தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்

0

கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன்

முன்னணி மலையக மக்கள் தலைவரும் என் நண்பருமான மாண்புமிகு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தனது 56ஆவது பிறந்த தினத்துக்கு மூன்றே மூன்று நாட்களின் முன்னம் எதிர்பாராத மரணத்தைத் தழுவிய சேதி, அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த கவலையுடன் அஞ்சலி செய்கிறேன்,

நண்பருக்குக் கண்ணீரும் அஞ்சலிகளும்

ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களதும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களதும் கனவான மலையக மக்களுக்குச் சம்பள உயர்வு, வீடு, நிலம், கிராமிய வாழ்வு என்கிற அடிப்படை உரிமைகள் கிட்ட, மலையகத் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓர் ஐக்கிய முன்னணியின்கீழ் ஒன்றுபட வேண்டும், அதுவே நாம் அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு செய்யக்கூடிய அஞ்சலியாகும்.

1972இல் தந்தை செல்வநாயகத்துடன் சேர்ந்து தமிழர் கூட்டமைப்பை உருவாக்கிய மலையக மக்கள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நான் முதன்முதலில் நோர்வேயில் சந்தித்தேன். ஒஸ்லோவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான ஆய்வரங்கம் ஒன்றில் அமரரைச் சந்தித்த அன்றே அரசியல் கருத்து முரண்பாடுகளைத் தாண்டிய நல்லுறவு நமக்குள் உருவானது. அவர் என்மீது விமர்சன ரீதியான அன்பு வைத்திருந்தார். ஒஸ்லோவில் தனிப்பட்ட அளவளாவலின்போது மலையகக் கட்சித் தலைமைகள் மலையக மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வென்றெடுக்குமுகமாக ஐக்கிய முன்னணிக்குள் வரவேண்டும் என்கிற என் கருத்தை அக்கறையுடன் செவிமடுத்தார்.

கடைசி தடவையாக நான் இலங்கை வந்தபோது ரேணுகா ஹோட்டல் உணவகத்தில் தற்செயலாக அமரரைச் சந்திக்க நேர்ந்தது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்தார். தன் பணிகளை மறந்து என்னுடன் நெடுநேரம் அன்பாகப் பேசினார். அலுவலகம் வந்து தன்னைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். தவறிவிட்டேன். அதன்பின் நாம் சந்தித்தது குறைவு என்றாலும் நமக்குள் பரஸ்பரம் விமர்சனரீயான நட்பு வளர்ந்து வந்தது. அமரர் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நினைவை போற்றுவோம்.

இலங்கை அரசு வாய்ச்சவடால் அஞ்சலிகளை விடுத்து, அமரர் தொண்டமானின் நீண்டகாலக் கோரிக்கையான மலையக மக்களுக்கு 1000 சம்பளம், நிலம், வீடு, கிராமம் என்கிற கனவை நனவாக்க முன்வர வேண்டும். கொரோனா சிக்கலால், அவரது ஈமைக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஈழத் தமிழ்க் கலைஞர்கள் சார்பாக ஆழ்ந்த கவலையுடன் என் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *