(Peer Reviewed) பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்
புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
முன்னுரை
சில நூற்றாண்டுகளுக்கு முன் மேனாட்டில் வடிவமைக்கப்பட்ட இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளைக் கற்றறிந்த சிலர் திறனாய்வு துறையே தமிழில் இல்லையென்றும் இருந்தாலும் அது வளரவில்லை என்றும் ஆய்வுக் கட்டுரைகளிலும் நூற்களிலும் பயிலரங்கங்களிலும் முன்னெடுத்தனர். ஒரு துறைக்குத் தனித்த குறியீடு இல்லாத காரணத்தினாலேயே அக்கால இலக்கியச் சமுதாயத்திற்கு அது பற்றிய கருத்தியல் அறவே கிடையாது என்னும் முடிவுக்கு வருவது ஆய்வு நெறியன்று. தமிழையொத்த இலக்கிய வளமிக்க மொழிகளில் திறனாய்வு ஏதோ ஒரு கோணத்தில் இருந்திருக்க வேண்டும் என்னும் குறைந்த அளவு அனுமானமும் இல்லாது போனதும் வியப்பிற்குரியதே. தமிழறிஞர் சிலர் உரையாசிரியர்களின் உரைநுட்பத்தைக் கண்டறிந்த பிறகுதான் மேற்கண்ட ‘கொள்கைச் சோர்வு’ புலப்படத் தொடங்கியது. மூலத் தமிழிலக்கியங்களுக்கு உரைகண்ட சான்றோர்களின் உரைக்கொள்கைகளில் ‘உரைமறுப்பு’ என்பதும் ஒன்று. தற்காலத்தில் நிலவுவதைப் போல எடுத்தவுடன் பிழைகாணும் போக்கோ உரையினை மறுக்கும் போக்கோ பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது. அதற்கெனச் சில நெறிகளை அவர்கள் பின்பற்றியதை அறிந்துகொள்ள முடிகிறது. ‘திருக்குறள்’ என்னும் தமிழ் மறைக்கு ஆசிரியர் பரிமேலழகர் எழுதிய அரிய உரையில் தமக்கு முன் இருந்த உரைக் கருத்துகளை அவர் மறுக்கும் பான்மையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
1. ‘உரைமறுப்பு’ என்றால் என்ன?
மூலத்திற்கு உரைகாண் நெறிகள் அனைத்தும் மூலத்தின் உண்மையறியும் முயற்சியாகவே பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் கருதப்பட்டது. அவ்வுரைகாண் நெறிகள் பல. அவற்றுள் சில,
1. தொடரமைப்பு நோக்கி உரைகாண்பது
2. உலக வழக்கு நோக்கி உரைகாண்பது
3. இலக்கண அமைதி நோக்கி உரைகாண்பது
4. பிற இலக்கியங்களை ஒப்பு நோக்கி உரைகாண்பது
5. மூலத்தின் பிறபகுதிகைள ஒப்பிட்டு உரை காண்பது
6. சொற்பொருள் அமைதி கொண்டு உரைகாண்பது
7. திணை, துறை, கொளு, இயல், அதிகாரம் முதலியவற்றின் அமைதி துலங்க உரை காண்பது
8. பொருத்தமான பாடங்களைக் கண்டறிந்து உரைகாண்பது
9. பிறமொழிப் புலமை கொண்டு உரைகாண்பது
10. பிறதுறை அறிவு கொண்டு உரைகாண்பது
என்பனவாம். இத்தனை நெறிகளும் குறிப்பிட்ட மூலத்தின் உண்மையறியும் முயற்சியே. இம்முயற்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகவோ மூலப்பொருளைத் துலக்கம் செய்வதில் போதுமான வலிமை பெறவில்லை என உரையாசிரியர் ஒருவர் கருதினாலோ தமது புலமையின் பன்முக ஆழத்தை முன்னிறுத்தித் தனக்குச் சரியெனப்படும் உரையைத் தக்க காரணங்காட்டி முன்னிறுத்துவதும் முந்தைய உரையை மறுப்பதுமே உரைமறுப்பாகக் கருதப்படும். இவ்வாறு முந்தைய உரையினை மறுப்பதற்கான காரணங்கள் பலவாம். அக்காரணங்களே ‘கொள்கைகள்’ என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றன. மூலப்பொருளைக் காப்பதையும் மூலத்திற்கு எதிரான முந்தைய உரையின் குறைபாட்டைக் களைவதுமாகிய நோக்கமன்றி, மூல நூலாசிரியரையோ முந்தைய உரையாசிரியரையோ தனிப்பட்ட முறையில் நோக்கிச் சாடுவதன்று என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும்.
2. கட்டுரை உள்ளடக்கம்
‘பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்’ என்னும் கருதுகோளையே தலைப்பாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. பழந்தமிழ் மூலநூலுக்கு உரைகாண் நெறிகளுள் ஒன்றான உரைமறுப்பிலும் வரையறுக்கப்பட்ட சில கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டன. அழகரின் திருக்குறள் உரைமறுப்புகளில் காணப்படும் சில கொள்கைகளைப் பணிவுடன் அடையாளப்படுத்துவதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது. பரிமேலழகரின் உரைத்திறனை முழுமையாக அறிவதைப் பொதுப்பயனாகவும் அவரது உரைமறுப்புக் கொள்கைகளின் வலிமையையும் செறிவையும் அறிவதைச் சிறப்புப் பயனாகவும் கொள்கிறது.
2.1. ஆய்வுக்களம்
உரையெழுதப் புகுமுன் அதிகாரப் பொருண்மையில் தெளிவு காண்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வையும் பொறுமையையும் கொண்டிருந்திருக்கிறார். அதிகாரத் தலைப்புக்கான பொருள் மயக்கம் குறட்பாக்களின் பொருள் மயக்கத்திற்கு ஏதுவாகும் என்பது அவர் கொள்கை. அதிகாரப் பொருண்மையிலேயே தமது புலமையையும் புலமை சார்ந்த மறுப்பினையும் பதிவு செய்திருக்கிறார்.
- இலக்கணங் காட்டி மறுத்தல்
- அதிகாரப் பொருண்மைக்கு இயைபின்மை காட்டி மறுத்தல்
- சொற்பொருள் காட்டி மறுத்தல்
- பாட பேதம் காட்டி மறுத்தல்
எனப் பலவகைகளில் அழகருடைய உரைமறுப்பு அமைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இலக்கண அடிப்படையில் பிற உரைகளின் பொருந்தாமையைச் சுட்டி அவர் எழுதியிருக்கும் மறுப்புரைகள் சுருக்கமாக ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.
2.2. இலக்கணங் காட்டி மறுத்தல்
அழகரின் உரை ‘இலக்கண உரை’ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் முதலியோரின் புறக்கணிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகலாம். ‘இலக்கணம் காட்டி மறுத்தல்’ என்னும் பகுதி கணிதம் போன்றது. கணிதத்தில் இரண்டு விடை கிடையாது. அதுபோல, அழகரின் இலக்கணப் புலமை தொல்காப்பியம், நன்னூல் முதலியவற்றின் அடிப்படையில் அமைந்ததாதலின் இந்நெறி அமைந்த மறுப்புரைகள் இன்றைக்கும் மறுப்புரைகளாகவே இருக்கின்றன.
2.2.1. உவம வகை முரண் காட்டி மறுத்தல்
படைப்புக்குக் கருத்தாழம், கற்பனை வளம், உணர்ச்சி, வடிவ ஆளுமை ஆகியன அமைதல் வேண்டும். திறனாய்வுக்கும் உரையெழுதுவதற்கும் அவைகள் பயன்படா. திறனாய்வு என்பது முழுமையும் ஏரணத்தின் (LOGIC) அடிப்படையில் காரண காரிய அணுகுமுறையில் அமைதல் வேண்டும். படைப்பில் வேண்டாத சொல் பயன்பாட்டுக்கு விளக்கம் கூறமுடியும். ஆனால் உரையில் அவ்வாறு கூற இயலாது. நுண்ணியமும் தெளிவும் ஆழமும் உடையதுதான் உரை. அத்தகைய உரையால் அழகர் சிறக்குமிடங்களில் இதுவும் ஓன்று.
“அங்கணத்து உக்க அமிழ்து அற்றால் தங்கணத்தார்
அல்லார் முன் கோட்டி கொளல்”1
என்பது ஒரு குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,
“நல்லார் தம் இனத்தார் அல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க. சொல்லின் அது தூயதல்லாத முற்றத்தின் கண் உக்க அமிழ்தினை ஒக்கும்.”2
என உரையெழுதும் அழகர், ‘கோட்டி கொளல்’ என்பதை எதிர்மறை வியங்கோளாக்கிச் ‘சொல்லற்க’ என உரை காண்கிறார்.
2.2.2. ‘கொளல்’ என்னும் சொல்லாய்வு
‘கொளல்’ என்பதற்குத் தான் கொண்ட எதிர்மறை வியங்கோள் பொருளிற்கு ஏற்ற வகையில் சொல்லாய்வில் ஈடுபடும் அழகர்,
“‘கொள்’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்நின்று (கொள்) பின் எதிர்மறை ‘அல்’ விகுதியோடு கூடி ‘மகனெனல்’ என்பது போல் நின்றது” 3
என்று எழுதுகிறார். இங்கே அழகர் வியங்கோளுக்காகக் காட்டும் எடுத்துக்காட்டுக்கான குறட்பா,
“பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்”4
என்பதாகும். இக்குறளில் இரண்டிடத்துப் பயின்று வரும் ‘எனல்’ என்னும் வியங்கோளைப் பற்றிய தனது கருத்தினை இப்படிப் பதிவிடுகிறார் அழகர்.
“‘அல்’ விகுதி வியங்கோள் முன் எதிர்மறையிலும் பின் உடன்பாட்டிலும் வந்தது”5
என்று அங்கே எழுதிய உரை விளக்கத்தை ஐந்நூறு பாக்கள் கடந்தும் நினைவிற் கொண்டு உரையெழுதுகிறார். ‘மகன் எனல்’ என்பதில் ‘எனல்’ என்பது எதிர்மறை (மகனென்று சொல்லாதே). ‘பதடி எனல்’ என்பதில் ‘எனல்’ என்பது உடன்பாடு (பதடி என்று சொல்). இந்த நுட்பம் இல்லையென்றால் குறளுக்குப் பொருள் காண்பது அரிதாகிவிடும் அல்லவா? இரண்டிடத்தும் ‘எனல்’ என்றால் என்ன ஆகும்?
2.2.3. முந்தையோர் நோக்கத் தவறியது
இந்த விளக்கத்தை எழுதிய அழகர், தொடர்ந்து இந்தக் குறட்பாவிற்குப் (720) பிறர் எழுதும் உரையினைச் சுட்டி அதன் பொருத்தமின்மையை மிக இலாவகமாக மறுக்கிறார். இங்கே ‘இலாவகம்’ என்பது முந்தைய உரைகளின் சாதாரணக் கவனக்குறைவு. தன்னுரையை விளக்கும் பரிமேலழகர் எந்தவிடத்தும் தனது கொள்கைதான் சரி என்றாரில்லை. ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்பது அழகர் கொள்கையன்று. இந்தக் குறட்பாவில் முன்னோர் கவனிக்கத் தவறியதைப் பண்பாடு குறையாமல் சுட்டிக்காட்டுகிறார்.
(அ) ‘மலர்போன்ற முகம்’ என்றால் பொருளுவமை.
இங்கு மலராகிய பொருள் உவமம்.
(ஆ) ‘மலர்போல முகம் மலர்ந்தாள்’ என்றால் வினையுவமை.
இங்கு ‘மலர்தல்’ ஆகிய வினை உவமம்.
முன்னது பொருள் பற்றியது. பின்னது வினை பற்றியது. இந்தத் தெளிவு இல்லாமல் உரையெழுதியவர்களைப் பக்குவமாகச் சாடுகிறார் அழகர்.
“பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் ‘அமிழ்து’ என்னும் பொருளுவமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.” 6
என்று விளக்கிக் காட்டுகிறார். அழகர் சொல்ல வருவது இதுதான்.
1. ‘சாக்கடையில் ‘அமிழ்தத்தைக் கொட்டுவது போல’ என்று குறட்பாவில் இல்லை.
2. ‘சாக்கடையில் ‘கொட்டப்பட்ட அமிழ்தம்’ என்றுதான் இருக்கிறது.
எனவே பொருளுவமத்தை வினையுவமமாகக் கொள்ளுதற்குச் சொற்கிடக்கை இடந்தரவில்லை என்பதை மற்ற உரையாசிரியர்கள் நோக்கவில்லையே என ஆதங்கப்படுகிறார். அவர் ஆதங்கம் சரிதானே?
‘அமிழ்தத்தை உக்கினாற் போல’ என்றில்லை.
‘உக்கப்பட்ட அமிழ்தம்’ என்றுதான் இருக்கிறது.
எனவே குறட்பாவில் பயின்ற உவமம் பொருளுவமமேயன்றி வினையுவமம் ஆகாது எனத் தெளிவுபடுத்துகிறார். ‘சொல்லற்க’ என வினைமுடித்து, அவ்வாறு சொன்னால் அப்படிச் சொல்லுவது எதனைப் போன்றது? என்னும் வினாக்களை அவராகவே எழுப்பிக் கொண்டு எழுதுகிறார் இப்படி?
“சொல்லின்’ ‘அது’ என்பன (இரண்டு சொற்களும்) அவாய் நிலையான் வந்தது ‘சாவா மருந்தாதல்’ அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபின்றிக் கெட்டவாறு தோன்ற ‘உக்க அமிழ்து’ என்றார். அச்சொல் ‘பயனில்’ சொல் என்பதாயிற்று.” 7
‘அவையறிதல்’ என்னும் அதிகாரத் தலைப்புக்கான பொருளைக் கருத்திற் கொண்டு, உரையெழுதிப் பிறர் உரையினை மறுக்கும் அழகருக்கு மூலத்தின் உவம நுட்பத்தைப் புரிந்து கொண்டு உரையெழுத வேண்டும் என்பது கொள்கையாகத் தெரிகிறது.
2.2.3.1. வள்ளுவர் உள்ளத்தை அறிந்தர் எவர்?
எந்தக் கருத்தினையும் மறுப்பதற்கு எப்படி யாருக்கும் உரிமை இருக்கிறதோ அதுபோலவே எந்தக் கருத்தினையும் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பொதுவாக ‘உரைமறுப்பு’ என்பது தங்களது கருத்துக்கு எதிரானது என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு இரங்கத்தக்க நிலை. உரையாசிரியர் தனது கொள்கைக்கு ஏற்பத்தான் உரையெழுதுவார். அழகர் அவர் கருத்திற்கேற்ப உரையெழுதுகிறார். மணக்குடவர் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். பாரதிதாசன் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். பாவாணர் ஐயா அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். மாணிக்கனார் அவர் கருத்துக்கு ஏற்ப உரையெழுதினார். ஆக இந்த உரைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாமே குறட்பாக்களைப் பார்த்தவர்களின் ‘பார்வைப் பதிவே’ தவிர திருவள்ளுவர் கருத்து என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இது ஒரு சாதாரண உண்மை. இதில் மாறுபட ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.
2.2.3.2. மாறுபாடு காண வேண்டிய இடம்
எங்கே மாறுபட வேண்டுமெனின் உரையாசிரியர் ஒருவர் தன்னுடைய கருத்துக்கே தான் மாறுபட்டால்தான், முரண்பட்டால்தான் நாம் வினா தொடுக்க இயலும். அல்லது பொருத்தமற்ற உண்மைக்கு மாறான, முன்னோர் மரபுசார்ந்த இலக்கணத்துக்கு முரணாக உரையெழுதினால் மறுக்கலாம். நம்முடைய கருத்துக்கு மாறுபடுவதனாலேயே குறட்பாவின் உரை மறுப்பிற்கு உரியதாகாது. நம்முடைய கருத்தினையே மற்ற உரையாசிரியர்களும் எழுத வேண்டுமென்றால் அவர்கள் எதற்கு? குறட்பாவிற்கான அழகர் உரையை மறுப்பவர் அழகர் தன்னுடைய உரையில் எங்காவது முரண்படுகிறாரா? அவர் காட்டுகிற இலக்கணக் குறிப்பு தொல்காப்பியம், நன்னூல் முதலிய நூல்களில் இல்லையே? என்று கண்டு சொன்னால் அது வரவேற்கத்தக்க ஆய்வு. இருபதாம் அல்லது இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்வல்லாரைக் கேட்டுக் கொண்டு பரிமேலழகரோ அடியார்க்கு நல்லாரோ அரும்பத உரையாசிரியரோ நச்சினார்க்கினியரோ சேனாவரையரோ குணசாகரரோ உரையெழுத இயலாது. அவரவர் கருத்துக்கு இசைந்தவாறு எழுதுவதுதான் உரை நெறி. தற்போது உரை சொல்லுகிற எல்லாரும் இந்த நெறியைத்தான் பின்பற்றுகிறார்கள். அதனைவிடக் கொடுமை உரை எழுதிவிட்டு “இதுதான் திருவள்ளுவர் கருத்து” என்று கற்பூரம் கொளுத்தாத குறையாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். இப்படிச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையோ தகுதியோ இல்லை என்னும் சாதாரண உண்மை கூட அறியாமற் போனது தமிழியல் ஆய்வுலகின போகூழ் காலமே!
2.2.3.3. மாறுபாடு காண்கிற நெறியும் முறையும்
முன்னர்க் கூறியதுபோலப் பிற உரையாசிரியர் தனக்குத் தானே முரண்படுவதை ஆழமாக நோக்கி நிரலாகச் சொல்லி வன்மையாக ஆனால் எளிமையாக, போகிற போக்கில் மறுக்கும் அழகர் உரைத்திறன் காட்டும் குறட்பா,
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.” 8
இது அமைச்சியலில் ‘சொல்வன்மை’ என்ற அதிகாரத்தின் கீழ் வருவது.
“நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப், பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி, மற்றைப் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் பின் அப்பகைமையை யொழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாகும்”9
எனப் பதசாரம் எழுதிய அழகர்,
“அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் முதலாயின. அவற்றை அவாவுதலாவது ‘சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வு உடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்கு உடைத்தாதல்’.10
அமைச்சரின் சொல் தழுவி நிற்கவேண்டிய குணங்களைப் பட்டியலிடுகிறார்.
“கேட்டார் என்பதற்கு நூல்கேட்டார், வினவியார் எனவும் கேளாதார் என்பதற்கு நூல் கேளாதார், வினவாதார்”11
எனப் பிறர் கூறும் உரைகளை மதிக்கிறார். ஆனால் ‘தகை அவாய்’ என்பதற்கு அழகர் ‘தகையினை அவாவி’ என உரை காணப், பிறர் ‘தகையவாய்’ என ஒரு சொல்லாய் அதாவது பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயராய் உரை கண்டனர்.
- ‘சொல் என்பது மேற்சொன்ன குணங்களைத் தழுவி’ என்பது அழகர் கண்ட உரை.
- ‘கேட்டாரைப் பிணித்தலே தகைமை’ என்பது பிறர் கண்ட உரை.
இந்த உரையை அழகர் மறுக்கவில்லை. ஆனால் இந்த உரை சொன்னவர்கள் கவனிக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டுகிறார்.
2.2.3.4. அழகர் சுட்டும் மிகச் சாதாரண இலக்கணம்
‘தகைத்து’ என்பது ஒருமை. ‘தகைய’ என்பது பன்மை. ‘து’ ஒருமை விகுதி. ‘அ’ பன்மை விகுதி. அப்படி உரைப்பதால் ஏற்படும் உரைப்பிழை என்னவென்று தெரியுமா? ‘தகையவாய்’ என்பதற்குத் ‘தகுதிகளையுடையவாய்’ எனப் (பன்மை) பொருள் கொண்டால் அப்பன்மை, ‘மொழிவது’ என்னும் (செயப்பாட்டு வினையாகிய) ஒருமையோடு இணையவில்லையே?. பிறர் சொல்லுகிற கருத்து சரியென்றால் குறட்பா ‘மொழிவன’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? இது அழகரின் அசைக்க முடியாத வினா.
“‘அவாய்’ என்னும் செய்தென் எச்சம் ‘மொழிவது’ என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. (‘மொழிவது’ என்னும் செய்வினை செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது என்பது அறிக) ‘தகையவாய்’ என்பதற்கு எல்லாரும், தகுதியையுடையவாய்’ என்று உரைத்தார். அவர், அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.”12
‘தகையினை அவாவி’ என்பதற்கும் ‘தகைய ஆய்’ என்னும் பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயராகக் கொள்வதற்கும் எது அடிப்படைக் காரணம் என்றால் ‘தகை’ என்னும் ஒருமை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு சேரும். ‘தகையவாய்’ என்னும் பன்மை மொழிவது என்னும் ஒருமையோடு சேராது. தற்கால உரைசிரியர் ஒருவர் இந்த உரையை எழுதியிருந்தால் ‘ஒருமை பன்மை தெரியாதவரெல்லாம் உரையெழுத வந்தால் இதுதான் நிலை என்று கூறியிருப்பார். அழகர் கூறவில்லை. அவருடைய புலமையடக்கம் அத்தகையது.
2.3. சொல்வான் குறிப்பும் சுட்டுப்பெயரும்
‘அவர்வயின் விதும்பல்’ (127) என்பது காமத்துப்பாலில் உள்ள ஓர் அதிகாரத் தலைப்பு. சிலர், வேறுபட்ட புலமை காரணமாகத் தலைவனை எண்ணித் தலைவி கலங்குதல் என்பதே இவ்வதிகாரத். தலைப்பிற்கான பொருள் என அமைதியடைவர். பரிமேலழகரின் பெருமதிப்புக்கு உரியவரான மணக்குடவரும் இந்த நிலைக்கு ஆட்பட்டவர்தாம். ‘அவர்’ என்பது சுட்டுப்பெயர். பொதுவாகச் சுட்டுப்பெயர் தனக்கென்று குறிப்பிட்ட பொருளைக் குறிப்பதற்கு இலக்கணம் கிடையாது. உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும். மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாட்டை ‘அவர் காலையில் போனார் மாலைதான் வருவார்’ என்று அதனைப் பாசத்தோடு வளர்க்கின்றவர் சொல்வார். இங்கே அவர் என்னும் உயர்திணைச் சுட்டு அஃறிணைக்கு வந்தது. உங்க வீட்டுக்காரர் எப்போது வருவார் என்னும் வினாவிற்கு, ‘அது ஊரெல்லாம் சுற்றிவிட்டு பொழுது சாஞ்சு வரும்’ என்று சொல்லுகிற மனைவியும் உண்டு. இங்கே அது என்னும் அஃறிணைச் சுட்டு உயர்திணையைக் குறித்தது. எனவே சுட்டுப்பெயர் சொல்வான் குறிப்போடு கூடிய பொருளுணர்த்தும் பாங்கினது.
2.3.1. ‘அவர்வயின் விதும்பல்’ — அதிகாரப் பொருண்மை
கற்பியலில் இவ்வதிகாரம் வரையில் தலைவனது பிரிவும் தலைமகளது ஆற்றாமையும் தொடர்ச்சியாய்ச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இவ்வதிகாரத்தும் தலைமகனைக் காணவேண்டும் என்னும் தனது விதும்பலைத் தலைவி ஏழு குறட்பாக்களிலும், தலைமகளைக் காணவேண்டும் என்னும் தனது விதும்பலைத் தலைவன் மூன்று குறட்பாக்களிலும் கூறியிருக்கின்றனர். இனிக் ‘காமத்துப்பால்’ இருபத்தைந்து தலைப்புக்களில் எந்தவிடத்தும் திருவள்ளுவர் தலைவனை ‘அவர்’ என்னும் சுட்டால் சுட்டவில்லை. இவற்றையெல்லாம் முன்னும் பின்னும் ஆழ்ந்தும் அகன்றும் நோக்கிய அழகர் ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் தலைப்புக்கு (அவர்வயின் விதும்பல் என்றால்),
“சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விழைதல்”13
எனப் பொருள் விளக்கம் எழுதித்,
“தலைமகன் பிரிவும் தலைவி ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலாற் கூறினார்”14
என ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயர் இருவரையுமே குறிக்கும் என்பதற்கான காரண காரியத்தையும் விளக்கிப்,
“பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைத்துத் தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துமல்லது தான் ஒன்றற்குப் பெயராகாமையானும், கவிக்கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையான் கூறப்படாமையானும் அஃது உரையன்மை அறிக”.15
என ‘அவர்’ என்பது தலைமகனையே குறிக்கும் என்பார்தம் கருத்தினைப் பண்பாட்டோடு மறுத்தும் உரையெழுதுகிறார். பொருள்விளக்கம், அதற்கான காரணம், மாற்றுக் கருத்தினைப் பண்பாட்டோடு மறுக்கும் புலமைச் சதுரப்பாடு என்னும் அழகரின் உரைப்பரிமாணத்தின் அனைத்துக் கூறுகளையும் இந்த மறுப்புரையில் காணலாம்.
நிறைவுரை
இதுவரை திருக்குறள், அழகரின் உரைத் தரவுகள் ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்ந்த அவர்தம் மறுப்புரையில் பலநெறிகளைப் பின்பற்றுகிறார் என்பதையும் அவற்றுள் இலக்கணக் கூறுகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன என்பதையும், முன்னர்க் கூறிய இலக்கண விளக்கத்தைத் தேவைக்கேற்பப் பின்னரும் நினைவூட்டுகிறார் என்பதையும், வினை, பயன், மெய், உரு உவம வகைகளின் பொருத்தப்பாட்டின் நுண்ணியத்தையும் அவர் கவனத்திற் கொள்கிறார் என்பதையும், ஒருமை, பன்மை முதலிய எளிய இலக்கணமும் இவருடைய மறுப்புரைக்குத் தாங்குதளமாக இருக்கிறது என்பதையும், அதிகாரப் பொருண்மையைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்வதிலும் அதனடிப்படையில் பிறர் உரையை மறுதலிப்பதிலும் இலக்கணம் இவருக்குக் கைகொடுக்கிறது என்பதையும் சுருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. அழகர் உட்பட யாரும் வள்ளுவர் கருத்தினை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது. அனுமானிக்கலாம். வேண்டுமானால் இலக்கணப் புலமை உட்படப் பல்வேறு கருவிகள் கொண்டு அவரை அருகிருந்து பார்க்க முயலலாம். அந்த முயற்சியில் அழகர் மற்றவரைக் காட்டிலும் நெருங்கி வருகிறார் என்பதே உண்மை. கற்பாருக்குப் பெரிதும் வியப்பளிக்கும் அவரது இலக்கணப்புலமை உரைமறுப்புக்குப் பயன்படுகிறது. அவர் காட்டுகிற இலக்கணம் அவருடையதன்று. முன்னோர்களுடையது. அந்த இலக்கணத்தை இந்த இலக்கியத்திற்குப் பொருத்திக் காட்டும் அவரது புலமைச் சதுரப்பாட்டில் யாரும் அவ்வளவு எளிதாக ஐயம் கொள்ள முடியாது. இருந்தாலும் அழகர் தமது இலக்கணப் புலமையை வெளிப்படுத்தும் எந்த இடத்திலும் தன்முனைப்பு என்பதைக் காணவியலவில்லை. ‘ஆன்று அவிந்து அடங்கிய இந்தக் கொள்கையைத்’ தற்கால உரை மறுப்பாளரிடம் காண்பதரிது என்பதை முன்னெடுத்து இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.
சான்றெண் விளக்கம்
1. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 720
2. பரிமேலழகர் மேலது உரை
3. மேலது
4. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 196
5. பரிமேலழகர் மேலது உரை
6. மேலது கு.எண். 720
7. மேலது .
8. திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 643
9. பரிமேலழகர் மேலது உரை
10. மேலது
11. மேலது
12. மேலது
13. திருவள்ளுவர் திருக்குறள் அதி.எண். 127
14. பரிமேலழகர் மேலது உரை
15. மேலது
துணைநூற் பட்டியல்
1. நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம் பொருளதிகார உரை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
மறுபதிப்பு – 1967
2. திருக்குறள் – பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம், சென்னை – 600 001
முதற்பதிப்பு – 2009
3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
தமிழ்ச்சுடர் மணிகள்
குமரி மலர்க் காரியாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 600 018
முதற்பதிப்பு – 1949
4. புலவர் ச.சீனிவாசன்,
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
முதற்பதிப்பு – 2002
5. முனைவர் நா.பாலுசாமி
பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
முதற்பதிப்பு – 2005
6. மு.வை.அரவிந்தன் – உரையாசிரியர்கள்
8/7 சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 108
முதற்பதிப்பு – 1968
7. நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார்
இலக்கியக் கட்டுரைகள்
நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
தஞ்சாவூர் – 613 003
ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):
“பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு
1. நீதி இலக்கியம் ஒன்றுக்கு உரைகாண் நெறிகளை அழகர்வழி நின்று பட்டியலிட்டிருக்கும் ஆய்வாளர், பிறர் உரைகளை மறுப்பதற்கு அழகர் பின்பற்றியிருக்கும் நெறிமுறைகளை நிரல்படுத்தியிருக்கிறார்.
2. இலக்கியங்களுக்கு உரைகாண்பதில் இலக்கணப் பங்களிப்பின் இன்றியமையாமையைப் புலப்படுத்தி அதனையே கட்டுரைப் பொருளாக்கியிருக்கிறார்.
3. அழகரின் ஆழமான இலக்கணப் புலமையை உணர்ந்தார் எவரும் இந்த நெறியில் அழகரை எதிர்ப்பதில்லை. நீர்த்துப் போன இலக்கணப் புலமை மட்டும் அழகர் உள்ளிட்ட வல்லாளர்களை மறுப்பதற்கு அவ்வளவாகப் பயன்படாது என்பதைக் கட்டுரையாளர் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.
4. வினை, பயன், மெய் உரு என்னும் நால்வகை உவமங்களும் நால்வகை வேறுபட்ட நோக்கிற்குரியன. பொருளுவமையை வினையுவமையாகக் கருதிச் சொல்லும் உரையால் ஏற்படும் அதிகாரப் பொருட்குழப்பத்தையும் திரிபையும் அழகருடைய மறுப்புரை மிக எளிதாக நீக்கியிருப்பதை ஆய்வாளர் அழகுற விளக்கியிருக்கிறார்.
5. ‘கொளல்’ (720) என்னும் சொல்லுக்கான இலக்கண அமைதியை ஐந்நூறு பாக்களுக்கு முன்சென்று ‘எனல்’ (196) என்பதனோடு பொருத்திக் காட்டும் அழகரின் அளப்பரிய நினைவாற்றலைக் கட்டுரையாசிரியர் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு.
6. “‘தகைய ஆய்’ எனப் பன்மையாகக் கொள்ளும் பிற உரைகாரர்கள் அது ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையாமையை நோக்கிலர்” என்பதில் அழகரின் அங்கதம் புலப்படுகிறது.
7. சுட்டுப்பெயர் சொல்வான் குறிப்பொடு புணர்ந்தே பொருளுணர்த்தும் இலக்கண நுண்ணியம். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும தொடர் திருவள்ளுவருடையது என்பதையும் அவர் தன் கூற்றாய் யாண்டும் தலைமகனை ‘அவர்’ என்னும் உயர்த்தற்பன்மையால் கூறவில்லை என்பதையும் மிக நுட்பமாக எடுததுக்காட்டி மறுத்திருக்கும் அழகரின் உரைமறுப்புத் திறன் போற்றக் கூடியது. பிறரெல்லாம் தலைமகள் ‘அவர்’ என்று தலைமகனை அழைக்கின்ற குறட்பகுதிகளை (காதலவர் — காதலர் — கலந்தார்) நினைவிற்கொணடாரேயன்றி மேற்கண்ட இருவகை நிலைகளையும் (சுட்டுப்பெயர் மற்றும் கவிக்கூற்று) கருத்திற் கொண்டாரிலர்.
8. இவ்வளவு சிந்தனைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஆய்வாளருக்கும் அழகருக்கும் திருவள்ளுவருக்கும் ஒரு சேரப் பெருமை சேர்க்கிறது.