இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

-மேகலா இராமமூர்த்தி

ஆஸ்திரியா, பிரான்ஸ் என்று பல ஐரோப்பிய நாடுகளின் பிடியில் சிக்கி, தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்டு நின்ற இத்தாலியின் விடுதலைக்குப் பாடுபட்டோர் மூவர். ஒருவர் மாஜினி (Giuseppe Mazzini); அடுத்தவர் கரிபால்டி (Giuseppe Garibaldi); மற்றொருவர் காவுர் (Cavour). இவர்களில் இத்தாலியின் ஆயுதமாகக் கரிபால்டியும், அறிவாகக் காவூரும், ஆன்மாவாக மாஜினியும் திகழ்ந்தனர் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரிடித் (George Meredith).  

இந்தியாவுக்கு மகாத்மா காந்தி எப்படியோ, ரஷ்யாவுக்கு லெனின் எப்படியோ அப்படியே இத்தாலிக்கு மாஜினி. இவர்களை நாம் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடியாதுதான்; எனினும் இவர்களிடத்தே காணப்பட்ட  சில அபூர்வமான பண்புகளின் அடிப்படையில் இவர்களை நாம் ஒன்றுபடுத்தலாம். இவர்கள் அரசியல்வாதிகளாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்; ஆனால் அதற்காக இவர்கள் போற்றப்படவில்லை. மனிதத் தன்மையில் மேம்பட்டவர்கள் என்பதற்காக, அந்த மனிதத்தன்மையானது தங்கள் நாட்டினரிடத்தில் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து நாட்டினரிடத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது உழைத்ததற்காகப் போற்றப்படுகிறார்கள்.

இத்தாலிய விடுதலை வேள்விக்குப் பாடுபட்டவரும் புதிய ஐரோப்பாவை நிர்மாணித்தவர்களில் ஒருவர் என்று கருதப்படுபவருமான ஜோசப்  மாஜினி இத்தாலியிலுள்ள ஜெனோவா நகரில் 1805ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் பிறந்தார்.

குழந்தைப் பருவத்திலேயே மிகவும் புத்திக்கூர்மை கொண்டவராகத் திகழ்ந்த மாஜினி, தம் தொடக்கக் கல்வியை வீட்டிலேயே ஓர் ஆசிரியரிடம் பயின்றார். மாஜினிக்கு பத்து வயதாக இருந்தபோது, பிரான்சில் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் வீழ்ந்துபட்டது. அந்த ஆண்டில் ஐரோப்பிய வல்லரசுகளின் ஒப்புதலின்பேரில் லிகூரியா (Liguria) மாகாணத்திலிருந்த ஜெனோவா நகரத்தை பீட்மாண்ட் (Piedmont) மன்னன் தன்வசப்படுத்திக்கொண்டான். இதனை ஜெனோவாவாசிகள் அடியோடு வெறுத்தனர். இதுகுறித்தெல்லாம் மாஜினி வீட்டில் அடிக்கடி பேச்சுகள் நடைபெற்றன. இவை மாஜினியின் இளம் உள்ளத்தில் புரட்சிக் கனலை அப்போதே உண்டுபண்ணத் தொடங்கின. 

அவர் ஒருநாள் தம் தாயோடும் வேறொரு நண்பரோடும் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களைத் தொடர்ந்து ஒருவன் வந்தான். நல்ல உயரமும் கருமையான தாடியும் கூர்த்த பார்வையும் கொண்டிருந்த அவன் இவர்களருகில் வந்து ஒரு கைக்குட்டையை விரித்து, “சட்ட விரோதிகளான இத்தாலியர்களுக்கு” என்று சொல்லவும், மாஜினியின் தாயும் அருகிலிருந்த நண்பரும் அக் கைக்குட்டையில் சில காசுகளைப் போட்டனர். அவன் நன்றி சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

இதனைக் கண்ட மாஜினி வியப்போடு, ”அம்மா இவர் யார்? இவருடைய தோற்றமும் கம்பீரப் பார்வையும் என்னைக் கவர்கின்றன. இவர் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்?” என்று வினவ, அவருடைய தாய், “மகனே! சில நாள்களுக்கு முன் பீட்மாண்ட் பிரதேசத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து கார்போனாரி (Carbonari) எனும் அமைப்பைச் சேர்ந்தோர் ஒரு புரட்சி செய்தார்கள். ஆனால் அரசாங்கத்தார் அதனை ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டார்கள். எனவே அரச தண்டனைக்குப் பயந்து இப்புரட்சியாளர்கள் தப்பித்து ஜெனோவாவுக்கு ஓடிவந்துவிட்டனர்; அவர்களில் இவரும் ஒருவர் என்றார்.

”இவர்களுடைய புரட்சி ஏன் தோல்வியுற்றது?” என்று கேட்டார் மாஜினி. ”சரியான முன்னேற்பாடும் ஒழுங்கான தலைமையும் இன்மையே அதற்குக் காரணம்” என்றார் அவரின் தாயார்.

”இவர்கள் ஏன் ஜெனோவாவுக்கு வந்தனர்?” என்று அடுத்த வினாவை மாஜினி தொடுக்க, ”கையில் காசில்லாமல் ஓடி வந்துவிட்ட இவர்கள் ஸ்பெயின் முதலிய நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு வசதியாகத் துறைமுக நகரமான ஜெனோவாவுக்கு வந்திருக்கின்றனர். கப்பல் செலவுக்குத்தான் இப்போது பணம் வசூலிக்கின்றனர்” என்றார் மாஜினியின் தாய்.

இந்தச் சம்பவம், மாஜினியின் மனத்தில் ஆழப் பதிந்து, தாய்நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்குத் தன்னையும் அர்ப்பணிக்க வேண்டும் எனும் தீவிர எண்ணத்தை அவருள் விதைத்துவிட்டது.

இதற்கிடையில் 1827ஆம் ஆண்டு கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞரானார் மாஜினி. ஏழைகளின் வழக்கறிஞர் (Poor man’s lawyer) என்று சொல்கின்ற வகையில் வசதியற்ற ஏழைகளுக்காக வாதாடினார் அவர். என்னதான் அவர் வழக்கறிஞராகத் திறம்படப் பணியாற்றினாலும் அவருடைய ஆர்வம் கவிதையிலும் வரலாற்றிலுமே அதிகம் இருந்தது. இலக்கியத்திலும் அரசியலிலும் ஆர்வங்கொண்ட நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தார். அரசாங்கத்தால் தடுக்கப்பட்டிருந்த பல நூல்களை அவர் இரகசியமாக வரவழைத்து நண்பர்களைப் படிக்கச் செய்தார். இத்தாலிய மகா கவிஞராகிய தாந்தேயிடத்திலும் (Dante), ஆங்கில மகா கவிஞராகிய பைரனிடத்திலும் (Byron) மாஜினிக்குச் சிறப்பான ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தன. இக்காலத்தில் அவர் இதயத்திலிருந்து ஊற்றெடுத்த தேசிய எண்ணங்கள், இலக்கியப் போர்வை போர்த்துக்கொண்டு ஜெனோவாவில் வெளியான சில பத்திரிகைகளில் கட்டுரைகளாக மலர்ந்தன.

பின்னர், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது என்ற எண்ணத்தில் தம் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அரசாங்கத்துக்கு எதிரான கார்போனாரி இரகசியச் சங்கத்தில் சேர்ந்தார் மாஜினி. அந்தச் சங்கத்தின் ஒழுங்கற்ற தன்மையை அவர் அறிந்திருந்தும்கூட வேறு வழியின்றி அதில் தம்மை இணைத்துக்கொண்டார்.

இச்சமயத்தில், அதாவது 1830ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரான்சை அப்போது ஆண்டுகொண்டிருந்த பத்தாம் சார்லஸ் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி நடைபெற்றது. இப்புரட்சியானது மற்ற நாடுகளிலுள்ள தேசியவாதிகளுக்கும் ஓர் உந்துசக்தியையும், தங்கள் நாட்டில் புரட்சியை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பையும் அளித்தன.

ஆனால் இதுபோன்றதொரு பெரிய புரட்சியை கார்போனாரி சங்கத்தால் இத்தாலியில் நடத்த முடியாதென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார் மாஜினி. ஒரு புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு உயர்ந்த இலட்சியங்களோடு கூடிய ஓர் அமைப்பு அவசியம் என்று எண்ணிய அவர், அப்புதிய அமைப்பை உருவாக்கும் பொறுப்பு தம்முடையதே என்பதையும் அறிந்தார். இங்ஙனம் வேறோர் அமைப்பிலிருந்துகொண்டே புதிய அமைப்பைத் தோற்றுவிக்க அவர் முயன்றுகொண்டிருந்த வேளையில், இத்தாலியக் காவல்துறையினரின் சந்தேகப் பார்வை மாஜினி மீது விழுந்தது. அவரைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த காவல்துறையினர், 1830ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தம் புதிய அமைப்புக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தபோது கைதுசெய்து ஜெனோவாவின் மேற்கேயிருந்த ஸாவோனா (savona) எனும் நகரத்தின் சிறைச்சாலையில் அடைத்தனர்.

தம்முடைய எதிர்கால வேலைகளுக்குத் தேவையான திட்டங்களையெல்லாம் சிறையிலேயே தயார்செய்திருந்த மாஜினி, 1831ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாவோனா சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார். ஆனால் அத்திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்த இயலாவண்ணம் அதிகாரிகள் அவரை பிரான்சிலுள்ள மார்சேல் நகரத்துக்கு நாடுகடத்திவிட்டார்கள்.

தம்முடைய 26ஆவது வயதில் மார்சேல் (Marseille) நகரத்துக்கு வந்தார் மாஜினி. இத்தாலியில் நடைபெற்ற முந்தைய புரட்சிகளில் கலந்துகொண்டு நாடுகடத்தப்பட்ட இத்தாலியர்கள் சிலர் ஏற்கனவே மார்சேல் நகரில் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிய மாஜினி, தம்முடைய திட்டங்களை அவர்களிடம் விளக்கினார். இவற்றை நிரல்பட நிறைவேற்றினால் ஒரு தலைமுறைக்குள் இத்தாலியைச் சுதந்தர நாடாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்தார். அவர்களும் மாஜினியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள், அனைவரும் சேர்ந்து ஒரு சிறு அறையை வாடகைக்குப் பிடித்தார்கள். அதில்தான் மாஜினியின் புகழ்பெற்ற ‘இளைய இத்தாலி’ (Giovine Italia/ youth Italy) என்ற சங்கம் உதயமாயிற்று. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

சுமார் இரண்டாண்டு காலம் இச்சங்கத்தார் சலியாது உழைத்தனர். தங்களுக்கென்று சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் தங்கள் கருத்துகளை அச்சிட்டு, இத்தாலிக்கு இரகசியமாக அனுப்பிவந்தார் மாஜினி. இவைதவிர தீவிரப் போக்குடைய பலநாட்டுப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதினார் அவர். இத்தாலியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாஜினியின் எழுத்தாலும் மாசற்ற தேசப்பற்றாலும் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைக்காக எதையும் இழக்கச் சித்தமாயினர்; அவர்கள் மாஜினியின் சித்தாந்தங்களை நாடெங்கும் பரப்பினர். இத்தாலியில் இளைய இத்தாலியின் கிளைகள் பல தோன்றலாயின.

ஈராண்டுகளுக்குள் சுமார் அறுபதினாயிரம் பேர் இச்சங்கங்களில் அங்கத்தினர்களாயினர். இவ்வாறு இளைய இத்தாலி இயக்கத்தின் செல்வாக்கு பெருகி வருவதை ஆஸ்திரிய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் இச்சங்கத்தில் சேர்வது குற்றமென்றும், அவ்வாறு சேருவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அது அறிவித்தது.

பீட்மாண்ட் அரசனும் மாஜினிக்கும் அவனுடைய இளைய இத்தாலி சங்கத்தார்க்கும் எதிராகப் பல அடக்குமுறைகளைக் கையாண்டு அவர்களை ஒடுக்கினான். இதனால் மாஜினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சிறிது காலம் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அவர், தம்முடைய 32ஆவது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டன் நகருக்கு வந்தார்.  அங்கேயும் கையில் பொருளின்றி அல்லலுற்றிருந்த அவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்தது சிறந்த அறிஞரான தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle) ஏற்பட்ட நட்பு. அதுபோலவே ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) எனும் அறிஞருடைய நட்பும், இன்னும்  அறிஞர்கள் பலரின் நட்பும் மாஜினிக்கு அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டன.  இவை அவருக்கு ஆறுதலையும் மனஅமைதியையும் அளித்தன.

இந்த நண்பர்களின் முயற்சியின் பேரில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு மாஜினி எழுதிவந்த கட்டுரைகளுக்கு அதிகமான வருவாய் கிடைக்கத் தொடங்கியது, அதனைக் கொண்டு தொழிலாளர்களின் நலனுக்காக ’Apostolato popolare’ (Apostleship of the People) எனும்  பத்திரிகையை ஆரம்பித்தார். அதனை ஆரம்பிப்பதற்கு முன்பே இலண்டனில் வசித்துக்கொண்டிருந்த இத்தாலியத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கென்று ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தச் சங்கத்தின் ஓர் அங்கமாகவே இந்தப் பத்திரிகையை மாஜினி வெளியிட்டார். அதில்தான் ’மனிதனின் கடமைகள்’ (On the Duties of Man) எனும் அவருடைய புகழ்வாய்ந்த கட்டுரைகளின் முதல் ஆறு பகுதிகள் வெளிவந்தன.

