சிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்
முனைவர் என்.அருணாச்சலம்,
கல்வி உளவியலாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி
“மரணம்… வாழ்வின் முக்கிய அம்சம்”. மரணம்—வளர்ச்சியின் கடைசி கட்டம் என்ற ஆங்கில புத்தகம், மரணம் இயல்பானது, அனைத்து உயிரினங்களின் இயற்கையான முடிவே மரணம் என்கிறது. இறப்பு என்பது உயிரினங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நின்று விடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இறப்பு என்பது அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும்.
ஒரு உயிரி தானாகவே தன் மரணத்தைத் தேடிக்கொண்டால், அது மரணம் என்றாலும் அது இயற்கையின் நியதிக்கு மாறாக இருப்பதால் அதைத் தற்கொலை அல்லது சுயமரணம் என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO, 2020), உலகில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலையால் இறப்பதாகக் குறிப்பிடுகின்றது. உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும் குறிப்பாக 45 வயதுக்குக் குறைவானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்
தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலை நடைபெறுகிறது. உலக அளவில் பெண்கள் தற்கொலை செய்வதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. சர்வதேச சுகாதார அமைப்பின் ஆய்வின்படி இந்தியாவில் ஒவ்வொரு லட்சம் மக்களுக்கும், 16 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழகத்திலும் மகாராஷ்டிர மாநிலத்திலும்தான் இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைச் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (2020) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய நகரங்களைப் பொறுத்தவரையில் தற்கொலை மிக அதிகமாக நடைபெறும் நகரம், டெல்லி. அதைத் தொடர்ந்து சென்னை, இரண்டாம் இடத்தில் உள்ளது.
தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினைகளே முதன்மையான காரணமாகவும், உடல்நலக் குறைவு இரண்டாவதாகவும், திருமணம், போதைப் பழக்கம், மதுப் பழக்கம், காதல் மற்றும் இதர உறவு முறைகளும் தற்கொலைக்குப் பிரதானமான காரணமாகவும், வேலையின்மை, வறுமை எனப் பல காரணங்களாலும் தற்கொலை நடப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்கொலை செய்துகொள்வோருள் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவே உள்ளது.
இந்தியாவிலேயே குடும்பமாகத் தற்கொலை செய்துகொள்வது தமிழ்நாட்டில்தான் அதிகம் நடக்கிறது என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும், மேலும் தினக்கூலிகளே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்வதும் (Suicidal Idiotic) இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. தமிழக அளவில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரியில் தற்கொலை மரணம் அதிகம் நடைபெறுகிறது. குமரியில் தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும் பகுதியினர், நன்கு படித்தவர்களாக இருக்கிறார்கள் (2019).
தற்கொலைக்கான காரணங்கள் உற்று நோக்கப்பட வேண்டியவை. ஆனால், பொதுவெளியில் விவாதிக்கப்படாத விஷயமாகவே இன்று வரை இது நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்கொலை ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போலத் தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்குக் காரணமாகிறது. உலகளாவிய ரீதியில் மரணத்திற்குக் காரணமாக விளங்கும் 10ஆவது முக்கியக் காரணியாகத் தற்கொலை கருதப்படுகிறது.
ஒரு மனிதன் தன் வாழ்க்கை நிகழ்வில் ஏற்படும் எதிர்மறை (negative) விளைவுகளால் உண்டாகும் பாரங்கள் கூடுதல் சுமைகளாய் மாறும்பொழுது அவன் அதை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுக்கும் வழி, சுய உள்நோக்குடன் கூடிய மரணம். தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் அறிந்தே தன்னைத்தானே மரணம் அடையச் செய்துகொள்ளும் செயலாகும். தற்கொலை முயற்சியில் ஒரு முறை ஈடுபட்ட ஒருவர், எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கோள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ஏன் பாரம் உண்டாகிறது? பாரம் ஏன் கூடுதல் சுமையாகிறது?
ஒரே விடை…. உணர்ச்சிவயப்படல் (Emotions)….. உங்களின் சிந்தனைகள் (Thoughts). இவையே தற்கொலைக்கு அடிப்படைக் காரணம். அப்படி என்றால் சிந்தனை தவறா? சிந்தனை தவறில்லை, சிந்திப்பதால் (Thinking) உண்டாகும் சுய உரையாடலின் (self talk) மூலம் வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் தூண்டும் காரணியாகச் செயல்பட்டு தற்கொலையை நிகழ்த்தி விடுகின்றன. சுய உரையாடல் எனபதே நமது நிஜம். இது நம்மைத் தவிர வேறு யாரும் அறிந்தோ, உணர்ந்தோ கொள்ள இயலாது. சுய உரையாடல் நம் உள் மனத்தில் நடைபெறுகிறது. நாம் நமக்குள் பேசிக்கொள்வதே சுய உரையாடல் ஆகும்.
