வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மாலை வேளை
டௌனில் உள்ள மிகவும் நல்ல பேக்கரியிலிருந்து தனியாக செய்யச்சொல்லிச் தயாரிக்கப்பட்ட பெரிய கேக் நாலு மெழுகுவர்த்திகளுடன் மேசை மேல் இருந்தது.
மின்னுகின்ற ரிப்பன்களும், பல வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள பலூன்களும் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.
நாங்க எங்க பொண்ணோட பிறந்த நாளக்கொண்டாடறோம்.
விருந்தினர் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்கதவு சாத்தவில்லை. அறையின் பலூன்களையும், ரிப்பன்களையும் அசைத்துக்கொண்டு இளம்காற்று மட்டும் அடிக்கடி வீசியது.
வீடு சிறியதுதான். ஆனால் எங்க நாலுபேருக்கு வசிக்க இதைவிடப் பெரியவீடு தேவையில்ல. அலீனா வாழ்க்கையில் திருப்தியடைந்தாள். கிறிஸ்ஸேக்ரட், ஃபார்ட் ஸ்கூலில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். ஸ்வீட்டி அதற்குப் பக்கத்தில் உள்ள கிண்டர்கார்டனில் படிக்கிறாள். அவர்களுடைய படிப்பை கவனித்துக்கொள்வது அலீனாதான். என்னோட வேலயெல்லாம் அவங்களக் கூட்டிட்டு டௌனுக்குப் போவதோ, பீச்சில் போய் உட்காருவதோ, சினிமாவுக்குக் கூட்டீட்டுப் போவதோதான். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கும். அன்றைக்கு நான் சீசன் டிக்கெட்டையும் எடுத்திட்டு இரயில் நிலையத்துக்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக வெயிலின் சூடு வரும்வரை படுத்து உறங்கவும் மாட்டேன். நாங்கள் குர்பானாவுக்காக பத்ராசனப் பள்ளிக்குப் போவோம். அது முடிந்தால் இறைச்சியோ மீனோ வாங்க டௌனுக்கு நான் மட்டும் போவேன். சாப்பாட்டுக்கப்பறம் நான் கொஞ்சநேரம் தூங்குவதும் ஞாயிற்றுக்கிழமைதான். ஞாயிற்றுக்கிழமையை நானும், அலீனாவும் மக்களும் ஒரே போல் விரும்புவோம். அன்று கடவுள் இக்குடும்பத்தை ஆசீர்வதிக்கவும் தூய்மைப்படுத்தவும் செய்வார்.
இந்த வருடம் ஸ்வீட்டியின் பிறந்ததாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்தது ஒரு அதிர்ஷ்டம்தான். குர்பான முடிந்து நான் போய் ஒரு சேவல்வாத்தை வாங்கிவந்தேன். சைக்கிளில் மீன்கொண்டு வருகின்ற டொமினிக்கிடமிருந்து திருத மீனும் நெத்தலியும் வாங்கினோம். மீன்வறுவல் போலவே கூர்க்கையின் (கேரளாவில் சமைக்கப் பயன்படுத்தப்படும் கிழங்கு வகை) வறுவலும் எங்க அனைவருக்கும் பிடிக்கும். கூர்க்கையை தோல் களைந்து பாகப்படுத்தியது நானும் மக்களும்தான். அலீனா வாத்தையும், மீனையும் எங்களைத் தொடவிடவில்லை.
உணவிற்கு முன்பாக அலீனா வைன் க்ளாஸ்களில் சிவப்பு திராட்சை ரசம் தந்தாள். வைன் டம்ளர்களை உயர்த்தி நாங்கள் இருவரும் பாணீய உபசாரம் செய்துகொண்டோம்.
சாப்பிட்டு முடிச்சு நா கொஞ்சம் தல சாய்ச்சே. மக்கள் விளையாடீட்டிருந்தாங்க. அவங்ககிட்ட அலீனா வெளில எங்கயும் போகக்கூடாது என்றாள். பிறகு அவளும் மதிய தூக்க மயக்கத்திலாண்டாள். மயக்கத்திற்கிடையிலும் ஏதோ சில சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது.
உறக்க மயக்கம் தீர்வதற்கு முன்பு பேக்கரி வேலைக்காரன் ஒருவன் பிறந்தநாள் கேக்கும் எடுத்துக்கொண்டு வந்தான்.
மாலையானது.
குழந்தைகள் மாலைப்பொழுதிற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் புதிய ஆடை அணிந்தனர். அவர்களுடைய விளையாட்டும் சிரிப்பும் வீட்டை முழுவதும் உற்சாகப்படுத்தியது. பலூனும் வண்ண நாடாவும் வைத்து அவர்களே அறையை அலங்கரித்தனர். நானும் அலீனாவும் அவங்களோட ஒவ்வொரு சலனங்களையும் ஒவ்வொரு விளையாட்டுகளையும் பார்த்து சந்தோஷப்பட்டோம்.
மெழுகுவர்த்தி ஊதி அணைப்பதற்கும் ஸ்வீட்டிக்குப் பிறந்ததாள் வாழ்த்துகள் கேட்டு கேக் வெட்டுவதற்கான நேரம் நெருங்கியது. பிள்ளைகள் அதற்காகத் தயாராயினர். அலீனா மெழுகுவர்த்தி பத்த வைத்தாள். ஸ்வீட்டி அதற்கு நேராகக்குனிந்தாள்.
என்னோட தொண்ட வரளுது, நெஞ்சு வலிக்குது. அதொரு கெட்டக்கனவாக இருக்கட்டுமென்று நிம்மதியடையலாம் என்று ஆசைப்பட்டு சுற்றும் முற்றும் பார்க்கும்போது காண்பது சிதறிக்கிடக்கின்ற கேக் துண்டுகள், உடைந்த பலூன்கள், விழுந்து கிடக்கின்ற ரிப்பனுகள்… பிறகு ஏதோ துவம்ச மிருகத்தினுடையது போன்ற மணம்.
வீட்டுக்குள்ள அவன் விரிச்சுப்புடிச்ச கத்தியை கையிலேந்தி பாய்ந்து வந்தான். கடுமையான ஒரு அலறல் முழங்கியது. என்ன பண்றதுன்னு தெரியாம நான் முழிச்சே அலீனா பயந்து நடுங்கிய மக்களைச் கட்டிப் பிடித்திருந்தாள்.
“யா… ர… து?” ………………நான் விக்கி விக்கிக்கேட்டேன்.
அவன் கத்தியை என் கழுத்தில் வைத்து அதன் நுனியை தொண்டைக்குழியில் ஆழ்த்தி நசுக்கினான். ரத்தமே வந்திருக்கும்.
“பேசாம போய் இருக்கறப் பணத்த எடுத்திட்டு வா!”. அவன் மிரட்டினான். நான் உதவுவோரற்று பின்னால் நகர்ந்தேன். அவன் கத்தியை அலீனாவுக்கு நேராகப் பிடித்தான்.
“செயினயும் கம்மலும் கழட்டு. இந்தக் கொழந்தையோடதயும்…”
ஸ்வீட்டி காற்றில் ஆடும் இலைபோல நடுங்கிக்கொண்டிருந்தாள்.
“ம்ம்… சீக்கிரம்…”
அவன் அவசரப்படுத்தினான்
“மறுபடியும் வருவே………..”
சுட்டெரிக்கின்ற ஒரு பார்வையை அலீனா மீது பதித்துவிட்ட அவன் சொன்னான். அவள் பயந்து வெளிறினாள். ஏதோ வதை செய்யும் விலங்கின் வாசத்தைப் போன்ற கடுமையான வாசத்தை அறையில் விட்டுவிட்டு அவன் வேகமாக வெளியில் நடந்தான்.