Year: 2020

  • சாலு மரதா திம்மக்கா!

    சாலு மரதா திம்மக்கா!

    சாமிநாதன் ராம்பிரகாஷ்

    நாம் உயிர் வாழ மரங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்று நாம் இப்போதுதான் உணர்கின்றோம். மரங்கள் இல்லாமல் இயற்கைக் காற்றும் இல்லை, மழையும் இல்லை. இவ்வளவு ஏன் புவியும் அதிக வெப்பமடைந்து சுவாசக் காற்றிலே நஞ்சும் கலந்து விடுகின்றது. இப்படி நம் வாழ்வின் ஓர் அங்கமான மரங்களை நாம் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டுள்ளோம்.

    ஆனால் தனக்கு நினைவு தெரிந்தது முதல் இன்று வரை அதாவது நூறு வயதையும் கடந்து, மரம் நடுவதையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாதனை நாயகி திம்மக்கா அவர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

    1910ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலம் குப்பி தாலுகாவில் பிறந்தவர் இவர். தந்தை, வசதியற்ற விவசாயி.

    சிறு வயதிலேயே திருமணம் முடித்து, கூடூர் என்னும் ஊருக்கு குடிபெயர்ந்தார். திருமணம் முடிந்து ஆண்டுகள் பல ஆகியும் குழந்தைப் பேறு ஏற்படவில்லை. கேட்கவும் வேண்டுமா நம் சுற்றத்தைப் பற்றி… ஆளாளுக்கு வாய்க்கு வந்த வசைகளையும், கதைகளையும் கட்ட, மிகவும் மனம் வருந்தித் தவித்தார்.

    இதிலிருந்து மீள, மீண்டும் தனக்குப் பிடித்த மரங்களை வளர்க்கத் தொடங்கினார்… அவரின் கணவரும் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அங்கே தொடங்கியது சப்தமற்ற ஒரு பசுமைப் புரட்சி. ஆம், கிட்டத்தட்ட ஆயிரம் ஆலமரங்கள் …

    நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு! ஹுள்ளிக்கள் கூடூர் தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறியது அந்த அதிசயம்.

    1990ஆம் வருடம் அவரின் கணவர் தவறிவிட்டார். பின்னர் மரம் வளர்ப்பதே இவரின் முழு நேரப் பணி! அவர்கள் நட்ட மரங்களை நடந்தே சென்று பராமரித்து வந்தார். அது தவிர பல்வேறு மரங்களையும் நட்டு வளர்க்கத் தொடங்கினார். திக்கெட்டும் திம்மக்காவின் புகழ் பரவத் துவங்கியது. பல்வேறு சேவை அமைப்புகள், பசுமைப் பணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோரின் நாயகியாக மாறினார் அவர்.

    பசுமை நிகழ்ச்சிகளில் இவரே தலைமையாகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். பல்வேறு அமைப்பினருடன் சேர்ந்து மேலும் பத்து ஆயிரம் மரங்களை நட்டு நீரூற்றி வந்தார்.

    இப்படி இருக்க… கர்நாடகா அரசாங்கமே அவர் நெடுஞ்சாலையில் நட்ட மரங்களைப் பராமரிக்கத் தொடங்கி, அவருக்கு ‘சாலு மரதா திம்மக்கா’ [Saalumarada சாலுமரதா (வரிசையான மரங்களின்) திம்மக்கா] என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. இந்த ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ விருது வழங்கிக் கௌரவித்தது.

    இன்றும் அவர் அதே பணிகளைச் செய்துகொண்டு வருகிறார். நூறு வயது கடந்துவிட்டது இவருக்கு! ஆனால் இன்னும் அதே ஆர்வம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி.

    நம்மால் என்ன செய்ய முடியும் என்போருக்கு இவரின் வாழ்வே ஒரு மிகப் பெரிய உதாரணம். எண்ணத்தில் உறுதி இருந்தால் செயலில் தளர்ச்சி வராது. அமேசான் காடுகள் கருகியதைக் கண்டு மனம் உருகிய நாம், அதற்கு மேல் என்ன செய்துவிட்டோம்? என்ன செய்யப் போகிறோம்?

    வாருங்கள் செயலில் இறங்குவோம்… எண்ணற்ற சேவை அமைப்புகள் உள்ளன, அவர்களுடன் இணைந்து நம்மால் ஆனதைச் செய்வோம்.

    Share
  • பெண் என்னும் பெருவரம்!

    பெண் என்னும் பெருவரம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கண்னுக்குள் மணியாக
    மண்ணுக்கு உரமாக
    விண்ணுக்குள் நிலவாக
    விளங்குபவள் பெண்ணாவாள்
    எண்ணத்தில் இரக்கமதை
    இருத்திவைக்கும் இதயமதை
    மண்ணகத்தில் கொண்டிருக்கும்
    மாப்பிறப்பே பெண்ணாவாள் !

    இறைவனது படைப்பினிலே
    பெண்படைப்பே பெரும்படைப்பு
    தாய்மையெனும் உயர்நிலையை
    தாங்குவது பெண்ணன்றோ
    பொறுமையெனும் இலக்கணத்தை
    விளக்கிநிற்கும் பெருநூலாய்
    பூமிதனில் பார்ப்பதற்குப்
    பெண்தானே விளங்குகிறாள் !

    ஈரமுடை நெஞ்சத்தை
    இறைகொடுத்தான் பெண்ணுக்கு
    பாரமெலாம் தாங்குகின்ற
    பக்குவத்தை உவந்தளித்தான்
    கார்மேகம் பொழிவதுபோல்
    கருணைமழை பொழிந்துநிற்கும்
    பெருவரமாய் பெண்ணன்றோ
    உருவாகி நிற்கின்றாள் !

    Share
  • இன்றைய உலகும் மகளிர் பலமும்

    இன்றைய உலகும் மகளிர் பலமும்

    சக்தி சக்திதாசன்லண்டன்

    2020 சர்வதேச மகளிர் தினம் இன்று. அன்றைய மகாகவி பாரதி காலத்திலிருந்து இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. இம்மாற்றங்களு உள்ளாகியிருக்கும் மனித இனமும் அதனூடு பயணித்து, தம்மைப் பலவித மாற்றங்களுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும்.

    ஆனால் மனத்தளவில் மானிட சமூகம் அத்தனை மாற்றங்களையும் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறதா?

    சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியமா? எனும் விவாதம் பல மேடைகளில் நடைபெறுகின்றது. இவ்விவாதத்துக்குச் சார்பான வாதமும் பல வகைகளில் முன்வைக்கப்படுகின்றது.

    பெண்களுக்கென ஒரு தினத்தைக் கொண்டாடுவது அவர்களை ஆண்களின்றும் பிரித்து வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடாதா? ஆணும் பெண்ணும் சமமான பலம் கொண்டவர்கள் எனும் வாதத்தை இது மறுதலிக்காதா என்றொரு வாதமும் பெண்கள்தான் அனைத்திலும் ஆண்களுக்குச் சமம் என்றல்ல அவர்களை விட முன்னேறிவிட்டார்கள் இன்னும் இத்தினம் தேவையா என்றொரு வாதமும் சில ஓரங்களில் கேட்கிறது.

    ஆண்கள் என்றோர் இனமும் பெண்கள் என்றோர் இனமும் இயற்கையால் பிரித்தே படைக்கப்பட்டிருக்கிறது. மனித இனவளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையிது. அன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் இனவிருத்திக்கும் இல்லப் பராமரிப்புக்கும் மட்டுமே உகந்தவள் எனும் அடிப்படை எண்ணம், மனித மனங்களில் நிலை கொண்டிருந்தது உண்மை. அன்றைய உலகின் வளர்ச்சி அந்த எல்லைக் கோட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது.

    ஆனால் மாறிக்கொண்டு வந்த காலக்கட்டத்தில் மனித அறிவின் வளர்ச்சியும் புரிந்துணர்வும் அதிகரிக்கத் தொடங்கிய பின்னும் கலாச்சாரம் எனும் விலங்கினைப் பூட்டி, பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதும் உண்மையே.

    இக்கலாச்சாரப் பூட்டினைத் தகர்த்து பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கடமையில் படைப்பாளிகள் பாரிய பங்கினை வகித்துள்ளார்கள். இந்தக் கலாச்சார வட்டத்தினுள் அடைபட்டுப்போன மகாகவி பாரதியார், நிவேதிதா அம்மையாரின் சந்திப்புக்குப் பின்னரே பெண்களின் சமுதாயப் பங்கின் முக்கியத்துவத்தினை உணர்ந்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.

    இத்தகைய விழிப்புணர்வு பலருக்கு அக்காலத்திலே தோன்றியிருந்தாலும் கூட எத்தனை பேருக்கு இவ்வட்டத்தினை உடைக்கும் அளவுக்கு, தமது கருத்தினை உரக்கக் கூறும் அளவுக்கு துணிச்சல் இருந்தது என்பது கேள்வியே!

    இங்கேதான் எமது பாரதியார் உயர்ந்து நின்றார். அனைவருக்குள்ளும் தம்மை வேறுபட்டவராகக் காட்டுவதிலும் உணர்ந்துகொண்ட உண்மைகளை உரக்கக் கூறுமளவுக்கு துணிச்சல் கொண்டிருப்பதிலும் தனித்து விளங்கினார்.

    ஒரு சமுதாயம் முன்னேறிவிட்டது என்பதையோ, நாகரிகம் அடைந்துவிட்டது என்பதனையோ எடுத்துக்காட்ட அணிந்துகொள்ளும் ஆடைகளை மாற்றிக்கொள்வதோ, அன்றி தோற்றத்தை மாற்றிக் கொள்வதோ ஆதாரமாகிவிடாது. இது ஆண்கள், பெண்கள் இரு சாராருக்கும் பொருந்தும். கலாச்சார முன்னேற்றம், நாகரிக முன்னேற்றம் என்பன பற்றிய தவறுதலான புரிதலுக்கு இன்றைய இளைய தலைமுறை ஆளாகிவிட்டதோ எனும் ஓர் அச்சம் எழாமலில்லை.

    பெண்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய ஒரு வளர்ச்சியை இன்றைய உலகின் மாற்றங்கள் எந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றது என்பது விவாதத்துக்குரிய விடயம்.

    முன்னேற்றம், நாகரிகம் என்பவற்றை மேற்குலக நாடுகளின் வளர்ச்சி எனும் எடைக்கல்லிலே நிறுத்துப் பார்க்கும் மனோபாவமே இன்றைய எமது பின்புல இளைய தலைமுறைகளிடம் பெரும்பான்மையாக குடிகொண்டிருக்கிறது போன்ற ஒரு நிலையே காணப்படுகிறது…

    இன்றைய உலகில் பெண்களின் நிலையை, பெண்களை ஒரு ஆபாசப் பொருளாகப் பார்க்காமல், சக மனித வர்க்கமாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பெரும்பான்மையான ஆண்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதும் கேள்வியே!

    நாம் கடந்து வந்த காலப் பகுதி தனக்குள் புதைத்துக்கொண்ட, தம்மைப் பலமிக்க ஆண்களாக எண்னிக்கொண்டவர்களின் செய்கைகள் பல இன்று தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன “நானும் கூட (மீ டூ)” எனும் ஒரு இயக்கத்தினூடாக இன்று சமுதாயப் பெரிய மனிதர் பலரின் செய்கைகள் சமூக ஊடகங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன…

    இதன் மூலம் இன்றைய சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. இன்றைய உலகில் பெண்களின் சம உரிமை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று கூறும் அதேவேளை திறமையிருந்தும் உயர்நிலையை அடையப் பல பெண்கள் வலிமை மிக்க பெரிய மனிதர்களுக்குத் தம்மை இழக்க வேண்டிய நிலையில் இருப்பது வெளிக்கொணரப்பட்டிருக்கிறது..

    அதே சமயம் இந்தச் சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்கி, சில பேர்களின் கெளரவத்தைக் குலைக்கும் வகையில் சில பெண்கள் நடந்துகொள்வதும் உண்மையே! எது எப்படி இருப்பினும் பெண்களின் வளர்ச்சிக்கான காரணிகளுக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளின் அளவு குறைந்திருக்கிறதே தவிர முட்டுக்கட்டைகள் குறையவில்லை,

    இன்றும் தமது திறமைகளை வெளிக்காட்டியும் பெண்கள் எனும் ஒரே காரணத்தினால் முன்னேற முடியாமல் தவிக்கும் பலரை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாகத்தான் உள்ளது. இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஐக்கிய இராச்சியத்திலே பெண்கள் வாக்குரிமை பெற நடத்திய போராட்டங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்றவை. அத்தனை பலமிக்க போராட்டங்களின் மூலம் வாக்குரிமைகளைப் பெற்றும் கூட இன்றுவரை பல சூழல்களில் தமது திறமைக்கேற்ற தகுதிகளைப் பெறுவதற்குப் போராடும் நிலையே இன்றும் உள்ளது.

    இதற்கு இன்றைய தமிழுலகப் படைப்பாளிகளாக எமது கடமைகள் என்ன? இத்தகைய ஒரு நிலையை இளைய தலைமுறைகளின் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடமை அனைத்துப் படைப்பாளிகளுக்கும் உண்டு. தமிழிலக்கிய படைப்புகளொரு புதுப்பரிமாணம் எடுக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்திலே இருக்கும் இச்சமயத்தில், பெண்ணியக் கண்ணோட்டத்தில் ஆண் எழுத்தாளர்களின் பார்வைகள் அமைய வேண்டிய தேவையைச் சர்வதேச பெண்கள் தினம் எமக்கு நினைவூட்டுகின்றது.

    இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, பாரதியார் முதற்கொண்டு என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் வரை எத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது நான் சொல்லிப் புரிய வேண்டிய ஒன்றல்ல.

    சர்வதேசப் பெண்கள் தினம் ஏன் எனக் கேட்பதை விடுத்து பெண்களுக்கான உரிமைகளில் உள்ள விரிசல்களை வெளிக்காட்டும் படைப்புகளை வெளிக்கொணர முயல்வோம். இதுவே இச்சர்வதேச பெண்கள் தினத்தில் அனைத்துப் பெண்களுக்காகவும் நாம் செய்யும் கடமை.

    Share
  • குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

    குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

    அண்ணாகண்ணன்
     
    கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல், இந்தத் தலைமுறையில் பிறந்த நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியலுடனும் தொழில்நுட்பத்துடனும் பிறந்துள்ளீர்கள் என்று என் உரையைத் தொடங்கினேன்.
     
    சென்னை, வேப்பேரியில் உள்ள குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பில் 20.02.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். இணையமும் தமிழ்ப் பயன்பாடும் என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடத்தினேன். கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன், நிகழ்வைத் திட்டமிட்டு நடத்தினார். பேரவையின் செயலாளர் பூஜா எனக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
     
     
    அரங்கில் மாணவியர் இருவரை அழைத்து, அவர்களின் செல்பேசியில் குரல்வழியே தட்டச்சு செய்ய வைத்தேன். இணையத்தை அவரவர் தாய்மொழியில் அணுக வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். இணையத்தில் தமிழுக்கு உள்ள வாய்ப்புகளை விளக்கினேன்.
     
     
    கணித்தமிழ்ப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குச் சான்றிதழ்களை வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகும் மாணவியர் தங்கள் கேள்விகளைத் தொடுத்து உரையாடினர்.
    Share
  • குழந்தைகளைக் கையாள்வது எப்படி?

    குழந்தைகளைக் கையாள்வது எப்படி?

    நிர்மலா ராகவன்

    (பழகத் தெரிய வேணும் – 6)

    வீட்டோடு வேலைக்கு ஆள் வைத்திருந்தால், நமக்கு வேலை மிச்சம். ஆனாலும், வளரும் குழந்தைகளிடம் பொறுப்புணர்ச்சி வராது.

    இரண்டு வயதுக் குழந்தைகள் தாயைப் பின்தொடரும்போது, சிறு வேலைகளை ஏவலாம்.

    “தம்பிப்பாப்பா குளிச்சதும், துண்டு எடுத்துக் குடுக்கறியா? சமத்து!”

    அருகிலேயே இருக்கும் பொருளை பெருமையாக எடுத்துக் கொடுப்பாள் குழந்தை. இன்னொரு பாராட்டு அவசியம்.

    ஆட்டா மாவில் பாம்பு

    சப்பாத்தி இடுவது குழந்தைகளுக்குப் பிடித்த வேலை. எவ்வளவு பிடிக்கும் என்றால், உருண்டையான மாவு பெரிதாகிக்கொண்டே போகும் அதிசயம் அவர்களுக்கு உவகை ஊட்ட, நாம் `போதும், போதும்’ என்று அலற, குழவியில் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள்! ஒட்டிய மாவை பிய்த்து எடுப்பது வேண்டாத வேலை.

    இதைத் தவிர்க்க, நான் முதலிலேயே மகளிடம் ஒரு சிறு ஆட்டா உருண்டையைக் கொடுத்து, “பாம்பு பண்ணு,” என்பேன்.

    களிமண்ணைப்போல் தரையில் தேய்த்து, ஏதேதோ பண்ணி திருப்தி அடைந்தபின், மாவை வீணடித்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன், அழுக்கினால் நிறமே மாறிவிட்ட பொருளை, “இதிலே சப்பாத்தி பண்ணும்மா,” என்று கொடுப்பாள்!

    “வேண்டாம். நீயே வெச்சுக்கோ,” என்று அலற வேண்டியிருக்கும்.

    ஏதாவது வேலை கொடுத்தால், அதை எப்படிச் செய்வது என்று முதலில் நாம் செய்து காட்டவேண்டும். அதேபோல் அவர்கள் செய்வார்கள் என்பதில்லை. வயது, அனுபவம் இதெல்லாம் பெரியவர்களைப்போல் இருக்குமா?

    அவர்கள் முனைந்து செய்யும்போதே நச்சரித்தாலோ, கேலி செய்தாலோ அல்லது இரைந்தாலோ, அடுத்தமுறை ஏன் வருவார்கள்! வயதுக்கேற்ற வேலை கொடுத்தால் இப்படி ஆகாது. விளைவு எப்படி இருந்தாலும், முயற்சி செய்ததற்காகப் பாராட்டவேண்டாமா! அப்போதுதான் அடுத்தமுறை பெருமையுடன் உதவ வருவார்கள்.

    “வேலையை நன்றாகச் செய்து முடி, சாக்லேட் குடுக்கறேன்!” என்று ஆசை காட்டுவது லஞ்சம் வாங்கப் பழக்குவதுபோல். எப்போதாவது கொடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையுமா!

    மரியாதை ஏனில்லை?

    ‘குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று எதையும் பெரிதுபடுத்தாத பெற்றோர் (அல்லது தாத்தா-பாட்டி) முக்கிய காரணம்.

    பெற்றோருக்குப் போதிய அவகாசம் இல்லாததால், குழந்தைகள் ஒரு நாளில் பெரும்பகுதியை பணிப்பெண்ணுடன் கழிக்க நேரிடுகிறது.

    சம்பளத்துக்கு வேலை செய்பவளைப் பெற்றோர் கண்டிக்கும்போது, அவள்மீது வைத்த மரியாதை அறவே அற்றுப்போய்விடுகிறது. அதன்பின், தம் அதிகாரத்தால் பெருமை ஓங்க, எல்லாரிடமும் மரியாதையில்லாது நடந்து கொள்கிறார்கள், பெற்றோர் உள்பட.

    ஆசிரியர்களின் பாடும் திண்டாட்டம்தான்.

    தான் கற்ற தற்காப்புக் கலையை சிறுவர்களுக்குப் போதிக்கும் இளைஞன் ஒருவன், ‘இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு டிஸிப்ளினே கிடையாது! எது சொன்னாலும் கேட்பதில்லை. நாங்கள் இப்படி இருக்கவில்லையே!” என்று அயர்ந்தான்.

    உடனிருந்த ஒருவன், “அவர்களுக்கு வீட்டில் யாரும் மரியாதை கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்!” என்றான். தான் முன்னுக்கு வர பிறர் எடுத்த முயற்சிகள் அவனுக்கு விளங்க, அவர்கள்மீது நன்றி பெருகியது.

    வீட்டில் நல்லொழுக்கத்தைப் போதிக்காமல் போய்விடும்போது, வேறு சூழ்நிலைகளில் எவர் முயன்றாலும், அது அவ்வளவாகப் பயனளிப்பதில்லை.

    திரைப்படங்களால் பாதிப்பு

    குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் கற்றுக்கொடுக்க நம் தமிழ்த்திரைப்படங்கள் ஆவன செய்கின்றன.

    ஆறுவயதுச் சிறுவன் அழுகைக்குரலில் உரக்கச் சொன்னான்: “நான் விமலா ஆன்ட்டியை உதைக்கப்போறேன்!”

    அதிர்ந்து, தம் உடல் மொழியாலேயே அவனைத் தடுத்தார்கள் பெற்றோர்.

    “பின்னே என்ன! நான் கீழே ஒக்காந்து விளையாடினா, எழுந்திருக்கச் சொல்றா!”

    வீட்டு பணிப்பெண்ணை உறவுமுறை வைத்து அழைக்கக் கற்றிருந்தான். ஆனால், அவள் வீட்டைக் கூட்டிப்பெருக்கும்போது, தன்னை ஏன் விலகச் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

    அதை விளக்கி, வயதில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று எடுத்துச்சொன்னார்கள்.

    இப்படிச் செய்யாது, குழந்தைகளை மரியாதையின்றி நடக்கப் பழக்கும் வேறு சிலரை என்னவென்று சொல்வது!

    கதை

    தன் காரில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட இரு சிறுவர்களுடன் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். தன் பக்கத்தில் வரும் எல்லா காரோட்டிகளையும்பற்றி, ‘முட்டாள்! எப்படி ஓட்டுகிறான்! பெண் டிரைவராக இருக்கவேண்டும்! இல்லை, அம்மாவிடமிருந்து கற்றவனாக இருக்கவேண்டும்!’ என்று பலவாறாக விமரிசித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கம்.

    அப்படிச் செய்தால், தன் திறன் எவ்வளவு சிறப்பானது என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்திருப்பார். அவர்களைச் சிரிக்கவைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம்.

    தன் போக்கு அவர்களையும் பார்ப்பவர்களை எல்லாம் மட்டமாக எடைபோடச் செய்யும் என்பதை அவர் உணரவில்லை. சற்று வயதானதும், அந்த தந்தையைப்பற்றியே அவதூறாகப் பேசிச் சிரிப்பார்கள் அக்குழந்தைகள்.

    பிறரிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்று ஆராயக் கற்றுக்கொடுப்பதைவிட, அவர்களிடம் இருக்கும் சில நற்குணங்களைப் பாராட்டலாமே!

    மூன்றே வயதான குழந்தைகூட காலணிகளை அடுக்கி வைக்கும். முதலில் அன்பான வார்த்தை, பிறகு ஒரு பாராட்டு போதும்.

    குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வாறு வயதுக்கேற்ற வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தால், சகோதர சகோதரிகளுக்குள் போட்டி ஏன் வருகிறது!

    வரவழைத்துக்கொள்ளும் மறதி

    வேலையிலிருந்து தப்பிக்க குழந்தைகள் என்னென்னவோ யுக்திகளைக் கடைப்பிடிப்பார்கள்.

    தாங்கள் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். மறந்துவிட்டதுபோல், போட்டுவிட்டுப் போவார்கள். தண்டனையாக, SINK -ல் இருக்கும் எல்லாப் பாத்திரங்களையும் சுத்தப்படுத்துவது அவர்கள் வேலை என்று ஒரு விதி கொண்டுவாருங்கள். பின் ஏன் மறக்கிறார்கள்!

    மறதி பெரியவர்களுக்கும்தான்.

    மகளுக்கு மறுநாள் பரீட்சை என்பதை மறந்து, வேலை ஏவுகிறீர்களா?

    உங்கள் தவற்றுக்காக `ஸாரி’ என்றுவிடுங்கள்.

    பள்ளிப்பரீட்சை சமயங்களிலோ, நோய்வாய்ப்பட்டிருந்தாலோ வேலையிலிருந்து விலக்கு. நம் நியாயம் புரிந்து, அவர்களும் ஒத்துழைப்பார்கள்.

    கர்வம் எழாதிருக்க

    ‘நான் புத்திசாலி. மிக உயர்வானவன்!’ என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஏன் படிந்துவிடுகிறது?

    பெற்றோர் ஓயாது அவனெதிரிலேயே அவனைப் பிறரிடம் புகழ்ந்து பேசுவது. சற்று பெரியவன் ஆனதும், தான் பெற்றோரைவிட மேலானவன் என்ற கர்வம் வந்துவிடும். பின் ஏன் அவர்களை மதிக்கிறான்!

    ஆறு வயதிலேயே கீழ்க்கண்டவாறு புத்தி புகட்டி வளர்ப்பது நல்ல பலனளிக்கும்;

    “உன் பின்னல் நீளமாக, அழகாக இருக்கிறது. (இது பெண்களுக்கு). நீ புத்திசாலியாக, விரைவுடன் செயல்படுபவனாக — இப்படிப் பல வழிகளில் சிறந்தவனாக இருக்கலாம். அதையெல்லாம் எண்ணி கர்வப்பட்டால் அத்தன்மைகள் உன்னை விட்டுப் போய்விடும். பிறர் உன்னைப் புகழும்போது நன்றி சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு”.

    சிறு வயதில் மனதில் படிந்தது என்றும் மறக்காது. எந்த உயரத்தை எட்டினாலும், கர்வமின்றி, பிறர் பழக விரும்புகிறவர்களாக வளர்வார்கள்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-16

    குழவி மருங்கினும் கிழவதாகும்-16

    மீனாட்சி பாலகணேஷ்

    (பூணணிதல்)

    அரிதாகப் பாடப்பட்ட பருவங்களின் வரிசையில் நாம் காணப்போகும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் ‘பூணணிதல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரேயொரு நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இப்பருவமானது சிறுதேர்ப்பருவத்தின் பின்பு அமைத்து வைக்கப்பட்டுள்ளது.

    ‘பத்திற் பூணணி’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது. இதனைப் பத்தாண்டு எனக்கொள்ளல் வேண்டும். ஏனெனில் அடுத்த பருவத்தைப் ‘பன்னீராண்டினில்’ என விவரிக்கின்றது இந்நிகண்டு. ஆகவே இது பத்துமாதத்தில் பூணணிதல் ஆகாது. பத்தாண்டில் அணிவதே. மேலும் இவ்வயதில்தான் குழந்தைகள் அழகான உடைகள், அணிமணிகள் அணிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர். ஆகவே நாம் காணப்போகும் பாடல்கள் கூறுவனவையும் பத்தாண்டுகள் நிரம்பிய மகவிற்கே பொருந்தும்.

    இவ்வயது மக்கள், அவர் ஆண்மக்களாயினும் அல்லது பெண்மக்களாயினும், அழகழகான அணிமணிகளை அணிந்துகொள்ள விரும்புவர். அதற்கேற்பத் தாய்மாரும் அணிமணிகளை அவர்களுக்கு அணிவித்து அழகுபார்க்கவும் விரும்புவர். குழந்தைப்பருவத்தின் ஒரு இனிய நிகழ்வு இதுவானமையால் இதனை ஒரு பருவமாகவே பாடினர் போலும்! ஆயினும் கதிர்காமப் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இப்பருவப் பாடல்களைக் காண்கிறோம்.

    பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பிரபந்தத் தொகுப்பில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட நூற்களில் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே இவ்வினிய பருவத்தைப் பாடிப்போற்றியுள்ளன.

    மற்ற பல தோத்திர நூல்களில் இத்தகைய பாடல்கள் பலவற்றைக் காணலாம். எடுத்துக்காட்டாக,

    ‘பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
                       பாடகம் தண்டை கொலுசும்
             பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட

    பாதச் சிலம்பினொளியும்2…..‘ என காமாட்சியன்னை துதிப்பாடல் ஒன்று அன்னை அணிந்துள்ள அணிமணிகளை வரிசைப்படுத்துகின்றது. இது குழந்தை மீதான பாடலன்று.

    ‘மணியே மணியினொளியே ஒளிரும் மணிபுனைந்த
                     அணியே அணியும் அணிக்கழகே3 ….’ என்று அபிராமி அந்தாதி ஏத்துகின்றது.

    ‘இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
                       டிரைந்திடு மரிச்சிலம்பும்
              இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொ
                       னெழுதும்செம் பட்டு வீக்குந்
             திருவிடையு முடைதார மும்மொட் டியாணமுஞ்
                       செங்கைப் பசுங்கிள்ளையுந்
              திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
                       திருநாணு மழகொழுக4….

    எனும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சிறுமியான அன்னை அணிந்துள்ள கிண்கிணி, சிலம்பு, மேகலை, உடைதாரம் எனப்படும் அரையில் அணியும் அணிகலன், ஒட்டியாணம், தரள உத்தரியம் எனும் முத்துக்கள் இழைத்த மேலாடை, மங்கலத்திருநாண் ஆகிய அணிகலன்களை கேசாதிபாதமாக அழகுற வருணிக்கின்றது; இது பொன்னூசற் பருவப்பாடல்! பூணணிதல் எனவோர் பருவமன்று.

    ‘பொன்னே வருக, பொன்னரைஞாண் பூட்டவருக, சிறுசதங்கை புனைய வருக,5 என்று பழனிப் பிள்ளைத்தமிழும் வருகைப்பருவத்திலேயே குழந்தையை விதம்விதமான அணிகலன்களைப் பூட்டி அழகுபார்க்க அழைப்பதாக அமைந்துள்ளது.

    இதனின்று பெறும் கருத்து, கடவுளர்க்கும், கடவுளர்களாக நாம் பார்க்கும் குழந்தைகளுக்கும், மேலும் குழந்தையாக்கி நாம் கொண்டாடிப் போற்றும் கடவுள்களுக்கும் விதம்விதமான பலவகை அணிகளைப் பூட்டிப்பார்த்து மகிழ்வது மானிடரின் உளவியல் வகையிலான இயல்பும் அவருள்ளத்துத் தோன்றும் அன்பும் என்பதாகும்.

    இனி கதிர்காமப் பிள்ளைத்தமிழின் முதற்பாடலைக் காண்போம்: முதலிரு அடிகளில் கதிர்காமம் எனும் தலத்தின் பெருமையைக்கூறிவிட்டுப் பின் அங்கு உறையும் முருகப்பெருமானுக்கு என்னவென்ன அணிகளைப் பூட்டி அழகு பார்ப்போம் எனக் கூறும்விதம் நயக்கத்தக்கதாம்.

    ‘வலிமைமிக்க இளைய குறவன் ஒருவன் நிலத்தை உழுகின்றான்; அவனுக்குப் பசிதீர வேண்டுமளவுமட்டும்  உண்பதற்காக நெய்யும் பாலும் சேர்த்து வட்டித்த வெப்பமுடைய தினைப்பொங்கற் சோற்றினை அவன் மனையாளான குறமகள் கொண்டு செல்கின்றனள். செல்லும்வழியில் முனிவரொருவர் கண்களைமூடி, தம் மனத்தை ஒடுக்கி இறைசிந்தனை வயப்பட்டு உணவும் கொள்ளாது பழமையானதொரு வேங்கைமரத்தடியே அமர்ந்துள்ளார். தாமே எடுத்து உண்ணவும் இயலாது உடல் தளர்ந்துபோன அம்முனிவருக்கு குறத்தியானவள் தான் எடுத்துச்செல்லும் உணவை வாயில் அருத்துவிக்கிறாள். இதனையறிந்த கணவனும் சினம்கொள்ளாமல் உள்ளம் மகிழ்கின்ற இயல்புடையவன். அத்தகையோர் வாழும் கதிர்காமத்தில் உறைபவனே!

    (இதன் உள்ளுறைபொருள் கருத்தில் கொள்ளத்தக்கது. இயலாமை நிறைந்தவர்களுக்கு- இங்கு தவத்தினால் மெலிந்து உடல் குறுகிப்போன முனிவருக்கு- பணிவிடை செய்து, உணவளித்தல் ஒரு நன்மை பயக்கும் ஒழுக்கம் மிகுந்த செயல் என்பதாகும்).

    ‘தேவர்களுக்குமில்லாத கட்டழகு வாய்ந்தவன் நீ! உன்னழகிற்கு ஒப்பார் ஒருவருமில்லை. இருப்பினும் உனக்கு மேலும் அழகுசெய்து பார்க்க எண்ணும் ஆசையும், பேதைமைக்குணமும் இல்லாத மானிடருமுளரோ?

    ‘ஆதலால், இவ்வுலகத்தார் பெரிதெனக்கருதும் சிறு கைக்கடிகாரம் (பொழுதறிபொறி)- அதனைப் பொன்னாலாகிய தொடர் சங்கிலி பொருத்திய காப்பில் உன் கையினில் பூட்டிக்கொள்வாயாக! கமுகுபோன்ற கழுத்திற்கு இசைந்த முத்தாரத்தையும் விட்டுவிட்டு ஒளிசெய்யும் பொன்னாரத்துடன் பூட்டிக் கொள்வாயாக!’ என்று தனக்கே உரிய அன்புடன் தாய் வேண்டுகிறாள்.

                செம்புலமு ழாநிற்கு மைந்துமலி புனவன்றெ
                                விட்டக்கொ டிச்சிகொடுபோந்
                தினையினது வெய்துநெய்ப் பாற்பொங்க னெறியிடைத்
                                திறவாது கண்முகைத்துத்
             ……………………………………………..

             உம்பரொரு வர்க்குமில் கட்டழகு னக்குண்டு
                                கப்பிதற் கழகுமுண்டோ?
                       …………………………………………….

             இம்பரது பொழுதறிபொ றிப்பூட்டு கைப்பூட்டி
                                ணைப்பொலந் தொடிபூண்கவே
             யிறைவ!கமு கங்கமுத் தியையுமுத் தாரமொடி
                                மைப்பொலங் கொடிபூண்கவே6!

    கைக்கடிகாரம் தற்காலத்திய கண்டுபிடிப்பு. இதனையும் இப்பாடலில் அழகுறச் சேர்த்துக் கூறியுள்ளார் புலவனார். அழகுக்காக மனிதர்கள் பொன்னாரம் அமைத்த கடிகாரத்தை அணிவது உண்டு.

    வயிரங்களால் இழைக்கப்பட்ட ஒலிசெய்யும் வளைவுபொருந்திய காற்சிலம்பு, அதனையணிந்த முருகனின் திருவடிகளில் சிந்தையைப் பதித்து நிற்கும் அடியார்களின் உள்ளத்தைத் தம்பால் வளைத்து இழுத்துக் கொள்கின்றதாம். முருகப்பிரானின் திருமார்பிற் சேரும் வள்ளியம்மை, அவ்வமயம், அத்திருமார்பில் விளங்குவதனால் மிகுந்த அழகுபெற்று விளங்கும் பதக்கத்தில் பதித்த தனது நோக்கினை மீட்க இயலாதவளாகி நின்றனள். மேலும் இந்திரன் (முகிலூர்தி) அளித்த மூன்றுவித மணிகளாலான மாலை, பிரமன் அளித்த நான்மணிமாலை, முருகனது இளவல்களான வீரவாகு தேவர் முதலான ஒன்பதுவீரர்கள் விளங்கும் ஒன்பது இரத்தினங்களின் மணிமாலை, தயிரைத் திருடித்தின்ற மாமனான திருமால் கொடுத்த அசையும் பன்மணிமாலை, ஆண்வடிவான சிவபிரானும், பெண்வடிவான உமையன்னையும் சார்த்துகின்ற புன்னகைமாலை, ஆகியனவற்றை உயிர்கள் அனைத்தும் இன்புற்று இருக்குமாறு நீ, அவையவற்றின் உணர்வினைக் களவாடிக்கொண்டு மகிழ்விக்குமாறு புனைந்துகொண்டு அருளுவாயாக! உலகினையே நீ தாங்கி நிற்கும் தன்மையை உணர்ந்த ஆன்றோர் உன் வடிவினைத்தம் உள்ளதிற்கிருத்தி உருகுமாறு இவ்வணிகளைப் புனைந்து அருளுவாயாக!

                வயிரம் பதித்துத் தெருளுள்ளம்
                                வளையவ ளைக்கு நரன்ஞெகிழம்
                       வள்ளிக் கொடிகண் மணிபதிக்கு
                                மார்பிற்ப தக்க முகிலூர்தி
             ………………………………………………

             தயிருண் டோடிய நல்லம்மான்
                                தந்த துயல்பன் மணிமாலை
                       ……………………………………….

             உயிரின் புறுகதிர் மலைக்குமரா!
                                உணர்வு திருடப் புனைந்தருளே!
             உலகினை யணியும் நின்வடிவ
                                முரவோர் வருடப் புனைந்தருளே7!

    மேலான கருத்துக்களையும் வேதாந்தச் சித்தாந்தத் தொன்மங்களையும் தன்னுள் அடக்கிய பாடலிதுவாகும். ஏனெனில் ஒவ்வொரு அணியும், அணியின் உயர்வுக்கும் அழகுக்கும் மட்டுமேயின்றி, அது பொருந்தியுள்ள இடத்தின் பெருமையைக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, காற்சிலம்பு அழகானதே. அதனை நோக்குபவர் கருத்தும் சிந்தையும் வளைந்து அதனையணிந்துள்ள அண்ணலின் திருவடிகளில் தங்குகின்றன எனும் கருத்தினைப் பெறலாம்.

    தொடரும் மூன்றாம் பாடல் புலவர் வாக்காகின்றது. உலகியலில் எதற்கெல்லாம் எவை அணி எனக்கூறுகிறார்:

                ‘கண்ணிற்கு அணியானது கருணைநோக்கு உடைத்தல்;

                (குறள்: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
                                    புண்ணென்று உணரப் படும்8)

    கல்விக்கு அணி கற்றதனைக் குற்றமற மொழிதல்; எண்ணுவதற்குள் அணியானது அருட்தன்மையே! இந்த மண்ணிற்கு அணி கதிர்காமக் கோட்டமாம்; நூல்களுக்கு அணிசெய்வன உவமங்களாகும்; பெருமைசேர்ந்த அணி பொறுமை; மனையறத்தின் மாட்சிக்கு அணியாவது மகவே!

                (குறள்: மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
                                     நன்கலம் நன்மக்கட் பேறு9).

    நாணுடைமை என்பது நிறைமொழி மாந்தர்க்கட்கு அணி; இளைஞர்கட்கு அணி பணிவு; எமது கண்களுக்கு நின் திருவடியே மெய்யான அணியாகும்! உனக்கு அடியார்களாகிய யாம் பொற்பணி அணிவித்தோம்,’ என்கிறார்.

                ‘கண்ணிற் கணிகண் ணோடுதன் மாந்தர்
                       காண்டக விரைவினவுங்
                 கல்விக் கணிபொருள் கசடற, மொழிதல்
                       கருதற் கணியருளே
             ……………………………………………..

             ………………………………..மனையற
                       மாட்சிக் கணிமகவே
             விண்ணிற் கணிநீ நின்திரு மெய்க்கணி
                       வினையேம் பொற்பணியே
                 வேசறு மடியார் விழிவாய் பருகவி
                       துத்தனர் பொற்பணியே.’10

    என்பன இப்பாடல் வரிகளாகும். மிக்க பொருள்செறிந்த கருத்துக்களை முன்வைக்கும் பாடலிதுவாம். திருக்குறள் கருத்துக்கள் பலவற்றை  இவை தெரிவிப்பதனைக் காணலாம்.

    இப்பருவத்துப் பாடல்கள் மூன்றேயாகினும் கருத்துச் செறிவில் மிக உயர்ந்து பல உள்ளார்ந்த சிறப்பான கருத்துக்களைக் கூறுகின்றன. இவற்றை ஆன்றோர் வாயிலாகக் கேட்டுப் பொருளுணர்வது சாலச் சிறந்ததாகும்.

                                                                                                                                                                                                           (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு- பிங்கல முனிவர்
    2. காமாட்சியன்னை துதி
    3. அபிராமி அந்தாதி- அபிராமி பட்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்
    6,7,10. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
    8, 9. திருக்குறள்- திருவள்ளுவர்.

    Share
  • குடவோலை கல்வெட்டு விளக்கம்

    குடவோலை கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    மக்களில் இருந்து மக்களே ஒருவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் முறையே இந்நாளைய குடியாட்சி ஆகும். இந்த முறை நமக்கு மேலை நாட்டில் இருந்து அறிமுகமானது. இதற்கு முன் நம் நாட்டிலேயே பண்டு குடவோலைத் தேர்தல் முறையில் ஊராட்சிக்கான குடியாட்சி நடைபெற்றது. இதற்கு உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலின் இரண்டு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. இதில் சதுர்வேதி மங்கலமான உத்தரமேரூரில் வாழ்ந்த பிராமணர்கள் தம்மூர் வாரியத்திற்காக தம்மில் இருந்து வாரிய உறுப்பினரை தேர்ந்தெடுத்த முறை பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

    இதனை குடியாட்சியே அல்ல அது பிராமண ஊர்ச் சபைக்கான பிராமணக் குடவோலைத் தேர்தல் என்று மறுப்பாரும் உண்டு. மேலும் பொது மக்கள் விரும்பி ஓட்டளிக்க வாய்ப்பு இல்லாத தேர்தல் முறை என்கின்றனர். இவர்கள் கூறும் காரணம் உண்மை தான் என்றாலும் அதுவும் ஒரு வகைக் குடியாட்சி தான். ஏனென்றால் ஒரு ஊரின் வாரியங்களுக்கு அரச அதிகாரி இல்லாமல் அவ்வூரின் குடிகளில் இருந்தே வாரியப் பணியை நிறைவேற்ற  பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வாரிய உறுப்பினருக்கான தகுதியும், கட்டுப்பாடும் வரையறுக்கப்பட்டு வரையறைக்கு தக தகுதி உள்ளவரே வேட்பாளராக குடவோலையில் பெயர் எழுதி இடப்பட்டனர். ஒரு குடத்தில் உள்ள பல பெயரில் ஒருவரது பெயர் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். குடும்பு என்பது ஒரு சிறு அலகு தான் இதாவது, ஒரு கூட்டுக் குடும்பம் அல்லது குழுவைக் கொண்டது. இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர் போட்டியிட்டாலும் அந்த குடும்பில் பெயர் எழுதப்படுவோர் அனைவருமே வரையறைப்படி தகுதி பெற்றவர் தான். ஒரு குடும்பின் தகுதி உள்ள, விருப்பம் உள்ள உறுப்பினர்கள் அத்தனை பேர் பெயரும் ஒரே குடத்தில் தான் இடப்படிகின்றன. அதில் ஒருவர் பெயரை மட்டுமே தேர்ந்தெடுக்க குடவோலை தேர்தலே போதுமானது. இதற்கு பெருவாரியான மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லை. இதில் செலவு குறைவு. எனவே பொது மக்கள் விருப்பப்படி வேட்பாளர் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கருத்து மதிப்பிழந்து போகின்றது. மக்களில் இருந்து ஒருவர் என்ற முறையில் இது ஒரு குடியாட்சி முறை தான்.

    உத்தரமேரூர் இரண்டாம் கல்வெட்டில் குடும்பு என்பது குடத்தில் இருந்து பெயர் ஓலையை எடுக்கும் முறை என்று இன்னொரு பொருளிலும் குறிக்கப்படுகின்றது (கொடு < குடு > குடும்பு). உத்தரமேரூர் போன்ற சதுர்வேதி மங்கலங்களில் சிவன் கோவில், விஷ்ணு கோவில்களைச் சுற்றி மொத்தமே 40 + 40 = 80 பிராமண வீடுகள் தாம் அமைந்திருந்தன. ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குடும்பில் இருந்து வாரிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற இரண்டாம் கல்வெட்டின் கட்டுப்பாடு மூலம் ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குடும்பை தவிர்த்தால் 80 – 30 = 50. எனவே குடும்பு என்பது குடும்பத்தை அல்லது கூட்டுக் கூடும்பத்தை தான் குறிக்கின்றது என்பது தெளிவு. அதே போல் பிடாகைப் பார்ப்பனச் சேரிகளில் மொத்தமே 8-10 வீடுகள் தாம் அமைந்திருக்கும். அங்குள்ள 50 பேரில் இருந்து தான் ஒருவர் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இப்படி குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஆண்டு வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் ஆகிய பல்வேறு வாரியங்களின் உறுப்பினராக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்கள் 360 நாள் வாரியப் பொறுப்பாற்றி முடிந்த பின் மீண்டும் இவ்வாரியங்களுக்கு பழையபடியே குடவோலைத் தேர்தல் முறையில் வாரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தரமேரூரின் இரண்டாம் கல்வெட்டு குடவோலைத் தேர்தல் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசுகின்றது. இதில் உள்ள தகுதிகளும் கட்டுப்பாடுகளும் இக்காலக் குடிநாயக ஆட்சிக்கும் பொருத்தமுள்ளவையாய் உள்ளன.

    இதே போல் நெல்லை மாவட்டம் மானூரில் உள்ள அம்பலவாணர் கோவிலிலும் மாறன்சடையன் காலத்தில் ஊர்ச்சபை உறுப்பினருக்கு இருக்க வேண்டிய தகுதி கட்டுப்பாடுகளைச் சுட்டும் கல்வெட்டு உள்ளது. அதில் குடவோலைத் தேர்தல் பற்றி எந்த குறிப்பும் இல்லை. பிற தளங்களில் இம்மூன்று கல்வெட்டுகள் குறித்து விரிவான விளக்கம் இல்லாத குறையைப் போக்க எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் கீழே இம்மூன்று கல்வெட்டுகளின் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

    செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர கேசரிபம்மர்க்கு யாண்டு ப[ன்]னிர[ண்]டு ஆவது   உத்திரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களூர் ஸ்ரீ முகப்படி ஆக்ஞை
    2. யினால்த் தத்தநூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக் காலும் ஸம்வத்ஸர வாரியமுந் தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தைய் [செய்]
    3. த பரிசாவது குடும்பு முப்[பதாய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி கா  னிலத்துக்கு மேல் இறை நிலம் உடையாரை, தன் மனையிலே அ
    4. கம் எடுத்துக் கொண்டு இருப்[பானை], அறுபது [பி]ராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேத[த்]திலும், ஸாஸ்த்ரத்திலும், கார்யத்திலும் நிபுணரென்னப் பட்டி
    5. ருப்பாரை அர்த்த ஸௌஸமும் ஆத்ம ஸௌஸமும் உடையாநய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு
    6. அணிய பந்துக்கள் அல்லாத்தா[ரைக்] குடவோலைக்குப் பேர் தீட்டி சேரி வழியேய் திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராமாறு ஏது முருவறியாத்தான் ஒரு
    7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்துப் பன்னிருவரும் ஸம்வத்ஸர வாரியமாவதாகவும் அதின் மின்பேய் தோட்ட வாரியத்துக்கு மேற்படி குடவோ
    8. லை வாங்கிப் பன்னிருவரும் தோட்ட வாரியமாவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியமா
    9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம்(ஞ்) செய்கின்[ற] மூன்று திறத்து வாரியமும், முந்நூற் அறுபது நாளும் நிரம்[ப] வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வ்யவஸ்தை யோ[லை]ப்படியேய் குடும்புக்குக் குடவோலையிட்டுக் குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியஞ் செய்தார்[க்]கு பந்துக்களும் சேரிகளில் அன்நோந்யம் _ _ __  அவரு
    10. ம் குடவோலையில் பேர் எழுதி இடப் படாதாராகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்ப(த்)து குடவோலை இட்டு சேரியால் ஒருத்தரைக் குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்ச[வார] வாரியமாவிதாகவும் அறுவர் பொன் வாரியமாவதாகவும் ஸம்வத்ஸர வாரி[ய]ம் அல்லா(த்)த
    11. வாரியங்கள் ஒருக்கால் செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாத(தி)தாக[வு]ம். இப்பரிசே யிவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்த்ரன் சக்ரவத்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேஸரி வம்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட
    12. ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தநூர் மூவேந்த வேளாநுடனிருக்க நம் க்ராமத்து துஷ்டர் கெட்டு ஸிஷ்டர் வர்த்தித்திடுவாராக வ்ய[வ]ஸ்தை  செய்தோம் உத்தர மே[ரு]ச் சதுர்வேதி மங்கலத்து ஸபையோம்.

    ஸ்ரீ முகம் –அரசர் முதலானோரிடம் இருந்து வரும் செய்தி, அரசாணை; ஆக்ஞை – ஆணை, கட்டளை; விவஸ்தை – தீர்மானம், முடிவு, உடன்பாடு; பரிசு – விவரம், வகை; சேரி – பிடாகையில் உள்ள பார்ப்பனச்சேரி; உருவறி – விவரம் அறி; பறிச்சி – எடுத்து; பஞ்சவார – ஐவர் குழு; வரக்காட்ட – அனுப்ப, உத்தரவு; வர்த்தித்திட – பெருகிவளர

    விளக்கம் மதுரையைக் கைப்பற்றி ஆண்ட பராந்தக சோழனின் 12 –ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 917) உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்து ஊர் நிர்வாக சபையினர் தந்த அறிக்கை யாதெனில், “இவ்வாண்டு முதல் எங்களூரில் அரசாணைக் கட்டளையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் முன்னிலையில் வாரியம் ஏற்படுத்தும் செயலாக ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம் ஏற்படுத்த முடிவு செய்த விவரம் என்வென்றால் குடும்பு முப்பதுக்கு 30 குடும்புகளிலும் அந்தந்த குடும்பைச் சேர்ந்தவரே ஒன்றுகூடி தம் குடும்பில் வரி கட்டும் நிலம் கால் (1/4) அளவிற்கு மேல் உடையவராக இருக்கின்ற தன் சொந்த நிலத்தில் வீடு கட்டிக் குடியிப்பவராக இதாவது, வாடகை வீட்டில் இல்லாதவராக இருக்க வேண்டும்.  (பிராமணர் பிரம்மதேய இறையிலி நிலம் பெற்று வரி கட்டாமலேயே வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பொதுவான கருத்தை தகர்த்து தவிடுபொடி ஆக்குகின்றது மூன்றாம் வரியின் இந்த முதல் அடிப்படை விதி.  நிலமும் வீடும் வற்புறுத்தப்படுவது ஏன் என்றால் வாரிய உறுப்பினர் கணக்கில் ஏதேனும் மோசடி செய்தால் இவற்றை ஏலத்தில் விற்று மோசடி பணத்தை ஈடுசெய்வதற்காக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. இந் நடவடிக்கை ஏற்படுத்தும் அச்சத்தால் மோசடியில் ஈடுபடாமல் இருப்பார்).

    60 அகவைக்கு மிகாமல் 30 அகவைக்கு மேல் உள்ளவராக இருப்பதோடு வேதக்கல்வி, சாஸ்திரம், பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்குகளில் வல்லுனர் என்று சொல்லப்படுபவராய் இருக்க வேண்டும். (4 –ம் வரி மூலம் முதுமையின் தளர்ச்சி, நினைவு மறதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வயது உச்ச வரம்பு வைக்கப்பட்டதாக உணர முடிகின்றது. இதே போல இக்காலக் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி ஆகியவற்றுக்கும் வயது உச்சவரம்பு தேவை எனத் தோன்றுகின்றது. வேதம் காதால் கேட்டு வாயால் பலுக்கப்படுவது. இந்த வேதக் கல்வியை  செவிடர், ஊமையர் பெற்றிருக்க முடியாது. அதோடு குறைக்கல்வி உடைய பிராமண சமையல்காரர் போன்றோரும் வாரிய உறுப்பினர் ஆகமுடியாது என்று தெரிகின்றது. பிராமணப் பெண்கள் வேதம் கற்கத் தடை இருப்பதால் வாரியம், சபை போன்றவற்றில் பெண்கள் உறுப்பினர் ஆகமுடியாது என்று தெரிகின்றது. இவ்வூர் குடவோலைத் தேர்தல் பிராமண ஆண்களுக்கான தேர்தல் மட்டுமே எனக் கொள்ளலாம்).

    தூயவழியில் பொருளீட்டி ஆன்மத் தூய்மையும் கொண்டவராய் கடந்த மூவாண்டில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இல்லாதவராய் இருக்க வேண்டும். அதோடு கடந்த மூவாண்டில் வாரிய உறுப்பினராய் இருந்தவருக்கு நெருங்கிய சொந்தக்காரர் அல்லாதவராய் இருப்பவரை மட்டும் குடவோலைத் தேர்தலுக்கு ஓலையில் பெயர் எழுதி குடத்தில் இட வேண்டும். (5-6 ம் வரியின் இந்த கட்டுப்பாடு வாரியத்தில் வழி வழியாக ஒரே குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க விதிக்கப்பட்டது. இந்நாளைய கட்சி அரசியலுக்கு, குடிநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவைப்படும் இன்றயமையாத விதி இது).

    பிடாகைகளில் அமைந்த பார்ப்பனச்சேரிகளின் வழியாகவும் ஓலையில் பெயர் எழுதி உத்தரமேரூரில் அடங்கிய 12 பிடாகைப் பார்ப்பனச் சேரிகளில் இருந்தும் ஒவ்வொரு சேரிக்கும் ஒருவர் பெயர் என்று ஆகுமாறு செய்து பெயரை எழுதிக் குடத்தில் இட வேண்டும். (இராசராச சோழன் காலத்து ஆதித்த கரிகாலன் கொலைத் தொடர்பான உடையார்குடி ஆனந்தீசுவரர் கோவில் கல்வெட்டை இங்கு இதற்கு சான்றாகக் காட்டலாம் “மலையனூரான் ஆன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன்றாய் பெரிய நங்கைச் சாணியும், இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து மிப் பிடாகை தேவமங்கலம்”. இந்த  குடவோலைக் கல்வெட்டின் 6 –ம் வரி மூலம் உத்தரமேரூருக்கு 12 பிடாகைகளில் 12 பார்ப்பனச்சேரிகள் இருந்தன என்பது புலனாகின்றது. சமூகப் பிரிவினைக்கு வித்திடும்படியாக பிராமணர்கள் பிடாகைகளில் வாழ்ந்திருக்காமல் சதுர்வேதிமங்கலத்திலே வாழ்ந்து கொண்டு பிடாகைகளில் பிற சாதிமாரை ஒதுக்கித் தள்ளி தாழ்வு ஏற்படுத்தினர் என்ற பேரா. J.S. கிரேவால், சாந்தினி பீ ஆகியோரது பிழைக் கருத்து மீண்டும் இந்த குடவோலைக் கல்வெட்டால் இலவு தெறித்து பஞ்சாய் பறப்பது போல் பறக்கின்றது. பிராமணர் பிடாகைகளில் வாழ்ந்திராவிட்டால் இந்த உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்திற்கு 12 பார்ப்பனச் சேரிகள் எப்படி அமைந்திருக்க முடியும்? ஆக பிராமணர் பிடாகைப் பார்ப்பனச் சேரியில் வாழ்ந்தனர் என்பது இச் சட்டத்தால் உறுதிப்படுகின்றது).

    குடத்தில் இட்ட பெயர்ஓலையை விவரமறியாத ஆண் பிள்ளையின் கையால் வாங்கி 12 பேரை ஆண்டுவாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். அதற்கு முன்பாக தோட்ட வாரியத்திற்கும் மேற்சொன்னபடியே குடவோலையை எடுக்கவித்து 12 பேரை தோட்ட வாரியத்திற்கு பொறுப்பாக்க வேண்டும். குடவோலையால் தேர்வான எஞ்சிய ஆறு பேரையும் ஏரிவாரியம் ஆகிடச் செய்க. இப்படி 30 குடவோலை எடுத்து வாரியத்திற்கு தேர்வானவர்கள் மூன்று துறை வாரியத்தாராக செயற்பட்டுவரவேண்டும். 360 நாள் கழிந்து வாரியம் இல்லாது போன பின் மீண்டும் அமையும் வாரியங்கள் இதே தீர்மான ஓலைப்படியே ஒவ்வொரு குடும்பிற்கும் பெயர்ஓலை எழுதி குடத்தில் இட்டு பின் குடவோலையை எடுத்து வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

    ஏற்கெனவே வாரிய உறுப்பினராய் இருந்தவரின் உறவினர்கள் அதோடு பார்ப்பனச்சேரிகளில் மக்களிடம் நெருக்கம் (அன்னோன்யம்) இல்லாதவர்கள் பெயரை ஓலையில் எழுதி குடத்தில் இடக்கூடாது. (ஒவ்வொரு பார்ப்பனச்சேரியிலும் ஓரிருவருக்கே குடவோலையில் தேர்வாக வாய்ப்பு உள்ளதால் அவர்கள் மற்றவரிடம் நல்லுறவு பேணுபவராய் இருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறு இல்லை).

    ஆண்டு, தோட்டம், ஏரி வாரியங்கள் போலவே பஞ்சவார வாரியத்திற்கும் பொன் வாரியத்திற்கும் இது போல் தனியாக 30 குடும்பிற்கும் 30 பெயர்ஓலையை குடத்தில் இட்டு அதில் ஒரு ஓலையை எடுக்கச் செய்து தேர்வாக வேண்டும். பார்ப்பனச் சேரிகளில் இருந்து ஒருவரைக் குடவோலை மூலம் தேர்வு செய்து பன்னிரண்டு பேரில் ஆறு பேரை பஞ்சவார வாரியத்துக்கும் மற்ற ஆறு பேரை பொன் வாரியத்துக்கும் ஒதுக்க வேண்டும். (பொன் வாரியத்தார்க்கு பொன்னைப் பற்றி அறிந்த பொற்கொல்லரின் அறிவுரை தேவைப்படும் என்பதை இங்கு உணர முடிகின்றது).

    ஆண்டு வாரியம் தவிர்த்து பிற வாரியங்களில் ஏற்கெனவே ஒருபோது உறுப்பினராய் இருந்தவர்களை மீண்டும் அதே வாரியங்களில் உறுப்பினராகதவாறு அவர்களுக்கு பெயர்ஓலை எழுதி குடத்தில் இடக் கூடாது. (இதன் மூலம் ஆண்டு வாரியம் என்பது ஒரு முக்கியத்துவம் இல்லாத வாரியம் என்று தெரிகின்றது).

    இந்த வகைப்படி இந்தாண்டு முதல் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் காலம் வரை எப்போதும் குடவோலை முறைப்படியே  வாரியம் ஏற்படுத்துவதாக தேவேந்திரன் சக்கரவத்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேசரி வர்மர் அரசாணை கொடுத்து அனுப்ப அந்த திருக்கட்டளையால் தத்தனூர் மூவேந்த வேளாண் வந்து உடனிருக்க நம் கிராமத்து வாழ் தீயோர் எல்லாம் ஒழிந்து நல்லோர் பெருகி வளர்வதற்காக வகை செய்தோம் உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து ஊரவையோம்“ என்று முடிகின்றது.

    பராந்தகச் சோழனை தேவர்க்கு தலைவனான இந்திரனை நிகர்த்த சக்கரவர்த்தி என்றும் வீர நாராயணன் என்றும் போற்றிடுவதில் இருந்து இது தேவேந்திர குலத்தாரை குறிக்கவில்லை என்று தெளியலாம். இந்த தேவேந்திர சக்கரவத்தி என்ற புகழுரையே பிற்பாடு வந்த வேந்தர்களை குறிக்க திரிபுவன சக்கரவத்தி, சகலலோக சக்கரவத்தி என்றெல்லாம் பட்டங்கள் உருவானது போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 32, பக் 18-20, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.

    செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 18 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோபர கேஸரி வந்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதின்ஆறு காலியூர் கோட்டத்து தன் கூற்று உத்தரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமான் அடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணந் ஸ்ரீ பராந்தக தேவந் ஸ்ரீ பரகேஸரி வந்மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முகப்படி ஆ
    2. ஞஞையினால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகரக் காஞ்சை  கொண்டய க்ரமவித்த பட்டநாகிய சோமாசி பெருமாந் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செத பரிசாவது குடும்பு முப்பதா[ய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா
    3. ரே கூடிக் கா நிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன் மனையிலே அகம்மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்த்ர ப்ராஹ்மணம் வல்லத் ஓதுவியத்தறியவானைக் குட வோலை இடுவிதாகவும் அரைக்கா நிலமே உடைய நாயிலும் ஒரு வேதம் வல்லதாய் நாலு பாஷ்யத்திலும்  ஒரு பா
    4. ஷ்யம் வக்காணித்தறிவான் அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆசாரமு டையரானாரனயேய் கொள்விதாகவும் அர்த்த ஸௌஸமும் ஆன்ம ஸௌசமும் உடையராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்திலாத்தாரை கொள்வதாகவும் எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செது கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றவைப் பேர் அவை ம
    5. க்களையும், இவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தமப்பனோடுடப் பிறந்தானையும் தன்னோடுடப் பிறந்தானையும் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமானையும் இவர்கள் ப்ராஹ்மணியோடப் பிறந்தானையும்  தன்னோடுடப் பிறன்தானை வேட்டானையும் உடப் பிறன்தான் மக்களையும் தன் மகளை வேட்ட மருமகனையும் தன் தமப்பனையும்
    6. தன் மகனை[யும்] ஆக இச்சுட்ட…..பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாததாராகவும், அகம்யாகமனத்திலும் மகா பாதகங்களில் முன் படைந்த நாலு மஹா பாதகத்திலும் மெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முந் சுட்டப்பட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாதா[ரா]கவும் ஸம்ஸர்க்க[ல]திகரை ப்ராயசித்தஞ் செய்யுமளவும்
    7. குடவோலை இடாததாகவும்….தியும் ஸாஹஸிய ராயிருரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் பரத்ரவ்யம் அபஹரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் எப்பேற்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத ப்ராயஸ் சித்தஞ் செய்து ஸுத்தரானானையும் அவ்வவர் ப்ராணாந்திகம்
    8. வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெறாததாகவும் …. பாதகம்(ஞ்) செய்து ப்ராயச் சித்தஞ் செய்து ஸுத்தரானானையும் க்ராம கண்டகராய் ப்ராய[ச்சி]த்த(ம்) செய்து ஸுத்தரானாரையும் ஆக அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைய்வரையும் ப்ராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை  எழுதிப்புகவிடப் பெறாததாக
    9. வும் ஆக இச்சுட்டப்பட்ட இத்தனைய் பேரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இப்பன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறேய் வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக் குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மஹாஸபைத் திருவடியாரை ஸபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளூரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா
    10. மே மஹா சபையிலே உள்மண்டகத்தி லேய் இருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவேய் அக்குடத்தை நம்பிமாரில் விருத்தராய் இருப்பா (ர்)னொரு  நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்றா(ல்)லெடுத்துக் கொண்டு நிற்(க்)க பகலேய்ந்த்ரமறியாதா(ன்)னொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி(ய) மற்றொரு குடத்துகேய் புகவிட்டு குலைத்து அக்குடத்தி(ல்)லோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே
    11. குடுப்பதாகவும் அக்குடுத்த வோலை மத்தியஸ் வாங்கும் போது அஞ்சு விரலும் அகல வைத்து உள்ளங் கையிலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வெற்று வாங்கின வோலை வாஸிப்பானாகவும் வாஸித்த அவ்வோலை அங்குள்ள மண்டகத்திருந்த நம்பிமார் எல்லாரும் வாசிப்பாராகவும் வாஸித்த அப்பேர் தீட்டுவதாகவும் இப்பரிஸே முப்பது குடும்பிலும் ஒரோ பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரிலும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விஜ்யவ்ரத்தரையும்
    12. வயோ வித்தர்களையும் ஸம்வத்ஸர வாரியரையும் கொள்வதாகவும் மிக்கு நின்றாரு(ப்) பன்னிருவரைத் தோட்ட வாரியங் கொள்விதாகவும் நின்ற அறுவரையும்(ம்) ஏரி வாரியமாகக் கொள்வதாகவும். இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன் நூற்று அறுபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங்
    13. கண்டபோது அவனை யொழித்துவதாகவும். இவ[ர்]கள் ஒழிந்த அனந்தர(ம்)மிடும் வாரியங்களும் ப[ன்னிரண்]டு சேரியிலும் தந்ம க்ருத்தயங் கடைக் காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறி கூட்டிக் குடுப்பாராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியேய்…க்குக் குடவோலைய் பறித்துக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார [வாரி]யத்துக்கும் பொன் வாரியத்து.
    14. க்கு முப்[ப](த்)துக் குடும்பி(யி)லும் குடவோலைக்கு பேர் தீட்டி முப்பது வா[யோ]லை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்நிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்நிரண்டிலும் பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவநவாகவும். பிற்றை ஆண்டும் இவாரியங்கள் குடவோலை பறிக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செ
    15. ய்த குடும்பன்றி[க்]கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொளுவதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக இடப் பெறாததாகவும் மத்யஸ்தரும் அர்த்த ஸோஸம் முடையாரே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி ஸுத்தந் ஆச்சிதின் பின்நன்றி மற்றுக் கண
    16. க்குப் புகப் பெறாதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெறாதார் ஆகவும் இப்பரிசை இவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவற் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திர சக்ரவர்த்தி, பண்டிதவத்ஸலந், குஞ்சர மல்லன், சூரசூளாமணி, கல்பகஸரிதை ஸ்ரீ பரகேஸரிபந்மர்(க) ஸ்ரீ முகமருளிச் செய்து வரக்காட்ட ஸ்ரீ ஆக்ஞை ஆ
    17. ல் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்டய க்ரமவித்த பட்ட[ன்]னாகிய சோமாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் க்ராமத்துக்கு அப்யதயமாக துஷ்டர் கெட்டு விஸிஷ்டர் வர்த்திப்பதாக வ்யவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வ்வேதி மங்கலத்துச் ஸபையோம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வ்யவஸ்தை எழுதினேன் மத்யஸ்தந்
    18. காட்டிப் போத்தன் சிவக்குறி இராஜமல்ல மங்கலப்பிரியநேன்.

    பெருமானடிகள் – வேந்தர்; செது – தொண்டாற்றி, செய்து; பாஷ்யம் – உரை, விளக்கம்; வக்காணித்தல் – விரித்துரைத்தல்; அ(வ்)வை – அம்மை, தாய்; வேட்டான் – மனைவியின் தாய் தந்தைக்கு உடன்பிறந்தார் வழிப் பிள்ளைகள்; இடப்பெறாததார் – பெயர் சேர்க்கக் கூடாதவர்; ப்ராஹ்மணி – பிராமணர் மனைவி; ப்ராணாந்திகம் – இறுதி மூச்சுள்ள வரையும்; கண்டர் – தீமை செய்தவர்,கேடர்; விருத்தர் – மூத்த வயதினர்; குடும்பு வாங்கு – ஓலைஎடுத்துக் கொடுக்க வாங்குதல், picking process; கரைபறி – பங்கெடு; கூடலேகை – பொய்க் கணக்கு; பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ள மேலோர் (lords); மத்யஸ்தன் – நடுநிலையாளன், கிராமத் தலைவன்; ஒடுக்கு – பண்டாரத்தில் சேர்; குஞ்சர மல்லன் – யானைப் படைத் தலைவன்; குறியுள் – கூட்டத்தில்.

    விளக்கம்: இது மேற்கண்ட முதற் கல்வெட்டிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து சில திருத்தங்களையும் (amendment) கட்டுப்பாடுகளையும் கூடுதலாகக் கொண்டு குழப்பமற தெளிய விளக்கி வெட்டப்பட்ட இருண்டாம் கல்வெட்டாகும்.

    (1-3) மதுரையைக் கைப்பற்றி ஆண்ட பராந்தக சோழனின் 14 –ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 919) பதினாறாம் நாள் காலியூர் கோட்டத்துப் பிரிவாகிய உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து ஊரவையோம். இந்த ஆண்டு முதல் எங்களுக்கு வேந்தரான வீர நாராயணன், பராந்தக தேவன், பரகேசரி வர்மருடைய அரசாணை அனுப்பப்பட்டு அந்த அரசாணையின் கட்டளையால் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்கநகர காஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமான்  முன்னிலை இருந்து வாரியம் ஏற்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டு வாரியமும், தோட்ட வாரியமும், ஏரிவாரியமும் ஏற்படுத்த தீர்மானம் செய்த வகை யாதெனில், “குடும்பு முப்பதாக அம்முப்பது குடும்பிலும் அந்தந்த குடும்பினரே ஒன்றுகூடி வரி கட்டும் நிலம் கால் (1/4) அளவிற்கு மேல் உடையவராயும், தன் சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ்பவராயும், எழுபது அகவைக்கு மிகாமலும் 30 அகவைக்கு மேலும் உள்ளவராயும், வைதிக மந்திர வினை முறையில் (மந்திர பிராமணம்) வல்ல, வேதம் ஓதுவிக்கத் தெரிந்தவர் பெயர்ஓலையை குடத்தில் இடலாம். (முதற் கல்வெட்டில் 60 வயது என்ற வரம்பை இதில் 70 ஆக உயர்த்தியது ஒரு திருத்தம், சலுகை எனலாம்).

    ஒரு வேதத்திலேனும் வல்லவனாய், நான்கு உரையில் (பாஷ்யம்) ஒரு உரையை விரித்து விளக்குபவனாய் இருந்தால் அவனிடம் வரி கட்டும் நிலம் அரைக்கால் (1/8) அளவிற்கு இருந்தாலே போதும் அவன் பெயர் ஓலையை குடத்தில் இடலாம் என்பது சலுகை (exempt). அவருள்ளும் பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்கில் வல்லுநனாயும், மத ஒழுக்கத்தை கைக்கொள்பவனாயும் இருப்பவனையும் ஏற்கலாம். தூய வழியில் பொருளீட்டி ஆன்மத் தூய்மை உள்ளவனையும் ஏற்கலாம். கடந்த மூன்றாண்டுகளில் வாரிய உறுப்பினனாய் இல்லானையும் ஏற்கலாம்.

    முன்பு எந்த வாரியத்தில் தொண்டு செய்திருந்தாலும் கணக்கு காட்டாமல் இருந்தவனையும், இவனுக்கு சின்னம்மை பெரியம்மை பிள்ளைகளையும், அத்தை மாமன் பிள்ளைகளையும்,  இவன் தாயுடன் பிறந்தானையும், தந்தையுடன் பிறந்தானையும், இவனுடன் பிறந்தானையும், இவனுடைய மாமனார் மைத்துனரையும், தன் உடன்பிறந்தார் மனைவியின் தாய் தந்தைக்கு உடன்பிறந்தார் வழிவந்த பிள்ளைகளையும் (வேட்டான்), இவன் உடன்பிறந்தார் பிள்ளைகளையும், இவன் மகளுடைய கணவனின் தாய் தந்தைக்கு உடன்பிறந்திட்ட பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளான வேட்ட மருமகன்களையும், இவன் தந்தையையும், இவன் பிள்ளைகளையும் ஆக இங்கு சுட்டப்பட்ட இவனது உறவினர்களின் பெயர்ஓலையை குடத்தில் இடக்கூடாது. (முதற் கல்வெட்டில் உறவினர்கள் இன்னின்னார் என்று இப்படி விரிவாக விளக்கவில்லை).

    ஆகமங்களுக்கு முரணானவரையும் பெரும் பாதகங்கள் செய்தவரையும் முன்னர் சொன்னது போன்றே இவர்களது இத்தனை உறவினர் பெயர்ஓலைகளை குடத்தில் இடக்கூடாது. கொள்கையை மீறினவர் அதற்கு கழுவாய் தேடும் வரையும் அவர் பெயர்ஓலையை குடத்தில் இடக் கூடாது. கொலைக் குற்றத்திற்கு தூண்டுபவர், கொலை செய்பவர் பெயர் ஓலையை குடத்தில் இடக் கூடாது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் பெயர் ஓலையை குடத்தில் இடக் கூடாது. எத்தகைய கையூட்டு பெற்றவரும் அதற்கான கழுவாயைச் செய்து தூயராக ஆன பின்னரும் அத்தகையோர் இறுதி மூச்சுள்ள வரை அவர் பெயர்ஓலையை குடத்தில் இடக்கூடாது என்று வாழ்நாள் தடை போடப்படுகின்றது.

    பாதகம் செய்து கழுவாயால் தூயரானவரையும், கிராமத்திற்கு கேடு செய்து கழுவாயால் தூயரானவரையும், கொள்கை முரண்பட்டு கழுவாயால் தூயரானவரையும் ஆக இப்படி சுட்டப்பட்ட அனைவரையும் இறுதி மூச்சுள்ள வரையும் வாரியத்திற்கு உறுப்பினர் ஆகாவண்ணம் குடத்தில் பெயர்ஓலையை இடக் கூடாது. இப்படி மேலே சுட்டப்பட்ட சுற்றாத்தார் இத்தனை பேரையும் நீக்கி இந்த முப்பது குடும்பிலும் குடவோலைக்கு பெயர் எழுதி, இப் பன்னிரண்டு பார்ப்பனச் சேரிக்கும் இக்குடும்பிற்கும் தனித்தனியே வாயோலை கட்டி பெயர்ஓலையை குடத்தில் இட வேண்டும். குடத்தில் உள்ள பெயர்ஓலைகளில் ஒன்றினை மட்டும் எடுக்கும் போது சிறுவர் கூட்டம் நிரம்புமாறு மகாசபைத் திருவடியாரைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். அன்று ஊரில் உள்ள பூசக பிராமணரில் ஒருவரையும் விட்டுவிடாது மகாசபையின் உள் மண்டபத்தில் உட்கார வைத்து அப்பூசக பிராமணர் நடுவே அக்குடத்தை அப் பூசக பிராமணரில் வயது முதிர்ந்த ஒருவர் எல்லா மக்களும் காணற் பொருட்டு கையில் ஏந்தி நிற்க விவரமறியாத சிறுவனைக் கொண்டு குடத்தில் இருந்து பெயரோலையை எடுக்கவித்து வாங்கிய பின் இன்னொரு குடத்தில் கையை இட்டு மேலும் கீழுமாய்ப் புரளும்படி கலக்கி அக்குடத்தில் இருந்து ஒரு பெயரோலையை மட்டும் வாங்கி நடுநிலையாளன் கையில் கொடுக்க வேண்டும். நடுநிலையாளன் பெயர்ஓலையை கையில் வாங்கும் போது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையிலே அதை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பெயர்ஓலையை படிக்க வேண்டும். படித்த அந்த பெயர்ஓலையை மண்டபத்தில் உள்ள பூசக பிராமணர் அனைவரும் படித்துக் காட்ட வேண்டும். படிக்கப்பட்ட அப்பெயரை தனியே வேறு ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டின் படியே முப்பது குடும்பிலும் எடுத்த ஒரேஒரு பெயரை மட்டும் வேறு ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டும்.

    இப்படி பெயர் எழுதப்பட்ட முப்பது பேரில் இருந்து தோட்ட வாரியம், ஏரி வாரியம் செய்ய வேண்டும். விஜயவ்ருத்தரை, அறிவுசால் பெரியோர் (வயோ வ்ருத்தர்) 12 பேரை ஆண்டு வாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். இன்னும் உள்ள 12 பேரை தோட்ட வாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். எஞ்சி நின்ற அறுவரை ஏரிவாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும்.

    இப்படி வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியத்தாரும் 360 நாள் தம் பொறுப்பை ஆற்றி நீங்க வேண்டும். வாரியக் கடமைகளை ஆற்றாத குற்றங் காணும் போது அவனை நீங்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து பின்னர் ஏற்படுத்தப்படும் வாரியங்களுக்கு 12 பார்ப்பனச் சேரிகளிலும் அறச்செயலை (தர்ம க்ருத்ய) கடைபிடிக்கும் வாரியரே நடுநிலையாளரை வைத்து கூட்டம் கூட்ட வேண்டும். இந்த தீர்மான ஓலைப்படியே பார்ப்பனச்சேரிக்கு பெயர்ஓலை எடுத்து வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

    பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் மீண்டும் குடவோலைக்குப் பெயர்ஓலை எழுதி குடத்தில் இட்டு முப்பதிலும் பெயர்ஓலை எடுத்து எழுதிக் கொள்ள வேண்டும். முப்பதிலும் வாயோலை கட்டி பெயர்ஓலைகளை இட்டு முப்பது குடவோலைகள் எடுக்க வேண்டும். முப்பதில் பன்னிரண்டு பேரை எடுத்து பன்னிரண்டில் அறுவர் பொன் வாரியராகவும் அறுவர் பஞ்ச வாரியராகவும் ஆகட்டும்.

    (14-15 வரி) அடுத்த ஆண்டுகளில் இவ்வாரியங்களுக்காக குடவோலை எடுக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னர் தொண்டாற்றிய குடும்புகளைச் சேர்ந்தோரைத் தவிர்ந்து எஞ்சிய குடும்புகளில் இருந்து பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்பதால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பும் பெயர்ஓலை இட முடியாமல் தடை செய்யப்படுகின்றது.

    கழுதை ஏற்ற தண்டனை பெற்றவனும், பொய்க் கணக்கு எழுதியவனும் குடத்தில் பெயர்ஓலை இடப்படாதவர் ஆகின்றனர். நடுநிலையாளர் தூயநெறியில் பொருளீட்டுவாரை மட்டுமே கணக்கு எழுத அமர்த்த வேண்டும். ஏற்கெனவே கணக்கு எழுதியவனாக இருந்தால் கணக்கு சார்ந்த பெருங்குறி பெருமக்களிடம் கணக்கு காட்டி குற்றம் கரையற்றவன் என மெய்ப்பிக்கப்படும் வரை மற்ற கணக்கு எழுதும் வேலையை செய்யக்கூடாது. அவன் தான் எழுதிய கணக்கை தானே காட்ட வேண்டும் வேறு கணக்கன் வந்து பார்த்த பின்பு கருவூலத்தில் பணம் செலுத்துபவனாக இருத்தல் கூடாது.

    இந்த ஏற்பாட்டை இந்த ஆண்டு முதல் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை என்றென்றைக்கும் குடவோலை வாயிலாகவே வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று பராந்தகச் சோழன் அரசாணை இட்டு அனுப்பிய கட்டளையால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமான் உடன் இருந்து இத்தீர்மானத்தை செய்விக்க நம் கிராமத்துக்கு நலம் உண்டாக தீயோர் ஒழிந்து சான்றோர் வளர்ந்தோங்கும் வண்ணம் தீர்மானம் செய்துவித்தோம் உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தின் ஊரவையோம். இந்த ஏற்பாட்டுக் கூட்டத்தில் பங்குபெற்று பெருமக்கள் பணிக்காக இத் தீர்மானத்தை எழுதினேன் நடுநிலையாளனான காட்டிப் போத்தன் சிவக்குறி இராசமல்ல மங்கலப் பிரியனேன்.”

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 32, பக். 20 – 23, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.

    திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வெலி வட்டம் மானுர் அம்பலவாணர் கோவில் தூண் ஒன்றில் உள்ள 64 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு.

    முதல் பக்கம் (1-21) : ஸ்வஸ்திஸ்ரீ கோ மாறஞ் ச / டையற்க்கு யாண்டு / முப்பத்தஞ்சு / நாள் நான்னூற்றறு பத்து ஒன்பது இ / ந் நாளால் களக்குடி / நாட்டு ப்ரஹ்மதேயம் மான / நிலை நல் ஊர் மஹாஸ / பையோம் பெருங்குறி (சா) / ற்றி ஸ்ரீ கோவர்த்தனத்துக் கூ / டி இருந்து இவ்வூர் ம / ஹா ஸபையோம் குடி மன்றா / டுவதனுக்கு  செய்த வ்யவஸ்தை / யாவது இவ்வூர் பங்குடை / யார் மக்கள் ஸபையில் மன் / றாடுகிறது  ஒரு தர்மம் உட்ப / ட

    Share
  • கொரோனா ஏன் வந்தது?

    கொரோனா ஏன் வந்தது?

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஸ்திரேலியா

    இயற்கை யெனும் பெருமரணை
    நொறுக்கி நிற்கும் வகையினிலே
    எடுத்து வரும் பொருத்தமிலா
    முயற்சி யெலாம் பெருகுவதால்
    இயற்கை அது சீற்றமுற்று
    எல்லை இலா வகையினிலே
    கொடுத்து வரும் தண்டனையே
    கொரோ நோவாய் வந்திருக்கு!

    இயற்கை யெனும் பெருவரத்தைப்
    புறக்கணிக்கப் பல வகையில்
    செயற்கை எனும் வழியினிலே
    இறக்கை கட்டிப் பறந்ததனால்
    பயன் உடைய அத்தனையும்
    பயன் அற்ற தெனும்மாயை
    உலகினிலே வந்தமைந்து
    உலகை இப்போ உலுக்கிறதே  !

    விஞ்ஞானம் எனும் பெயரால்
    விந்தை பல விளைந்ததுவே
    அளவுக்கு மிஞ்சி விடில்
    அவை அனைத்தும் ஆபத்தே
    எஞ்ஞான்றும் விஞ்ஞானம்
    உதவிவிடும் எனும் எண்ணம்
    மண்ணுள்ளார் மன மேறி
    மரண வாசல் பார்க்கின்றார்!

    செயற்கை தனைச் சேர்க்கின்ற
    செயல் களைய முன்வருவோம்
    இயற்கை தனை இறுகணைக்க
    இதயம் அதைத் திறந்திடுவோம்
    அவசரமாய் நாம் அனைத்தும்
    ஆக்கி விடும் மனநிலையை
    அகற்றி நிற்க எண்ணிவிடின்
    அகிலம் அதைக் காத்திடலாம் !

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-121

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-121

    நாங்குநேரி வாசஸ்ரீ

    121. நினைந்தவர் புலம்பல்

    குறள் 1201

    உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது

    குடிக்குத நேரம் மட்டும் போத தருத கள்ள விட நெஞ்சுக்குள்ளார நெனைக்க நேரமெல்லாம் போத தருத காதல் சந்தோசமானது.

    குறள் 1202

    எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன் றில்

    பிரிஞ்சி இருக்க நேரம் நேசிக்கவர நெனச்சுப்பாத்தா அந்த சங்கடம் உருத்தெரியாமப் போவுததால எப்டிபாத்தாலும் நேசம் எப்பமும் இனிம தான்.

    குறள் 1203

    நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்

    தும்மல் வருததுகணக்கா இருக்கு. ஆனா வார மாட்டேக்கு. ஒருக்கா அவரு என்னையப் பத்தி ரோசன பண்ண ஆரம்பிச்சி பொறவு உட்டுப்போடுதாரோ?

    குறள் 1204

    யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
    தோஒ உளரே அவர்

    என் நெஞ்சுக்குழிக்குள்ளார நான் நேசிக்குத அவரு எப்பமும்  இருக்காரு.. அங்ஙன அவரு நெஞ்சுக்குள்ளார நான் இருக்கேனா?

    குறள் 1205

    தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத் தோவா வரல்

    அவுக நெஞ்சுக்குள்ளார என்னைய வரவுட்டாம பண்ணிப்போட்டு என் நெஞ்சுக்குள்ளார ஓயாம வருததுக்கு அவுக வெக்கப்படமாட்டாவளோ?

    குறள் 1206

    மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
    உற்றநாள் உள்ள உளேன்

    அவுகளோடசேந்து கழிச்ச நாள்கள நெனப்புல வச்சிக்கிட்டதாலதான் நான் உசிரோட இருக்கேன். வேற எதுக்காவ நான் உசிரோட இருக்கணும்?

    குறள் 1207

    மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்

    அயத்துப்போவாம ஓர்மயோட இருக்கையிலயே பிரிஞ்ச சங்கடத்தால நெஞ்சு சுடுதே அங்ஙன இருக்கையில நெசத்துக்கும் அயத்தா(மறந்தால்) என்ன ஆவுமோ.

    குறள் 1208

    எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு

    நேசிக்கவர எம்புட்டு அதிகமா நெனச்சாலும் அவுக கோவப்படமாட்டாக. அவுக செய்யுத பெரும் ஒதவி அதுதானே.

    குறள் 1209

    விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து

    நாம ரெண்டுபேரும் ஒண்ணுதான் வேற வேற இல்லன்னு அடிக்கடி சொல்லுதவுக இப்பம் நேசமில்லாம இருக்கத நெனச்சி என் உசிரு அடங்கிக்கிட்டே வருது.

    குறள் 1210

    விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி

    நிலாவே! என்கூட ஒண்ணுமண்ணுமா இருந்தவுக இப்பம் என்னய உட்டுப்போட்டு போனதால அவுகள என் கண்ணால தேடிக் காணுதவரைக்கும் நீ மறைஞ்சு போவாம தொணையா நிக்கணும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 248

    படக்கவிதைப் போட்டி – 248

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (08.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 247-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 247-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பச்சைக் கிளிகள் மெல்லிய கிளைகளில் ஊசலாடும் அழகை இச்சையோடு படமெடுத்துத் தந்திருப்பது PicturesQueLFS. கண்ணைக் கவரும் இந்த வண்ணப் படத்தைப் படக்கவிதைப்போட்டி 247க்குப் பரிந்துரைத்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    ”மக்கள்தாமே ஆறறி வுயிரே;
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” (தொல்: பொருள் – 577) என்ற நூற்பாவில் மக்கள் ஆறறிவுடைய உயிர்கள். அவர்களைப் போலவே பிற உயிர்களிலும் ஆறறிவு படைத்தவை உள என்கிறார் தொல்காப்பியர். இதற்கு உரைவரைந்த இளம்பூரண அடிகள் மக்களல்லாத குரங்கு யானை கிளி முதலிய உயிர்களும் ஆறறிவு படைத்தவையே என்று விரித்துரைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார்.

    எனவே கிளிகள் அறிவிற் சிறந்தவை என்பதில் ஐயமில்லை. அதனால்தான், அவை மனிதர்கள் ‘கிளப்பதை’ (சொல்லுவதை) அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவ்வாறு கிளத்தல் பற்றியே அவை ’கிளி’ எனப் பெயர்பெற்றன என்ற கருத்துமுண்டு.

    கிளியின் சிறகைப் போலிருக்கும் பொன்னின் ஒருவகைக்குக் ’கிளிச்சிறை’ என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கின்றனர் நம் பண்டைத் தமிழர். கிளிகளைப் பற்றிக் கிளப்பதற்குச் செய்திகள் பலவுண்டு. எனினும், இக் கிள்ளைகள் பற்றிய கவிதைகளோடு கவிஞர்கள் பலர் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று அமைகின்றேன்.

    *****

    ”கிளிகளிரண்டும் அரங்கனின் நாமத்தை உச்சரித்து, மென்சிறகை மெல்லத் தோய்த்ததால் சிவந்தெழுந்தது பூந்தளிர்” என்று கவி ஓவியம் தீட்டியுள்ளார், திருமிகு. சக்திப்ரபா.

    அரங்கன் நாமத்தை
    அனுதினமும் அரங்கேற்றும்
    கிளிகளிரண்டும் – வறண்ட
    கிளைகளில்
    பையக் காலூன்றி
    ரங்கா ரங்கா என்றே
    ராகமிசைத்து
    மென்சிறகின் வர்ணத்தை
    மெல்லத் தோய்த்ததில்,
    உலர்மேனி சிவந்து
    கிளர்ந்தெழுந்த பூந்துளிர்!

     *****

    ”சருகான மரத்திலும் நீ; சாய்ந்தாடும் கொடியிலும் நீ; பசுமைநிறச் செடியிலும் நீ; பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ என எங்கெங்கும் உன் வண்ணம்; அதில் உருவாகுது ஆயிரம் எண்ணம்; எமைவிட்டுப் பறந்துவிடாதே பைங்கிளியே!” எனக் கிள்ளையிடம் கொஞ்சுமொழி பேசுகின்றார் திருமிகு. எம். சுதா.

    கிளி

    பச்சைநிறக் கிளியே உனைக்
    கண்டால் பரவச நிலையே!
    சொன்னதைச் சொல்லும் கிளியே
    நீ சுந்தர வதன எழிலே!

    பழங்களைத் தின்னும் கிளியே உனைப்
    பார்ப்பவர் மனதில் மகிழ்வலையே!
    காதல் சிந்தனை தூண்டும் கிளியே
    நீ சிறகடித்துப் பறப்பது பைம்பொழிலே!

    சருகான மரத்திலும் நீ
    சாய்ந்தாடும் கொடியிலும் நீ
    பசுமைநிறச் செடியிலும் நீ
    பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ

    எங்கெங்கு காணினும் உன்றன் வண்ணம்
    மனமகிழ்ச்சியை அளிக்கும் அதுவே திண்ணம்
    அதில் உருவாகும் ஆயிரம் எண்ணம்
    அத்தனையும் புதுப்புது ஜாலவர்ணம்

    மதுரை மீனாட்சி கையில் நீ
    மார்கழி நாயகி கோதை கையிலும் நீ
    நல்ல சேதிகள் நாளும் சொல்ல
    நாங்களும் இருக்கிறோம் அவ்வழகைக் காண
    கிளியே கிளியே நீ பறந்து போகாதே!

    *****

    ”அடுத்தவர்க்குக் கொடுக்க மனமில்லா மாந்தர்களே! ஈத்துவக்கும் இன்பத்தைக் கிள்ளைகளிடம் கற்பீரே!” என்று இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கிளிகள் பாடம்…

    அடுத்த வேளை உணவிற்கே
    ஆலாய்ப் பறந்திடும் ஏழையர்முன்,
    கிடைத்த உணவு போதாதெனக்
    கூடுதல் வாங்கிப் பாழ்படுத்தி
    அடுத்த வர்க்கும் கொடுக்காத
    அன்பே யில்லா மாந்தர்களே,
    கொடுத்துக் கூட்டமாயச் சேர்ந்துண்ணும்
    கிளிகள் பாடம் கற்பீரே…!

    *****

    ”வேற்றுமொழி ஓதி தினம் வாடி வதங்கும் பள்ளிச்சிறார் போலன்றிப் புனந்தோறும் சுற்றித் தினையுண்ண வா கிள்ளாய்!” என்று கிள்ளைகளை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    அன்னையுடன் ஆடிப்பழகும்
    அற்புத வாய்ப்புமின்றிச்
    சுற்றி வட்டமிட்டுச்
    கற்றிடுமோர் சூழலற்றுக்
    கூண்டில் அடைபட்டு
    வேற்றுமொழி ஓதி தினம்
    வாடி வதங்கிடும்
    பள்ளிச் சிறார் போலன்றி
    புனம்தோறும் சுற்றி நாளும்
    புதுக் காற்றைச் சுவாசித்து
    தினைவளத்தைத் தான் புசித்து
    திளைத்திட வா! என் கிள்ளாய்!

    *****

    கொஞ்சுமொழியால் என் நெஞ்சம் கவர்ந்த கிள்ளைகாள்! உமைக் காண்கையில் நான் கவிஞன் ஆகிறேன்! செடியைவிட்டு என் தோளில் ஏறுங்கள்; நாம் நட்புக் கொள்வோம்! என்று கிளிகளைப் பாசத்தோடு அழைக்கிறார் திருமிகு. பா.மஞ்சு பார்கவி.

    கூண்டுக்குள் இருந்து சுதந்திரம் கிடைத்துப்
    பறந்துவந்த பச்சைவண்ணக் கிளிகளே!
    உங்கள் பரபர ஓசைகேட்டு ஓடி வந்தேன்
    அங்கே றெக்கை விரித்து அமர்ந்திருந்த
    ஒரு கிளியைப் பிடித்தது!

    அதைப் பார்க்க அருகில் சென்றபோது
    என் ஓசையைக் கேட்டு எங்கோ ஒளிந்துகொண்டது!
    ஆனால் பழுத்த மிளகாய்போல் உன்மூக்குக்
    காட்டிவிட்டது கிளியே நீ அங்கே என்று!

    கொஞ்சுகின்ற கிளியே! என் மனதைக்
    கொள்ளை அடித்ததைச் சொல்வாயோ!?
    உன் வசியம் செய்யும் விழி
    என்னை மயக்கிடச் செய்யுதே!

    உன் கொஞ்சும் பேச்சு என்னைக் கவர்ந்திடுதே!
    சொன்னதைச் சொல்லும் வித்தை எங்குக் கற்றாய்?
    கிளியே உன்னைப் பார்க்கும்போது
    கவிதை என்னும் கண்மணியைக்
    கரம்பிடித்து நான் கவிஞன் ஆகிறேன்!

    செடியில் அமர்ந்து என்ன செய்கிறாய்?
    பறந்து வந்து என் தோளின்மேல்
    அமர்ந்துவிடு நாம் நட்புக்கொள்வோம்!

    *****

    ”ஆபரணங்களில் பதிக்கப்படும் மரகதக் கல்லைப்போல் மரத்தை அலங்கரிக்கும் கிளிகளே! உம் எச்சில்கூடப் புவியைப் பசுமையூட்டப் பயன்படுகின்றது!” என்று கிளிகளுக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார் திருமிகு. அபிநயா சம்பத்.

    வறண்டு நிற்கும் குச்சிகளை
    அலங்கரிங்க அதில் அமர்ந்திருக்கும் கிளிகளே….!

    பெண்களின் கழுத்தை அலங்கரிக்கும்
    ஆபரணங்களை, மேலும் அழகூட்ட அதில்,
    பதிக்கப்படும் பச்சை மரகத மணிகளைப் போன்று
    அத் தாவரங்களை அலங்கரிக்கின்றீர்….!

    நீங்கள் அமர்ந்ததால் என்னவோ,
    அச்செடியில் மாத்திரம் பச்சை இலைகளின் சங்கமம்….!

    மனிதர்களின் கொடிய செயலால் இப்படி
    வறண்டு கிடக்கின்றது இப்புவி!
    ஆனால் உங்களின் எச்சில் கூட
    இப்புவியைப் பசுமையாக்குகின்றது….!
    உங்கள் எச்சில் கூட இப்புவியை
    பசுமையாக்குகின்றது பச்சை கிளிகளே…!

    சாய்ந்து வறண்டு விழப்போகும்
    அந்தச் செடிகளைப் பிடித்து இப்புவியில்
    பசுமையை நிலைநாட்டுகிறீர்….!
    இந்த மனிதர் கூட்டம் உங்களிடம்
    பாடம் கற்க வேண்டும்!

    *****

    ”கிளியே! சுதந்தரமாய்ப் பறந்துதிரிந்த உன்னைக் கூண்டிலடைத்துச் சீட்டெடுக்கப் பழக்கியதேன் மானுடன்? சிறகைவிரித்து மெல்ல விண்ணைநோக்கிப் பறந்திடு! வெற்றிக்கனி உண்டு மகிழ்ந்திடு!” என்று கிள்ளைக்கு நல்லுரை நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கூண்டுக்குள் கிளியே
    உன்னைக் கண்டு கண்டு
    சுதந்திரமாய்ப் பறந்து திரிவதைக் கண்டதும்
    சொர்க்கம் என்று நினைத்தேன்

    பறந்து திரிந்து காய் கனிகளை
    உண்டு மகிழ்ந்த உன்னைச்
    சிறகொடித்துக் கூண்டிலடைத்துச்
    சிறு உணவிற்குச்
    சீட்டெடுத்துக் கொடுக்க பழக்கியதேன்?

    எடுத்துக் கொடுக்கும் சீட்டை வைத்து
    எதிர்காலம் சொல்லி முடிக்க
    எல்லாம் அவன் செயல் என்று அறிந்தும்
    எதிர்காலம் அறிந்து நீ என்ன செய்வாய்?

    எதிர்வரும் நிகழ்வுகளை
    எதிர்பார்த்துக் காத்திருக்கக்
    கவலை உன்றன் நெஞ்சில்
    மெல்லக் குடிபுகுமே!

    ஜோதிடத்தில் வைத்த நம்பிக்கையை
    உன்மீது வைத்துத் தன்னம்பிக்கையோடு முயன்றிடு!
    சிறகை விரித்து மெல்ல விண்ணை நோக்கிப் பறந்திடு!
    வெற்றிக்கனியை உண்டு மகிழ்ந்திடு!

    மானிடரின் ஜாதகத்தைச்
    சொல்லி முடிக்க நீ உதவிட
    உன்னைப் பற்றி இங்குச் சொல்லி
    ஜோதிடனாய் நான் மாறினேனோ?

    *****

    அழகிய பாமாலைகள் புனைந்து பசுங்கிளிகளுக்குச் சூட்டிமகிழ்ந்த கவிஞர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    என் நிற மரங்களெல்லாம் இன்று
    செந்நிறமாய் மாறி நிற்பதறிந்து
    குடும்பத்துடன் ஓடிவந்து பார்த்தேன்…

    திரும்பிய திசையெங்கும் பச்சை கண்டு
    திக்கெட்டும் மானுடர் இச்சை கொண்டுத்
    திகைப்புடன் நம் தேசம் புகுந்ததொரு காலம்!

    வளங்கள் அனைத்தும் அழித்து
    வானுயரக் கட்டிடங்கள் செழித்து
    உயிரினங்கள் மாற்றுதேசம் தேடுது இக்காலம்!

    தாய் மண்ணைப் பிரிந்து
    தாயிழந்த பிள்ளையாய் வறிந்து
    தவித்துத்தான் நிற்கிறோம் அந்நிய தேசத்தில்!

    வாயற்ற ஜீவனென்று விட்டுவிட்டாய்
    வாழ்க்கை என்பதைத் தொலைத்துவிட்டாய்
    என் கதி விரைவில் உனக்கென்பதை மறந்துவிட்டாய்!

    நான் தொலைந்துபோனது போல்
    நீ தொலைந்து போகுமுன்னே நிதானமாய் யோசி!

    கண்ணை அழித்து ஓவியம் வாங்கி
    மண்ணை அழித்துச் சொத்துக்கள் சேர்த்து – உன்
    மக்களை செவ்வாய் கிரகம் அனுப்பும் எண்ணமோ?

    பசுமைதனை அழிக்குமுன்னே பலமுறை யோசி – உன்
    தலைமுறை வாழ வழிவிட யோசி!

    ”கண்ணை அழித்துச் சித்திரம் வாங்குதல்போல், மண்ணை அழித்துச் சொத்துக்கள் சேர்க்கும் மானுடா! இத்தேசத்தை அழித்துச் செவ்வாய்க் கோள்புக உத்தேசமா?” என்று மானுடனால் புவிக்கு நேரும் கெடுதியை நச்சென்று கவிதையில் பதிவுசெய்திருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • வாழ்ந்த விக்கிப்பீடியா!

    வாழ்ந்த விக்கிப்பீடியா!

    சாமிநாதன் ராம்பிரகாஷ்  

    எல்லோரும் வரலாறு, காதல், இலக்கியம் என்று எழுதிக்கொண்டிருந்த போது, இயந்திரம், இயற்பியல் என்று அறிவியல் சார்ந்த சிறுகதைகளைப் படைத்தார். அதுவும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாய்.

    அவர்தான் எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன்.

    நம் முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் படித்த அதே ஆண்டில்தான் இவரும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தார். துறைகள் வெவ்வேறு. அப்போது அதிகம் சந்தித்துக்கொண்டதும் கிடையாதாம்.

    மத்திய அரசாங்க நிறுவனங்களான விமானத் துறையில் பதினான்கு ஆண்டுகள் டில்லியில், பிறகு பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் எனப் பணியாற்றியவர்.

    வாக்களிக்கும் ஈ.வி.எம். எந்திரத்தை உருவாக்குவதில் தலைமை வகித்துச் சாதனை புரிந்தார்.

    பொறியாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பலப் பரிமாணங்களில் தனது பன்முகத் தன்மையைக் காட்டி அசத்தியவர்.

    இவரது கதைகள் மட்டுமல்ல, அவற்றுக்கு இவர் வைக்கும் தலைப்பும் மிக வித்தியாசமானவை.

    உதாரணமாக “நில்லுங்கள் ராஜாவே”, “ஆ”,  “நைலான் கயிறு”, “திமிலா”, தேஜஸ்வினி எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    இன்று நாம் பயன்படுத்தும் ஹாலோகிராம் பிசிக்ஸ், புஷ் நோட்ஸ், தொடு திரை, சிலிகான் ஜாலங்கள் போன்றவற்றை 1978ஆம் ஆண்டே கூற ஆரம்பித்துவிட்டார், அவரின் எழுத்துகளின் மூலமாக.

    அவரின் எழுத்துகள் மிக நேர்த்தியானவை, படிப்பவரை எளிதில் கவரக்கூடியவை.

    அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றே அவரின் ஆற்றலுக்குப் பெரும் சாட்சி! காட்சிகளின் விவரிப்பு, கதாபாத்திரங்களின் ஆழம், கற்பனை என நம்மையும் அந்த ஸ்ரீரங்கத்து வீதிகளுக்கே கொண்டு சென்று விடும்.

    ஒரு கட்டத்தில்  இவரது எழுத்துகள் இடம்பெறாத பத்திரிக்கை, தமிழகத்திலே இல்லை என்ற நிலை வந்தது.

    கதை, கட்டுரை, கேள்வி பதில் பகுதி, இலக்கணம், இலக்கியம், வாழ்வியல் அனுபவங்கள் எனப் பல்வேறு வகையில் மக்களுடன் தொடர்பில் இருந்தார்.

    இயக்குநர் இமயம் கே.பி. அவர்கள் இயக்கிய “நினைத்தாலே இனிக்கும்” என்ற படத்திற்குத் தான் முதலில் வசனம் எழுத ஆரம்பித்தார்.

    பிறகு அவர் எழுதிய விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ, காயத்திரி, பிரியா போன்றவை திரைப்படமாக எடுக்கப்பட்டன.

    ஒரு கட்டத்தில் ஷங்கர், மணிரத்னம் ஆகிய இருவருக்கும் ஆஸ்தான எழுத்தாளர் ஆனார்.

    ஆயுத எழுத்து, அந்நியன், ரோஜா, இந்தியன், சிவாஜி, எந்திரன்  போன்ற படங்களில் இவரது வசனம் மிகப் பிரபலம் அடைந்தது.

    பாய்ஸ் படத்தில் இவரது வசனங்கள் எதிர்ப்பிற்கு உள்ளாயின. அதையும் அவர் மிக லாகவமாகக் கையாண்டார்.

    அவர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைச் சுருக்கமாகத் திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு மணி சாருக்காகத் தயார் செய்து வந்தார். ஆனால் அது முடிவுறும் தறுவாயில் இறைவன் அடி சேர்ந்துவிட்டார்.

    அவரது நினைவேந்தல் விழாவில்,  இயக்குநர் ஷங்கர் இப்படிப் பேசினார்.

    “கொஞ்சம் கூட அலட்டல் அற்றவர், வேஷம் கிடையாது, மிக எளிமையானவர், முகஸ்துதி விரும்பாதவர். இந்தியன் படத்திற்காக அவரைச் சந்திக்கச் சென்றேன் அப்போது அவர் விகடனில் பொறுப்பு ஆசிரியர்.

    வந்தார், கதையைக் கேட்டார்… ஓகே பண்ணலாம் என்றார் .

    சம்பளம் பற்றிக் கேட்டேன் போன படத்துக்கு என்ன குடுத்தீங்களோ அதே போதும் என்றார்.

    அவருக்குப் புதிய எண்ணங்களே பெரிது , காசு பணம் அல்ல. மேலும் கமலஹாசன் அவர்களுடன் பேசப் பெரிதும் உதவியாக இருந்தார்.

    மேலும்  எனக்காக அவரிடம், ஷங்கர் நல்லா அருமையா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருக்கார், நீங்க வந்து நடிச்சு குடுத்தா மட்டும் போதும் என்று கூறினார்”

    இவ்வாறு இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டார்.

    விக்கிப்பீடியாவாக வாழ்ந்த சுஜாதா, நம் நினைவுகளில் இன்றும் வாழ்கிறார்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-13

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-13

    தி. இரா. மீனா      

    காட்டகூட்டய்யாவின் மனைவி ரேச்சவ்வே:

    ரேச்சவ்வே என்ற பெண் வசனகாரரான இவரின் கணவர் பெயர் காட்டகூட்டய்யா. “நிஜசாந்தேஸ்வரன் “ இவரது முத்திரையாகும்.

    “மலடான பசு பால் கறக்குமா?
    விரதம் கடைப்பிடிக்காதவரோடு இணையலாமா?
    விரும்பினால் நீ சேர்ந்து கொள் ;நான் சேரேன்
    நிஜசாந்தேஸ்வரனே”

    காடசித்தேஸ்வரா:

    சித்தகிரி மடத்தின் தலைமைப் பொறுப்பு இவரது காயகம். ”காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க நிர்மாயப் பிரபு“ இவரது முத்திரையாகும்.

    1. “இன்று கவலையுள்ளோர் பன்றிகள்
    நாளைய கவலையுள்ளோர் நாய்கள்
    தன் கவலையுள்ளோர் துறவிகள்
    உன் கவலையிலிருப்போர் சரணர்கள்
    காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க
    நிர்மாயப் பிரபுவே”

    2. “ஜங்கமரைக் கண்டால் கோபிப்பர்
    துறவிகளைக் கண்டால் வணங்குவர்
    இலிங்கம் கண்டால் ஒதுங்குவர்
    சிவவழிபாடெனில் திட்டுவர்
    நரபூசையெனில் மகிழ்வர்
    குரு தந்த இலிங்கம் நம்பமாட்டார்
    அந்தணன் உயர்வு பறையன் தாழ்வென
    நூற்றியோரு  சாதிகள் கூடியிருக்க
    கள்வனொருவன் இலிங்கமென நட்டு வைத்த ஒன்றிற்கு
    நோன்பிருந்து நியமம் காப்பர்
    இது போன்ற பக்தர்களுக்கு  எப்படி அருள்வான்
    காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க
    நிர்மாயப் பிரபுவே”

    காலகண்ணிய காமம்மா:

    கயிறு திரிக்கும் காயகம் இவருடையது. “நிர்பீத்த நிஜலிங்கம்” இவரது முத்திரையாகும்.

    “இலிங்கத்தில் என் புலன்களை இணைப்பேன்
    குருலிங்க சரணரின் பாதம் வணங்குவேன்
    இழிவான விரதத்தவரை அழிப்பேன்
    நிர்பீதி நிஜலிங்கத்தில்”

    கின்னரி பிரம்மய்யா:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்தவரை பொற்கொல்லனாக காயகம். கல்யாண் நகருக்கு வந்தபிறகு கின்னரி என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தொதங்கி அதையே காயகமாகக் கொண்டதால் கின்னரி பிரம்மய்யா ஆனார்.அக்கமாதேவியின் மீது உயர்ந்த மரியாதையுடையவர். “மகாலிங்கத் திரிபுராந்தகா” இவரது முத்திரையாகும்

    “ஆடை பாலை பொன் பாத்திரத்தில் பருகுவது பெருமையெனில்
    மண் பாத்திரத்தில் பருகுவது பெருமையற்றதா?
    சிவவழிபாடு செய்கிற உடல் புனிதமின்றிப் போகுமோ
    மகாலிங்க திரிபுராந்தலிங்கமே? “

    கீலாரத பீமண்ணா:

    பசுமாடு வளர்க்கும் காயகம் இவருடையது. “ஹரிபுர திரிபுராந்தகாலிங்கா “என்பது இவரது முத்திரையாகும்.

    1. ’கற்பூர விளக்கில் திரி வைத்து எரிக்க முடியுமா?
    புல்லும் தழையும் கொண்டு நெருப்பெரியுமா?
    தன்னுடலில் குத்தி வாளின் கூர்மையை நிரூபிக்கலாமா?
    அந்தந்த குணங்கள் பொருந்தும் அததற்கு
    மெய்லிங்கமறிந்தவனுக்கு வேறுபாடு புரியும்
    திரிபுராந்தகலிங்கமறிந்தவன் செயலிது”

    2. “வேட்டைக்காரன்,மீனவன் ,பொற்கொல்லன் போல
    வெறும் சொல்லில் பிரம்மம் பேசி சம்சார வாழ்வில்
    மூழ்கியும் வெந்தும் போகிறவர் பிரம்மத்தில் எப்படிச் சுகம்
    பெறுவர்?அறிவோடு வேற்றுமைகளைக் களைவோரே
    திரிபுராந்தகலிங்கனை வழிபடுவதற்குரியர்”

    குஷ்டகி கரிபசவேஸ்வரா :

    குஷ்டகி நகரிலுள்ள கல் மடத்தின் தலைமைப் பொறுப்பு இவரது காயகம். ”அகண்ட பரிபூர்ண கனகலிங்க குரு சென்ன பசவேஸ்வரா“ இவரது முத்திரையாகும். இயல்பான நிலையிலான சொற்கள் வசனங்களில் இடம் பெற்றுள்ளன.

    1. “இடுப்பின் இலிங்கம் மறந்து
    கோயிலின் இலிங்கம் முன்னால் நின்று
    சொற்களை வாரியிறைக்கும்
    திருடர் புலையர் முகம் காணக் கூடாது
    அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
    சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

    2. “ஒழுக்கம் என்பதென்ன? அது சூலமா?
    பளிங்கு நீரை சட்டியில் எடுத்து வருவது ஒழுக்கமா?
    பரவுகின்ற மனதை கட்டுக்குள் வைப்பதே ஒழுக்கம்
    பெண்ணின் வண்ணம் கண்டு மயங்காததுவே ஒழுக்கம்
    பருவத்தின் கர்மம் வெல்வதே ஒழுக்கம்
    அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
    சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

    3. “பல்லக்கில் அமர்ந்தால் பன்றி மன்னனாக முடியுமா?
    சேணம் போட்டால் நாய் குதிரையாக முடியுமா?
    சிறு பெண்ணொருத்தி வேசியாவாளோ?
    பொன் இரும்பாக முடியுமா?
    பக்தியில் பிழை செய்கிறவன் பார்ப்பதற்கு உகந்தவனில்லை
    அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
    சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

    கூகின மாரய்யா:

    கல்யாணில் புரட்சி நடக்கும் காலகட்டத்தில் சரணர்களைப் பாதுகாக்கும் பணியைக் கொண்டவர். பிஜ்ஜளன் படை வரும்போது அதையறியும் மாரய்யா கூவிக் குரல் கொடுத்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ததால் எச்சரிக்கை இவரது காயகமாகும். பிஜ்ஜளன்-சரணர் போராட்டத்தில் இறந்தவர்.”மக மகிம மாரேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

    “போலியான கல்லை மெருகிடுவாரேயன்றி
    அசலான கல்லுக்கு ஒளிதர முயல்வாரோ?
    சம்சாரத்திலிருப்பவனுக்கு ஆசையும் கோபமுமுண்டு
    உயர் குணம் கொண்ட சரணருக்கு இரண்டும் ஒன்றே.
    வேறுபாடற்ற இவ்வியல்பான இலிங்கம் தரித்தவன்
    மகாமகிமா மாரேஸ்வரனின் சரணராம்”

    கொட்டணத சோமம்மா:

    நெல் குத்துவது இவரது காயகமாகும்.சரணர்களின் வீடுகளுக்குச் சென்று நெல் குத்தி அரிசியாக்கித் தருவது. இந்த காயகத்தால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குருலிங்க ஜங்கம பணி செய்தவர். ”நிர்லஜ்ஜ சாந்தேஸ்வரா“ இவரது முத்திரையாகும். காயகம் சார்ந்த சொற்களே வசனத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது.

    “பதமறியாமல் குத்தினால் கிடைப்பதுநொய்யேயன்றி அரிசியில்லை
    ஈனரோடு சேர்ந்தால் நரகமல்லாது சுவர்க்கமில்லை
    அறியாமல் பிழை செய்தால் போகட்டும் ,அறிந்தே செய்யின்
    சுடுகத்தியால் செவியறுப்பார் அறிந்தும் தவறேன்
    ஆணை நிர்லஜ்ஜேஸ்வரனே “

                                 [தொடரும்]

    Share
  • சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

    சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

    தமிழிலக்கிய மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறை, 2/3/2020 திங்கள் அன்று சிக்கண்ணா அரசு கலைக்கலூரி, திருப்பூரில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் பாலசுப்ரமணீயன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் சி.வி. தீபா தொடக்க உரை நிகழ்த்தினார். அவரின் உரையில் :

    தமிழ் உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்றாகும். படித்து உணர்ந்து கொள்ள தமிழில் பல்வேறு செவ்விலக்கியங்களும் நவீனப் படைப்புகளும் உள்ளன. நம் நாட்டுப் பிதா காந்தி அவர்கள் தன் தாய் மொழியான குஜராத் மொழியில் எழுதுவதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் சுயசரிதையையும் அவரின் தாய்மொழியில்தான் எழுதினார். தாய்மொழியில் கற்பதும் எழுதுவதும் பேரின்பம் தரும். இதயத்தைத் தொடும்.. தமிழில் மாணவர்கள் படைப்பிலக்கியங்களைப் படிப்பதும், படைப்பதும் அவர்களீன் வாழ்க்கையை மேம்படுத்தும்  என்றார்.

    பொருளியல் துறைத்தலைவர் மு.கி. விநாயகமூர்த்தி, வரலாற்றுத்துறைத் தலைவர் சங்கமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்

    எழுத்தாளர்கள்  எஸ் ஏ காதர், துசோபிரபாகர், சுப்ரபாரதிமணியன், ஆகியோர் சிறுகதைப் பயிற்சிப்  பட்டறையை நடத்தினர். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், வடிவங்கள், நவீன சிறுகதை அம்சங்கள் ஆகியவை குறித்து பயிற்சிகள் அளித்தனர்.

    முனைவர் பி. கருணாகரன், தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் நன்றி கூறினார்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

    நாங்குநேரி வாசஸ்ரீ

      120. தனிப்படர் மிகுதி

    குறள் 1191

    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி

    தான் நேசிக்கவரே தன்னைய நேசிக்குத பேறு பெத்தவுக தான் காதல் வாழ்க்கயோட பயன் ங்குத விதையில்லாத பழத்த அடைஞ்சவுக.

    குறள் 1192

    வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி

    நேசிக்குத ரெண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் அன்பா இருக்கது வானம் தேவைப்படுத நேரம் மழையப் பெய்ய வச்சி உசிருகளக் காப்பாத்துததுக்கு சமானம்.

    குறள் 1193

    வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு

    நேசத்தால பிணைஞ்சு கெடக்கவுகளுக்குத்தான் (பிரிவுத் துயர்) திரும்ப வந்த பொறவு வாழலாம் ங்குத அகராதி இருக்கும்.

    குறள் 1194

    வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்

    தான் காதலிக்கவரோட நேசம் தனக்குக் கெடைக்காமப் போவுதவுக தீவினை வசப்பட்டவுகதான்.

    குறள் 1195

    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை

    நான் ஆசையா நேசிக்கவரு என்னய ஆசையா நேசிக்கலன்னா அவரால எனக்கு என்ன சந்தோசம் கெடைக்கப் போவுது?

    குறள் 1196

    ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
    இருதலை யானும் இனிது

    ஒருதலக் காதல் கொடும. காவடியோட பாரம் கணக்கா ரெண்டு பேர்க்கிட்டயும் காதல் இருக்கணும்.

    குறள் 1197

    பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்

    மன்மதன் ரெண்டுபேர் பக்கமும் வாராம ஒருத்தர் பக்கமா நிக்கதால எம் மேனி முழுக்க காதல் நோயால பசலை படருதத புரிஞ்சிக்கிடல போல.

    குறள் 1198

    வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்

    தான் நேசிக்கவரு சொல்லுத நல்ல சொல்லக் கேக்காம பிரிஞ்ச சங்கடத்துல வாழுதவங்களப்போல கல்நெஞ்சக்காரரு வேற யாரும் இருக்க ஏலாது.

    குறள் 1199

    நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
    டிசையும் இனிய செவிக்கு

    நான் நேசிக்கவரு எம்மேல அன்பா இல்லாங்காட்டியும் அவரப் பத்தி சொல்லுத புகழ்ச்சி என் காதுக்கு சந்தோசத்தக் குடுக்குது.

    குறள் 1200

    உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு

    நெஞ்சே நீ நல்லாயிரு! உன்கிட்ட நேசமில்லாதவுககிட்ட உன் சங்கடத்தச் சொல்லுத. அதுக்குப் பதில சுளுவா கடல தூர் எடுத்துவுட்டுப் போ.

    Share