க. பாலசுப்பிரமணியன்

அறிவுசால் சமுதாயமும் கற்றலும்

education-1-1

அறிவுசால் சமுதாயத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, நோக்கங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் உலகளாவிய கருத்துக்கள விவாத மேடைகளிலும் அரங்கங்களிலும் மற்றும் அறிவியல், தொழில் வளர்ச்சி கருத்துக்கணிப்புக்களிலும் இடம் பெற்று வருகின்றன. கணினியின் வளர்ச்சியாலும் மற்றும் தொலைபேசித் தொழில் நுட்பங்களின் எதிர்பாராத உலகளாவிய வளர்ச்சிகளாலும் தகவல் பரிமாற்றங்களும் அதன் வாயிலாக கற்றலில் தாக்கங்களாலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதிசயத்தக்கவையாக அமைந்துள்ளன. இந்தத் தாக்கங்கள் இன்றய காலத்தில் ஒரு குழந்தையின் பள்ளிவருகைக்கு முன்னமேயே அவர்களின் கற்றலின் போக்கை நிர்ணயித்து விடுகின்றன. பல வீடுகளில் இரண்டு மூன்று ஆண்டுகளே அடைந்துள்ள குழந்தைகள் கணினியிலும் அலைபேசிகளிலும் தன்னம்பிக்கையுடனும், திறனுடனும் உறவாடுவதைப் பார்க்கும் பொழுது மாற்றங்களின் தாக்கங்களின் வேகங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

இதை பற்றி தனது கருத்தை பீட்டர் டிரக்கர் என்ற ஒரு உலக பேராண்மைத்திறன் அறிவியல் மேதை இவ்வாறு கூறுகின்றார் :

“இனி வரும் நாட்களில் “ஏழை நாடுகள்” என்பவை அவைகளுடைய பொருளாதார இயலாமையையும் வறட்சியையும் வைத்து நிர்ணயிக்கப் படாது. ஒரு நாட்டின் “அறிவுத்திறன்களையும்’ அறிவுசால் சமுதாயத்தில் ‘அவர்களின் பேராண்மையை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படும்.” (The knowledge society will inevitably become far more competitive than any society we have yet known for the simple reason that with knowledge being universally accessible there are no excuses for nonperformance. There will be no poor countries. There will only be ignorant countries. Peter Drucker)

இந்தக் கருத்து எவ்வாறு ஒவ்வொரு நாடும் தன்னுடைய இளைய சமுதாயத்தை வரும் காலத்திற்குத் தேவையான நாட்டு வளர்ச்சிக்குத் தயாராக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்த அறிவுசால் சமுதாயத்தின் குணாதிசயங்கள் என்ன? அது எவ்வாறு கற்றலையும் அதன் தலைவிதியையும் நிர்ணயிக்க உள்ளது?

யுனெஸ்கோ என்ற உலக அமைப்பின் பல கருத்துக் கணிப்புக்களில் மற்றும் ஆய்வு வெளிச்சங்களில் காணப்பட்ட கருத்துக்கள் இவை :

  1. எல்லையின்மை (Borderlessness)
  2. வேகமான முன்னேற்றமும் ஆதிக்கமும் (Speed of change and its universality)
  3. வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமை (Access beyond success and failure)
  4. சமுதாய தொழில் ஆதிக்கங்களில் எதிர்பாராத மாற்றங்கள் (unforeseen changes in social and industrial architecture) 

இதனால் “அறிவு” செல்வப்பெருக்கிற்க்கான மூலதனமாகவும் இயந்திரமாகவும் ஆகிவிட்டதாக உலக பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “சிஸ்கோ” என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒரு மேடையில் பேசுகையில் “அறிவுசால் சமுதாயத்தில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வீழ்த்தாது. வேகமாக கற்கும் நிறுவனங்கள் மெதுவாகக் கற்கும் நிறுவனங்களை வீழ்த்தும்” என்று கூறினார். (In the Knowledge society, the big will not beat the small, the faster will beat the slower John Chambers-  Former CEO, Cisco) 

இந்த அறிவு மற்றும் தகவல்களின் வேகங்கள் பல புராதனமான மற்றும் நிரந்தரமற்ற அறிவு மாடங்களைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கின்றன. பழைய தகவல்கள், அவற்றின் மூலம் வளர்க்கப்பட்ட நுண்ணறிவுகள், அவற்றின் திறன்கள் தேவையற்றனவாகவும் காலத்திற்கு உகந்ததாக இன்றியும் அமைந்து கொண்டிருக்கின்றன. இதனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொள்ளப்படும் பாடத்திட்டங்களில் உடனடி மாற்றங்களும் அடிக்கடி மாற்றங்களும் தேவையாக அமைகின்றன. தற்போது அறிவின் வாழ்க்கைக் காலம் ஒரு சில வாரங்களே என உலக சமுதாய இயல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதன் காரணமாக “கற்றல்” என்பது பள்ளி மற்றும் கல்லூரி வரையமைப்புக்குள் மட்டுமின்றி அதற்க்கு வெளியேயும் நேரங்களையும் காலங்களையும் கடந்ததாக அமைகின்றது. எனவே தற்கால சமுதாயத் தேவைகளுக்கும் தொழில் மற்றும் அறிவுசால் தொழில்களின் தேவைகளுக்கும் உகந்தவாறு நம்முடைய கற்றலை பதப்படுத்திக்கொண்டும் வளமைப்படுத்திக்கொண்டும் இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் சமுதாயமே இருக்கின்றது. இதனால் தான் உலக அளவில் “கற்கும் சமுதாயங்கள்” (Learning communities) என்று வளரும் சமுதாயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே, கற்றலும் கற்றலைச் சிறப்பிக்கின்ற ஆற்றல்களும் ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது ஒரு தனிமனிதனுக்கு மட்டுமோ அன்றி ஒரு சமுதாயத்திற்க்கே அடிப்படைத் தேவையாகக் கருதப்படுகின்றது. எனவே தான் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்  திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் நிகழ்காலத்தை மனதில் கொண்டு மட்டுமின்றி வருங்காலத்துத் திறன்களை நினைவில் வைத்துக்கொண்டும் அமைக்கப்படுகின்றது. ஆயின் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விழிப்புணர்வு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்தப் பயணத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்தக் கற்றல் பயணத்தில் ஆசிரியர்கள் முன்னோடிகளாக இருந்து வழிகாட்டாவிட்டால் அதன்பலன்கள் மாணவர்களைச் சென்று அடைவதில்லை. ஆகவே பல நாடுகளில் ஆசிரியர்களை கற்றலில் “பங்குதாரர்களாக”  (Co-learners) கருதுகின்றனர்

ஆகவே ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய முந்திய படிப்புகளும் பட்டங்களும் தொழிலுக்கு ஒரு முகாந்திரமாக அமைந்தாலும் “தொடர் கற்றல்”  தொழில் தர்மத்திற்கு அடிப்படையானதாகத் தென்படுகின்றது. இந்தத் “தொடர் கற்றலுக்கு ” எவ்வளவுக்கெவ்வளவு அரசும் நிறுவனங்களும் உதவ வேண்டுமோ அதை விட கற்றலுக்கான ஆர்வமும் வேட்கையும் ஆசிரியர்களிடம் அதிகமாகத் தென்படவேண்டும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *