப்பட்ட அடி (6) மோனை, எதுகை எனத் தொடுக்கும் தொடை (7) அடியால் உருவாகும் பா (8) பாவினது அடி அளவு (9) பாவிலமையும் ஓசை நலம் இவை வடிவம் (Form)  சார்ந்த உறுப்புகள். இவை பற்றிப் பிற்காலத்தில் பல யாப்பிலக்கண நூல்கள் (Prosody) எழுந்தன” (1985:10) என்னும் தமிழண்ணலின் கருத்து, வடிவம் சார்ந்த உறுப்புகளின் அடிப்படையில் பிற்காலத்தில் யாப்பிலக்கண நூல்கள் தோன்றின என்பதைப் புலப்படுத்துகின்றது.

    யாப்பருங்கலம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்னும் ஏழு உறுப்புகளை யாப்பு உறுப்புகளாக முதன்மைப்படுத்தியது. இவற்றுள் அசை, அடி, தொடை, பா ஆகியவற்றிற்கு, யாப்பியல் நோக்கில் நாலடியாரின் பாடல்கள் விருத்தியுரைகாரரால் எவ்வாறு மேற்கோள்காட்டப்பட்டுள்ளன என்பது இங்கு விளக்கப்படுகின்றது.

    தமிழ் யாப்பிலக்கண நூல்கள் அசையை இரண்டாக வகைப்படுத்தியுள்ளன. 1.நேரசை, 2.நிரையசை. இவற்றுள் நெட்டெழுத்து தனியே நின்றும், குற்றெழுத்து தனியே நின்றும், நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒற்றடுத்து நிற்கும்போதும் நேரசையாகும். குறிலிணைந்தும், குறில் நெடிலும், குறில் நெடில் ஒற்று இணைந்து வரும்போதும் நிரையசையாகும். இவற்றுள் தனிக்குறில் செய்யுளில் பயின்றுவரும் பொழுது நேரசை ஆகும் இடத்தையும், ஆகா இடத்தையும் குறித்து இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் தெளிவாகப் பதிவுசெய்துள்ளன. அமிதசாகரர் செய்யுளுள் ஏவல், குறிப்பு, தற்சுட்டு அல்லாத இடங்களில் தனிக்குறில் மொழி முதலில் நிற்கும்போது நேரசை ஆகாது என்கிறார். இதன்மூலம் குறிப்பு, ஏவல், தற்சுட்டு ஆகிய இடங்களில் குறில் தனியே நின்று நேரசையாகும் என்பது பெறப்படுகின்றது. இக்கருத்தை விளக்கும் விருத்தியுரைகாரர் பல்காயனாரின் நூற்பாவைத் தந்து, ‘குறிப்பின்கண் தனிக்குறில் மொழியின் முதலில் நிற்கும்போது நேரசையாகும்’ என்கிறார். இதற்குரிய சான்றினை நாலடியாரிலிருந்து தருகின்றார்.

    தற்சுட் டேவல் குறிப்பிவை யல்வழி

    முற்றத் தனிக்குறின் முதலசை யாகா.

    என்றார் பல்காயனார்.

    உதாரணம்:

    உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான்

    துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே

    வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ!

    இழந்தானென் றெண்ணப் படும்.                                         (நாலடி.9)

    இதனுள் ‘அஆ’ என்புழிக் குறிப்பின்கண் தனிக்குறில் அகரம், மொழிமுதற்கண் நின்று       நேரசையாயிற்று. அஆ என்பது அறிவின்கட் குறிப்பு.  (யாப்.வி. ப.50 பவானந்தம்.)

    இவ்வெண்பாவின் மூன்றாமடி இறுதியில் வரும் ‘அஆ’ என்ற சீரிலுள்ள ‘அ’ தனிக்குறிலாக நின்று விட்டிசைத்தலால் நேரசையாக உள்ளது. மேலும் வெண்பாவின் தளைதட்டாமல் தேமாச்சீராக அமைந்து வரும்சீரின் முதலசையோடு ஒன்றி இயற்சீர் வெண்டளையாய் உள்ளது.

    மேற்சுட்டிய வெண்பாவின் இறுதியில் உள்ள உரைக் குறிப்பு விருத்தியுரையின் பிற பதிப்புகளில் சில மாறுபாடுகளுடன் உள்ளது. இரா.இளங்குமரனார் பதிப்பில் ‘இதனுள், ‘அஆ’ என்பழிக் குறிப்பின்கண் தனிக்குறில் மொழிமுதற்கண் நின்று நேரசையாயிற்று’ (யாப்.வி.ப.74) என்றுள்ளது. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் விருத்தியுரை பதிப்பிலும் (யாப்.வி.ப.50) இவ்வாறே உள்ளது. ‘அகரம்’ என்ற சொல்லும் ‘அஆ’ என்பது அறிவின் கட் குறிப்பு’ என்ற தொடரும் பவானந்தம் பிள்ளையின் விருத்தியுரை பதிப்பைத் தவிர பிற பதிப்புகளில் இல்லை. ‘அஆ’ என்பது எப்பொருளில் குறிப்பாய் அமைகிறது என்பதையும் பவானந்தம் பிள்ளை ஒருவரே குறித்துள்ளார் எனலாம்.

    நான்குசீர்கள் உடைய அளவடியே அடி எனப்படும். இவ்வளவடியே சிறப்பான அடி என்று இலக்கணிகளால் சுட்டப்படுகின்றது. தொல்காப்பியர் அடிக்கான இலக்கணத்தை,

    ‘நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’                  (தொல்.செய்.நூ.31)

    ‘அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’                  (தொல்.செய்.நூ.34)

    எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்று பாக்களும் அளவடிகளையே பெற்று பெரும்பான்மை வரும் என்பது உறுதியாகின்றது. சிலவிடங்களில் அதன் அமைப்பு முறையில் மாற்றங்கள் உண்டு. இவ்வாறு மாறியமையும் இடங்கள் குறித்து விருத்தியுரைகாரர்,

    ‘‘அகவ லென்ப தாசிரியப் பாவே’’

    என்றார் சங்கயாப் புடையா ராகலின். ‘வெண்பா வகவல் கலி’ யென்னாது, ‘கலியொடு வெண்பா வகவல்’ என்றமை தலைதடுமாற்றந் *தந்துபுணர்த்துரைத்தல் தந்திரவுத்தியாகலின். அல்லதூஉம், ‘கலியுள் அம்போதரங்க வுறுப்பு சில இருசீரடியாலும் முச்சீரடியாலும் வரும்; அராகவுறுப்பு நாற்சீரடியின் மிக்கு வரும்; அவை போக்கிக் கலிப்பாச் சொல்லுழிச் சொல்லுதும். ‘கூறிய’ வென்று மிகுத்துச் சொல்லியவதனால், வெண்பாவினீற்றடியும், நேரிசை யாசிரியப்பாவி னீற்றயலடியும், கலிவெண்பாவி னீற்றடியும் முச்சீரான் வரும்; இணைக்குறளாசிரியப்பாவி னிடையடி யிரண்டும் பலவும் இருசீரடி யானும் முச்சீரடியானும் வரும்; ‘தன்’ என்று மிகுத்துச் சொல்லிய வதனான் ஆசிரிய விருத்தமும் கலித்துறையும் ஒழித்து மூன்று பாவினமும் பெரும்பான்மையும் நாற்சீரடியான் வரும்; ‘அவையே’ என்று மிகுத்துச் சொல்லிய வதனால், ஒருசார் ஆசிரிய வடியும் கலியடியும் ஐஞ்சீரானருகி வருவனவு முளவெனக் கொள்க. அவை போக்கி, ‘மிக்குங் குறைந்து’ மென்னும் சூத்திரத்துட் காட்டுதும். ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’ என்பதாகலினிவ்வாறு கூறப்பட்டது. பிறரு மிவ்வாறிவற்றுக் கடி வகுத்துரைத்தார்.(யாப்.வி. பக். 109, 110 பவானந்தம்.)

    என்கிறார். கலிப்பாவின் அம்போதரங்க உறுப்பில் சில மட்டும் இருசீரடியால் வரும்; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்று பாக்களும் இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி முதலிய அடிகளைப் பெற்று வரும். இக்கருத்துகளை மேற்சுட்டிய விருத்தியுரையின் உரைக் குறிப்புகள் வழி அறிய முடிகின்றது. இதனைக் காக்கைபாடினியார், மயேச்சுரர், அவிநயனார், பல்காயனார், நற்றத்தனார், சிறுகாக்கைபாடினியார் ஆகியோரின் நூற்பாக்களைக் கொண்டு தமது கருத்தினை விருத்தியுரைகாரர் வலியுறுத்துகின்றார். வெண்பா அளவடியான் வருதலுக்கு நாலடியாரின் பாடலையே சான்றுகாட்டுகின்றார்.

    அரக்காம்ப னாறும்வாய் யம்*மருங்குற் கன்னே

    பரற்கான மாற்றின கொல்லோ – அரக்கார்ந்த

    பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்

    றஞ்சிப்பின் வாங்கும் அடி.                                               (நாலடி. 396)

    என வெண்பா வளவடியான் வந்தது.

    (யாப்.வி.ப.111 பவானந்தம்.)

    இவ்வெண்பாவின் முதல் மூன்றடிகளும் அளவடிகளாய் அமைய, ஈற்றடி சிந்தடியாக உள்ளது. இதன்மூலம் வெண்பாவின் அடிகள் அளவடிகளோடு சிந்தடியையும் பெற்று வரும் என்ற இலக்கணிகளின் கருத்துத் தெளிவுபெறுகின்றது.

    மேற்சுட்டிய வெண்பாவின் முதலடியில் உள்ள ‘மருங்குற் கன்னே’ என்ற பாடத்திற்கு *’மருங்குற் கன்னோ’ என்ற பாடத்தை மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையும், இரா.இளங்குமரனாரும் காட்டுகின்றனர். இப்பாடமே நாலடியாரின் நூற்பதிப்புகளில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இப்பாடத்தைப் பவானந்தம் பிள்ளை தமது பதிப்பின் அடிக்குறிப்பில் பாடபேதமாகக் காட்டுகின்றார். இத்தகைய பாடபேதங்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குத் துணையாக அமையும் என்றால் அது மிகையல்ல.