இந்தச் சுய உரையாடல் நிகழும் நம் ஆழ்மனச் (subconscious) சிந்தனைச் செயல் முறையில் (thinking process) பல்வேறு காரணங்களால் குறிப்பாக, குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், பயம், தோல்வி, கடுமையான நோய், போதைப் பழக்கம், ஏமாற்றம், விரக்தி, மன நோய், பொருளாதாரச் சிக்கல், தீராத பிரச்சனைகள் போன்றவை பல்வேறு எதிர்மறை எண்ணங்களை (negative thoughts) உருவாக்கும் போது, மன அழுத்தம் (stress), மனச் சோர்வு (depression) மனப்பித்து (schizophrenia), இருமுனையப் பிறழ்வு (bipolar disorder), ஆளுமைச் சிதைவு (personality disorder) இன்னும் மன நோய் சார்ந்த விளைவுகள் உண்டாகின்றன. இவையே தற்கொலைக்கு மூல காரணிகளாகச் செயல்படுகின்றன.
இதற்கு என்ன தீர்வு?
1.நம் சுய சிந்தனைகள் அதிக நேராக்க உணர்வுடன (Positive) இருக்க பழக்கிக்கொள்ள வேண்டும்.
2. நம் சுய சிந்தனைகள் நேராக்க உணர்வுடன் இருந்தாலும் அதில் எதிர்மறைச் சிந்தனைகளை முற்றிலும் தவிர்க்காமல் அவற்றைப் பிரதிபலிக்கவிட்டு பின் கட்டுப்படுத்திக்கொள்ளும் வலிமையைத் தர கூடிய சிந்தனைகளை எண்ண வேண்டும்
3. நம் கனவுகளும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் யதர்த்தமானவையாக இருக்க வேண்டும்
4.நமக்குள் நடக்கும் சுய உரையாடல்களில் உணர்வுகளை விலக்கி வைத்துவிட்டு யதார்த்தம் சார்ந்தவையாய் இருக்க வேண்டும்.
5. இலக்குகளை (target) நம் பலம் (strength) மற்றும் பலவீனம் (weakness) சார்ந்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
6. ஆசை (desire) மற்றும் கனவுகளை நிஜங்களோடு ஒப்பிடும்படி மறுசீர் ஆய்வு செய்து, அதை மாற்றியோ அல்லது மறந்து விடவோ வேண்டும்.
7. பழக்கங்கள் (Habits) எதுவும் நம்மை அடிமை கொள்ளவிடாமல் இருக்க வேண்டும்.
8. மன பாரங்களைச் சேர விடாமல் அவற்றைக் கொட்டிவிட வேண்டும் (ventilate).
9. விரக்தி, ஏமாற்றம், இயலாமை வரும் பொழுது அவை தற்காலிகம் என்கிற மாற்றுச் சிந்தனை (alternative thought) கொள்ள வேண்டும்
10. முடிவெடுத்தலின் பொது ஒரே முடிவை மட்டும் நிர்ணயம் செய்துகொள்ளாமல் மாற்று வழிகளையும் ஆராய்ந்து, தேவைக்கு ஏற்ப மாற்றி வாழ்வியல் யாதார்த்தத்தில் கிடைக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
11. எதுவும் முடிவல்ல, இன்னும் மாற்று வழி உள்ளது அதன் மூலம் நம் இலக்கை அடையலாம் என்கிற கோட்பாடைத் தரும் எண்ணங்களைச் சிந்திக்கச் வேண்டும்.
12. நம்பிக்கைகள் வேறுபட்டாலும், மகிழ்ச்சி, குடும்பம், சமூகம், உறவுகள் என்கிற அடிப்படைக் கட்டமைப்புகளில் சூழல் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் சிந்தனைகளைச் சற்றே மாற்றிக்கொள்ளச் சொல்லப்படும் தீர்வுகள் ஆகும்.
ஆகவே, உங்களை மீறி உங்களின் சுய மரணம் நிச்சயம் நடக்கப் போவதில்லை. உங்களின் சாதனைக்கும் வேதனைக்கும் உங்கள் சிந்தனைகளே அடிப்படைக் காரணங்கள். உங்கள் குடும்பம், உறவுகள், நட்புகள், சமூகம் எல்லாம் உங்களைக் கைவிட்டு விலகிச் சென்றாலும் உங்களின் சிந்தனை உங்களைக் கைவிடாது. அதுவே உங்களைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி உயர்த்தும்.
உங்கள் எண்ணங்களே நீங்கள்! தற்கொலை ஒரு தீர்வு அல்ல!!