Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • புகைபிடித்தல் கேடு தரும்!

    புகைபிடித்தல் கேடு தரும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பணப்பயிராய்ப் புகையிலையைப் பார்த்தார்கள் பலபேரும்
    இணக்கமுடன் பயிரிட்டு இன்புற்று மகிழ்வடைந்தார்
    தமக்குரிய வருவாயைத் தருகின்ற கொடையாக
    புகையிலையை மனமெண்ணி புத்துணர்ச்சி பெற்றார்கள்

    மேல்நாட்டார் கீழ்நாட்டார் விரும்பிவிட்டார் புகையிலையை
    புகையிலையைக் காசாக்கி பெருவணிகம் கண்டார்கள்
    விதம்விதமாய்ப் புகையிலையை விரும்பிநிற்கும் பாங்கினிலே
    விற்பனையில் தந்திரமாய் வெளிகொணர்ந்தார் வர்த்தகர்கள்

    அமெரிக்கா ஐரோப்பா அணைத்திட்டார் புகையிலையை
    அதன்வழியே இந்தியா பயணப்பட்டு நின்றது
    சீனாதான் முந்திவிடச் சிறகடித்துப் பறந்தது
    ஸ்ரீலங்கா புகையிலையை வரவேற்றும் நின்றது

    புகையிலையின் பரம்பலோ பெருவேகம் ஆகியது
    புகையிலையில் பலவடிவம் புறப்பட்டும் வந்தது
    போதைதரும் பொருளாகப் புகையிலையும் மாறியது
    காதலுடன் பலபேரும் கையெடுத்தார் புகையிலையை

    புகையிலையைப் பயன்படுத்திப் போதைதரும் பலபொருட்கள்
    நவநவமாய் வர்த்தகத்தில் நலங்கெடுக்க வந்தது
    வெள்ளை நிறச்சுருட்டாக கருமைநிறச் சுருட்டாக
    உள்ளங்கவர் உருவத்தில் உலகில் வலம்வந்தது

    மூக்குப் பொடியாகி முன்வந்து நின்றது
    பாக்குடன் சேர்ந்திருக்கப் பலவகையில் வந்தது
    பான்பராக் எனும் பெயரில் பக்கற்றிலும் இருந்தது
    பலவுருவம் பலவண்ணம் புகையிலையும் எடுத்தது

    புகைப்பதனால் வருகின்ற கேடுதனை நோக்கிடுவோம்
    புகைபிடித்தல் நிலைபற்றி அறிந்திடுதல் அவசியமே
    புகைபிடிக்கும் பலவிடங்கள் புகைவிடுவார் மனநிலைகள்
    அவையனைத்தும் பார்த்துவிடல் அவசியமாய் அமைகிறது

    வண்டி இழுப்பாரும் வயல்வேலை செய்வாரும்
    வாயிலே சுருட்டுவைத்து வகைவகையாய்ப் புகைவிடுவார்
    சண்டித்தனம் செய்வாரும் சமையல்வேலை செய்வாரும்
    சளைக்காமல் சுருட்டதனைத் தம்பாட்டில் சுவைத்துநிற்பர்

    வங்கிகளைப் பார்த்தாலும் வைத்தியரைப் பார்த்தாலும்
    அங்குமே சுருட்டுவகை அமோகமாய் இடம்பிடிக்கும்
    தங்கிநிற்போம் எனவெண்ணித் தனியாக மரமொதிங்கின்
    அங்கிருந்து பலபேரும் அமர்ந்திருந்து புகைத்துநிற்பர்

    பாக்கிலும் புகைத்துநிற்பர் பஸ்ராப்பிலும் புகைத்துநிற்பர்
    போக்குவரத்தில் எல்லாம் புகைவிட்டே கொன்றொழிப்பர்
    நீக்கமற புகைப்பதிலே நீள்சுகத்தைக் கண்டதனால்
    பார்க்குமிடம் எல்லாம் பயமின்றிப் புகைத்துநிற்பர்

    பேருந்தில் ஏறியதும் பெரும்சிரிப்பைத் தந்தபடி
    பெரியதொரு பைக்கற்றை பிரித்துமே எடுத்திடுவார்
    வெள்ளையாய்த் தலைநீட்டும் வெண்சுருட்டை அணைத்தெடுத்து
    விதம்விதமாய் வாயில்வைத்து விட்டிடுவார் புகையனைத்தும்

    ஊதிவிடும் புகையனைத்தும் உட்கார்ந்து இருப்போரின்
    மூக்காலே உட்புகுந்து மூச்சுக்குழல் வரைசெல்லும்
    உட்புகுந்த புகையாலே உபாதைகொண்டு நிற்போரை
    ஓரக்கண்ணால் பார்த்தபடி உறிஞ்சிநிற்பார் புகைவிட்டோர்

    பணிமனைக்குச் சென்றாலும் பலபேரும் புகைத்துநிற்பார்
    பணிபார்க்க வருவோர்கள் தலைசுற்றி அங்குநிற்பார்
    துணிவாக எடுத்துரைக்க யாருமே வரமாட்டார்
    துணிவாகப் புகைவிடுவோர் பணிமனையை நிரப்பிடுவார்

    புகைகக்கும் வண்டியிப்போது போயுமே நாளாச்சு
    புகைவிடுவோர் கூட்டத்தால் வண்டியிப்போ புகையாச்சு
    ஏறிவிடும் கூட்டமதை எவருமே பார்ப்பதில்லை
    தாறுமாறாய்ப் புகைவிட்டு தத்தளிக்கச் செய்துநிற்பார்

    படித்தவரின் கைகளிலும் பாமரரின் கைகளிலும்
    அடுக்கடுக்காய்ச் சுருட்டுவகை அமர்ந்துமே இருக்கிறது
    நடிக்கின்றார் கைகளிலும் படம்பிடிக்கின்றார் கைகளிலும்
    நாகரிகச் சுருட்டுவகை நளினமுடன் அமர்கிறது

    காலைமாலை பார்க்காமல் கணக்கின்றிப் புகைபிடிக்கும்
    காளையரின் மத்தியிலே கன்னியரும் சேர்ந்துகொண்டார்
    நாலுவேளை குடிப்பதற்குக் கஞ்சியின்றி இருப்பாரும்
    நரகமாம் சுருட்டதனை நாளுமே குடித்துநிற்பார்

    பாடசாலை செல்வோரும் படிப்பிக்கும் ஆசானும்
    பாங்காகச் சுருட்டையெலாம் பைகளிலே வைக்கின்றார்
    கிடைக்கின்ற நேரமெலாம் எடுத்ததனைக் கையில்வைத்து
    துடுக்கெனவே வாயில்வைத்துத் துள்ளுநடை போடுகிறார்

    மங்கலமாம் நிகழ்ச்சிகளில் வந்திருக்கும் பலபேர்கள்
    வாயிலே சுருட்டைவைத்து வட்டமாய்ப் புகைவிடுவார்
    அங்கிருக்கும் குழந்தைகளை அன்பான தாய்மாரை
    வந்திருக்கும் யாரையுமே மனத்திலவர் கொள்வதில்லை

    நோயிலே தாய்படுத்து நூறுமுறை இருமிநிற்பார்
    பாயிலே தாயோடு பால்குடித்து தூங்கும்பிள்ளை
    யாரையுமே பொருட்டெனவே தன்மனத்தில் நினையாது
    வாயிலே சுருட்டோடு வலம்வருவார் அவ்வீட்டார்

    இருமுகின்ற நோயாளி இருதயத்தைச் சோதிக்கும்
    எங்களது வைத்தியரும் இருமலுடன் சோதிப்பார்
    சோதித்த பின்னாலே துண்டெடுத்து மருந்தெழுதி
    சுவைத்திடுவார் சுருட்டதனை, சுருண்டுநிற்பான் நோயாளி

    நம்வாயில் சுருட்டிருப்பின் நாகரிகம் எனநினைப்பார்
    நலன்கெட்டுப் போகையிலே நாகரிகம் என்னசெய்யும்
    நலன்வருமே எனவெண்ணி நாம்செய்யும் வேலையெலாம்
    நாளடைவில் நம்சுகத்தை நசுக்கியே விட்டுவிடும்

    பலபோதைச் சரக்குகளைப் பதப்படுத்தி கலந்தெடுத்து
    பற்பல உத்திகொண்டு பாங்காக உட்செலுத்தி
    விதம்விதமாய்ச் சுருட்டையெல்லாம் விளம்பரத்தின் ஊடாக
    விற்கின்றார் சந்தைகளில் விறுவிறுப்பு வெளிப்படவே

    அதைவாங்கிக் குடிப்பவர்கள் அடிமை நிலைக்காளாகி
    வதைபட்டு வதைபட்டு வாழ்க்கையினை இழக்கின்றார்
    இதையாரும் உணராமல் இன்னுமே வாங்கிவாங்கி
    சிதையிலே போகும்படி சீரழந்தே நிற்கின்றார்

    காலையிலே சுருட்டடித்தால் களைப்பெல்லாம் நீங்குமென்றும்
    வேலையிலே புகைவிட்டால் விறுவிறுப்பாய் இருக்குமென்றும்
    நாளதுமே எண்ணியெண்ணி நன்றாகப் புகைத்துவிடின்
    நாளாக நாளாக நம்முடம்பு படுத்துவிடும்

    புகைபிடிக்கும் யாவருக்கும் பலநோய்கள் வருமென்று
    பொழுதெல்லாம் பிரசாரம் நடக்குதிப்போ நாடெல்லாம்
    புகைபிடித்தால் கேடென்னும் விளம்பரத்தை ஒட்டுபவர்
    புகைபிடித்தே ஒட்டுவதால் போதனையால் என்ன பலன்?

    நலன்கெடுக்கும் புகையிலையை நாடாது இருந்திடுவோம்
    நிலங்கெடுக்கும் புகையிலையை நெஞ்சைவிட்டே அகற்றிடுவோம்
    உளங்கெடுக்கும் உணர்வுகளை ஒழித்துவிட முனைந்திடுவோம்
    உயிர்போக்கும் போதைகளை உலகைவிட்டே ஓட்டிடுவோம்

    குடியோடு புகையும்சேர்ந்து குடிகளை அழிக்குதென்று
    குடிகளே உணரும்போதே குடியோடு புகையும்போகும்
    துணிவுடன் எழுந்துவாரீர் தூயதைச் சமைப்போம்நாங்கள்
    அணியென ஒன்றுசேர்ந்து அகற்றுவோம் புகைத்தல்தன்னை !

    குடியோடு புகைசேர்ந்து குடியனைத்தும் குலைக்கிறது
    அடியோடு அதையொழித்து ஆனந்தம் பெற்றுநிற்போம்
    படுகுழியில் வீழ்த்துகின்ற பாதைகளைக் களைந்தெறிந்தால்
    விடிவெள்ளி எம்வாழ்வில் விரைவெனவே தோன்றிவிடும் !

    Share
  • ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும் வியப்புத்தான். அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.

    அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகிறார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந்தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது. அழகான ஆண்பிள்ளை அம்மாஅப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள்ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின்றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தையைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான். அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம்” என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.

    வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடியாரின் வேண்டுதல் வீணாகிவிடுமாகுரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான். பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந்தனை அகமிருத்தி “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளையின் குரல் காதில் கேட்டதும் அளவிட முடியா ஆனந்தத்தத்துக்கும், ஆச்சரியத்துக்கும் ஆட்பட்ட பெற்ற வர்கள் தங்கருத்தை மாற்றி சன்னிதானதுக்கு ஓடோடோடி வந்தார்கள். கந்தப் பெருமான் “குருபரா” என வழைத்தார் என்பதைக் கேள்வியுற்ற பெற்றவர்கள் அந்தக் குருபரனோடு சேர்த்து , குமரனருளால் பேசுந்திறன் வாய்த் தமையால் “குமரகுருபரன்” என்றே தமது பிள்ளைக்கும் பெயரினைச் சூட்டி பேரானந்தம் அடைந்தார்கள் என்று அறிந்திட முடிகிறது. திருச் செந்தூர் பதியில்த்தான் இந்த அற்புதம் நிகழ்ந்ததாய் குமரகுருபரர் வரலாற்றால் பார்க்க க்கூடியதாக இருக்கிறது. ஐந்து வயதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்த பிள்ளை கந்தர் கலி வெண்பா என்னும் தத்துவ நூலினை எப்படித் தந்திருக்க முடியும் என்று ஒரு ஐயம் எல்லோரிடமும் எழத்தான் செய்யும் அல்லவா?

