சேக்கிழார் பாடல் நயம் – 82 (செய்வதற்கு)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
செய்வதற் கரிய செய்கை செய்தநற் றொண்டர் போக;
மைதிகழ் கண்ட னெண்டோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
‘’பொய்தரு முள்ள மில்லான் பார்க்கிலன் போனா’’ னென்று
மெய்தரு சிந்தை யாரை மீளவு மழைக்க லுற்றான் .
தம் மனைவியாரைக் கொடுக்க வென்று கேட்ட ஓர் அந்தணனிடம் ஒப்படைத்த இயற்பகையாரை ஊரார் எதிர்த்தனர்; இச்செய்கையை எதிர்ப்போம் என்று திரண்டனர்; ‘’இவ்வந்தணரை இவ்வூரை விட்டு நீக்கிச் செல்ல, உங்களைக் கொன்றேனும் உதவுவேன், விலகுக! ‘’என்றார் அதன்பின் எதிர்த்தாரை வெட்டிக்கொன்று தம் மனைவியுடன் அந்த அந்தணர் செல்ல உதவி, திருச்சாய்க்காடு என்ற இடத்தில் விட்டார். அந்த அந்தணர் இயற்பகையாரை ‘’ஊருக்கு மீள்க‘’ என்றார். இயற்பகையார் அந்தணரை, அவ்விடத்திலேயே வணங்கி, வந்த அடியாராகிய அடியாரின் அருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்.
பிறர் எவராலுஞ் செய்தற்கரிய பெருஞ்செய்கை செய்த நல்ல தொண்டராகிய இயற்பகையார் இவ்வாறு மீண்டு போகத், திருநீலகண்டனும் எண்டோள்களையுடைய மறையவனுமாகிய இறையவன் அவரை மகிழ்ச்சியுடன் பார்த்து, “பொய்ம்மை பொருந்திய உள்ளமில்லாதவன்; திரும்பிப் பார்த்தல் கூடச் செய்யாது போயினன்“ என்று அந்த மெய்ம்மையைத் தருகின்ற மனத்தாராகிய நாயனாரை மீண்டும் அழைப்பாராயினர்.
இப்பாடலில், ‘’செய்வதற்கு அறிய செய்கை செய்த நற்றொண்டர்‘’ என்ற தொடர் திருக்குறள் கூறிய ‘’செயற்கரிய செய்வார் பெரியார்‘’ என்றதற் கேற்பவும், திருக்களிற்றுப்படியார் என்ற சித்தாந்த நூலின் 61 ஆம் பாடலில் ,
‘’செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து, சிலர்,
எய்தற் கரியதனை யெய்தினார்“
என்று பாடியதற் கேற்பவும் இயற்பகையாரின் நற்றொண்டு அமைந்ததை விளக்குகிறது. நற்றொண்டின் வகை, பற்று விடுதலாகும்; பற்று விடுதல் – அடியார் வேண்டியவை யாவையேனும் மறாது கொடுத்தல் – பற்றுக்களை எறிந்து விலக்குதல் – திரும்பிப் பாராது போதல் முதலிய ஒவ்வொன்றும் செய்தற்கரியனவேயாம்.
இறைவனிடத்திலே முழுதும் ஈடுபட்டு நிற்றல். அந்தக் காதலிலேபதிந்து அதனால் விழுங்கப்பட்ட நெறியிலே நிற்றல். ஆன்மாக்கள் பிராகிருதர்கள் என்றும், வைநதிகர்கள் என்றும், சாமுசித்தர்கள் என்றும் மூவகையினர். ஆற்றலு மறிவுங் காதலுமில்லாதவர்கள் பிராகிருதர்கள். வைநதிகர்கள் – உலக ஒழுக்கத்திலே விதிவிலக்குகளை அறிந்து அந்நெறியின் ஒழுகிநின்று இடையூறுவந்த காலத்திலேயும் நன்னெறியிற் பதிந்து நிற்பவர். இவர்கள் முறைமையின் மந்ததர முதலிய சத்திநிபாதமுடையவர்களாய் நூல்வழியான் முத்தியடைய விம்புவோர். இவர்கள்புகழ்த்துணை நாயனார் போல்வார்களாம். “தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுவார்“ பசி வருத்தியபோதும் விடாது அந்நெறி ஒழுகிப் பேறு பெற்றது அவர்சரிதம் கூறும். சாமுசித்தராவார், எஞ்சிய வினையின்பொருட்டே திருமேனி தாங்கி மேல்வினை ஒழித்துத் தன் செயலில்லாது ஒழுகி, எல்லாம் சிவன் செயலேயாக நிகழ்பவர். இவர்கள் சண்டீசர் கண்ணப்பர் – போன்று விதி விலக்குகளைக் கடந்து செய்யும் செயல்களை உடையவர்கள். இயற்பகையார் – கோட்புலியார் சிறுத்தொண்டர் செருத்துணையார் முதலிய நாயன்மார்கள் இவ்வகையினர்; நெறி நிற்றலாவது – தம் வழியே பத்தியைத் திருப்பிக்கொள்ளாது பத்தி வழியிலே தம்மை நிறுத்திக் கொண்டு ஒழுகுதலாகும்.’’ என்பது சி கே எஸ் அவர்களின் விளக்கம். இங்கு இந்நாயனார் சாமுசித்தராதலின் இவர் செயல் சிவன்பால் நின்ற செயலேயாயிற்று. எனவே, அது பிறர் எவராலும் செய்வதற்கரிய செயலாயிற்று என்க. ஆதலின் நற்றொண்டர் என்றார்.
அடுத்து ‘’மைதிகழ் கண்ட னெண்டோள் மறையவன்’’ என்ற தொடரில் ‘மறையவன்’ என்ற சொல் இறைவன் நீலகண்டத்தையும் , எண்டோள்களையும் மறைத்து வந்தவன் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது.
இங்கு வேதியர் அழைத்ததை மட்டும் நாயனார் கேட்டனரேயன்றி முன் கண்ட நிலையில் வேதியரை இனிக் காணார்; மைதிகழ் கண்டமும் எண்டோளுமுடைய மறையவனாகவே அடுத்த நிலை காணப்போகின்றார்; ஆதலின் இங்கு இவ்வாறு குறித்தார். இறைவனின் பார்வை முதலில் தம்மை மறைத்து நின்ற திரோதான சக்தியாக இருந்தது; இப்போது அப்பார்வை அருள் நோக்கமாக மாறியது! இதனையே ‘’மகிழ்ந்து நோக்கி‘’ என்ற தொடர் குறிக்கிறது.
உலகியலில் பொய்ம்மை ஆணவத்தோடு ஒன்றி தீமையில் புகுத்தும்; இயற்பகை நாயனார், யான் எனது என்னும் செருக்கு அறுத்தவர் அதனால், மனைவியரையும்,அடியாரையும் திரும்பிப் பார்க்காமல் சென்றார். இதனைச் சிவபிரானே கூறிய ‘’ பொய்தரு முள்ள மில்லான் பார்க்கிலன் போனான் ‘’ என்ற தொடர் புலப்படுத்துகின்றது.
இயற்பகையார் சிந்தை, மெய்யுணர் வடைந்த சிந்தை! அதனால்,
‘’மெய்தரு சிந்தை யாரை மீளவு மழைக்க லுற்றான்!’’ என்று சேக்கிழார் பாடுகிறார். மெய்தரு சிந்தையார் – முன்னைப் பாசநீக்கம் பெற்று வாசனா மலமும் ஒழிந்த பின் சிவப்பேறு பெற நின்றவர். மெய் – சத்து. இறைவன் சத்தாவான். அசத்தினை யில்லையாக்கிச் சத்துப் பொருள் தனது தன்மையைத் தரும் சிந்தையார் என்பதை, மெய்தரு சிந்தை என்ற பொருள் தந்தது. நகரம் நோக்கிப் போயின போக்கிலே நின்றும் மீள்வதனோடு, இவ்வுலகின்றும் தம்முடன் நலமிகு சிவலோகத்திற்கு மீளவும் வருக என்ற பொருள் தந்து இப்பாடல் நமக்கும் ஊக்கம் தருகின்றது. அடியார்கள் செய்யும் சர்வசங்கப்பரித்தியாகத்தினை மிக நன்றாக விளக்கும் பாடல் இது!