வாழ்ந்து பார்க்கலாமே 21
க. பாலசுப்பிரமணியன்
சிந்தனைகளும் திறன்களும்
சிந்தனைகள் வேண்டும். வளமான சிந்தனைகள் வேண்டும். பலன் தரக்கூடிய சிந்தனைகள் வேண்டும். ஆனால் வெறும் சிந்தனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
சிந்தனைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தரலாம்
சிந்தனைகள் தெறியாத கேள்விகளுக்குப் பதில்கள் தரலாம்.
சிந்தனைகள் புதிய கருத்துக்களுக்கு உரமாக அமையலாம்
சிந்தனைகள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு உதவி செய்யலாம்
சிந்தனைகள், சில நேரங்களில், ஒரு மனிதனின் உள்ளுணர்வுகளுக்கும் காயங்களுக்கும் மருந்தாக அமையலாம்
சிந்தனைகள் அறிவை வளர்க்கின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் வெறும் சிந்தைகளின் உலகத்தில் தங்களைத் தொலைத்துவிட்ட சிலர் அறிவுஜீவிகளாக மாறி நடைமுறை உலகத்திலிருந்து விலகி நிற்கின்றனர்.
சிந்தனைகள் பல நேரங்களில் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. சிந்தனைகள் பல நேரங்களில் வளர்ச்சிக்கு வித்தாக அமைகின்றன.சமூக முன்னேற்றங்களிலும் வாழ்வியல் ஆதாரங்களை மாற்றி அமைப்பதற்கும் சிந்தனைகள் வழி வகுக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சிந்தனைகளே முன்னோடிகள்.
ஆனால் எல்லாச் சிந்தனைகளும் பயனுள்ளதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் அமைவதில்லை. எனவே ஒரு தனி மனிதனுக்குத் தன் சிந்தனைகளின் பாதைகளை அறிந்து வழிப்படுத்தி இலக்குகள் நோக்கிச் செயல்படுத்துக்கொடிய திறன் தேவைப்படுகின்றது.
சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் என்ன உறவு? கற்பனைகள் இலக்கற்ற சிந்தனைகள். அவைகள் கனவுகளாகவும் இருக்கலாம். நிறைவேறாத ஆசைகள் மற்றும் உணர்வுகளின் விழித்தெழுந்த வழிப்பயன்களாக இருக்கலாம். ஆயினும் கற்பனைகளும்
சிந்தனைகளே. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு உளவியல் மேதை கூறுகின்றார் “கற்பனைகளனைத்தும் சிந்தனைகளே. ஆனால் சிந்தனைகள் அனைத்தும் கற்பனைகள் அல்ல.”
வளரும் பருவத்தில் பொதுவாகக் கற்பனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் உள்ள தூரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. அது மட்டுமல்ல, கற்பனைகளை ஆக்க பூர்வமான சிந்தனைகளாக எண்ணித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுபவர்கள் சிலர் உண்டு. கனவுகளும் கற்பனைகளும் வாழ்க்கைக்கு மிக்க அவசியம். ஆனால் அவற்றின் பரிமாணங்களையும் அவற்றின் ஆக்கத்தையும் சாத்தியக்கூறுகளையும் அலசிப் பார்த்து அவைகளை வளர்ச்சிப் பாதைக்கு எவ்வாறு துணையாகக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கற்பனைகளாக இருந்தாலும் சரி, சிந்தனைகளாக இருந்தாலும் சரி அவைகளைத் திறன்களாக மாற்றாதவரை அவைகளுக்கு உயிரோட்டம் கிடைப்பதில்லை. எனவே சிந்திக்காத தெரிந்த அனைவரும் தங்கள் சிந்தனைகளின் வடிவங்களை திறன்களாக வளர்க்கவும் மாற்றவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
திறன்கள் சிந்தனைகளின் நடைப்பயணத்தை வலுவுள்ளதாகவும் வளமுள்ளதாகவும் ஆக்குகின்றன. வாழ்க்கையின் வெற்றிக்கு நேர்த்தியான வளமான திறன்கள் தேவை. “உங்களுடைய திறன்கள் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள். அவைகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பது நீங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய பரிசு.” என்பது மேலை நாட்டுப் பழமொழி
திறன்கள் தாமாக நமக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு மட்டும் அவர்கள் மூதாதையர்களின் வழிவந்த மரபணுக்களின் தாக்கத்தில் சில திறன்களுக்கான வித்துக்கள் உள்ளுணர்வில் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. பொதுவாகத் திறன்களை நாம்தான் தேடி வளர்த்துக்கொள்ள வேண்டும். பட்டப்படிப்புக்களும் பாராட்டுக்களும் நமக்குத் திறன்களை வாரி வழங்குவதில்லை. திறன்களாலே தான் நாமக்குப் பாராட்டுக்களும் பெருமையும் கிடைக்கின்றன.
திறன்களை எப்படி வளர்த்துக்கொள்ளுவது?
- முதலில் நம்முடைய ஆர்வங்கள் எந்தத் துறையில் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
- அத்தகைய ஆர்வங்களின் வளர்ச்சிப்பாதையில் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
- அந்த வாய்ப்புக்களை அடைவதற்கான திறன்களும் அறிவாற்றல்களும் எப்படிப் பெற முடியும் என்பதைத் தேடி அறிய வேண்டும்.
- அந்தத் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகள் எங்கே எப்படிக் கிடைக்கும் என்பதை அறிய வேண்டும்.
- அந்தத் திறன்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தங்களால் செய்ய முடியுமா அல்லது அதை அடைவதில் உள்ள தடங்கல்களை வென்று சாதனையாளராக முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
திறன்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மிகவே பயனுள்ளதாக இருக்கும். திறன்களில்லாத சிந்தனை திசைதெரியாத கப்பல் பயணம் போன்றது.
ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.
ஒரு கப்பல் ஒரு துறைமுகத்தில் பயணத்திற்குத் தயாராக உள்ளது. அதனுடைய கேப்டன் அதை இயக்க முயற்சிக்கின்றார். ஆனால் அந்தக் கப்பல் இயங்கவில்லை. பல பொறியாளர்கள் வந்து அதைச் சோதனை செய்து காரணத்தைக் கண்டுபிடிக்க முயலுகின்றனர். அவர்களால் முடியவில்லை. அந்தநேரத்தில் அங்குள்ள உள்ளூர்வாசி அந்தக் கேப்டனிடம் உள்ளூரில் ஒரு பழுதுபார்க்கும் தொழிலாளி இருப்பதாகவும் அவர் வயதானவராக இருந்தாலும் திறமை உள்ளவர் என்றும் கூறுகின்றார். உடனே அந்தத் தொழிலாளி அங்கே அழைக்கப்படுகின்றார்.
அந்த வயதான தொழிலாளி அந்தக் கப்பலை ஒரு முறை வலம்வந்து பார்த்துவிட்டு ஒரு மூலைக்குச் சென்று அங்குள்ள ஒரு இயந்திரத்தை மெல்லத் தட்டுகின்றார். பின் அந்தக் கேப்டனிடம் “இப்பொழுது கப்பலை இயக்குங்கள் ” என்று கூற அந்தக் கப்பல் முயன்றவுடன் இயங்க ஆரம்பித்து விடுகின்றது.
தன்னுடைய வேலைக்கான கூலியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்க அந்தக் கேப்டனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
“நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தட்டியதற்க்கா ஆயிரம் டாலர்கள் கேட்கின்றீர்கள்?”
“இல்லை. நான் தட்டியதற்கான கூலி இரண்டு டாலர்கள்தான். ஆனால் எங்கே தட்ட வேண்டும் என்று கண்டுபிடித்தற்கான கூலி 998 டாலர்கள்.’
திறன்கள் மலிவானவை அல்ல. திறன்களின் மதிப்புக்களை வெறும் பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது..
ஒரு பாடகருக்கு என்ன பணம் கிடைத்தாலும் அது அவர் பலருக்கு கொடுத்த மகிழ்வுக்கும் நிறைவுக்கு ஈடு அல்ல.
ஒரு சிற்பியின் கலையை பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது.
ஒரு மருத்துவரின் நேர்மையான தொழிலையும் திறனையும் பணத்தால் ஈடு செய்ய இயலாது.
ஒரு ஆசிரியரின் வாழ்க்கைப் பயணத்தில் வளர்ச்சி அடைந்தவர்களின் சரித்திரங்கள் அவருடைய சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது.
திறன்கள் ஒரு மனிதனின் ஆன்மாவின் அறைகூவல்.. அதை உணர்ந்து நம்முடைய திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாமே !
தொடருவோம்