படக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
பளிச்சென்று முகங்காட்டும் செயற்கை மலரை நுட்பமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. வனிலா பாலாஜி. படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்த படமிது என்று இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சொற்பமே வாழ்நாள் எனினும் மணம் பரப்பும் நற்குணத்தை மலர்கள் விடுவதில்லை. மலரின் குணம் மானுடர்க்கிருந்தால் வையம் சிறக்காதோ?
இந்த மலருக்கு நம் கவிஞர்கள் தீட்டவிருக்கும் எழுத்தோவியங்களைக் காணும் ஆவலில் அவர்களை அழைக்கின்றேன் அன்போடு!
*****
”பூவே! நீ பெண்ணின் தலைக்குப் போனாலும் சரி, உயிரற்ற சிலைக்குப் போனாலும் சரி புன்னகைக்க மறுப்பதில்லை. மனிதா பூவிடம் கற்பாய் இப்பாடத்தை!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
புன்னகை…
காட்டுப் பூவின் சிரிப்பினிலே
காணும் பொருளே வேறுவேறே,
வீட்டுப் பெண்ணின் தலையதிலோ
விதியே முடிந்த பிணத்தினிலோ,
போட்டுக் கழற்றும் சிலையினிலோ
போவ தெங்கோ தெரியவில்லை,
காட்டும் மாறாப் புன்னகையே
கற்பாய் மனிதா பூவிடமே…!
*****
”புத்தம்புது மலரென்று உன்னைப் புகைப்படமெடுத்து வலைத்தளங்களில் போட்டுவிட்டால் தேன்தேடும் வண்டு உன்னை நாடிவரும் என்று சிரிக்கிறாயோ?” என வெண்பூவிடம் வினாத்தொடுக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.
ஒரு மொட்டின் சிரிப்பூ…
புத்தம் புது மலரென்று
புகைப்படக்காரர்
புகைப்படமெடுத்து
வலைத் தளங்களில்
போட்டு விட்டால்
தேனைத் தேடும் வண்டு
தேடி வரும் நம்மையென்று
மொட்டுக்களின் கூட்டத்திலே
முந்திக் கொண்டு
மொட்டு விரித்துச் சிரிக்கின்றாயோ
வெண் பூவே!
நீ கெட்டிக்காரி தான்!
*****
”கண் படுமென்று ’மை’யால் திருஷ்டிப்பொட்டு வைப்பதுதானே வழக்கம்? ஆனால் இந்த நிழற்பட நிபுணரோ பூவை வைத்திருக்கிறாரே” என்று வியப்போடு கேட்டுவிட்டு, இவ் வெள்ளைப்பூவின் இயல்புகளை விண்டுரைக்கிறார் திருமிகு. சோமசுந்தரி.
கண்படுமென்று
கண் ‘மை’ கொண்டு
திருஷ்டிப் பொட்டு
வைப்பது தானே வழக்கம்?
தான் பிடித்த புகைப்படத்திற்குக்
கண்படுமென்று
வனிலா பாலாஜி
ஒரு அழகிய பூவை
வைத்தது அதிசயமே!
இந்த வெள்ளைப் பூவானது
சூதும் வாதும்
நிறைந்த பூமியிலே
பூத்திட்ட “வெள்ளந்திப்பூ”
சண்டையும் பூசலும்
நிறைந்த பூமியிலே
பூத்திட்ட “சமரசப்பூ”
ஏற்றமும் தாழ்வும்
நிறைந்த பூமியிலே
பூத்திட்ட “சமத்துவப்பூ”
தூசும் மாசும்
நிறைந்த பூமியிலே
பூத்திட்ட “தூய்மைப்பூ”
*****
”மலர்களைக் காணக் காணக் கோடியின்பம்; மாயாஜாலம் செய்யும் பூக் கூட்டங்கள் நம் மனநாட்டங்கள்!” என்று மலர்களை எண்ணிப் பூரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.
விண்கற்களாய்த் தெரிகிறதே
இந்த மலர் வெளிர்நிறத்தில்
ஆயிரமாயிரம் வண்ணங்கள்
இந்த மலர்களின் வகையினிலே
ஒவ்வொன்றும் ஓர் அழகு
ஒத்துப் போகும் அதன் நிறத்தோடே
வாசமுண்டு வாசமில்லை
வகையறாக்கள் வெவ்வேறே
தவழ்ந்து வரும் தென்றலில்
வாசமிகு வண்ண மலர்கள்
மனதை வருடும் மாயத்தைச்
செய்யும் பணியே அதீதம்
காலை மாலை நேரமில்லை
காணக்காணக் கோடியின்பம்
மாயஜாலம் செய்கின்ற
பூக்கூட்டங்களே நம்மன நாட்டங்களே!!
*****
”மலரே! உன்னை வலிக்காமல் பறிக்க என் விரல்கள் காத்துக்கொண்டிருக்க, உன் ஒருநாள் வாசத்துக்குக் குடையாகிறதே அந்த நிலவு!” என்று சுவையாகக் கவிதை படைத்திருக்கிறார் திருமிகு. கி. அனிதா.
நீ என்று மலர்வாய் என உனக்கு வலி தெரியாமல்
பறிக்கக் காத்து கொண்டிருக்கும் என் கை விரல்…
நீ மலரும் நேரம் சூரியன் மறைகின்றான்…
நீ பரப்பிய வாசனை அறிந்து பட்டாம்பூச்சி உன்னைச் சுற்றும் …
நீ ஒருநாள் மட்டுமே மண்ணில் வாசம் செய்ய
நிலவு குடையாகிறதே.!!!….
*****
பளீரெனச் சிரிக்கும் மணமிலா இச் செயற்கை மலருக்கும் தம் அழகிய கவிதைகளால் மணமூட்டியிருக்கின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்துவருகின்றது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…
மொட்டு மலரட்டும்!
கிட்டிய நாளையெல்லாம்
எட்டிக்காய் என்றெண்ணி
வெட்டியாய்க் கழித்து – ஞானப்
பட்டினியில் வாழ்ந்திருப்போம்…
ஒரு நாளில் கருவுற்று
மறுநாளில் சருகாகி
உயிர்நீங்கி மறைந்தாலும்
வாட்டம் முகம் காட்டவில்லை…
வண்டுவந்து தீண்டிடுமோ
மகரந்தம் சேர்ந்திடுமோ
விருட்ச விதை விளைந்திடுமோ
என்றெண்ணி வாழ்வதில்லை…
புவியெங்கும் மணம்வீசி
அமிழ்தத் தேன் கொடுத்து
மகிழ்ச்சிப் புன்னகை உயிர்ப்பித்து
மலர்ந்திருக்க மறப்பதில்லை…
மனவாட்டம் தனை விடுத்து
மனிதநேயம் தனை வளர்த்து
வாழ்வதனின் பலன் வளர்க்க – நம்
மனமொட்டு மலரட்டும்!
”ஒருநாள் வாழ்க்கைதான் என்றபோதும் மலர்கள் வாட்டமடைவதில்லை; புவியெங்கும் மணம்வீசிப் புன்னகைக்க மறப்பதில்லை. ஆதலால் மனவாட்டம் விடுத்து மனிதநேயத்தோடு வாழ நம் மனமொட்டு மலரட்டும்!” என்ற உயர்ந்த சிந்தனையைக் கவிதையில் சிறப்பாய்ச் சொல்லியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.