குறளின் கதிர்களாய்…(163)

 

செண்பக ஜெகதீசன்

 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு

முள்ளழிக்க லாகா வரண்.

       –திருக்குறள் –421(அறிவுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

அரசனுக்கு அறிவு

அழிவு வராமல்

காக்கும் கருவி..

 

அதுவே

பகைவர் உட்புகுந்து

அழிக்கவியலா

அரணுமாகும்…!

 

குறும்பாவில்…

 

அழிவு நேராமல் அரசனைக்

காக்கும் கருவியாம் அறிவு,  

அழிக்கமுடியா அரணாகும் எதிரிக்கு…!

 

மரபுக் கவிதையில்…

 

நாட்டை யாண்டிடும் மன்னவர்க்கு

     நலிவு யேதும் வாராமல்

கூட்டைப் போலப் பாதுகாக்கும்

   கருவி யாகும் அறிவென்பது,

கேட்டைக் கொணரும் பகைவரெலாம்

  கூடியு மழிக்க வியலாத

கோட்டை யாகும் அறிவெனவே

  கொண்டிடு நீயும் கருத்தினிலே…!

 

லிமரைக்கூ..

 

அழிவின்றி ஆண்டிடுவான் நாட்டை

அறிவுக்கருவி துணைகொண்டே, ஆகுமது

எதிரிக்கு அழிக்கவியலாக் கோட்டை…!

 

கிராமிய பாணியில்…

 

அறிவுவேணும் அறிவுவேணும்

அரசனுக்கு நல்ல அறிவுவேணும்,

அதுதானே அழிவுவராம

அவனக்காக்கும் கருவியாவும்..

 

அறிவுவேணும் அறிவுவேணும்

அரசனுக்கு நல்ல அறிவுவேணும்,

அதுதானே அவன

அழிக்கவாற எதிரியாரும்

ஒடைக்கமுடியாத கோட்டயாவும்..

 

அதால,

அறிவுவேணும் அறிவுவேணும்

அரசனுக்கு நல்ல அறிவுவேணும்…!

 

செண்பக ஜெகதீசன்

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *