பாவேந்தர் பாடல்களில் கம்பரின் சிந்தனைகள்!

0

-மேகலா இராமமூர்த்தி

பாவேந்தர் பாரதிதாசன் தாம் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணப் பாத்திரப் படைப்புகளை விமர்சித்தவர்; கம்பர் எதிர்நிலைத் தலைவனாக (Antagonist) உருவகித்த இரணியனைத் தலைவனாக்கிக் காப்பியம் படைத்தவர். எனினும், கம்பரின் கவிநயத்திலும் கற்பனை வளத்திலும் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டவர்.

கம்பரின் கவிநயத்தில் பாரதிதாசனுக்கிருந்த ஈடுபாட்டை அவரின் பாடல்களில் நாம் தெளிவாகவே காணமுடிகின்றது; சான்றுகளாகச் சிலவற்றைக் காண்போம்.

மிதிலையில் இராமன் சிவதனுசை முறித்த பின்னர்ச் சீதையை மணமகளாக அணிசெய்து மண்டபத்துக்கு அழைத்துவருகின்றனர் அரண்மனைப் பெண்டிர். அழகரசி சீதை புத்தாடையும் அணிமணிகளும் புனைந்து பெடையன்னம் என நடை பயின்றுவந்து தன் தந்தை சனகனின் ஆசனத்துக்கு அருகிலிருந்த ஆசனத்தில் அமர்கின்றாள்.

இராமன் அவளைக்கண்டு பரவசமுற்றிருக்கையில், இராமனை மிதிலைக்கு அழைத்துவந்த விசுவாமித்திர முனிவன் சீதையைப் பார்க்கிறான்.

”அடடா…உயர்குல மாதர்க்கெல்லாம் ஆதாரம் இவளே; சிவதனுசை முறித்தால் கிடைக்கக்கூடிய பரிசு, பார்வையிலேயே ஆளைக்கொல்லும் நஞ்சுடைக் கூர்விழிகளுடைய மலர்மங்கையாகிய இந்தச் சீதையே என்பதை மட்டும் பச்சைமாமலை மேனியனாகிய இராமன் அறிந்திருந்தால் இந்தச் சிவதனுசு என்ன…ஏழு மலைகளைக் கொண்டுவந்து வைத்தாலும் பொடிப் பொடியாக்கியிருக்க மாட்டானோ?” என்று எண்ணுகின்றான்.

”…பச்சைமலை யொத்த படிவத்து  அடல்இராமன்
நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவளென்றால்
இச்சிலை கிடக்க மலைஏழையும் இறானோ?”
(கம்ப. கோலங்காண் படலம்)

இந்த உவமை பாவேந்தர் பாரதிதாசனைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றது. தக்க சமயத்தில் இதனைப் பயன்படுத்த எண்ணியிருந்தவர், சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் தம்முடைய குறுங்காப்பியத்தில் அதன் தலைவன் குப்பன் தன் காதலியின் விருப்பத்தைச் சிரமேற்கொண்டு நிறைவேற்ற முற்படுகையில்,

”கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”
என்றுரைக்கின்றார்.

’பரிசாய்க் கிடைக்கப் போகின்றவள் சீதையென்றால் இந்தச் சிலையென்ன? பல மலைகளைத் தூளாக்குவான் இராமன்!’ எனும் கம்பரின் கற்பனையே, காதலியரின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் குமரர்க்கு மாமலையும் சிறுகடுகு எனும் பாவேந்தரின் பாடலில் புதுக்கோலம் காண்கின்றது.

கம்பராமாயணத்தில் மற்றொரு காட்சி!

வனவாசத்தின்போது பஞ்சவடி எனுமிடத்தில் பர்ணசாலை அமைத்து இராம இலக்குவரும் சீதையும் தங்கியிருந்தனர். இராமன் மாரீச மாயமானைத் துரத்திச் சென்றபின் தொலைவில் அவன் குரலில் ஓர் அலறல் சத்தம் கேட்கிறது; அதனால் அச்சமுற்ற சீதை, அவனுக்கு ஆபத்து என்றுகருதி இலக்குவனை அங்கே வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டுப் பர்ணசாலையில் தனித்திருக்கின்றாள். அந்த வேளைக்காகவே காத்திருந்த இராவணன் அவளைப் பர்ணசாலையோடு தூக்கிச் சென்றுவிடுகின்றான்.

இராம இலக்குவர் திரும்பவந்து பார்த்தபோது பர்ணசாலையில் சீதை இல்லை. கவலையோடு அவளைத் தேடிக்கொண்டு வருகின்றனர் இருவரும். இரவு வருகின்றது; அஃது இராமனின் துயரைக் கூட்டுகின்றது. ”இந்தக் கொடிய கங்குல், சானகியின் கண்களை விடவும் நீண்டதோ?” என்று அவளை நினைந்து பெருமூச்செறிகின்றான் இராமன்.

”…தண்நறுங் கருங்குழல் சனகன் மாமகள்
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே?”
(கம்ப. அயோமுகிப் படலம்)

வானை நோக்குகிறான்! அங்குள்ள விண்மீன்கள்மீது அவன் பார்வை பதிகின்றது.

“அழகான நிலவுபோல் உதித்த சூரியனின் ஊழித் தீயை ஒத்த வெம்மைமிகு கதிர்களால் சுடப்பட்டுக் கொதிப்பேறிய வானத்தின் உடம்பெல்லாம் தோன்றிய கொப்புளங்களோ இந்த விண்மீன்கள்?” எனும் விசித்திர எண்ணம் எழுகின்றது மனப்புழுக்கத்தில் இருக்கும் அவனுக்கு!

”அப்புடை அலங்குமீன் அலர்ந்ததாம் என
உப்புடை இந்துஎன்று உதித்த ஊழித்தீ
வெப்புடை விரிகதிர் வெதுப்ப மெய்யெலாம்
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே?”
(கம்ப. அயோமுகிப் படலம்)

சூரியனைக் கனல் கக்கும் நிலவாக உருவகிக்கும் கம்பர், அந்தக் கனலால் வானத்தின் உடம்பில் தோன்றிய கொப்புளங்களோ விண்மீன்கள் என்று கேட்பது அவர் கவிச்சக்கரவர்த்தி மட்டுமல்லர்; கற்பனையின் சக்கரவர்த்தியும்கூட எனும் எண்ணத்தை நமக்குத் தோற்றுவிக்கின்றது.

இந்தக் கற்பனையும் பாவேந்தரின் உள்ளத்திரையில் ஓவியமாய்ப் பதிந்துவிட்டது. ஆதலால், ’அழகின் சிரிப்பு’ எனும் தமது கவிதைத் தொகுதியில் ’வான்’ எனும் தலைப்பில் பாட்டாளி வர்க்கத்தினரின் பாடுகளைப் பதிவுசெய்திருக்கும் பாடலில் இதனைத் தக்க வகையில் சேர்த்திருக்கின்றார்.

”மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம் உரிமைகேட்டால்
புண்மீதில் அம்புபாய்ச்சும் புலையர் செல்வராம் இதைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண்டு அந்திக்குப்பின்
விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி! ” 

”மண்மீதில் மாடாய் உழைப்பவரெல்லாம் வறியராகவும் அவர்களை ஏய்த்துப் பிழைப்பவரெல்லாம் வளமை படைத்தவராகவும் வாழும் முறையற்ற நிலைகண்டு பகலெல்லாம் சினத்தீயில் குமுறிக்கொண்டிருந்தது வானம்; அந்தக் குமுறல் அந்திக்குப்பின் அதன் உடலெங்கும் கொப்புளங்களாய் வெடித்தது; அவைதாம் வானில் தெரியும் விண்மீன்கள்!” என்பது இப்பாடலின் கருத்து.

சூரியனின் வெங்கதிர்களின் தாக்கத்தால் வானின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் விண்மீன்கள் என்று கம்பர் சொல்ல, பாட்டாளி வர்க்கத்தினரின் பாடுகளால் வானம் கொதிப்படைந்து அதனால் அதன் உடலில் தோன்றிய கொப்புளங்களே விண்மீன்கள் என்கிறார் பாவேந்தர்.

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கற்பனைகளுக்குத் தம் பாத்திறத்தால் மேலும் மெருகூட்டியிருக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் என்பதைத்தானே இப்பாடல்கள் புலப்படுத்துகின்றன?

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.