நிர்மலா ராகவன்

வசப்படுத்தும் இசை

இசையே சிம்ரன் (அதாவது, தியானம்!)

இசையை ரசிப்பவர்கள் ஒருவித தியான நிலைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். இவர்களால் பாடகர்களுக்கும் உற்சாகம் வரும்.

கதை

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் ராமநவமி உற்சவத்தை ஒட்டி, இலவச இசைக்கச்சேரிகள் நடக்கும் — நாற்பது நாட்களுக்குமேல். பிரபல வித்வான்கள் கலந்துகொள்வார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பித்து, சிலர் அடுத்த நாள் காலைவரைகூடப் பாடியிருக்கிறார்கள்.

`கடைசி பஸ் போயிடும்,’ என்று அம்மா கவலைப்பட, `பரவாயில்லே. நடந்தே போகலாம்,’ என்று நான் சமாதானப்படுத்துவேன். சுமார் மூன்று மைல் வீட்டுக்கு நடப்போம். எங்களைப்போல் பலரும் கூட நடப்பார்கள்.

`இங்கிருக்கும் ரசிகர்களைப்போல் வேறு எங்கும் கண்டதில்லை! அவர்களுக்காகப் பாடுவதே சுகம்!’ என்று மகிழ்ந்து பாராட்டுவார்கள் சங்கீத வித்வான்கள். அவர்களுக்குச் சன்மானம் கிடையாது. இருந்தாலும், வருடந்தவறாது வந்து, உற்சாகமாகப் பாடுவார்கள்.

சங்கீதம் என்பது ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும், காசுக்காக மட்டுமே அல்ல என்பதற்கு இன்னொரு கதை.

அடுத்த நாள் கல்யாணம். வீடே பரபரப்பாக இருந்தது. முதல்நாள் மாப்பிள்ளை வீட்டார், “இன்றிரவு பாட்டுக்கச்சேரி இருக்கவேண்டும். இல்லாவிட்டால், கல்யாணம் நடக்காது!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்கள். பெண்ணின் தந்தை மிரண்டுபோய்விட்டார். கடைசி நிமிஷத்தில் சங்கீத வித்வான் ஒருவரை எங்குபோய் தேடுவது?

அப்போது யாரோ, “அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி செய்ய நம் ஊருக்கு வந்திருக்கிறார்,” என்று தெரிவித்தார்கள்.

தந்தை பாடகரிடம் போய் நடந்ததைச் சொல்லி, கலங்கியிருக்கிறார். அபயகரம் அளித்த ஐயங்கார் அன்று மாலை கல்யாண வீட்டில் நீண்ட கச்சேரி செய்தாராம்.

ஆனந்தமும் நன்றியும் பெருக, “ஏதோ, என்னால் முடிந்தது!” என்று பெண்ணின் தந்தை நூறு ரூபாயைத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க, பிரபல சங்கீத வித்வான் ஒரு ரூபாயைத் தன் சன்மானமாக எடுத்துக்கொண்டு, “உங்கள் பெண்ணுக்கு ஏதாவது நகை வாங்கிப்போடுங்கள்!” என்றுவிட்டார்.

கர்னாடக இசையில், ஸ்ருதி மாதா, லயம் பிதா என்பார்கள்.

ஸ்ருதியா, என்ன அது?

பொதுவாக குழந்தைகளுக்கும், சிறு பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுவரை ஆண்பிள்ளைகளுக்கும் குரல் கீச்சுமூச்சென்று இருக்கிறதல்லவா? அவர்களுக்கு `மேல் ஸ்ருதி’ என்கிறோம். வயதாக ஆக, பெண்களின் குரல் கட்டையாகிவிடுகிறது. (ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்களுக்கான ஹார்மோன் குறைவால்). அதனால் ஸ்ருதி இறங்கிவிடக்கூடும்.

ஸ்ருதியைக் குறிக்க எண்களைப் பயன்படுத்துகிறோம். ஐந்து கட்டை என்பது பெண்களுக்கு சாதாரணமாக அமைவது. மூன்று கட்டை ஸ்ருதி என்றால் கீழ் ஸ்ருதி. ஆண்களுக்கு ஒரு கட்டைகூட உண்டு.

லயம்

லயம் என்பது தொடையில் கையால் அடித்துப்போடும் தாளத்தைக் குறிக்கிறது. இது கணக்கைச் சேர்ந்தது. ஆகையால், இசை கற்கும் இளவயதினர் கணக்கில் நல்ல தேர்ச்சி பெறமுடியும். பொதுவாகவே, இசை வல்லுனர்கள் கணக்கிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிருதங்கம், கடம், கஞ்சிரா போன்ற தாளவாத்தியங்கள் வாசிப்பவர்கள் கணக்கில் புலியாக இருக்கவேண்டும். எந்த வாத்தியமாக இருந்தாலும், வாசிப்பவர்களின் கண்ணும், கையும் ஒருங்கே வேலைசெய்யும்.

வெறும் பொழுதுபோக்கல்ல

ரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது கர்னாடக இசை. பாடும்போது, முதலில் மூச்சை நன்கு உள்ளே இழுத்துக்கொண்டு, வெளியே விடும்போது குரல் ஒலிக்கவேண்டும். இதனால் மன இறுக்கம் குறைந்து, அமைதியாகும்.

ஆசிரியர் ஒரு பாட்டைக் கற்பிக்கையில், மாணவி கூர்ந்து கவனிக்கவேண்டும் அல்லவா? இத்தகைய கவனிப்பு பிற துறைகளிலும் பரவு, அறிவுத்திறன் விருத்தியடைகிறது. வேண்டாத யோசனைகள் வராது.

பாடுபவர்களுக்கு மட்டுமல்லாது, ரசிப்பவர்களுக்கும் இசை நல்ல பயனைத் தருகிறது. `என்ன ராகம்?’ என்று தெரிந்த பாடல்களுடன் ஒப்பிட்டு, சரியாகக் கண்டுபிடிப்பது ஞாபகசக்தியை வளர்க்கிறது. பாட்டை ரசித்துக் கேட்பவர்களை முதுமை அண்டாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பொழுதுக்கேற்ற ராகங்கள்

கர்னாடக இசையில், ஒரு தினத்தின் வெவ்வேறு வேளைகளுக்கேற்ற ராகங்கள் உள்ளன. (உதாரணம்: அதிகாலையில், கோயிலில் திருப்பள்ளியெழுச்சிக்கு இசைக்கப்படும் ராகம் பூபாளம். உறங்கவைக்க நீலாம்பரி). சில ராகங்கள் எப்போதும் பாடக்கூடியவை.

நவரசங்களைக் குறிக்கும் ராகங்களும் உள்ளன. (`ப்ரோசேவாரெவருரா’ என்று சங்கராபரணம் படத்தில் வரும் பாடல் கமாஸ் ராகத்தில் அமைந்தது. சிருங்காரத்திற்கு இந்த ராகம் ஏற்றது).

கற்பனைத்திறன்

குருவிடம் சில பாடல்களைக் கற்று, அப்படியே திரும்பப் பாடுவதோடு நின்றுவிடுவதில்லை கர்னாடக இசை.

ஒரு பாடலுக்குமுன், `ததரின்ன..’ என ராக ஆலாபனை செய்கிறார்களே! குறிப்பிட்ட ராகத்தை இசைப்பவர் தன் மனோதர்மத்துக்கு ஏற்ப அதைப் பாடவேண்டும். (சில பாக்கியசாலிகள் எந்த குருவிடமும் கற்காது, கேள்வி ஞானத்தைக்கொண்டே இதைச் செய்வார்கள்). பாடலின் நடுவே ஓரிரு வரிகளை குறிப்பிட்ட காலப்பிரமாணத்திற்குள் வித விதமாக மாற்றிப் பாடுவது `நிரவல்’. அதன்பின், கற்பனை ஸ்வரம். இது ஒருவரின் ராக, தாள ஞானத்தை வெளிப்படுத்துவது.

`ஞானம்’ என்பது இயற்கையிலேயேயே அமைந்திருப்பது. இதை வலுக்கட்டாயமாக ஒருவருள் புகுத்த முடியாது.

ஸ்ருதி சுத்தமாக ரசித்துப் பாடுவதும், இன்ன ராகம் என்று கண்டுபிடிப்பதும் ஞானத்தைப் பொறுத்தது. வயது, குரல் வளம், ஆர்வம் ஆகியவற்றிற்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஞானம் ஒரு வரம். எல்லாருக்கும் அமைவதில்லை.

மிருகங்களுக்கு இயற்கையிலேயே இசை ஞானம் அமைந்திருக்கிறது. எல்லாப் பூனைகளும் நாம் பாடும்போது அசையாது செவிமடுக்கும். வேறு சில, ஸ்ருதி தவறாமல், நாம் பாடும் ஸ்வரத்தை, நம்மையே பிரமிக்கவைக்கும் வகையில், திரும்பப் பாடும். வாலால் தாளம் போடும் பூனைகளும் உண்டு! அத்தருணங்களில் அவைகளுடன் விளையாட இன்னொரு பூனை வந்தால்கூட கவனம் கலையாது, இசையை ரசிக்கும். இது எங்கள் வீட்டில் வளர்ந்த, வளரும், பூனைகள் எனக்குக் கற்பித்த பாடம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர் அல்லாதவர்களும் கர்னாடக இசையை ரசித்துக் கேட்கிறார்கள். இந்தியர்களுக்கோ, நம் கலாசாரத்தை விடாமல் இருக்கவேண்டும் என்ற முனைப்பு. “We are more Indian in America than in India!” என்றாள் ஒரு மங்கை, மகிழ்ச்சியுடன். அங்கு பல குழந்தைகள், வீட்டில் ஆங்கிலத்தில் பேசினாலும், தேவாரம் பயில்கிறார்கள், கர்னாடக இசை கற்கிறார்கள்.

இசைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாடல்கள்மூலம் இதிகாச புராணக்கதைகளைக் கற்க முடிகிறது. இதனால் மொழிவளம் கூடும். (முறையான உச்சரிப்புக்குச் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்).

செய்யக்கூடாதது

சிறு குழந்தைகள் இயல்பாக, நிமிர்ந்து உட்கார்ந்து, தலை அசங்காது பாடுவார்கள். இதுதான் சரியான முறை. அதைவிட்டு, பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்குமே என்று தலையையும், கையையும் மிகையாக ஆட்டியபடி பாடுவதால் சக்திதான் விரயமாகிறது.

பாடும்போது தொண்டையைக் கனைத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் குரல் வள நிபுணர்கள். அதற்குப் பதிலாக, அவ்வப்போது ஒரு தேக்கரண்டி நீர் குடித்தால் குரல் வறளாது. மூச்சுப்பயிற்சி நன்மை பயக்கும்.

பக்தியுடன், வார்த்தைகளின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டு பாடினால்தான் பாட்டில் பாவம் இருக்கும். கேட்பவருக்கு ராகமோ, பாட்டின் அர்த்தமோ புரியாவிட்டால்கூட, அப்படி ஒருவர் பாடுவதுதான் மனதைத் தொடும். பாடகரின் குரல்வளம் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது.

சமீபத்தில், ஒரு பத்து வயதுச்சிறுமி மிக நன்றாகப் பாடியதைப் பாராட்டினேன். “என் ஆசிரியை எப்போதும் என்னைத் திருத்துவார்!” என்றாள்.

தான் அதிபுத்திசாலி என்று கர்வம் கொள்ளாது, அல்லது, `ஓயாமல் தப்பு கண்டுபிடிக்கிறாரே!’ என்று ஆசிரியைமேல் கோபம் கொள்ளாது பேசிய அச்சிறுமியின் அடக்கம் எனக்கு வியப்பை அளித்தது. அகங்காரம் இருந்தால், எந்தக் கலையும் நம்மை விட்டுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *