Year: 2020

  • ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    நிர்மலா ராகவன்

    பழகத் தெரிய வேணும் – 24

    “முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால், உலகத்தில் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிடும்,” என்று அபிப்ராயப்படுகிறார் ஒரு புத்திசாலி.

    ஒரு துணுக்கு

    மாணவன்: நான் அரசியல்வாதியாகப் போகிறேன்.

    ஆசிரியர்: பின்னே ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வருகிறாய்?

    ஓயாமல் பேசும் ஒரு பெண்ணைக் கேட்டேன், “ஏன் இப்படிப் பேசிண்டே இருக்கே?”

    “அப்போதான் மூளை வளரும்!”

    அறிவார்த்தமாகப் பேசுவதும், முப்பது வயதாகியும், தன் குரலைக் கேட்பதே ஆனந்தம் என்பதுபோல் அர்த்தமில்லாமல் பேசுவதும் ஒன்றாகிவிடுமா?

    பலர் கூடியிருக்கும் இடத்தில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள். பிறர் சொல்வதைச் சரியாகக்கூடக் காதில் வாங்காவிட்டாலும், ஒன்று சேர்வதாலேயே பலம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் இவர்கள்.

    “உலகில் அதிகமாகக் காணப்படுவது ஹைட்ரஜனும் முட்டாள்களும்தான்,” என்று சொல்லி வைத்திருப்பது இதற்காகத்தானோ?

    தம்மைப்போல் இல்லாதவர்கள் முட்டாள் என்று நம்புகிறவர்கள் ஆபத்தானவர்கள்.

    எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்த ஆசிரியை நோரய்னியின் கதையைக் கேட்போமா?

    தினம் தவறாது, ஏதோ ஒருவித மலாய் கேக் வாங்கிவந்து, பிற ஆசிரியைகளுக்கு விநியோகம் செய்வாள்.

    ‘இவளுக்கு எதற்காக நன்றிக்கடன் படவேண்டும்!’ என்று நான்மட்டும் வாங்க மறுத்துவிடுவேன்.

    தன் தாராள சிந்தனையையும், பிறரிடம் தனக்கு எவ்வளவு அன்பு என்றும் காட்டிக்கொள்ள வேண்டுமாம்!

    அவள் திட்டம் பலித்தது. மற்றவர்கள் எல்லாரும் அவளை உயர்ந்த இடத்தில் வைத்து, அவளுக்குக் கட்டுப்பட்டார்கள்.

    போகப் போக, அவள் குணம் புரிந்தது.

    யாராவது அவள் கூறிய கருத்தை ஏற்காவிட்டால் அவர்களுடன் பேச மறுத்து, முறுக்கிக்கொள்வாள். தான் சொல்வது தவறு என்று தெரிந்தும், அதை ஏற்க மறுப்பாள்.

    வீண்விவாதம் செய்வது இவளைப் போன்றவர்களுக்குப் பிடித்த வேலை. (உண்மையைவிட அதிகமாகத் தன்னை நேசிப்பதாலோ?)

    என்னிடம் முறையிட்டாள் ஒருத்தி.

    “நீங்கள்தான் அவளைப் புரிந்துகொள்ளாது, ஒரேயடியாகக் அவளைக் கொண்டாடினீர்கள்!” என்று சுட்டிக்காட்டினேன்.

    நோரய்னியின் பெயருக்குப்பின் தந்தையின் பெயர் ‘வெள்ளை’ என்று மலாயில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவளுடைய தந்தை ஜப்பானியர் என்று என்னிடம் கூறியிருந்தாள்.

    ஆச்சரியப்பட்டு, “இந்நாட்டில் மலாய்ப்பெண்கள் ஜப்பானியரை மணந்தார்களா?” என்று மூத்த சரித்திர ஆசிரியை ஒருத்தியிடம் ரகசியமாகக் கேட்டேன்.

    “இல்லை. ஆசைநாயகியாகத்தான் இருந்தார்கள்!” என்ற பதில் கிடைத்தது.

    முறை தவறிப் பிறந்திருக்கிறோமே என்ற வருத்தமோ என்னவோ நோரய்னிக்கு.

    ‘சக ஆசிரியைகளின் மகிழ்ச்சியை எப்படிக் குலைப்பது?’ என்று யோசனை போக, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாள்.

    பள்ளியில் அடிக்கடி மாறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியையும் வலியப்போய் நட்புகொள்வாள். அப்போதுதானே பிறரைப்பற்றிய வம்பு மேலதிகாரிக்குப் போகும்?

    ஒரு முறை, நான் ஏதோ பேசும்போது, அவள் பக்கம் கண்ணைக் காட்டினார்கள், ‘பத்திரம்!’ என்று எச்சரிக்கை செய்வதுபோல்.

    நான் உரக்கவே, “கிடக்கிறாள்! பயந்தாங்கொள்ளி!” என்று அலட்சியமாகக் கூற, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நோரய்னி குறுகிப்போனாள்.

    அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். வயதானால் அழகு குறையலாம், ஆனால் முட்டாள்தனம் என்னவோ மாறுவதில்லை.

    நோரய்னி முட்டாளா, தீயகுணம் படைத்தவளா, பரிதாபத்துக்கு உரியவளா?

    எல்லாரும், எப்போதும் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உண்மையான அன்பைத் தேடத் தெரியாத முட்டாள்.

    தன்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளும் அறிவற்றவள்.

    புறம் பேசி, பிறரைப் பிரச்னையில் மாட்டிவிட்டபோதோ..!

    முட்டாள்தனமும் மூடநம்பிக்கைகளும்

    ‘ராகு காலத்தில் விமானம் புறப்படுகிறது. கண்டிப்பாக, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்!’ என்று எண்ணிக் கலங்கியபடியே பயணிக்கிறார் ஒருவர்.

    அவர் போகுமிடத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறது விமானம். கெட்டது நடக்கும் என்று எதிர்பார்த்து, அவர் கொண்ட கலக்கம்தான் அவர் எதிர்பார்த்த விளைவு.

    கருமை நிறம்

    கருமை நிறம்கொண்டு பிறந்துவிட்ட மனிதர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதில்லை. கறுப்புப் பூனைகளும்தான்.

    கடந்த பதின்மூன்று வருடங்களில், ஆறு கறுப்புப் பூனைக்குட்டிகளை யார் யாரோ கொண்டு வந்து எங்கள் வீட்டருகே விட்டிருக்கிறார்கள். நாங்கள் அவைகளை அன்புடன் பராமரிக்க, எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வளையவரும்.

    சின்னா என்ற பெண்பூனை என் மடியில் உட்காரும், நான் சொன்னதைக் கேட்கும். நான் பேசுவதிலிருந்து தானும் கொஞ்சம் பேசக் கற்றுவிட்டது.

    சற்றுப் பெரிதாகி, சறுக்கி விழுந்துவிட்டதால், “மடியில ஒக்கார்றியா?” என்று நான் கேட்டபோது, “ஏனாம் (வேண்டாம்)” என்று முனகியது.

    அன்பும் கட்டுப்பாடும்

    கதை

    ராகினி படிப்பில் சோடையில்லை. அது போதாதா? பதினாறு வயதான தன்னை ஏன் இன்னும் கட்டுப்படுத்துகிறாள் தாய் என்ற ஆத்திரம் எழுந்தது அவளுக்குள்.

    பள்ளித்தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, ‘சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடந்தாள்.

    இருபது வயதானபோது, டிஸ்கோவிற்குப் போவது, மது அருந்துவது, ஆண்களுடன் தகாத முறையில் பழகுவது என்று அவளுடைய சுதந்திரப்போக்கு விரிந்தது. இதையெல்லாம் விதவைத் தாய் கடுமையாகக் கண்டிக்க, வீட்டைவிட்டு வெளியேறினாள்.

    அவளுடைய பள்ளித்தோழி, ஈ லெங், வேலை நிமித்தம் தனியாக கோலாலம்பூரிலேயே தங்க நேரிட்டது. (அவளுடைய பெற்றோர் வேறு ஊரில் இருந்தார்கள்).

    இத்தோழியுடன் தங்கி, இருவருக்கும் சேர்த்துச் சமைக்கையில், சுதந்திரமாக உணர்ந்தாள் ராகினி.

    பல வருடங்களுக்குப்பின், அவளுடைய மகளுக்கும் பதின்ம வயதானபோதுதான் அவளுக்குத் தன் தாய் காட்டிய கண்டிப்பின் காரணம் தெளிவாகியது. தான் இப்போது மகளின் பாதுகாப்புக்காக கவலைப்படுவதுபோல்தானே அன்று அம்மாவும் கவலைப்பட்டிருப்பாள்!

    ‘முட்டாள்தனமாக, வயதான அம்மாவைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, எங்கோ போய் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேனே!’ என்று மிகவும் வருந்தினாள்.

    ஆனால், அவளது மன்னிப்பை ஏற்க அம்மா உயிருடன் இல்லை. கடைசிவரை, மகளுடன் வந்து தங்க விரும்பாது, தனியாகவே வாழ்ந்தாள்.

    பலருக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிவதில்லை.

    கதை

    படிப்பில் அக்கறையே காட்டாது இருந்த ஒரு மாணவனிடம், “நீ படிக்காவிட்டால் நல்ல வேலை கிடைக்காதே! பணத்துக்கு என்ன செய்வாய்?” என்று நான் கேட்டபோது, “அப்பா கொடுப்பார்!” என்றான்.

    “உனக்குக் கல்யாணமாகி, குடும்பம் பெருகிவிட்டால்?”

    “அப்போதும் அப்பா கொடுப்பார்”.

    இந்த இருவரில் யார் முட்டாள்? அப்பாவா, மகனா?

    மகன் எந்தக் காலத்திலாவது தன் சொந்தக்காலில் நின்றாகவேண்டும் என்று புரிந்துகொள்ள விரும்பாது, அவன் தன்னையே சார்ந்திருக்கும்படி செய்யும் அப்பாதான்.

    சுயநலமான சுதந்திரம்

    ஃப்ளூ காய்ச்சல் பரவாதிருக்க எல்லாரும் முகமூடி அணியவேண்டும் என்ற அதிகாரபூர்வமான ஆணை பிறந்தது. இன்றல்ல. 1918-ல்! ஸான் ஃபிரான்சிஸ்கோவில்.

    ‘எங்களுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ என்று 4,500 பேர் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

    தங்களுடன் பிறரையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறோம் என்று புரிந்து நடக்காதவர்களை என்னவென்று சொல்ல!

    தற்போது, இப்படிப்பட்ட ரகளையெல்லாம் இல்லை. மனிதர்கள் புத்திசாலியாகிவிட்டார்களோ?

    Share
  • சிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்

    சிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்

    முனைவர் என்.அருணாச்சலம்,
    கல்வி உளவியலாளர்,
    அழகப்பா பல்கலைக்கழகம்,
    காரைக்குடி

    “மரணம்… வாழ்வின் முக்கிய அம்சம்”. மரணம்​—வளர்ச்சியின் கடைசி கட்டம் என்ற ஆங்கில புத்தகம், மரணம் இயல்பானது, அனைத்து உயிரினங்களின் இயற்கையான முடிவே மரணம் என்கிறது. இறப்பு என்பது உயிரினங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நின்று விடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இறப்பு என்பது அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும்.

    ஒரு உயிரி தானாகவே தன் மரணத்தைத் தேடிக்கொண்டால், அது மரணம் என்றாலும்  அது இயற்கையின் நியதிக்கு மாறாக இருப்பதால் அதைத்  தற்கொலை அல்லது சுயமரணம் என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO, 2020), உலகில் கிட்டத்தட்ட எட்டு லட்சம்  பேர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலையால் இறப்பதாகக் குறிப்பிடுகின்றது. உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும் குறிப்பாக 45 வயதுக்குக் குறைவானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்

    தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலை நடைபெறுகிறது. உலக அளவில் பெண்கள் தற்கொலை செய்வதில் இந்தியா மூன்றாம் இடத்தில்  உள்ளது. சர்வதேச சுகாதார அமைப்பின் ஆய்வின்படி இந்தியாவில் ஒவ்வொரு  லட்சம் மக்களுக்கும், 16 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழகத்திலும் மகாராஷ்டிர மாநிலத்திலும்தான் இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைச் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (2020) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய நகரங்களைப் பொறுத்தவரையில் தற்கொலை மிக அதிகமாக  நடைபெறும் நகரம், டெல்லி. அதைத்  தொடர்ந்து  சென்னை, இரண்டாம் இடத்தில் உள்ளது.

    தற்கொலைக்குக்  குடும்பப் பிரச்சினைகளே முதன்மையான காரணமாகவும்,  உடல்நலக் குறைவு இரண்டாவதாகவும்,  திருமணம், போதைப் பழக்கம், மதுப் பழக்கம், காதல் மற்றும் இதர உறவு முறைகளும் தற்கொலைக்குப் பிரதானமான காரணமாகவும்,  வேலையின்மை, வறுமை எனப் பல காரணங்களாலும்  தற்கொலை நடப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்கொலை செய்துகொள்வோருள்    மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவே உள்ளது.

    இந்தியாவிலேயே குடும்பமாகத் தற்கொலை செய்துகொள்வது தமிழ்நாட்டில்தான் அதிகம் நடக்கிறது என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும், மேலும் தினக்கூலிகளே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்வதும் (Suicidal Idiotic)  இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. தமிழக அளவில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரியில்  தற்கொலை மரணம் அதிகம் நடைபெறுகிறது. குமரியில் தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும் பகுதியினர், நன்கு படித்தவர்களாக இருக்கிறார்கள் (2019).

    தற்கொலைக்கான காரணங்கள் உற்று நோக்கப்பட வேண்டியவை. ஆனால், பொதுவெளியில் விவாதிக்கப்படாத விஷயமாகவே இன்று வரை இது நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்கொலை ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போலத்  தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்குக் காரணமாகிறது. உலகளாவிய ரீதியில் மரணத்திற்குக் காரணமாக விளங்கும் 10ஆவது முக்கியக் காரணியாகத் தற்கொலை கருதப்படுகிறது.

    ஒரு மனிதன் தன் வாழ்க்கை நிகழ்வில் ஏற்படும் எதிர்மறை (negative) விளைவுகளால் உண்டாகும் பாரங்கள் கூடுதல் சுமைகளாய் மாறும்பொழுது அவன் அதை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுக்கும் வழி,  சுய உள்நோக்குடன் கூடிய மரணம்.  தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் அறிந்தே தன்னைத்தானே மரணம் அடையச் செய்துகொள்ளும் செயலாகும். தற்கொலை முயற்சியில் ஒரு முறை ஈடுபட்ட ஒருவர், எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கோள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

    இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ஏன் பாரம் உண்டாகிறது? பாரம் ஏன் கூடுதல் சுமையாகிறது?

    ஒரே விடை…. உணர்ச்சிவயப்படல் (Emotions)….. உங்களின் சிந்தனைகள் (Thoughts). இவையே தற்கொலைக்கு அடிப்படைக் காரணம். அப்படி என்றால் சிந்தனை தவறா? சிந்தனை தவறில்லை, சிந்திப்பதால் (Thinking) உண்டாகும் சுய உரையாடலின் (self talk) மூலம் வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் தூண்டும் காரணியாகச் செயல்பட்டு தற்கொலையை நிகழ்த்தி விடுகின்றன. சுய உரையாடல் எனபதே நமது நிஜம். இது நம்மைத் தவிர வேறு யாரும் அறிந்தோ, உணர்ந்தோ கொள்ள இயலாது. சுய உரையாடல் நம் உள் மனத்தில் நடைபெறுகிறது. நாம் நமக்குள் பேசிக்கொள்வதே சுய உரையாடல் ஆகும்.

    இந்தச் சுய உரையாடல் நிகழும் நம் ஆழ்மனச் (subconscious) சிந்தனைச்  செயல் முறையில் (thinking process) பல்வேறு காரணங்களால் குறிப்பாக, குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், பயம், தோல்வி,   கடுமையான நோய், போதைப் பழக்கம், ஏமாற்றம், விரக்தி, மன நோய், பொருளாதாரச் சிக்கல், தீராத பிரச்சனைகள் போன்றவை பல்வேறு எதிர்மறை  எண்ணங்களை  (negative thoughts)  உருவாக்கும்  போது, மன அழுத்தம் (stress), மனச் சோர்வு (depression) மனப்பித்து (schizophrenia),  இருமுனையப் பிறழ்வு (bipolar disorder), ஆளுமைச் சிதைவு (personality disorder) இன்னும் மன நோய் சார்ந்த விளைவுகள் உண்டாகின்றன. இவையே தற்கொலைக்கு மூல காரணிகளாகச் செயல்படுகின்றன.

    இதற்கு என்ன தீர்வு?

    1.நம் சுய சிந்தனைகள் அதிக நேராக்க உணர்வுடன (Positive) இருக்க பழக்கிக்கொள்ள வேண்டும்.

    2. நம் சுய சிந்தனைகள் நேராக்க உணர்வுடன் இருந்தாலும் அதில் எதிர்மறைச் சிந்தனைகளை முற்றிலும் தவிர்க்காமல் அவற்றைப் பிரதிபலிக்கவிட்டு பின் கட்டுப்படுத்திக்கொள்ளும் வலிமையைத் தர கூடிய சிந்தனைகளை எண்ண வேண்டும்

    3. நம் கனவுகளும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் யதர்த்தமானவையாக இருக்க வேண்டும்

    4.நமக்குள் நடக்கும் சுய உரையாடல்களில்   உணர்வுகளை விலக்கி வைத்துவிட்டு யதார்த்தம் சார்ந்தவையாய் இருக்க வேண்டும்.

    5. இலக்குகளை (target) நம் பலம் (strength) மற்றும் பலவீனம் (weakness) சார்ந்து நிர்ணயம் செய்ய வேண்டும்.

    6. ஆசை (desire) மற்றும் கனவுகளை நிஜங்களோடு ஒப்பிடும்படி மறுசீர் ஆய்வு செய்து, அதை மாற்றியோ அல்லது மறந்து விடவோ வேண்டும்.

    7. பழக்கங்கள் (Habits) எதுவும் நம்மை அடிமை கொள்ளவிடாமல் இருக்க வேண்டும்.

    8. மன பாரங்களைச் சேர விடாமல் அவற்றைக் கொட்டிவிட வேண்டும் (ventilate).

    9. விரக்தி, ஏமாற்றம், இயலாமை வரும் பொழுது அவை தற்காலிகம் என்கிற மாற்றுச் சிந்தனை (alternative thought) கொள்ள வேண்டும்

    10. முடிவெடுத்தலின் பொது ஒரே முடிவை மட்டும் நிர்ணயம் செய்துகொள்ளாமல் மாற்று வழிகளையும் ஆராய்ந்து, தேவைக்கு ஏற்ப மாற்றி வாழ்வியல் யாதார்த்தத்தில் கிடைக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    11. எதுவும் முடிவல்ல, இன்னும் மாற்று வழி உள்ளது அதன் மூலம் நம் இலக்கை அடையலாம் என்கிற கோட்பாடைத் தரும் எண்ணங்களைச் சிந்திக்கச் வேண்டும்.

    12. நம்பிக்கைகள் வேறுபட்டாலும், மகிழ்ச்சி, குடும்பம், சமூகம், உறவுகள் என்கிற அடிப்படைக் கட்டமைப்புகளில் சூழல் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் சிந்தனைகளைச் சற்றே மாற்றிக்கொள்ளச் சொல்லப்படும் தீர்வுகள் ஆகும்.

    ஆகவே, உங்களை மீறி உங்களின் சுய மரணம்  நிச்சயம் நடக்கப் போவதில்லை. உங்களின் சாதனைக்கும்  வேதனைக்கும் உங்கள் சிந்தனைகளே அடிப்படைக் காரணங்கள். உங்கள் குடும்பம், உறவுகள், நட்புகள், சமூகம் எல்லாம் உங்களைக் கைவிட்டு விலகிச் சென்றாலும் உங்களின் சிந்தனை உங்களைக் கைவிடாது. அதுவே உங்களைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி உயர்த்தும்.

    உங்கள் எண்ணங்களே நீங்கள்! தற்கொலை ஒரு தீர்வு அல்ல!!

    Share
  • செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்!

    செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்!

    ஔவை நடராசன்  

    தமிழியக்கமாகவே வாழ்ந்த தனிப்பெரும் கவியரசர் புரட்சிப் பாவேந்தரின் மரபுக் கொடியை உயர்த்திப் பிடித்த அண்ணல் கவியரசர் மன்னர் மன்னன் மறைந்தார் என்ற செய்தி, மனத்துயரை ஆறுதல் கொள்ள முடியாமல் எரிதணலாக நெஞ்சையும் உடலையும் எரித்துக் கொண்டிருக்கிறது.

    பாவேந்தருடைய படைப்புகளை நாட்டுடைமையாக்க கருதிய நாளில், நான் அரசு செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  முத்தமிழ் கலைஞர் மனம் பதற்றத்தோடு உடனே நாட்டுடைமை தொகையை மன்னர் மன்னனிடம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

    பாவேந்தர் குடும்பம் என்பது, தமிழினத்தின் தனிப்பெரும் செல்வமாகும்.  தமிழினம் பாவேந்தரின் பாட்டின் வரிகளுக்கு எப்போதும் கடன்பட்டது என்று இறுக்கமாகக் கூறினார்.

    மன்னர் மன்னன் தம் வாழ்நாள் முழுவதும் எந்தப் பணியில் இருந்தபோதும் கணம் தவறாமல் பாவேந்தர் பாட்டுக்கள் பிறந்த நிகழ்வுகளை எழுதிக்காட்டினார்.  பாவேந்தருடைய பெருமிதம், எவருக்கும் வணங்காத மாட்சி, இன்றும்கூட பாவேந்தர் தொகுதியை தான் நினைக்கும்படி பதிப்பிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் நெஞ்சத்தில் இருந்தது.

    உடல் முதுமைதான் அவர் உயிரைப் பறித்துவிட்டது. பாரதி கண்ணுங்கருத்துமாக அந்த வீரக்களிறு ஓய்ந்துவிடக்கூடாது என்று விழிப்பாக பார்த்து வந்தார்.  காலத்தின் கொடுமை அவர் கண்களை மூட வைத்துவிட்டன. ஆண்டு தவறாமல், பாவேந்தர் விழாவிற்கு என்னை அழைப்பதோடு, சென்னை வரும்போதெல்லாம் நான் யாருக்காக வருகிறேன், ஔவையைக் காண வருகிறேன் என்று சொன்னபோது நீங்கள் அதியமானுக்குப் பிறந்த பொகுத்தெழினி என்று ஒரு முறை குறிப்பிட்டேன்.

    மூன்றாண்டுகளுக்கு முன்னர், தளர்ந்துபோயிருந்த என்னைப் பார்த்து, புரட்சிக் கவிஞருடைய இரும்பு உடலை இன்று வரை திண்மை குறையாமல் வைத்திருக்கிறேன் என்று பெருமைபட பேசினார். கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் “மன்னர் மன்னன்” பாவேந்தரை முழுவதுமாக காட்டிய ஒப்பற்ற காப்பியமாகும்.

    மன்னர் மன்னனின் புகழ் என்றும் மறையாது.  அவர் கண்ட கனவுகளை பாரதியும், உறவினர்களும் நிறைவேற்றுவார்கள் என ஆறுதல் கொள்கிறேன்.  மன்னர் மன்னன் புகழ் வெல்க!

    ஆறாத மனத்துடன் ஔவை நடராசன்

    Share
  • காம யோகா – 4

    காம யோகா – 4

    சி. ஜெயபாரதன், கனடா

    (பாவை விலக்கு)

    ஆணும் பெண் இருபாலாரும்
    பேணுவது சமத்துவம்
    சட்ட விதிப்படி!
    கட்டமைப்பில்,  உடல் உறுப்பில்,
    உள்ளத்து இயக்கத்தில்
    சிந்தனையில், செயலில்,
    ஆண் வேறு! பெண் வேறு!
    மாறுபடுவையே.

    கல்விக் கூடத்தில் மாணவர்
    ஒரு விரல் காட்டினால்
    சிறுநீர் கழிப்பு.
    இரு விரல் காட்டினால்
    மலநீர்க் கழிப்பு.
    மூவிரல் காட்டினால்
    மாத விலக்கு! மன விலக்கு!
    மாணவிக்கு!
    பருவப் பெண்ணுக்கு அப்போது
    தனிமை தேவை
    தனிச் சலுகை தேவை.

    ஓய்வு தேவை
    பருவ மங்கைக்கு.
    தாய்மைச் சுரப்பி தரும் துயர்!
    தனிமை விலக்கு
    பெண்ணுக்குப் புரியாத,
    ஆணுக்கும் தெரியாத
    உடல் தளர்ச்சி அது
    பாவை விலக்கு அது!
    சிவப்பு விலக்கு!

    பருவ மங்கைக்கு
    மாதா மாதம் தவறாது மீளும்
    தவிர்க்க முடியாத
    உடலியல்  இயற்கை நிகழ்ச்சி!
    கடமை விலக்கு.
    தாய்மைப் பொறுப்பு,
    வேதனை! வேதனை!
    மூன்று நாள் படும் வேதனை!
    ஓய்வு தேவை.

    மூன்று நாள் வெளியே
    தனிமைக் குடிலில் அடைபட்ட
    வனிதாவுக்கு மரணம்
    பாம்பு கடித்து!
    நடந்த மெய்க்கதை இது!
    எச்சரிக்கை
    இப்போது ஆணுக்கு!
    உடல் உறவுத் தடுப்பை
    ஏற்றுக்கொள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 266

    படக்கவிதைப் போட்டி – 266

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பளிச்சென்று முகங்காட்டும் செயற்கை மலரை நுட்பமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. வனிலா பாலாஜி. படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்த படமிது என்று இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சொற்பமே வாழ்நாள் எனினும் மணம் பரப்பும் நற்குணத்தை மலர்கள் விடுவதில்லை. மலரின் குணம் மானுடர்க்கிருந்தால் வையம் சிறக்காதோ?

    இந்த மலருக்கு நம் கவிஞர்கள் தீட்டவிருக்கும் எழுத்தோவியங்களைக் காணும் ஆவலில் அவர்களை அழைக்கின்றேன் அன்போடு!

    *****

    ”பூவே! நீ பெண்ணின் தலைக்குப் போனாலும் சரி, உயிரற்ற சிலைக்குப் போனாலும் சரி புன்னகைக்க மறுப்பதில்லை. மனிதா பூவிடம் கற்பாய் இப்பாடத்தை!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    புன்னகை…

    காட்டுப் பூவின் சிரிப்பினிலே
    காணும் பொருளே வேறுவேறே,
    வீட்டுப் பெண்ணின் தலையதிலோ
    விதியே முடிந்த பிணத்தினிலோ,
    போட்டுக் கழற்றும் சிலையினிலோ
    போவ தெங்கோ தெரியவில்லை,
    காட்டும் மாறாப் புன்னகையே
    கற்பாய் மனிதா பூவிடமே…!

    *****

    ”புத்தம்புது மலரென்று உன்னைப் புகைப்படமெடுத்து வலைத்தளங்களில் போட்டுவிட்டால் தேன்தேடும் வண்டு உன்னை நாடிவரும் என்று சிரிக்கிறாயோ?” என வெண்பூவிடம் வினாத்தொடுக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    ஒரு மொட்டின் சிரிப்பூ…

    புத்தம் புது மலரென்று
    புகைப்படக்காரர்
    புகைப்படமெடுத்து
    வலைத் தளங்களில்
    போட்டு விட்டால்
    தேனைத் தேடும் வண்டு
    தேடி வரும் நம்மையென்று
    மொட்டுக்களின் கூட்டத்திலே
    முந்திக் கொண்டு
    மொட்டு விரித்துச் சிரிக்கின்றாயோ
    வெண் பூவே!
    நீ கெட்டிக்காரி தான்!

    *****

    ”கண் படுமென்று ’மை’யால் திருஷ்டிப்பொட்டு வைப்பதுதானே வழக்கம்? ஆனால் இந்த நிழற்பட நிபுணரோ பூவை வைத்திருக்கிறாரே” என்று வியப்போடு கேட்டுவிட்டு, இவ் வெள்ளைப்பூவின் இயல்புகளை விண்டுரைக்கிறார் திருமிகு. சோமசுந்தரி.

    கண்படுமென்று
    கண் ‘மை’ கொண்டு
    திருஷ்டிப் பொட்டு
    வைப்பது தானே வழக்கம்?
    தான் பிடித்த புகைப்படத்திற்குக்
    கண்படுமென்று
    வனிலா பாலாஜி
    ஒரு அழகிய பூவை
    வைத்தது அதிசயமே!
    இந்த வெள்ளைப் பூவானது
    சூதும் வாதும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “வெள்ளந்திப்பூ”
    சண்டையும் பூசலும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “சமரசப்பூ”
    ஏற்றமும் தாழ்வும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “சமத்துவப்பூ”
    தூசும் மாசும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “தூய்மைப்பூ”

    *****
    ”மலர்களைக் காணக் காணக் கோடியின்பம்; மாயாஜாலம் செய்யும் பூக் கூட்டங்கள் நம் மனநாட்டங்கள்!” என்று மலர்களை எண்ணிப் பூரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    விண்கற்களாய்த் தெரிகிறதே
    இந்த மலர் வெளிர்நிறத்தில்
    ஆயிரமாயிரம் வண்ணங்கள்
    இந்த மலர்களின் வகையினிலே

    ஒவ்வொன்றும் ஓர் அழகு
    ஒத்துப் போகும் அதன் நிறத்தோடே
    வாசமுண்டு வாசமில்லை
    வகையறாக்கள் வெவ்வேறே

    தவழ்ந்து வரும் தென்றலில்
    வாசமிகு வண்ண மலர்கள்
    மனதை வருடும் மாயத்தைச்
    செய்யும் பணியே அதீதம்

    காலை மாலை நேரமில்லை
    காணக்காணக் கோடியின்பம்
    மாயஜாலம் செய்கின்ற
    பூக்கூட்டங்களே நம்மன நாட்டங்களே!!

    *****

    ”மலரே! உன்னை வலிக்காமல் பறிக்க என் விரல்கள் காத்துக்கொண்டிருக்க, உன் ஒருநாள் வாசத்துக்குக் குடையாகிறதே அந்த நிலவு!” என்று சுவையாகக் கவிதை படைத்திருக்கிறார் திருமிகு. கி. அனிதா.    

    நீ என்று மலர்வாய் என உனக்கு வலி தெரியாமல்
    பறிக்கக் காத்து கொண்டிருக்கும் என் கை விரல்…
    நீ மலரும் நேரம் சூரியன் மறைகின்றான்…
    நீ பரப்பிய வாசனை அறிந்து பட்டாம்பூச்சி உன்னைச் சுற்றும் …
    நீ ஒருநாள் மட்டுமே மண்ணில் வாசம் செய்ய
    நிலவு குடையாகிறதே.!!!….

    *****

    பளீரெனச் சிரிக்கும் மணமிலா இச் செயற்கை மலருக்கும் தம் அழகிய கவிதைகளால் மணமூட்டியிருக்கின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருகின்றது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

    மொட்டு மலரட்டும்!

    கிட்டிய நாளையெல்லாம்
    எட்டிக்காய் என்றெண்ணி
    வெட்டியாய்க் கழித்து – ஞானப்
    பட்டினியில் வாழ்ந்திருப்போம்…

    ஒரு நாளில் கருவுற்று
    மறுநாளில் சருகாகி
    உயிர்நீங்கி மறைந்தாலும்
    வாட்டம் முகம் காட்டவில்லை…

    வண்டுவந்து தீண்டிடுமோ
    மகரந்தம் சேர்ந்திடுமோ
    விருட்ச விதை விளைந்திடுமோ
    என்றெண்ணி வாழ்வதில்லை…

    புவியெங்கும் மணம்வீசி
    அமிழ்தத் தேன் கொடுத்து
    மகிழ்ச்சிப் புன்னகை உயிர்ப்பித்து
    மலர்ந்திருக்க மறப்பதில்லை…

    மனவாட்டம் தனை விடுத்து
    மனிதநேயம் தனை வளர்த்து
    வாழ்வதனின் பலன் வளர்க்க – நம்
    மனமொட்டு மலரட்டும்!

    ”ஒருநாள் வாழ்க்கைதான் என்றபோதும் மலர்கள் வாட்டமடைவதில்லை; புவியெங்கும் மணம்வீசிப் புன்னகைக்க மறப்பதில்லை. ஆதலால் மனவாட்டம் விடுத்து மனிதநேயத்தோடு வாழ நம் மனமொட்டு மலரட்டும்!” என்ற உயர்ந்த சிந்தனையைக் கவிதையில் சிறப்பாய்ச் சொல்லியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3

    -மேகலா இராமமூர்த்தி

    ஒரு நாடு மேன்மையுற அந்நாட்டு மக்கள் புலனொழுக்கம் மிக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது என்பதைக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே வலியுறுத்திய கம்பர், அடுத்து அந்நாட்டை ஆளுகின்ற மன்னன் எவ்வாறிருக்கவேண்டும் என்பதையும் கோசலநாட்டு மன்னனான தயரதனை வைத்து விளக்குகின்றார்.

