அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

0
1

ச. கண்மணி கணேசன்,
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு),
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

ஒரே ஒரு பாடல் காட்சியில் நேரடியாகத் தோழியின் முன்னர் நின்று அவள் பேச்சைக் கேட்பதன் மூலம்; உழவன் சிறுபாத்திரம் என்ற தகுதியைப் பெறுகிறான். இடப்பின்புலத்திற்குத் துணைசெய்யு முகத்தான் உழவனும் அவனது செயல்களும் காட்சிப்படுத்தப்படும் பாடல்களைத் தவிர்த்து சொல்லாடலில் இடம்பெறும் உழவனைச் சிறுபாத்திரம் என்று கொள்வதே ஏற்புடைத்து ஆகிறது.

நற்றிணைப் பாடற் செய்தி

தலைவி இற்செறிக்கப் படுகிறாள். இது தலைவனுக்குத் தெரியாது. அவள் உழுவிக்கும் வேளாளன் மகள். அவன் தலைவியைச் சந்திக்கப் பகற்குறியில் வயல் வெளியின் சிறைப்புறமாக வந்து நிற்கிறான். தோழி அவனிடம் நேரடியாக நிலவரத்தைச் சொல்ல முடியாது. எனவே நாற்று நட வந்திருக்கும் உழவனிடம் பேசித் தலைவனுக்குப் புரிய வைக்கிறாள். உழவன் கழிக்கவிருக்கும் ‘நெய்தல், கோரை முதலியவற்றைத் தூர எறியாதே; அவை தாம் தலைவிக்கு வளையாகவும், ஆடையாகவும் பயன்படக் கூடியன’ என்று சொல்வதன் மூலம்; ‘இனித் தலைவி வீட்டை விட்டு வேறெங்கும் செல்ல இயலாது; இவற்றை அவளுக்குக் கொண்டு போய்த்தான் கொடுக்க வேண்டும்’ என்று பொருள்படும்படிக் கூறுகிறாள். தோழி சொல்வதை எல்லாம் உழவன் கேட்கிறான்; ஆனால் பதிலுரைக்கும் உரிமையைப் புலனெறி வழக்கு தரவில்லை.

விடியுமுன்னர் உழவன் மனைவியரோடு வயலுக்குக் கிளம்புகிறான்.   கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கும் உணவிற்கும் வழியில்லை.

“மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநீர் பல்கூட் டெருமை உழவ
கண்படை பெறாது தண்புலர் விடியல்
கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும மாந்தி
நீருறு செறுவில் நாறுமுடி அழுத்தநின்
அடுநரோடு நீ சேறியாயின் வண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
மாயிருங் கூந்தல் மடந்தை
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே“(பா- 60)

எனப் பாடியுள்ளார் தூங்கலோரியார்.

பாடலின் முதலடியில் இருப்பது உவமை. ‘மலை நிமிர்ந்து நின்றாற் போலத் தோன்றும் மிகுந்த நெல்லின் நாற்றுக்கட்டுக் குவியலை  நடவிருக்கும் உழவனே’ என்று அழைக்கிறாள்.

பணிப்பளு காரணமாக அவனால் தூங்க இயலவில்லை என்பது மூன்றாம் அடியில் தொடர்கிறது. எனவே குளிர்ந்த காலைப் பொழுதில் எழுந்து; நீரில் ஊறிய நெல்லரிசிச் சோற்றைப்; பருத்த வரால்மீன் குழம்புச் சொட்டானத்தை ஊற்றிக் கைகளில் நீர் வழிய உண்டு; மீந்த நீராகாரத்தைக் குடித்து விட்டுத் தன் பெண்டிரோடு வயலில் நாற்றுநட வந்து சேர்ந்தான்.

அவனை ‘எருமை உழவ’ என்று அழைப்பது அங்கதச்சுவைக்காக எனலாம். இங்கே நையாண்டிக்கு உரியவன் உழவன் அல்லன். அவன் எருமையை உடையவன்; அவ்வளவே. உழவனிடம் பேசுவது போலத் தலைவனிடம் பேசுகிறாள் ஆதலால்; இவ்விளி தலைவனைக் குறிப்பாகச் சுட்டுகிறது. தலைவியை மணந்து கொள்வதில் அவன் மந்தமாக எருமை போலச் செயல்படுகிறான் என்று உணர்த்துகிறது.

தோழியின் அடுத்த செய்தி; உழவன் எவ்வாறு உலக வாழ்வைத் துய்க்கிறான் என்பதாகும். பாடல் சுட்டும் அடுநர்; உழவனுக்காகச் சமைத்த அவனது மனைவியர். பாடுபடுவதற்காகக்; குளிர்ந்த காலைப் பொழுதில் வயலுக்குக் கிளம்பியவன்; வயிறு முட்ட முந்தைய நாளில் வைத்த மீன்குழம்பும் பழைய சோறும் உண்டு விட்டுக் கிளம்புகிறான். பாடலின் ஏழாவது அடியிலுள்ளது இறைச்சிப் பொருள். நடவுக்குத் தயாராக இருக்கும் நீர் நிறைந்த வயலில் நாற்று முடிச்சினை அழுந்த ஊன்றிச் சுறுசுறுப்புடன் உழவன் செயலாற்றுகிறான். ஆனால் தலைவன்  இன்னும் தலைவியை மணந்து கொள்ளவே இல்லை.

இல்லறத்தின் இன்பத்தை முழுவீச்சில் அனுபவித்து நிறைவு 

அடைபவனாக உழவன் காட்டப்படுகிறான். தென்தமிழகத்தில் இன்றும் நடைமுறையிலிருக்கும் ஒரு சமூக வழக்கம் இங்கு நினைவுகூரத் தக்கது. திருமணத்திற்கு முந்தையநாள் மாலை ‘உறுதி பேசும்’ சடங்கு முடிந்ததும்; மணமகனின் சகோதரி அல்லது குடும்பத்தின் மூத்த சுமங்கலி மணமகளை அழைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று; அடுப்புமேட்டில் மண்ணைக் குழைத்துச் சிறிய ‘அடுப்பும் திண்ணையும்’ போட்டு வருவர். என்ன தான் பகலில் பாடுபட்டாலும் கணவனும் மனைவியும் பசியாற அடுப்பில் ஆக்கி  உண்டு; திண்ணையில் ஓய்வெடுக்கும் போது களைப்பு நீங்கி இன்பமாக இல்லறத்தை அனுபவிக்கலாம் என்பதே இதன் பொருள் என்பர். இங்கே உழவன் அதைத்தான் செய்யக் காண்கிறோம். அவன் நாவிற்கு ருசியைப் பொம்மலும் மிளிர்வையும் தருகின்றன. அவனுக்குப் பொங்கிப்போட மனைவியர் உள்ளனர். அவனது பசி நீங்கி வயிறு குளிர்கிறது. மகளிரோடு  அவன் அனுபவிக்கும் இல்லறசுகத்தை இறைச்சி கூறாமல் கூறுகிறது. தலைவனோ இன்னும் தலைவியைப் பெண் கேட்கக்கூட  இல்லை; நீ உலக வாழ்வைத் துய்க்க வேண்டுமெனின் உடன் வரைதல் வேண்டும் என்பது குறிப்பான அறிவுரை.

இவ்வாறு உழவன் நிலையையும், தலைவன் நிலையையும் அழகுற முரண்படுத்திக் காட்டி; அங்கதத்துடன் இறைச்சிப் பொருளும் இணைய; உலகியலான வாழ்க்கைத் தத்துவத்தைத் தெளிவுறுத்தி; குறிப்பாகத் தலைவனைத் திருமணத்திற்குத் தூண்ட உழவனெனும் சிறுபாத்திரத்தைப் பயன்கொண்டிருப்பது பாடலின் சிறப்பு.

முடிவுரை

கூடல் நிமித்தமாகிய திருமணத்திற்குத் தலைவனைத் தூண்ட மருதநிலக் கருப்பொருளான உழவன் எனும் சிறுபாத்திரம் உதவி உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.