ஆசைபற்றி அறையலுற்றேன்

ச. சுப்பிரமணியன்
முன்னுரை
‘வல்லமையில்’ பல கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. கடந்த இரண்டு திங்களில் வல்லமை மின்னிதழில் அதற்குமுன் வெளிவந்த பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்த நிலையில் இந்தக் கட்டுரையை எழுதியே ஆக வேண்டும என்ற நிலை எனக்கு வந்தது. இந்தக் கட்டுரையில் காணும் கருத்துகளை அருள்கூர்ந்து அறிவுரையாகக் கருதாமல், வழிகாட்டுதலாகக் கொண்டால் எனக்கு நிறைவு. எதிர்கால ஆய்வு சிறக்கவும் கூடும். அந்த வகையில் தமிழியல் ஆய்வுலகத்தின் இரங்கத்தக்க நிலையினைக் கருத்திற்கொண்டு ஆய்வு நெறிபற்றிய சில கருத்துகளைப் பணிவுடன் முன்வைக்கிறேன்.
கட்டுரைகள் எழுதப்படுவதன் நோக்கம்
தற்காலத் தமிழியல் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவோ ஆய்வுத் துறை சிறக்கவோ ஆராய்ச்சி உண்மைகளைத் தமிழுலகம் அறியாமல் போய்விடக் கூடாதே என்னும் ஆதங்கத்தின் காரணமாகவோ எழுதப்படுகின்றன என நம்பி ஏமாந்து போக வேண்டியதில்லை. முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களின் பல்கலைக்கழகத் தற்காலிக அனுமதி நிரந்தர அனுமதியாக (CONFIRMATION) மாறுவதற்கும், சுயநிதிக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள் சில ஆய்வுத்தாள்களை வெளியிட்டாலேயே ஊதிய உயர்வு என்னும் நிலை இருப்பதனாலும் முன்னாய்வுச் சுருக்கத்தொடு இரண்டு ஆய்வுத்தாள்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் பல்கலைக்கழக விதியாலுமே பெரும்பாலும் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.
ஆய்வுக் கட்டுரைகளின் நிலை
ஆய்வேடு எப்படியோ அப்படித்தான் ஆய்வுக் கட்டுரைகளும். ஆய்வேடுகளில் ஆழமும் செறிவும் இல்லாமற் போனதற்கு ஆய்வுத் தலைப்புகளே தலையாய காரணம். ஆய்வுத் தலைப்புகள் ஆய்வாளரின் உள்ளந்தோய்ந்த பொருளிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உணவு விடுதியின் ‘மெனு’வைப் பார்த்து உணவுக்குக் கட்டளையிடுவதைப்போல இன்றைய ஆய்வுத் தலைப்புகள் அமைந்து போயின. சில நேரங்களில் ‘பாம்போடு உடன் உறையும் வாழ்க்கையுமாக’ அது மாறிப் போகிறது. ஆய்வாளருக்குத் துணையாக இருக்க வேண்டிய நெறியாளர் பலர் அதனைத் தவிர்த்த மற்ற எலலா நிலையினராகவும் இருப்பதை நான் பல நேர்வுகளில் உணர்ந்திருக்கிறேன். நேரடிப் பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கிறேன்.
ஆய்வுப் பொருண்மையும் அத்வைத நிலையும்
எது வேண்டுமானாலும் உங்கள் கட்டுரைப் பொருளாகலாம். ஆனால் அது உங்கள் உள்ளம் தோய்ந்ததாக இருக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். எனக்குக் கம்பனும் திருவள்ளுவனும் தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. கலைஞரும் கண்ணதாசனும் தான் தமிழை எனக்கு அறிமுகம் செய்தவர்கள். ஆனால் அந்த இருவரும் என் திறனாய்வுப் பார்வையில் அவ்வளவாகக் கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை. காரணம் அவர்களின் பெரும்பாலான படைப்புகளைப் படித்து நடந்த நான், சங்க இலக்கியத்தின் உச்சம் தொட்டதன் காரணமாக அங்கிருந்து இறங்க முடியாமல் போய்விட்டது. அதாவது கீழிருந்து தொடங்கிய பயணம் மேலே வந்து நிலை கொண்ட போது, தொட்டபெட்டாவிலிருந்து கோவையையும் மேடடுப்பாளையத்தையும் பார்ப்பதுபோல் இருந்தது. இது என் நிலை. எல்லோருக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. இங்கே இது எதற்காக? அவ்விரு வல்லாளர்களும் என் ஆசிரியர்களேயானாலும் என் உள்ளங்கவர்ந்த இலக்கியம் சங்க இலக்கியமே! தொல்காப்பியமே! திருக்குறளே! அவற்றைத் தவிர வேறு எதனையும் என் மனம் உள்வாங்காது. மேம்போக்காகத்தான் பார்க்கும். எனவே என் ஆய்வு அவற்றில் மட்டுந்தான் அமையும் என்பதைச் சுட்டுவதற்காக. இப்போது புரிந்திருக்கும்!
உள்ளமும் ஆய்வுப் பொருண்மையும்
எனக்குச் சங்க இலக்கியம் என்றால் உங்களுக்கு ஆனந்த விகடன் பிடித்தமானதாக அமையலாம். அவற்றின் இதழ்களைச் செரித்துக்கொண்டு அவற்றின் உள்ளடக்கங்களோடு உங்கள் இலக்கிய அத்வைதம் அமையலாம். எனவே உங்கள் ஆய்வு, விகடனைச் சார்ந்திருக்கலாம். நான் விகடனை ஆராய்வதற்கும் நீங்கள் ஆராய்வதற்கும் வேறுபாடு நிலவும். என்னால் ஆய்வு செய்யவே முடியாது. காரணம் எனக்கு அதில் பிடிப்பில்லை. ஈடுபாடில்லை. அதனால் உங்கள் மனம் எதனைப் பற்றியிருக்கிறதோ எதனைப் பற்றி எப்போதும் சிந்தித்கிறதோ அதனைப் பற்றித் தேவை கருதி ஆய்வு செய்யலாம். கட்டுரை எழுதலாம். அதுதான் முறை.
சிலருக்குத் தொல்லியல் பிடித்திருக்கலாம். சிலருக்குக் கல்வெட்டு மட்டும் பிடித்திருக்கலாம். சிலருக்குத் தலபுராணங்கள் பிடித்திருக்கலாம். சிலரைப் பெருமாள் திருமொழி கவர்ந்திருக்கலாம். சிலருக்குப் பெரிய புராணத்தையும் வெள்ளக்கால் சுப்பிரமணியத்தையும் பிடித்திருக்கலாம். ஜெயகாந்தனைப் பிடித்திருக்கலாம். ஆண்டாள் பிரியதர்சினியைப் பிடித்திருக்கலாம். பிரபஞ்சனைப் பிடித்திருக்கலாம். இப்படிப் பிடித்து மனத்துள் படிந்து போன பொருள் பற்றிய ஆய்வே சிறக்கும். கருதுகோளுக்கான வலிமையான தரவுகளும் கிட்டும். கட்டுரை செறிவாகும். கட்டுரையின் முதற்பத்தியைப் படித்த உடனேயே கட்டுரையாளருக்கும் கட்டுரைக்கும் இடையே நிலவுகின்ற ‘உறவு நிலை’ மதிப்பீட்டாளருக்குப் புரியாமல் போகாது எனக் கட்டுரையாளர் எண்ணிவிடக் கூடாது. கையிருப்பின்றிக் கடன் வாங்கும் கருதுகோளின் வழ்நாள் குறைவே!
கட்டுரையின் முன்னுரை
ஆய்வேட்டில் ‘ஆய்வு முன்னுரை’ என்னும் பகுதியில் சொல்லப்படும் அனைத்துச் செய்திகளையும் இன்னும் சுருக்கமாகக் கட்டுரையின் முன்னுரையில் சொல்லிவிடலாம். ஆய்வுத் தலைப்பு, ஆய்வு நெறி, ஆய்வு அணுகுமுறை, ஆய்வுக் களம், ஆய்வெல்லை, நோக்கம், பயன் முதலியன பற்றிய கடடுரையாளரின் எண்ணத்தைப் புரிந்துகொள்ள இது உதவக்கூடும். ஆய்வு நெறி, ஆய்வு அணுகுமுறை என்பவை தனித் தனி. பலர் ஒன்றெனக் கருதி மயங்குவது தெரிகிறது. சிலப்பதிகாரத்தை வரலாற்று முறையில் அணுகுவதும் இலக்கிய நெறியில் அணுகுவதும் ஆய்வு அணுகுமுறை. இந்த அணுகுமுறையில் கண்டறியப்படும் ஆய்வுண்மைகள் வெளிப்படுவது ஆய்வு நெறி. பல்வகை அணுகுமுறைகளுக்கும் ஒரே நெறி பயன்படலாம். ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒவ்வொரு தனிநெறி தேவைப்படலாம். இது ஆய்வாளர் உரிமை. கள ஆய்வுகளுக்கு இது பொருந்தாது.
மதிப்பீடு உள்ளடக்கம் பற்றியதன்று
வல்லமையில் ஒரு கட்டுரை முன் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றால் கட்டுரையின் ‘உள்ளடக்கம்’ பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அது ஆய்வாளரின் அல்லது கட்டுரையாளரின் உரிமை. கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட தலைப்பு, தலைப்புக்கான தரவுகள், தலைப்பையே கருதுகோளாகக் கொண்டால் அதற்கும் தரவுகளுக்குமான பொருத்தப்பாட்டினை உறுதி செய்வதில் கட்டுரையாளருக்கு இருக்க வேண்டிய தெளிவு மற்றும் ஆராய்ச்சி அறிவு, பொருத்தமான மதிக்கத்தக்க மேற்கோள்கள், பொருண்மைக்கேற்ற பிழையில்லாத தூயதமிழ் மொழிநடை, கட்டுமான நெறிகள் ஆகியவை மட்டுமே கருத்திற் கொள்ளப்படுகின்றன.
கட்டுரையாளரின் கருதுகோள் தவறு என்பதற்கோ, முடிவு தவறு என்பதற்கோ மதிப்பீட்டாளர் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதில்லை. மேற்சொன்ன கரணைகளின் பொருத்தப்பாடு பெரும் கவனத்திற்கு உள்ளாக்கப்படும். கட்டுரையாளர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சுருங்கச் சொன்னால் ‘சட்டை ஒழுங்காகத் தைக்கப்பட்டிருக்கிறதா?’ என்று தையலின் உறுதியை நோக்குவதுதான் மதிப்பீட்டின் அல்லது மதிப்பீட்டாளரின் பணி. அது ‘பொருத்தமாக இருக்கிறதா?’ என்பது போட்டுப் பார்ப்பவரின் விதி!. காரணம் கட்டுரையின் விரிவான ஆய்வினைப் பின்னாலே வெளிவரும் ஒரு கட்டுரையின் ஒரு அடிக்குறிப்பு தகர்த்துவிடும். எனவே இதுபற்றிக் கவலைகொள்ள வேண்டிய தேவை, மதிப்பீட்டாளருக்குத் இல்லை. இதனைக் கட்டுரையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை, கட்டுரையின் புறக்கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல் மட்டுமே!
கட்டுரையில் பத்திப் பிரிப்பு
வல்லமையில் வெளிவந்த பொதுக் கட்டுரைகள் — ஆய்வுக் கட்டுரைகள் என எதுவாயினும் அவற்றுள் பல, நல்ல வலிமையான தரவுகள் இருந்தும் வெளிப்பாட்டு உத்தியின் தோல்வியினால் பெற வேண்டிய சிறப்பினைப் பெறாமல் போயின. இதற்கு அடிப்படைக் காரணம், பத்திப் பிரித்தலில் காட்டிய அலட்சியமே!. ‘ஒரு கட்டுரையின் சிறப்பிற்குத் தொடர்களே காரணம். ஆனால் அதனின் சிறப்பு பத்திப் பிரிப்புக்கே’ என்பார் அறிஞர் அண்ணல் பழந்தமிழ் இலக்கண நூல்களில் ‘தொகுத்துச் சுட்டல்; என்பதும் ஒன்று. கருதுகோளின் விரிவுக்குத் துணைசெய்யும் கருத்தமைவுகளை அதன் தன்மைக்கேற்ப பிரித்தமைக்கும் வடிவ முயற்சியே பத்திகளாகும். ஒரு பத்தியின் முடிவு, அடுத்த பத்தியின் தொடக்கத்திற்கு வழிகோல வேண்டும். ஒவ்வொரு பத்தியும் கருதுகோளின் ஒவ்வொரு உட்பகுதியை விளக்குவதாக அமைதல் வேண்டும். பத்திகளின் பொருண்மைக்கேற்ப தரவுகள் அமைக்கப்படல் வேண்டும். வேறொரு பத்தியின் பொருண்மைக்குரிய தரவு அவசரத்திலும் பிழையாகவும் இவ்வாறு பதிவாவது உண்டு. இதனை மீள்பார்வையில் நீக்கிவிட வேண்டும்.
கட்டுரையில் வடசொற்கள்
நாடு விடுதலையடைந்தும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டும் 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் வல்லமையின் பல கட்டுரைகளில் தமிழ்மொழி கறைபடிந்த நிலவாகவே காட்சியளிக்கிறது. ஒரு குறிப்பு அணி அல்லது அலங்காரம் என்பது தமிழுக்கு உரியதன்று. அது வடமொழி இலக்கியங்களுக்கு உரியது. தொல்காப்பியத்தில் அணி என்பது இல்லை. தொல்காப்பியத்தின் ‘உவமம்’ ஒன்றுக்கும் மேற்பட்ட இயல்களில் ஆராயப்பட்டிருக்கிறது. அது அணியன்று. பொருட்பகுதி.
அந்த வடமொழி அலங்காரங்களின் பெயர்களில் சிலவற்றைப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ப் பேரறிஞர்கள் எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? தற்குறிப்பேற்றம், பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, எடுத்துக்காட்டு உவமம் வேற்றுமை வேற்றுப் பொருள் வைப்பு, என்றெல்லாம் பழகுதமிழில் பெயர்த்தெழுதியிருக்கிறார்கள். ‘பிரசுரம்’ என்பது துண்டறிக்கை ஆகி 50 ஆண்டுகளாகின்றன. ‘பிரசுலாயம்’ என்பது பதிப்பகம் ஆகியும் பல்லாண்டுகள் ஆகின்றன.
அவ்வளவு ஏன்? ‘வல்லமை’ என்னும் ‘பத்திரிகையை’ யாரும் தரிசிக்க இயலாது ‘வல்லமை’ என்னும் ‘மின்னிதழைத்தான்’ காண முடியும். இவ்வளவுக்கும் பிறகும் சிலர் ‘உதாரணமாக’ என்று எழுதுகிறார்கள். இப்படி வடமொழியில் தங்கள் புலமையைக் காட்ட விழைவார், தம் கட்டுரையை வடமொழியிலேயே எழுதுவதுதான் சிறந்தது. வடமொழிக் கலப்பும் அது பற்றிய விழிப்புணர்வும் அதற்கான கொள்முதல் கொள்கையும் தொல்காப்பியர் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக அதன் வளர்ச்சி நிலையில் இருக்க வேண்டிய தமிழ் இப்படி இருக்கிறது என்பதைக் கடடுரையாளர்கள் புரிந்துகொண்டு கட்டுரையாக்கம் செய்ய வேண்டியது அவர் கடமை அல்லவா? .
கட்டுரையின் மொழிநடை
பொருண்மைக்கும் மொழிநடைக்கும் தொடர்பு உண்டு. ஆழமான செய்திகளைக் கடுமையான நடையில் சொல்லுவது தவறன்று ஆனால் அவற்றையே எளிமையாகச் சொல்வது சிறப்பு தரும். இதற்குப் புலமை மட்டுமே போதாது. எளிமையான உள்ளம் வேண்டும். ஒரு சில படைப்பாளர்களுக்குத்தான் இது வாய்த்திருக்கிறது. தற்காலத்தில் நானறிந்தவரையில் ஔவையார், கவிமணி, சுப்பிரமணிய பாரதியார், கண்ணதாசன் முதலியோரிடத்தில் இந்த எளிமையைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆழமான கருத்தியல். எதிரெதிர் முரண்கள். ஆனால் சொற்கள் மிக எளிமை.
‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது மிகக் கடுமையான முரண். ‘நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும்? எவ்வளவு பெரிய சிந்தனை? ஆனால் போகிற போக்கில் மொழி நடை அமைந்துவிடுகிறது. ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? எண்ணிப் பாருங்கள். ‘நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே? எவ்வளவு பெரிய தத்துவம்? இந்த எளிமைக்கு மூலதனம் அறிவா? உள்ளமா? ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்! நினைத்துப் பார்க்க முடியாத சிந்தனை இயைபு.
படைப்பாளர்களில் இப்படி ஒரு சிலர் என்றால் ஆய்வுலகில் ஒரே ஒருவர்தான். அவர்தான் அறிஞர் மு.வ. மொழியியலைக் கூட மூன்றாம் வகுப்புக்குக் கற்பிக்கும் ஆளுமை, அவர்க்கு மட்டுமே உண்டு. சிறிய எளிய தொடர்களால் பேருண்மைகளைப் பதிவு செய்த பேரறிஞர். தற்காலத் தமிழியல் ஆய்வறிஞர்களின் பல கட்டுரைகள், யாருக்கும் புரியாது. இருட்டுக்கு வாழ்க்கைப்பட்டவை அவை. இதனை நான் ஆயிரம் கோயில்களில் சொல்லுவேன். பதர்ச் சொற்கள்!. ஆரவாரப் புனைவு! அலங்காரக் கற்பனை! இவையெல்லாம் எப்படி ஆய்வாகும்?
கட்டுரை இலக்கியமாகலாம்
‘இலக்கியக் கட்டுரை’ என்பதற்கும் ‘கட்டுரை இலக்கியம்’ என்பதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. ‘இலக்கியக் கட்டுரை’ என்பது அறிவியற் கட்டுரை முதலிய பிற கட்டுரைகளினின்றும் வேறுபட்டு நிற்பதைக் குறிக்கும். கட்டுரை இலக்கியம் அத்தகையதன்று. எந்தப் பொருள்பற்றிக் கட்டுரை எழுதப்பட்டாலும் அவை இலக்கியத் தகுதியைப் பெறுமாறு அமைக்க இயலும். ஜி.ஆர்.தாமோதரன் எழுதிய அறிவியல் கட்டுரைகளும், சோமெலே எழுதிய பயணக் கட்டுரைகளும் ‘திராவிடநாடு’ ‘காஞ்சி’ முதலிய இதழ்களில் பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரைகளும், ‘தம்பிக்கு’ எழுதிய மடல்களும் கலைஞர் முரசொலியில் எழுதிய கட்டுரைகளும் உடன்பிறப்புக்கான கடிதங்களும் அறிஞர் மு.வ. அவர்களின் தம்பிக்கு, அன்னைக்கு முதலிய கட்டுரைகளும் தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு.ஏ.என். சிவரமனின் அறிவியற்கட்டுரைகளும், வைரமுத்து எழுதிய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ என்னும் கட்டுரை நூலும் கட்டுரைகளை இலக்கியமாகக் காட்டுவதில் முழு வெற்றியடைந்திருக்கின்றன என்பதைக் கற்பார் உணரக்கூடும். இக்கட்டுரைகள் ஆழமான பொருள் பற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் இனிய எளிய தமிழால் வகை தொகை செய்யப்பட்டு நிரலாகக் கொடுத்திருக்கும் பாங்கினைத் தற்கால ஆய்வாளர்கள் கற்றுணர வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையின் சிறப்பு
அறிஞர் தமிழண்ணல் ஆய்வேட்டுக்குச் சொல்லியிருக்கும் அத்தனைப் பண்புகளும் ஆய்வுக் கட்டுரைக்கும் பொருந்தும். ஆய்வுக் கட்டுரை ஆய்வுலகிற்கு ஒரு நன்கொடை, அது கட்டுரையாளரின் சொந்தப் படைப்பு, அது ஒரு அறிவியற் சார்ந்த படைப்பு, ஆய்வாளரின் சொந்த நோக்கும் போக்கும் எண்ணங்களும் கொண்ட கருவூலம் என்பனவெல்லாம் ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரையாளருக்குக் கட்டுரையால் கிட்டும் பெருமைகளாகும். ஆய்வு முடிவு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வண்ணமே இருத்தல் வேண்டுமென்பதில்லை. ஒரு புதிய சிந்தனையை நேர்முகமாகவோ எதிர்முகமாகவோ தூண்டுதற்கு அது பயன்படுமானால் ஆய்வு வெற்றியடைந்தது என்பதுதான் பொருள். இதனை ஆய்வாளர்கள் பலர் உணர்வதில்லை. நடுநிலை என்பதையே மறந்துவிடுவது ஏற்புடையதன்று. பரிமேலழகரைப் பற்றிய நேர்முகப் பார்வையை ஒருவர் பதிவிடுகிறபோது, எதிர்முகப் பார்வைக்கும் அது இடமளிக்கிறது என்பதை மறத்தலாகாது. அந்த எதிர்முகப் பார்வையும் ஓர் ஆய்வே! ‘COMPOSITION’ என்பது வேறு. ‘RESEARCH PAPER’ என்பது வேறு. முன்னது பள்ளிமாணவர் எழுதவது. பின்னது ஆய்வாளர்கள் கண்டறிந்து படைப்பது.
கட்டுரையாளர் கவனத்திற்கு
‘வல்லமை’ மின்னிதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள், பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பொறுமையாக, ஆழமான சிந்தனையுடன், இனிய எளிய தமிழில் கட்டுரைகளை எழுதுவது அவர்களுக்கு நலம் பயக்கக் கூடும்.
- சிக்கலில்தான் ஆய்வு தோன்றும். கட்டுரையாளர்கள் கட்டுரைப் பொருளில் தமக்குள்ள ஆர்வத்தையும் பயிற்சியையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘ஆய்வு’ என்பது ஒரு தவம். தயார் நிலை இன்றித் தவம் கைகூடுமா?
- முன்பின் அறியாத துறையில் ஆய்வு செய்வது நெறியன்று, பயனற்றது.
- கருதுகோளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
- கருதுகோளை உறுதி செய்வதற்கான தரமான வலிமையான தரவுகளைத் தொகுப்பதில் போதிய காலத்தையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
- தம்மைத் தாமே ஊக்கப்படுத்திக் கொண்டு உழைக்க முந்துவது வேறு. தம்மைத் தாமே தருக்கிக் கொண்டு தவறவிடுவது வேறு. பின்னதுதான் அதிகமாக நிகழ்கிறது.
- கட்டுரை எளிமையில் தொடங்கி அருமையில் நிறைவு பெற வேண்டும்.
- தலைப்பைத் தேர்ந்தெடுப்பதிலும் பத்திகளுக்கான குறுந்தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகுந்த கவனம் வேண்டும்.
- பொற்சரட்டில் முகப்பாகக் கரணைகளாகக் கண்ணிகளாக அவை அமைந்திருக்கின்றனவா என்பதை ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்க வேண்டும்.
- கட்டுரையாதலின் மேற்கோள் பற்றிய விவரங்களை ஆங்காங்கே பதிவு செய்யாமல் சான்றெண்களை மட்டும் பதிவு செய்து கட்டுரையின் இறுதியில் அவ்வெண்களுக்கான விவரங்களைக் கட்டுரையின் இறுதியில் தந்தால் போதும்.
- துணைநூற்பட்டியல் நீண்டிருந்தால் கட்டுரை கனத்துவிடும் என்று எண்ணிவிடலாகாது. அந்நூல்களினின்றும் பெறப்பட்ட தரவுகள் அல்லது மேற்கோள்கள் கட்டுரைப் பொருளை விளக்குவதில் அளிக்கும் பங்களிப்பே அப்பட்டியலுக்குப் பெருமை சேர்க்கும் .
- தொகுத்துச் சுட்டல் என்பது முன்னுரை. வகுத்துக் காட்டல்; என்பது பத்திகள். ‘அப்பொருள் முடித்தல்’ என்பது நிறைவுரை. அக்கால முப்பத்திரண்டு உத்திகளும் தற்காலத் திறனாய்வுக் கொள்கைகளுக்கு வழிகாட்டிகள் என்பதை அறிதல் நன்று. .
- ‘இன்னது சொல்லப் போகிறது’ எனத் தொடங்கி ‘இன்னதை இன்னவாறு இன்னவற்றால் இக்கட்டுரை சொல்லியிருக்கிறது’ என நிறைவு செய்தலே கட்டுரையின் புறக்கட்டுமானமாகும்.
நிறைவுரை
மேற்கண்ட பத்திகளில் கண்ட கருத்துகளை நான் பதிவு செய்யக் காரணம், வல்லமையின் கட்டுரைகளே! வைரங்கள் பல தகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கண்ணாடித் துண்டுகள் பல, தங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் அவசரம்! அலட்சியம்! தெளிவின்மை!. இவற்றையெல்லாம் களைந்து அமைக்கப்படும் கட்டுரைகளுக்கு வல்லமையில் மதிப்புமிக்க இடமுண்டு. என் கருத்துகளில் சங்கடப்படுவோர் இருக்கலாம். அந்தக் கருத்துகள் சிறிதேனும் ஒளி தருவது உண்மையானால் அந்தச் சிறிதளவு வெப்பத்தைத் தாங்கித்தான் ஆகவேண்டும்! ஏனென்றால் வெப்பமில்லாத ஒளி உலகில் உண்டா? ஆய்வாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
எத்தகைய ஐயங்களுக்கும் தொடர்புகொள்ளலாம்; sangilisubramanian46@gmail.com
நானும் கட்டுரைகள் எழுத வாய்ப்பு இருக்கிறதா அய்யா
எல்லையில்லா வாய்ப்புகள் இருக்கின்றன. எவரும் எழுதலாம். அனைவரையும் வரவேற்கிறோம். vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.