நாங்குநேரி வாசஸ்ரீ

40. காம நுதலியல்

பாடல் 391

(தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது)

முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; – வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு..

கடலலைகள் நில்லாமல் மோதும் நீண்ட
கழிகளின் குளிர்கரையுடை அரசனே!
கணவனுடன் புணராவிடின் பசலை படரும்
காதல் சுவையற்றுப்போகும் ஊடிவருந்தாவிடின்,
கூடிப்பின் ஊடுதலே காதல் நெறி.

பாடல் 392

தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு – இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

தம்மால் விரும்பப்பட்ட தலைவரின் மாலை
தரித்த அழகிய மார்பைப் பூரிக்கத் தழுவும் அத்
தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, ‘இம்’ எனும்
தொனியுடன் மேகம் நீரைப் பொழிய
திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை
தீய சாப்பறையை ஒத்திருந்தது.

பாடல் 393

(தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.)

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

வருந்தி வேலைசெய்யும் கம்மாளரும்
வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து
வைக்கும் மயக்கம் தரும் மாலையில் மலர்களை
வகையாய் ஆய்ந்தெடுத்து மாலையாய்த் தொடுத்து
வைத்து தலைவன் இல்லா மகளிர்க்கு இம்மாலை
வழங்கும் பயன்தான் என்ன? எனக் கலங்கி அழுதாள்.

பாடல் 394

(வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது)

செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் – மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.

சூரியன் மறையும் மாலை நேரம் கண்டு வருந்தி
செவ்வரி பரந்த கண்களின் நீரை மெல்விரலால்
எடுத்தெறிந்து விம்மி அழுது தன் மெல்விரலால்
எமைப் பிரிந்த நாட்களைக் கணக்கிட்டுப்
படுக்கையில் தன் தோளையே தலையணையாய் வைத்துப்
படுத்து நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ?

பாடல் 395

(தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது)

கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; – பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.

எம் தலைவியின் கண்களைக் கயல் மீனென
எண்ணிப் பின்தொடர்ந்த சிறிய மீன்கொத்தி
வகையாய் ஊக்கத்துடன் முயன்றும் ஒளிரும்புருவத்தை
வில்லின் வளைவென எண்ணியதால் கொத்தாமல்
விட்டுச் சென்றது அவ்விடம் நீங்கி.

பாடல் 396

(மகளைப் போக்கிய தாய் இரங்கியது)

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; – அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.

செவ்வாம்பல் போலும் வாயும் அழகிய இடையுமுடைச்
சிறு மகள் செம்பஞ்சுக்குழம்பைப் பாதத்தில் பஞ்சினால்
தடவினும் மெல்ல எனச் சொல்லி பின்னுக்கு இழுப்பாள்
அப்பாதங்கள் பரற்கற்கள் நிறை பாலை வழியின்
ஆறாக்கொடுமையை எவ்வாறு தாங்கும்?

பாடல் 397

(தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.)

ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து..

ஓலையில் எழுதும் கணக்கரின் ஓசை
ஒழியும் மாலை நேரம் தலைவன் பிரிதலை
நினைத்து மாலையைக் கழற்றி வீசியெறிந்து
நல்லழகிய கொங்கைகளில் பூசிய சந்தன
நறுங்குழம்பை உதிர்த்துத் துன்புற்று அழுதாள்.

பாடல் 398

(உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; – சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

ஒளிவீசும் வளையல் அணிந்தவளே!
கடந்து போவதற்கு அரிய பாலை வழியில்
காளையொத்த நின் காதலனுடன் நாளை நடந்து
கடக்கும் ஆற்றல் உடையாயோ? எனக்
கேட்கின்றாயோ? ஒருவன் குதிரையைப் பெறும்
பொழுதே அதில் ஏறிச்செல்லும் முறையையும்
பயில்பவனாவான் எனவே காதலனைப்
பின் தொடர்தல் அரிதன்று.

பாடல் 399

(இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது)

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.

முலைக்காம்பும் முத்துமாலையும் உடல்
முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன்
காரணம் யாதையும் அப்போது யான் அறியேன்
காதலனுடன் மான்கூட்டம் புலிக்கு அஞ்சும்
பாலை வழியில் எனைப் பிரிந்து செல்லத்தான்
பாசமாய்த் தழுவிக்கொண்டாளோ?

பாடல் 400

(தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது)

கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் – பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.

மன்மதனை முழுதும் எறிக்காது விட்ட
முக்கண்ணனாம் சிவனும் தன்கூட்டில்
பொரித்த குயில்குஞ்சைக் கொத்தாமல்
பாதுகாப்பாய் வளர்த்த காகமும்
சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த
சர்ப்பமும் தன்னைப் பெற்றபோதே
கொல்லாது விடுத்த தன்தாயும் ஒரு
குற்றமும் செய்யவில்லை, எனக்குக்
குற்றம் செய்தது பொருள் தேடத்
தலைவன் பிரிந்த வழியே.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாலடியார் நயம் – 40

  1. நாலடியார் நயம், இந்தப் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. நாலடியாரின் திரண்ட கருத்துகளை எளிய, சுவையான நடையில் எடுத்தியம்பிய நாங்குநேரி வாசஸ்ரீ அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *