இயற்கை யெனும் பெருமரணை
நொறுக்கி நிற்கும் வகையினிலே
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு!
இயற்கை யெனும் பெருவரத்தைப்
புறக்கணிக்கப் பல வகையில்
செயற்கை எனும் வழியினிலே
இறக்கை கட்டிப் பறந்ததனால்
பயன் உடைய அத்தனையும்
பயன் அற்ற தெனும்மாயை
உலகினிலே வந்தமைந்து
உலகை இப்போ உலுக்கிறதே !
விஞ்ஞானம் எனும் பெயரால்
விந்தை பல விளைந்ததுவே
அளவுக்கு மிஞ்சி விடில்
அவை அனைத்தும் ஆபத்தே
எஞ்ஞான்றும் விஞ்ஞானம்
உதவிவிடும் எனும் எண்ணம்
மண்ணுள்ளார் மன மேறி
மரண வாசல் பார்க்கின்றார்!
செயற்கை தனைச் சேர்க்கின்ற
செயல் களைய முன்வருவோம்
இயற்கை தனை இறுகணைக்க
இதயம் அதைத் திறந்திடுவோம்
அவசரமாய் நாம் அனைத்தும்
ஆக்கி விடும் மனநிலையை
அகற்றி நிற்க எண்ணிவிடின்
அகிலம் அதைக் காத்திடலாம் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.