    தொடை என்னும் உறுப்பு செய்யுளுக்கு அழகைக் கூட்டுகின்றது. இது அடி நிலையிலும் சீர்நிலையிலும் பாக்களில் பயின்றுவருகின்றது. மோனை, எதுகைத் தொடைகள் தன்னெழுத்துக்களாலும், இனவெழுத்துக்களாலும், வருக்கம் நெடில் முதலிய எழுத்துக்களாலும் அமைகின்றன. இவற்றுள் வருக்கம், நெடில், இனம் ஆகிய மோனை, எதுகைத் தொடைகள் குறித்த விரிவான விளக்கத்தையும் அதற்கான சான்றினையும் விருத்தியுரைகாரர் தருகின்றார். முந்தைய இடைக்கால யாப்பிலக்கணிகள் சுட்டுகின்ற ஆசிடை எதுகை என்பதைச் சுட்டி, அதற்கான இலக்கணத்தைக் காக்கைபாடினியத்தில் இருந்து தருகின்றார். இவற்றோடு யகர, ரகர, லகர ஒற்றுகள் ஆசிடையிட்டு வந்த எதுகைகளுக்கு நாலடியாரின் வெண்பாக்களைச் சான்றுகாட்டுகின்றார் விருத்தியுரைகாரர்.

    ‘யரலழ வென்னு மீரிரண் டொற்றும்

    வரன்முறை பிறழாது வந்திடை யுயிர்ப்பி

    னாசிடை யெதுகையென் றறிந்தனர் கொளலே’        [காக்கைபாடினியர்]

    என்றாராகலின்.

    அவை வருமாறு:

    தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடிப்

    பொய்க்கோலஞ் செய்ய வொழியுமோ – வெக்காலு

    முண்டி வினையு ளுறைக்கு மெனப்பெரியோர்

    கண்டுகை விட்ட மயல்?                                                                     [நாலடி. 43]

    ,..எனவும் போந்தவிவற்றுள் பொய்க்கோலம், காய்மாண்ட என யகர வொற்றிடை வந்த    வாசிடை யெதுகை கொள்க…

    ‘நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்

    பாத்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்

    தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டுங்

    கூத்தன் புறப்பட்டக் கால்?’                                                       [நாலடி.26]

    … இவை ரகரவொற்றிடை வந்த ஆசிடையெதுகை.

    ‘ஆவே றுருவின வாயினு மாபயந்த

    பால்வே றுருவின வல்லவாம் – பால்போ

    லொருதன்மைத் தாகு மறநெறி யாபோ

    லுருவு பலகொள லீங்கு’.                                                               [நாலடி.118]

    இது லகரவொற்றிடை வந்த ஆசிடையெதுகை…

    இவையெல்லாம் வரலாற்று முறைமையோடுங் கூடி யியைந்தினியவாய்க் கிடப்பனவே             கொள்ளப்படுமென்க. (யாப்.வி. பக்.140, 141 பவானந்தம்.)

    மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பதிப்பிலும் (பக்.157, 158), இரா.இளங்குமரன் பதிப்பிலும் (பக்.174, 175) யகரவொற்று ஆசிடை வந்த எதுகைக்கான உரை விளக்கப் பகுதியில் ‘எனவும் இவை ரகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை’ என்று மட்டும் குறிப்புள்ளது. பவானந்தம் பிள்ளை தமது பதிப்பில் காட்டும் ‘‘போந்தவிவற்றுள் ‘பொய்க்கோலம்’, ‘காய்மாண்ட’ என’’ என்னும் குறிப்பு பிற பதிப்புகளில் இல்லை. உரை வேறுபாட்டு ஆய்விற்கு இத்தகைய தரவுகளை மூலமாகக் கொள்ள வாய்ப்புள்ளது.

    செய்யுள் என்பதைப் பொருள் பெற விரிக்கும் பொழுது பாவும், பாவினமும் என்று இரண்டு வகைப்படும். ‘செய்யுட் டாமே’ என்ற தொடரில் உள்ள ‘தாமே’ என்பதை விளக்க விருத்தியுரைகாரர் நாலடியாரின் பாடலடியைச் சிறு மாறுபாட்டுடன் சான்றுகாட்டியுள்ளார்.

    தாமென்பது செய்யுட்களைச் சிறப்பித்தற்குச் சொல்லப்பட்டது.*’தேவர் தாமே தின்னினும்            வேம்பு கைக்கும்’ என்றாற் போலக் கொள்க.  (யாப்.வி.ப.199 பாவனந்தம்.)

    பவானந்தம் பிள்ளை தமது விருத்தியுரை பதிப்பின் அடிக்குறிப்பில் ‘கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு’ என்பது நாலடி.112 என்று குறித்துள்ளார். விருத்தியுரையின் பிற பதிப்புகளில் இவ்வாறு குறிக்கப் பெறவில்லை. உரைக்குறிப்பில் ‘தேவர் தாமே தின்னினும் வேம்பு கைக்கும்’ என்று இடம்பெற்றதன் அடிப்படையிலே மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையும் இரா.இளங்குமரனும் இவ்வெண்பாவின் நாலடியாரைச் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நாலடியாரின் வெண்பா அச்சுநூற் பதிப்புகளில் யாவரே தின்னினுங் கையாதாம்; கைக்குமாந் /  தேவரே தின்னினும் வேம்பு (நாலடி.112:3-4) என்றுள்ளது. இதில் தாம் என்ற சொல் விருத்தியுரைகாரர் குறிப்பிடுவதுபோல் ‘செய்யுளைச் சிறப்பித்தற்குச் சொல்லப்பட்டது’ என்று கருதினால், தாம் என்ற சொல்லைப் பொருள்கோடற்கு ஏற்றாற்போல் முன்பின்னாகக் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு பொருள்கோடற்கு ஏற்ற நிலையிலான சான்றுகளை நாலடியாரில் இருந்து விருத்தியுரைகாரர் எடுத்தாண்டுள்ளார் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

    இலக்கண நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்னும் ஐவகைப் பாக்களுக்கும் தனித்தனியே ஓசை குறிக்கப்படுகின்றன. வெண்பாவுக்குச் செப்பல் ஓசையும், ஆசிரியப்பாவுக்கு அகவல் ஓசையும், கலிப்பாவுக்குத் துள்ளல் ஓசையும், வஞ்சிப்பாவுக்குத் தூங்கல் ஓசையும், மருட்பாவிற்குத் குதிரையின் குளம்படி ஓசையும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    வெண்பாவிற்குரிய செப்பல் ஓசை, குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் வெண்பாவின் ஐந்து வகைகளுக்குரியது. இச்செப்பலோசையை வெண்டளைகளின் அடிப்படையில் ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என மூன்று வகையாக்குவார் சங்க யாப்புடையார்.

    ‘வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை

    யேந்திசைச் செப்ப லென்மனார் புலவர்’

    ‘இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்

    தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர்’

    வெண்சீ ரொன்றலு மியற்சீர் விகற்பமும்

    ஒன்றிய பாட்டே யொழுகிசைச் செப்பல்

    என்றார் சங்க யாப்புடையார்.

    (யாப்.வி. ப.216 பவானந்தம்.)

    பவானந்தம் பிள்ளையின் விருத்தியுரை பதிப்பில் இடம்பெற்றுள்ள இவ்வுரைப்பகுதி இரா.இளங்குமரன் பதிப்பிலும் (ப.252) உள்ளது. ஆனால் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் விருத்தியுரை மறுபதிப்பில் விடுபட்டுள்ளது. மூவகைச் செப்பலோசையில் தூங்கிசைச் செப்பலுக்கு நாலடி நானூற்றின் பாடல் சான்று காட்டப்பட்டுள்ளது.

    அரக்காம்ப னாறும்வா யம்மருங்கிற் கன்னோ

    பரற்கான மாற்றின கொல்லோ – வரக்கார்ந்த

    பஞ்சிக்கொண் டூட்டினும் பையனப் பையனவென்

    றஞ்சிப்பின் வாங்கு மடி.                                                                (நாலடி.396)

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

    வாலெயி றூறிய நீர்.                                                         (குறள்.113-1)

    இன்னவவை பிறவும், நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை. பிறவும் அன்ன.

    (யாப்.வி. ப.217 பவானந்தம்.)

    பவானந்தம் பிள்ளை தூங்கிசைச் செப்பலோசை தவிர்ந்த பிற செப்பலோசைகளுக்குச் சான்றுகாட்டும்போதும் ஒவ்வொரு வெண்பாவுக்கும் அடுத்து ஒவ்வொரு குறள்வெண்பாவைத் தருகின்றார். இவை இரா.இளங்குமரன் பதிப்பிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் மறுபதிப்பில் இல்லை. மேற்காட்டிய நாலடியார் வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர்வெண்டளையும் கலந்த ஒழுகிசைச் செப்பலோசையே இடம்பெறுகின்றது. தூங்கிசைச் செப்பலோசை இடம்பெறவில்லை. எனவே இவ்வெண்பாவைத் தூங்கிசைச் செப்பலோசைக்குரியதாகக் கொள்ள இயலாது. பவானந்தம் பிள்ளை காட்டும் வெண்பாவின் மூன்றாமடியிலுள்ள இறுதிச்சீர்கள் ‘பையனப் பையனவென்’ என்று பேச்சு வழக்குகளாகச் சொற்களாக உள்ளன. ஆனால் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையும், இரா.இளங்குமரனும், நாலடியாரின் அச்சுநூற் பதிப்புகளிலும் ‘பையெனப் பையெனவென்’ என்று செய்யுள் வழக்கேற்றாற்போல் அமைந்துள்ளது. இத்தகைய மாறுபாடுகளால் வெண்பாவில் எந்த மாற்றமுமில்லை. உரை பதிப்பிகளின் வழி அறியலாகும் இவ்வகையான பாடமாற்றங்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குத் துணை புரிகின்றன என்றால் அது மிகையல்ல.

    ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை ஆகிய ‘மூவகைச் செப்பலோசைக்கும் அவிநயனார் காட்டிய பாட்டு’ என்று விருத்தியுரைகாரரால் குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கருத்து அவிநயனாருடையதாகக் கருத இடமுண்டு. பல்வேறு இலக்கண உரைகளிலிருந்து தொகுத்து க.ப.அறவாணன் அவர்களால் 1975இல் பதிப்பிக்கப்பட்ட ‘அவிநயம் மூலமும் உரையும்’ என்ற நூலிலும் இது குறித்த குறிப்பு இல்லை. அவிநயனாரின் நூற்பாக்கள் முழுமையாகக் கிடைக்காததால் இக்கருத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

    வெண்டளைகளின் அடிப்படையில் ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படுத்தியதைப்போல், ஒருசார் ஆசிரியர் மேலும் மூன்று வகையாகக் கொள்வதையும் விருத்தியுரைகாரர் குறிப்பிடுகின்றார்.

    இனி, மற்றொருசா ராசிரியர், ‘செப்பல், வெண்கூ, அகவ’லென மூவகை யோசையுடைத்து வெண்பா வென்ப. என்னை?

    ‘பண்பாய்ந் தடக்கிய பாநடை தெரியின்

    வெண்பா மூவிசை விரிக்குங் காலே’

    செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா

    அகவல் வெண்பா வென்றன ரவையே

    என்றாராகலின்….

    (யாப்.வி. பக்.217, 218 பவானந்தம்)

    இவற்றுள் ஏழுசீரால் நடப்பது (குறள்வெண்பா) செப்பல் வெண்பா என்றும், இனவெழுத்து மிக்கு இசைப்பதும், ஆசு கவிகள் கூறுமாற்றால் கூறப் பிறப்பதும் (நேரிசை வெண்பா) வெண்கூ வெண்பா என்றும், அகவல் இசை என்பது இன்னிசை வெண்பா என்றும் ஒருசார் ஆசிரியர் கருத்து எனத் தெளிவுபடுத்துகின்றார் விருத்தியுரைகாரர். இவற்றுள் அகவல் இசை என்பதற்கு நாலடியாரின் பாடலைச் சான்றுகாட்டி ‘இது அணியியலுடையார் காட்டி பாட்டு’ என்று குறிப்பிடுகின்றார். மேலும் இவ்வகையான ‘ஓசை விகற்பங்களைச் சொல்வல்லார் வாய்க் கேட்பின் அல்லது காட்டலாகா’ என்றும் தெளிவுபடுத்துகின்றார்.

    இனி அகவ லிசையாவது, இன்னிசை வெண்பா. என்னை?

    அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச்

    சீர்நிலை தோறுந் தொடைநிலை திரியாது

    நடைவயி னோரடி நேய முடைத்தாய்ப்

    பொருளோடு புணர்ந்த வெழுத்தறி யாதே.

    என்றாராகலின்.

    வரலாறு:

    வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்

    வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்

    வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

    வைகலை வைத்துணரா தார்.                                                  (நாலடி.39)

    இஃது அகவல் வெண்பா வென்று அணியியலுடையார் காட்டிய பாட்டு.

    (யாப்.வி. ப.219 பாவனந்தம்.)

    மேலும் விருத்தியுரைகாரர் நான்மணிக்கடிகையின் (22) வெண்பாவைச் சுட்டி, ‘இது செய்யுளியல் உடையார் காட்டிய பாட்டு’ என்கிறார். ஒருசார் ஆசிரியர் கூறிய செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா முதலிய வெண்பா வகைகளுக்குச் செய்யுளியல் உடையாரும் அணியியல் உடையாரும் கீழ்க்கணக்கின் நாலடியாரையும் நான்மணிக்கடிகையையுமே சான்றுகாட்டியுள்ளனர் என்பது விருத்தியுரையின் வழி அறிய முடிகின்றது.

    தொல்காப்பியர் நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, அங்கதச் செய்யுள், ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பு (நூ.114) என்று குறிப்பிடுகின்றார். இவற்றுள் குறுவெண்பாட்டும் (2-3 அடி வரை), நெடுவெண்பாட்டும் (4-12 அடி வரை) பிற்காலத்தில் வெண்பாவின் வகைகளாக விரிவு பெற்றது; இவற்றுள் கைக்கிளை, அங்கதச் செய்யுள் வெண்பா வகைகளாகப் பிற்காலங்களில் பரிணமிக்கவில்லை. யாப்பருங்கலம் பாக்களுள் முதன்மைப் பாவாய் வெண்பாவை முன்வைக்கின்றது. பிற தளைகள் விரவாத் தன்மையால் வெள்ளைத் தன்மையுடைய பா என்றும் குறிப்பிடுகின்றது. குறள், சிந்து, இன்னிசை, நேரிசை, பஃறொடை என ஐந்தாக வெண்பா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் குறள்வெண்பா ஈரடியால் வருவது; சிந்தியல் வெண்பா மூவடியால் வருவது; இன்னிசை, நேரிசை வெண்பாக்கள் நான்கடியால் வருவது; பஃறொடை வெண்பா ஐந்துக்கும் மேற்பட்ட அடியால் வருவது என்று அடிவரையறையை வகுத்துள்ளது.

    இவற்றுள் நேரிசை வெண்பா நான்கடியாய் இரண்டாமடியின் இறுதி ஒரூஉத் தொடையைப் பெற்று ஒருவிகற்பத்தானும் இருவிகற்பத்தானும் வரும். இப்பொது வறையறையோடு, கதுவாய் (மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்), முற்று முதலிய தொடைகளையும் பெறும் என நேரிசை வெண்பாவிற்கு அமிர்தசாகரர் இலக்கணம் வகுத்துள்ளார். கதுவாய், முற்று ஆகிய தொடைகளைப் பெற்று நேரிசை வெண்பா வரும் என்று பிற இலக்கணிகள் யாரும் சுட்டவில்லை; அமிர்தசாகரர் ஒருவர் மட்டுமே குறித்துள்ளார் எனலாம்.

    நாலோ ரடியாய்த் தனியிரண் டாவத

    னீறொரு வாய்முற் றிருவிகற் பொன்றினும்

    நேரிசை வெண்பா வெனப்பெய ராகும்.         (யாப்.வி.60)

    நேரிசை வெண்பாவின் இரண்டாமடி இறுதியில் வரும் ஒரூஉ, கதுவாய், முற்று ஆகிய தொடைகளை முறைப்படி வைத்தற்கான காரணம் குறித்த விருத்தியுரைகாரர்,

    இரண்டாமடி ஒரூஉத்தொடையாய் வருவது சிறப்புடைத்தாகலின், முன் வைக்கப்பட்டது; ‘சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்’ என்பது தந்திரவுத்தியாகலின். முற்றுத் தொடையருகி வருதலின் பின் வைக்கப்பட்டது. கதுவாய்த்தொடை யிடையாய யியல் பிற்றாகலின் இடைக்கண் வைக்கப்பட்டது.

    (யாப்.வி. ப.228 பவானந்தம்.)

    என்று குறிப்பிட்டுள்ளார். ஒரூஉ, கதுவாய் (கீழ், மேல்), முற்று ஆகிய நான்கு தொடைகளில் ஒரூஉத் தொடையைப் பெற்றுவருகின்ற நேரிசை வெண்பாவிற்கு நாலடியாரில் இருந்து சான்றளிக்கின்றார் விருத்தியுரைகாரர்.

    ‘ஆர்த்த வறிவினி ராண்டிளைஞ ராயினுங்

    காத்தோம்பித் தம்மை யடக்குப – மூத்தொறூஉந்

    தீத்தொழிலே கன்றித் திரிதந் தெரிவைபோற்

    போத்தறார் புல்லறிவி னார்’.                                      (நாலடி. 351)

    இவை யிரண்டாமடி யொரூஉத்தொடையாய் யொருவிகற்பத்தான் வந்த    நேரிசை           வெண்பா.

    (யாப்.வி. ப.229 பவானந்தர்.)

    வெண்பாவின் இரண்டாமடியில், சீர்நிலையில் ஒரூஉ, கதுவாய், முற்று ஆகிய தொடைகளைப் பெற்று நேரிசை வெண்பா வருவதைப்போல், அடிநிலையில் மோனை, முரண், அளபெடை முதலிய தொடைகளைப் பெற்று நேரிசை வெண்பா வரும் என்கிறார் விருத்தியுரைகாரர். இவ்வாறு வருகின்ற நேரிசை வெண்பாவிற்கு இவர்காட்டும் சான்றுகள் இருவிகற்ப நேரிசை வெண்பாவாய் அமைகின்றன. இவற்றுள் முரண் தொடையைப் பெற்று வரும் இருவிகற்ப நேரிசை வெண்பாவிற்கு நாலடியாரின் பாடலை விருத்தியுரைகாரர் சான்று காட்டியுள்ளார்.

    ‘கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை

    யிடையாயார் தெங்கி னனையார் – தலையாயார்

    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே

    தொன்மை யுடையார் தொடர்பு’.                                (நாலடி. 216)

    இது முரணா யிருவிகற்பத்தால் வந்தது.

    (யாப்.வி. ப.230 பவானந்தம்.)

    மேலும் நேரிசை வெண்பா மோனை, எதுகை, முரண், அளபெடை என்னும் இந்நான்கு தொடைகள் இல்லாமல் இயைபு, செந்தொடை முதலிய தொடைகளைப் பெற்று வாராது என்றும் விருத்தியுரைகாரர் குறிப்பிடுகின்றார். தமது கருத்தினைத் தெளிவுபடுத்துவதற்குக் காக்கைபாடினியார், அவிநயனார் ஆகியோரின் நூற்பாக்களை எடுத்துக்காட்டுகின்றார். இவற்றோடு ஆசிடை எதுகைபெற்ற ஒரு விகற்ப நேரிசை வெண்பாவிற்கும் நாலடியாரில் இருந்து இவர் சான்றளித்துள்ளார்.

    ‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞ ராயினும்’ (நாலடி.351) என்பது ஓரசையால்        ஆசிட்டு ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

    (யாப்.வி ப.233 பவானந்தம்.)

    இவ்வெண்பாவை முன்னரே ஒரூஉத் தொடையைப் பெற்ற ஒரு விகற்ப நேரிசை வெண்பாவிற்கு விருத்தியுரைகாரர் சான்றுகாட்டியுள்ளார் என்பது இங்கு இணைத்து நோக்குதற்குரியது. ஒரு பாடலையே இருவித இலக்கணக் கூறிற்குச் சான்றுகாட்டும் விருத்தியுரைகாரரின் உரை நுட்பத்தை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

    இன்னிசை வெண்பா என்பதற்கு நான்கடியாய் இரண்டாமடி ஒரூஉ எதுகையைப் பெறாமல் ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வருவது என்று இலக்கணம் வகுத்துள்ளார் அமிதசாகரர். மேலும் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் குறித்த காக்கைபாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார் ஆகியோரின் நூற்பாக்களையும் விருத்தியுரைகாரர் தமது உரையுள் எடுத்துத் தருகின்றார். ஒரு விகற்ப இன்னிசை வெண்பா, இரு விகற்ப இன்னிசை வெண்பா இரண்டிற்கும் நாலடியாரின் வெண்பாக்களை விருத்தியுரைகாரர் சான்று காட்டியுள்ளார்.

    துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்

    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

    வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ்

    சகடக்கால் போல வரும்.                                                                    (நாலடி.2)

    ‘வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்’                                      (நாலடி. 39)

    எனவிவை ஒரு விகற்பத்தால் வந்த வின்னிசை வெண்பா.

    ‘வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை

    யளந்தன போக மவரவ ராற்றான்

    விளங்காய் திரட்டினா ரில்லை களங்கனியைக்

    காரெனச் செய்தாரு மில்’.                                                 (நாலடி. 103)

    எனவும், …

    கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா *விழுக்குடை

    யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வ மில்லத்

    துருவுடைக் ·கன்னியைப் போலப் பருவத்து

    ளேதிலார் துய்க்கப் படும்.                                (நாலடி. 274)

    எனவும் இவையெல்லாம் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.

    (யாப்.வி. பக். 234, 235)

    மேற்சுட்டிய இரு வகையாய் அன்றி இன்னிசை வெண்பாவில் மேலும் சில வகைகள் உண்டு என்பதைப் ‘பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க’ என்று விருத்தியுரைகாரர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால யாப்பிலக்கணிகளின் கருத்தையொட்டி இவர் இவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேற்சுட்டிய பலவிகற்ப இன்னிசை வெண்பாவின் முதலடியில் வரும் ‘இழுக்குடை’ என்பதற்கு ‘இடுக்குடை’ என்ற பாடம் நாலடியாரின் அச்சுநூற் பிரதியில் உள்ளது என்று பவானந்தம் பிள்ளையால் காட்டப்பட்டுள்ளது. இப்பாடலின் மூன்றாம், நான்காமடிகளில் இவர்காட்டிய ‘கன்னியைப் போலப் பருவத்து ளேதிலார்’ என்பது பிற விருத்தியுரை பதிப்புகளிலும் நாலடியாரின் அச்சு நூற் பதிப்புகளிலும் ‘கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான்’ என்றுள்ளது. இவ்வாறு நாலடியாரின் வெண்பாக்களில் உள்ள பாடவேறுபாடுகளைக் கண்டறியவும் விருத்தியுரை மேற்கோள்கள் உதவுகின்றன எனில் அது மிகையல்ல.

    தனிச்சொல் பெற்று வருகின்ற இன்னிசை வெண்பாக்கள் குறித்தும் விருத்தியுரை குறிப்பிடுகின்றது.

    இரண்டாமடி தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தான் வருவனவு முள வென்பது அறிவித்தற்தொரு தோற்ற முணர்த்தியது…

    ‘அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்

    திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் – றிங்கள்

    மறுவாற்றுந் சான்றோ ரஃதாற்றார் தெருமந்து

    தேய்வ ரொருமா சுறின்’.                                                                     (நாலடி. 151)

    இவை தனிச்சொற் பெற்றுப் பலவிகற்பத்தான் வந்தன. என்னை?

    ‘ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியு

    மிருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுந்

    தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந்

    தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியு

    மடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவு

    மெனவைந் தாகு மின்னசை தானே’

    என்றாராகலின். தனிச்சொற் பெற்றுப் பலவிகற்பத்தால் வருவன விதப்பினா லுடன்பட்டார் காக்கைபாடினியார்.

    (யாப்.வி.ப. 235, 236 பவானந்தர்.)

    இவ்வாறு தனிச்சொல் பெற்றுவருகின்ற இன்னிசை வெண்பாவுக்கான இலக்கணத்தைப் பிற ஆசிரியரின் கருத்தாக விருத்தியுரைகாரர் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்திற்குக் காக்கைபாடினியார் விதப்பினால் உடன்பட்டுள்ளதாகக் காட்டுகிறார். ஆனால் யாப்பருங்கலக்காரிகையின் குணசாகரருரை இந்நூற்பாவைக் காக்கைபாடினி யாருடையதாகவே காட்டியுள்ளதும் இத்தொடர்பில் சிந்தித்தற்குரியது. இக்கருத்தின் அடிப்படையில் தனிச்சொல் இடம்பெறும் இன்னிசை வெண்பாக்கள் குறித்த தெளிவான புரிதல்களையும் பெற முடியும்.

    தொகுப்பாக

    • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளோடு நாலடியார் இணைத்துப் பேசப்படுகின்றது. இருப்பினும் உரைகளிடத்துத் திருக்குறள் பெற்ற செல்வாக்கினை நாலடியார் பெறவில்லை. இதை விருத்தியுரையில் இடம்பெற்றுள்ள குறைந்த அளவிலான நாலடியாரின் மேற்கோள்கள் மூலம் தெளிவுபடுத்தலாம்.
    • விருத்தியுரை இருநிலைகளில் நாலடியாரின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளது. அசை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகளுக்கும் பாக்களில் வெண்பாவின் ஓசை, வகைகளுக்கும் சான்றுகாட்டியுள்ளது. இம்மேற்கோள் விருத்தியுரைகாரர் தனியே காட்டியவை, அமிர்தசாகரருக்கு முந்தைய இலக்கணிகளால் காட்டப்பட்டவை என்று தனியே வகைப்படுத்த முடியும்.
    • நாலடியாரின் மேற்கோள் யாப்பருங்கலத்தின் இலக்கணவாக்கத்திற்கு இலக்கியமாக அமைவதோடு, இடைக்கால யாப்பிலக்கணிகளின் இலக்கணவாக்கத்திற்குரிய இலக்கியமாகவும் அமைந்துள்ளது.
    • இலக்கிய மேற்கோள்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குப் பெரிதும் துணை புரிகின்றன. இந்தப் பின்புலத்தில் விருத்தியுரைகாரர் காட்டியுள்ள நாலடியாரின் மேற்கோள்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குரியதாக அமைந்துள்ளமை தனித்துக் குறிப்பிடப்பிடத்தக்கது.

    துணைமை ஆதாரங்கள்

    1916    அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் மூலம் (பழைய விருத்தியுரையுடன்) பகுதி – 1,            ராவ் பஹதூர் ச.பவானந்தம் பிள்ளை பதிப்பித்தது, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை.

    1934    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியாரவர்கள் இயற்றிய    உரையும், ஙி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.

    1975    அவிநயம் மூலமும் உரையும், உரையாசிரியரும் பதிப்பாசிரியரும்: க.ப.அறவாணன்,         ஜைன இளைஞர் மன்றம், சென்னை.

    1985    தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கியக் கொள்கைகள், மீனாட்சி           புத்தக நிலையம், மதுரை, மூன்றாம் பதிப்பு.

    1989    சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற் பாகம்           முதல் பகுதி,    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    1990    நாலடியார் உரை வளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது), இரண்டு         பாகங்கள், சரசுவதி மகால் வெளியீடு, தஞ்சாவூர்.

    1998    அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்),   பதிப்பாசிரியர்: மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,           சென்னை.

    2009    இளங்குமரனார் தமிழ் வளம் – 13, யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன்,       பதிப்பாசிரியர்: இரா.இளங்குமரன், வளவன் பதிப்பகம், சென்னை.

     

    Share
  • பந்தோடு பந்தாக….

    க.பாலசுப்பிரமணியன்

     

    கைப்பந்தாய் கால்பந்தாய் வண்ணமலர் கலைப்பந்தாய்

    வான்வெளியில் கோள்கள் எண்ணின்றி இருக்கையிலே

    கருப்பந்தில் எனைவைத்து வாழ்வொன்றில் விளையாட

    பூப்பந்தில் அழைத்ததேனோ யானறியேன் பூரணனே !

     

    புலன்தேடும் தேடலிலே வாழ்வெல்லாம் இரையாக்கிப்

    பார்முழுதும் பகலிரவாய் அலைந்தாலும் பயனேது

    ஊர்தேடிப் பேர்தேடி உறவுபலவும் தேடித்தேடி

    புகழ்தேடிப் பாதையிலே மாய்வதேனோ மாயவனே !

     

    கன்றாகிக் காளையாகிக் காமத்தில் வேடுவனாகிக்

    காலத்தின் தூதுவனாகிக்  கருமத்தின் சுமையாகிக்

    கற்பனையின் இரையாகிக் களைப்பின்றி விளையாடிக்

    கடைநிலையில் மூப்பினிலே முதிர்வதே னோ மூத்தவனே !

     

    விதிவிரட்ட  ஒருபக்கம் மதிதடுக்க மறுபக்கம்

    சதிராடும்  வாழ்வினிலே கதிதேடும் உயிரே

    விழிபிதுங்கி மதிமயங்கித் தன்னைத் தேடும்

    தேடலின் முடிவென்ன யானறியேன் வேதவனே !

     

    பருவங்கள் மாறிடவே பதறுகின்ற நெஞ்சமே

    உருவங்கள் மாறிடினும் உண்மைகள் உணராது

    தருணங்கள் வீணாக்கித்  தேடிட்ட திரவியத்தை

    நிலையென்று நினைத்தே தவிப்பதேனோ பராபரமே !

     

    கூவிட்ட சேவலுக்கோ கதிரவனே சொந்தமில்லை

    குயில்பாட்டு இனித்தாலும் குயிலுக்குச் சொந்தமில்லை

    நறுமணத்தைச் சுமந்தாலும் காற்றுக்குச் சொந்தமில்லை

    நானென்று அழைப்பதையே நாமறக்குமோ நாரணனே !

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 2

    -மேகலா இராமமூர்த்தி

    செல்வம் ஓரிடத்தில் நில்லாது சகடக்கால்போல் உருண்டு சென்றுவிடுவது போலவே மனிதரின் இளமையும் யாக்கையும் (உடம்பு) நிலையாத்தன்மை உடையன.

    நாம் என்றும் பதினாறாக இளமையோடிருத்தல் சாத்தியமா? இல்லையே! எனவே இளமையையும் அதுதரும் அழகையும் எண்ணி இறுமாப்படைதல் எத்துணைப் பேதைமை!

    கொடிய பலிக்களத்திலே தெய்வமேறி ஆடுகின்ற வேலன் கையில் விளங்குகின்ற தளிர்களோடு கூடிய மலர்மாலையைக் கண்ட ஆடு, இன்னும் சிறிது நேரத்தில் தாம் பலியாகப் போகிறோம் என்பதை அறியாது தழையுணவைக் கண்டு அடையும் நிலையில்லா அற்ப மகிழ்ச்சி அறிவுடையாரிடத்துத் தோன்றுவதில்லை என்கிறது நாலடியார் பாடலொன்று! 

    வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
    முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
    மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
    அறிவுடை யாளர்கண் இல். 
    (நாலடி – 16)

    எனவே நிலையில்லா இளமையை நிலைத்தது என்றெண்ணிக் காமுறுவதும் கழிபேரின்பம் கொள்வதும் மடமை என்பதே இப்பாடல் நமக்குணர்த்தும் நுண்பொருள்.

    நில்லாதவற்றை நிலையின என்றுணர்வதைப் புல்லறிவாண்மை என்று வள்ளுவமும் வசைபாடுவதை இங்கே ஒப்புநோக்கலாம்.

    ஆண்களினும் பெண்களின் அழகே வையத்தால் விதந்தோதப்படுவது. பெண்ணின் அவயவங்களில் தனித்த அழகும் கவர்ச்சியும் உடையவை அவர்தம் கண்கள். அதனால்தான் அற்றைப் புலவர்முதல் இற்றைக் கவிஞர் வரை பெண்ணின் கண்களை மானென்றும் மீனென்றும் அம்பென்றும் வேலென்றும் குவளையென்றும் தாமரையென்றும் சலியாது வருணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ”குவளையன்ன ஏந்தெழில் மழைக் கண்” என்று பரணரும்,

    ”காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம்
    என்று” (1114) வள்ளுவரும் பெண்ணைப் போற்றி எழுதிய காதற் கவிதைகள் மறக்கவொண்ணாதவை.

    எனினும் இந்த வனப்பும் வடிவழகும் நிலைத்துநில்லா இயல்புடையவை. ஆதலால் ஆடவரே! பெண்ணையும் அவள் கண்ணையும் வியந்துகொண்டிருப்பதில் காலத்தைக் கொன்னே கழியாது நன்னெறிக்கண் படர்மின் என்று எச்சரிக்கின்றது நாலடியார்.

    பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
    வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
    கோல்கண்ண ளாகும் குனிந்து.   
    (நாலடி – 17)

    குளிர்ந்த சோலையிலுள்ள பயன்தரு மரங்களெல்லாம் கனிகள் உதிர்ந்து வீழும் தன்மையை ஒத்தது மனிதரின் இளமைப்பருவம். இப்போது இளையளாய் இருக்கும் இவளும் கூனடைந்து, ஊன்றுகோலையே தன் கண்ணாய்க் கொண்டு நடக்கும் காலமும் வரும். ஆதலால் வேல்போன்ற கண்ணையுடையே பெண்ணே என்று இவளை விரும்பிச் செல்லவேண்டாம் என்று தடுத்து நல்லறிவு கொளுத்தும் பாடலிது.

    இப்போது குளிர்ச்சியாகவும், கனிபோல் சுவைதருவதாகவும் இருக்கும் இளமை, நெடுநாள் நீடியாது அழியும் தன்மைத்து என்பதை இப்பாடல்வழி நாம் உய்த்துணரவேண்டும்.

    இளமை நெடுங்காலம் நீடியாது அழியும் தன்மையுடையது என்பது ஒருபுறமிருக்க, மரணமும்கூட ஒருவனுக்கு இளமையில் வருமா முதுமையில் வருமா என்பதுவும் முன்கூட்டியே கணித்துச் சொல்ல முடியாதது. கோலையே கண்ணாகக் கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் முதியோர் பலர் உயிரோடிக்க, வாலைப் பருவத்தோர் உயிரைக் கூற்றுவன் இரக்கமின்றிக் கவர்ந்துசெல்லும் அவலத்தையும் நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொண்டுதானே  இருக்கிறோம்?

    ஆதலால், ”இப்போது நாம் இளமைப்பருவத்தில்தானே இருக்கிறோம் அறச்செயல்களை பின்னர் செய்துகொள்ளலாம்” என்று கருதாமல் கையில் பொருள் இருக்கும்போதே அறச்செயல்களைச் செய்துவிட வேண்டும். ஏனெனில், பழுத்திருந்த கனிகளேயல்லாமல், கோடைக்காற்றினால் வலிமை பொருந்திய நல்ல காய்களும் மரத்திலிருந்து வீழ்ந்துவிடுதல் உண்டு என்கிறது இந்தப் பாடல்.

    மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
    கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
    முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு
    .  (நாலடி – 19)

    இப்பாடலில் முற்றியிருந்த கனி என்பது முதியோரையும் நற்காய் என்பது வலிமைசெறிந்த இளையோரையும் குறிக்கும் உவமைகளாய்ப் பயின்றுவந்துள்ளன.

    புல்லின் நுனியில் நிற்கும் நீரானது நொடிப்போதில் ஆவியாகி மறைந்துபோவதைப்போல், ”இப்போதுத்தான் இங்கே நின்றான்; இருந்தான்; படுத்தான்; தன் சுற்றத்தார் அலற இறந்துபோய்விட்டானே…!” என்று கழிவிரக்கம் கொள்ளும்படி மிகவிரைவாய் அழிந்துபோகக்கூடியது இந்த மானுட யாக்கை! ஆகவே மாநிலத்தீரே! மறைந்துபோவதற்குமுன் நற்காரியங்களை ஆற்றுங்கள் விரைந்து! என்று நம்மைத் துரிதப்படுத்துகின்றது இந்த நாலடியார் பாடல்.

    புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
    இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
    நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
    சென்றான் எனப்படுத லால்.
      (நாலடி – 29)

    மனிதர்கள், யாரையும் கேளாமல், ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சுற்றத்தாராய்ப் பிறக்கிறார்கள். பின்பு, கூடு மரத்திலேயே சும்மாக் கிடக்கப் பறவைகள் நெடுந்தொலைவு பறந்துவிடுவதைப்போல் அவர்களும் தம் உடம்பை உறவினரிடம் விட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமலே இறந்துபோய் விடுகின்றார்கள். இதுதான் மனித வாழ்க்கை என்று நிலையில்லா மனித வாழ்வின் இயல்பை எளிமையாய் விளக்குகின்றது நாலடியார்.

    கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
    வாளாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே
    சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
    யாக்கை தமர்க்கொழிய நீத்து.
    (நாலடி – 30)

    கூடு தனியே கிடக்கப் புள் பறந்துசெல்வதைப் போன்றது உயிருக்கும் உடம்புக்கும் உள்ள நட்பு என்று திருக்குறளும் இதே கருத்தைப் பேசுகின்றது.

    குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
    (338)

    புல்லின்மேல் நீர்த்துளியாய், நீரின்மேல் குமிழியாய் விரைந்தழியும் இயல்புகொண்ட மானிட வாழ்வில், நாளை நாளை என்று ஒத்திப்போடாமல் அறச்செயல்களை, இன்றே அதுவும் இன்னே செய்துமுடித்தலே அறிவுடையார்க்கு இன்பம் பயப்பது என்பதையே நயத்தகு வழிகளில் நவின்று செல்கின்றது நாலடியார்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  •       பாரைவிட்டுப் போனதேனோ  !

     

          (  எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா  )

     

     

    குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்

    எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்

    பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்

    எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

     

    எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ

    அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்

    வழுவின்றி வையகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி

    வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

     

    வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை

    அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்

    வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்

    வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

     

    பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்

    பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்

    படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே

    படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    !

     

    உன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா

    வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்

    தமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்

    அறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய்   !

     

    முக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்

    முதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்

    இடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்

    இக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய்     !

     

    குடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை

    குலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்

    நலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று

    நாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ        !

     

    படைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது

    பாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது

    பரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த

    பாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ    !

     

    Share
  • எடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்

    -கி.வசந்தகுமார்

    நிகழ்ச்சிகளை விரிவாக விளக்க எடுத்துரைப்பியல் மிக முக்கியமானதாகும். கூற்று நிலையோடு அமைந்த பின்புலத்தை விவரிப்பதன் மூலம் கதைமாந்தர்களின் உணர்வுகளை அறிந்துக் கொள்ளமுடிகின்றது. எடுத்துரைப்பதன் மூலம் பின்புலத்தோடு இயைந்த வாழ்க்கையைப் பனுவலில் உணர்ந்து சங்க இலக்கியத்தின் கவிதை மொழியை அறிந்துக்கொள்ள துணைபுரிகின்றது. நற்றிணையில் அமைந்த நிகழ்ச்சிகளின் பின்புலத்தை எடுத்துரைப்பியல் நோக்கில் விளக்க இக்கட்டுரை முயலுகின்றது.

    பின்புலம் சார்ந்த விவரிப்பு

    சங்க இலக்கியத்தின் நால்வகைத் திணைகள் பற்றி ஆராயும் பெ.மாதையன், “ஒரே பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட கூற்றுகளுக்கு உரிதாகக் காட்டப்பட்டிருப்பது போன்ற நிலை திணையில் இல்லை; ஒரே கூற்றில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு திணைகளில் அமைந்திருப்பதையும், ஒரே கூற்றில் வரும் பாடல் ஒரே திணைக்கு உரியதாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருந்ததையும் சங்க அகப்பாடல்களின் திணைப் பகுப்பில் காணலாம்” எனச் சுட்டுகிறார்.

    கவிதையியலில் பாடுபொருள் குறித்து கே. பழனிவேலு, “முதலும் கருவும் ஒரு பாடலின் காட்சியை உருவாக்குவதற்கான அடிப்படைகளாக உள்ளன. வெறும் காட்சி விவரணை ஒரு பாடலின் நோக்கம் அன்று; ஒரு கருத்தினை வெளிப்படுத்தவதே பாடலின் நோக்கமாகும்”  எனக் கூறுகின்றார்.

    வேலன் வெறியாட்டு

    தலைவனது மார்பினால் வந்த இந்நோய் உன்னால் வந்ததன்று என அறிந்தும் பலியேற்க வருவாய். எனவே நீ அறிவற்றவன் ஆவாய் என வேலனை அறத்தொடு நிற்கும் பாங்கில் தோழி இகழ்ந்து கூறுவதைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.

    குருதி ஒண்பூ உருகெழக் கட்டி
    பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
    அருவி இன்னியத்து ஆடும்நாடன்”
    (நற்.பா.34:3-5)

    என்ற வரிகளில் சூரரமகளிர், கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் மலர்ந்த குவளை மலரைப் பறித்துக் குருதி போன்ற காந்தள் மலருடன் சேர்த்துக்கட்டி அதனைப் புனைந்து ஆடும் ஊரைச் சார்ந்தவன் தலைவன் என்பதனை அறியமுடிகிறது.

    குவளை மலரைச் செந்நிற காந்தளோடு சேர்த்து மாலைகட்டுவது என்பது தலைவன் தலைவியுடன் கூடி இன்புறுதலை அறிய பின்னணியாக அமைந்துள்ளது. இதன்மூலம் தலைமகள் தலைவனை மணந்து இல்லறம் நடத்துபவள் என்பதனை அறியலாம். இதேபோன்று நற்.51. பாடலில் மழையின் கடுமையினால் தலைவன் வரும் வழிகுறித்து யான் அஞ்சினேன். ஆனால் முருகனால் அஞ்சினேன் எனக் கருதிய தாய் வெறியாடக் கருதினாள் எனபதனை அறியமுடிகிறது.

    வெறியர் களத்தில் வெறியாடுபவன் வேல்கொண்டு ஆடுவதால் வேலன் எனப்பட்டான். இதனை,

    “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல்.பொருள்.63)

    எனத் தொல்காப்பியம் கூறுகிறது. மகளின் மேனியில் மாறுபாடு கண்டதும் தாய், வேலனை அழைத்து வெறியாடுவாள் என்பதனை,

    “கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
    ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்”
    (தொல்.கள.115)

    என்பர் தொல்காப்பியர். மேலும் வேலன் வெறியாடிக் கூறுவது சரியன்று என்பதனை,

    “அறியா வேலன் வெறியெனக் கூறும்” (ஐங்.243:2)

    என்ற வரியிலும், காந்தள் குருதி நிறத்தது என்பதை,

    ”குருதிப் பூவின் குலைக்காந்தட்டே” (குறுந்.1:4) என்ற வரியிலும் அறியலாம்.

    நெஞ்சை வேண்டுதல்

    தலைவன் தோழியை நாடி, தன் உள்ளத்தை மீண்டும் தலைவிக்கு உரைக்குமாறு கூறினான். தோழி இவன் குறையை ஆராய்பவள் போன்று நின்றாள். அதுவரை பொறுக்காத தலைவன் தோழியின் செயலைத் தலைவிமேல் செலுத்தும் காரணமாகப் பொறுத்துக் கொள்ளுமாறு நெஞ்சை வேண்டியதனை நற்.77. பாடலில் அறியமுடிகிறது.

    “சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்
    சுளையுடை முன்றில்”
         (நற்.77)

    என்ற வரியில் தலைவியின் நெஞ்சம் இனிய பலாச்சுளை போன்றது. ஆனால் பலாக்கனியின் புறத்தே காணப்படும் முள்நிறைந்த பகுதி போலத் தலைவியைச் சுற்றி அவளுடைய சுற்றத்தார் காணப்படுகின்றனர் என்பதனை உணர்த்துவதாக பின்புலக்காட்சி அமைகிறது.

    மணம்புரிய வேண்டுதல்

    தலைவன் தலைவியைக் களவுக் காலத்தே பகற்குறியாக வந்து கூடுகின்றான். அவ்வொழுக்கம் விலக்கி மணம்புரிய வேண்டும் என்பது புலப்படுமாறு தோழி தலைவனிடம் உரைத்ததை நற்.93 பாடல் விளக்குகிறது.

    தலைவனின் நாடானது வளமை மிகுந்தது. கிளைகளில் எல்லாம் தேனிறால் தொடுக்கப்பெற்றுத் தூங்கும். பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்கும். மலையில் உள்ள அருவி மாலைபோல இறங்கிவரும். கொல்லைகளில் பலவகைக் கூலங்கள் விளைந்து பொலியும். இப்படிப்பட்ட வளமையான மலையில் வாழும் தலைவனுக்கு தலைவியை மணப்பதற்கு எவ்விதக் காரணமும் தடையாக இல்லை அதாவது தலைவன் செழிப்பாக இருப்பதால் விரைவாக மணமுடிக்க முரசொலியுடன் வந்து தலைவியின் பசலையை நீக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதாகப் பின்னணி அமைகிறது.

    தலைவன் இரவிலும் பகலிலும் வருதலைக் காட்டிலும் விரைந்து திருமணம் செய்துக்கொள்ளுதலே சிறந்தது என்பதை,

    “ மன்றல் வேண்டிலும் பெறுகுவை ஒன்றோ
    இன்று தலையாக வாரல்”
           (அகம்.318:8-9)

    என்ற அகநானூற்று வரிகள் மூலம் அறியலாம்.

    களவில் இரவுக்குறி வந்து ஒழுகும் தலைமகனை அவன் வரும் வழியில் ஏற்படும் இன்னல்களை நினைத்து வருந்திய தோழி, தலைவன் மணம்புரிதலே தக்கது எனக்கருதுவதை,

    “ வெண்கோடு கொண்டுவியல் அறை வைப்பவும்
    பச்சூன் கெண்டி வள்உகிர் முணக்கவும்
    மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
    வைகிக் கேட்டுப் பையாந்திசினே
    அளிதோதானே தோழி அல்கல்
    வந்தோன்மன்ற குன்ற நாடன்
    துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை
    பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல்” (நற்.114:1-8)

    என்ற வரிகளில் அறியலாம்.

    மிகுந்த ஓசையுடைய இடிதாக்கி இறந்த யானையின் தந்தங்களைப் பெரிய பாறையிடத்துக் காய வைப்பதாகவும், கால் நகங்களை ஊனின்று பிரித்துப் புதைப்பதாகவும் புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருக்கள்தொறும் பேசுகின்ற ஆரவாரத்தைக் கேட்டேன் எனத் தோழி கூறுவதிலிருந்து, தலைவன் குறியிடத்திற்குத் தப்பாது வந்து சேர்ந்ததையும், ஊர் தூங்காமல் இருப்பதினால் தலைவி குறியிடம் செல்ல இயலாமையையும், தலைவனின் வருகையைக் குறவர்கள் பார்க்க நேர்ந்தால் அலர் பரவும் என்பதையும் இந்த பின்னணி உணர்த்துகிறது. மேலும், இடியால் யானை இறந்தது என்பதும், பெருகும் மழையால் காட்டாறு நிரம்பிப் பெருகும் என்பதும் தலைவன் வரும் வழிகுறித்த அச்சத்தைத் தெரிவிப்பதாகவும், இவ்வச்சம் சிறைப்புறத்தானாக உள்ள   தலைவன் உணர்ந்து விரைந்து மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவதாகப் பின்னணி அமைந்துள்ளது.

    மழைக்காலத்துப் பேரிடி வரும் வழியில் ஏதம் விளைவிக்கும் என்பதனை (குறுந்.158:1-2, 268:4-5) என்ற வரிகளிலும், தலைவன் காட்டாற்று வழி வருதலை, (குறுந்.275:7) அறியலாம்.

    தலைவியின் கற்பு

    தலைமகன் பாங்கனுக்கு, தலைவி வாழுமிடத்தின் தன்மையைக் குன்றகத்த சீறூர் எனக்கூறுவதை நற்.95 பாடலில் அறியலாம். நறுமணம் கமழும் கூந்தலையுடைய கொடிச்சி வாழும் ஊரானது, குறவர் குடியின் சிறுவர்கள் பெரிய பாறையின்கண் உள்ள மூங்கிலின் மேல் விசைத்தெழிந்து ஏறிநின்று தாளம் கொட்டுவர். காவலாகக் குன்றினைச் சூழ்ந்தது. இந்தப் பின்னணியானது தலைவியை யாரும் சென்று காணுதல் என்பது இயலாதபடி கடுமையான குன்றுகளை உடையதாக அமைந்தது கொடிச்சியின் சீறூர். இவ்வூரில் வாழும் தலைவி எவராலும் அசைத்தற்கரிய கற்புடையவள் என்பதனை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    பல்லியங்கள் ஒலிக்க ஆடுமகள் கயிற்றில் நடத்தலை,

    “அரிக்கூட்டு இன்னியம் கறங்க
    ஆடுமகள் கயிறுஊர் பாணியில் தளரும் சாரல்” (குறிஞ்சி.193-194)

    என்ற வரிகளில் அறிலாம். குரங்கு விசைத்தெழுந்து மூங்கிலைப் பற்றி ஆடுதலை,

    “செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
    இருவெதிர் நீடமை தயங்கப்பாயும்”  (குறுந்.385:3-4)

    என்ற வரிகளில் உணரலாம்.

    தினைப்புனக் காவல்

    தலைவன் குறித்த காலத்தில் வராமலிருப்பதை நினைத்து வருந்திய தலைவியிடம் தோழி, முதல்மழை பெய்தவுடன் வருவதாகக் கூறினான். அதற்குத்தக நம்தினைப்புனத்தில் மழை பெய்யட்டும் அன்றே தலைவன் வந்துவிடுவான் என ஆறுதல் கூறுகிறாள்.

    “கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
    சிற்சில வித்திப் பற்பல விளைந்து
    தினைகிளி கடியும் பெருங்கல் நாடன்” (நற்.328:1-3)

    எனும் வரிகளில் கிழங்குகள் மண்ணின் கீழே இறங்கின; தேனடைகள் மரக்கிளையில் தொடுக்கப்பெற்றன. சில விதைகளை விதைத்த அளவில் தினைக்கதிர்கள் பலவாக விளைந்தன. அத்தினைக் கதிர்களைக் கிளிகள் கொண்டு போகாதவாறு அவற்றைக் காக்கின்ற மலைநாடன் தலைவன் என்பனை அறியமுடிகிறது. இந்தப் பின்னணியின் மூலம் கிழங்கும், தேனும், தினையும் மிகுந்து தோன்றும் செல்வச் சிறப்புமிக்கது தலைவனின் நாடு. மண்ணில் வேரூன்றிய கிழங்குபோலத் தலைவியின் மேல்கொண்ட அவனது காதல் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. தேனடையது போல இனிமையானது தலைவனின் வாய்மொழி. தலைவியைக் காணும்போது இனிமையாகப் பேசுவான் என்பதனை அறியமுடிகிறது.

    கிழங்கு வீழ்தலையும், தேன் மிகுதலையும்,

    “கொழுங் கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே
    திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே” (புறம்.109:6-8)

    என்ற வரிகளில் அறியலாம்.

    தனிமைத் துயர்

    பாசறையில் தனித்து இருக்கும் தலைவன் தலைவியுடன் கூடிமகிழ முடியாத நிலையில் போர் வினைவயிற் பிரிந்ததை நற்.341. விளக்குகிறது. மேலும்,“குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை” நற்.341:5-6. எனும் வரிகளில் பாசறையில் தங்கியிருக்கும் தலைவன் கண்ணெதிரே ஓர் குன்றின்கண் குறமகள் ஒருத்தியும், அவள் காதலனுடன் மகிழ்ந்திருப்பது கண்டு தன் தனிமைக்கு வருந்துகிறான். இந்தப் பின்னணி தலைவனுக்குத் தலைவியின்மேல் கொண்ட அன்பை மேலும் கூட்டுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இங்குக் காதலர் மகிழ்ச்சியாக உள்ளனர். யாமோ கொடிய பகைவரோடு போரிடுவதற்குப் பாசறையில் தனிமையில் இருக்கின்றோம் என்பதனை உணர்த்துகிறது.

    தலைவன் பாசறையினும், தலைவி ஊரினுமாகப் பிரிந்திருத்தலைப் “புருவடைந் திருந்த அருமுனை இயலில், சீறூரேனே ஒண்ணுதல் யாமே….. …… புனைதார் வேந்தன் பாசறையேமே”(அகம்.84:9-14), (அகம்.264:10-15)எனும் வரிகளில் அறியலாம்.

    காதலர் புணர்ந்து மகிழ்தலைக் கண்டு கூறலை,“ நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் தேனிமிர் காவற் புணர்ந்ததிருந்தாகுமார் ஆனா விருப்போடு அணியயர்ப” (கலி.92:65-67) எனும் வரிகள் உணர்த்துகிறது.

    இல்லற மகிழ்ச்சி

     தலைவியின் நலம் கருதிய தலைவன் நன்மை புரிவான் என அவனுக்குக் கேட்குமாறு, தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

    “நிலவரை நிவந்தபலஉறு திருமணி
    ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி
    களிறுபுறங் காப்பக் கன்றொடு வதியும்” (நற்.399:5-7)

    எனும் வரிகளில் பன்றிகள் நிலத்தைப் பறிக்கும்பொழுது அழகிய மணிகள் நிலத்திலிருந்து வெளியேவந்து ஒளிவீசி நிற்கிறது. இத்தகைய ஒளியில் இளைய பெண் யானை கன்றை ஈன்றது. அப்பெண் யானையின் பக்கத்தில் ஆண் யானை காவல் காத்து நிற்கிறது. இந்த பின்னணியானது, தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நிகழ்த்துகையில், அவன் இல்லறத்தில் புதல்வரை ஈன்ற தலைவி, தன் காதலன் தன்னைப் பாதுகாக்குமாறு மக்களுடன் மகிழ்ந்து இருப்பாள் என்பதனை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    களிறு பிடியைக் காத்திருத்தலை,

    “பொறிநுதற் பொலிந்த வயக் களிற்று ஒறுத்தல்
    இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்
    கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்” (அகம்.78:4-6)

    எனும் வரிகள் விளக்குகிறது.

    எடுத்துரைப்பில் இன்றியாமையாது இடம்பெறும் இந்தப் பின்புலம் பற்றிய விவரிப்பு சங்க இலக்கியப் பனுவல் பலவற்றிலும் மிகமுக்கிய இடம் வகிக்கின்றது.

    முதற்பொருள், கருப்பொருள் என்கிற இரண்டுமே இந்தப் பின்புலத்தை வடிவமைக்கின்றன. அதோடு பனுவல் அரங்கேறும் நாடக அரங்காக இந்தப் பின்புலங்கள் பயன்படுகின்றன.

    எடுத்துரைப்பியல் என்ற கோட்பாட்டின் வழியாக இலக்கியத்தின்மீது விசாலமான பார்வையைச் செலுத்த முடியும். பின்புலத்தை விவரிப்பதன் மூலம் இயற்கைச் சூழலோடு இணைந்த வாழ்க்கையை அறியமுடிகின்றது.

    துணை நூல்கள்

    பெ.மாதையன் –  அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேன்ஸ், சென்னை,2009.
    கே. பழனிவேலு- கூற்றுக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும், அகரம் ,தஞ்சாவூர்,2011.
    கு.வெ. பாலசுப்பிரமணியன் (உ.ஆ) – நற்றிணை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2004.
    க.பஞ்சாங்கம் – நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், காவ்யா, சென்னை,2003.

    *****

    கட்டுரையாசிரியர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பெரியார் பல்கலைக்கழகம்
    சேலம். 636011.

     

    Share
  • குறுந்தொகைப் பாடல்களில் புழங்குபொருள் பயன்பாடும், பண்பாடும்

    -கு. பூபதி

    காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்குபொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால்  வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நிலமக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளைக் காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழிப் பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

    பயன்பாடு:

    புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம். பெரும்பாலான அறிஞர்கள் புழங்குபொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை  (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டைக் காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.

    கொல்லுத் தொழில்:

    ஏழூரில் உள்ள மக்களின் பயன்பாட்டில் உள்ள மண்வெட்டி, களைக்கொத்து போன்ற தொழில் கருவிகளை ஆக்கவும், ஆக்கிய கருவிகளைப் பழுது நீக்கவும் கொல்லுப்பட்டறையில் கொல்லர் உலையில் பயன்படுத்தப்பட்ட உலைவாங்கு மிதிதோல் (துருத்தி) போன்ற கருவிகளைப் பழந்தமிழர்கள் புழக்கத்தில் கொண்டிருந்ததை,

          “ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்”
                           (குறு:172)

    எனக் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

    கொல்லர் உலையில் பயன்படுத்தப்படும் பட்டைக் கல்லைப்போன்ற வெம்மையை உடைய பாறை எனச் சுடுபாறையின் வெம்மையைக் கூற புழங்குபொருள் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது இதனை,

    ‘உலைக்கு லன்ன பாறை யேறி’ (குறு:12) என்ற வரிகளால் அறியலாம்.

    வார்த்தல், கடைசல் கருவிகள்:
    விவசாயத்திற்குப் பயன்படும் கருவிகள் அனைத்தும் மரப்பிடி கொண்டு அமைக்கப்பட்டவையாகும். அதுமட்டுமன்றித் தேர்கால்களில் கால்கள் அகலாமல் இருப்பதற்கும் அணிகலனாக அலங்கரிப்பதற்கும் ‘பூண்’ என்னும் வளையம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப் பூணை இரும்பு, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். வளைய வடிவில் செய்யப்பட்ட பூண் விவசாயக் கருவிகளில் புழக்கத்திலிருந்ததை ஓதஞானியார் குறிப்பிடுகையில்,

    ‘பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
    வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த’  
    (குறு:227) என்ற பாடல்வரிகளில் ஆவணப்படுத்துகின்றார்.

    சங்கப்பாடல்களில் தலைவன் பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும்பொழுது மணிகள் கோக்கப்பட்ட தேரில்சென்று பொருளீட்டுவதாக ஏராளமான பாடல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அம்மணிகள் ஊது உலையில் இட்டு வார்த்து, மணிகள் செய்யப்பட்டதையும் அம்மணிகள் புழக்கத்திலிருந்ததையும்…….

          ‘ ………………………………….மெழுகான்
    றூதுலைப் பெய்த படுவாய்த் தெண்மணி’
          (குறு:155) என்ற பாடல்வரிகளால் அறியலாம்.

    தச்சுத்தொழில் பொருட்கள்:

    மரவேலைகளை மரத்தச்சரும், கல்லைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளைக் கல்தச்சரும் மேற்கொண்டனர். சிறுவர்களின் விளையாட்டுப் பொம்மையாகச் சிறுவண்டியும், அதனுடன் பூட்ட சிறிய பொம்மைக் குதிரையும் விளையாட்டுப் பொருளாக மரத்தச்சரால் செய்தளிக்கப்பட்டதை….

          ‘தச்சன் செய்த சிறுமா வையம்
    ஊர்ந்தின் புறாஅ ராயினும் கையின்
    ஈர்ந்தின் புறூஉ மிளையோர் போல’
          (குறு: 61)

    என்ற பாடல்வரி படம்பிடித்துக் காட்டுகிறது. தச்சர் செய்த அச்சிறுமா பெரிதும் புழக்கத்தில் இருந்ததற்கு ஏராளமான சான்றுகள் சங்கப்பாடல்களில் காணக்கிடக்கின்றன. அவற்றில்,

          ‘தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
    ஊரா நற்றே ருட்டிய புதல்வர்’
     (பெரு: 248) என்று பெரும்பாணாற்றுப்படையும் சுட்டுகிறது.

    உலக்கை:

    பச்சைநெல்லை ஊறவைத்து அவல் இடிப்பதற்கு  நன்கு முற்றிய கரிய வைரம் பாய்ந்த மரத்தினால் செய்யப்பட்ட உலக்கை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவல் இடிக்கும்போதும், விவசாய வேலைகள் செய்யும்போதும் உடற்சோர்வு தெரியாமல் இருப்பதற்கு வாய்மொழியாக பாடல்களைப் பாடுவது வழக்கம் அவ்வகையில் பாடப்பட்ட பாடல்களில் ‘வள்ளைப்பாட்டும்’ ஒன்றாகும். இப்பாடல் இலக்கிய வகையில் இடம் பெற்றிருப்பதை அறியலாம்.

          ‘பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
    ஆய்கதிர் நெல்லின் வரம்புஅணைத் துயிற்றி’
       (குறு: 238)

    என்ற குன்றியனார் பாடல்வரியின் மூலம் வைரம் பாய்ந்த உலக்கை பயன்படுத்தப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

    விதைக்குறு வட்டி:

    சங்ககாலத் தமிழர்கள் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், தானியங்களை வயல்வெளிகளில் விதைப்பதற்கு எடுத்துச் செல்வதற்கும் விதைக்குறு வட்டியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். விதைக்குறு வட்டியானது பனங்குருத்தோலைகளால் முடையப்பெற்ற சிறுபெட்டியாகும் இப்பெட்டி புழக்கத்திலிருந்தது தலைவி கூற்றாக வரும்

    ‘முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்
    விதக்குறு வட்டி போதொடு பொதுளப்’
    (குறு: 155) என்ற பாடலால் அறியக்கிடக்கிறது.

    விதைப்புக்கூடையின் பயன்பாடு குறுந்தொகையில் மட்டுமல்லாது ஐங்குறுநூறு, நற்றிணை போன்ற சங்கப்பாடல்களிலும் விரவிக்கிடப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது.

    இன்றும் விதைக்குறு வட்டியைப் பல பெயர்களில் அதாவது,விதைப்பெட்டி, பெட்டிக்கூடை, சாட்டுக்கூடை, மக்கிரி, கொடாப்பு எனப் பலவடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர். விதைக்குறு வட்டியானது பனையோலைகளாலும், மூங்கிலைப் பயன்படுத்தியும் அதே வடிவில் அதே பயன்பாட்டில் இன்றும் நிலைத்திருப்பதைக் பண்பாட்டுக்கூறாகக் கருதலாம்.

    பொன்செய் பாவை:

    அரசனைப் பிழைத்தவர் தம் எடைக்கு எடை பொன்தருதல் என்பது வழக்கிலிருந்ததை பல சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன, இதனை,

    “மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
    புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்
    கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
    பொன்செய் பாவை கொடுப்பனங் கொள்ளான்
    பெண்கொலை புரிந்த நன்னன் போல்’
      (குறு: 292)

    என்ற பாடல் காட்டுகிறது. பொன்செய்பாவை என்ற புழங்குபொருள் பண்பாடு சார்ந்து பயின்று வந்ததைப் பெருங்கதை குறிப்பிடுகையில்,

          “……ஆடுவி குளிரெனின்
    ஆடகப் பொன்னினு மளவி னியன்ற
    பாவை யாகும் படுமுறை”
       (பெருங்: 1:40:371-3) என்ற பெருங்கதைப் பாடல் வழியும்,

          “பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்’ (அக:127-8)

    என்ற மாமூலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் வழியும் அறிய முடிகிறது.

    அரசனைத் தொடர்ந்து வழிபடு தெய்வத்திற்கும் எடைக்கு எடை பொன்னாய், வெள்ளியாய், நெல்லாய், உப்பாய்க் கொடுக்கும் வழக்கம் மரபாக இன்றும் நிலைத்திருக்கிறது.

    ஆடிப்பாவை

    “கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
    ஆடிப் பாவை போல” 
    (குறு: 8)

    என்ற பாடல், கண்ணாடி முன்னின்று தம் கைகளையும், காலையும் தூக்கத் தானும் தூக்கும் ஆடிப்பாவையை மனைவிக்கு அடங்கி அவள் சொல்லுக்கு ஆடும் தலைவனைச் சிறுமைப்படுத்த ஒப்புமைப்படுத்துவது பரத்தையின் கூற்றாகக் கூறப்படுகிறது.

    “ஆடியுப் பாவை போனீயணங்கிய தணங்க வென்றான்” என சீவகசிந்தாமணியும் (957) ஆடிப்பாவை குறித்துக் கூறுகிறது.

    “தாதிற் செய்த தண்பனிப் பாவை”                       (குறு: 48)

    “முறிகண்டன்ன மெல்லென் சீறடிச்

    சிறுபசும் பாவையும் எம்முள்ளார்”                       (குறு: 278)

    ஆகிய குறுந்தொகைப் பாடல்வரிகள் பாவை செய்தலைக் குறிப்பிடுகின்றன.

    கண்ணாடித் தோற்றம், பாவை (பொம்மை) எனும் புழங்குபொருளாகி, நெடிய காலத்தினூடே கடந்து பண்பாட்டின் தொடர்ச்சியாய், ‘கையுங் காலுந் தூக்கத் தூக்கும் பாவை’ நிலையிலிருந்து ‘நிகழ்த்துவோன் விரலசைவுக்கு ஆடும் பாவை’ எனப் பாவைக் கூத்தாக படிமலர்ச்சி பெற்றதை அறியலாம்.

    ஞெகிழி

    அறுவடைக்குத் தயாரான விளைபொருட்களைக் கிளி, குருவிகளிடமிருந்து காக்க கவண், பறை, தட்டை என ஒலியெழுப்பியோ, அச்சுறுத்தியோ தினைப்புனங் காவல் மேற்கொண்டனர்.

    “ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல்யானை”      (குறு: 357)

    எனும் பாடல்வழிக் கொள்ளிக் கட்டைக்கு அஞ்சி விலகிய யானை காட்டப்படுகிறது.

    “ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
    களிறுஎன ஆர்ப்பவர் ஏனல் காவலரே”
      (கலி: 52:13)

    என்ற கலித்தொகைப் பாடல் தினைப்புனக் காவலில் ஒளிதிகழ் ஞெகிழி, வில், கவண் பயன்பாட்டைப் பறைசாற்றுகிறது. ஒளியும் வெம்மையும் கொண்ட ஞெகிழி காவல் குறிப்பாகப் படிமலர்ச்சி பெற்ற புழங்கு பொருள்களாகி, இன்றும் விழாக்களிலும், சடங்கு நிகழ்த்துகைகளிலும் ‘தீப்பந்தம் பிடித்தல்’ என்ற பண்பாட்டிற்கு வேராக விளங்குகிறது.

    “தழலும் தட்டையும் குளிரும் பிறவும்”        (குறு: 34)

    “படுகிளி கடியுதட கொடிச்சி கைக்குளிரே”      (குறு: 291)

    பாடல்களில் இடம்பெற்ற கிளியை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களான பறை, தட்டை போன்றவை இன்றும் புழக்கத்திலுள்ளன.

    எருமண்

    ‘கான்யாற்று எருமண்’ கூந்தல் கழுவப் புழங்கியதை,
          “கூழைக்கு எருமண் கொணர்கஞ் சேறும்”                 (குறு: 113)

    என்ற பாடல் சுட்டுகிறது. தற்காலத்தில் பெண்கள் தங்கள் கூந்துலுக்கு எருமண்ணுக்கு மாற்றாக மூலிகைப் பொருட்களையும், வேதி நறுமணப் பொருட்களையும் பயன்படுத்தினாலும், ‘எருமண்’ பாரம்பரிய இயற்கை வழிமுறையாகவும், வைத்திய முறையாகவும் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது.

    மண்கலமும் பொன்கலமும்

    தற்காலத்தில் அன்றாடப் புழங்குபொருட்களில் பயன்படக்கூடிய பொருட்கள் இரும்பு, செம்பு, ஈயம், பித்தளை போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பச்சை மண்ணால் செய்யப்பட்ட மட்கலப் புழக்கம் இன்றும் அதன் மதிப்புக்குறையாமல் இருக்கிறது, மட்பாண்ட பயன்பாட்டையும் பொன்னால் ஆன பாத்திரங்களின் பயன்பாட்டையும் குறுந்தொகை சுட்டுகையில்,

    “பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல”                    (குறு: 29)

    “செம்பொற் புனை கலமும்”                               (குறு: 356)

    எனக் குறிப்பிடுவதை அறியலாம்.

    கைவளைகள்

    பல்வேறு அளவுகளில் செய்யப்பட்ட கைவளைகள் விற்பனை செய்பவரை,

    “சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே”      (குறு: 117)

    என்ற பாடல் காட்டுகிறது.

    “கோடீ ரிலிங்குவளை நெகிழ நாளும்”                  (குறு: 365)

    எனச் சங்குகளை அறுத்துச்செய்த வளையல்கள் பயன்பாடு சுட்டப்படுகிறது.

    ‘வளைஞெகிழ்தல்’ என்பது கைவளை நெகிழ்தல் என்ற இயல்புப் பொருளை மட்டுமின்றி, பிரிவுத்துயர் ஆற்றாமல் உடலும், உள்ளமும் சோர்வுற்று புனையா ஓவியமாகக் காட்சிதரும் தலைவியின் மெலிவைக் கூறும் குறியீடாகவும் விளங்குகிறது.

    ‘கைவளை அணிதல்’ வரவையும், மகிழ்வையும் குறிப்பதாகவும், ‘கைவளை நெகிழ்தல்’ பிரிவையும், துன்பத்தையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. கைவளைகள் பொன்னாலும், முத்தாலும் செய்யப்பட்டதையும், ஆபரணங்களைப் பாதுகாக்க ‘பொன்பெய்பேழை (Jewel Box)

    பயன்படுத்தப்பட்டதையும்,

          “இன்னாக் கானமு மினிய பொன்னோடு
    மணிமிடை யல்குன் மடந்தை”    
                     (குறு: 274)

          “பொன்செய் பேழை முய்திறந் தன்ன”              (குறு: 233)

    கூழைக்கு எருமண் கொணர்கஞ் சேனும்                (குறு: 239)

    ஆகிய பாடல்களால் அறியலாம்.

    பொன்னை உரைத்துப் பாரிக்கும் உரைகல் புழக்கத்தை,

          “………….. பொன்னின்
    உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை”
               (குறு: 192)

    என்ற வரிகளாலும் அறியலாம்.

    தொகுப்புரை

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள புழங்கு பொருள்கள் குறித்த செய்திகள் முக்கியத் தரவுகளாகின்றன. இலக்கியங்களில் உண்மைத் தன்மை குறித்த ஐயம் எழுந்தாலும், ஒவ்வொரு பாடலையும் ஒப்புநோக்க உரிப்பொருளை விளக்க இயல்பாகக் காட்டப்பட்டவையாக புழங்குபொருள்கள் திகழ்கின்றன என்ற உண்மை தெற்றென விளங்குகிறது. தொன்மையும், தரவுகளில் செழுமையும் கொண்ட குறுந்தொகைப் பாடல்களில் கூறப்பட்ட புழங்கு பொருட்கள் பண்பாட்டுச் சூழல் ஆய்வுக்குக் கருவூலமாகத் திகழ்கின்றன.

    பார்வை நூல்கள்:

    1. குறுந்தொகை மூலமும் உரையும் 2009, டாக்டர். உ.வே.சா நூல்நிலையம், சென்னை.
    2. சீவகசிந்தாமணி மூலமும் உரையும், நான்காம் பதிப்பு, 2015. சாரதா பதிப்பகம், சென்னை.
    3. நற்றிணை மூலமும் உரையும், 2015, ஔவை துரைசாமிப் பிள்ளை,
      சாரதா பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    ஈச்சநாரி, கோவை-21 

     

     

    Share