மொரீசியசில் தமிழரும் வாழ்வும் 

0

முனைவர் த. மகாலெட்சுமி

முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை – 113

 

            தொல் பழங்காலத்தில் குமரிக்கண்டத்தில் தோன்றிய மனிதன் உலகமெல்லாம் பரவினான் என்பது வரலாற்றாசிரியர் பலரின் கருத்து. இவ்வாறு இருக்கையில் மிக அண்மைக்காலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர் புலம்பெயர் நிகழ்வு ஏற்பட்டது. அத்தகைய நாடுகளில் மொரீசியசும் ஒன்று. மொரீசியசு தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இங்கு தமிழுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழ்மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், கலை பண்பாட்டு சூழ்நிலைகள் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். எனவே மொரீசியசு நாட்டில் தமிழரும் வாழ்வும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

மொரீசியசு அறிமுகம்

             ‘மொரீசியசு’ என்னும் பெயர் மொரீசியசு தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்சு, அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டுள்ளது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்சு, மொரீசியசு தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அகலேகா, மொரீசியசின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச்சிறிய தீவு. இது மொரீசியசு தீவின் தென் மேற்கே 400 கி.மீ தொலைவில் இருக்கிறது. மொரீசியசு ஒரு விவசாய நாடாகும். இந்நாட்டின் தேசிய வரவு செலவு திட்டம் முக்கியமான விளைபொருள்களான கரும்பையும், தேயிலையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.

            மொரீசியசு ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய தீவுக்கு 370 ஆண்டுகாலம் தொடர்ச்சியான குடியேற்ற வரலாறு காணப்படுகிறது. டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் இத்தீவை ஆண்டுள்ளனர். மொரீசியஸ் நாடு 1968ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றுள்ளது. இந்நாடு பல்வேறு இனங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களடங்கிய ஒருபன்மைச் சமுதாய நாடு எனலாம். வரலாற்றுக் காலந்தொட்டு மொரீசியசிலே பிறந்த மொரீசியர்களோடு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இங்கு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பியர்கள், இந்தியர்கள், கிரியோல்கள், சீனர்கள், ஆப்ரிக்க அடிமைகள் எனப் பிரிக்கலாம். 1983ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 88 சமயங்களைச் சேர்ந்தவர்களும் 66 மொழிகளைப் பேசுகின்றவர்களும் உள்ளனர். (எஸ்.ராஜாராம்.1991, ப.307)

கிரியோல் மக்கள்

 ‘கிரியோல்’ என்பது ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர், ஐரோப்பிய வம்சாவழியினரோடு கலந்ததால் உருவான கலப்பின மொரீசியசு மக்களைக் குறிக்கிறது. பிரெஞ்சு இலக்கண அமைப்பு உடையதும் பெரும்பாலான ஆப்ரிக்க மொழிச் சொற்களையுமுடைய ‘மொரீசியன் கிரியோல்’ என்னும் கலப்பு மொழியே இவர்களது தாய்மொழியாகும்.

தமிழர் குடிபெயர்வுகள்

            தமிழர்கள் பழங்காலத்திலிருந்து வணிகத்தின் பொருட்டும், 18,19ஆம் நூற்றாண்டுகளில் பிரஞ்சு, போர்ச்சுகீசிய, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் தோட்ட வேலைகளுக்குக் கூலி தொழிலாளர்களாகவும் கொண்டு செல்லப்பட்டவர்கள் குடியேற்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். அவைபோன்ற குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்றுதான் மொரீசியசு தீவாகும்.

            தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தவுடன் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், ஆர்க்காட்டு நவாப்பு போன்றோர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிறுவ தென்தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையப்பட்டுக்காரர்களுடன் ஓயாத போரினைச் செய்து வந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும், அதனைச் சார்ந்த விவசாய தொழிலாளர்களுமே எனலாம் . நாட்டில் தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக் கொடுமை, கிராமப்புறங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வட்டிக் கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கொத்தடிமைத்தனம், அடிமை முறை போன்றவற்றைத் தாங்கமுடியாமல், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் நாடு விட்டு வெளியேறி குடியேறலாயினர். ‘தமிழ்நாட்டில் நிலவிய வறுமை, கொத்தடிமை, சமூக நெருக்கடி போன்ற நிலவரங்களாலும், முகவர்களின் கவர்ச்சியான வார்த்தைகளாலும் வெளிநாடு சென்று பிழைப்பதற்கு இவர்கள் முற்பட்டனர்.’ (முரசு நெடுமாறன். 1997, ப.55)

மொரீசியசில் தமிழர் குடியேறியமை

  1. முதலாவது காலகட்டம் : மொரீசியசின் கட்டட பணிகளுக்கும் பிற கைவினை தொழில்நுட்ப வேலைக்காகவும் கைவினைத் திறன் கொண்ட தமிழர்களைக் குடியேற்றியமை.
  2. இரண்டாவது காலகட்டம் : ஒப்பந்தக் கூலி முறையில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்களைக் குடியேற்றியமை.
  3. மூன்றாவது காலகட்டம் : ஒப்பந்தக் கூலி முறையோ அல்லது வேறெந்த நிபந்தனையோ இன்றி வணிகத்தின் பொருட்டுத் தமிழர்கள் குடியேறியமை.
  4. மொரீசியசின் ஆளுனராகப் பெநுவா தூய்மா என்பவர் 1728ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தவர். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1735ஆம் ஆண்டு மயே தெ லபோர் தொன்னே புதுச்சேரியிலிருந்து கப்பல் கட்டுவதற்காகவும் கட்டடங்கள் கட்டுவதற்காகவும் தமிழர்களை அழைத்துச் சென்றார். இத்தமிழர்கள் போர்ட்லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஆப்ரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. இவர்கள் கெளரவமாக நடத்தப்பட்டுள்ளனர்.

 மொரீசியசு என்னும் பிரான்ஸ் தீவை ஒரு நாடாக உருவாக்கியவர் லபோர் தொன்னே என்பராவார். இவரது உயரிய பணிகளுக்கு உதவியாக நின்றவர்கள் தமிழர்கள். “இத்தமிழர்கள் கைவினைத் திறனும் சிறந்த தொழில் நுட்பமும் உடையவர்கள் என்றும் மொரீசியஸ் வளர்ச்சியில் இவர்களது பங்கு கணிசமானது” என்று வரலாற்றாய்வாளர் முனிந்திரநாத் வர்மா குறிப்பிடுகிறார். லபோர் தொன்னேயின் நண்பரும், ‘பாலுவும் வர்ஜினியாவும்’ என்ற காதல் காவியத்தின் ஆசிரியருமான பெர்னார்தென் தென் சென் பியே “புதுச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் சாதுவானவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருந்தனர்” என்று குறிப்பிடுகிறார். பல தமிழர்கள் இக்காலத்தில் அலுவலங்களில் பணிபுரிந்ததை நபால் குறிப்பிடுகிறார்.

            பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாக இருந்தது. கிழக்குப் பகுதியில் ‘மலபாரிகள்’ என்றழைக்கப்பட்ட தமிழர்களும் பிற தென்னிந்தியரும் வாழ்ந்தனர். இப்பகுதியை பிரஞ்சுக்காரர்கள் ‘மலபாரிகள் முகாம்’ (Camp des Malabars) என்றழைத்தனர். 1810ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் இருவர் பக்கமும் நின்று தமிழர்கள் போராடியுள்ளனர். ஆங்கிலேயர் தம் படைக்கு ‘உச்சமுடி’ என்ற தமிழரைத் தளபதியாக்க எண்ணி இருந்ததை அறிய முடிகிறது. 1829 முதல் 1830 வரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகம் வாயிலாக மொரீசியசில் குடியேற ஃபர்குவார் என்ற ஆங்கிலேயர் ஏற்பாடு செய்தார். 1833ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு மொரீசியசில் அமுலாக்கப்பட்டது.

  1. புலம்பெயரும் தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றமானது 1835ஆம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றது என்பர். 1843ஆம் ஆண்டு மட்டும் 14,634 பேர் குடியேறினர். 1845 முதல் 49 வரை சென்னைத் துறைமுகம் வாயிலாக குடிபெயர்வு நடைபெறவில்லை. 1843இல் இருந்து 52 வரை 30,334 பேர் குடிபெயர்ந்ததாக அறிகிறோம். குடிபெயர்ந்த தமிழர்களில் பறையரும், வன்னியரும் அதிகமிருந்தனர் என்று பினியோ குறிப்பிடுகிறார். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். முகவர்கள் (Agents) குடியேறுபவர்களுக்கு ஆசைகாட்டி அழைத்து வந்து ஏமாற்றியதை உணர ஆரம்பித்து, அதன் விளைவாக பிற்காலத்தில் பல்வேறு தொழில்களும் செய்பவர்களாக இவர்கள் மாறினர். தோட்டத்தில் இவர்கள் பட்டபாட்டை ‘கரும்புத் தோட்டத்தில்’ என்ற பாரதியின் பாடல்கள் மூலம் உணரலாம். “……அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! -துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? -அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர்”  என்கிறார்.

தனிநாயகம் அடிகளார் அவர்கள் “1810ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மொரீசியசு தீவைக் கைப்பற்றியதும் மொரீசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப் பத்திரம் சவரிமுத்து, சின்னத்தம்பி, துரைச்சாமி என்று பலர் தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியேறினர். மொரீசியஸ் தீவில் தமிழ் மக்கள் தம்முடைய பண்டைய நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு இழந்து விட்டனர் என்றே கூறவேண்டும்” என்கிறார்.

  1. மொரீசியசு நாட்டின் தலைநகரான போர்ட் லூயியின் மத்திய சந்தையிலேயே ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிபம் செய்து வந்துள்ளனர். இச்சந்தை 1845இல் திறக்கப்பட்டுள்ளது. 1853இல் காப்ரீசி என்ற கப்பலிலும், 1854இல் ஆஸ்திரேலியா என்ற கப்பலிலும் 1855இல் ஆர்லிகென் என்ற கப்பலிலும் தமிழ் வணிகர்கள் மொரீசியஸ் வந்தனர். 1862-66 ஆம் ஆண்டுக்குள் 749 வணிகர்கள் வந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. சிறந்த வணிகர்களாக இராம சூரியமூர்த்தி குறிப்பிடுபவர்கள் : எம். கைலாசம் பிள்ளை நல்லசாமி மருதை படையாச்சி, ஏ. சிவராமன், பரிமணம், ஜி.பொன்னுசாமி, டி.வேலாயுதம் பிள்ளை முதலியோர். 1860ஆம் ஆண்டு மொரீசியசிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த போது, பல்வேறு தமிழ் வணிகர்களும் குடிபெயர்ந்துள்ளனர் அவர்களில் ஏ.எஸ்.அய்யாசாமி, ஏ.ஆர்.நல்லதம்பி, எம்.பொன்னுசாமி, ஆறுமுகம் செட்டி அண்ட் கோ, வையாபுரி செட்டி கம்பெனி, ஐ.வேலாயுதன் அண்ட் கோ, இருளப் பிள்ளை அண்ட் கோ ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கும், புதுச்சேரி, ரீயூனியன், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்றனர் என்னும் செய்திகள் வெளிப்படுகின்றன.

 

 

கரும்புத் தோட்டத்தில் தமிழர்

இங்கு கரும்பு முக்கியப் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. இங்கு வேலைசெய்ய கூலிகளாக அமர்த்தப்பட்டனர். அங்கு உண்மை உழைப்பைக் கொடுத்து விளைச்சல் பெருக உதவினர். இங்கு வேலை செய்த தமிழர்கள் பல்வேறு சவால்கள், துன்பங்களுக்கிடையே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். தனது மொழி, சமயம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத சூழல் இருந்தது.

மொரிசீயசு விடுதலையும், மொழிக்கொள்கையும்

            ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 1968 –ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. இங்கு பல்வேறு இனத்தினர் வாழ்வதற்கேற்ப பல்வகை மொழிகள் வழங்கும் நிலையே இருக்கிறது.  தொன்றுதொட்டு இம்மண்ணிலேயே வாழுகின்ற மக்களோடு உலகில் பல பாகங்களிருந்து வந்துள்ள மக்களும் கலந்துள்ளனர். அவர்கள் இந்தியர், ஐரோப்பியர், ஆப்பிரிக்கர், சீனர்கள் ஆகிய இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

            இங்குள்ள மக்களின் தொடர்புமொழி ‘கிரியோல்’ என்பதாகும். இம்மொழியானது தகுநிலை பெறாமொழி (Non Standard Language) என்பதால் ஆட்சிமொழியாகத் தகுதிபெறவில்லை. எனினும் மக்களின் பேச்சுமொழியாகவும் பல்வகை இனமக்களின் தொடர்பு மொழியாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், பிரெஞ்சுமொழி பண்பாட்டு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இத்துடன் மூதாதையர் மொழி என்றும் தற்போது பேசப்பட்டுவரும் மொழிகள் என்றும் சொல்லப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்ட மொழிகள் இந்தி, குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் சீனம் ஆகும்.

தமிழ்க்கல்வியின் தோற்றம் வளர்ச்சி

            மொரீசியசு நாட்டில் தமிழர்களின் புலப்பெயர்ச்சி 1735ஆம் ஆண்டு தொடங்கியது. காலப்போக்கில் அங்குள்ள குடிமக்களாகவே மாறினர். அங்கேயே சமூக அமைப்பு ஏற்பட்டு விட்டதால் தமிழ்க்கல்வி, சமயம், பண்பாடு, கலை முதலியவற்றை வளர்த்துக்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. தங்களின் மொழி, சமயம், பண்பாடு, கலை பொன்றவற்றை எதிர்காலச் சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனை உதித்தது. ஆனால் தாய்மொழிப் பள்ளிகள் அமைத்துத்தரவோ பண்பாடு சமய நிகழ்ச்சிகள் நடத்தவோ ஆங்கிலேய அரசு முன்வரவில்லை. இந்நிலையில் தாய்மொழிப்பற்றும், பாரம்பரிய உணர்வும் கொண்டோர் தன்னார்வ முறையில் தன்னுடைய மொழியையும், சமயத்தையும் காக்கத் தொடங்கினர்.

            தன்னார்வம் கொண்டத் தமிழர்கள் திட்டங்களை வகுத்துத் திண்ணைப் பள்ளிகளை ஏற்படுத்தினர். இத்திண்ணைப்பள்ளிகள் மாலை வேளையில் நடத்தப்பட்டன. இங்கு தமிழ், கணிதம் ஆகிய பாடங்களோடு கூத்து, நாடகம், பாட்டு முதலிய கலைப்பாடங்களும், சமயம் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்பட்டன. இந்நிலை 1850ஆம் ஆண்டுக்குப் பிறகு மாறுபட்டு, அரசாங்கமே தமிழ்க்கல்வி மீது கவனம் கொண்டது. அதன் பயனாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு 1864ஆம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்ட கல்வித்திட்டம் உருவானது.  இதில் தமிழ், இந்தி, மராத்தி, உருது மொழிகள் கற்பிக்கப்பட்டன. எனினும் இத்திட்டம் முழுமை பெறவில்லை எனலாம்.

            வணிகத்தின் பொருட்டு 1900ஆம் ஆண்டுகளில் குடியேறிய தமிழர்கள் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கு நிதியளித்து ஊக்கமளித்தனர். 1970ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கு தமிழிலக்கியத்தில் புலமை கொண்டோர் வகுப்புகள் நடத்தினர்.

            நாட்டில் 1948இல் நடைபெற்ற தேர்தல் இந்தியக் குடியேறிகளின் பலத்தை நிரூபிப்பதாக அமைந்தது. இவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படத் தொடங்கியது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த அரசாங்கம் இந்திய மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்தி மொழியோடு தமிழ் மொழிக்கும் உரிய இடம் வழங்கினர். தமிழ்க்கல்விக்கென முழுநேரப் பள்ளிகள் நிறுவப்பட்டு, அங்கு தமிழாசிரியர்களைப் பணியில் அமர்த்தினர். மேலும் தமிழ்ச்சங்கங்கள், இயக்கங்கள், கோயில்கள் முதலிய இடங்களில் மாலைநேர வகுப்புகள் நடைபெற்றன. இதனால் தமிழ்க்கல்வி வலுப்பெற ஆரம்பித்தது. தமிழைப் பயிற்றுவிக்க அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படலாயினர்.

            நாடு 1968இல் விடுதலை அடைந்ததும் இந்திய மொழி கல்விக் கலைத்திட்டத்தில் முக்கிய இடம் பெற்றது. ஆரம்பப்பள்ளி முதல் தமிழ் வகுப்புகள் நடைபெற உறுதியான வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க தமிழகத்தின் உதவி பெறப்பட்டது. அதற்கு வழிவகை செய்தவர்களில் திரு. தங்கணமுத்து அவர்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. மொரீசியசில் குடியேறிய இந்தியர்களின் இந்தியர்களின் மொழி, பண்பாடு, கலை, இலக்கிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டி இந்திய அரசு அங்கு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியது. அதன் பெயர் மகாத்மா காந்தி நிறுவனம் (MGT) என்பதாகும். இந்த நிறுவனத்தில் இந்திய மொழிகள் மையம் உருவாக்கப்பட்டது. இம்மையத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, உருது, சமஸ்கிருதம், சீனம் முதலிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. இதனால் மொழிவளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரித்தன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மொரீசியசில் 7ஆவது உலகத்தமிழ் மாநாடு சிறப்புற நடைபெற்றமை தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாக அமைந்தது.

நாணயத்தாள்களில் தமிழும் எண்களும்

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம்பெற்றுள்ளன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்கள் எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியது எனலாம்.  (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் சான்றாக ரூ.10 தமிழில் ௧௦ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மொரீசியசு, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிறப்பாக மொரீசியசு நாட்டு நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆத்திரேலிய அரசு தமிழ் மொழியைத் தேசிய மொழியாக அறிவித்துள்ளது. இச்செயல் கடல்கடந்த நிலையில் தமிழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது.

உணவு முறைகள்

சமையலில் தமிழர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறு பொருள்களுக்கும், தமிழ்ப் பெயர்களே இங்கு வழங்கப்படுகின்றன.  இந்நாட்டில் ‘விரதச் சாப்பாடு’ சிறப்பானது. புலால் உணவை விரும்பும் இந்நாட்டு தமிழ் மக்கள் விரதச் சாப்பாட்டில் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள். சோறுடன் சாம்பார், ரசம், பலவகைக்காய்கறிகள், பச்சடி, அப்பளம், வடை, பாயாசம் அனைத்தும் வாழை இலையில் வைத்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலான விரதங்களில் இச்சாப்பாடு அல்லது சைவ பிரியாணி சமைக்கப்படும். சமையல் தொடர்பான அனைத்து சொற்களும் அதே பெயரில் இன்றும் வழக்கத்தில் இருப்பது சுட்டத்தக்கது எனலாம். மேலும் இங்கு தமிழ்ச்சமையலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஆடை-அணிகலன்கள்

அங்கு அன்றாட வாழ்வில் பெண்கள் கவுனிலும், ஆண்கள் பேண்ட், மேல்சட்டையுடனும் உலா வருகின்றனர். மகளிர் கும்மி, கோலாட்டம் ஆடும்போது கால்பாதம் வரை பாவாடை, மேல் சாக்கெட், தாவணி போன்றவற்றை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காதில் தோடு, ஜிமிக்கி, மாட்டல், நெற்றிச் சுட்டி, நீண்ட பின்னல் அதில் குஞ்சம், மூக்குத்தி கை நிறைய வளையல்  முதலியவற்றை அணிந்து தலைநிறையப் பூச்சூடி மகிழ்கிறார்கள். ஆனால் அப்பூவானது காதிதப்பூவாகும். திருமணத்தன்று ஒட்டியாணம் முதல் காசுமாலை வரை அவள் அணியாத அணிகலன்களே இல்லை எனலாம். மணக்கோலத்திற்காக மணமகள் பட்டுப்புடவை கட்டுகிறாள். மணமகன் பட்டுவேட்டி, சட்டை, துண்டு அணிகின்றனர்.

குடும்ப உறவு முறைகள்

தமிழர்கள் “கிரியோல் மொழி” பேசினாலும் கூட உறவுப் பெயர்களைக் கையாளும்போது  தமிழிலேயே அழைத்து மகிழ்கின்றனர். சிற்றப்பா, அண்ணன், மாமாவை மட்டும் சற்றே மாற்றி ‘மாமே’ என்றும் மற்றும் அத்தான், அத்தை, அப்பாயி, அம்மாயி, பாட்டி, தாத்தா என்றும் அழைக்கின்றனர். மொத்தத்தில் தமிழக மக்களின் உறவுமுறைப் பழக்கவழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர்.

பழக்கவழக்கங்கள்

            ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் முப்பது நாட்கள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். அதாவது இங்கு பிறப்பு, இறப்பு தீட்டுச்சடங்கு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காது குத்தும் சடங்கு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. திருமணத்தில் நிச்சயம் செய்தல், மஞ்சள் பூசுதல் (நலுங்கு வைத்தல், பரிசம் போடுதல், தாரை வார்த்தல், கன்னி காதானம் செய்து கொடுத்தல், மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுதல், சீர்வரிசை வைத்தல், பாதபூசை செய்தல், நாத்தனார் மிஞ்சி அணிவித்தல், மாலை மாற்றுதல் போன்ற அனைத்துச் சடங்குகளும் தமிழ் மரபை அப்படியே காத்து வருகின்றனர். இறப்பின் போது கோடி போடுதல், எட்டுப் படைத்தல், கருமாதி வைத்தல், சோறு ஆக்கிப் போடுதல், மகன் மொட்டை அடித்தல் (கொல்லி வைத்தல்) போன்றவை அனைத்தையும்  மொரீசியசு தமிழ்ச் சமூகத்தினர் கடைப்பிடித்து வருவது சிறப்பிற்குரியது.

வழங்கும்  பெயர்கள்

            கருப்பன், சங்கிலி, சுப்பையா, சந்நியாசி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. வெள்ளிவீதி, நம்பி, நக்கீரன், மங்கையற்கரசி, கண்ணகி, மணிமேகலை, மாதவி, மீனாட்சி, சிவகாமி போன்ற பெயர்கள் வழக்கில் இருந்து வருவதைக் காணமுடிகிறது. இங்கு மொழித்திரிபுடைய பெயர்களும் வைக்கப்படுகின்றன. இதற்குச் சான்றாக முருகன்-மூர்கன், முத்தையா-மூச்சியா, வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் எனப்படும் நல்ல தமிழ்ப் பெயர்களும் பிரஞ்சு மொழித்தொடர்பினால் திரிந்தும் வழங்கப்பட்டு வருவதைக் கூறலாம்.

தமிழர் சமய முறைகள்

மொரீசியசு நாட்டில் இந்து மதத்தின் கோயில்கள் சுமார் 125  இருக்கின்றன. இங்கு சிவன், முருகன், மாரியம்மன், விநாயகர், கிருஷ்ணன், துர்க்கை, வீரமாகாளி, இராமன்,  முனீஸ்வரர், மதுரைவீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களை வணங்கி வருகின்றனர். தலைநகரத்திலுள்ள சொக்கலிங்கம் – மீனாட்சியம்மன் கோயில் மிகப்பெரியது. தைப்பூசத்தில் காவடி எடுப்பது வழக்கில் இருக்கிறது. இங்கு தைபூசமே மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பொது விடுமுறை நாளாகும். கொடியேற்றம் தொடங்கி, விரதம் எடுத்து, காவடி எடுப்பார்கள். முருகனுக்குப் பூக்காவடி, இளநீர்க்காவடி, பால்காவடிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவடியோடு மாவிளக்கு, பால்குடம் எடுப்போரும் உள்ளனர். பெண்கள் மஞ்சள் ஆடையும், ஆண்கள் காவிநிற ஆடையும் அணிகின்றனர். பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் அலகு குத்திக் கொள்கின்றனர். இதனை மக்கள் ‘நாக்குக் குத்துதல்’ என்று அழைக்கின்றனர்.

மாரியம்மன் கோயில்களில் ‘தீ மிதித்தல்’ என்னும் திருவிழா பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது. திரௌபதையம்மனுக்கும் தீமிதி திருவிழா நடத்துகின்றனர்.  அம்மனைப் பாடி, நோன்பிருந்து விழா நடத்துவார்கள். தாலாட்டு, அரிச்சுவடி பாடி, கும்மி கோலாட்டம் அடித்து கரகாட்டம் ஆடிக்களிப்பார்களாம்.  அம்மன் கோயில்களில் தீமிதி, கஞ்சி, கத்தி பூசை முதலிய சடங்குகள் செய்யப்படுகின்றன. மற்றொரு முக்கிய விழா கோவிந்தன் விழாவாகும். (புரட்டாசி விரதம்) புரட்டாசித் திங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழர்கள் விரதமிருப்பதுண்டு. ஆடித்திங்களில் 18ஆம் நாளன்று திருமணம் ஆன மகளிர் தங்கள் தாலிக்கயிற்றைப் புதுப்பித்துக் கொள்ளும் விழா நடைபெறுகிறது. இங்கு தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தெய்வாலயங்களுக்குத் தமிழர்கள் அனைவரும் செல்கின்றனர். சிறப்பு பூசையுடன் முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காமண்டி (காமன்பண்டிகை) கதையாட்ட மாடி, இலாவணிபாடி, பொங்கல் கொண்டாடுகின்றனர். தீபாவளி, சிவன்ராத்திரி ஆகிய திருவிழாக்களையும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இக்கட்டுரையில், தரணியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்துவிரிந்து வாழும் தமிழர்கள் புலம்பெயர்வால் ஏற்பட்ட கடினமான சூழலிலும் தனது மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றினைப் போற்றிப் பாதுகாக்கத் தவறவில்லை என்பது மொரீசியசு தமிழர்களின் வாழ்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களால் புலம்பெயர் படைப்புக்கள் (Diaspora Literature) உருவாகியுள்ளன. அவை கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை – பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாச்சார செயற்பாடுகள் என்பன முக்கியமானவையாக உள்ளன. எனவே இதன் வாயிலாக உலகில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழ்மக்களின்  பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது நன்கு விளங்கும்.

 

துணைநூற்கள்

  1. இராசாராம்.சு, (1991) மொரீசியஸ் தமிழரும் தமிழும். தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  2. இராமசாமி.பி, (1997) மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும், செம்பருத்திப் பதிப்பகம், கோலாலம்பூர்.
  3. Ponsamy Tiromalachetty (2007) Tamils in Mauritirus. Language culture and Identity. Artile in tamil language souvenir Magazine.
  4. Danalutchmee cheman (2007) Evolution of Tamil culture in Mauritirus. Article in Tamil language souvenir Magazine.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *