எடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்

1

-கி.வசந்தகுமார்

நிகழ்ச்சிகளை விரிவாக விளக்க எடுத்துரைப்பியல் மிக முக்கியமானதாகும். கூற்று நிலையோடு அமைந்த பின்புலத்தை விவரிப்பதன் மூலம் கதைமாந்தர்களின் உணர்வுகளை அறிந்துக் கொள்ளமுடிகின்றது. எடுத்துரைப்பதன் மூலம் பின்புலத்தோடு இயைந்த வாழ்க்கையைப் பனுவலில் உணர்ந்து சங்க இலக்கியத்தின் கவிதை மொழியை அறிந்துக்கொள்ள துணைபுரிகின்றது. நற்றிணையில் அமைந்த நிகழ்ச்சிகளின் பின்புலத்தை எடுத்துரைப்பியல் நோக்கில் விளக்க இக்கட்டுரை முயலுகின்றது.

பின்புலம் சார்ந்த விவரிப்பு

சங்க இலக்கியத்தின் நால்வகைத் திணைகள் பற்றி ஆராயும் பெ.மாதையன், “ஒரே பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட கூற்றுகளுக்கு உரிதாகக் காட்டப்பட்டிருப்பது போன்ற நிலை திணையில் இல்லை; ஒரே கூற்றில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு திணைகளில் அமைந்திருப்பதையும், ஒரே கூற்றில் வரும் பாடல் ஒரே திணைக்கு உரியதாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருந்ததையும் சங்க அகப்பாடல்களின் திணைப் பகுப்பில் காணலாம்” எனச் சுட்டுகிறார்.

கவிதையியலில் பாடுபொருள் குறித்து கே. பழனிவேலு, “முதலும் கருவும் ஒரு பாடலின் காட்சியை உருவாக்குவதற்கான அடிப்படைகளாக உள்ளன. வெறும் காட்சி விவரணை ஒரு பாடலின் நோக்கம் அன்று; ஒரு கருத்தினை வெளிப்படுத்தவதே பாடலின் நோக்கமாகும்”  எனக் கூறுகின்றார்.

வேலன் வெறியாட்டு

தலைவனது மார்பினால் வந்த இந்நோய் உன்னால் வந்ததன்று என அறிந்தும் பலியேற்க வருவாய். எனவே நீ அறிவற்றவன் ஆவாய் என வேலனை அறத்தொடு நிற்கும் பாங்கில் தோழி இகழ்ந்து கூறுவதைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.

குருதி ஒண்பூ உருகெழக் கட்டி
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடும்நாடன்”
(நற்.பா.34:3-5)

என்ற வரிகளில் சூரரமகளிர், கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் மலர்ந்த குவளை மலரைப் பறித்துக் குருதி போன்ற காந்தள் மலருடன் சேர்த்துக்கட்டி அதனைப் புனைந்து ஆடும் ஊரைச் சார்ந்தவன் தலைவன் என்பதனை அறியமுடிகிறது.

குவளை மலரைச் செந்நிற காந்தளோடு சேர்த்து மாலைகட்டுவது என்பது தலைவன் தலைவியுடன் கூடி இன்புறுதலை அறிய பின்னணியாக அமைந்துள்ளது. இதன்மூலம் தலைமகள் தலைவனை மணந்து இல்லறம் நடத்துபவள் என்பதனை அறியலாம். இதேபோன்று நற்.51. பாடலில் மழையின் கடுமையினால் தலைவன் வரும் வழிகுறித்து யான் அஞ்சினேன். ஆனால் முருகனால் அஞ்சினேன் எனக் கருதிய தாய் வெறியாடக் கருதினாள் எனபதனை அறியமுடிகிறது.

வெறியர் களத்தில் வெறியாடுபவன் வேல்கொண்டு ஆடுவதால் வேலன் எனப்பட்டான். இதனை,

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல்.பொருள்.63)

எனத் தொல்காப்பியம் கூறுகிறது. மகளின் மேனியில் மாறுபாடு கண்டதும் தாய், வேலனை அழைத்து வெறியாடுவாள் என்பதனை,

“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்”
(தொல்.கள.115)

என்பர் தொல்காப்பியர். மேலும் வேலன் வெறியாடிக் கூறுவது சரியன்று என்பதனை,

“அறியா வேலன் வெறியெனக் கூறும்” (ஐங்.243:2)

என்ற வரியிலும், காந்தள் குருதி நிறத்தது என்பதை,

”குருதிப் பூவின் குலைக்காந்தட்டே” (குறுந்.1:4) என்ற வரியிலும் அறியலாம்.

நெஞ்சை வேண்டுதல்

தலைவன் தோழியை நாடி, தன் உள்ளத்தை மீண்டும் தலைவிக்கு உரைக்குமாறு கூறினான். தோழி இவன் குறையை ஆராய்பவள் போன்று நின்றாள். அதுவரை பொறுக்காத தலைவன் தோழியின் செயலைத் தலைவிமேல் செலுத்தும் காரணமாகப் பொறுத்துக் கொள்ளுமாறு நெஞ்சை வேண்டியதனை நற்.77. பாடலில் அறியமுடிகிறது.

“சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்
சுளையுடை முன்றில்”
     (நற்.77)

என்ற வரியில் தலைவியின் நெஞ்சம் இனிய பலாச்சுளை போன்றது. ஆனால் பலாக்கனியின் புறத்தே காணப்படும் முள்நிறைந்த பகுதி போலத் தலைவியைச் சுற்றி அவளுடைய சுற்றத்தார் காணப்படுகின்றனர் என்பதனை உணர்த்துவதாக பின்புலக்காட்சி அமைகிறது.

மணம்புரிய வேண்டுதல்

தலைவன் தலைவியைக் களவுக் காலத்தே பகற்குறியாக வந்து கூடுகின்றான். அவ்வொழுக்கம் விலக்கி மணம்புரிய வேண்டும் என்பது புலப்படுமாறு தோழி தலைவனிடம் உரைத்ததை நற்.93 பாடல் விளக்குகிறது.

தலைவனின் நாடானது வளமை மிகுந்தது. கிளைகளில் எல்லாம் தேனிறால் தொடுக்கப்பெற்றுத் தூங்கும். பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்கும். மலையில் உள்ள அருவி மாலைபோல இறங்கிவரும். கொல்லைகளில் பலவகைக் கூலங்கள் விளைந்து பொலியும். இப்படிப்பட்ட வளமையான மலையில் வாழும் தலைவனுக்கு தலைவியை மணப்பதற்கு எவ்விதக் காரணமும் தடையாக இல்லை அதாவது தலைவன் செழிப்பாக இருப்பதால் விரைவாக மணமுடிக்க முரசொலியுடன் வந்து தலைவியின் பசலையை நீக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதாகப் பின்னணி அமைகிறது.

தலைவன் இரவிலும் பகலிலும் வருதலைக் காட்டிலும் விரைந்து திருமணம் செய்துக்கொள்ளுதலே சிறந்தது என்பதை,

“ மன்றல் வேண்டிலும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல்”
       (அகம்.318:8-9)

என்ற அகநானூற்று வரிகள் மூலம் அறியலாம்.

களவில் இரவுக்குறி வந்து ஒழுகும் தலைமகனை அவன் வரும் வழியில் ஏற்படும் இன்னல்களை நினைத்து வருந்திய தோழி, தலைவன் மணம்புரிதலே தக்கது எனக்கருதுவதை,

“ வெண்கோடு கொண்டுவியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள்உகிர் முணக்கவும்
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே
அளிதோதானே தோழி அல்கல்
வந்தோன்மன்ற குன்ற நாடன்
துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை
பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல்” (நற்.114:1-8)

என்ற வரிகளில் அறியலாம்.

மிகுந்த ஓசையுடைய இடிதாக்கி இறந்த யானையின் தந்தங்களைப் பெரிய பாறையிடத்துக் காய வைப்பதாகவும், கால் நகங்களை ஊனின்று பிரித்துப் புதைப்பதாகவும் புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருக்கள்தொறும் பேசுகின்ற ஆரவாரத்தைக் கேட்டேன் எனத் தோழி கூறுவதிலிருந்து, தலைவன் குறியிடத்திற்குத் தப்பாது வந்து சேர்ந்ததையும், ஊர் தூங்காமல் இருப்பதினால் தலைவி குறியிடம் செல்ல இயலாமையையும், தலைவனின் வருகையைக் குறவர்கள் பார்க்க நேர்ந்தால் அலர் பரவும் என்பதையும் இந்த பின்னணி உணர்த்துகிறது. மேலும், இடியால் யானை இறந்தது என்பதும், பெருகும் மழையால் காட்டாறு நிரம்பிப் பெருகும் என்பதும் தலைவன் வரும் வழிகுறித்த அச்சத்தைத் தெரிவிப்பதாகவும், இவ்வச்சம் சிறைப்புறத்தானாக உள்ள   தலைவன் உணர்ந்து விரைந்து மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவதாகப் பின்னணி அமைந்துள்ளது.

மழைக்காலத்துப் பேரிடி வரும் வழியில் ஏதம் விளைவிக்கும் என்பதனை (குறுந்.158:1-2, 268:4-5) என்ற வரிகளிலும், தலைவன் காட்டாற்று வழி வருதலை, (குறுந்.275:7) அறியலாம்.

தலைவியின் கற்பு

தலைமகன் பாங்கனுக்கு, தலைவி வாழுமிடத்தின் தன்மையைக் குன்றகத்த சீறூர் எனக்கூறுவதை நற்.95 பாடலில் அறியலாம். நறுமணம் கமழும் கூந்தலையுடைய கொடிச்சி வாழும் ஊரானது, குறவர் குடியின் சிறுவர்கள் பெரிய பாறையின்கண் உள்ள மூங்கிலின் மேல் விசைத்தெழிந்து ஏறிநின்று தாளம் கொட்டுவர். காவலாகக் குன்றினைச் சூழ்ந்தது. இந்தப் பின்னணியானது தலைவியை யாரும் சென்று காணுதல் என்பது இயலாதபடி கடுமையான குன்றுகளை உடையதாக அமைந்தது கொடிச்சியின் சீறூர். இவ்வூரில் வாழும் தலைவி எவராலும் அசைத்தற்கரிய கற்புடையவள் என்பதனை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

பல்லியங்கள் ஒலிக்க ஆடுமகள் கயிற்றில் நடத்தலை,

“அரிக்கூட்டு இன்னியம் கறங்க
ஆடுமகள் கயிறுஊர் பாணியில் தளரும் சாரல்” (குறிஞ்சி.193-194)

என்ற வரிகளில் அறிலாம். குரங்கு விசைத்தெழுந்து மூங்கிலைப் பற்றி ஆடுதலை,

“செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடமை தயங்கப்பாயும்”  (குறுந்.385:3-4)

என்ற வரிகளில் உணரலாம்.

தினைப்புனக் காவல்

தலைவன் குறித்த காலத்தில் வராமலிருப்பதை நினைத்து வருந்திய தலைவியிடம் தோழி, முதல்மழை பெய்தவுடன் வருவதாகக் கூறினான். அதற்குத்தக நம்தினைப்புனத்தில் மழை பெய்யட்டும் அன்றே தலைவன் வந்துவிடுவான் என ஆறுதல் கூறுகிறாள்.

“கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினைகிளி கடியும் பெருங்கல் நாடன்” (நற்.328:1-3)

எனும் வரிகளில் கிழங்குகள் மண்ணின் கீழே இறங்கின; தேனடைகள் மரக்கிளையில் தொடுக்கப்பெற்றன. சில விதைகளை விதைத்த அளவில் தினைக்கதிர்கள் பலவாக விளைந்தன. அத்தினைக் கதிர்களைக் கிளிகள் கொண்டு போகாதவாறு அவற்றைக் காக்கின்ற மலைநாடன் தலைவன் என்பனை அறியமுடிகிறது. இந்தப் பின்னணியின் மூலம் கிழங்கும், தேனும், தினையும் மிகுந்து தோன்றும் செல்வச் சிறப்புமிக்கது தலைவனின் நாடு. மண்ணில் வேரூன்றிய கிழங்குபோலத் தலைவியின் மேல்கொண்ட அவனது காதல் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. தேனடையது போல இனிமையானது தலைவனின் வாய்மொழி. தலைவியைக் காணும்போது இனிமையாகப் பேசுவான் என்பதனை அறியமுடிகிறது.

கிழங்கு வீழ்தலையும், தேன் மிகுதலையும்,

“கொழுங் கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே
திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே” (புறம்.109:6-8)

என்ற வரிகளில் அறியலாம்.

தனிமைத் துயர்

பாசறையில் தனித்து இருக்கும் தலைவன் தலைவியுடன் கூடிமகிழ முடியாத நிலையில் போர் வினைவயிற் பிரிந்ததை நற்.341. விளக்குகிறது. மேலும்,“குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை” நற்.341:5-6. எனும் வரிகளில் பாசறையில் தங்கியிருக்கும் தலைவன் கண்ணெதிரே ஓர் குன்றின்கண் குறமகள் ஒருத்தியும், அவள் காதலனுடன் மகிழ்ந்திருப்பது கண்டு தன் தனிமைக்கு வருந்துகிறான். இந்தப் பின்னணி தலைவனுக்குத் தலைவியின்மேல் கொண்ட அன்பை மேலும் கூட்டுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இங்குக் காதலர் மகிழ்ச்சியாக உள்ளனர். யாமோ கொடிய பகைவரோடு போரிடுவதற்குப் பாசறையில் தனிமையில் இருக்கின்றோம் என்பதனை உணர்த்துகிறது.

தலைவன் பாசறையினும், தலைவி ஊரினுமாகப் பிரிந்திருத்தலைப் “புருவடைந் திருந்த அருமுனை இயலில், சீறூரேனே ஒண்ணுதல் யாமே….. …… புனைதார் வேந்தன் பாசறையேமே”(அகம்.84:9-14), (அகம்.264:10-15)எனும் வரிகளில் அறியலாம்.

காதலர் புணர்ந்து மகிழ்தலைக் கண்டு கூறலை,“ நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் தேனிமிர் காவற் புணர்ந்ததிருந்தாகுமார் ஆனா விருப்போடு அணியயர்ப” (கலி.92:65-67) எனும் வரிகள் உணர்த்துகிறது.

இல்லற மகிழ்ச்சி

 தலைவியின் நலம் கருதிய தலைவன் நன்மை புரிவான் என அவனுக்குக் கேட்குமாறு, தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

“நிலவரை நிவந்தபலஉறு திருமணி
ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி
களிறுபுறங் காப்பக் கன்றொடு வதியும்” (நற்.399:5-7)

எனும் வரிகளில் பன்றிகள் நிலத்தைப் பறிக்கும்பொழுது அழகிய மணிகள் நிலத்திலிருந்து வெளியேவந்து ஒளிவீசி நிற்கிறது. இத்தகைய ஒளியில் இளைய பெண் யானை கன்றை ஈன்றது. அப்பெண் யானையின் பக்கத்தில் ஆண் யானை காவல் காத்து நிற்கிறது. இந்த பின்னணியானது, தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நிகழ்த்துகையில், அவன் இல்லறத்தில் புதல்வரை ஈன்ற தலைவி, தன் காதலன் தன்னைப் பாதுகாக்குமாறு மக்களுடன் மகிழ்ந்து இருப்பாள் என்பதனை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

களிறு பிடியைக் காத்திருத்தலை,

“பொறிநுதற் பொலிந்த வயக் களிற்று ஒறுத்தல்
இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்” (அகம்.78:4-6)

எனும் வரிகள் விளக்குகிறது.

எடுத்துரைப்பில் இன்றியாமையாது இடம்பெறும் இந்தப் பின்புலம் பற்றிய விவரிப்பு சங்க இலக்கியப் பனுவல் பலவற்றிலும் மிகமுக்கிய இடம் வகிக்கின்றது.

முதற்பொருள், கருப்பொருள் என்கிற இரண்டுமே இந்தப் பின்புலத்தை வடிவமைக்கின்றன. அதோடு பனுவல் அரங்கேறும் நாடக அரங்காக இந்தப் பின்புலங்கள் பயன்படுகின்றன.

எடுத்துரைப்பியல் என்ற கோட்பாட்டின் வழியாக இலக்கியத்தின்மீது விசாலமான பார்வையைச் செலுத்த முடியும். பின்புலத்தை விவரிப்பதன் மூலம் இயற்கைச் சூழலோடு இணைந்த வாழ்க்கையை அறியமுடிகின்றது.

துணை நூல்கள்

பெ.மாதையன் –  அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேன்ஸ், சென்னை,2009.
கே. பழனிவேலு- கூற்றுக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும், அகரம் ,தஞ்சாவூர்,2011.
கு.வெ. பாலசுப்பிரமணியன் (உ.ஆ) – நற்றிணை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2004.
க.பஞ்சாங்கம் – நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், காவ்யா, சென்னை,2003.

*****

கட்டுரையாசிரியர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம். 636011.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *