நாங்குநேரி வாசஸ்ரீ

 22. நட்பாராய்தல்

பாடல் 211

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; – குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.

நூற்பொருளை அறிந்து கற்றவருடன் கொண்ட
நட்பு எக்காலத்தும் குருத்திலிருந்து
கரும்பைத் தின்றதுபோல் இனிமையானது
கல்வியாகிய இனிமையை உடையாதார்
நட்பு கரும்பை எதிர்செலத் தின்றால் சுவை
குறைதல்போல் நட்பின் சுவை
குறைந்து வெறுக்கப்படும்.

பாடல் 212

இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது – பொற்கேழ்
புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.

பொன்னிற அருவிகள் பெருகக்கண்டு
பறவைகள் அஞ்சி ஓடும் அழகிய
மலைசூழ் நாட்டுடை மன்னனே!
மனதால் அறியப்பட்டதென்று
ஒன்றுமில்லை நட்புகொள்வதென்பது
ஒருவனின் உயர்குடிப்பிறப்பை நோக்கி
இவர் இடையில் மாறமாட்டார் எனும்
இணையறா நம்பிக்கையே.

பாடல் 213

யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

யானை போன்றவரின் நட்பை விடுத்து
நாய் போன்றவரின் நட்பைக் கொள்ளுதல்
நல்லதாம் ஏனெனில் யானை பலநாள்
பழகியிருந்தும் உண்ணக்கொடுத்துப்
பாதுகாக்கும் பாகனையே கொல்லும்
நாயோ சினம்கொண்டு அவன் எறிந்த வேல்
நன்கு பொருந்தியிருக்கத் தன்னை
வளர்த்த அவனை நோக்கி வாலை ஆட்டும்.

பாடல் 214

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; – பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு.

பல நாள் பக்கத்திலிருந்து
பழகுபவராயினும் மனதோடு
பொருத்தமில்லாதாரோடு என்றும்
பொருந்தார் அறிவுடையோர் எனில்
நெஞ்சத்திலே பொருந்தியவர் பலநாள்
நீங்கி இருந்தார் எனும் காரணம்
காட்டிக் கைவிடுவாரோ?

பாடல் 215

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; – தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்.

கொம்பிலே பூக்கும் பூக்கள் மலர்ந்தபின்
குவியாதிருக்கும் உதிரும் வரை அதுபோல்
முதலில் விரும்பி மகிழ்ந்தது போலவே
முடிவு வரை விரும்பியிருப்பது நட்பு
தோண்டப்பட்ட குளத்தின் பூவைப்போல்
தொடக்கத்தில் மலர்ச்சி காட்டி பின்
முகம் சுருங்கும் தன்மையுடையவரை
விரும்புபவரும் நட்பு கொள்வாரும் இல்லை.

பாடல் 216

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

நட்பில் கீழ்த்தரமானவர் நாள்தோறும்
நீர்பாய்ச்சினால் உதவும் கமுகு போன்றோர்
நடுத்தரமானவர் விட்டு விட்டு
நீர்ப்பாய்ச்சினாலும் உதவும்
தென்னை மரம் போன்றோர்
பழந்தொடர்பு பாராட்டும் முதற்தரமானவர்
பழகி நட்பு விதையிட்ட நாளில் வார்த்த நீரன்றி
பராமரிப்பற்றே வளர்ந்து பயன்தரும் பனையொத்தோர்.

பாடல் 217

கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; – விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

அரிசி கழுவிய நீரில் உப்பின்றி
ஆக்கிய கீரைக்கறியும் பிரியமாகக்
கொள்ளின் அமிழ்தமே சிறந்த தாளிப்புள்ள
கறிகள்நிறை வெண்சோறேயாயினும்
அன்பிலாரின் கை உணவை உண்டால்
அது எட்டிக்காயுண்பது போல் கசக்கும்.

பாடல் 218

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.

நாயின் கால் சிறுவிரல்கள் போல்
நெருக்கம் உள்ளவராயினும்
ஈயின் காலளவும் உதவாதார்
இணக்கமான நட்பால் பயனென்ன?
வயலை விளைவிக்க உதவும்
வாய்க்கால் தொலைவிலுள்ள நீரைக்
கொண்டு சேர்ப்பதுபோலான நட்பைக்
கொளல்வேண்டும் அது தூரத்திலிருப்பினும்.

பாடல் 219

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் – அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று.

நல்லது அறிவில்லாதார்
நட்பை விட அவரின் பகை
நல்லது மரணித்தல்
நலம் பெறாது கொடும்
நோயால் அவதியுறுவதைவிட
நல்லது கொல்லுதல்
நாளும் இகழ்தலைவிட
நல்லது பழித்தல்
நடவாததைச் சொல்லிப் புகழ்தலைவிட.

பாடல் 220

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு.

பலருடன் பலநாள் பழகிப்
பலரின் குணங்களை ஒப்பிட்டு
தகுதியுடை மேலோரை நண்பராய்த்
தேர்ந்து கொள்ளல் வேண்டும்
பல்லால் கடித்து உயிரைக் கொல்லும்
பாம்போடும் பழகிவிட்டுப் பின்
பிரிதல் துன்பம் தரத்தக்கதே.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க