இன்றைய உலகும் மகளிர் பலமும்

0
இன்றைய உலகும் மகளிர் பலமும்

சக்தி சக்திதாசன்லண்டன்

2020 சர்வதேச மகளிர் தினம் இன்று. அன்றைய மகாகவி பாரதி காலத்திலிருந்து இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. இம்மாற்றங்களு உள்ளாகியிருக்கும் மனித இனமும் அதனூடு பயணித்து, தம்மைப் பலவித மாற்றங்களுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும்.

ஆனால் மனத்தளவில் மானிட சமூகம் அத்தனை மாற்றங்களையும் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறதா?

சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியமா? எனும் விவாதம் பல மேடைகளில் நடைபெறுகின்றது. இவ்விவாதத்துக்குச் சார்பான வாதமும் பல வகைகளில் முன்வைக்கப்படுகின்றது.

பெண்களுக்கென ஒரு தினத்தைக் கொண்டாடுவது அவர்களை ஆண்களின்றும் பிரித்து வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடாதா? ஆணும் பெண்ணும் சமமான பலம் கொண்டவர்கள் எனும் வாதத்தை இது மறுதலிக்காதா என்றொரு வாதமும் பெண்கள்தான் அனைத்திலும் ஆண்களுக்குச் சமம் என்றல்ல அவர்களை விட முன்னேறிவிட்டார்கள் இன்னும் இத்தினம் தேவையா என்றொரு வாதமும் சில ஓரங்களில் கேட்கிறது.

ஆண்கள் என்றோர் இனமும் பெண்கள் என்றோர் இனமும் இயற்கையால் பிரித்தே படைக்கப்பட்டிருக்கிறது. மனித இனவளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையிது. அன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் இனவிருத்திக்கும் இல்லப் பராமரிப்புக்கும் மட்டுமே உகந்தவள் எனும் அடிப்படை எண்ணம், மனித மனங்களில் நிலை கொண்டிருந்தது உண்மை. அன்றைய உலகின் வளர்ச்சி அந்த எல்லைக் கோட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது.

ஆனால் மாறிக்கொண்டு வந்த காலக்கட்டத்தில் மனித அறிவின் வளர்ச்சியும் புரிந்துணர்வும் அதிகரிக்கத் தொடங்கிய பின்னும் கலாச்சாரம் எனும் விலங்கினைப் பூட்டி, பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதும் உண்மையே.

இக்கலாச்சாரப் பூட்டினைத் தகர்த்து பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கடமையில் படைப்பாளிகள் பாரிய பங்கினை வகித்துள்ளார்கள். இந்தக் கலாச்சார வட்டத்தினுள் அடைபட்டுப்போன மகாகவி பாரதியார், நிவேதிதா அம்மையாரின் சந்திப்புக்குப் பின்னரே பெண்களின் சமுதாயப் பங்கின் முக்கியத்துவத்தினை உணர்ந்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.

இத்தகைய விழிப்புணர்வு பலருக்கு அக்காலத்திலே தோன்றியிருந்தாலும் கூட எத்தனை பேருக்கு இவ்வட்டத்தினை உடைக்கும் அளவுக்கு, தமது கருத்தினை உரக்கக் கூறும் அளவுக்கு துணிச்சல் இருந்தது என்பது கேள்வியே!

இங்கேதான் எமது பாரதியார் உயர்ந்து நின்றார். அனைவருக்குள்ளும் தம்மை வேறுபட்டவராகக் காட்டுவதிலும் உணர்ந்துகொண்ட உண்மைகளை உரக்கக் கூறுமளவுக்கு துணிச்சல் கொண்டிருப்பதிலும் தனித்து விளங்கினார்.

ஒரு சமுதாயம் முன்னேறிவிட்டது என்பதையோ, நாகரிகம் அடைந்துவிட்டது என்பதனையோ எடுத்துக்காட்ட அணிந்துகொள்ளும் ஆடைகளை மாற்றிக்கொள்வதோ, அன்றி தோற்றத்தை மாற்றிக் கொள்வதோ ஆதாரமாகிவிடாது. இது ஆண்கள், பெண்கள் இரு சாராருக்கும் பொருந்தும். கலாச்சார முன்னேற்றம், நாகரிக முன்னேற்றம் என்பன பற்றிய தவறுதலான புரிதலுக்கு இன்றைய இளைய தலைமுறை ஆளாகிவிட்டதோ எனும் ஓர் அச்சம் எழாமலில்லை.

பெண்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய ஒரு வளர்ச்சியை இன்றைய உலகின் மாற்றங்கள் எந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றது என்பது விவாதத்துக்குரிய விடயம்.

முன்னேற்றம், நாகரிகம் என்பவற்றை மேற்குலக நாடுகளின் வளர்ச்சி எனும் எடைக்கல்லிலே நிறுத்துப் பார்க்கும் மனோபாவமே இன்றைய எமது பின்புல இளைய தலைமுறைகளிடம் பெரும்பான்மையாக குடிகொண்டிருக்கிறது போன்ற ஒரு நிலையே காணப்படுகிறது…

இன்றைய உலகில் பெண்களின் நிலையை, பெண்களை ஒரு ஆபாசப் பொருளாகப் பார்க்காமல், சக மனித வர்க்கமாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பெரும்பான்மையான ஆண்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதும் கேள்வியே!

நாம் கடந்து வந்த காலப் பகுதி தனக்குள் புதைத்துக்கொண்ட, தம்மைப் பலமிக்க ஆண்களாக எண்னிக்கொண்டவர்களின் செய்கைகள் பல இன்று தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன “நானும் கூட (மீ டூ)” எனும் ஒரு இயக்கத்தினூடாக இன்று சமுதாயப் பெரிய மனிதர் பலரின் செய்கைகள் சமூக ஊடகங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன…

இதன் மூலம் இன்றைய சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. இன்றைய உலகில் பெண்களின் சம உரிமை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று கூறும் அதேவேளை திறமையிருந்தும் உயர்நிலையை அடையப் பல பெண்கள் வலிமை மிக்க பெரிய மனிதர்களுக்குத் தம்மை இழக்க வேண்டிய நிலையில் இருப்பது வெளிக்கொணரப்பட்டிருக்கிறது..

அதே சமயம் இந்தச் சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்கி, சில பேர்களின் கெளரவத்தைக் குலைக்கும் வகையில் சில பெண்கள் நடந்துகொள்வதும் உண்மையே! எது எப்படி இருப்பினும் பெண்களின் வளர்ச்சிக்கான காரணிகளுக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளின் அளவு குறைந்திருக்கிறதே தவிர முட்டுக்கட்டைகள் குறையவில்லை,

இன்றும் தமது திறமைகளை வெளிக்காட்டியும் பெண்கள் எனும் ஒரே காரணத்தினால் முன்னேற முடியாமல் தவிக்கும் பலரை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாகத்தான் உள்ளது. இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஐக்கிய இராச்சியத்திலே பெண்கள் வாக்குரிமை பெற நடத்திய போராட்டங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்றவை. அத்தனை பலமிக்க போராட்டங்களின் மூலம் வாக்குரிமைகளைப் பெற்றும் கூட இன்றுவரை பல சூழல்களில் தமது திறமைக்கேற்ற தகுதிகளைப் பெறுவதற்குப் போராடும் நிலையே இன்றும் உள்ளது.

இதற்கு இன்றைய தமிழுலகப் படைப்பாளிகளாக எமது கடமைகள் என்ன? இத்தகைய ஒரு நிலையை இளைய தலைமுறைகளின் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடமை அனைத்துப் படைப்பாளிகளுக்கும் உண்டு. தமிழிலக்கிய படைப்புகளொரு புதுப்பரிமாணம் எடுக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்திலே இருக்கும் இச்சமயத்தில், பெண்ணியக் கண்ணோட்டத்தில் ஆண் எழுத்தாளர்களின் பார்வைகள் அமைய வேண்டிய தேவையைச் சர்வதேச பெண்கள் தினம் எமக்கு நினைவூட்டுகின்றது.

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, பாரதியார் முதற்கொண்டு என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் வரை எத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது நான் சொல்லிப் புரிய வேண்டிய ஒன்றல்ல.

சர்வதேசப் பெண்கள் தினம் ஏன் எனக் கேட்பதை விடுத்து பெண்களுக்கான உரிமைகளில் உள்ள விரிசல்களை வெளிக்காட்டும் படைப்புகளை வெளிக்கொணர முயல்வோம். இதுவே இச்சர்வதேச பெண்கள் தினத்தில் அனைத்துப் பெண்களுக்காகவும் நாம் செய்யும் கடமை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.