நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 2
-மேகலா இராமமூர்த்தி
செல்வம் ஓரிடத்தில் நில்லாது சகடக்கால்போல் உருண்டு சென்றுவிடுவது போலவே மனிதரின் இளமையும் யாக்கையும் (உடம்பு) நிலையாத்தன்மை உடையன.
நாம் என்றும் பதினாறாக இளமையோடிருத்தல் சாத்தியமா? இல்லையே! எனவே இளமையையும் அதுதரும் அழகையும் எண்ணி இறுமாப்படைதல் எத்துணைப் பேதைமை!
கொடிய பலிக்களத்திலே தெய்வமேறி ஆடுகின்ற வேலன் கையில் விளங்குகின்ற தளிர்களோடு கூடிய மலர்மாலையைக் கண்ட ஆடு, இன்னும் சிறிது நேரத்தில் தாம் பலியாகப் போகிறோம் என்பதை அறியாது தழையுணவைக் கண்டு அடையும் நிலையில்லா அற்ப மகிழ்ச்சி அறிவுடையாரிடத்துத் தோன்றுவதில்லை என்கிறது நாலடியார் பாடலொன்று!
வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல். (நாலடி – 16)
எனவே நிலையில்லா இளமையை நிலைத்தது என்றெண்ணிக் காமுறுவதும் கழிபேரின்பம் கொள்வதும் மடமை என்பதே இப்பாடல் நமக்குணர்த்தும் நுண்பொருள்.
நில்லாதவற்றை நிலையின என்றுணர்வதைப் புல்லறிவாண்மை என்று வள்ளுவமும் வசைபாடுவதை இங்கே ஒப்புநோக்கலாம்.
ஆண்களினும் பெண்களின் அழகே வையத்தால் விதந்தோதப்படுவது. பெண்ணின் அவயவங்களில் தனித்த அழகும் கவர்ச்சியும் உடையவை அவர்தம் கண்கள். அதனால்தான் அற்றைப் புலவர்முதல் இற்றைக் கவிஞர் வரை பெண்ணின் கண்களை மானென்றும் மீனென்றும் அம்பென்றும் வேலென்றும் குவளையென்றும் தாமரையென்றும் சலியாது வருணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
”குவளையன்ன ஏந்தெழில் மழைக் கண்” என்று பரணரும்,
”காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று” (1114) வள்ளுவரும் பெண்ணைப் போற்றி எழுதிய காதற் கவிதைகள் மறக்கவொண்ணாதவை.
எனினும் இந்த வனப்பும் வடிவழகும் நிலைத்துநில்லா இயல்புடையவை. ஆதலால் ஆடவரே! பெண்ணையும் அவள் கண்ணையும் வியந்துகொண்டிருப்பதில் காலத்தைக் கொன்னே கழியாது நன்னெறிக்கண் படர்மின் என்று எச்சரிக்கின்றது நாலடியார்.
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து. (நாலடி – 17)
குளிர்ந்த சோலையிலுள்ள பயன்தரு மரங்களெல்லாம் கனிகள் உதிர்ந்து வீழும் தன்மையை ஒத்தது மனிதரின் இளமைப்பருவம். இப்போது இளையளாய் இருக்கும் இவளும் கூனடைந்து, ஊன்றுகோலையே தன் கண்ணாய்க் கொண்டு நடக்கும் காலமும் வரும். ஆதலால் வேல்போன்ற கண்ணையுடையே பெண்ணே என்று இவளை விரும்பிச் செல்லவேண்டாம் என்று தடுத்து நல்லறிவு கொளுத்தும் பாடலிது.
இப்போது குளிர்ச்சியாகவும், கனிபோல் சுவைதருவதாகவும் இருக்கும் இளமை, நெடுநாள் நீடியாது அழியும் தன்மைத்து என்பதை இப்பாடல்வழி நாம் உய்த்துணரவேண்டும்.
இளமை நெடுங்காலம் நீடியாது அழியும் தன்மையுடையது என்பது ஒருபுறமிருக்க, மரணமும்கூட ஒருவனுக்கு இளமையில் வருமா முதுமையில் வருமா என்பதுவும் முன்கூட்டியே கணித்துச் சொல்ல முடியாதது. கோலையே கண்ணாகக் கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் முதியோர் பலர் உயிரோடிக்க, வாலைப் பருவத்தோர் உயிரைக் கூற்றுவன் இரக்கமின்றிக் கவர்ந்துசெல்லும் அவலத்தையும் நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்?
ஆதலால், ”இப்போது நாம் இளமைப்பருவத்தில்தானே இருக்கிறோம் அறச்செயல்களை பின்னர் செய்துகொள்ளலாம்” என்று கருதாமல் கையில் பொருள் இருக்கும்போதே அறச்செயல்களைச் செய்துவிட வேண்டும். ஏனெனில், பழுத்திருந்த கனிகளேயல்லாமல், கோடைக்காற்றினால் வலிமை பொருந்திய நல்ல காய்களும் மரத்திலிருந்து வீழ்ந்துவிடுதல் உண்டு என்கிறது இந்தப் பாடல்.
மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு. (நாலடி – 19)
இப்பாடலில் முற்றியிருந்த கனி என்பது முதியோரையும் நற்காய் என்பது வலிமைசெறிந்த இளையோரையும் குறிக்கும் உவமைகளாய்ப் பயின்றுவந்துள்ளன.
புல்லின் நுனியில் நிற்கும் நீரானது நொடிப்போதில் ஆவியாகி மறைந்துபோவதைப்போல், ”இப்போதுத்தான் இங்கே நின்றான்; இருந்தான்; படுத்தான்; தன் சுற்றத்தார் அலற இறந்துபோய்விட்டானே…!” என்று கழிவிரக்கம் கொள்ளும்படி மிகவிரைவாய் அழிந்துபோகக்கூடியது இந்த மானுட யாக்கை! ஆகவே மாநிலத்தீரே! மறைந்துபோவதற்குமுன் நற்காரியங்களை ஆற்றுங்கள் விரைந்து! என்று நம்மைத் துரிதப்படுத்துகின்றது இந்த நாலடியார் பாடல்.
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால். (நாலடி – 29)
மனிதர்கள், யாரையும் கேளாமல், ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சுற்றத்தாராய்ப் பிறக்கிறார்கள். பின்பு, கூடு மரத்திலேயே சும்மாக் கிடக்கப் பறவைகள் நெடுந்தொலைவு பறந்துவிடுவதைப்போல் அவர்களும் தம் உடம்பை உறவினரிடம் விட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமலே இறந்துபோய் விடுகின்றார்கள். இதுதான் மனித வாழ்க்கை என்று நிலையில்லா மனித வாழ்வின் இயல்பை எளிமையாய் விளக்குகின்றது நாலடியார்.
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. (நாலடி – 30)
கூடு தனியே கிடக்கப் புள் பறந்துசெல்வதைப் போன்றது உயிருக்கும் உடம்புக்கும் உள்ள நட்பு என்று திருக்குறளும் இதே கருத்தைப் பேசுகின்றது.
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (338)
புல்லின்மேல் நீர்த்துளியாய், நீரின்மேல் குமிழியாய் விரைந்தழியும் இயல்புகொண்ட மானிட வாழ்வில், நாளை நாளை என்று ஒத்திப்போடாமல் அறச்செயல்களை, இன்றே அதுவும் இன்னே செய்துமுடித்தலே அறிவுடையார்க்கு இன்பம் பயப்பது என்பதையே நயத்தகு வழிகளில் நவின்று செல்கின்றது நாலடியார்.
[தொடரும்]
*****
துணைநூல்கள்:
நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்