    தாய்ஒக்கும் அன்பில் தவம் ஒக்கும் நலம் பயப்பில்
    சேய்ஒக்கும் முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
    நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும் நுணங்கு கேள்வி
    ஆயப்புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்னான்.
    (கம்ப: அரசியற் படலம் – 171)

    தயரதன் குடிமக்களிடம் அன்புகாட்டுவதில் தாயைப் போன்றவன். மக்களுக்கு வேண்டிய நன்மைகளையெல்லாம் அளிப்பதில் தவம் போன்றவன் என்று அவன் பண்புகளை விவரிக்கத் தொடங்குகின்றார் கம்பர்.

    தவத்தைச் செய்வோரின் நோக்கமே ஏதேனுமொன்றைப் பெறவேண்டும் என்பதே. அதனால்தான் வள்ளுவப் பேராசானும்,

    ”வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்”
    (265) என்று அதன் இயல்பை விளம்புவார்.

    தயரதனும் வேண்டியதைத் தரும் தவத்தை ஒத்தவனாக மக்களுக்கு விளங்கியிருக்கின்றான். அடுத்து அவன் சேயைப் போன்றவன் என்கிறார் கம்பர். மக்கள் பிள்ளைகளைப் பெறுவதன் நோக்கம், தமக்குத் துன்பம்வந்த காலத்தில் அவர்கள் உதவுவார்கள்; முதுமைக் காலத்தில் அவர்கள் தம்மை அரவணைப்பார்கள் என்பதே!

    சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
    மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி – 197)

    கறையான்களால் அரிக்கப்பட்ட (முதிய) ஆலமரத்தை அதன் விழுது வீழாது தாங்குவதுபோல், முதுமைவந்து குதலைமை தோன்றிவிட்ட தந்தையைப் புதல்வன் தாங்கினால் தந்தையின் துயரம் மறையும் என்று நாலடியார் அறிவுறுத்தியிருப்பது ஈண்டு எண்ணிப்பார்க்கத் தக்கது.

    அப்படிப்பட்ட நன்மகனாய்த் தயரதனும் தன் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு இருந்திருக்கின்றான்.

    அடுத்து, மக்களுக்கு ஏதேனும் நோய் எனில் அதனைத் தீர்க்கும் மருந்தாகத் தயரதன் இருந்தான் என்கிறார் கம்பர். எனவே மக்களுக்குச் சங்கடங்கள் நேரும் காலத்தில் ஓர் அரசனானவன் அதற்குத் தீர்வாக இருக்கவேண்டுமே தவிர தானே சங்கடத்தைத் தருபவனாக – சிக்கல்களை உருவாக்குபவனாக இருக்கக்கூடாது என்பதையும் இதன்மூலம் நாம் உய்த்துணரமுடிகின்றது. இதனை இந்நாளைய ஆட்சியாளர்களும் உளங்கொள வேண்டும். அதுபோல் அரசனென்பவன் நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்க்கு உதவும் அறிவுபோன்றிருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.

    எனவே, அரசப்பதவி என்பது மரபுவழியாக வருவது; அப்பதவியில் அமர்வதற்கு அரசமரபில் உதித்தவனாக இருத்தலே போதுமானது என்ற நடைமுறை விதிகளைத் தாண்டி, அரசனென்பவன் அப்பதவியை வகித்தற்குரிய தகுதியும் திறனும் படைத்தவனாகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத்தரக்கூடிய அனைத்து உயர்குணங்களும் கொண்டவனாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயத்தைச் சூரியகுலத் தோன்றலான தயரதன்வழி நமக்கு அறியத்தருகின்றார் கம்பர்.

    நாட்டு மக்களைத் தயரதன் எப்படிப் பாதுகாத்தான் என்பதை இன்னொரு பாடலின் வழியாக நமக்குத் தெளிவாக்குகின்றது இராமகாதை.

    வயிரம் முதலிய அணிகலன்களை அணிந்தவனும், சிங்கம்போன்ற ஆற்றலுடையவனுமான தயரதன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல் காத்துவரும் இயல்பினைக் கொண்டிருத்தலால், குற்றமற்ற இவ்வுலகின்கண் உள்ள இயங்குகின்ற, இயங்காது நிலையாயிருக்கின்ற அனைத்து உயிர்களும் உறைகின்ற உடம்பாயினான் என்கிறது இப்பாடல்.

    வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்
    உயிர்எலாம் தன்உயிர் ஒக்க ஓம்பலால்
    செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்
    உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பு ஆயினான்.
    (கம்ப: அரசியற் படலம் – 177)

    இங்கே அரசனை உயிர்களுக்கு உடம்பு போன்றவன் எனும் கம்பரின் சிந்தனை அதுவரைத் தமிழ்ப்புலவோர் சொல்லாத புதுமையான ஒன்று. ஆம்! ”மக்களுக்கு உணவாகும் நெல்லோ நீரோ அவர்கட்கு உயிராகா; அகன்ற உலகத்தையும் அதன்கண் வாழுகின்ற மக்களையும் காக்கின்ற அரசனே அவர்கட்கு உயிர்போன்றவன். எனவே அதனை உணர்ந்து அதற்குத்தக்க வகையில் நடத்தல் வேந்தற்குக் கடன்” என்கிறது மோசிகீரனாரின் புறநானூற்றுப் பாடல்.

    நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
    மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
    அதனால் யானுயி ரென்ப தறிகை
    வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
     (புறம் – 184)

    ஆனால் கம்பரோ அரசனே நாட்டுக்கு உயிர்போன்றவன் என்ற சங்கச் சிந்தனையை மறுக்கின்றார். நாட்டிலே மக்களே முதன்மையானவர்கள்; நாட்டுக்கு உயிர்போன்றவர்கள். அந்த உயிர்களைப் பாதுகாக்கின்ற உடல்போன்று – கவசம்போன்று இருப்பதுதான் ஒரு நல்ல அரசனுக்கு அழகு என்ற மாற்றுச்சிந்தனைக்கு அவர் தோற்றுவாய் செய்திருப்பது, மக்களை முதன்மைப்படுத்தும் மக்களாட்சித் தத்துவத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. அவ்வகையில் கி.பி. 9 அல்லது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் கம்பர் மக்களாட்சி குறித்து அப்போதே சிந்தித்த முன்னோடிச் சிந்தனையாளராகக் காட்சியளிக்கின்றார்.

    மக்களைத் தாயாகவும் சேயாகவும் காத்துவந்த தயரத மன்னனுக்கு நெடுங்காலம் மக்கட்பேறில்லை. தவமாய்த் தவமிருந்து அவன்பெற்ற புதல்வர்கள் இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன் ஆகிய நால்வர்.

    தம்முடைய காப்பியத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்திருக்கும் கம்பர், தயரதனின் பிள்ளைகளைப் போற்றிப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் சிலவேனும் பாடியிருந்தால் காப்பியச்சுவை மேலும் கூடியிருக்கும். ஏனோ அவர் அதைச் செய்யவில்லை. தம்முடைய மகன் அம்பிகாபதியை அகாலத்தில் பறிகொடுத்த துக்கமே கம்பரைப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத மனநிலைக்குத் தள்ளிவிட்டது என்பர் சிலர். அதன் உண்மைத்தன்மையை அறியக்கூடவில்லை!

    தயரதப் புதல்வர்கள் நால்வருமே குணத்திலும் வீரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். அதிலும் மூத்தவனான இராமன் மக்கள் கொண்டாடும் கல்யாண குணங்கள் பலவும் கொண்டவனாய்த் திகழ்ந்தான்.

    ஒருநாள் தயரதனின் அவைக்கு வந்த விசுவாமித்திர முனிவர்,

    ”தயரதா! காட்டில் நான் செய்யவிருக்கும் தவ வேள்விக்கு அரக்கர்கள் பெரும் இடையூறு செய்யக் காத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து என் வேள்வியைக் காத்துத்தர நின் புதல்வர்களில் கரிய செம்மல் ஒருவனைத் தருதி!” என்று கேட்கின்றார். கரியசெம்மல் என்றதுமே அவர் இராமனைத்தான் கேட்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட தயரதன் பெருங் கலக்கம் அடைகின்றான்.

    அப்போது அவனடைந்த துயரத்தை,

    எண்இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
       மருமத்தின் எறிவேல் பாய்ந்த
    புண்ணில் ஆம்பெரும் புழையில் கனல் நுழைந்தா
       லெனச் செவியில் புகுதலோடும்
    உள்நிலாவிய துயரம் பிடித்து உந்த
       ஆர்உயிர் நின்று ஊசலாட
    கண்இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
       கடுந் துயரம் கால வேலான்.  (கம்ப: கையடைப் படலம் – 328) 

    என்கிறார் கம்பர்.

    எண்ணருந் தவங்களை மேற்கொண்டவரான விசுவாமித்திரர் சொன்ன இந்தச் சொற்களானது, மார்பின்மேல் எறிந்த வேல்பாய்ந்த புண்ணாகிய புழையிலே, கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போலத் தயரதன் காதுகளில் புகுந்தது. அப்போது அவன் உள்ளத்திலே நிலைத்திருந்த துயரமானது உயிரை வெளியே தள்ள, அவனுடைய ஆருயிர் ஊசலாட, கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படித் தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினால் வருந்தினான் என்பது கம்பர் தீ(கா)ட்டும் தயரதனின் உளச்சித்திரம்.

    இங்கே இரண்டு உவமைகளைக் கையாளுகின்றார் கம்பர். வேல்பாய்ந்து குழியாகிப்போன புண்ணிலே தீ நுழைந்தது போல என்பது அவற்றில் முதலாவது. நாம் இக்காலத்தில் ”வெந்த புண்ணில் வேல்பாய்ந்தது போல” என்று சொல்வதைத்தான் ”வேல்பாய்ந்த புண்ணிலே தீ நுழைந்தது போல” என்று மாற்றிச் சொல்லியிருக்கின்றார் கம்பர் எனக் கொள்ளலாம்.

    அடுத்து, ”கண் இலான் பெற்றிழந்தான்” எனும் அரிய உவமை. கண்கள் இல்லாதவன் காலம் முழுவதுமே கண்ணில்லாமல் – பார்வையில்லாமல் இருந்துவிட்டால் பார்வையின் பயன் என்னவென்றே அவன் அறியாதிருந்துவிடுவான். ஆனால், அவனுக்கு இடையில் கண்பார்வை கிடைத்துவிட்டால் அவன் அந்தப் பார்வையின் துணையோடு பல்வேறு நற்காட்சிகளைக் காணும் பேறுபெற்றுப் பார்வையின் அருமையை அறிந்தவனாகிவிடுகின்றான். அந்தச் சமயத்தில் திடீரென்று மீண்டும் அவன் பார்வை பறிக்கப்படுவதென்பது எத்தகைய கொடுமை?

    அதுபோல்தான் நெடுங்காலம் மகப்பேறின்றி வாடிய தயரதன், பின்னர்ப் புதல்வர்களைப் பெற்று, இப்போது மீண்டும் முனிவரால் அவர்களை இழந்துவிடுவோமோ என்று அஞ்சிய நிலை இருந்தது என்கிறார் உவமைகளைப் படைப்பதில் ஒப்பற்றவரான கம்பநாடர்.

    அந்த வேதனையோடு முனிவரை நோக்கிய தயரதன், ”ஐயா! இராமன் சிறுவன்! அரக்கரை அழிக்கும் பணியோ பெரிது; அத்தோடு கடிது. ஆதலால் அப்பணியை முடித்துத்தர நானே வருகின்றேன்” என்கிறான். முனிவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. சீற்றத்தோடு தம் ஆசனத்திலிருந்து எழுகின்றார். அப்போது தயரதனைச் சமாதானப்படுத்தி இராமனை விசுவாமித்திர முனிவரோடு அனுப்பிவைக்க உடன்படச் செய்கின்றார் தயரதனின் குலகுருவும் ஆசானுமான வசிட்டர்.

    அதைத்தொடர்ந்து இராமனும் அவனைப் பிரியாத இளவலான இலக்குவனும் விசுவாமித்திர முனிவரோடு காட்டுக்குப் புறப்படுகின்றனர் தயரதன் சம்மதத்தோடு!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

    தி. இரா. மீனா

    மும்மடிக்காரியேந்திர

    மும்முடிக்காரி என்ற பெயரால் இவர் அரசராக இருந்திருக்கலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ’மகாகன தொட்டதேசிகார்ய குரு பிரபுவே’ என்பது இவரது முத்திரையாகும்.

     1. “பக்தியெனும் பாலை மனதுள் உறையவைத்து
    அதிலிருந்த கெட்டியான தயிரை
    உடலென்னும் பாத்திரத்தில் நிரப்பி
    தத்துவமென்னும் மத்தால் கடைந்து
    இலிங்கமென்னும் வெண்ணெய் தெரிய அதையெடுத்து
    ஞானக் கனலில் பக்குவப்படுத்தி
    இயற்கை மணத்துள் விளங்கும் நெய்யைப் பருகும்
    ஆற்றலால் ஆன்மா இலிங்கமானது பாராய்
    மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

    2. “பகலிருக்க இருளுண்டோ?
    இருளிருக்கப் பகலுண்டோ?
    விழித்திருக்க உறக்கமுண்டோ?
    துன்பமிருக்க இன்பமுண்டோ?
    தாங்கள் காட்சியளிக்க நான் காட்சியளிப்பேனோ?
    நான் காட்சிதர தாங்கள் காட்சி தருவீரோ?
    நீங்களிருக்க நானில்லை நானிருக்கத் தாங்களில்லை
    மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

    மெரேமிண்டய்யா

    ‘ஐகட்ட தூரராமேஸ்வர இலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “அங்கத்திலிருந்து அங்கை வந்தாய்
    அங்கை இருந்து அகமேன் வாராய் ஐயனே ?
    நீ கேட்டு நான் பாடேன் செவி வாய் வலியன்றோ ஐயனே
    எக்காலும் உனக்கு இறப்பில்லை எனக்கும் பிறப்பில்லை
    அடங்காது உன்னுடல் சுருங்காது என்மனம்
    செயலென்னும் பாசியில் சிக்கி
    உயர்வறியாமல் தடுமாறுகிறேன்
    ஐகடத்துக்குப் புகலிடம் சொல்வாய்
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமே“

    2. “உணவாசைக்கு ஒழுக்கம் கெட்டு
    ஐம்புலனாசைக்குப் பற்றினை விட்டு
    அனைவரின் நட்பால் ஏமாற்றம் தொட்ட
    வினைப்பயனின் உடலுடையோர்க்குண்டோ உயர்பக்தி
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கம் அறியும் வரையில்?”

     3. “சத்திரியன் சூத்திரன் வைசியன் பிராமணனெனும்
    தொழில் எதுவானாலும்
    ஆற்றுவதில் பொய்யாமை வேண்டும்
    சிவனின் எழுத்தது, பசுபதியின் நிலையது
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமது.”

    4. “தன்னைத் தானறியின் தன்னறிவே குரு
    தானே இலிங்கம், தன்னுறுதியே ஜங்கமம்
    இவ்வகை மூன்றும் ஒன்றாயின்
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமாம்.”

    மேதர கேதய்யா:

    கூடை பின்னுவது இவரது காயகம். ’கவரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    1. “பக்தனுக்கு இன்பமும் ஒன்றே,துன்பமும் ஒன்றே,
    வறுமை செல்வம் இரண்டும் ஒன்றே,
    நினைக்காதிருந்தால் சரணருக்கு அதுவே கேடு
    ஜங்கமனென உறுதியெடுத்து,
    தன்னெதிரில் பிறரை அழிப்பதற்குத்
    தன்னுடலைக் காப்பாற்றினால்
    அன்றே தீர்த்தப் பிரசாதத்திற்கு தூரம், கவரேஸ்வரனே”

    2.  “முதலில்லாமல் இலாபமுண்டோ?
    எதிர்பார்ப்பின்றித் தேர்வுண்டோ?
    குருவின்றி இலிங்கமுண்டோ?
    இப்படி,பொய்யான வாக்குறுதிக்கு வெட்கினேன் கவரேஸ்வரனே“

    மைத்துன ராமய்யா

    ஆந்திர மாநிலதைச் சேர்ந்த இவர் அப்பாவியான இயல்புடையவர். கல்யாண் நகர் வந்து சரணர்களோடு கலந்து தன் அறியாமையால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். சிவ -பார்வதியைத் தன் அக்கா மாமனாக எண்ணி ’மைத்துனன் ராமையா’ என்று தன்னை அழைத்துக் கொண்டதாகச் செய்தியுண்டு. ’மகாலிங்க சென்னராம’ இவரது முத்திரையாகும்.

    1. “சரணர் வரவுகண்டு
    சிரம்தாழ்த்திக் கரம் குவிக்கவேண்டும்
    சரணமெனில் மனம் ஒப்பாது
    அன்றைய இன்றைய பயன், இலாபம், பக்தியறியாமல்
    சரணமெனில் உள்ளம் ஒப்பாது.
    செல்வரென நம்பியும் நம்ப இயலாமலும்
    மகாலிங்க சென்னராமேஸ்வரன் என்னைப் பார்த்துநகைக்கிறான்.”

    மோளிகே மகாதேவி

    காஷ்மீர் அரசபரம்பரையைச் சேர்ந்த மாரய்யா மோளிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச்சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்றவரை சிவசாரணர்களுக்கு உணவுபடைத்து அன்புகாட்டி வாழ்ந்தனர். ‘என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா’ இவரது முத்திரையாகும்.

    1. “அம்பெய்தியவரை அறிவேன்
    எய்த அம்பு திரும்பும்படி செய்தவரையறியேன்
    வழிபாடு செய்தவரையறிவேன்
    வழிபாட்டு இலிங்கம் அங்கத்தில் ஊடுருவியதறியேன்
    சொல்லுக்குச் செயல்,செயலுக்குச் சொல்லெனும்
    இவ்விரண்டும் ஒன்றானவரையறியேன்
    இவ்விரண்டும் சித்தியடைந்து சித்தானந்தமானால்
    என்னய்யப் பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜூனன்
    ஞானச் செயலில் உறுதியுடையோனுக்கன்றி
    பிறருக்கு அருள்வதில்லை”

    2. “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
    மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
    முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
    அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
    செயல்படுதலும் அறிவும் இணையானவை
    இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
    என்னையப்பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜுனா”

    [தொடரும்]

    Share
  • வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மாலை வேளை

    டௌனில் உள்ள மிகவும் நல்ல பேக்கரியிலிருந்து தனியாக செய்யச்சொல்லிச் தயாரிக்கப்பட்ட பெரிய கேக் நாலு மெழுகுவர்த்திகளுடன் மேசை மேல் இருந்தது.

    மின்னுகின்ற ரிப்பன்களும், பல வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள பலூன்களும் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

    நாங்க எங்க பொண்ணோட பிறந்த நாளக்கொண்டாடறோம்.

    விருந்தினர் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்கதவு சாத்தவில்லை. அறையின் பலூன்களையும், ரிப்பன்களையும் அசைத்துக்கொண்டு  இளம்காற்று மட்டும் அடிக்கடி வீசியது.

    வீடு சிறியதுதான். ஆனால் எங்க நாலுபேருக்கு வசிக்க இதைவிடப் பெரியவீடு தேவையில்ல. அலீனா வாழ்க்கையில் திருப்தியடைந்தாள். கிறிஸ்ஸேக்ரட், ஃபார்ட் ஸ்கூலில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். ஸ்வீட்டி அதற்குப் பக்கத்தில் உள்ள கிண்டர்கார்டனில் படிக்கிறாள். அவர்களுடைய படிப்பை கவனித்துக்கொள்வது அலீனாதான். என்னோட வேலயெல்லாம் அவங்களக் கூட்டிட்டு டௌனுக்குப் போவதோ, பீச்சில் போய் உட்காருவதோ, சினிமாவுக்குக் கூட்டீட்டுப் போவதோதான். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கும். அன்றைக்கு நான் சீசன் டிக்கெட்டையும் எடுத்திட்டு இரயில் நிலையத்துக்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக வெயிலின் சூடு வரும்வரை படுத்து உறங்கவும் மாட்டேன். நாங்கள் குர்பானாவுக்காக பத்ராசனப் பள்ளிக்குப் போவோம். அது முடிந்தால் இறைச்சியோ மீனோ வாங்க டௌனுக்கு நான் மட்டும் போவேன். சாப்பாட்டுக்கப்பறம் நான் கொஞ்சநேரம் தூங்குவதும் ஞாயிற்றுக்கிழமைதான். ஞாயிற்றுக்கிழமையை நானும், அலீனாவும் மக்களும் ஒரே போல் விரும்புவோம். அன்று கடவுள் இக்குடும்பத்தை ஆசீர்வதிக்கவும் தூய்மைப்படுத்தவும் செய்வார்.

    இந்த வருடம் ஸ்வீட்டியின் பிறந்ததாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்தது ஒரு அதிர்ஷ்டம்தான். குர்பான முடிந்து நான் போய் ஒரு சேவல்வாத்தை வாங்கிவந்தேன். சைக்கிளில் மீன்கொண்டு வருகின்ற டொமினிக்கிடமிருந்து திருத மீனும் நெத்தலியும் வாங்கினோம். மீன்வறுவல் போலவே கூர்க்கையின் (கேரளாவில் சமைக்கப் பயன்படுத்தப்படும் கிழங்கு வகை) வறுவலும் எங்க அனைவருக்கும் பிடிக்கும். கூர்க்கையை தோல் களைந்து பாகப்படுத்தியது நானும் மக்களும்தான். அலீனா வாத்தையும், மீனையும் எங்களைத் தொடவிடவில்லை.

    உணவிற்கு முன்பாக அலீனா வைன் க்ளாஸ்களில் சிவப்பு திராட்சை ரசம் தந்தாள். வைன் டம்ளர்களை உயர்த்தி நாங்கள் இருவரும் பாணீய உபசாரம் செய்துகொண்டோம்.

    சாப்பிட்டு முடிச்சு நா கொஞ்சம் தல சாய்ச்சே. மக்கள் விளையாடீட்டிருந்தாங்க. அவங்ககிட்ட அலீனா வெளில எங்கயும் போகக்கூடாது என்றாள். பிறகு அவளும் மதிய தூக்க மயக்கத்திலாண்டாள். மயக்கத்திற்கிடையிலும் ஏதோ சில சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது.

    உறக்க மயக்கம் தீர்வதற்கு முன்பு பேக்கரி வேலைக்காரன் ஒருவன் பிறந்தநாள் கேக்கும் எடுத்துக்கொண்டு வந்தான்.

    மாலையானது.

    குழந்தைகள் மாலைப்பொழுதிற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் புதிய ஆடை அணிந்தனர். அவர்களுடைய விளையாட்டும் சிரிப்பும் வீட்டை முழுவதும் உற்சாகப்படுத்தியது. பலூனும் வண்ண நாடாவும் வைத்து அவர்களே அறையை அலங்கரித்தனர். நானும் அலீனாவும் அவங்களோட ஒவ்வொரு சலனங்களையும் ஒவ்வொரு விளையாட்டுகளையும் பார்த்து சந்தோஷப்பட்டோம்.

    மெழுகுவர்த்தி ஊதி அணைப்பதற்கும் ஸ்வீட்டிக்குப் பிறந்ததாள் வாழ்த்துகள் கேட்டு கேக் வெட்டுவதற்கான நேரம் நெருங்கியது. பிள்ளைகள் அதற்காகத் தயாராயினர். அலீனா மெழுகுவர்த்தி பத்த வைத்தாள். ஸ்வீட்டி அதற்கு நேராகக்குனிந்தாள்.

    என்னோட தொண்ட வரளுது, நெஞ்சு வலிக்குது. அதொரு கெட்டக்கனவாக இருக்கட்டுமென்று நிம்மதியடையலாம் என்று ஆசைப்பட்டு சுற்றும் முற்றும் பார்க்கும்போது காண்பது சிதறிக்கிடக்கின்ற கேக் துண்டுகள், உடைந்த பலூன்கள், விழுந்து கிடக்கின்ற  ரிப்பனுகள்… பிறகு ஏதோ துவம்ச மிருகத்தினுடையது போன்ற மணம்.

    வீட்டுக்குள்ள அவன் விரிச்சுப்புடிச்ச கத்தியை கையிலேந்தி பாய்ந்து வந்தான். கடுமையான ஒரு அலறல் முழங்கியது. என்ன பண்றதுன்னு தெரியாம நான் முழிச்சே அலீனா பயந்து நடுங்கிய மக்களைச் கட்டிப் பிடித்திருந்தாள்.

    “யா… ர… து?” ………………நான் விக்கி விக்கிக்கேட்டேன்.

    அவன் கத்தியை என் கழுத்தில் வைத்து அதன் நுனியை தொண்டைக்குழியில் ஆழ்த்தி நசுக்கினான். ரத்தமே வந்திருக்கும்.

    “பேசாம போய் இருக்கறப் பணத்த எடுத்திட்டு வா!”. அவன் மிரட்டினான். நான் உதவுவோரற்று பின்னால் நகர்ந்தேன். அவன் கத்தியை அலீனாவுக்கு நேராகப் பிடித்தான்.

    “செயினயும் கம்மலும் கழட்டு. இந்தக் கொழந்தையோடதயும்…”

    ஸ்வீட்டி காற்றில் ஆடும்  இலைபோல நடுங்கிக்கொண்டிருந்தாள்.

    “ம்ம்… சீக்கிரம்…”

    அவன் அவசரப்படுத்தினான்

    “மறுபடியும் வருவே………..”

    சுட்டெரிக்கின்ற ஒரு பார்வையை அலீனா மீது பதித்துவிட்ட அவன் சொன்னான். அவள் பயந்து வெளிறினாள். ஏதோ வதை செய்யும் விலங்கின் வாசத்தைப் போன்ற கடுமையான வாசத்தை அறையில் விட்டுவிட்டு அவன் வேகமாக வெளியில் நடந்தான்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)

    சேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கொண்டு வந்து மனைப்புகுந்து  குலாவு பாதம் விளக்கியே
    மண்டு  காதலின்  ஆச  னத்திடை  வைத்த  ருச்சனை செய்தபின்
    உண்டி  நாலுவி  தத்தில்  ஆறுசு  வைத்தி   றத்தன   ஒப்பிலா
    அண்டர்  நாயகர்  தொண்டர் இச்சையின்  அமுது செய்ய அளித்துளார்

    உரை

    அவர்களைத் தமது மனைக்குள்ளே, அழைத்துக் கொண்டு வந்துபுகுந்து, குலவுகின்ற அவர்களது திருவடிகளை விளக்கி, மிகுந்த ஆசையினாலே ஆசனத்தில் எழுந்தருளுவித்து, அருச்சித்து, அதன்பின் நான்கு விதத்தில் இயன்ற ஆறுசுவை யுணவுகளையும், ஒப்பில்லாத சிவபெருமான் அடியவர்கள்  இச்சையில் அமுது செய்தருளுமாறு கொடுத்துள்ளார்.

    விளக்கம்

    ‘’கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே’’ என்ற அடி, அடியாரைத்தம் இல்லத்துக்கு  அழைத்துக் கொண்டு வந்து அவர்தம் திருப்பாதங்களை நீரிட்டு அலம்புதலைக் குறித்தது. இதனை  பாத்தியம் என்ற  வரவேற்பு  நிகழ்ச்சியாகும்.

    குலாவு பாதம் – மோட்ச சாதனமாகக்   கொண்டாடப்பெறுகின்ற பாதம்  விளங்குகின்ற பாதம் என்றலுமாம். இறைவனைப் பூசையில் எழுந்தருளச் செய்யும் போதும், அடியார்களுக்கு விருந்தளிக்கும் போதும்   பாத்தியம் அர்க்கியம் – ஆசமனம் – அருச்சனை முதலியன வழிபாட்டின் அங்கங்களைக் கடைப்பிடித்தல். இவை  சிவபூசைக்குரியவை  அடியார் பூசையாகிய மாகேசுவர பூசைக்குமாம்.இவை சோடசோபசார மென்பர். அடியார்க் கமுதளிக்கும் பூசையிற் பாதம் விளக்கும் நியதியும் அது காரணமாகப் பெற்றபேறும் திருப்பெண்ணாகடத்துக் கலிக்கம்ப நாயனார் சரிதத்திற் கூறப்பெறும்.

    இப்பாடலின் ‘’மண்டு காதலின்’’ என்ற தொடர், நூல்களில் விதித்தபடி இயற்றுவது என்றமட்டில் அமைந்துவிடாது மனத்திலே மிக்கெழுந்த ஆசையினாலே என்பதைக் குறித்தது.

    ‘’உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத்திறத்தினில் – நாலு  விதத்திலும் ஆறுசுவைத் திறத்திலும் இயன்ற உண்டி என்க. நாலு வித உண்டி – உட்கொள்ளும் வகைக்குத் தக்கவாறு உண்டி நான்கு வகையாகப் பிரிக்கப்படும். அவை – உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்பவையாம்.

    ஆறுசுவை – கைப்பு, புளிப்பு, இனிப்பு,துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பவை. மருந்துநூல் முறைப்படி உடற்கூற்றின் பற்பல தாதுக்களின் சத்துக்களுக்கும் பலவேறு வகைச் சுவைகள் வேண்டப் பெறுவன என்பர். உடல் நலத்துக்கேற்ற உணவு வகைகளை அன்புடன் சமைத்து ஆசையுடன் இடுதல் வேண்டும்.

    ‘’ஒப்பில்லாத தொண்டர் இச்சையின்‘’ என்ற தொடர் ஒப்பில்லாத நாயகர் தொண்டர் எனவும், ஒப்பில்லாத   தொண்டர் எனவும்,  ஒப்பிலா இச்சை எனவும் கூட்டி  மூவகை  உரை  பெற்றது.

    தம்மிச்சையின்படி உணவிடாமல், தொண்டர்களின் விருப்பம், மனப் பக்குவம், மூப்பு ஆகியவற்றுக்கு  ஏற்ப,   அவர்கள்  தமது இச்சையின்படி அமுதுசெய்ய என்று பொருள். தொண்டர்களது இச்சையிலே நாயகர்நின்று விருந்தோம்பும் படி என்றலுமாம். நாயகரும் தொண்டரும் அமுதுசெய்ய என்றும்  பொருள் தரும். இச்சையின்படி அமுதுசெய்ய  அளித்தலாவது – அவ்வவரும் வேண்டியன வேண்டியவாறே பெற்றுண்ண அளித்தல். அளிந்துளார் – அன்புடன் கொடுத்து அவரன்புக்கு ஏற்ப  உளராயினார் என்றது குறிப்பு.

    இப்பாட்டால் அடியார்களை உபசரித்து மாகேசுவர பூசை  செய்யும் முறை கூறப்பெற்றது. முன்பாடலில் கூறிய ‘’ஈரமென் மதுரப்பதம் பரிவெய்த முன் உரைசெய்த பின்’’  செய்யவேண்டுவன இவை என்க. இன்றைக்கும் மாகேசுவர பூசைகளிலே இத்திருப்பாட்டினையே பெரும்பாலும் ஓதித் துதித்துப் பூசிக்கும் வழக்கமும் காண்க. இவ்வாறு பூசிக்கப்பெற்ற அடியார்களான மாகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதமும் அதன் பயனும்  அடுத்த பாடலில் கூறினார்.

    மல்கி எழுகின்ற சீரினைச் செய்யும் இப்பூசைக்குரியயாப்பாக ஆசிரியர் இப்பகுதியை எழுசீர் விருத்தத்தாற் பாடியருளிய அழகும் காண்க.

    Share
  • நாலடியார் நயம் – 40

    நாலடியார் நயம் – 40

    நாங்குநேரி வாசஸ்ரீ

    40. காம நுதலியல்

    பாடல் 391

    (தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது)

    முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; – வயங்கு ஓதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு..

    கடலலைகள் நில்லாமல் மோதும் நீண்ட
    கழிகளின் குளிர்கரையுடை அரசனே!
    கணவனுடன் புணராவிடின் பசலை படரும்
    காதல் சுவையற்றுப்போகும் ஊடிவருந்தாவிடின்,
    கூடிப்பின் ஊடுதலே காதல் நெறி.

    பாடல் 392

    தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
    விம்ம முயங்கும் துணையில்லார்க்கு – இம்மெனப்
    பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
    நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

    தம்மால் விரும்பப்பட்ட தலைவரின் மாலை
    தரித்த அழகிய மார்பைப் பூரிக்கத் தழுவும் அத்
    தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, ‘இம்’ எனும்
    தொனியுடன் மேகம் நீரைப் பொழிய
    திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை
    தீய சாப்பறையை ஒத்திருந்தது.

    பாடல் 393

    (தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.)

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று.

    வருந்தி வேலைசெய்யும் கம்மாளரும்
    வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து
    வைக்கும் மயக்கம் தரும் மாலையில் மலர்களை
    வகையாய் ஆய்ந்தெடுத்து மாலையாய்த் தொடுத்து
    வைத்து தலைவன் இல்லா மகளிர்க்கு இம்மாலை
    வழங்கும் பயன்தான் என்ன? எனக் கலங்கி அழுதாள்.

    பாடல் 394

    (வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது)

    செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
    மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் – மெல்விரலின்
    நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
    தோள்வைத்து அணைமேற் கிடந்து.

    சூரியன் மறையும் மாலை நேரம் கண்டு வருந்தி
    செவ்வரி பரந்த கண்களின் நீரை மெல்விரலால்
    எடுத்தெறிந்து விம்மி அழுது தன் மெல்விரலால்
    எமைப் பிரிந்த நாட்களைக் கணக்கிட்டுப்
    படுக்கையில் தன் தோளையே தலையணையாய் வைத்துப்
    படுத்து நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ?

    பாடல் 395

    (தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது)

    கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல்; – பின்சென்றும்
    ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
    கோட்டிய வில்வாக்கு அறிந்து.

    எம் தலைவியின் கண்களைக் கயல் மீனென
    எண்ணிப் பின்தொடர்ந்த சிறிய மீன்கொத்தி
    வகையாய் ஊக்கத்துடன் முயன்றும் ஒளிரும்புருவத்தை
    வில்லின் வளைவென எண்ணியதால் கொத்தாமல்
    விட்டுச் சென்றது அவ்விடம் நீங்கி.

    பாடல் 396

    (மகளைப் போக்கிய தாய் இரங்கியது)

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ; – அரக்கார்ந்த
    பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப் பின்வாங்கும் அடி.

    செவ்வாம்பல் போலும் வாயும் அழகிய இடையுமுடைச்
    சிறு மகள் செம்பஞ்சுக்குழம்பைப் பாதத்தில் பஞ்சினால்
    தடவினும் மெல்ல எனச் சொல்லி பின்னுக்கு இழுப்பாள்
    அப்பாதங்கள் பரற்கற்கள் நிறை பாலை வழியின்
    ஆறாக்கொடுமையை எவ்வாறு தாங்கும்?

    பாடல் 397

    (தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.)

    ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
    மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
    மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
    கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து..

    ஓலையில் எழுதும் கணக்கரின் ஓசை
    ஒழியும் மாலை நேரம் தலைவன் பிரிதலை
    நினைத்து மாலையைக் கழற்றி வீசியெறிந்து
    நல்லழகிய கொங்கைகளில் பூசிய சந்தன
    நறுங்குழம்பை உதிர்த்துத் துன்புற்று அழுதாள்.

    பாடல் 398

    (உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

    கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி; – சுடர்த்தொடீஇ
    பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு.

    ஒளிவீசும் வளையல் அணிந்தவளே!
    கடந்து போவதற்கு அரிய பாலை வழியில்
    காளையொத்த நின் காதலனுடன் நாளை நடந்து
    கடக்கும் ஆற்றல் உடையாயோ? எனக்
    கேட்கின்றாயோ? ஒருவன் குதிரையைப் பெறும்
    பொழுதே அதில் ஏறிச்செல்லும் முறையையும்
    பயில்பவனாவான் எனவே காதலனைப்
    பின் தொடர்தல் அரிதன்று.

    பாடல் 399

    (இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது)

    முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
    இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம்
    வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
    பூம்பாவை செய்த குறி.

    முலைக்காம்பும் முத்துமாலையும் உடல்
    முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன்
    காரணம் யாதையும் அப்போது யான் அறியேன்
    காதலனுடன் மான்கூட்டம் புலிக்கு அஞ்சும்
    பாலை வழியில் எனைப் பிரிந்து செல்லத்தான்
    பாசமாய்த் தழுவிக்கொண்டாளோ?

    பாடல் 400

    (தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது)

    கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என்ஈன்ற யாயும் பிழைத்ததென் – பொன்னீன்ற
    கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி.

    மன்மதனை முழுதும் எறிக்காது விட்ட
    முக்கண்ணனாம் சிவனும் தன்கூட்டில்
    பொரித்த குயில்குஞ்சைக் கொத்தாமல்
    பாதுகாப்பாய் வளர்த்த காகமும்
    சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த
    சர்ப்பமும் தன்னைப் பெற்றபோதே
    கொல்லாது விடுத்த தன்தாயும் ஒரு
    குற்றமும் செய்யவில்லை, எனக்குக்
    குற்றம் செய்தது பொருள் தேடத்
    தலைவன் பிரிந்த வழியே.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

    ச. கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ஒரே ஒரு பாடல் காட்சியில் நேரடியாகத் தோழியின் முன்னர் நின்று அவள் பேச்சைக் கேட்பதன் மூலம்; உழவன் சிறுபாத்திரம் என்ற தகுதியைப் பெறுகிறான். இடப்பின்புலத்திற்குத் துணைசெய்யு முகத்தான் உழவனும் அவனது செயல்களும் காட்சிப்படுத்தப்படும் பாடல்களைத் தவிர்த்து சொல்லாடலில் இடம்பெறும் உழவனைச் சிறுபாத்திரம் என்று கொள்வதே ஏற்புடைத்து ஆகிறது.

    நற்றிணைப் பாடற் செய்தி

    தலைவி இற்செறிக்கப் படுகிறாள். இது தலைவனுக்குத் தெரியாது. அவள் உழுவிக்கும் வேளாளன் மகள். அவன் தலைவியைச் சந்திக்கப் பகற்குறியில் வயல் வெளியின் சிறைப்புறமாக வந்து நிற்கிறான். தோழி அவனிடம் நேரடியாக நிலவரத்தைச் சொல்ல முடியாது. எனவே நாற்று நட வந்திருக்கும் உழவனிடம் பேசித் தலைவனுக்குப் புரிய வைக்கிறாள். உழவன் கழிக்கவிருக்கும் ‘நெய்தல், கோரை முதலியவற்றைத் தூர எறியாதே; அவை தாம் தலைவிக்கு வளையாகவும், ஆடையாகவும் பயன்படக் கூடியன’ என்று சொல்வதன் மூலம்; ‘இனித் தலைவி வீட்டை விட்டு வேறெங்கும் செல்ல இயலாது; இவற்றை அவளுக்குக் கொண்டு போய்த்தான் கொடுக்க வேண்டும்’ என்று பொருள்படும்படிக் கூறுகிறாள். தோழி சொல்வதை எல்லாம் உழவன் கேட்கிறான்; ஆனால் பதிலுரைக்கும் உரிமையைப் புலனெறி வழக்கு தரவில்லை.

    விடியுமுன்னர் உழவன் மனைவியரோடு வயலுக்குக் கிளம்புகிறான்.   கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கும் உணவிற்கும் வழியில்லை.

    “மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
    பெருநீர் பல்கூட் டெருமை உழவ
    கண்படை பெறாது தண்புலர் விடியல்
    கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
    புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
    கவர்படு கையை கழும மாந்தி
    நீருறு செறுவில் நாறுமுடி அழுத்தநின்
    அடுநரோடு நீ சேறியாயின் வண்
    சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
    மாயிருங் கூந்தல் மடந்தை
    ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே“(பா- 60)

    எனப் பாடியுள்ளார் தூங்கலோரியார்.

    பாடலின் முதலடியில் இருப்பது உவமை. ‘மலை நிமிர்ந்து நின்றாற் போலத் தோன்றும் மிகுந்த நெல்லின் நாற்றுக்கட்டுக் குவியலை  நடவிருக்கும் உழவனே’ என்று அழைக்கிறாள்.

    பணிப்பளு காரணமாக அவனால் தூங்க இயலவில்லை என்பது மூன்றாம் அடியில் தொடர்கிறது. எனவே குளிர்ந்த காலைப் பொழுதில் எழுந்து; நீரில் ஊறிய நெல்லரிசிச் சோற்றைப்; பருத்த வரால்மீன் குழம்புச் சொட்டானத்தை ஊற்றிக் கைகளில் நீர் வழிய உண்டு; மீந்த நீராகாரத்தைக் குடித்து விட்டுத் தன் பெண்டிரோடு வயலில் நாற்றுநட வந்து சேர்ந்தான்.

    அவனை ‘எருமை உழவ’ என்று அழைப்பது அங்கதச்சுவைக்காக எனலாம். இங்கே நையாண்டிக்கு உரியவன் உழவன் அல்லன். அவன் எருமையை உடையவன்; அவ்வளவே. உழவனிடம் பேசுவது போலத் தலைவனிடம் பேசுகிறாள் ஆதலால்; இவ்விளி தலைவனைக் குறிப்பாகச் சுட்டுகிறது. தலைவியை மணந்து கொள்வதில் அவன் மந்தமாக எருமை போலச் செயல்படுகிறான் என்று உணர்த்துகிறது.

    தோழியின் அடுத்த செய்தி; உழவன் எவ்வாறு உலக வாழ்வைத் துய்க்கிறான் என்பதாகும். பாடல் சுட்டும் அடுநர்; உழவனுக்காகச் சமைத்த அவனது மனைவியர். பாடுபடுவதற்காகக்; குளிர்ந்த காலைப் பொழுதில் வயலுக்குக் கிளம்பியவன்; வயிறு முட்ட முந்தைய நாளில் வைத்த மீன்குழம்பும் பழைய சோறும் உண்டு விட்டுக் கிளம்புகிறான். பாடலின் ஏழாவது அடியிலுள்ளது இறைச்சிப் பொருள். நடவுக்குத் தயாராக இருக்கும் நீர் நிறைந்த வயலில் நாற்று முடிச்சினை அழுந்த ஊன்றிச் சுறுசுறுப்புடன் உழவன் செயலாற்றுகிறான். ஆனால் தலைவன்  இன்னும் தலைவியை மணந்து கொள்ளவே இல்லை.

    இல்லறத்தின் இன்பத்தை முழுவீச்சில் அனுபவித்து நிறைவு 

    அடைபவனாக உழவன் காட்டப்படுகிறான். தென்தமிழகத்தில் இன்றும் நடைமுறையிலிருக்கும் ஒரு சமூக வழக்கம் இங்கு நினைவுகூரத் தக்கது. திருமணத்திற்கு முந்தையநாள் மாலை ‘உறுதி பேசும்’ சடங்கு முடிந்ததும்; மணமகனின் சகோதரி அல்லது குடும்பத்தின் மூத்த சுமங்கலி மணமகளை அழைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று; அடுப்புமேட்டில் மண்ணைக் குழைத்துச் சிறிய ‘அடுப்பும் திண்ணையும்’ போட்டு வருவர். என்ன தான் பகலில் பாடுபட்டாலும் கணவனும் மனைவியும் பசியாற அடுப்பில் ஆக்கி  உண்டு; திண்ணையில் ஓய்வெடுக்கும் போது களைப்பு நீங்கி இன்பமாக இல்லறத்தை அனுபவிக்கலாம் என்பதே இதன் பொருள் என்பர். இங்கே உழவன் அதைத்தான் செய்யக் காண்கிறோம். அவன் நாவிற்கு ருசியைப் பொம்மலும் மிளிர்வையும் தருகின்றன. அவனுக்குப் பொங்கிப்போட மனைவியர் உள்ளனர். அவனது பசி நீங்கி வயிறு குளிர்கிறது. மகளிரோடு  அவன் அனுபவிக்கும் இல்லறசுகத்தை இறைச்சி கூறாமல் கூறுகிறது. தலைவனோ இன்னும் தலைவியைப் பெண் கேட்கக்கூட  இல்லை; நீ உலக வாழ்வைத் துய்க்க வேண்டுமெனின் உடன் வரைதல் வேண்டும் என்பது குறிப்பான அறிவுரை.

    இவ்வாறு உழவன் நிலையையும், தலைவன் நிலையையும் அழகுற முரண்படுத்திக் காட்டி; அங்கதத்துடன் இறைச்சிப் பொருளும் இணைய; உலகியலான வாழ்க்கைத் தத்துவத்தைத் தெளிவுறுத்தி; குறிப்பாகத் தலைவனைத் திருமணத்திற்குத் தூண்ட உழவனெனும் சிறுபாத்திரத்தைப் பயன்கொண்டிருப்பது பாடலின் சிறப்பு.

    முடிவுரை

    கூடல் நிமித்தமாகிய திருமணத்திற்குத் தலைவனைத் தூண்ட மருதநிலக் கருப்பொருளான உழவன் எனும் சிறுபாத்திரம் உதவி உள்ளது.

    Share
  • எளிய தீர்வுகள் மூன்று!

    எளிய தீர்வுகள் மூன்று!

    அண்ணாகண்ணன்

    சிந்தனையே மனிதனை உருவாக்கியது. சிக்கல்களை அவன் அணுகும் விதமே அவனை மேம்பட்டவனாக ஆக்கியது. தனது சிக்கல்களைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை அவனுக்கு உண்டு. இதோ இங்கே சிலர், தங்கள் புதிய யோசனைகளைச் செயல்படுத்தியுள்ளார்கள். நான் நேரில் கண்ட அந்த எளிய தீர்வுகளை இங்கே பாருங்கள்.

    தீர்வு – 1 | A simple idea – 1

    தீர்வு – 2 | A simple idea – 2

    தீர்வு – 3 | A simple idea – 3

     

    நீங்களும் இத்தகைய எளிய தீர்வுகளைக் கண்டதுண்டா? உங்களிடமும் இத்தகைய யோசனைகள் உண்டா? அவற்றைக் காணொலியாகப் பதிந்து நமக்கு அனுப்புங்கள். வல்லமையில் வெளியிடுவோம்.

    Image courtesy: https://www.maxpixels.net

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 39

    நாலடியார் நயம் – 39

    நாங்குநேரி வாசஸ்ரீ

    39. கற்புடை மகளிர்

    பாடல் 381

    அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
    பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
    பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
    நறுநுதலாள் நன்மைத் துணை.

    பெறுதற்கரிய கற்பினையுடை இந்திராணியையொத்த
    பெரும்பெயர் பெற்ற மகளிரேயாயினும்
    தன்னைச் சேர நினையும் ஆசையால்
    தன்பின்னே ஆடவர் நில்லா முறையில்
    தம்மைக்காக்கும் நல்லொழுக்கமுடையாளே
    தம்கணவனுக்கு நல்மனைவி.

    பாடல் 382

    குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
    கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
    கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள்.

    குடத்துத் தண்ணீரைக் காய்ச்சிக்குடிக்கும்
    கொடும் வறுமை வரினும் பருகினால்
    கடல் நீரே வற்றுமளவு சுற்றத்தார் வரினும்
    கடமையாகிய குணத்தை ஒழுக்கமாகக்
    கொண்ட இன்மொழி பேசும் பெண்
    கொண்ட இல்வாழ்விற்க்கு மேலானவள்.

    பாடல் 383

    நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
    மேலாறு மேலுறை சோரினும் – மேலாய
    வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
    இல்லாள் அமர்ந்ததே இல்.

    சுவர்கள் இடிந்தமையால் நால்பக்கமும் வழியாகி
    சிறியதாகி எப்புறமும் கூரையின் மேலிருந்து
    மழைநீர் வீழினும் இல்லற நெறியில் வல்லவளாய்
    மேன்மைமிகு கற்புடன் ஊர்புகழத் திகழும்
    மனைவியுடை இல்லமே சிறந்த இல்..

    பாடல் 384

    கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
    உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; – உட்கி
    இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
    மடமொழி மாதராள் பெண்.

    அன்புடைக் கண்ணுக்கு இனியவளாய் கணவன்
    ஆசையுறுமாறு அலங்கரித்துக்கொள்பவளாய்
    அச்சம் உடையவளாய் ஊர்ப்பழிக்கு நாணுபவளாய்
    அன்புக்கணவனுடன் சமயமறிந்து ஊடல் கொண்டு
    அவன் மகிழுமாறு ஊடல்நீங்கி இன்பந்தரும்
    அக்கபடமில்லாப் பேச்சுக்களுடையவளே நற்குலப்பெண்.

    பாடல் 385

    எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
    அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; – எஞ்ஞான்றும்
    என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
    பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

    நாளும் எம் கணவர் எம் தோளைத் தழுவி
    நீங்கினும் முதல் நாளின் நாணம் போலவேயின்றும்
    நாணம் கொள்கின்றோம் என்றிருக்க பொருளாசையால்
    நாணமின்றிப் பலரின் மார்பைப் பொதுமகளிர் எப்படி
    நாடித் தழுவுகின்றனரோ?

    பாடல் 386

    ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம்.

    நல்ல கொடையுள்ளம் கொண்டவனின் செல்வம்
    நுண்ணறிவாளன் கற்றகல்வி போல் பயன்
    நல்கும் எல்லோருக்கும்,  நாணமிகு பெண்ணின்
    நல்லழகோ தெளிந்த அறிவுடையோன் கைக்கூர்வாள்
    நெருங்குதற்கு அரியதுபோல் அரியதாம்.

    பாடல் 387

    கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையும் தோய வரும்.

    தாழ்ந்த கருங்கொள்ளையும் உயர் செங்கொள்ளையும்
    தராதரமின்றி பணத்துக்கு ஆறுமரக்காலென வாங்கினானொரு
    சிற்றூரான் அதுபோல் எம்மோடு ஒப்பில்லா அழகிய
    சிறு நெற்றியுடைப் பொதுமகளிரைத் தழுவிய மலைமார்பன்
    குளிக்காது என்னையும் தழுவ வருகின்றான்.
    (தூணி- நான்கு மரக்கால், பதக்கு-  இரண்டு மரக்கால், தூணிப் பதக்கு- ஆறு மரக்கால்)

    பாடல் 388

    கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
    அடிபைய இட்டொதுங்கிச் சென்று – துடியின்
    இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
    வலக்கண் அனையார்க்கு உரை.

    கொடிய சொற்களைக் கூறாதே பாணனே!
    காரணம் நாங்கள் தலைவனுக்கு உடுக்கையின்
    இடப்புறம்போல் பயனற்று உள்ளொம், அச்சொல்லை
    இங்கிருந்து விலகிச்சென்று உடுக்கையின் வலப்பக்கம்
    போலும் அவருக்குப் பயன்தரும் பொதுமகளிருக்குச் சொல்!

    பாடல் 389

    சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
    ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; – தீப்பறக்கத்
    தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
    நோக்கி இருந்தேனும் யான்.

    கோரைப்புல் பறித்த இடத்தில் நீர்சுரந்த
    குளிர்வயல்சூழ் ஊரிலுள்ள எம்தலைவன் மேல்
    ஈ பறந்தாலும் கண்டு வருந்தியவள் நான்
    இப்போது தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின்
    கொங்கைகள் மோதப்பெற்று சந்தனம்
    கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு
    கண்டு கொண்டிருப்பவளும் நானே.

    பாடல் 390

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி, பாண; – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
    இடைக்கண் அனையார்க்கு உரை.

    மலரும் அரும்புகள் நிறை
    மாலைகள் அணிந்த தலைவன்
    எமக்கு அருள்புரிவாரெனும் பொய்யை
    எப்போதும் சொல்லாதே பாணனே!
    நல்ல கரும்பின் கடைக் கணுக்களுக்கு
    நிகரானவர் யாம், ஆதலில் கரும்பின்
    இடைக்கணுக்களை ஒத்த பரத்தையிடம்
    இப்பேச்சைப் போய்ச் சொல்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(308)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(308)

    கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.

    – திருக்குறள் -925 (கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்...

    தன் கைப்பொருளைக்
    கொடுத்து வாங்கி மதுவைக்
    குடித்துத்
    தன்னுடலைத் தானறியா வகையில்
    தள்ளாடி விழும்நிலை யடைதல்,
    தன்னிலை மறந்து
    செய்வதறியார் செய்யும்
    அறிவற்ற செயலாம்…!

    குறும்பாவில்...

    கைப்பொருள் கொடுத்துவாங்கிக்
    கள்குடித்துத் தன்னுடலைத் தானறியா நிலையடைதல்,
    செய்வதறியாரின் அறிவிலாச் செயலே…!

    மரபுக் கவிதையில்...

    தன்கைப் பொருளைக் கொடுத்தேதான்
    தடையே யிலாமல் வாங்கிவந்து
    நன்மை தராத கள்குடித்தே
    நகர முடியா வகையினிலே
    தன்மெய் யறியா நிலையடைதல்,
    தனது நிலையை மறந்தேதான்
    என்செய் வதென்றே யறியாதே
    ஏதும் செய்வோர் செயலாமே…!

    லிமரைக்கூ..

    வாங்கிக் குடிப்பர் மது,
    தன்னுடலறியா நிலையறியார் செயலதுவே,
    தனைமறந்த அறிவிலார்செய்வ தது…!

    கிராமிய பாணியில்...

    வேண்டாம் வேண்டாம்
    கள்குடி வேண்டாம்,
    கொணத்தக் கெடுத்துக்
    குடியக்கெடுக்கும் கள்ளு
    வேண்டவே வேண்டாம்..

    கைக்காசக் குடுத்துக்
    கள்ள வாங்கிக் குடிச்சி,
    போதயில
    ஓடம்புல துணி
    போறது தெரியாம
    உழுந்த கெடக்கிறத
    ஒழுங்குள்ளவன் செய்யமாட்டான்..

    தன்நெலம தெரியாத
    தன்ன மறந்த
    அறிவே இல்லாதவந்தான்
    அப்புடிச் செய்வான்..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    கள்குடி வேண்டாம்,
    கொணத்தக் கெடுத்துக்
    குடியக்கெடுக்கும் கள்ளு
    வேண்டவே வேண்டாம்…!

    Share