1848ஆம் ஆண்டு ஐரோப்பாவில் புரட்சிகள் மிகுந்த ஆண்டாக விளங்கியது. இத்தாலியின் மக்களும் ஒன்றுபட்டு, ஆஸ்திரிய ஆதிக்கத்திற்கெதிராகப் புரட்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றனர். அதனை அறிந்த மாஜினி, இங்கிலாந்திலிருந்து மகிழ்ச்சியோடு இத்தாலி திரும்பினார். ஆனால் மக்களின் வெற்றியும் மாஜினியின் மகிழ்ச்சியும் நெடுநாள் நீடிக்கவில்லை. அப்போது இத்தாலியோடு எவ்வித நேரடி மோதலும் இல்லாத பிரான்ஸ்,  இத்தாலிக்கு எதிராகப் போரில் இறங்கியது. பிரெஞ்சுப் படையை எதிர்த்து புரட்சியாளர் கரிபால்டி (Garibaldi) தலைமையில் இத்தாலியப் படை வெகுதீரத்துடன் போராடிய போதிலும், அளவிலும் ஆற்றலிலும் மிக்கிருந்த பிரெஞ்சுப் படையை எதிர்க்க முடியாமல் அது தோல்வியைத் தழுவியது. கரிபால்டி, பிரெஞ்சு வீரர்களிடம் சரணடைய விரும்பாமல் உரோமை விட்டு வெளியேறினார்.

இந்நிகழ்வுகள் மாஜினியை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கின. நம்பிக்கையிழந்த மாஜினி மீண்டும் இங்கிலாந்து போய்ச்சேர்ந்தார். இத்தாலியின் விடுதலைப் போருக்கு இங்கிலாந்தில் உள்ளோரின் ஆதரவைப் பெறும்பொருட்டு, இத்தாலியின் நண்பர்கள் சங்கம் (the Friends of Italy) என்ற சங்கத்தை 1851இல் ஆரம்பித்து அதில் இத்தாலி குறித்துத் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்திவந்தார்.

எவ்வளவு முயன்றும் தம் வாழ்நாளுக்குள் இத்தாலியில் குடியாட்சியை நிறுவ மாஜினியால் இயலவில்லை. போராட்டத்திலேயே பிறந்து போராட்டத்திலேயே வளர்ந்த மாஜினியின் உடல் முதுமையால் தளர்ந்தது. ”உழைத்து உழைத்துக் களைத்துப்போன இந்த வாழ்க்கை எந்திரம் எனக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது” என்று கூறி வருந்தினார் அவர். அவரோடு அன்பு பாராட்டிப் பழகியவர்களெல்லாம் அவருடைய அந்திமக் காலத்தில் அவருக்குப் பகையாகிப் போனார்கள். அவரோடு அரசியல் போராட்டங்களில் கைகோத்திருந்த கரிபால்டிக்கும் அவருக்கும்கூட மனத்தாங்கல் ஏற்பட்டது. எனினும் இவற்றையெல்லாம் மாஜினி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

இத்தாலியத் தொழிலாளிகளுக்கு அவர் கடைசியாக உபதேசித்தது இதுதான்! “பெருமை வாய்ந்த ஆனால் துரதிர்ஷ்டம் மிகுந்த நமது தாய்நாட்டை நேசியுங்கள்! அதன் மேன்மைக்காக அயராது உழையுங்கள்! இதுவே நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்.”

தம் வாழ்நாளெல்லாம் இத்தாலிய விடுதலைக்காகப் போராடிய மாஜினி,1872ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஜெனோவாவுக்கு அருகிலுள்ளதும், சாய்வுகோபுரத்திற்குப் பெயர்பெற்றதுமான பைசா நகரத்தில் உயிர்நீத்தார். பின்னர் அவர் விருப்பப்படியே ஜெனோவா நகரத்திலிருந்த அவருடைய தாயாரின் கல்லறைக்கு அருகில் அவருடல் அடக்கம் செய்யப்பட்டது.

உலகத்தில் அகத்தூய்மைக்கும் மனிதத் தன்மைக்கும் மதிப்பிருக்கின்ற வரையில், அதிகாரத்தையும் வெற்றியையும் காட்டிலும் தன்னலத் துறவும், கடமையுமே உயர்ந்தது என்று மன்பதை எண்ணுகின்ற வரையில், தமக்கென வாழாது தம் நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர் மாஜினியின் பெயரும் நிலைத்திருக்கும்!

***********************************************

கட்டுரைக்குத் துணைநின்றவை:

  1. https://www.britannica.com/biography/Giuseppe-Mazzini
  2. https://en.wikipedia.org/wiki/Giuseppe_Mazzini
  3. மாஜினி – வெ.சாமிநாத சர்மா நூல்திரட்டு 5 – தமிழ்மண் பதிப்பகம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *