Year: 2020

  • ஆசைபற்றி அறையலுற்றேன்

    ஆசைபற்றி அறையலுற்றேன்

    ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    ‘வல்லமையில்’ பல கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. கடந்த இரண்டு திங்களில் வல்லமை மின்னிதழில் அதற்குமுன் வெளிவந்த பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்த நிலையில் இந்தக் கட்டுரையை எழுதியே ஆக வேண்டும என்ற நிலை எனக்கு வந்தது. இந்தக்  கட்டுரையில் காணும் கருத்துகளை அருள்கூர்ந்து அறிவுரையாகக் கருதாமல், வழிகாட்டுதலாகக் கொண்டால் எனக்கு நிறைவு. எதிர்கால ஆய்வு சிறக்கவும் கூடும். அந்த வகையில் தமிழியல் ஆய்வுலகத்தின் இரங்கத்தக்க நிலையினைக் கருத்திற்கொண்டு ஆய்வு நெறிபற்றிய சில கருத்துகளைப் பணிவுடன்  முன்வைக்கிறேன்.

    கட்டுரைகள் எழுதப்படுவதன் நோக்கம்

    தற்காலத் தமிழியல் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவோ ஆய்வுத் துறை சிறக்கவோ ஆராய்ச்சி உண்மைகளைத் தமிழுலகம் அறியாமல் போய்விடக் கூடாதே என்னும் ஆதங்கத்தின் காரணமாகவோ எழுதப்படுகின்றன என நம்பி ஏமாந்து போக வேண்டியதில்லை. முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களின் பல்கலைக்கழகத் தற்காலிக அனுமதி நிரந்தர அனுமதியாக (CONFIRMATION) மாறுவதற்கும், சுயநிதிக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள் சில ஆய்வுத்தாள்களை வெளியிட்டாலேயே ஊதிய உயர்வு என்னும் நிலை இருப்பதனாலும் முன்னாய்வுச் சுருக்கத்தொடு இரண்டு ஆய்வுத்தாள்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் பல்கலைக்கழக விதியாலுமே பெரும்பாலும் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

    ஆய்வுக் கட்டுரைகளின் நிலை

    ஆய்வேடு எப்படியோ அப்படித்தான் ஆய்வுக் கட்டுரைகளும். ஆய்வேடுகளில் ஆழமும் செறிவும் இல்லாமற் போனதற்கு ஆய்வுத் தலைப்புகளே தலையாய காரணம். ஆய்வுத் தலைப்புகள் ஆய்வாளரின் உள்ளந்தோய்ந்த பொருளிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உணவு விடுதியின் ‘மெனு’வைப் பார்த்து உணவுக்குக் கட்டளையிடுவதைப்போல இன்றைய ஆய்வுத் தலைப்புகள் அமைந்து போயின. சில நேரங்களில் ‘பாம்போடு உடன் உறையும் வாழ்க்கையுமாக’ அது மாறிப் போகிறது. ஆய்வாளருக்குத் துணையாக இருக்க வேண்டிய நெறியாளர் பலர் அதனைத் தவிர்த்த மற்ற எலலா நிலையினராகவும் இருப்பதை நான் பல நேர்வுகளில் உணர்ந்திருக்கிறேன். நேரடிப் பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கிறேன்.

    ஆய்வுப் பொருண்மையும் அத்வைத நிலையும்

    எது வேண்டுமானாலும் உங்கள் கட்டுரைப் பொருளாகலாம். ஆனால் அது உங்கள் உள்ளம் தோய்ந்ததாக  இருக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். எனக்குக் கம்பனும் திருவள்ளுவனும் தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. கலைஞரும் கண்ணதாசனும் தான் தமிழை எனக்கு அறிமுகம் செய்தவர்கள். ஆனால் அந்த இருவரும் என் திறனாய்வுப் பார்வையில் அவ்வளவாகக் கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை. காரணம் அவர்களின் பெரும்பாலான படைப்புகளைப் படித்து நடந்த நான், சங்க இலக்கியத்தின் உச்சம் தொட்டதன் காரணமாக அங்கிருந்து இறங்க முடியாமல் போய்விட்டது. அதாவது கீழிருந்து தொடங்கிய பயணம் மேலே வந்து நிலை கொண்ட போது, தொட்டபெட்டாவிலிருந்து கோவையையும் மேடடுப்பாளையத்தையும் பார்ப்பதுபோல் இருந்தது. இது என் நிலை. எல்லோருக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. இங்கே இது  எதற்காக? அவ்விரு வல்லாளர்களும் என் ஆசிரியர்களேயானாலும் என் உள்ளங்கவர்ந்த இலக்கியம் சங்க இலக்கியமே! தொல்காப்பியமே! திருக்குறளே! அவற்றைத் தவிர வேறு எதனையும் என் மனம் உள்வாங்காது. மேம்போக்காகத்தான் பார்க்கும். எனவே என் ஆய்வு அவற்றில் மட்டுந்தான் அமையும் என்பதைச் சுட்டுவதற்காக.  இப்போது புரிந்திருக்கும்!

    உள்ளமும் ஆய்வுப் பொருண்மையும்

    எனக்குச் சங்க  இலக்கியம் என்றால் உங்களுக்கு ஆனந்த விகடன் பிடித்தமானதாக அமையலாம். அவற்றின் இதழ்களைச் செரித்துக்கொண்டு அவற்றின் உள்ளடக்கங்களோடு உங்கள் இலக்கிய அத்வைதம் அமையலாம். எனவே உங்கள் ஆய்வு, விகடனைச் சார்ந்திருக்கலாம். நான் விகடனை ஆராய்வதற்கும் நீங்கள் ஆராய்வதற்கும் வேறுபாடு நிலவும். என்னால் ஆய்வு செய்யவே முடியாது. காரணம் எனக்கு அதில் பிடிப்பில்லை. ஈடுபாடில்லை. அதனால் உங்கள் மனம் எதனைப் பற்றியிருக்கிறதோ எதனைப் பற்றி எப்போதும் சிந்தித்கிறதோ அதனைப் பற்றித் தேவை கருதி ஆய்வு செய்யலாம். கட்டுரை எழுதலாம். அதுதான் முறை.

    சிலருக்குத் தொல்லியல் பிடித்திருக்கலாம். சிலருக்குக் கல்வெட்டு மட்டும் பிடித்திருக்கலாம். சிலருக்குத் தலபுராணங்கள் பிடித்திருக்கலாம். சிலரைப் பெருமாள் திருமொழி கவர்ந்திருக்கலாம். சிலருக்குப் பெரிய புராணத்தையும் வெள்ளக்கால் சுப்பிரமணியத்தையும் பிடித்திருக்கலாம். ஜெயகாந்தனைப் பிடித்திருக்கலாம். ஆண்டாள் பிரியதர்சினியைப் பிடித்திருக்கலாம். பிரபஞ்சனைப் பிடித்திருக்கலாம். இப்படிப் பிடித்து மனத்துள் படிந்து போன பொருள் பற்றிய ஆய்வே சிறக்கும். கருதுகோளுக்கான  வலிமையான தரவுகளும் கிட்டும். கட்டுரை செறிவாகும். கட்டுரையின் முதற்பத்தியைப் படித்த உடனேயே கட்டுரையாளருக்கும் கட்டுரைக்கும் இடையே நிலவுகின்ற  ‘உறவு நிலை’ மதிப்பீட்டாளருக்குப் புரியாமல் போகாது எனக் கட்டுரையாளர் எண்ணிவிடக் கூடாது. கையிருப்பின்றிக் கடன் வாங்கும் கருதுகோளின் வழ்நாள் குறைவே!

    கட்டுரையின் முன்னுரை

    ஆய்வேட்டில் ‘ஆய்வு முன்னுரை’ என்னும் பகுதியில் சொல்லப்படும் அனைத்துச் செய்திகளையும் இன்னும் சுருக்கமாகக் கட்டுரையின் முன்னுரையில் சொல்லிவிடலாம். ஆய்வுத் தலைப்பு, ஆய்வு நெறி, ஆய்வு அணுகுமுறை, ஆய்வுக் களம், ஆய்வெல்லை, நோக்கம், பயன் முதலியன பற்றிய கடடுரையாளரின் எண்ணத்தைப் புரிந்துகொள்ள இது உதவக்கூடும்.  ஆய்வு நெறி, ஆய்வு அணுகுமுறை என்பவை தனித் தனி. பலர் ஒன்றெனக் கருதி மயங்குவது தெரிகிறது. சிலப்பதிகாரத்தை வரலாற்று முறையில் அணுகுவதும் இலக்கிய நெறியில் அணுகுவதும் ஆய்வு அணுகுமுறை.  இந்த அணுகுமுறையில் கண்டறியப்படும் ஆய்வுண்மைகள் வெளிப்படுவது ஆய்வு நெறி. பல்வகை  அணுகுமுறைகளுக்கும் ஒரே நெறி பயன்படலாம். ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒவ்வொரு தனிநெறி தேவைப்படலாம். இது ஆய்வாளர் உரிமை. கள ஆய்வுகளுக்கு இது பொருந்தாது.

    மதிப்பீடு உள்ளடக்கம் பற்றியதன்று

    வல்லமையில் ஒரு கட்டுரை முன் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றால் கட்டுரையின் ‘உள்ளடக்கம்’ பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அது ஆய்வாளரின் அல்லது கட்டுரையாளரின் உரிமை. கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட தலைப்பு, தலைப்புக்கான தரவுகள், தலைப்பையே கருதுகோளாகக் கொண்டால் அதற்கும் தரவுகளுக்குமான பொருத்தப்பாட்டினை  உறுதி செய்வதில் கட்டுரையாளருக்கு இருக்க வேண்டிய தெளிவு  மற்றும் ஆராய்ச்சி அறிவு, பொருத்தமான மதிக்கத்தக்க மேற்கோள்கள், பொருண்மைக்கேற்ற பிழையில்லாத தூயதமிழ் மொழிநடை, கட்டுமான நெறிகள் ஆகியவை மட்டுமே கருத்திற் கொள்ளப்படுகின்றன.

    கட்டுரையாளரின் கருதுகோள் தவறு என்பதற்கோ, முடிவு தவறு என்பதற்கோ மதிப்பீட்டாளர் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதில்லை. மேற்சொன்ன கரணைகளின் பொருத்தப்பாடு பெரும் கவனத்திற்கு உள்ளாக்கப்படும். கட்டுரையாளர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சுருங்கச் சொன்னால் ‘சட்டை ஒழுங்காகத் தைக்கப்பட்டிருக்கிறதா?’ என்று தையலின் உறுதியை நோக்குவதுதான் மதிப்பீட்டின் அல்லது மதிப்பீட்டாளரின் பணி. அது ‘பொருத்தமாக இருக்கிறதா?’ என்பது போட்டுப் பார்ப்பவரின் விதி!. காரணம் கட்டுரையின் விரிவான ஆய்வினைப் பின்னாலே வெளிவரும் ஒரு கட்டுரையின் ஒரு அடிக்குறிப்பு தகர்த்துவிடும். எனவே இதுபற்றிக் கவலைகொள்ள வேண்டிய தேவை, மதிப்பீட்டாளருக்குத் இல்லை. இதனைக் கட்டுரையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை, கட்டுரையின் புறக்கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல் மட்டுமே!

    கட்டுரையில் பத்திப் பிரிப்பு

    வல்லமையில் வெளிவந்த பொதுக் கட்டுரைகள் — ஆய்வுக் கட்டுரைகள் என எதுவாயினும் அவற்றுள் பல, நல்ல வலிமையான தரவுகள் இருந்தும் வெளிப்பாட்டு உத்தியின் தோல்வியினால் பெற வேண்டிய சிறப்பினைப் பெறாமல் போயின. இதற்கு அடிப்படைக் காரணம், பத்திப் பிரித்தலில் காட்டிய அலட்சியமே!. ‘ஒரு கட்டுரையின் சிறப்பிற்குத் தொடர்களே காரணம். ஆனால் அதனின் சிறப்பு பத்திப் பிரிப்புக்கே’ என்பார் அறிஞர் அண்ணல் பழந்தமிழ் இலக்கண நூல்களில் ‘தொகுத்துச் சுட்டல்; என்பதும் ஒன்று. கருதுகோளின் விரிவுக்குத் துணைசெய்யும் கருத்தமைவுகளை அதன் தன்மைக்கேற்ப பிரித்தமைக்கும் வடிவ முயற்சியே பத்திகளாகும்.  ஒரு பத்தியின் முடிவு, அடுத்த பத்தியின் தொடக்கத்திற்கு வழிகோல வேண்டும். ஒவ்வொரு பத்தியும் கருதுகோளின் ஒவ்வொரு உட்பகுதியை விளக்குவதாக அமைதல் வேண்டும். பத்திகளின் பொருண்மைக்கேற்ப தரவுகள் அமைக்கப்படல் வேண்டும். வேறொரு பத்தியின் பொருண்மைக்குரிய தரவு  அவசரத்திலும் பிழையாகவும் இவ்வாறு பதிவாவது உண்டு. இதனை மீள்பார்வையில் நீக்கிவிட வேண்டும்.

    கட்டுரையில் வடசொற்கள்

    நாடு விடுதலையடைந்தும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டும் 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் வல்லமையின் பல கட்டுரைகளில் தமிழ்மொழி கறைபடிந்த நிலவாகவே காட்சியளிக்கிறது.  ஒரு குறிப்பு அணி அல்லது அலங்காரம் என்பது தமிழுக்கு உரியதன்று. அது வடமொழி இலக்கியங்களுக்கு உரியது. தொல்காப்பியத்தில் அணி என்பது இல்லை. தொல்காப்பியத்தின் ‘உவமம்’ ஒன்றுக்கும் மேற்பட்ட இயல்களில் ஆராயப்பட்டிருக்கிறது. அது அணியன்று. பொருட்பகுதி.

    அந்த வடமொழி அலங்காரங்களின் பெயர்களில் சிலவற்றைப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ப் பேரறிஞர்கள் எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? தற்குறிப்பேற்றம், பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, எடுத்துக்காட்டு உவமம் வேற்றுமை வேற்றுப் பொருள் வைப்பு, என்றெல்லாம் பழகுதமிழில் பெயர்த்தெழுதியிருக்கிறார்கள். ‘பிரசுரம்’ என்பது துண்டறிக்கை ஆகி 50 ஆண்டுகளாகின்றன. ‘பிரசுலாயம்’ என்பது பதிப்பகம் ஆகியும் பல்லாண்டுகள் ஆகின்றன.

    அவ்வளவு ஏன்? ‘வல்லமை’ என்னும் ‘பத்திரிகையை’ யாரும் தரிசிக்க இயலாது ‘வல்லமை’ என்னும் ‘மின்னிதழைத்தான்’ காண முடியும். இவ்வளவுக்கும் பிறகும் சிலர் ‘உதாரணமாக’ என்று எழுதுகிறார்கள். இப்படி வடமொழியில் தங்கள் புலமையைக் காட்ட விழைவார், தம் கட்டுரையை வடமொழியிலேயே எழுதுவதுதான் சிறந்தது. வடமொழிக் கலப்பும் அது பற்றிய விழிப்புணர்வும் அதற்கான கொள்முதல் கொள்கையும் தொல்காப்பியர் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக அதன்  வளர்ச்சி நிலையில் இருக்க வேண்டிய தமிழ் இப்படி இருக்கிறது என்பதைக் கடடுரையாளர்கள் புரிந்துகொண்டு கட்டுரையாக்கம் செய்ய வேண்டியது அவர் கடமை அல்லவா? .

    கட்டுரையின் மொழிநடை

    பொருண்மைக்கும் மொழிநடைக்கும் தொடர்பு உண்டு. ஆழமான செய்திகளைக் கடுமையான நடையில் சொல்லுவது தவறன்று ஆனால் அவற்றையே எளிமையாகச் சொல்வது சிறப்பு தரும். இதற்குப் புலமை மட்டுமே போதாது. எளிமையான உள்ளம் வேண்டும். ஒரு சில படைப்பாளர்களுக்குத்தான் இது வாய்த்திருக்கிறது. தற்காலத்தில் நானறிந்தவரையில் ஔவையார், கவிமணி, சுப்பிரமணிய பாரதியார், கண்ணதாசன் முதலியோரிடத்தில் இந்த எளிமையைக்  கண்டு வியந்திருக்கிறேன். ஆழமான கருத்தியல். எதிரெதிர் முரண்கள். ஆனால் சொற்கள் மிக எளிமை.

    ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது மிகக் கடுமையான முரண். ‘நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும்? எவ்வளவு பெரிய சிந்தனை? ஆனால் போகிற போக்கில் மொழி நடை அமைந்துவிடுகிறது. ‘கொடி அசைந்ததும்  காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? எண்ணிப் பாருங்கள். ‘நான் பிறந்த காரணத்தை  நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே? எவ்வளவு பெரிய தத்துவம்? இந்த எளிமைக்கு மூலதனம் அறிவா? உள்ளமா? ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்! நினைத்துப் பார்க்க முடியாத சிந்தனை இயைபு.

    படைப்பாளர்களில் இப்படி  ஒரு சிலர் என்றால் ஆய்வுலகில் ஒரே ஒருவர்தான். அவர்தான் அறிஞர்  மு.வ. மொழியியலைக் கூட மூன்றாம் வகுப்புக்குக் கற்பிக்கும் ஆளுமை, அவர்க்கு மட்டுமே உண்டு. சிறிய எளிய தொடர்களால் பேருண்மைகளைப் பதிவு செய்த பேரறிஞர். தற்காலத் தமிழியல் ஆய்வறிஞர்களின் பல கட்டுரைகள், யாருக்கும் புரியாது. இருட்டுக்கு வாழ்க்கைப்பட்டவை அவை. இதனை நான் ஆயிரம் கோயில்களில் சொல்லுவேன். பதர்ச் சொற்கள்!. ஆரவாரப் புனைவு! அலங்காரக் கற்பனை! இவையெல்லாம் எப்படி ஆய்வாகும்?

    கட்டுரை இலக்கியமாகலாம்

    ‘இலக்கியக் கட்டுரை’ என்பதற்கும் ‘கட்டுரை இலக்கியம்’ என்பதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. ‘இலக்கியக் கட்டுரை’ என்பது அறிவியற் கட்டுரை முதலிய பிற கட்டுரைகளினின்றும்  வேறுபட்டு நிற்பதைக் குறிக்கும். கட்டுரை இலக்கியம் அத்தகையதன்று. எந்தப் பொருள்பற்றிக் கட்டுரை எழுதப்பட்டாலும் அவை இலக்கியத் தகுதியைப் பெறுமாறு அமைக்க இயலும். ஜி.ஆர்.தாமோதரன் எழுதிய அறிவியல் கட்டுரைகளும், சோமெலே எழுதிய பயணக் கட்டுரைகளும் ‘திராவிடநாடு’ ‘காஞ்சி’ முதலிய இதழ்களில் பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரைகளும், ‘தம்பிக்கு’ எழுதிய மடல்களும் கலைஞர் முரசொலியில் எழுதிய கட்டுரைகளும் உடன்பிறப்புக்கான கடிதங்களும் அறிஞர் மு.வ. அவர்களின் தம்பிக்கு, அன்னைக்கு முதலிய கட்டுரைகளும் தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு.ஏ.என். சிவரமனின் அறிவியற்கட்டுரைகளும், வைரமுத்து எழுதிய  ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’  என்னும் கட்டுரை நூலும் கட்டுரைகளை இலக்கியமாகக் காட்டுவதில் முழு வெற்றியடைந்திருக்கின்றன என்பதைக் கற்பார் உணரக்கூடும். இக்கட்டுரைகள் ஆழமான பொருள் பற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் இனிய எளிய தமிழால் வகை தொகை செய்யப்பட்டு நிரலாகக் கொடுத்திருக்கும் பாங்கினைத் தற்கால ஆய்வாளர்கள் கற்றுணர வேண்டும்.

    ஆய்வுக் கட்டுரையின் சிறப்பு

    அறிஞர் தமிழண்ணல் ஆய்வேட்டுக்குச் சொல்லியிருக்கும் அத்தனைப் பண்புகளும் ஆய்வுக் கட்டுரைக்கும் பொருந்தும். ஆய்வுக் கட்டுரை ஆய்வுலகிற்கு ஒரு நன்கொடை, அது கட்டுரையாளரின் சொந்தப் படைப்பு,  அது ஒரு அறிவியற் சார்ந்த படைப்பு, ஆய்வாளரின் சொந்த நோக்கும் போக்கும் எண்ணங்களும் கொண்ட கருவூலம் என்பனவெல்லாம் ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரையாளருக்குக் கட்டுரையால் கிட்டும் பெருமைகளாகும். ஆய்வு முடிவு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வண்ணமே இருத்தல் வேண்டுமென்பதில்லை. ஒரு புதிய சிந்தனையை நேர்முகமாகவோ எதிர்முகமாகவோ தூண்டுதற்கு அது பயன்படுமானால் ஆய்வு வெற்றியடைந்தது என்பதுதான் பொருள். இதனை ஆய்வாளர்கள் பலர் உணர்வதில்லை. நடுநிலை என்பதையே மறந்துவிடுவது ஏற்புடையதன்று. பரிமேலழகரைப் பற்றிய நேர்முகப் பார்வையை ஒருவர் பதிவிடுகிறபோது, எதிர்முகப் பார்வைக்கும் அது இடமளிக்கிறது என்பதை மறத்தலாகாது. அந்த எதிர்முகப் பார்வையும் ஓர் ஆய்வே! ‘COMPOSITION’  என்பது வேறு. ‘RESEARCH PAPER’ என்பது வேறு. முன்னது பள்ளிமாணவர் எழுதவது. பின்னது ஆய்வாளர்கள் கண்டறிந்து படைப்பது.

    கட்டுரையாளர் கவனத்திற்கு

    ‘வல்லமை’ மின்னிதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள், பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பொறுமையாக, ஆழமான சிந்தனையுடன், இனிய எளிய தமிழில் கட்டுரைகளை எழுதுவது அவர்களுக்கு நலம் பயக்கக் கூடும்.

    1. சிக்கலில்தான் ஆய்வு தோன்றும். கட்டுரையாளர்கள் கட்டுரைப் பொருளில் தமக்குள்ள ஆர்வத்தையும் பயிற்சியையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘ஆய்வு’ என்பது ஒரு தவம். தயார் நிலை இன்றித் தவம் கைகூடுமா?
    2. முன்பின் அறியாத துறையில் ஆய்வு செய்வது நெறியன்று, பயனற்றது.
    3. கருதுகோளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
    4. கருதுகோளை உறுதி செய்வதற்கான தரமான வலிமையான தரவுகளைத் தொகுப்பதில் போதிய காலத்தையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
    5. தம்மைத் தாமே ஊக்கப்படுத்திக் கொண்டு உழைக்க முந்துவது வேறு. தம்மைத் தாமே தருக்கிக் கொண்டு தவறவிடுவது வேறு. பின்னதுதான் அதிகமாக நிகழ்கிறது.
    6. கட்டுரை எளிமையில் தொடங்கி அருமையில் நிறைவு பெற வேண்டும்.
    7. தலைப்பைத் தேர்ந்தெடுப்பதிலும் பத்திகளுக்கான குறுந்தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகுந்த கவனம் வேண்டும்.
    8. பொற்சரட்டில் முகப்பாகக் கரணைகளாகக் கண்ணிகளாக அவை அமைந்திருக்கின்றனவா என்பதை ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்க வேண்டும்.
    9. கட்டுரையாதலின் மேற்கோள் பற்றிய விவரங்களை ஆங்காங்கே பதிவு செய்யாமல் சான்றெண்களை மட்டும் பதிவு செய்து கட்டுரையின் இறுதியில் அவ்வெண்களுக்கான விவரங்களைக் கட்டுரையின் இறுதியில் தந்தால் போதும்.
    10. துணைநூற்பட்டியல் நீண்டிருந்தால் கட்டுரை கனத்துவிடும் என்று எண்ணிவிடலாகாது. அந்நூல்களினின்றும் பெறப்பட்ட தரவுகள் அல்லது மேற்கோள்கள் கட்டுரைப் பொருளை விளக்குவதில் அளிக்கும் பங்களிப்பே அப்பட்டியலுக்குப் பெருமை சேர்க்கும் .
    11. தொகுத்துச் சுட்டல் என்பது முன்னுரை. வகுத்துக் காட்டல்; என்பது பத்திகள். ‘அப்பொருள் முடித்தல்’ என்பது நிறைவுரை. அக்கால முப்பத்திரண்டு உத்திகளும் தற்காலத் திறனாய்வுக் கொள்கைகளுக்கு வழிகாட்டிகள் என்பதை அறிதல் நன்று. .
    12. ‘இன்னது சொல்லப் போகிறது’ எனத் தொடங்கி ‘இன்னதை இன்னவாறு இன்னவற்றால் இக்கட்டுரை சொல்லியிருக்கிறது’ என நிறைவு செய்தலே கட்டுரையின் புறக்கட்டுமானமாகும்.

    நிறைவுரை

    மேற்கண்ட பத்திகளில் கண்ட கருத்துகளை நான் பதிவு செய்யக் காரணம், வல்லமையின் கட்டுரைகளே!  வைரங்கள் பல தகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கண்ணாடித் துண்டுகள் பல, தங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் அவசரம்! அலட்சியம்! தெளிவின்மை!. இவற்றையெல்லாம் களைந்து அமைக்கப்படும் கட்டுரைகளுக்கு வல்லமையில் மதிப்புமிக்க இடமுண்டு. என் கருத்துகளில் சங்கடப்படுவோர் இருக்கலாம். அந்தக் கருத்துகள் சிறிதேனும் ஒளி தருவது உண்மையானால் அந்தச் சிறிதளவு வெப்பத்தைத் தாங்கித்தான் ஆகவேண்டும்! ஏனென்றால் வெப்பமில்லாத ஒளி உலகில் உண்டா? ஆய்வாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    எத்தகைய  ஐயங்களுக்கும் தொடர்புகொள்ளலாம்; sangilisubramanian46@gmail.com

    Share
  • அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவ சேனை

    இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பநாயகமும் நானும் அங்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம்.

    தலைவர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான், செயலாளர் திரு செல்லச்சாமி இருவரையுமோ அல்லது ஒருவரையோ சந்தித்து வருவோம். அக்காலங்களில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர்.

    திரு சௌமியமூர்த்தி தொண்டமான் வாழ்ந்த காலங்களில் அவர் வழிவந்த திரு ஆறுமுகம் தொண்டமான் எனக்கு அறிமுகமானார்.

    1994 இல் சந்திரிகாவின் அமைச்சரவையில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார்.

    சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு மருத்துவராக இருந்த என் அருமை நண்பர் என்னை அழைத்தார். அமைச்சர் தொண்டமான் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனச் சொன்னார்.

    மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் இருந்தார். எனவே அவரிடம் நேரே போனேன். அங்கே திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் மேனாள் காங்கிரசு அமைச்சர் திருமதி அனந்தநாயகி அவர்கள் இல்லத்தில் அமைச்சர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் தங்கியிருப்பதாகவும் அங்கு வர முடியுமா? எனவும் திரு ஆறுமுகம் என்னிடம் கேட்டார்.

    இருவருமாகச் சென்றோம். சீனா – பிரித்தானியா அரசுகள் பேசிக் கொண்டிருந்த காலம். ஒங்கொங்கு தீவின் எதிர்காலம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சீனாவின் பகுதியாக ஒங்கொங்கு மாறும். ஆனால் ஒங்கொங்கு தனது தனித்துவத்தைப் பேணும் என்ற வகையில் தீர்வுகளை நோக்கி வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.

    அதை ஒத்த தீர்வு ஒன்றினை இலங்கையிலும் ஏற்படுத்தலாம் எனத் திருமதி சந்திரிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் அமைச்சர் தொண்டமான் கூறினார்.

    பிரபாகரனின் ஒப்புதலைப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் தொண்டமான் கருதினார்.

    பிரபாகரன் இதற்கு ஒப்புவாரா? அல்லது இத்தகைய பேச்சுவார்த்தையை நோக்கித் தாம் முன்னெடுத்தால் பிரபாகரன் சார்பில் கலந்து கொள்வார்களா? என்றெல்லாம் அமைச்சர் தொண்டமான் என்னிடம் கேட்டார்.

    வெளியே வந்த நான் திரு பழ. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் இருவரையும் சந்தித்துத் திரு தொண்டமான் சொன்ன முன்மொழிவுகளை எடுத்துக் கூறினேன்.

    அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று திரு தொண்டமான் உடன் பேசலாமா? என கேட்டேன்.

    திரு பழ நெடுமாறன் வருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பிரீசு விடுதியில் அமைச்சர் தொண்டமானைச் சந்தித்தோம். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

    என்னிடம் கூறிய அதே செய்தியை அமைச்சர் தொண்டமான் திரு பழ நெடுமாறனிடம் கூறினார். தனது முன்மொழிவுகள் தொடர்பாக ஆதரவான கடிதமொன்றைத் திரு பிரபாகரனிடம் பெற்றுத் தர முடியுமா என அமைச்சர் தொண்டமான் கேட்டார்.

    முயற்சி செய்யலாம் எனக் கூறித் திரு பழ நெடுமாறனும் நானும் வெளியே வந்தோம். திரு பிரபாகரனிடம் இது தொடர்பாகப் பேசும் பொறுப்பைத் திரு பழ நெடுமாறன் ஏற்றுக்கொண்டார்.

    சில வாரங்களின் பின் திரு பிரபாகரனிடம் இருந்து கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து திரு பழ நெடுமாறன் என்னிடம் கொடுத்தார். அமைச்சர் தொண்டமானிடம் சேர்க்குமாறுகூறினார்.

    நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அமைச்சரவையில் தொடருங்கள். அமைச்சரவையில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுங்கள் என்ற கருத்து அந்த ஆறு வரிக் கடிதத்தில் இருந்தது.

    கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவரிடம் நேரில் சென்று செய்தி சொன்னேன்.

    1991 க்குப் பின் தமிழகம், ஈழத்தமிழர் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு அளிக்க முடியாத நிலையில் இருந்தது. இந்திய அளவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டம் இருந்தது.

    1991 இராசீவரைச் சந்திக்கச் சென்றமை தொடர்பாக மல்லிகையில் என்னையும் சேர்த்து விசாரித்துக் கொண்டிருந்த காலம்.

    விடுதலைப்புலிகள் தலைவர் திரு பிரபாகரன் தந்த கடிதம் என் இல்லத்தில் இருந்தது. மருத்துவருக்கு மட்டுமே விவரம் தெரியும். திரு பழ நெடுமாறனுக்கும் விவரம் தெரியும்.

    ஒரு வாரம் கழித்து மருத்துவர் என்னை அழைத்தார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார். கடிதத்துடன் சென்றேன். அங்கு திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார். அவரிடம் கடிதத்தைக் கையளித்தேன்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை அறியேன்.

    1996ஆம் ஆண்டு மொரிசியசு நாட்டுத் துணைப் பிரதமர், எனக்கு அருமை நண்பர் திரு பெரஞ்சே என்னை அழைத்தார். தனது கட்சியின் வெள்ளிவிழா அந்த ஆண்டு நடைபெறுவதாகவும் இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர் ஒருவரை அழைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்.

    அடுத்த வாரம் கொழும்பு செல்ல உள்ளேன். வேறு ஒரு பணிக்காகச் செல்கிறேன் அங்கு உள்ளோரிடம் உசாவிப் பதில் சொல்கிறேன் என அவரிடம் கூறினேன்.

    கொழும்பு சென்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அமைச்சர் தொண்டமான் சிறிய அலுவலகத்தில் இருந்தார். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

    மொரிசியசுத் துணைப் பிரதமரின் செய்தியைக் கூறினேன். போய் வருவீர்களா? எனக் கேட்டேன். நாடு, அங்குள்ள அரசியல் நிலைமை, கட்சியின் கொள்கை, விழாவின் இயல்பு, என என்னிடம் விவரங்கள் கேட்டார்.

    அங்கிருந்தே மொரிசியசுத் துணை பிரதமருக்கு அழைப்பு எடுத்து இருவரையும் இணைத்தேன்.

    கட்சியின் பெயர் Mauritius Militant Movement. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் அங்கு இருந்தார். Militant என்ற பெயர் இருப்பதால் அதுவும் விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்பாக இருக்குமோ என என்னிடம் வினவினார்.

    ஆட்சியில் உள்ள கட்சியினர் அழைக்கிறார்கள் என திரு ஆறுமுகம் தொண்டமான் எடுத்துச் சொன்னார்.

    திரு பிரஞ்சே அழைப்பை ஏற்ற திரு தொண்டமான் மொரிசியசு சென்றார். வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். சிங்கப்பூர் வழியாகச் சென்று மீண்டார்.

    நேற்று இரவு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் என் கண்கள் பனித்தன. மூத்த தொண்டைமானைப் போலவே இவரும் ஈழத் தமிழர் நலனில் மிக்க ஈடுபாடு உடையவர்.

    அவரோடு பழகிய நாள்கள் நெஞ்சில் நினைவு அலைகளாக மோதுகின்றன. இனிமையான பொறுப்பு வாய்ந்த மனிதநேயமிக்க ஒருவரை இழந்து வாடும் இல்லத்தார், செந்திலார், சீவகனார், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார், மலையக மக்கள் யாவருக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-25

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-25

    தி. இரா. மீனா

    நிவ்வுருத்தி சங்கய்யா

    சிவசரணான பின்பு சாதியை விட்டு விடவேண்டும்.ஆசையை விட்டொழிப்பவனே உண்மையான இலிங்காங்கி [இலிங்காயத்து] என்கிறார். ’நிவ்ருதிசங்கையா’ இவரது முத்திரையாகும். வடமொழிச் சொற்களை அதிகம் பயன்படுத்தியிருப்பதால் கல்வியில் சிறந்திருப்பார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    “அசையும் அசையாப் பொருட்கள் எல்லாவற்றிற்கும்
    ஆசையே முதன்மையாம்.
    எண்பத்து நான்கு இலட்ச அசையும் அசையாப் பொருட்களில்
    ஆசையின்றி வாழும் இலிங்கமுடையவனைக் காட்டுவாய்
    ஆசையைக் குற்றம் சாட்டி
    நிராசையில் வாழ்பவரைச் சரியென்பேன் காணாய்
    நிவ்வுருத்தி சங்கையனே”

    நீலம்மா

    பசவேசரின் இரண்டாவது மனைவி இவர். பிஜ்ஜள மன்னனின் வளர்ப்புத் தங்கை. ’விவேக பத்தினி’ என்று தன்னை அழைத்துக் கொண்ட இவர் பசவேசரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர். கல்யாண் புரட்சி சமயத்தில் கூடல சங்கமத்திற்கு அருகிலுள்ள தங்கடியில் ஐக்கியமானார் என்பது செய்தி. ‘சங்கய்யா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “வரவிற்குப் பெருமை தேவையில்லை
    இழப்பிற்குக் கலக்கம் வேண்டியதில்லை
    மனமே, உன்னை நீயே சமாதானம் செய்து கொள்.
    வரவு உன் வசமல்ல; இழப்பு உன் விருப்பமல்ல
    பற்பல போகங்கள் அனைத்தும் சங்கய்யன் வசம்“

    2. “இலையுதிர்ந்த மரத்தில் நிழலைத் தேடவில்லை
    ஒளியிழந்த விளக்கில் வெளிச்சம் தேடவில்லை
    அடையாளமற்றதில் உருவம் தேடவில்லை
    ஒலியடங்கிய பசவனுள் ஒலியைத் தேடவில்லை
    சங்கையனில் நான் உடலற்ற கருணையோன் ஆனேன்”

    3. “பார்வதியின் அழகை எனக்குள் கண்டு
    நான் சிவனோடு சேர்ந்தவளென
    என்னோடு அவன் இணையவில்லை
    தாய்மகன் உறவில் உடலழித்து
    சுமையில்லாத தேகம் பெற்று
    பசவனின் அனுபவத்தால் நான்
    அறிவுடைய மனைவியானேன் சங்கய்யனே“

    நூலிய சந்தய்யா

    புல்லைக் கொண்டு வந்து கயிறு திரித்து அதை விற்ற பணத்தில் தாசோகம் செய்து வந்தவர். கல்யாண்  புரட்சிக்குப் பிறகு சென்ன பசவரோடு உடுவிக்கு வருகிறார். அங்கு சென்ன பசவர் இறைவனோடு ஐக்கியமான பின்பு நாகம்மாவோடு எண்ணேஹொளே வருகிறார். அங்கு நாகம்மா மறைந்த பிறகு நூலேனூரு வருகிறார். அங்கு சமாதியாகிறார். அங்கு இவரது சமாதி இன்றுமிருப்ப தாகச் சொல்லப்படுகிறது. ’சந்தேஸ்வரா’ இவரது முத்திரையாகும். குரு, இலிங்க, ஜங்கம எல்லோருக்கும் காயகம் கட்டாயம். “காட்டுக் கீரையாக இருந்தாலும் காயகம் செய்து கிடைத்தால் மட்டுமே படையலாக்க வேண்டும்“ என்று காயக மேன்மையைக் குறிப்பிடுகிறார்.

    1. “காயகம் எதைச் செய்தாலும் மனத் தூய்மையுடன்
    குரு, இலிங்க, ஜங்கமனுக்குச் செய்வது சிவபூஜை
    செய்யும் செயலன்றி வெறும் பேச்சு பூஜையாகுமோ?
    சென்ன பசவண்ணப் பிரிய சங்கேஸ்வர இலிங்கத்துக்கு
    அது இசைவல்ல மடிவாளய்யனே .”

    2. “ஆயுதம் ஏந்தியவர்கள் அனைவரும் வீரமானவரோ?
    சாதனை செய்யும் சிறியோர் போரில் வல்லவரோ?
    துரோகிகள் உயர் பக்தராவரோ?
    சென்ன பசவண்ணப் பிரிய சங்கேஸ்வர இலிங்கத்துக்கு
    அது பொருந்தாத செயல்.”

    3. “குருவுக்கு உடல் இலிங்கத்துக்கு உள்ளம்
    ஜங்கமனுக்குச் செல்வம் என்வான பின்னர்
    பிறிதொன்றின் விருப்பத்தைக் கொண்டாடுவதேன்?
    அந்த குணம் சந்தேஸ்வர இலிங்கத்துக்குத் தூரம்“

    பரஞ்சோதி

    ’வரநாகன குரு வீரன பரஞ்சோதி மகாவிரக்தி’ என்பது இவரது முத்திரையாகும்.

    “உடலெடுத்து மாயையை விடவேண்டுமெனில் அது எப்படி?
    தேகமெடுத்து அனுபவ அமுது பருகினோமென்பர்.
    அமுதுண்ட பின்பு பசியுண்டோ சொல்வாய்?
    வாதம் பித்தம் சிலேட்டுமம் கொண்டு
    அமுதுண்டோமெனச் சொல்பவருக்கு  என்றும்
    அமுது கிடைக்காது பிரமைக்கு ஆட்பட்டோர்
    கெடும் கேட்டிற்கு முதல் முடிவெதுவுமில்லை.
    மனமே தானானவனுக்கு அழிவில்லை அச்சமில்லை
    வரநாகன குரு வீரன பரஞ்சோதி மகாவிரக்தியே”

    புரத நாகண்ணா

    அமரகுண்டமெனும் ஊரைச் சேர்ந்தவர். ’அமரகுண்டத்து மல்லி கார்ஜூனா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “நினைக்கும் மனத்துக்கு மண்ணைக் காட்டினாய்
    பார்க்கின்ற பெண்களுக்குப் பெண்ணைக் காட்டினாய்
    வணங்குகின்ற கைகளுக்குப் பொன்னைக் காட்டினாய்
    இம்மூன்றையும் காட்டியும் கொடுத்தும்
    மறதியுள் வைத்தாய்
    அமரகுண்டத்தின் மல்லிகார்ஜூனையா
    நீ காட்டிய அதிசயம் கண்டு வியந்தேன்.”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 82 (செய்வதற்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 82 (செய்வதற்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    செய்வதற்   கரிய   செய்கை  செய்தநற்  றொண்டர்   போக;
    மைதிகழ்  கண்ட  னெண்டோள்  மறையவன்  மகிழ்ந்து நோக்கிப் 
    ‘’பொய்தரு   முள்ள   மில்லான்   பார்க்கிலன்  போனா’’  னென்று
    மெய்தரு   சிந்தை    யாரை   மீளவு  மழைக்க   லுற்றான் .  

    தம் மனைவியாரைக் கொடுக்க வென்று   கேட்ட  ஓர் அந்தணனிடம் ஒப்படைத்த  இயற்பகையாரை ஊரார் எதிர்த்தனர்; இச்செய்கையை எதிர்ப்போம் என்று  திரண்டனர்; ‘’இவ்வந்தணரை இவ்வூரை விட்டு நீக்கிச் செல்ல, உங்களைக் கொன்றேனும் உதவுவேன், விலகுக! ‘’என்றார் அதன்பின் எதிர்த்தாரை வெட்டிக்கொன்று தம் மனைவியுடன் அந்த அந்தணர் செல்ல உதவி, திருச்சாய்க்காடு என்ற இடத்தில் விட்டார். அந்த அந்தணர் இயற்பகையாரை ‘’ஊருக்கு  மீள்க‘’ என்றார். இயற்பகையார் அந்தணரை, அவ்விடத்திலேயே வணங்கி, வந்த அடியாராகிய அடியாரின் அருளைப்  பெற்ற  மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்.

    பிறர் எவராலுஞ் செய்தற்கரிய பெருஞ்செய்கை செய்த நல்ல தொண்டராகிய இயற்பகையார் இவ்வாறு மீண்டு போகத், திருநீலகண்டனும் எண்டோள்களையுடைய மறையவனுமாகிய இறையவன் அவரை மகிழ்ச்சியுடன் பார்த்து, “பொய்ம்மை பொருந்திய உள்ளமில்லாதவன்; திரும்பிப் பார்த்தல் கூடச் செய்யாது போயினன்“ என்று அந்த மெய்ம்மையைத் தருகின்ற மனத்தாராகிய நாயனாரை மீண்டும் அழைப்பாராயினர்.

    இப்பாடலில், ‘’செய்வதற்கு  அறிய செய்கை  செய்த நற்றொண்டர்‘’ என்ற தொடர் திருக்குறள் கூறிய  ‘’செயற்கரிய செய்வார் பெரியார்‘’ என்றதற்  கேற்பவும், திருக்களிற்றுப்படியார் என்ற சித்தாந்த நூலின் 61 ஆம் பாடலில் ,

    ‘’செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து, சிலர்,
    எய்தற் கரியதனை யெய்தினார்“

    என்று பாடியதற் கேற்பவும் இயற்பகையாரின் நற்றொண்டு அமைந்ததை விளக்குகிறது. நற்றொண்டின் வகை, பற்று விடுதலாகும்;    பற்று விடுதல் – அடியார் வேண்டியவை யாவையேனும் மறாது கொடுத்தல் – பற்றுக்களை எறிந்து விலக்குதல் – திரும்பிப் பாராது போதல் முதலிய ஒவ்வொன்றும் செய்தற்கரியனவேயாம்.

    இறைவனிடத்திலே முழுதும் ஈடுபட்டு நிற்றல். அந்தக் காதலிலேபதிந்து அதனால் விழுங்கப்பட்ட நெறியிலே நிற்றல். ஆன்மாக்கள் பிராகிருதர்கள் என்றும், வைநதிகர்கள் என்றும், சாமுசித்தர்கள் என்றும் மூவகையினர். ஆற்றலு மறிவுங் காதலுமில்லாதவர்கள் பிராகிருதர்கள். வைநதிகர்கள் – உலக ஒழுக்கத்திலே விதிவிலக்குகளை அறிந்து அந்நெறியின் ஒழுகிநின்று இடையூறுவந்த காலத்திலேயும் நன்னெறியிற் பதிந்து நிற்பவர். இவர்கள் முறைமையின் மந்ததர முதலிய சத்திநிபாதமுடையவர்களாய் நூல்வழியான் முத்தியடைய விம்புவோர். இவர்கள்புகழ்த்துணை நாயனார் போல்வார்களாம். “தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுவார்“ பசி வருத்தியபோதும் விடாது அந்நெறி ஒழுகிப் பேறு பெற்றது அவர்சரிதம் கூறும். சாமுசித்தராவார், எஞ்சிய வினையின்பொருட்டே திருமேனி தாங்கி மேல்வினை ஒழித்துத் தன்  செயலில்லாது ஒழுகி, எல்லாம் சிவன் செயலேயாக நிகழ்பவர். இவர்கள் சண்டீசர் கண்ணப்பர் – போன்று விதி விலக்குகளைக் கடந்து செய்யும் செயல்களை உடையவர்கள். இயற்பகையார் – கோட்புலியார் சிறுத்தொண்டர் செருத்துணையார் முதலிய நாயன்மார்கள் இவ்வகையினர்; நெறி நிற்றலாவது – தம் வழியே பத்தியைத் திருப்பிக்கொள்ளாது பத்தி வழியிலே தம்மை நிறுத்திக் கொண்டு ஒழுகுதலாகும்.’’ என்பது சி கே எஸ் அவர்களின் விளக்கம்.   இங்கு இந்நாயனார் சாமுசித்தராதலின் இவர் செயல் சிவன்பால் நின்ற செயலேயாயிற்று. எனவே, அது பிறர் எவராலும் செய்வதற்கரிய செயலாயிற்று என்க. ஆதலின் நற்றொண்டர் என்றார்.

    அடுத்து ‘’மைதிகழ்  கண்ட  னெண்டோள்  மறையவன்’’ என்ற  தொடரில் ‘மறையவன்’ என்ற சொல்  இறைவன் நீலகண்டத்தையும் , எண்டோள்களையும்  மறைத்து வந்தவன் என்பதைக்  குறிப்பால்  உணர்த்துகிறது.

    இங்கு வேதியர் அழைத்ததை மட்டும் நாயனார் கேட்டனரேயன்றி முன் கண்ட நிலையில் வேதியரை இனிக் காணார்; மைதிகழ் கண்டமும் எண்டோளுமுடைய மறையவனாகவே அடுத்த நிலை காணப்போகின்றார்; ஆதலின்  இங்கு இவ்வாறு குறித்தார். இறைவனின் பார்வை முதலில் தம்மை மறைத்து நின்ற திரோதான சக்தியாக இருந்தது; இப்போது அப்பார்வை அருள் நோக்கமாக  மாறியது! இதனையே ‘’மகிழ்ந்து நோக்கி‘’ என்ற தொடர் குறிக்கிறது.

    உலகியலில்  பொய்ம்மை ஆணவத்தோடு ஒன்றி தீமையில் புகுத்தும்; இயற்பகை  நாயனார்,  யான் எனது என்னும் செருக்கு அறுத்தவர் அதனால், மனைவியரையும்,அடியாரையும் திரும்பிப் பார்க்காமல் சென்றார். இதனைச்  சிவபிரானே  கூறிய ‘’ பொய்தரு   முள்ள   மில்லான்   பார்க்கிலன்  போனான் ‘’ என்ற தொடர் புலப்படுத்துகின்றது.

    இயற்பகையார் சிந்தை,  மெய்யுணர்   வடைந்த  சிந்தை! அதனால்,

    ‘’மெய்தரு   சிந்தை    யாரை   மீளவு  மழைக்க   லுற்றான்!’’ என்று  சேக்கிழார் பாடுகிறார். மெய்தரு சிந்தையார் – முன்னைப் பாசநீக்கம் பெற்று வாசனா மலமும் ஒழிந்த பின் சிவப்பேறு பெற நின்றவர். மெய் – சத்து. இறைவன் சத்தாவான். அசத்தினை யில்லையாக்கிச் சத்துப் பொருள் தனது தன்மையைத் தரும் சிந்தையார் என்பதை, மெய்தரு சிந்தை என்ற பொருள் தந்தது. நகரம் நோக்கிப் போயின போக்கிலே நின்றும் மீள்வதனோடு, இவ்வுலகின்றும் தம்முடன் நலமிகு சிவலோகத்திற்கு மீளவும் வருக  என்ற பொருள் தந்து இப்பாடல்  நமக்கும் ஊக்கம் தருகின்றது. அடியார்கள் செய்யும் சர்வசங்கப்பரித்தியாகத்தினை மிக நன்றாக  விளக்கும் பாடல் இது!

    Share
  • மீண்டும் எழுவோம்

    மீண்டும் எழுவோம்

    இராதா விஸ்வநாதன்

    கண்ணாமூச்சி ஆட்டத்தில்
    காத்திருக்கிறது எனது விடியல்…

    கற்ற பாடங்கள் ஆயிரமாயிரம்
    கற்ற வித்தைகள் கை கொடுக்கவில்லை
    உற்ற உறவுகள் உதிரும் அபாயம்
    விழி ஒன்றே திறந்திருக்க
    வாயுரையுடன் உணர்வுகளின் பரிமாற்றம்….
    வழியும் கண்ணீரைத் துடைக்க ஆளில்லை

    விதைத்த நெல் வீணாகிறது விளைநிலங்களில்….
    கனிந்த கனிகள் புதையுண்டு கிடக்கின்றன மரங்களின் மடியில்
    சடங்குகள் சம்பிரதாயங்கள்
    முடங்கிக் கிடக்கின்றன
    அகத்தை மூடித் திரிந்தவனை
    முகத்தையும் மூடவைத்துவிட்டது
    கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிர்….

    பறக்கின்றன படித்த பட்டங்கள் காற்றில்
    பணத்தை நோக்கிப் பயணித்த கால்கள்
    தன் இனத்தைக் காண துடிக்கின்றன  வெற்றிகளின் குவியல் இன்று குப்பைக் கோபுரத்தில் கொட்டிக் கிடக்கிறது
    எதையும் விட்டு வைக்கவில்லை
    எவரையும் விட்டு வைக்கவில்லை
    இந்தக் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயுர்..

    மனிதரை வெறுத்து ஓடிய மக்களுக்கு
    மனிதரைத் தேடி அலையும் அபாயம்
    கூடிக் குலாவி மகிழ்ந்த நாட்கள்
    நினைவின் நிழலிலிருந்து  நிஜமாகி
    வருகின்றன ஊர்வலமாக…
    அடைந்ததைவிட இழந்தது ஏராளம்
    உண்மை தெரிந்துவிட்டது..
    கணக்கும் புரிய வைத்தது
    இந்தக் கண்ணுக்குத் தெரியாத
    நுண்ணுயிர்..

    எழுவோம் ஃபீனிக்ஸ் பறவை போல
    உழைப்போம் ஒற்றுமையுடன்
    உருவாக்குவோம் ஒரு மருந்து
    அழிப்போம் உயிர்க்கொல்லி நுண்ணுயிரை….
    படைப்போம் புதியதோர் உலகம்
    நோயின்றி, பசியின்றி, பகையின்றி
    துரத்தியடிப்போம் துன்பங்களை
    அன்பில் பழுத்த அறிவுடன்

    Share
  • நாலடியார் நயம் – 22

    நாலடியார் நயம் – 22

    நாங்குநேரி வாசஸ்ரீ

     22. நட்பாராய்தல்

    பாடல் 211

    கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
    குருத்திற் கரும்புதின் றற்றே; – குருத்திற்கு
    எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
    மதுரம் இலாளர் தொடர்பு.

    நூற்பொருளை அறிந்து கற்றவருடன் கொண்ட
    நட்பு எக்காலத்தும் குருத்திலிருந்து
    கரும்பைத் தின்றதுபோல் இனிமையானது
    கல்வியாகிய இனிமையை உடையாதார்
    நட்பு கரும்பை எதிர்செலத் தின்றால் சுவை
    குறைதல்போல் நட்பின் சுவை
    குறைந்து வெறுக்கப்படும்.

    பாடல் 212

    இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
    நற்புடை கொண்டமை யல்லது – பொற்கேழ்
    புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
    மனமறியப் பட்டதொன் றன்று.

    பொன்னிற அருவிகள் பெருகக்கண்டு
    பறவைகள் அஞ்சி ஓடும் அழகிய
    மலைசூழ் நாட்டுடை மன்னனே!
    மனதால் அறியப்பட்டதென்று
    ஒன்றுமில்லை நட்புகொள்வதென்பது
    ஒருவனின் உயர்குடிப்பிறப்பை நோக்கி
    இவர் இடையில் மாறமாட்டார் எனும்
    இணையறா நம்பிக்கையே.

    பாடல் 213

    யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.

    யானை போன்றவரின் நட்பை விடுத்து
    நாய் போன்றவரின் நட்பைக் கொள்ளுதல்
    நல்லதாம் ஏனெனில் யானை பலநாள்
    பழகியிருந்தும் உண்ணக்கொடுத்துப்
    பாதுகாக்கும் பாகனையே கொல்லும்
    நாயோ சினம்கொண்டு அவன் எறிந்த வேல்
    நன்கு பொருந்தியிருக்கத் தன்னை
    வளர்த்த அவனை நோக்கி வாலை ஆட்டும்.

    பாடல் 214

    பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
    சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; – பலநாளும்
    நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
    யாத்தாரோடு யாத்த தொடர்பு.

    பல நாள் பக்கத்திலிருந்து
    பழகுபவராயினும் மனதோடு
    பொருத்தமில்லாதாரோடு என்றும்
    பொருந்தார் அறிவுடையோர் எனில்
    நெஞ்சத்திலே பொருந்தியவர் பலநாள்
    நீங்கி இருந்தார் எனும் காரணம்
    காட்டிக் கைவிடுவாரோ?

    பாடல் 215

    கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
    வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; – தோட்ட
    கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
    நயப்பாகும் நட்பாரும் இல்.

    கொம்பிலே பூக்கும் பூக்கள் மலர்ந்தபின்
    குவியாதிருக்கும் உதிரும் வரை அதுபோல்
    முதலில் விரும்பி மகிழ்ந்தது போலவே
    முடிவு வரை விரும்பியிருப்பது நட்பு
    தோண்டப்பட்ட குளத்தின் பூவைப்போல்
    தொடக்கத்தில் மலர்ச்சி காட்டி பின்
    முகம் சுருங்கும் தன்மையுடையவரை
    விரும்புபவரும் நட்பு கொள்வாரும் இல்லை.

    பாடல் 216

    கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
    இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
    தொன்மை யுடையார் தொடர்பு.

    நட்பில் கீழ்த்தரமானவர் நாள்தோறும்
    நீர்பாய்ச்சினால் உதவும் கமுகு போன்றோர்
    நடுத்தரமானவர் விட்டு விட்டு
    நீர்ப்பாய்ச்சினாலும் உதவும்
    தென்னை மரம் போன்றோர்
    பழந்தொடர்பு பாராட்டும் முதற்தரமானவர்
    பழகி நட்பு விதையிட்ட நாளில் வார்த்த நீரன்றி
    பராமரிப்பற்றே வளர்ந்து பயன்தரும் பனையொத்தோர்.

    பாடல் 217

    கழுநீருள் காரட கேனும் ஒருவன்
    விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; – விழுமிய
    குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
    கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

    அரிசி கழுவிய நீரில் உப்பின்றி
    ஆக்கிய கீரைக்கறியும் பிரியமாகக்
    கொள்ளின் அமிழ்தமே சிறந்த தாளிப்புள்ள
    கறிகள்நிறை வெண்சோறேயாயினும்
    அன்பிலாரின் கை உணவை உண்டால்
    அது எட்டிக்காயுண்பது போல் கசக்கும்.

    பாடல் 218

    நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
    ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
    சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
    வாய்க்கால் அனையார் தொடர்பு.

    நாயின் கால் சிறுவிரல்கள் போல்
    நெருக்கம் உள்ளவராயினும்
    ஈயின் காலளவும் உதவாதார்
    இணக்கமான நட்பால் பயனென்ன?
    வயலை விளைவிக்க உதவும்
    வாய்க்கால் தொலைவிலுள்ள நீரைக்
    கொண்டு சேர்ப்பதுபோலான நட்பைக்
    கொளல்வேண்டும் அது தூரத்திலிருப்பினும்.

    பாடல் 219

    தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
    விளியா அருநோயின் நன்றால் – அளிய
    இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
    புகழ்தலின் வைதலே நன்று.

    நல்லது அறிவில்லாதார்
    நட்பை விட அவரின் பகை
    நல்லது மரணித்தல்
    நலம் பெறாது கொடும்
    நோயால் அவதியுறுவதைவிட
    நல்லது கொல்லுதல்
    நாளும் இகழ்தலைவிட
    நல்லது பழித்தல்
    நடவாததைச் சொல்லிப் புகழ்தலைவிட.

    பாடல் 220

    மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
    பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
    பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
    மரீஇப் பின்னைப் பிரிவு.

    பலருடன் பலநாள் பழகிப்
    பலரின் குணங்களை ஒப்பிட்டு
    தகுதியுடை மேலோரை நண்பராய்த்
    தேர்ந்து கொள்ளல் வேண்டும்
    பல்லால் கடித்து உயிரைக் கொல்லும்
    பாம்போடும் பழகிவிட்டுப் பின்
    பிரிதல் துன்பம் தரத்தக்கதே.

    Share
  • பெண் என்பவள் யார்?

    பெண் என்பவள் யார்?

    சி. ஜெயபாரதன், கனடா

    பெண்ணைத்
    தாயாக் குபவன் யார்?
    தாலி கட்டிய
    கண்ணான கணவன்!
    பெண்ணைத் தன் பூட்ஸ்
    காலால் எற்றி
    பேயாக் குபவன் யார்?
    கண்ணான கணவன்!
    மண்ணில்
    உன்னை, என்னைப் பெற்றவள்
    அன்னை.
    உன்னுடன் பிறந்தவள்
    அன்னை.
    உனக்கு வந்தவள்
    அன்னை.
    உன்னை மணந்தவள்
    அன்னை.
    உனக்குப் பிறந்தவள்
    அன்னை.
    உன்னுடன்  பணி புரிபவள்
    அன்னை.
    உன் கீழ் வேலை செய்பவள்
    அன்னை.
    பூக்காரி, பால்காரி,
    காய்கறிக் கூடைக்காரி,
    மீன்கடைச் சந்தைக்காரி,
    வீட்டு
    வேலைக்காரி,
    நெல்வயல் விவசாயி,
    தெருவில் ஊசி விற்கும்,
    ஜிப்சி,
    கல்விக்கூடம்
    செல்லும் மாணவிகள்,
    பாடம்
    சொல்லிக் கொடுக்கும்
    ஆசிரியை,
    காயத்தை ஆற்றும் மருத்துவப்
    பணிப்பெண்.
    பாரில் பாதி பெண்ணினம்,
    இத்தரை மீது வாழும்
    அத்தனைப் பெண்டிரும்
    அன்னை வடிவமடா!
    பன்முறை,
    வன்முறை செய்யும்
    பெண் கொலை ஏனடா?
    பித்தா!
    பெருமூடா!

    Share
  • ஒரு ரூபாய் உடற்பயிற்சி – One Rupee Exercise

    ஒரு ரூபாய் உடற்பயிற்சி – One Rupee Exercise

    ஒரே ரூபாயில் உங்கள் உடலுக்கு வலுவும் பொலிவும் சேர்க்கலாம். உரமும் திறமும் கூட்டலாம். அதுவும் ஒரு ரூபாய் கூடச் செலவில்லாமல். இந்தப் புதிய உடற்பயிற்சியைப் பயில வாருங்கள்.

    One Rupee Exercise

    You can be fit @ Rs.1

    That too without spending a single rupee.

     

    ஒரு ரூபாய் உடற்பயிற்சியை இருவர் சேர்ந்து விளையாட்டுப் போன்று எப்படிச் செய்யலாம்? இந்தப் பதிவில் பாருங்கள்.

    How two persons can play together this One Rupee Exercise? Watch here.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்

    (Peer Reviewed) பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை  மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com


    முன்னுரை

    சில நூற்றாண்டுகளுக்கு முன் மேனாட்டில் வடிவமைக்கப்பட்ட இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளைக் கற்றறிந்த சிலர் திறனாய்வு துறையே தமிழில் இல்லையென்றும் இருந்தாலும் அது வளரவில்லை என்றும் ஆய்வுக் கட்டுரைகளிலும் நூற்களிலும் பயிலரங்கங்களிலும் முன்னெடுத்தனர். ஒரு துறைக்குத் தனித்த குறியீடு இல்லாத காரணத்தினாலேயே அக்கால இலக்கியச் சமுதாயத்திற்கு அது பற்றிய கருத்தியல் அறவே கிடையாது என்னும் முடிவுக்கு வருவது ஆய்வு நெறியன்று. தமிழையொத்த இலக்கிய வளமிக்க மொழிகளில் திறனாய்வு ஏதோ ஒரு கோணத்தில் இருந்திருக்க வேண்டும் என்னும் குறைந்த அளவு அனுமானமும் இல்லாது போனதும் வியப்பிற்குரியதே. தமிழறிஞர் சிலர் உரையாசிரியர்களின் உரைநுட்பத்தைக் கண்டறிந்த பிறகுதான் மேற்கண்ட ‘கொள்கைச் சோர்வு’ புலப்படத் தொடங்கியது. மூலத் தமிழிலக்கியங்களுக்கு உரைகண்ட சான்றோர்களின் உரைக்கொள்கைகளில் ‘உரைமறுப்பு’ என்பதும் ஒன்று. தற்காலத்தில் நிலவுவதைப் போல எடுத்தவுடன் பிழைகாணும் போக்கோ உரையினை மறுக்கும் போக்கோ பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது.  அதற்கெனச் சில நெறிகளை அவர்கள் பின்பற்றியதை அறிந்துகொள்ள முடிகிறது. ‘திருக்குறள்’ என்னும் தமிழ் மறைக்கு ஆசிரியர் பரிமேலழகர் எழுதிய அரிய உரையில் தமக்கு முன் இருந்த உரைக் கருத்துகளை அவர் மறுக்கும் பான்மையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    1. ‘உரைமறுப்பு’ என்றால் என்ன?

    மூலத்திற்கு உரைகாண் நெறிகள் அனைத்தும் மூலத்தின் உண்மையறியும் முயற்சியாகவே பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் கருதப்பட்டது. அவ்வுரைகாண் நெறிகள் பல. அவற்றுள் சில,

    1. தொடரமைப்பு நோக்கி உரைகாண்பது

    2. உலக வழக்கு நோக்கி உரைகாண்பது

    3. இலக்கண அமைதி நோக்கி உரைகாண்பது

    4. பிற இலக்கியங்களை ஒப்பு நோக்கி உரைகாண்பது

    5. மூலத்தின் பிறபகுதிகைள ஒப்பிட்டு உரை காண்பது

    6. சொற்பொருள் அமைதி கொண்டு உரைகாண்பது

    7. திணை, துறை, கொளு, இயல், அதிகாரம் முதலியவற்றின் அமைதி துலங்க உரை காண்பது

    8. பொருத்தமான பாடங்களைக் கண்டறிந்து உரைகாண்பது

    9. பிறமொழிப் புலமை கொண்டு உரைகாண்பது

    10. பிறதுறை அறிவு கொண்டு உரைகாண்பது

    என்பனவாம். இத்தனை நெறிகளும் குறிப்பிட்ட மூலத்தின் உண்மையறியும் முயற்சியே. இம்முயற்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகவோ மூலப்பொருளைத் துலக்கம் செய்வதில் போதுமான வலிமை பெறவில்லை என உரையாசிரியர் ஒருவர் கருதினாலோ தமது புலமையின் பன்முக ஆழத்தை முன்னிறுத்தித் தனக்குச் சரியெனப்படும் உரையைத் தக்க காரணங்காட்டி முன்னிறுத்துவதும் முந்தைய உரையை மறுப்பதுமே உரைமறுப்பாகக் கருதப்படும். இவ்வாறு முந்தைய உரையினை மறுப்பதற்கான காரணங்கள் பலவாம். அக்காரணங்களே ‘கொள்கைகள்’ என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றன.  மூலப்பொருளைக் காப்பதையும் மூலத்திற்கு எதிரான முந்தைய உரையின் குறைபாட்டைக் களைவதுமாகிய நோக்கமன்றி, மூல நூலாசிரியரையோ முந்தைய உரையாசிரியரையோ தனிப்பட்ட முறையில் நோக்கிச் சாடுவதன்று என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும்.

    2. கட்டுரை உள்ளடக்கம்

    ‘பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்’ என்னும் கருதுகோளையே தலைப்பாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.   பழந்தமிழ் மூலநூலுக்கு உரைகாண் நெறிகளுள் ஒன்றான உரைமறுப்பிலும் வரையறுக்கப்பட்ட சில கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டன. அழகரின் திருக்குறள் உரைமறுப்புகளில் காணப்படும் சில கொள்கைகளைப் பணிவுடன் அடையாளப்படுத்துவதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது. பரிமேலழகரின் உரைத்திறனை முழுமையாக அறிவதைப் பொதுப்பயனாகவும் அவரது உரைமறுப்புக் கொள்கைகளின் வலிமையையும் செறிவையும் அறிவதைச் சிறப்புப் பயனாகவும் கொள்கிறது.

    2.1. ஆய்வுக்களம்

    உரையெழுதப் புகுமுன் அதிகாரப் பொருண்மையில் தெளிவு காண்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வையும் பொறுமையையும் கொண்டிருந்திருக்கிறார். அதிகாரத் தலைப்புக்கான பொருள் மயக்கம்  குறட்பாக்களின் பொருள் மயக்கத்திற்கு ஏதுவாகும் என்பது அவர் கொள்கை. அதிகாரப் பொருண்மையிலேயே தமது புலமையையும் புலமை சார்ந்த மறுப்பினையும் பதிவு செய்திருக்கிறார்.

    1. இலக்கணங் காட்டி மறுத்தல்
    2. அதிகாரப் பொருண்மைக்கு இயைபின்மை காட்டி மறுத்தல்
    3. சொற்பொருள் காட்டி மறுத்தல்
    4. பாட பேதம் காட்டி மறுத்தல்

    எனப் பலவகைகளில் அழகருடைய உரைமறுப்பு அமைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இலக்கண அடிப்படையில் பிற உரைகளின் பொருந்தாமையைச் சுட்டி அவர் எழுதியிருக்கும் மறுப்புரைகள் சுருக்கமாக ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

    2.2. இலக்கணங் காட்டி மறுத்தல்

    அழகரின் உரை ‘இலக்கண உரை’ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் முதலியோரின் புறக்கணிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகலாம். ‘இலக்கணம் காட்டி மறுத்தல்’ என்னும் பகுதி கணிதம் போன்றது. கணிதத்தில் இரண்டு விடை கிடையாது. அதுபோல, அழகரின் இலக்கணப் புலமை தொல்காப்பியம், நன்னூல் முதலியவற்றின் அடிப்படையில் அமைந்ததாதலின் இந்நெறி அமைந்த மறுப்புரைகள் இன்றைக்கும் மறுப்புரைகளாகவே இருக்கின்றன.

    2.2.1. உவம வகை முரண் காட்டி மறுத்தல்

    படைப்புக்குக் கருத்தாழம், கற்பனை வளம், உணர்ச்சி, வடிவ ஆளுமை ஆகியன அமைதல் வேண்டும். திறனாய்வுக்கும் உரையெழுதுவதற்கும் அவைகள் பயன்படா. திறனாய்வு என்பது முழுமையும் ஏரணத்தின் (LOGIC) அடிப்படையில் காரண காரிய அணுகுமுறையில் அமைதல் வேண்டும். படைப்பில் வேண்டாத சொல் பயன்பாட்டுக்கு விளக்கம் கூறமுடியும்.  ஆனால் உரையில் அவ்வாறு கூற இயலாது. நுண்ணியமும் தெளிவும் ஆழமும் உடையதுதான் உரை. அத்தகைய உரையால் அழகர் சிறக்குமிடங்களில் இதுவும் ஓன்று.

    “அங்கணத்து உக்க அமிழ்து அற்றால் தங்கணத்தார்
    அல்லார் முன் கோட்டி கொளல்”1

    என்பது ஒரு குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “நல்லார் தம் இனத்தார் அல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க. சொல்லின் அது தூயதல்லாத முற்றத்தின் கண் உக்க அமிழ்தினை ஒக்கும்.”2

    என உரையெழுதும் அழகர், ‘கோட்டி கொளல்’ என்பதை எதிர்மறை வியங்கோளாக்கிச் ‘சொல்லற்க’ என உரை காண்கிறார்.

    2.2.2. ‘கொளல்’ என்னும் சொல்லாய்வு

    ‘கொளல்’ என்பதற்குத் தான் கொண்ட எதிர்மறை வியங்கோள் பொருளிற்கு ஏற்ற வகையில் சொல்லாய்வில் ஈடுபடும் அழகர்,

    “‘கொள்என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்நின்று (கொள்) பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி மகனெனல்என்பது போல் நின்றது3

    என்று எழுதுகிறார். இங்கே அழகர் வியங்கோளுக்காகக் காட்டும் எடுத்துக்காட்டுக்கான குறட்பா,

    “பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
    மக்கட் பதடி எனல்”4

    என்பதாகும். இக்குறளில் இரண்டிடத்துப் பயின்று வரும் ‘எனல்’ என்னும் வியங்கோளைப் பற்றிய தனது கருத்தினை இப்படிப் பதிவிடுகிறார் அழகர்.

    “‘அல்’ விகுதி வியங்கோள் முன் எதிர்மறையிலும் பின் உடன்பாட்டிலும் வந்தது”5

    என்று அங்கே எழுதிய உரை விளக்கத்தை ஐந்நூறு பாக்கள் கடந்தும் நினைவிற் கொண்டு உரையெழுதுகிறார். ‘மகன் எனல்’ என்பதில் ‘எனல்’ என்பது எதிர்மறை (மகனென்று சொல்லாதே). ‘பதடி எனல்’ என்பதில் ‘எனல்’ என்பது உடன்பாடு (பதடி என்று சொல்). இந்த நுட்பம் இல்லையென்றால் குறளுக்குப் பொருள் காண்பது அரிதாகிவிடும் அல்லவா? இரண்டிடத்தும் ‘எனல்’ என்றால் என்ன ஆகும்?

    2.2.3. முந்தையோர் நோக்கத் தவறியது

    இந்த விளக்கத்தை எழுதிய அழகர், தொடர்ந்து இந்தக் குறட்பாவிற்குப் (720) பிறர் எழுதும் உரையினைச் சுட்டி அதன் பொருத்தமின்மையை மிக இலாவகமாக மறுக்கிறார். இங்கே ‘இலாவகம்’ என்பது முந்தைய உரைகளின் சாதாரணக் கவனக்குறைவு. தன்னுரையை  விளக்கும் பரிமேலழகர் எந்தவிடத்தும் தனது கொள்கைதான் சரி என்றாரில்லை. ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்பது அழகர் கொள்கையன்று. இந்தக் குறட்பாவில் முன்னோர் கவனிக்கத் தவறியதைப் பண்பாடு குறையாமல் சுட்டிக்காட்டுகிறார்.

    (அ) ‘மலர்போன்ற முகம்’ என்றால் பொருளுவமை.
    இங்கு மலராகிய பொருள் உவமம்.

    (ஆ) ‘மலர்போல முகம் மலர்ந்தாள்’ என்றால் வினையுவமை.
    இங்கு ‘மலர்தல்’ ஆகிய வினை உவமம்.

    முன்னது பொருள் பற்றியது. பின்னது வினை பற்றியது. இந்தத் தெளிவு இல்லாமல் உரையெழுதியவர்களைப் பக்குவமாகச் சாடுகிறார் அழகர்.

    “பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் ‘அமிழ்து’ என்னும் பொருளுவமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.”  6

    என்று விளக்கிக் காட்டுகிறார். அழகர் சொல்ல வருவது இதுதான்.

    1. ‘சாக்கடையில் ‘அமிழ்தத்தைக் கொட்டுவது போல’ என்று குறட்பாவில் இல்லை.

    2. ‘சாக்கடையில் ‘கொட்டப்பட்ட அமிழ்தம்’ என்றுதான் இருக்கிறது.

    எனவே பொருளுவமத்தை வினையுவமமாகக் கொள்ளுதற்குச் சொற்கிடக்கை இடந்தரவில்லை என்பதை மற்ற உரையாசிரியர்கள் நோக்கவில்லையே என ஆதங்கப்படுகிறார். அவர் ஆதங்கம் சரிதானே?

    ‘அமிழ்தத்தை உக்கினாற் போல’ என்றில்லை.

    ‘உக்கப்பட்ட அமிழ்தம்’ என்றுதான் இருக்கிறது.

    எனவே குறட்பாவில் பயின்ற உவமம் பொருளுவமமேயன்றி வினையுவமம் ஆகாது எனத் தெளிவுபடுத்துகிறார். ‘சொல்லற்க’ என வினைமுடித்து, அவ்வாறு சொன்னால் அப்படிச் சொல்லுவது எதனைப் போன்றது? என்னும் வினாக்களை அவராகவே எழுப்பிக் கொண்டு எழுதுகிறார் இப்படி?

    “சொல்லின்’ ‘அது’ என்பன (இரண்டு சொற்களும்) அவாய் நிலையான் வந்தது ‘சாவா மருந்தாதல்’ அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபின்றிக் கெட்டவாறு தோன்ற ‘உக்க அமிழ்து’ என்றார். அச்சொல் ‘பயனில்’ சொல் என்பதாயிற்று.” 7

    ‘அவையறிதல்’ என்னும் அதிகாரத் தலைப்புக்கான பொருளைக் கருத்திற் கொண்டு, உரையெழுதிப் பிறர் உரையினை மறுக்கும் அழகருக்கு மூலத்தின் உவம நுட்பத்தைப் புரிந்து கொண்டு உரையெழுத வேண்டும் என்பது கொள்கையாகத் தெரிகிறது.

    2.2.3.1. வள்ளுவர் உள்ளத்தை அறிந்தர் எவர்?

    எந்தக் கருத்தினையும் மறுப்பதற்கு எப்படி யாருக்கும் உரிமை இருக்கிறதோ அதுபோலவே எந்தக் கருத்தினையும் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பொதுவாக ‘உரைமறுப்பு’ என்பது தங்களது கருத்துக்கு எதிரானது என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு இரங்கத்தக்க நிலை. உரையாசிரியர் தனது கொள்கைக்கு ஏற்பத்தான் உரையெழுதுவார். அழகர் அவர் கருத்திற்கேற்ப உரையெழுதுகிறார். மணக்குடவர் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். பாரதிதாசன் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். பாவாணர் ஐயா அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். மாணிக்கனார் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். ஆக இந்த உரைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாமே குறட்பாக்களைப் பார்த்தவர்களின் ‘பார்வைப் பதிவே’ தவிர திருவள்ளுவர் கருத்து என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இது ஒரு சாதாரண உண்மை. இதில் மாறுபட ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

    2.2.3.2.  மாறுபாடு காண வேண்டிய இடம்

    எங்கே மாறுபட வேண்டுமெனின் உரையாசிரியர் ஒருவர் தன்னுடைய கருத்துக்கே தான் மாறுபட்டால்தான், முரண்பட்டால்தான் நாம் வினா தொடுக்க இயலும். அல்லது பொருத்தமற்ற உண்மைக்கு மாறான, முன்னோர் மரபுசார்ந்த இலக்கணத்துக்கு முரணாக உரையெழுதினால் மறுக்கலாம். நம்முடைய கருத்துக்கு மாறுபடுவதனாலேயே குறட்பாவின் உரை மறுப்பிற்கு உரியதாகாது. நம்முடைய கருத்தினையே மற்ற உரையாசிரியர்களும் எழுத வேண்டுமென்றால் அவர்கள் எதற்கு? குறட்பாவிற்கான அழகர் உரையை மறுப்பவர் அழகர் தன்னுடைய உரையில் எங்காவது முரண்படுகிறாரா? அவர் காட்டுகிற  இலக்கணக் குறிப்பு தொல்காப்பியம், நன்னூல் முதலிய நூல்களில் இல்லையே? என்று கண்டு சொன்னால் அது வரவேற்கத்தக்க ஆய்வு. இருபதாம் அல்லது இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்வல்லாரைக் கேட்டுக் கொண்டு பரிமேலழகரோ அடியார்க்கு நல்லாரோ அரும்பத உரையாசிரியரோ நச்சினார்க்கினியரோ சேனாவரையரோ குணசாகரரோ உரையெழுத இயலாது. அவரவர் கருத்துக்கு இசைந்தவாறு எழுதுவதுதான் உரை நெறி. தற்போது உரை சொல்லுகிற எல்லாரும் இந்த நெறியைத்தான் பின்பற்றுகிறார்கள். அதனைவிடக் கொடுமை உரை எழுதிவிட்டு “இதுதான் திருவள்ளுவர் கருத்து” என்று கற்பூரம் கொளுத்தாத குறையாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். இப்படிச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையோ தகுதியோ இல்லை என்னும் சாதாரண உண்மை கூட அறியாமற் போனது தமிழியல் ஆய்வுலகின போகூழ் காலமே!

    2.2.3.3. மாறுபாடு காண்கிற நெறியும் முறையும்

    முன்னர்க் கூறியதுபோலப் பிற உரையாசிரியர் தனக்குத் தானே முரண்படுவதை ஆழமாக நோக்கி நிரலாகச் சொல்லி வன்மையாக ஆனால் எளிமையாக, போகிற போக்கில் மறுக்கும் அழகர் உரைத்திறன் காட்டும் குறட்பா,

    “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.” 8

    இது அமைச்சியலில் ‘சொல்வன்மை’ என்ற அதிகாரத்தின் கீழ் வருவது.

    “நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப், பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி, மற்றைப் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் பின் அப்பகைமையை யொழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாகும்”9

    எனப் பதசாரம் எழுதிய அழகர்,

    “அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் முதலாயின. அவற்றை அவாவுதலாவது ‘சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வு உடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்கு உடைத்தாதல்’.10

    அமைச்சரின் சொல் தழுவி நிற்கவேண்டிய குணங்களைப் பட்டியலிடுகிறார்.

    “கேட்டார் என்பதற்கு நூல்கேட்டார், வினவியார் எனவும் கேளாதார் என்பதற்கு நூல் கேளாதார், வினவாதார்”11

    எனப் பிறர் கூறும் உரைகளை மதிக்கிறார். ஆனால் ‘தகை அவாய்’ என்பதற்கு அழகர் ‘தகையினை அவாவி’ என உரை காணப், பிறர் ‘தகையவாய்’ என ஒரு சொல்லாய் அதாவது பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயராய் உரை கண்டனர்.

    • ‘சொல் என்பது மேற்சொன்ன குணங்களைத் தழுவி’ என்பது அழகர் கண்ட உரை.
    • ‘கேட்டாரைப் பிணித்தலே தகைமை’ என்பது பிறர் கண்ட உரை.

    இந்த உரையை அழகர் மறுக்கவில்லை. ஆனால் இந்த உரை சொன்னவர்கள் கவனிக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டுகிறார்.

    2.2.3.4. அழகர் சுட்டும் மிகச் சாதாரண இலக்கணம்  

    ‘தகைத்து’ என்பது ஒருமை. ‘தகைய’ என்பது பன்மை. ‘து’ ஒருமை விகுதி. ‘அ’ பன்மை விகுதி. அப்படி உரைப்பதால் ஏற்படும் உரைப்பிழை என்னவென்று தெரியுமா? ‘தகையவாய்’ என்பதற்குத் ‘தகுதிகளையுடையவாய்’ எனப் (பன்மை) பொருள் கொண்டால் அப்பன்மை, ‘மொழிவது’ என்னும் (செயப்பாட்டு வினையாகிய) ஒருமையோடு இணையவில்லையே?. பிறர் சொல்லுகிற கருத்து சரியென்றால் குறட்பா ‘மொழிவன’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? இது அழகரின் அசைக்க முடியாத வினா.

    “‘அவாய்’ என்னும் செய்தென் எச்சம் ‘மொழிவது’ என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. (‘மொழிவது’ என்னும் செய்வினை செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது என்பது அறிக) ‘தகையவாய்’ என்பதற்கு எல்லாரும், தகுதியையுடையவாய்’  என்று உரைத்தார். அவர், அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.”12

    ‘தகையினை அவாவி’ என்பதற்கும் ‘தகைய ஆய்’ என்னும் பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயராகக் கொள்வதற்கும் எது அடிப்படைக் காரணம் என்றால் ‘தகை’ என்னும் ஒருமை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு சேரும். ‘தகையவாய்’ என்னும் பன்மை மொழிவது என்னும் ஒருமையோடு சேராது. தற்கால உரைசிரியர் ஒருவர் இந்த உரையை எழுதியிருந்தால் ‘ஒருமை பன்மை தெரியாதவரெல்லாம் உரையெழுத வந்தால் இதுதான் நிலை என்று கூறியிருப்பார். அழகர் கூறவில்லை. அவருடைய புலமையடக்கம் அத்தகையது.

    2.3. சொல்வான் குறிப்பும் சுட்டுப்பெயரும்

    ‘அவர்வயின் விதும்பல்’ (127) என்பது காமத்துப்பாலில் உள்ள ஓர் அதிகாரத் தலைப்பு.  சிலர், வேறுபட்ட புலமை காரணமாகத் தலைவனை எண்ணித் தலைவி கலங்குதல் என்பதே இவ்வதிகாரத். தலைப்பிற்கான பொருள் என அமைதியடைவர். பரிமேலழகரின் பெருமதிப்புக்கு உரியவரான மணக்குடவரும் இந்த நிலைக்கு ஆட்பட்டவர்தாம். ‘அவர்’ என்பது சுட்டுப்பெயர். பொதுவாகச் சுட்டுப்பெயர் தனக்கென்று குறிப்பிட்ட பொருளைக் குறிப்பதற்கு இலக்கணம் கிடையாது. உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும். மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாட்டை ‘அவர் காலையில் போனார் மாலைதான் வருவார்’ என்று அதனைப் பாசத்தோடு வளர்க்கின்றவர் சொல்வார். இங்கே அவர் என்னும் உயர்திணைச் சுட்டு அஃறிணைக்கு வந்தது. உங்க வீட்டுக்காரர் எப்போது வருவார் என்னும் வினாவிற்கு, ‘அது ஊரெல்லாம் சுற்றிவிட்டு பொழுது சாஞ்சு வரும்’ என்று சொல்லுகிற மனைவியும் உண்டு. இங்கே அது என்னும் அஃறிணைச் சுட்டு உயர்திணையைக் குறித்தது. எனவே சுட்டுப்பெயர் சொல்வான் குறிப்போடு கூடிய பொருளுணர்த்தும் பாங்கினது.

    2.3.1. ‘அவர்வயின் விதும்பல்’ — அதிகாரப் பொருண்மை

    கற்பியலில் இவ்வதிகாரம் வரையில் தலைவனது பிரிவும் தலைமகளது ஆற்றாமையும் தொடர்ச்சியாய்ச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இவ்வதிகாரத்தும் தலைமகனைக் காணவேண்டும் என்னும் தனது விதும்பலைத் தலைவி ஏழு குறட்பாக்களிலும், தலைமகளைக் காணவேண்டும் என்னும் தனது விதும்பலைத் தலைவன் மூன்று குறட்பாக்களிலும் கூறியிருக்கின்றனர். இனிக் ‘காமத்துப்பால்’ இருபத்தைந்து தலைப்புக்களில் எந்தவிடத்தும் திருவள்ளுவர் தலைவனை ‘அவர்’ என்னும் சுட்டால் சுட்டவில்லை. இவற்றையெல்லாம் முன்னும் பின்னும் ஆழ்ந்தும் அகன்றும் நோக்கிய அழகர் ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் தலைப்புக்கு (அவர்வயின் விதும்பல் என்றால்),

    “சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விழைதல்”13

    எனப் பொருள் விளக்கம் எழுதித்,

    “தலைமகன் பிரிவும் தலைவி ஆற்றாமையும்  அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலாற் கூறினார்”14

    என ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயர் இருவரையுமே குறிக்கும் என்பதற்கான காரண காரியத்தையும் விளக்கிப்,

    “பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைத்துத் தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துமல்லது தான் ஒன்றற்குப் பெயராகாமையானும், கவிக்கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையான் கூறப்படாமையானும் அஃது உரையன்மை அறிக”.15

    என ‘அவர்’ என்பது தலைமகனையே குறிக்கும் என்பார்தம் கருத்தினைப் பண்பாட்டோடு மறுத்தும் உரையெழுதுகிறார். பொருள்விளக்கம், அதற்கான காரணம், மாற்றுக் கருத்தினைப் பண்பாட்டோடு மறுக்கும் புலமைச் சதுரப்பாடு என்னும் அழகரின் உரைப்பரிமாணத்தின் அனைத்துக் கூறுகளையும் இந்த மறுப்புரையில் காணலாம்.

    நிறைவுரை

    இதுவரை திருக்குறள், அழகரின் உரைத் தரவுகள் ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்ந்த அவர்தம் மறுப்புரையில் பலநெறிகளைப் பின்பற்றுகிறார் என்பதையும் அவற்றுள் இலக்கணக் கூறுகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன என்பதையும், முன்னர்க் கூறிய இலக்கண விளக்கத்தைத் தேவைக்கேற்பப் பின்னரும் நினைவூட்டுகிறார் என்பதையும், வினை, பயன், மெய், உரு உவம வகைகளின் பொருத்தப்பாட்டின் நுண்ணியத்தையும் அவர் கவனத்திற் கொள்கிறார் என்பதையும், ஒருமை, பன்மை முதலிய எளிய இலக்கணமும் இவருடைய மறுப்புரைக்குத் தாங்குதளமாக இருக்கிறது என்பதையும், அதிகாரப் பொருண்மையைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்வதிலும் அதனடிப்படையில் பிறர் உரையை மறுதலிப்பதிலும் இலக்கணம் இவருக்குக் கைகொடுக்கிறது என்பதையும் சுருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. அழகர் உட்பட யாரும் வள்ளுவர் கருத்தினை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது. அனுமானிக்கலாம்.  வேண்டுமானால் இலக்கணப் புலமை உட்படப் பல்வேறு கருவிகள் கொண்டு அவரை அருகிருந்து பார்க்க முயலலாம். அந்த முயற்சியில் அழகர் மற்றவரைக் காட்டிலும் நெருங்கி வருகிறார் என்பதே உண்மை.  கற்பாருக்குப் பெரிதும் வியப்பளிக்கும் அவரது இலக்கணப்புலமை உரைமறுப்புக்குப் பயன்படுகிறது. அவர் காட்டுகிற இலக்கணம் அவருடையதன்று. முன்னோர்களுடையது. அந்த இலக்கணத்தை இந்த இலக்கியத்திற்குப் பொருத்திக் காட்டும் அவரது புலமைச் சதுரப்பாட்டில் யாரும் அவ்வளவு எளிதாக ஐயம் கொள்ள முடியாது. இருந்தாலும் அழகர்  தமது இலக்கணப் புலமையை வெளிப்படுத்தும் எந்த இடத்திலும் தன்முனைப்பு என்பதைக் காணவியலவில்லை. ‘ஆன்று அவிந்து அடங்கிய இந்தக் கொள்கையைத்’ தற்கால உரை மறுப்பாளரிடம் காண்பதரிது என்பதை முன்னெடுத்து இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்                    திருக்குறள்                கு.எண். 720
    2. பரிமேலழகர்                     மேலது உரை
    3. மேலது
    4. திருவள்ளுவர்                    திருக்குறள்                கு.எண். 196
    5. பரிமேலழகர்                     மேலது உரை
    6. மேலது                                                                                      கு.எண். 720
    7. மேலது                                   .
    8. திருவள்ளுவர்                    திருக்குறள்               கு.எண். 643
    9. பரிமேலழகர்                     மேலது உரை
    10. மேலது
    11. மேலது
    12. மேலது
    13. திருவள்ளுவர்                 திருக்குறள்                அதி.எண். 127
    14. பரிமேலழகர்                  மேலது உரை
    15. மேலது

    துணைநூற் பட்டியல்

    1. நச்சினார்க்கினியர்
    தொல்காப்பியம் பொருளதிகார உரை
    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
    மறுபதிப்பு – 1967

    2. திருக்குறள் – பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
    தமிழ்ச்சுடர் மணிகள்
    குமரி மலர்க் காரியாலயம்
    தேனாம்பேட்டை, சென்னை – 600 018
    முதற்பதிப்பு – 1949

    4. புலவர் ச.சீனிவாசன்,
    திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
    மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
    53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
    முதற்பதிப்பு – 2002

    5. முனைவர் நா.பாலுசாமி
    பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
    அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
    முதற்பதிப்பு – 2005

    6. மு.வை.அரவிந்தன் – உரையாசிரியர்கள்
    8/7 சிங்கர் தெரு,
    பாரிமுனை, சென்னை – 600 108
    முதற்பதிப்பு – 1968

    7. நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார்
    இலக்கியக் கட்டுரைகள்
    நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
    தஞ்சாவூர் – 613 003


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    “பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. நீதி இலக்கியம் ஒன்றுக்கு உரைகாண் நெறிகளை அழகர்வழி  நின்று பட்டியலிட்டிருக்கும் ஆய்வாளர், பிறர் உரைகளை மறுப்பதற்கு அழகர் பின்பற்றியிருக்கும் நெறிமுறைகளை நிரல்படுத்தியிருக்கிறார்.

    2. இலக்கியங்களுக்கு உரைகாண்பதில் இலக்கணப் பங்களிப்பின் இன்றியமையாமையைப் புலப்படுத்தி அதனையே  கட்டுரைப் பொருளாக்கியிருக்கிறார்.

    3. அழகரின் ஆழமான இலக்கணப் புலமையை உணர்ந்தார் எவரும் இந்த நெறியில் அழகரை எதிர்ப்பதில்லை.  நீர்த்துப் போன இலக்கணப் புலமை மட்டும் அழகர் உள்ளிட்ட வல்லாளர்களை மறுப்பதற்கு அவ்வளவாகப் பயன்படாது என்பதைக் கட்டுரையாளர் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

    4. வினை, பயன், மெய் உரு என்னும் நால்வகை உவமங்களும் நால்வகை வேறுபட்ட நோக்கிற்குரியன. பொருளுவமையை வினையுவமையாகக் கருதிச் சொல்லும் உரையால் ஏற்படும் அதிகாரப் பொருட்குழப்பத்தையும் திரிபையும் அழகருடைய மறுப்புரை மிக எளிதாக நீக்கியிருப்பதை ஆய்வாளர் அழகுற விளக்கியிருக்கிறார்.

    5. ‘கொளல்’ (720) என்னும் சொல்லுக்கான இலக்கண அமைதியை ஐந்நூறு பாக்களுக்கு முன்சென்று ‘எனல்’ (196) என்பதனோடு பொருத்திக் காட்டும் அழகரின் அளப்பரிய நினைவாற்றலைக் கட்டுரையாசிரியர் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு.

    6. “‘தகைய ஆய்’ எனப் பன்மையாகக் கொள்ளும் பிற உரைகாரர்கள் அது ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு   இயையாமையை நோக்கிலர்”  என்பதில் அழகரின் அங்கதம் புலப்படுகிறது.

    7. சுட்டுப்பெயர் சொல்வான் குறிப்பொடு புணர்ந்தே பொருளுணர்த்தும் இலக்கண நுண்ணியம். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும தொடர் திருவள்ளுவருடையது என்பதையும் அவர் தன் கூற்றாய் யாண்டும் தலைமகனை ‘அவர்’ என்னும் உயர்த்தற்பன்மையால் கூறவில்லை என்பதையும் மிக நுட்பமாக எடுததுக்காட்டி மறுத்திருக்கும் அழகரின் உரைமறுப்புத் திறன் போற்றக் கூடியது. பிறரெல்லாம் தலைமகள் ‘அவர்’ என்று தலைமகனை அழைக்கின்ற குறட்பகுதிகளை (காதலவர் — காதலர் — கலந்தார்) நினைவிற்கொணடாரேயன்றி மேற்கண்ட இருவகை நிலைகளையும் (சுட்டுப்பெயர் மற்றும் கவிக்கூற்று)  கருத்திற் கொண்டாரிலர்.

    8. இவ்வளவு சிந்தனைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஆய்வாளருக்கும் அழகருக்கும் திருவள்ளுவருக்கும்  ஒரு சேரப் பெருமை சேர்க்கிறது.


     

    Share
  • சிக்கல் எங்கே? தீர்வு அங்கே!

    சிக்கல் எங்கே? தீர்வு அங்கே!

    அண்ணாகண்ணன்

    வேலையிழப்பும் வருவாய் இழப்பும் பொது முடக்கமும் தொழில் முடக்கமும் உலகில் பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளன. கவலைப்படுவதால் சிக்கல் சிறிதளவும் குறையாது. சீரிய செயலே நம்மைக் காக்கும்.

    அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செலவிடுங்கள். இதர அனைத்துச் செலவுகளையும் அடியோடு நிறுத்துங்கள். அக்கம் பக்கம், சொந்த பந்தங்கள் குறித்து யோசிக்க வேண்டாம்.

    வசதிக்குப் பழகிவிட்டேன் என உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அது ஒரு மனநிலை. மனநிலையை மாற்றிக்கொண்டால், புதிய பழக்க வழக்கம் உருவாகும்.

    இன்னொரு வகையில் பார்த்தால், இது நன்மையே. வீட்டை விட்டுத் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம். நமக்குப் போக்குவரத்துச் செலவு, திரையரங்கம், மால், ஷாப்பிங்… போன்ற பல செலவுகள் அறவே இல்லை. கல்விக் கட்டணம், வங்கிக் கடன் போன்றவையும் உடனடியாக இல்லை. 3 மாதத் தவணைகளைத் தள்ளி வைத்துள்ளார்கள். வீட்டுச் செலவுகளை மட்டும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் போதும்.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, நண்பர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன், ஒருநாள் சென்னை எழும்பூரில் நடந்துகொண்டிருந்தேன். அந்தச் சாலையோரத்தில் இருந்த பேக்கரிக் கடையைக் காட்டினார். அங்கே இரண்டு ரூபாய்க்கும் பன் கிடைக்கிறது என்றார். இந்தியாவில் இரண்டு ரூபாயிலும் ஒருவேளை பசியாறலாம். அனைவருக்கும் வாழ இங்கே வழியுண்டு என்றார்.

    பணமில்லாதபோது எளிமை, நாளை நிறையப் பணம் கிடைத்ததும் ஆடம்பரமான வாழ்க்கை என மாறக் கூடாது. கூடிய வரை எப்போதும் எளிய வாழ்க்கையையே வாழ வேண்டும். அதுவே எந்நாளும் நன்மை பயப்பது.

    இதிலே மிக முக்கியமானது, நாம் மகிழ்ச்சியாக இருப்பது. நாம் ஏதோ குறைந்துபோய்விட்டோம், அனைத்தையும் இழந்துவிட்டோம், முடங்கிக் கிடக்கிறோம் என்றெல்லாம் எதிராக நினைக்காமல், இதுவும் நன்மைக்கே என்றும் இதற்குள் நமக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்றும் எண்ணிப் பார்த்தால், உற்சாகம் பிறக்கும்.

    ஒரே மாதிரி தினந்தோறும் வேலை செய்துகொண்டிருக்காமல், நிரல் மாற்றி, நிறம் மாற்றி, அளவு மாற்றி, இடம் மாற்றி அதையே விதவிதமாகப் புதுமையாகச் செய்து பாருங்கள். நேர்க்கோட்டில் நடந்துகொண்டிருந்தால், ஒருநாள் வட்டமாக நடக்கலாம். அடுத்த நாள் சதுரமாக. இன்னொரு நாள், 8 வடிவில். பாடிக்கொண்டே நடக்கலாம். கைத்தட்டிக்கொண்டே நடக்கலாம்.

    வழக்கத்தை மாற்றினால், மனத்திற்குப் புதிய உற்சாகம் கிடைக்கும்.  இதற்கெல்லாம் நீங்கள் எந்தச் செலவும் செய்ய வேண்டாம். மகிழ்ச்சிக்கும் காசு பணத்திற்கும் தொடர்பு இல்லை. தொட்டிக்குள் அடைபட்டாலும் பூ சிரிக்க மறப்பதில்லை. எப்போதும் மகிழ்ந்திருப்போம். எல்லாம் இன்ப மயம்.

    எளிமையாக, செம்மையாக வாழ விருப்பமா? சீர் இயக்கத்தில் சேருங்கள் – https://www.facebook.com/groups/558828647883520

    ———————————————————–

    Pic courtesy: https://www.maxpixels.net

    Share
  • இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

    இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    ஆஸ்திரியா, பிரான்ஸ் என்று பல ஐரோப்பிய நாடுகளின் பிடியில் சிக்கி, தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்டு நின்ற இத்தாலியின் விடுதலைக்குப் பாடுபட்டோர் மூவர். ஒருவர் மாஜினி (Giuseppe Mazzini); அடுத்தவர் கரிபால்டி (Giuseppe Garibaldi); மற்றொருவர் காவுர் (Cavour). இவர்களில் இத்தாலியின் ஆயுதமாகக் கரிபால்டியும், அறிவாகக் காவூரும், ஆன்மாவாக மாஜினியும் திகழ்ந்தனர் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரிடித் (George Meredith).  

    இந்தியாவுக்கு மகாத்மா காந்தி எப்படியோ, ரஷ்யாவுக்கு லெனின் எப்படியோ அப்படியே இத்தாலிக்கு மாஜினி. இவர்களை நாம் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடியாதுதான்; எனினும் இவர்களிடத்தே காணப்பட்ட  சில அபூர்வமான பண்புகளின் அடிப்படையில் இவர்களை நாம் ஒன்றுபடுத்தலாம். இவர்கள் அரசியல்வாதிகளாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்; ஆனால் அதற்காக இவர்கள் போற்றப்படவில்லை. மனிதத் தன்மையில் மேம்பட்டவர்கள் என்பதற்காக, அந்த மனிதத்தன்மையானது தங்கள் நாட்டினரிடத்தில் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து நாட்டினரிடத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது உழைத்ததற்காகப் போற்றப்படுகிறார்கள்.

    இத்தாலிய விடுதலை வேள்விக்குப் பாடுபட்டவரும் புதிய ஐரோப்பாவை நிர்மாணித்தவர்களில் ஒருவர் என்று கருதப்படுபவருமான ஜோசப்  மாஜினி இத்தாலியிலுள்ள ஜெனோவா நகரில் 1805ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் பிறந்தார்.

    குழந்தைப் பருவத்திலேயே மிகவும் புத்திக்கூர்மை கொண்டவராகத் திகழ்ந்த மாஜினி, தம் தொடக்கக் கல்வியை வீட்டிலேயே ஓர் ஆசிரியரிடம் பயின்றார். மாஜினிக்கு பத்து வயதாக இருந்தபோது, பிரான்சில் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் வீழ்ந்துபட்டது. அந்த ஆண்டில் ஐரோப்பிய வல்லரசுகளின் ஒப்புதலின்பேரில் லிகூரியா (Liguria) மாகாணத்திலிருந்த ஜெனோவா நகரத்தை பீட்மாண்ட் (Piedmont) மன்னன் தன்வசப்படுத்திக்கொண்டான். இதனை ஜெனோவாவாசிகள் அடியோடு வெறுத்தனர். இதுகுறித்தெல்லாம் மாஜினி வீட்டில் அடிக்கடி பேச்சுகள் நடைபெற்றன. இவை மாஜினியின் இளம் உள்ளத்தில் புரட்சிக் கனலை அப்போதே உண்டுபண்ணத் தொடங்கின. 

    அவர் ஒருநாள் தம் தாயோடும் வேறொரு நண்பரோடும் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களைத் தொடர்ந்து ஒருவன் வந்தான். நல்ல உயரமும் கருமையான தாடியும் கூர்த்த பார்வையும் கொண்டிருந்த அவன் இவர்களருகில் வந்து ஒரு கைக்குட்டையை விரித்து, “சட்ட விரோதிகளான இத்தாலியர்களுக்கு” என்று சொல்லவும், மாஜினியின் தாயும் அருகிலிருந்த நண்பரும் அக் கைக்குட்டையில் சில காசுகளைப் போட்டனர். அவன் நன்றி சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

    இதனைக் கண்ட மாஜினி வியப்போடு, ”அம்மா இவர் யார்? இவருடைய தோற்றமும் கம்பீரப் பார்வையும் என்னைக் கவர்கின்றன. இவர் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்?” என்று வினவ, அவருடைய தாய், “மகனே! சில நாள்களுக்கு முன் பீட்மாண்ட் பிரதேசத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து கார்போனாரி (Carbonari) எனும் அமைப்பைச் சேர்ந்தோர் ஒரு புரட்சி செய்தார்கள். ஆனால் அரசாங்கத்தார் அதனை ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டார்கள். எனவே அரச தண்டனைக்குப் பயந்து இப்புரட்சியாளர்கள் தப்பித்து ஜெனோவாவுக்கு ஓடிவந்துவிட்டனர்; அவர்களில் இவரும் ஒருவர் என்றார்.

    ”இவர்களுடைய புரட்சி ஏன் தோல்வியுற்றது?” என்று கேட்டார் மாஜினி. ”சரியான முன்னேற்பாடும் ஒழுங்கான தலைமையும் இன்மையே அதற்குக் காரணம்” என்றார் அவரின் தாயார்.

    ”இவர்கள் ஏன் ஜெனோவாவுக்கு வந்தனர்?” என்று அடுத்த வினாவை மாஜினி தொடுக்க, ”கையில் காசில்லாமல் ஓடி வந்துவிட்ட இவர்கள் ஸ்பெயின் முதலிய நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு வசதியாகத் துறைமுக நகரமான ஜெனோவாவுக்கு வந்திருக்கின்றனர். கப்பல் செலவுக்குத்தான் இப்போது பணம் வசூலிக்கின்றனர்” என்றார் மாஜினியின் தாய்.

    இந்தச் சம்பவம், மாஜினியின் மனத்தில் ஆழப் பதிந்து, தாய்நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்குத் தன்னையும் அர்ப்பணிக்க வேண்டும் எனும் தீவிர எண்ணத்தை அவருள் விதைத்துவிட்டது.

    இதற்கிடையில் 1827ஆம் ஆண்டு கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞரானார் மாஜினி. ஏழைகளின் வழக்கறிஞர் (Poor man’s lawyer) என்று சொல்கின்ற வகையில் வசதியற்ற ஏழைகளுக்காக வாதாடினார் அவர். என்னதான் அவர் வழக்கறிஞராகத் திறம்படப் பணியாற்றினாலும் அவருடைய ஆர்வம் கவிதையிலும் வரலாற்றிலுமே அதிகம் இருந்தது. இலக்கியத்திலும் அரசியலிலும் ஆர்வங்கொண்ட நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தார். அரசாங்கத்தால் தடுக்கப்பட்டிருந்த பல நூல்களை அவர் இரகசியமாக வரவழைத்து நண்பர்களைப் படிக்கச் செய்தார். இத்தாலிய மகா கவிஞராகிய தாந்தேயிடத்திலும் (Dante), ஆங்கில மகா கவிஞராகிய பைரனிடத்திலும் (Byron) மாஜினிக்குச் சிறப்பான ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தன. இக்காலத்தில் அவர் இதயத்திலிருந்து ஊற்றெடுத்த தேசிய எண்ணங்கள், இலக்கியப் போர்வை போர்த்துக்கொண்டு ஜெனோவாவில் வெளியான சில பத்திரிகைகளில் கட்டுரைகளாக மலர்ந்தன.

    பின்னர், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது என்ற எண்ணத்தில் தம் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அரசாங்கத்துக்கு எதிரான கார்போனாரி இரகசியச் சங்கத்தில் சேர்ந்தார் மாஜினி. அந்தச் சங்கத்தின் ஒழுங்கற்ற தன்மையை அவர் அறிந்திருந்தும்கூட வேறு வழியின்றி அதில் தம்மை இணைத்துக்கொண்டார்.

    இச்சமயத்தில், அதாவது 1830ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரான்சை அப்போது ஆண்டுகொண்டிருந்த பத்தாம் சார்லஸ் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி நடைபெற்றது. இப்புரட்சியானது மற்ற நாடுகளிலுள்ள தேசியவாதிகளுக்கும் ஓர் உந்துசக்தியையும், தங்கள் நாட்டில் புரட்சியை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பையும் அளித்தன.

    ஆனால் இதுபோன்றதொரு பெரிய புரட்சியை கார்போனாரி சங்கத்தால் இத்தாலியில் நடத்த முடியாதென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார் மாஜினி. ஒரு புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு உயர்ந்த இலட்சியங்களோடு கூடிய ஓர் அமைப்பு அவசியம் என்று எண்ணிய அவர், அப்புதிய அமைப்பை உருவாக்கும் பொறுப்பு தம்முடையதே என்பதையும் அறிந்தார். இங்ஙனம் வேறோர் அமைப்பிலிருந்துகொண்டே புதிய அமைப்பைத் தோற்றுவிக்க அவர் முயன்றுகொண்டிருந்த வேளையில், இத்தாலியக் காவல்துறையினரின் சந்தேகப் பார்வை மாஜினி மீது விழுந்தது. அவரைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த காவல்துறையினர், 1830ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தம் புதிய அமைப்புக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தபோது கைதுசெய்து ஜெனோவாவின் மேற்கேயிருந்த ஸாவோனா (savona) எனும் நகரத்தின் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    தம்முடைய எதிர்கால வேலைகளுக்குத் தேவையான திட்டங்களையெல்லாம் சிறையிலேயே தயார்செய்திருந்த மாஜினி, 1831ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாவோனா சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார். ஆனால் அத்திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்த இயலாவண்ணம் அதிகாரிகள் அவரை பிரான்சிலுள்ள மார்சேல் நகரத்துக்கு நாடுகடத்திவிட்டார்கள்.

    தம்முடைய 26ஆவது வயதில் மார்சேல் (Marseille) நகரத்துக்கு வந்தார் மாஜினி. இத்தாலியில் நடைபெற்ற முந்தைய புரட்சிகளில் கலந்துகொண்டு நாடுகடத்தப்பட்ட இத்தாலியர்கள் சிலர் ஏற்கனவே மார்சேல் நகரில் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிய மாஜினி, தம்முடைய திட்டங்களை அவர்களிடம் விளக்கினார். இவற்றை நிரல்பட நிறைவேற்றினால் ஒரு தலைமுறைக்குள் இத்தாலியைச் சுதந்தர நாடாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்தார். அவர்களும் மாஜினியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள், அனைவரும் சேர்ந்து ஒரு சிறு அறையை வாடகைக்குப் பிடித்தார்கள். அதில்தான் மாஜினியின் புகழ்பெற்ற ‘இளைய இத்தாலி’ (Giovine Italia/ youth Italy) என்ற சங்கம் உதயமாயிற்று. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

    சுமார் இரண்டாண்டு காலம் இச்சங்கத்தார் சலியாது உழைத்தனர். தங்களுக்கென்று சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் தங்கள் கருத்துகளை அச்சிட்டு, இத்தாலிக்கு இரகசியமாக அனுப்பிவந்தார் மாஜினி. இவைதவிர தீவிரப் போக்குடைய பலநாட்டுப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதினார் அவர். இத்தாலியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாஜினியின் எழுத்தாலும் மாசற்ற தேசப்பற்றாலும் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைக்காக எதையும் இழக்கச் சித்தமாயினர்; அவர்கள் மாஜினியின் சித்தாந்தங்களை நாடெங்கும் பரப்பினர். இத்தாலியில் இளைய இத்தாலியின் கிளைகள் பல தோன்றலாயின.

    ஈராண்டுகளுக்குள் சுமார் அறுபதினாயிரம் பேர் இச்சங்கங்களில் அங்கத்தினர்களாயினர். இவ்வாறு இளைய இத்தாலி இயக்கத்தின் செல்வாக்கு பெருகி வருவதை ஆஸ்திரிய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் இச்சங்கத்தில் சேர்வது குற்றமென்றும், அவ்வாறு சேருவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அது அறிவித்தது.

    பீட்மாண்ட் அரசனும் மாஜினிக்கும் அவனுடைய இளைய இத்தாலி சங்கத்தார்க்கும் எதிராகப் பல அடக்குமுறைகளைக் கையாண்டு அவர்களை ஒடுக்கினான். இதனால் மாஜினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சிறிது காலம் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அவர், தம்முடைய 32ஆவது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டன் நகருக்கு வந்தார்.  அங்கேயும் கையில் பொருளின்றி அல்லலுற்றிருந்த அவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்தது சிறந்த அறிஞரான தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle) ஏற்பட்ட நட்பு. அதுபோலவே ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) எனும் அறிஞருடைய நட்பும், இன்னும்  அறிஞர்கள் பலரின் நட்பும் மாஜினிக்கு அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டன.  இவை அவருக்கு ஆறுதலையும் மனஅமைதியையும் அளித்தன.

    இந்த நண்பர்களின் முயற்சியின் பேரில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு மாஜினி எழுதிவந்த கட்டுரைகளுக்கு அதிகமான வருவாய் கிடைக்கத் தொடங்கியது, அதனைக் கொண்டு தொழிலாளர்களின் நலனுக்காக ’Apostolato popolare’ (Apostleship of the People) எனும்  பத்திரிகையை ஆரம்பித்தார். அதனை ஆரம்பிப்பதற்கு முன்பே இலண்டனில் வசித்துக்கொண்டிருந்த இத்தாலியத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கென்று ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தச் சங்கத்தின் ஓர் அங்கமாகவே இந்தப் பத்திரிகையை மாஜினி வெளியிட்டார். அதில்தான் ’மனிதனின் கடமைகள்’ (On the Duties of Man) எனும் அவருடைய புகழ்வாய்ந்த கட்டுரைகளின் முதல் ஆறு பகுதிகள் வெளிவந்தன.

    1848ஆம் ஆண்டு ஐரோப்பாவில் புரட்சிகள் மிகுந்த ஆண்டாக விளங்கியது. இத்தாலியின் மக்களும் ஒன்றுபட்டு, ஆஸ்திரிய ஆதிக்கத்திற்கெதிராகப் புரட்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றனர். அதனை அறிந்த மாஜினி, இங்கிலாந்திலிருந்து மகிழ்ச்சியோடு இத்தாலி திரும்பினார். ஆனால் மக்களின் வெற்றியும் மாஜினியின் மகிழ்ச்சியும் நெடுநாள் நீடிக்கவில்லை. அப்போது இத்தாலியோடு எவ்வித நேரடி மோதலும் இல்லாத பிரான்ஸ்,  இத்தாலிக்கு எதிராகப் போரில் இறங்கியது. பிரெஞ்சுப் படையை எதிர்த்து புரட்சியாளர் கரிபால்டி (Garibaldi) தலைமையில் இத்தாலியப் படை வெகுதீரத்துடன் போராடிய போதிலும், அளவிலும் ஆற்றலிலும் மிக்கிருந்த பிரெஞ்சுப் படையை எதிர்க்க முடியாமல் அது தோல்வியைத் தழுவியது. கரிபால்டி, பிரெஞ்சு வீரர்களிடம் சரணடைய விரும்பாமல் உரோமை விட்டு வெளியேறினார்.

    இந்நிகழ்வுகள் மாஜினியை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கின. நம்பிக்கையிழந்த மாஜினி மீண்டும் இங்கிலாந்து போய்ச்சேர்ந்தார். இத்தாலியின் விடுதலைப் போருக்கு இங்கிலாந்தில் உள்ளோரின் ஆதரவைப் பெறும்பொருட்டு, இத்தாலியின் நண்பர்கள் சங்கம் (the Friends of Italy) என்ற சங்கத்தை 1851இல் ஆரம்பித்து அதில் இத்தாலி குறித்துத் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்திவந்தார்.

    எவ்வளவு முயன்றும் தம் வாழ்நாளுக்குள் இத்தாலியில் குடியாட்சியை நிறுவ மாஜினியால் இயலவில்லை. போராட்டத்திலேயே பிறந்து போராட்டத்திலேயே வளர்ந்த மாஜினியின் உடல் முதுமையால் தளர்ந்தது. ”உழைத்து உழைத்துக் களைத்துப்போன இந்த வாழ்க்கை எந்திரம் எனக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது” என்று கூறி வருந்தினார் அவர். அவரோடு அன்பு பாராட்டிப் பழகியவர்களெல்லாம் அவருடைய அந்திமக் காலத்தில் அவருக்குப் பகையாகிப் போனார்கள். அவரோடு அரசியல் போராட்டங்களில் கைகோத்திருந்த கரிபால்டிக்கும் அவருக்கும்கூட மனத்தாங்கல் ஏற்பட்டது. எனினும் இவற்றையெல்லாம் மாஜினி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

    இத்தாலியத் தொழிலாளிகளுக்கு அவர் கடைசியாக உபதேசித்தது இதுதான்! “பெருமை வாய்ந்த ஆனால் துரதிர்ஷ்டம் மிகுந்த நமது தாய்நாட்டை நேசியுங்கள்! அதன் மேன்மைக்காக அயராது உழையுங்கள்! இதுவே நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்.”

    தம் வாழ்நாளெல்லாம் இத்தாலிய விடுதலைக்காகப் போராடிய மாஜினி,1872ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஜெனோவாவுக்கு அருகிலுள்ளதும், சாய்வுகோபுரத்திற்குப் பெயர்பெற்றதுமான பைசா நகரத்தில் உயிர்நீத்தார். பின்னர் அவர் விருப்பப்படியே ஜெனோவா நகரத்திலிருந்த அவருடைய தாயாரின் கல்லறைக்கு அருகில் அவருடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உலகத்தில் அகத்தூய்மைக்கும் மனிதத் தன்மைக்கும் மதிப்பிருக்கின்ற வரையில், அதிகாரத்தையும் வெற்றியையும் காட்டிலும் தன்னலத் துறவும், கடமையுமே உயர்ந்தது என்று மன்பதை எண்ணுகின்ற வரையில், தமக்கென வாழாது தம் நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர் மாஜினியின் பெயரும் நிலைத்திருக்கும்!

    ***********************************************

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://www.britannica.com/biography/Giuseppe-Mazzini
    2. https://en.wikipedia.org/wiki/Giuseppe_Mazzini
    3. மாஜினி – வெ.சாமிநாத சர்மா நூல்திரட்டு 5 – தமிழ்மண் பதிப்பகம்

     

    Share
  • சீர் இயக்கம் எதற்காக? – அண்ணாகண்ணன் உரை

    சீர் இயக்கம் எதற்காக? – அண்ணாகண்ணன் உரை

    2018 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், எளிய வாழ்வின்வழி ஏற்றம் என்ற நோக்குடன்,  சீர் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினேன். இதற்கான பேஸ்புக் குழு இங்கே – https://www.facebook.com/groups/558828647883520/
     
    சீர் இயக்கம் குறித்தும் எளிய வாழ்வியலுக்கான என் வழிகாட்டிகள் குறித்தும் எளிமையை வாழ்க்கைமுறையாகக் கொள்வது குறித்தும் இந்தக் காணொலியில் விளக்கியிருக்கிறேன். 
     
     
     
    எளிய வாழ்க்கையில் ஆர்வம் கொண்டோர், இந்தக் குழுவில் இணையுங்கள்.
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • நாலடியார் நயம் – 21

    நாலடியார் நயம் – 21

    நாங்குநேரி வாசஸ்ரீ

    21. சுற்றம் தழால்

    பாடல் 201

    வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
    கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
    அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
    கேளிரைக் காணக் கெடும்.

    கருவுற்றதனால் அதுபற்றி வரும்
    கணக்கற்ற நோவும் மசக்கையும்
    குழந்தை பெறுங்காலத்தய நோவும்
    கண்ணால் தம்மடியில் குழந்தையைக்
    கண்ட தாய் மறப்பதுபோல் தாம்
    கொண்ட தளர்ச்சியாலுற்ற துன்பமெலாம்
    கனிவுடன்விசாரிக்கும் சுற்றத்தாரைக்
    காணின் நீங்கும்.

    பாடல் 202

    அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
    நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழு மரம்போல்
    பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
    நல்லாண் மகற்குக் கடன்.

    வெப்பம் மிகு கோடையில்
    வந்தடைந்தோருக்கெல்லாம்
    நிழல்தரும் மரம்போல் தம்மை
    நெருங்கிய சுற்றத்தாரையெல்லாம்
    தாங்கி ஒரே தன்மையாய்க் காத்து
    தான் வருந்தி உழைத்து
    பழுத்தமரம் போல் பலரும்
    பயன்நுகர வாழ்வதே நல்ல
    ஆண்மகனின் கடமையாம்.

    பாடல் 203

    அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
    எடுக்கலம் என்னார்பெரியோர்; – அடுத்தடுத்து
    வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
    தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

    அடுக்கடுக்கான மலைகளுடை நாட்டின்
    அரசனே! அதிகமான காய்கள் கிட்டக்கிட்டக்
    காய்த்தாலும் தன் காய்களைத் தாங்கிக்
    கொள்ளாத மரக்கிளை இல்லையதுபோல்
    தம்மைச் சார்ந்தவரைப் பெரியோர்
    தாங்கமாட்டோம் எனச் சொல்லார்.

    பாடல் 204

    உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
    சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; – நிலைதிரியா
    நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
    ஒற்கமி லாளர் தொடர்பு.

    உலகோர் அறியும்வண்ணம்
    உறவு கொண்டாலும்
    அற்பரின் உறவு நீடிக்காது
    அடங்கும் சில நாட்களிலே
    தம் நிலைமாறாப் பெரியோரின்
    தகுதியான உறவோ நன்னெறி
    அடையத் தவம் செய்யும் காலத்தில்
    அந்நெறியில் ஊன்றி நிற்பது போல்
    அசையாது நிலைபெற்று நிற்கும்.

    பாடல் 205

    இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
    என்னும் இலராம் இயல்பினால் – துன்னித்
    தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
    தலைமக்கள் ஆகற்பா லார்.

    இவர் இப்படிப்பட்ட எம் உறவினர்
    இவர் உறவினரல்லார் என வேறுபாடு
    காட்டும் சொல்லைச் சொல்லாத
    குணமுடையோராய்த் துன்பத்தால்
    வாடும் மக்களைச் சார்ந்து அவர்தம்
    வாழ்க்கைத் துன்பத்தைக் களைபவரே
    யாவருக்கும் தலைவராகும் தன்மையுடையார்.

    பாடல் 206

    பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
    அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
    உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
    எக்காலத் தானும் இனிது.

    பொற்பாத்திரத்திலே இட்ட
    புலிநகம்போலும் வெண்சோற்றை
    பாலோடு சர்க்கரையும் கலந்து
    பகைவர் கையால் உண்பதைக்காட்டிலும்
    புல்லரிசிக்கூழ் உப்பில்லாதிருப்பினும்
    பாசமான உயிர்போன்ற சுற்றத்தாரிடம்
    பெற்று எந்தக் காலத்திலும் உண்பதினிது.

    பாடல் 207

    நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
    வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; – கேளாய்,
    அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
    தமராயார் மாட்டே இனிது.

    பகைவர் வீட்டில் வேளை தவறாது தந்த
    பொரிக்கறியுணவும் வேம்புக்கு நிகரே
    பிற்பகலில் நேரம்கடந்து கிடைத்தாலும்
    பாசமான சுற்றத்தாரின் கீரைஉணவு இனியதே!

    பாடல் 208

    முட்டிகை போல முனியாது வைகலும்
    கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
    சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
    நட்டார் எனப்படு வார்.

    சம்மட்டி போல் வெறுக்காமலிருக்கும்படி
    சலிக்காது நாள்தோறும் வாங்கி
    உண்பவரும் காலம் வாய்த்தால்
    குறடுபோல் கைவிட்டு விலகுவர்
    அன்புமிகு உறவினரோ உலையாணிக்கோல் போல
    அவருடன் துன்பமெனும் நெருப்பிலும் மூழ்குவர்.

    பாடல் 209

    நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
    மறுமையும் செய்வதொன் றுண்டோ ! – இறுமளவும்
    இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
    துன்புறுவ துன்புறாக் கால்.

    வாசனைப்பூக்களைச் சூடிய கூந்தலுடன்
    விளங்குபவளே! உறவினர் தம் உறவினருடன்
    அவர் சாகும்வரை இன்புறும்போது இன்புற்று
    அவர் துன்புறும்போது சேர்ந்து தாமும்
    வருத்தப்படுவதோடதல்லாது மறுபிறப்பிலும்
    வேறு செய்யத்தக்க நற்செயல் ஒன்றுண்டோ?

    பாடல் 210

    விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
    வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; – விருப்புடைத்
    தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
    என்போடு இயைந்த அமிழ்து.

    தம்மை விரும்பாதார் வீட்டில்
    தனித்து உண்ணும் பூனைக்கண்
    போன்ற வெண் பொரிக்கறி உணவும்
    புசித்தால் கசக்கும் வேம்பாகும்
    தம்மிடம் விருப்பம் கொண்டோரின்
    தெளிந்த நீருடன் கூடிய குளிர்
    புல்லரிசிக்கூழும் உடம்புக்குப்
    பொருந்தும் அமிழ்தமாகும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(302)

    குறளின் கதிர்களாய்…(302)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(302)

    அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
    மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

           – திருக்குறள் – 1076 (கயமை)

    புதுக் கவிதையில்...

    கேட்டறிந்த
    மறைவான செய்திகளை
    மனதில் வைத்துக்கொள்ளாமல்
    கேட்காமலே கயவர்
    மக்களிடம் செர்லித்திரிவதால்,
    அவர்கள்
    அடிபடும் பறைக்கு ஒப்பாவர்…!

    குறும்பாவில்...

    மறைவான செய்திகளை மறைக்காமல்
    பிறரிடம் சொல்லியலையும் கயவர், அடிபடும்
    பறை போன்றவர்களே…!

    மரபுக் கவிதையில்...

    கேட்ட றிந்த சேதிகளில்
         கெட்டியாய் மனதில் மறைத்தேதான்
    பூட்டி வைக்க வேண்டியதைப்
         புவியில் மாந்தர் பலரறியக்
    கேட்டி டாமலே போய்ச்சொல்லும்
         கெட்ட குணமுடைக் கயவரவர்,
    நாட்டோ ரறியப் போட்டடிக்கும்
         நாதப் பறையதற் கொப்பாமே…!

    லிமரைக்கூ..

    கேட்டறிந்த செய்திகளை மறை,          
    மறைக்கவேண்டியவற்றை வெளியேசொல்லும் கயவனுக்
    கொப்பாமே அடிபடும் பறை…!

    கிராமிய பாணியில்...

    கேட்டுக்கோ கேட்டுக்கோ
    கெட்ட கொணம்வராமப் பாத்துக்கோ,
    கெட்டவனா மாறிடாமப் பாத்துக்கோ..

    கேட்டு தெரிஞ்ச சேதியில
    ரகசியமா வைக்கவேண்டியதயும்
    கேக்காமலே
    போட்டு ஒடச்சிப் பலரறிய
    வெளிய சொல்லுற
    கேடுகெட்டவனும்
    போட்டடிச்சி அடிவாங்குற
    பறக்கொட்டும் ஒண்ணுதானே..

    கேட்டுக்கோ கேட்டுக்கோ
    கெட்ட கொணம்வராமப் பாத்துக்கோ,
    கெட்டவனா மாறிடாமப் பாத்துக்கோ…!

    Share
  • Q&A: Separators in Tamil numbering system

    Q&A: Separators in Tamil numbering system

    My answer to Devanathan Rengachari on the use of separators in Tamil numbering system.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share