-தமிழ்த்தேனீ

தென்னை மரம் ஏறுபரை அழைத்தேன் தேங்காய்ப் பறிக்க. ஐந்து முறை அழைத்தும் வருகிறேன்…வருகிறேன் என்று சொல்லியே ஏமாற்றிக் கொண்டிருந்தார். ஆறாவது முறையாக வந்தார். ஏம்பா வரேன்னு சொல்லிட்டு வரமாட்டேங்கற, அதனாலே உனக்காகக் காத்திருந்து காத்திருந்து என் வேலையெல்லாம் தள்ளிப் போயிட்டே இருக்கே, ஏன் இப்பிடி செய்யறீங்க, இன்னிக்கு வரேன் அல்லது இன்னிக்கு முடியாது நாளைக்கு வரேன்னு சொன்னா நாங்களும் எங்க வேலையைப் பாப்போமில்ல, உனக்கு நான் கொடுக்கும் பணத்தில் ஏதேனும் குறை இருந்தா சொல்லு என்றேன்.

அதெல்லாம் இல்லே சார். நீங்க பணமும் குடுக்கறீங்க சாப்பாடும் போடறீங்க தண்ணீர் வேணுமான்னு கேட்டுக் குடுக்கறீங்க எங்க தொழில்லே இருக்கற கஷ்டத்தைப் புரிஞ்சவங்க நீங்க. என்று தலையைச் சொறிந்தார் அவர், இப்ப புரியுதுப்பா சரியா பணம் குடுக்காதவங்க வீட்டுக்குதான் சொன்ன நேரத்துக்கு போவீங்களா என்றேன் நான்.

அப்பிடியெல்லாம் இல்லீங்க நீங்க கோவிச்சுக்க மாட்டீங்க அப்பிடீங்கற தைரியம்தான் என்றார் அவர். என்னை ஏமாளின்னு நீயும் புரிஞ்சிகிட்டியா என்று சிரித்தேன் நான். அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க நீங்க நல்லவரு என்றார் அவர். சரி என் பிள்ளை வெளிநாட்டிலேருந்து வந்திருந்தான் அவனுக்கு நம்ம வீட்டிலே காய்க்கிற இளநீரைப் பறிச்சுக் குடுத்தா ஒரு சந்தோஷம் அதுனாலேதான் கூப்பிட்டேன். அவன் வெளிநாட்டுக்கு போயிட்டான்.

ஆனா நான் எப்பிடியோ கஷ்டப்பட்டுத் தொறட்டிக் கொம்பு வெச்சு ரெண்டு இளநீரைப் பறிச்சு அவனுக்கு குடுத்தேன் என்றேன் நான். மன்னிச்சிருங்க அடுத்த முறையிலேருந்து நீங்க கூப்பிட்டா உடனே வரேன் என்றார் அவர்.

இப்படி எல்லாத் தொழில் செய்வோருமே ஒத்துக்கொண்ட நேரத்துக்கு வருவதில்லை இவர்களும் மரமேறிகளே. இவர்கள் மட்டுமல்ல நாம் எல்லோரும் மரமேறிகளே என்று தோன்றுகிறது எனக்கு. நாம் சொல்லும்போது எந்த அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்காய் தோன்றும் போதுதான் உணர்கிறார்கள். ஆனால் அது காலம் கடந்த உணர்வு. அப்போது நிறைய நஷ்டங்களைச் சந்திக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமை அந்த சாலையிலே பள்ளம் இருக்கிறது; நேற்று தடுக்கியது அதனால் பார்த்து மெதுவாக செல்லுங்கள் என்று ஒருவருக்கு அறிவுரை சொன்னேன், அன்று மாலையே அவர் வீட்டுக்கு வந்தார், சார் நீங்க இனிமே எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க. நீங்க அட்வைஸ் பண்றேங்கிற பேர்லே எதையாவது சொல்றீங்க. நீங்க வாயை வெச்சீங்க நான் விழுந்தேன் என்றார். திடுக்கிட்டேன் அன்று முதல் யாருக்கும் எந்த அறிவுரையும் சொல்வதில்லை என்று முடிவெடுத்தேன்.

ஆனால் என் தீர்மானம் ப்ரசவ வைராக்கியம் போல ராமாயண வைராக்கியம் போல நீர்த்துப் போயிற்று. ப்ரசவம் ஆகும் போது பெண்கள் அந்த இடுப்பு வலி தாளாமையினால் அதுக்குக் காரணமான கணவனைச் சபிப்பார்களாம். ஆனால் குழந்தை பிறந்து அந்தக் குழந்தையின் தெய்வீக முகத்தைப் பார்த்தவுடன் குழந்தையை தன் கணவன் வந்து பார்க்கவேண்டும் என்றே ஏங்குவாளாம்–

அதைப்போல பலகாலமாக ராமாயணப் ப்ரவசனம் கேட்டும் தன் தீய வழக்கங்களை நீக்காமல் இருப்போர் தளர்ந்து வயதான காலத்திலே படுக்கையில் ஒவ்வொன்றாக அசைபோட்டு நாம் திருந்தாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப் படுவார்களாம். ப்ரசவம் ப்ரவசனம் எதுவுமே பலனளிப்பதில்லை என்று உணர்ந்தேன். ஆனாலும் வருங்கால சந்ததிகள் வளமாக வாழவேண்டுமே என்னும் கவலையால் உண்மையான அக்கறையால் என் தீர்மானமும் நீர்த்துப் போகிறது.

யார் வேண்டுமானாலும் மரம் ஏறட்டும்; மரம் ஏறுபவனை எத்தனை தூரம் தாங்க முடியும் என்கிற பழமொழி இருந்தாலும் நம்மால் முடிந்த வரை தூக்கலாம். என்றும் நம்மைத் திட்டுகிறார்களே அதனால் அறிவுரை சொல்லாமல் இருந்துவிடலாம் எப்படியோ போகட்டும் என்னும் மனக் கசப்பு வந்தாலும் அதையும் தாண்டி நம்மைத் திட்டினாலும் பரவாயில்லை… ஆயிரம் பேரில் ஒருவர் மாற்றிக் கொண்டு திருந்தினால் போதும் என்கிற முடிவுக்கு வந்து என் அனுபவங்களை அதனால் கிடைத்த அறிவை அறிவுறுத்திக் கொண்டேதான் இருக்கிறேன். என்னை ஏமாளி என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும்.–

 நானும் ஒரு மரமேறிதானே!

பின்குறிப்பு: (அடுத்த முறை தென்னை மரத்தில் ஏறுபவரைத் தொலைபேசியில் அழைத்தேன். வந்துவிடுகிறேன் சார் இந்த முறை ஏமாற்ற மாட்டேன் என்று தீர்மானமாகச் சொன்னார். ஆனால் ஐந்து முறை தொலைபேசியில் அழைக்கும் போதும் அதையேதான் சொல்கிறார் காத்திருக்கிறேன் என்று. ஆனால் இந்த முறை நானே துறட்டுக் கொம்பு வைத்துக் கொண்டு நிறையக் காய்களைப் பறித்துவிட்டேன். ஆனால் தென்னை ஓலைகளைக் கழிக்க அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.)

இப்படிக்கு மரமேறி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மரமேறிகள்!

  1. கணவன் மனைவி இருவரும் இருபதுவருடகாலமாக குடும்பம் நடத்தி இருப்பார்கள், சகல செளகர்யங்களையும் அனுபவித்து விட்டு, பிள்ளை குட்டியுடன் குடுத்தனம் பண்ணிக் கொண்டிருக்கையில்…

    ஒரு தீராத பிரச்சினை ஒன்று, அவர்களுக்குள்ளே உருவெடுக்கும், அது முடிவில் இருவரும் நிரந்தரமாகப் பிரிகின்ற நிலைக்குக் கொண்டு தள்ளும், கடைசியில் டைவர்ஸ் வரையில் சென்ற பிறகு…

    திடீரென்று ஒரு ஆசாமி எங்கிருந்தோ முளைப்பார், அவர் “ஆமாம் இருவருக்கும் ஜாதகம் கொடுத்தது யார்?.. என்பார்..

    கடைசியில், நல்லெண்ணத்தோடு ஜாதகம் கொடுத்தவன் பாடு திண்டாட்டம்தான்…

    அதேபோலத்தான் சார்…நீங்க சொல்லிய “சாலையிலே பள்ளம்” உதாரணமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *