நிர்மலா ராகவன்

கர்வமும் காலணியும்

நலம்-1
கேள்வி: குள்ளமான ஒருவர் குதிகால் மிக உயரமாக அமைந்த காலணியை அணிந்தால் என்ன ஆகும்?

பதில்: எல்லாரையும்விட உயர்ந்திருக்கிறோம் என்ற பெருமை எழும். ஆனால் அது நிலைக்காது. அவர் சீக்கிரமே விழக்கூடும்.

அந்தக் காலணியைப்போல்தான் கர்வமும்.

பதவியால் வரும் கர்வம்

தாழ்மையான நிலைமையில் இருந்த ஒருவருக்கு எப்படியாவது பிறர் தன்னை மதிக்கச் செய்யவேண்டும் என்ற ஆத்திரம். எப்படியோ ஒரு சங்கத்தின் தலைமைப் பதவியைப் பிடித்தார். எல்லாரும் `தலைவரே’ என்றுதான் அவரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனை வேறு!

`சாதித்துவிட்டோம்!’ என்ற அகந்தை அவர் கண்ணை மறைக்க, தன்னுடன் பழகியவர்கள் எல்லாருமே தன்னைவிடத் தாழ்ந்தவர்கள்தாம் என்பதுபோல் நடக்கத் தொடங்கினார். அச்சத்தாலோ, அல்லது தலைவரைவிட நாம் தாழ்ந்தவர்கள்தாமே என்ற மனப்பான்மையாலோ வாய்திறவாது பின்தொடர்ந்தவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டது.

அபூர்வமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்த்தவரை பேச்சாலும் செய்கையாலும் வீழ்த்தினார்.

இப்படியே சில காலம் சென்றது. அவரது போக்கைச் சகிக்க முடியாது, ஒவ்வொருவராக விலக, சற்று பயம் ஏற்பட்டது. தன் போக்கை சிறிதே மாற்றிக்கொண்டு, அவர்களை அழைத்து மிக மிக இனிமையாகப் பேசினார்.

எல்லா மனிதர்களும் எப்போதுமே முட்டாள்களா, என்ன! ஒரு முறை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எக்காலத்திலும் நம்பத் தயாராக இல்லை. மிதப்பாக இருந்தவர் சுருங்கிப்போனார். பதவி பறிபோக, யாரும் அவரை மதிக்கவில்லை. ஓங்காரக் குரல் மெலிந்தது, உருவத்தைப்போல.

நிறைய வாழ்த்து அட்டைகள்!

`நான் அரச பரம்பரையில் வந்தவள்!’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஆசிரியை ஒருத்தி எங்கள் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டாள்.

பள்ளி மாணவர்கள் எல்லாரும் கூடும்போது, ஓரங்குல பருமனான(!) நீண்ட கழியை எடுத்துக்கொண்டு குறுக்கேயும் நெடுக்கேயும் நடப்பாள். அதிகாரம் செலுத்துகிறாளாம்! `Walking Tall!’ என்று கேலியாக ஆசிரியைகள் சிரித்தது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

பண்டிகையின்போது, “எனக்கு இந்த வருடம் எவ்வளவு வாழ்த்து அட்டைகள் வந்திருக்கிறது, தெரியுமா!’ என்று என்னிடம் பெருமை பேசினாள்.

நான் சும்மா தலையாட்டி வைத்தேன். `நீ பதவி விட்டு விலகினால், எத்தனை வரும் என்று யோசிக்க மறந்துவிட்டாயே!’ என்று நினைத்துக்கொண்டேன்.

இம்மாதிரி குறுகிய காலம் பதவி வகிப்பவர்கள் பிறரை அவமரியாதையாக நடத்திவிட்டு, அதன்பின் அவர்கள் தங்களை மதிப்பதில்லையே என்று அவமானமோ, ஆத்திரமோ அடைவது என்ன நியாயம்?

செல்லத்தால் கர்வம்

பதவி என்றுதான் இல்லை, ஒரே குடும்பத்தில் மிக அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும் கர்வம் எழுகிறது.

மூன்று ஆண்குழந்தைகளுக்குப்பின், பல வருடங்கள் கழித்துப் பிறந்தவள் ரூபா. பெற்றோர் மட்டுமின்றி, மூத்த அண்ணனுக்கும் செல்லக் குழந்தை ஆனாள்.

ஒருமுறை, அண்ணன் நடந்துவரும் வழியில் வேண்டுமென்றே காலை நீட்ட, அவன் தடுக்கி விழப்போனான். “ரூபா!” என்று அவன் இரைய, “நீ பார்த்து நடந்திருக்கவேண்டும்!” என்று தந்தை அருமை மகளுக்குப் பரிந்ததோடு நில்லாமல், அவனைத் திட்டினார்.

என்ன தவறு செய்தாலும் யாரும் கண்டிக்காததால், `தனக்கு நிகர் யாருமில்லை!’ என்ற கர்வம் ரூபாவிற்கு மேலோங்கியது. அருமை அண்ணனுக்கும் அவளைப் பிடிக்காமல் போயிற்று.

பெரியவர்களையும் எதிர்த்துப் பேசும்போது, தாய் மெல்ல விழித்துக்கொண்டாள்.

அடுத்த முறை அவள் பெரியவர்களை மரியாதைக்குறைவாகப் பேசியபோது, கன்னத்தில் அறை விழுந்தது.

பத்து வயதான அச்சிறுமி தந்தையைப் பார்த்தாள் — தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்வாரென்று எதிர்பார்த்து. அவரோ முகத்தைத் திருப்பிக்கொண்டார், `நடந்தது எதையும் நான் காணவில்லை,’ என்பதுபோல். அவளுடைய நடத்தை அவருக்கும் அதிருப்தியை விளைவித்திருந்தது.

தான் இப்படியே இருந்தால் அனைவருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விடும் என்று புரிந்துகொண்டாள் ரூபா. `ஏன் இப்படி ஆனோம்?’ என்று ஆராயத் தெரியாவிட்டாலும், இது தவறு என்றவரை புரிந்தது. குணம் மாறியது.

வித்யா கர்வம்

ஒரு சங்கீத வித்வான் தன்னுடன் வயலின் வாசித்தவரின் வாசிப்பு திருப்திகரமாக இல்லையென்று தன் வாத்தியத்தாலேயே அவரது தலையில் ஓங்கி அடித்தாராம்! இதைப் பார்த்த என் தாயார் அங்கலாய்ப்புடன் கூறினார்: “அதற்குப்பின் எந்த ஆணும் அவருடன் ஒரே மேடையில் உட்காரச் சம்மதிக்கவில்லை!”

ஒருவர் தான் மேதை என்று அதே துறையிலிருக்கும் பிறரை அவமரியாதையாக நடத்தினால், நாளடைவில் மற்ற கலைஞர்கள் மட்டுமின்றி, கலையும் அவரை விட்டுப்போய்விடும்.

அடக்கம் அமரருள் உய்க்குமோ, என்னவோ, நாம் அடக்கமாக இல்லாவிட்டால், வாழ்க்கை நம்மை அடக்கிவிடும்.

அடக்கம் என்பது நம் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பது என்பதாகாது. பொறாமை கொண்டு, பிறர் நம்மைத் தாக்க முயல்கையில், அவர்களை எதிர்ப்பதற்காக நம்மைப்பற்றிச் சற்றுப் பெருமையாகப் பேசிக் காட்டலாம். ஏனெனில், அவர்களுக்கு அம்மொழிதான் புரியும்.

எப்படி போதிப்பது?

உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பல கலைகளிலும் சிறப்பாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் முன்னிலையில் அவனைப்பற்றிப் பிறரிடம் பெருமையாகப் பேசுவது வீண் அகம்பாவத்தைத்தான் வளர்க்கும். புகழ்ச்சியை நம்பி வீழ்ந்தவர்கள் பலர்.

மாறாக, தனிமையில், `நீ கெட்டிக்காரன். சுறுசுறுப்பானவன். உனக்கே தெரியும். உன் திறமைகளை யாராவது புகழ்ந்தால், `நன்றி!’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. அதைப்பற்றி அதிகம் யோசிக்காதே. அப்புறம் சிந்திக்கும் திறன், விவேகம் எல்லாம் குறைந்துவிடும். தலைக்கனம் வந்துவிடும்,’ என்று சொல்லி வளருங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்க, மேலும் பலவற்றில் பிரகாசிப்பான்.

கனவே சுகம்

சிலர் ஒரு காரியத்தைச் செய்யும்போதே அதைப்பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். இவர்கள் கனவிலேயே இன்பம் காண்பவர்கள். சாதிப்பது அப்படி ஒன்றும் பெரிதாக இருக்காது.

காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பதற்குள் அதைப்பற்றிப் பிறருடன் பேசினால், அது நல்லபடியாக முடிவது ஏது!

சிறப்பான வெற்றி அடைவேன்!

ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் `சிறுகதைப்போட்டி’ என்று அறிவித்திருந்தார்கள். பரிசுகள் தங்கத்தாலான கைகடிகாரங்கள். எனக்கு இரண்டாவதாக இருந்ததைப் பிடித்தது. `நான் இதைப் பெறப்போகிறேன்!’ என்று நிச்சயித்துக்கொண்டேன்.

அதற்கு முந்திய வருடம் அப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். பிரசுரத்துக்கு ஏற்றதாகக்கூட என் கதை தேர்வு செய்யப்படவில்லை. அயராமல், `அடுத்த வருடம் நிச்சயம் பரிசு பெறுவேன்!’ என்றேன் என் குடும்பத்தினரிடம்.

கர்வமோ, அசட்டுத் தைரியமோ இல்லை. உறுதியாக ஒன்று கிடைக்குமென்று நம்பினால், அந்த நம்பிக்கையே நம்மை வழிநடத்தும். வாரத்தில் நான்கு நாட்களாவது அமெரிக்க வாசகசாலைக்குச் சென்று, கதைகளை எழுதும் விதங்களை விரிவாக விளக்கும் பத்திரிகைகளைப் படித்தேன்.

அரைமணி நேரத்தில் ஒரு கதை எழுதி, அதை அப்படியே விட்டுவிட்டு, சில நாட்கள் கழித்து திருத்தி அனுப்பினேன்.

நான் விரும்பிய கடிகாரமே கிடைத்தது. விரும்பியதை அணியும் ஆசை இருக்கவில்லை. பிறரது பாராட்டோ, பத்திரிகை செய்தியோ பெரிதாகப் படவில்லை. ஆங்கிலத்திலும் நிறைய எழுத வேண்டும், எழுத முடியும் என்ற நம்பிக்கையே பெருமகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது.

நமக்குப் பிடித்ததை நம்மால் இயன்றவாறு முனைப்புடன் செய்தால் வெற்றி கிடைப்பதை யாரால் தடுக்க முடியும்?

ஆனால், `சாதித்துவிட்டேன்!’ என்று கர்வப்பட்டால் அத்துடனேயே திருப்தி அடைந்துவிடுகிறோம். அதற்குமேல் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காது.

ஒரு மலை ஏறிவிட்டீர்களா? அடுத்து எந்த மலை என்று யோசியுங்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *