சிக்கல் எங்கே? தீர்வு அங்கே!

அண்ணாகண்ணன்
வேலையிழப்பும் வருவாய் இழப்பும் பொது முடக்கமும் தொழில் முடக்கமும் உலகில் பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளன. கவலைப்படுவதால் சிக்கல் சிறிதளவும் குறையாது. சீரிய செயலே நம்மைக் காக்கும்.
அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செலவிடுங்கள். இதர அனைத்துச் செலவுகளையும் அடியோடு நிறுத்துங்கள். அக்கம் பக்கம், சொந்த பந்தங்கள் குறித்து யோசிக்க வேண்டாம்.
வசதிக்குப் பழகிவிட்டேன் என உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அது ஒரு மனநிலை. மனநிலையை மாற்றிக்கொண்டால், புதிய பழக்க வழக்கம் உருவாகும்.
இன்னொரு வகையில் பார்த்தால், இது நன்மையே. வீட்டை விட்டுத் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம். நமக்குப் போக்குவரத்துச் செலவு, திரையரங்கம், மால், ஷாப்பிங்… போன்ற பல செலவுகள் அறவே இல்லை. கல்விக் கட்டணம், வங்கிக் கடன் போன்றவையும் உடனடியாக இல்லை. 3 மாதத் தவணைகளைத் தள்ளி வைத்துள்ளார்கள். வீட்டுச் செலவுகளை மட்டும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் போதும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, நண்பர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன், ஒருநாள் சென்னை எழும்பூரில் நடந்துகொண்டிருந்தேன். அந்தச் சாலையோரத்தில் இருந்த பேக்கரிக் கடையைக் காட்டினார். அங்கே இரண்டு ரூபாய்க்கும் பன் கிடைக்கிறது என்றார். இந்தியாவில் இரண்டு ரூபாயிலும் ஒருவேளை பசியாறலாம். அனைவருக்கும் வாழ இங்கே வழியுண்டு என்றார்.
பணமில்லாதபோது எளிமை, நாளை நிறையப் பணம் கிடைத்ததும் ஆடம்பரமான வாழ்க்கை என மாறக் கூடாது. கூடிய வரை எப்போதும் எளிய வாழ்க்கையையே வாழ வேண்டும். அதுவே எந்நாளும் நன்மை பயப்பது.
இதிலே மிக முக்கியமானது, நாம் மகிழ்ச்சியாக இருப்பது. நாம் ஏதோ குறைந்துபோய்விட்டோம், அனைத்தையும் இழந்துவிட்டோம், முடங்கிக் கிடக்கிறோம் என்றெல்லாம் எதிராக நினைக்காமல், இதுவும் நன்மைக்கே என்றும் இதற்குள் நமக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்றும் எண்ணிப் பார்த்தால், உற்சாகம் பிறக்கும்.
ஒரே மாதிரி தினந்தோறும் வேலை செய்துகொண்டிருக்காமல், நிரல் மாற்றி, நிறம் மாற்றி, அளவு மாற்றி, இடம் மாற்றி அதையே விதவிதமாகப் புதுமையாகச் செய்து பாருங்கள். நேர்க்கோட்டில் நடந்துகொண்டிருந்தால், ஒருநாள் வட்டமாக நடக்கலாம். அடுத்த நாள் சதுரமாக. இன்னொரு நாள், 8 வடிவில். பாடிக்கொண்டே நடக்கலாம். கைத்தட்டிக்கொண்டே நடக்கலாம்.
வழக்கத்தை மாற்றினால், மனத்திற்குப் புதிய உற்சாகம் கிடைக்கும். இதற்கெல்லாம் நீங்கள் எந்தச் செலவும் செய்ய வேண்டாம். மகிழ்ச்சிக்கும் காசு பணத்திற்கும் தொடர்பு இல்லை. தொட்டிக்குள் அடைபட்டாலும் பூ சிரிக்க மறப்பதில்லை. எப்போதும் மகிழ்ந்திருப்போம். எல்லாம் இன்ப மயம்.
எளிமையாக, செம்மையாக வாழ விருப்பமா? சீர் இயக்கத்தில் சேருங்கள் – https://www.facebook.com/groups/558828647883520
———————————————————–
Pic courtesy: https://www.maxpixels.net