    இங்குதான் ஒரு கருத்தை மனமிருத்துதல் யாவருக்கும் அவசியமாகிறது. மூன்று வயதில் ஒரு குழந்தை அந்த முதல்வனையே காணுகிறது. காணுவதுடன் நின்றுவிடாமல் தமிழ் மழையாகவும் பொழிந்து நிற்கிறது. அதுவும் சாதாரண தமிழ் மழை அல்ல! இனிமைத் தமிழ் மழை! இங்கிதத் தமிழ் மழை! செறிவான தமிழ் மழை! சிந்தனைகள் நிறைந்த தமிழ் மழை! அநதச் சின்னவயதில் எப்படி அந்தக் குழந்தை அப்படிப் பாடியது என்பதையும் இங்கு மனமிருத்திப் பார்ப்பது உகந்ததாய் இருக்கும் அல்லவாஅதைத்தான் முன்னைத்தவம்முன் ஞானம் என்கிறோம். இங்கே ஐந்து வருடங்கள் பேசாதிருந்த பிள்ளை பேசப் புறப்பட்டதும் அதன் வாயிலிருந்து வெளிவந்ததும் தமிழால் ஆகிய தத்துவமே மூன்று வயதில் ஞானம் அன்று ஞானசம்பந்தக் குழந்தைக்கு வாய்த்தது. பேசாதிருந்த பிள்ளைக்கு ஐந்துவயதில் ஞானம் வாய்த்திருக்கிறது.

    ஞானம் என்பது எப்பொழுது யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் அது கிடைக்கும் வெளியில் வரும் என்பதுதான் உண்மை நிலையாகும். அப்படித்தான் குமரகுருபரரை நாம் பார்த்திடல் பொருத்தமாய் அமையும். ஐந்து  வயதுவரை மோனத்தில் இருந்திருக்கலாம். மெளனம் என்பதுதான் மிகவும் உயர் நிலையாகும். அந்த மெளனத்தில் அந்தப் பரம் பொருளினையே அகமெண்ணியபடி வாய் பேசாதும் இருந்திருக்கலாம். என்று ஒரு சிந்தனையையும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் தெரிவிப்பதும் நோக்கத்தக்கது. அவ்வாறு அவர்கள் தெரிவிப்பதற்குக் காரணம் குமரகுருபரர் வழங்கிய படைப்புக்கள் எனலாம். இலக்கணம், இலக்கியம், தத்தவம், அறியாதவர், அவற்றைத் தேடி முறைப்படி கற்காதவர் எப்படி – இத்தனை அரியவற்றை ஆக்கினார் எனும் நிலையில் ஆன்மீகத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு உடன்பாடு சொல்லாமல் இருந்திட முடியாமலே இருக் கிறோம் அல்லவா! இங்குதான் கருவிலே திரு நிறைந்தவராக குமரகுரு பரர் இருந்திருக்கிறார் என்பது புலனாகி நிற்கிறதல்லவா! இப்படியாய் அமைந்தவர்களைத்தான் ஞாவான்கள் என்று அழைக்கின்றோம்.

    வாய்ந்திறந்ததும் வெளிவந்த “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” சாதாரணமானது அல்ல. அதனுடைய உட்பொருளினை உற்று நோக்கும் ஆன் மீக ஆளுமைகள் அதனை “குட்டிக் கந்தபுராணம்” என்று உச்சிமேல் வைத்துப் போற்றியே நிற்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். கந்தபுராணத்தை எங்களின் சொந்த புராணம் என்று கொள்ளும் ஒரு வழக்கம் எங்களிடம் நிறைந்தே காணப்படுகிறது. அந்தப் புராணத்துடன் இந்த குட்டிக் கந்தபுராணத்தையும் கருத்திருத்துவதும் சிறப்பாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன். கந்தர் கலிவெண்பாவில் – திருமுருகாற்றுப்படையினையும் காணலாம். அருணகிரியாரின் திருப்புகழையும் காணலாம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிறப்புக்களையும் கொண்டு விளங்குவதால் குமரகுருபரரின் முதல் வெளிச்சமாய் கந்தர் கலிவெண்பா பிரகாசித்துப் பக்தியுலகில் நிற்கிறது என்பதை மனமிருத்தல் வேண்டும். பக்திச்சு வையினையும்தத்துவ செறி வினையும்சொற் சுவையினையும்பொருட் சுவையினையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் நோக்க த்தக்கது. இதனைப் பாராயணம் செய்தால் வந்தவினையும்வருகின்ற வினைகளும் காணாமலே ஓடி விடும் என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். 

    குமரகுருபரர் ஆன்மீக வாதியாய் இருந்தார். அறநெறி காட்டுபவராய் இருந்தார். சமுதாய சிந்தனை மிக்கவராகவும் இருந்தார். தமிழ் இலக்கியப் பரப்பில் முத்திரை பதித்தவராகவும் இருந்தார். அது மட்டுமன்றி தவநெறியில் உயர்ந்தும் தனி ஒழுக்கத்தில் தலை சிறந்தும் அவர் இருந்திருக்கிறார். அவரின் அளவிட முடியாத ஆற்றல்களை யாவரும் அறியும் வண்ணம் அவரின் ஆக்கங்கள் அனைத்துமே அடையாளமாக இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான குமரகுருபரர் – தனது குருவைத் தேடியதும்குருவின் ஆணை யின்படி சைவத்தைப் பரப்பிடப் பயணப்பட்டதும் அதற்காக அவர் பட்ட சோதனைகளும்வேதனைகளும் அவரை உயர் ஞானியாகவே பார்க்கும் வண்ணம் ஆக்கி யேயிருக்கிறது.

    மாசிலா மணியான ஒருவர் இவரின் குருவாய் வாய்த்ததே ஒரு சோதனைதான். “உன்னால் பதில் சொல்ல முடியா நிலையில் உன் னை யார் கேள்வி கேட்கிறாரோநீ அவ்வேளை சொல்வதறியாது நிற்கிறாயோ அங்குதான் உன் குருவைக் காண்பாய்” என்று அசரீரி அவருக்கு குறிகாட்டி நின்றது. “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்னும் பெரிய புராணப்பாடலின் அனுபவத்தைச் சொல்லு என்று கேட்க அதற்கு உரிய பதிலினைக் கூறவியலாது மெளனித்து நிற்கிறார் குமரகுருபரர். அப்பொழுது அவர் மனத்தில் “கண்டேன் குருவை” என்னும் உணர்வு எழுகிறது. அவரின் அடி பணிகிறார். தொடர்கிறார் அவரிட்ட பணியியை. அந்தக் குருதான் தருமபுர ஆதீனத்தின் தலைமைப் பதவியிலிருந்த மாசிலாமணித் தேசிகராவார்.

    தமிழகத்திலிருந்து வடநாட்டுக்குச் சென்று சைவத்தை நிலை நிறுத்திஅங்கு சைவத்துக்கென ஒரு மடத்தினை நிறுவியர் என் னும் பெருமையினைப் பெற்றவராக குமரகுருபரர் மட்டுமே விளங்குகிறார்அதுவும் தமிழராக இருந்திருக்கிறார் என்பதை மனமிருத்துவதே  முக்கியமாகும். குமரகுருபரர்  வடநாடு சென்று மடம் அமைத்திட உத்தரவு பெறுவதற்கு அக்காலத்தில் இருந்த இந்துஸ்தானி பேசுகின்ற முகம திய மன்னனனையே நாடும் தேவை இருந்தது. இவருக்கோ இந்துஸ்தானி தெரியாது. அவனுக்கோ தமிழ் தெரியாது. ஆனால் அவனுடைய தாய் மொழியில் சரளமாய் பேசினார் குமரகுருபரர். எப்படி இது நடந்தது. அதனை விளக்கவே “சகல கலா வல்லி மாலை” சான்றாக வந்து நிற்கிறது. சகலகலாவல்லி மாலையினைப் பாடியதும் இந்துஸ்தானி அவர் நாவில் அமர்ந்து விடுகிறது. சகலகலைகளுக்கும் அதிபதியான கலைமகள் கருணையினைப் பெற்று விடுகிறார் குமரகுருபரர். சைவத் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகவே சகலகலா வல்லிமாலையினைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும்ஒவ்வொரு பொருளும், உள்ளத்தில் பக்தியின் உணர்வினை, தமிழின் உணர்வினை, இறையின் உணர்வினை, நிச்சயமாகவே எழச் செய்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். நவராத்திரி என்றதும் முன்னுக்கு வந்து நிற்கும் பக்திப் பாமாலை சகலவல்லிமாலைதான். அதனை மனமுருகிப் பாடுவதனைச் சகல சைவத்தமிழ் மக்களும் பெருவிருப்பமாக்கியே இருக்கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.

    திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரரை சிற்றிலக்கிய வேந்தர் என்று பாராட்டுவது உகந்ததாகவே இருக்கும். அந்தளவுக்கு சிற்றிலக்கியத்தில் அவர் முத்திரை பதித்தவராகிறார் என்பதுதான் உண்மை எனலாம். அவரின் படைப்பாககந்தர் கலிவெண்பாமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்மதுரைக் கலம்பகம்நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவைபாண்டார மும்மணிக்கோவைகாசிக் கலம்பகம்சகலகலாவல்லி மாலைமதுரை மீனாட்சியம்மன் குறம், தில்லைச் சிவகாமி அம்மை இரட்டைமணி மாலைகயிலைக் கலம்பகம், காசித்துண்டி விநாயகர் பதிகம். சிற்றிலக்கியத்துக்கு எத்தனை கொடைகளை வழங்கியிருக்கிறார் என்பதை அவரின் படைப்புகளில் இருந்து பார்த்துவிடக் கூடியதாக இருக்கிறதல்லவா!

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மனே குழந்தையாய் வந்து அமர்ந்திருந்து கேட்டதாகவும்குமரகுருபரரின் தமிழ்ச் சுவையினைக் கண்டு முத்துமாலையினைக் கழுத்தில் அணிவித்து அருள் பாலித்ததாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. நாத்திகர்கள் இதனை நம்புகிறார்களோ தெரியாது – ஆனால்இறைவனது ஆசியினைப் பெற்ற தமிழ்ப் புலவராக வெளிச்ச மிட்டுக் காட்டப்படுகிறார் என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இதனால் இவரை வரகவி என்றும் பார்க்கலாம் அல்லவா! மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழினைப் போற்றாத தமிழ் அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சொற்சுவையும்பொருட்சுவையும் அருட்சுவையும் இருங்கே அமைந்த பொக்கிஷம் என்றே எண்ண முடிகிறது.

    தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த
    துறைதீந் தமிழின் நறுஞ் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே “
    ……… வஞ்சிக் கொடியே வருகவே !
    மலையத்துசன் பெற்ற பெரு வாழ்வே வருக … வருககவே!

    என்னும் பக்தியினைத் தொடும் இப்பாடல் வரிகளை மறக்கத்தான் முடியுமாஇதனைக் கேட்டதுமே உலகாளும் மீனாட்சியே குழந்தையாக சபைக்கு வந்தாளாம்!

    திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை என்று யாவராலும் ஏற்றிப் போற்றிக் கொண்டாடப்படும் வகையில் குமமரகுருபரர் அகத்தினின்று வெளிவந்த ஆக்கந்தான் “நீதிநெறி விளக்கம்” நூலாகும். குமரகுரு பரரின் சிந்தனை ஓட்டம் எப்படியெல்லாம் பயணப்பட் டிருக்கிறது என்பதற்கு இந்த நூலே பெருஞ்சான் றாகி வந்தமைகிறது.

    நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
    எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
    வழுத்தாது எம்பிரான் மன்று.

    இந்த ஒரு பாட்டே  நீதிநெறி விளக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி விடுகிறது அல்லவா!

    குமரகுருபரரின் அறச்சிந்தனைகள் மட்டுமல்லாது அவரின் கல்விச் சிந்தனைகளும் கருத்திருத்த வேண்டியனவேயாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றே சொல்லலாம். சைவத்தின் காவலனாய் விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் தனியான இடத்தினைப் பெற்ற வராகவும் விளங்கினார். சமயத்தின் சாறாக இருந்து சரித்திரமாய் ஆகியவராய் இருந்தாலும்சமுதாயச் சிந்தனை மிக்கவராகவும் விளங்கி இருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும். சமயத்தில் நிற்பவர்கள் தத்துவங்களைச் சொல்லிவிட்டு நிற்பவர்களாய் இருப்பதைப் பெரும்பாலும் காணுகிறோம். ஆனால் பேசாதிருந்து பின் பேசப் புறப்பட்ட குமரகுருபரரோ தாய்மொழியான தமிழை நேசிக்கிக்கிறார். குருவை நேசிக்கிறார். தமிழ் இலக்கியத்தை நேசிக்கிறார். சமூகத்தை நேசிக்கிறார். நாத்திகர் போற்றும் வகையில் அவர்களின் அகத்தினாலும் நேசிக்கப்படுகிறார். ஆத்திகரும்நாத்திகரும், நேசிக்கும் ஒரு வராக குமரகுருபரர் விளங்கி இருக்கிறார் என்பதுதான் அவரை இன்றுவரை நாங்கள் அனைவருமே போற்றிப் பூசித்து அவருக் கென்று குருபூசை நன்னாளைக் கொண்டாட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும்..

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 

    சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
    நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
    செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே

    Share
  • உயர்ஞானப் பாலை உண்ட பிள்ளை!

    உயர்ஞானப் பாலை உண்ட பிள்ளை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அழுதகுரல் கேட்டு அம்மையே வந்தாள்
    ஆலவாய் அரசு அமைதியாய் இருந்தார்
    உண்ணா முலையாள் உயர்ஞானப் பாலை
    உண்ட பிள்ளையை உலகமே வியந்தது

    உணர்வெலாம் ஞானம் ஊறிய பிள்ளை
    தோடுடை செவியனாய் கண்டனர் இறையை
    பாடினார் பரமனை பரவசம் ஆகியே
    நாடினார் திருவருள் கடலினுள் மூழ்கினார்

    திருவருள் செல்வராய் மலந்தனர் அவருமே
    திருஞான சம்பந்தர் பெயரதாய்  வாய்த்தது
    பக்தியைப் பரப்பிட பரமனைப் பற்றினார்
    சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார்

    குழந்தையாய் இருந்தவர் குமரனாய் வளர்ந்தனர்
    குவலயம் சிறந்திட ஞானத்தைக் கொடுத்தனர்
    கோவிலை மையமாய் கொண்டுமே சேவையை
    வாழ்வினில் இருத்தியே மகிழ்ந்திட்டார் சம்பந்தர்

    இளமையில் ஞானியாய் எழுந்தனர் சம்பந்தர்
    இன்தமிழ் மொழியினை ஏந்தினார் நாளுமே
    பக்தியைப் பரப்பிட பைந்தமிழ் மொழியினை
    சித்தத்தில் இருத்தியே செப்பினார் தத்துவம்

    முத்தாய் வைரமாய் பவளமாய் குவிந்தன
    முத்திக்கு வித்தாக கருத்துகள் பொலிந்தன
    அனுதினம் அடியவர் சூழ்ந்திடச் சம்பந்தர்
    ஆலய மெங்கணும் அரன்புகழ் பரப்பினார்

    மந்திரமும் நீறென்றார் தந்திரமும் நீறென்றார்
    வானவர் மேலேயும் நீறென்றார் சம்பந்தர்
    சுந்தரமும் நீறென்றார் சுகமுமே நீறென்றார்
    நந்துயரைப் போக்குவது நாளுமே நீறென்றார்

    முத்தியைச் சத்தியத்தை முழுமையாய் தருமென்றார்
    பக்தியினை பக்குவத்தை பாங்குடனே தருமென்றார்
    சித்தியைத் தருமென்றார் சீலத்தைத் தருமென்றார்
    நித்தமுமே நீறதனை நெஞ்சிருத்த வேண்டுமென்றார்

    பூசவினியது என்றார் பேசவினியது என்றார்
    ஆசையறுப்பது என்றார் அகந்தை ஒழிப்பது என்றார்
    தேசம்புகழ்வது என்றார் திருவாய் பொலிவதும் என்றார்
    வாழநினைப் பார்க்கெல்லாம் மருந்தாகும் நீறென்றார்

    புனைந்தார் பலபாடல் அணைந்தார் அரனடியை
    இணைந்தார் திருக்கூட்டம் எடுத்தார் தமிழ்மொழியை
    கொடுத்தார் பலகருத்தை குழந்தைஞானி சம்பந்தர்
    தடுத்தார் சமண்புயலை சைவத்தின் தலைமகனாய்

    அப்பரொடு சேர்ந்தார் ஆன்மீக வழிநடந்தார்
    அரனாரின் திருவருளால் அமைத்திட்டார் சத்சங்கம்
    அனைவருமே அகிலத்தில் நல்லவண்ணம் வாழலாம்
    எனுங்கருத்தை விதைத்திட்டு ஏற்றமுற்றார்  சம்பந்தர்

    Share
  • அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னையர் திருநாளில்!

    அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னையர் திருநாளில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    ஐயிரண்டு திங்கள் சுமப்பவள் அன்னை
    மெய்வருந்தி எம்மை வளப்பவள் அன்னை
    கண்ணிமையாய் எம்மைக் காப்பவள் அன்னை
    கருணையின் வடிவாய் ஆனவளும் அன்னை

    பொய்மையிலா அன்பைப் பொழிபவள் அன்னை
    வாய்மையினை மனத்தில் நிறைப்பவள் அன்னை
    தாய்மையெனும் பெருமை பெறுபவளும் அன்னை
    தரணியிலே தெய்வ வடிவானவளும் அன்னை

    உயிர்போகும் துன்பம் அனுபவிப்பாள் அன்னை
    உள்ளிருக்கும் கருவை உயிர்ப்புடனே காண
    மடிமீது தவழும் மலர்முகத்தைக் கண்டு
    வாழ்வளிக்க வந்த வரமெனவே மகிழ்வாள்

    அன்றலர்ந்த மலராய் அழகுமுகம் பார்த்து
    அவள்பட்ட துன்பம் அகன்றதென நினைப்பாள்
    அவள்வாழ்வில் அமுதம் அமைந்ததென எண்னி
    ஆனந்த சாகரத்தில் அவள்மூழ்கி நிற்பாள்

    இவ்வுலகில் சொர்க்கம் இறங்கியதாய் நினைப்பாள்
    இன்பமெலாம் பெருகி வந்ததென மகிழ்வாள்
    தன்வாழ்வில் வரமே வாய்த்ததென எண்ணி
    தன்குழந்தை முகத்தைப் பார்த்தபடி இருப்பாள்

    மடியிருக்கும் குழந்தை வளரவெண்ணி நினைப்பாள்
    மற்றவர்கள் மதிக்க வரவெண்ணி உழைப்பாள்
    கற்றவர்கள் சபையில் காணவெண்ணி நினைப்பாள்
    கற்றுயர்ந்து வரவே கருச்சுமந்தேன் என்பாள்

    பெருமையுடன் பிள்ளை வருவதனைக் கண்டு
    பெற்றவுடன் பெற்ற மகிழ்வதனை மறப்பாள்
    கற்றறிந்து பிள்ளை கையணைக்கும் வேளை
    பெற்றதிலும் பெரிதாய் பேரின்பம் அடைவாள்

    உதிரத்தைப் பாலாக்கி உவந்தளிப்பாள் அன்னை
    உயிர்கொடுத்தும் எமைக்காக்க உவந்திடுவாள் அன்னை
    அன்னையள் உலகமதில் அன்பின் உருவாவாள்
    அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னையர் திருநாளில்

    Share
  • நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார்!

    நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், அவுஸ்திரேலியா

    தமிழ்மொழி மற்றைய மொழிகளிலும் சிறப்பான மொழியாக விளங்குவதற்குக் காரணம், மற்றைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழியில் இருப்பதேயாகும் என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது. அந்தத் தனிச்சிறப்பு எது தெரியுமா அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். உலகின் எந்த மொழியிலும் பக்தி என்பது இலக்கியமாகக் கொள்ளப்படவே இல்லை. ஆனால் தமிழ் மட்டும் தனக்கெனப் பக்தியை இலக்கியம் ஆக்கியே இருக்கிறது. இதனால் தமிழ் பக்தியை அரவணைத்தபடியே பயணப்படுகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும். பக்தியை இலக்கியம் ஆக்கும் வகையில் தமிழுக்கு வந்து வாய்த்தவர்கள்தான் ஆண்டவனது அடியார்கள் ஆவர். அந்த அடியார்களில் முன்னுக்கு வந்து நிற்பவர் களில் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவரின் பின் பக்திப் பெருவெளியில் பயணப்பட இம்மாநிலத்தில் வந்தவர்களாய் அப்பரும் சம்பந்தரும் விளங்குகிறார் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே காலத்த வராக இருக்கின்ற பொழுதும் – அப்பர் மூத்தவராகவும், சம்பந்தர் இவரின் இளையவராகவும் ஆகி நிற்கிறார்கள்.

    அப்பரும் சம்பந்தரும் கி.பி ஏழாம் நூற்றைண்டைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், இருவர் வாழ்வும்,  அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களும் வேறுபட்டனவாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத் தக்கது, அப்பர் குடும்பச் சூழல் வேறாயும் சம்பந்தர் குடும்பச் சூழல் வேறாயும் அமைந்தே காணப்பட்டது. ஆனால் பக்தி என்னும் நிலையில் இருவரும் ஒருமித்தே பயணப்பட்டார்கள். அப்படிப் பயணப்பட்ட நிலையிலும் அப்பரின் சிந்தனை, செயற்பாடுகள், சம்பந்தரிலும் வேறுபட்டதாகவே அமைகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது. அதற்கு உரிய காரணம் தான் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.

    மருள் நீக்கியார் சைவத்தில் பிறந்து சைவத்தைத்துறந்து சமணம் என்னும் சமயத்தைத் தழுவுகின்றார். மருள் நீக்கியாரின் இளம் மனத்தில் சமணத்தின் கொள்கைகள் சிறந்தனவாகப்பதிகின்றன. சமணரும் இவரை அணைக்கின்றனர். சமண மடத்தின் தலைவராய் ஆகும் அளவுக்கு மருள் நீக்கியார் ஆளுமை வளர்கிறது. மருள் நீக்கியார் என்னும் பெயர் மறைந்து சமண மடத்தின் தலைவராய் “தருமசேனர்” என்னும் புதுப் பெயர் வாய்க்கிறது. நாட்டில் சமணமே அரசபீடத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மருள் நீக்கியாரின் மனம் மாறுகிறது. சமணத்தின் தலைமயைத் தூக்கி எறிந்துவிட்டு தான் பிறந்த சைவத்தில் அவர் சங்கமம் ஆகிறார். சங்கமம் ஆகும் நிலையில் அவர் நெஞ்சம் தமிழைக் கொட்டுகிறது. அதுவும் கவியாய், பக்தியாய், இசையாய் கொட்டுகிறது. எம்பெருமான் சிவனே வியந்து “நாவுக்கரசு” என்று விளிக்கும் அளவுக்கு தமிழ் ஆக்கி நிற்கிறது. மருள் நீங்கியதால் அருள் கிடைக்கிடைக்கிறது. தருமசேனர் சைவம் தளைக்க, தொண்டுகள் சிறக்க, நாவுக்கக்கரசாய் வலம் வருகிறார். வலம் வருகின்ற நாவுக்கரசரை இளையவரான சம்பந்தப் பெருமான் கண்டவுடன் “அப்பரே” என்று அழைக்கின்றார். இறைவன் அழைத்த நாவுக்கரசர் என்னும் பெயரும் சம்பந்தப் பெருமான் அழைத்த அப்பரே என்னும் பெயரும் – சைவத் தமிழ் உலகில் நிலையான, உறுதியான பெயராக நிலைத்தே விட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

    அப்பர் பெருமான் வரலாற்றை நோக்கும் பொழுது – அவர் சமயத்தின் வழியிலும் பயணப்பட்டிருக்கிறார். சமூகநீதியின் வழியிலும்  பயணப்பட்டி ருக்கிறார் என்றுதான் மனங்கொள்ள வைக்கிறது. சம்பந்தப் பெருமானின் சமகாலத்தவராக இருந்த பொழுதும், அப்பரின் வாழ்வியல் அனுபங்களும், அவரின் வயதின் முதிர்ச்சியும் அவருக்கென்று தனியான ஒரு இடத்தினையே வழங்கி இருக்கிறது எனலாம்.

    சமணமதத் தலைவராய் இருந்த காரணத்தால் அவரின் புலமை நலம் – ஆளுமை உடையதாகவே அமைந் தது,வடமொழியிலும், தமிழ் மொழியிலும் புலமை உடையவராகவும் இருந்திருக்கிறார். சமண மதத்தாரால் மதிக்கப்படும் நிலையில் அவர் இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கது. அப்படி மதிக்கப்பட்டவர் அந்த மதத்தை விட்டு வெளியில் வருவதும், சைவத்தில் இணைவதும் சம்பந்தருக்குக் கிடைக்காத நிலை எனலாம்.  மதம் விட்டு விடு மதம்மாறியவர் என்று எடுக்துக் கொண்டால் அதில் அப்பர்தான் முன்னிற்கிறார். அப்படி அவர் மனம் மாறியமையமையால் சைவம் மிகச்சிறந்த ஒரு அடியவரை, பேராளுமையை, சிந்தனையாளரைப் பெற்றுக்கொள்ளும் நிலை வாய்த்தது என்பதை கருத்திருத்தல் அவசியமானதாகும். ஏழாம் நூற்றாண்டின் சமய சமூக சூழலில் சம்பந்தருடன் அப்பரின் இணைப்பு அளப்பரும் இணைப்பாகவே அமைந்தது. அப்பரும் சம்பந்தரும் அப்பாவும், பிள்ளையும் போல இணைந்து ஆலயங்கள் தோறும் சென்று அடியார்கள் மனத்தில் பக்தியென்னும் விதையினை ஆழமாக விதைத்திட்டார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும். இளமையும் முதுமையும் இணைந்த நிலை சைவ பக்தியுலகுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்ப தைக் கருத்திருத்தல் வேண்டும்.

    அப்பர் மதம்மாறிய நிலையில், அவரின் கூட இருந்த சமணர்கள் ஆத்திரம் கொண்டு வெகுண்டெழுந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரசுகட்டிலில் பாண்டியனும் , பல்லவனும் இருந்தார்கள். அவர்களும் சமணத்தைத் தழுவி அதற்கே ஆதரவும் காட்டி நின்றார்கள். சமணம் என்பது அரசமதமாகவே காணப்பட்டது எனலாம். வெகுண்ட சமணர்கள் அரசனை நாடி , மதம்மாறிய துரோகத்துக்கு உரிய தண்டனையினை அப்பருக்கு வழங்கிட வழி வகுத்தனர். அரசனுடைய அழைப்பாணை அப்பரிடம் போனது. அப்பர் மனம் முழுவதும் எம் பெருமான் சிவனின் நினைப்பே நிறைந்திருந்த காரணத்தால், அரசாணையினை அவர் ஒரு பொருட்டாக எடுக்கவேயில்லை. அரனுக்கு அடியவராய் ஆகிவிட்ட காரணத்தால் அரசினையே எதிர்த்து ;

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

    என்று அஞ்சாமல் ஏழாம் நூற்றாண்டில் எடுத்துரைத்த தமிழ் அடியவராய் அப்பர் பிரகாசித்து நிற்கிறார். அரசனையே எதிர்த்து தனது அஞ்சாமையை உரைத்த அப்பரின் துணிச்சல் ஒரு சமய, சமூகப் புரட்சியாய் அமைகிற தல்லவா! பிற்காலத்தில் பாரதி “அச்சமில்லை அச்சமில்லை” என்று கர்ஜிப்பதற்கும்  வழி வகுத்தவர் அப்பர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    சம்பந்தருக்கு இவ்வாறான சந்தர்பம் வாழ்க்கையில் வாய்க்கவில்லை. அது மட்டு மல்ல அப்பரின் பின் வந்த எந்த அடியவர்களுக்கும் இப்படியான சந்தர்ப்பம் வரவேயில்லை. இதனால் அப்பரினால் மட்டுமே “நாமா ர்க்கும் குடியல்லோம்” என்று சொல்லும் நிலை வாய்த்துவிட்டது. சமயத்தை மாற்றி வந்த நிலையிலும் அப்பர் உயர்நிலையிலே யாவராலும் பார்க்கப்பட்டார். இதுவும் அப்பரை மற்றவர்களிருந்தும் வேறுபடுத்தியே காட்டி நிற்கிறது.

    தமங்குத் தீங்கு வந்தால் யாவருமே நொந்து போவார்கள். வந்த தீங்கினை வைதே நிற்பார்கள். ஆனால் அப்பர் வித்தியாசமானவராக விளங்குகிறார். அவருக்கு சூலை நோய் வந்தது. பெருந்துன்பப் பட்டார். அப்படிப் பெருந் துன்பத்தை தந்த சூலைநோயினை வையாமல் அதற்கு நன்றியினைச் சொல்லுகிறாரென்றால் அப்பரின் சிந்தனை வித்தியாசாமானதுதானே !

    பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறிஇல் சமண்நீசர் புறத்துறையும்
    அவ் ஆழ்குழியின் கண்விழுந்து எழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன்
    மைவாச நறுக்குழல் மாலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
    இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல்

    இப்படிச் சொல்லுவதற்கு யாரால் முடியும்? அப்பர் ஒருவரால்த்தான் முடியும். அதனால் அவர் உயர்ந்தே நிற்கிறார். சூலை வந்த படியால்த்தான், புன்சமயத்தை விட்டு வெளிவரவும். அறிவானது தெளிவுற்று, நற்பாதை வழி காணவும், உயர்பொருளான அந்தப் பரம்பொருளின் பாதங்களைப் பற்றவும் முடிந்தது என்னும் மனத்தெளிவும் ஏற்பட்டது என்று சொல்லும் அளவுக்கு அப்பர் இருந்திருக்கிறார் என்பது அடியவர்கள் அனைவருக்கும் ஏன் சமூகத்துக்குமே காட்டப்படும் புதுக் கருத்தாய் மலர்கிறதல்லவா!

    சமயத்தில் புரட்சி, சமூகத்தில் புரட்சி என்று அப்பரின் புரட்சிகள் வளர்ந்து கொண்டே போவதைக் காணமுடிகிறது. அரசை எதிர்த்தார். பெரிய அமைப்பாய் அக்காலத்தில் இருந்த சமணத்தையே எதிர்த்து துணிவுடன் உண்ணா நோன்பினைக் கைக்கொண்டு உறுதியுடன் தனது எண்ணத்தை நிலை நாட்டுகிறார். பிற்காலத்தில் அண்ணல் காந்தி உண்ணா நோன்பினைக் கைக் கொள்ளவும், அவரைத் தொடர்ந்து பலரும் பல சந்தர்ப்பங்களில் உண்ணா நோன்பினைக் கைக்கொள்ளவும் முன்னோடியாக அப்பர் விளங்குகிறார் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

    துணிவான எணண்ணங்களை மனத்திலே நிறைத்து வைத்தவராய் அப்பர் பெருமான் இருந்திருக்கிறார் என்பதைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். அந்தவகையில் அவரின் எண்ணமாய் மலரும் இக்கருத்து யாவரையும் சற்று திகைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்திடும் கருத்தாகவே அமைகிறது எனலாம். ஆண்டவன் அடியார்களுக்கு அவர் கொடுக்கும் உயரிய நிலை இங்கே காட்டப்படுகிறது.

    சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
    தரணியொடு வானாளத் தருவ ரேனும்
    மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
    அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

    என்னதான் செல்வமும், செல்வாக்கும், உயர்நிலையும் வாய்த்தாலும் ஆண்டவன் அடியவராய் இல்லார் எதுவுமே இல்லார்தான் என்று கூறி – எந்த ஒரு நிலையில் இருந்தாலும் அவர்கள் ஆண்டவனின் அன்புக்கு உரிய வரானால் அவர்களே வணங்கத் தக்கவர்கள் என்று சொல்லும் அப்பரின் சிந்தனை சமயத்தில் தோற்றுவிக்கப்பட்ட புதிய சமூகச் சிந்த னையாக எழுகிறதல்லவா!

    சமணத்தில் பல தத்துவங்கள் இருக்கின்றன. அறநூல்கள் பலவற்றின் ஆசிரியர்களாக சமண ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்துரைத்துவிடல் முடியாது. ஆனால் உலகியல் வாழ்வில் இசையினையும், இல்லறத்தினையும், பெண்களையும், கலைகளையும், அழகினையும், சமணம் ஒதுக்கியது மட்டுமல்ல வெறுப்புடனுமே பார்த்தது. இந்த நிலை அப்பருக்கு உடன்பாடாக அமைவதாக இல்லை. இவை அனைத்தையும் சைவம் அணைத்தே நின்றது. அப்பரும் அவற்றை அகமிருத்தி தன்னுடைய சிந்தனைகளை மலர்ந்திடச் செய்து நின்றார். அதன் ஒரு நிலைதான் இசையோடு உகந்த திருமுறைப்பாடல்களாகும். ஏழாம் நூற்றாண்டில் தமிழ் இசையினைக் காத்திட வந்த பேராளுமையாகவே அப்பர் எழுகின்றார். அவரினால் பக்தி இலக்கியப் பரப்பில் “திருத்தாண்டகம்” என்பது புதுவரவாய் வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் தாண்டகத்தை அறிமுகப்படுத்தியவராய் அப்பர் பெருமானே முன்னிற்கிறார். இவரின் இந்த புதிய அறிமுகத்தால் அமைந்த தமிழ் பக்திப் பாடல்கள் இசையுடன் பாடுவதற்கு இயைந்ததாகவே அமைகிறது. அடியவர்கள் இறைவனை ஆராக்காதலுடன் பாடிப் பரவிட இந்த இசையுடன் அமைந்த தாண்டகப் பாடல்கள் கைகொடித்தே நிற்கின்றன. இது அப்பரினால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் எனலாம். அப்பரின் இப்புது முயற்சியால் அவர் “தாண்டக வேந்தர்” என்று யாவராலும் அழைக்கும் நிலைக்கு ஆளாகியும் விட்டார். அப்பரினால் தமிழ் இசை வெள்ளம் தமிழ்ச் சமூ கத்தில் பெருக்கெடுக்கத் தொடங்கியது எனலாம். இந்தத் தொடக்கமே பின்னாளில் அண்ணாமலைச் செட்டியாருக்கு தமிழிசையில் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஊட்டியிருக்கிறது என்பதும் நோக்கத்தக்கது.

    கையிலே ஆயுதம் ஏந்தி சமயவழி நின்றவரும் அப்பர்தான். அவரின் கையில் உழவாரம் என்னும் ஆயுதம் இருந்தது. இது கொல்லும் ஆயுதம் அல்ல. அருள் தன்னைக் கொள்ளும் ஆயுதமாகவே அமைந்திருந்தது. தொண்டின் மகிமையினை உணர்த்தும் ஆயுதமாக இருந்தது. உழைப்பின் மகிமையினை உணர்த்தும் அடையாளமாகவும் இருந்தது எனலாம். அடியார்கள் வாழ்வில் அப்பரின் உழவாரம் அசையாத ஆன்மீகச் சொத்தாக அமைந்தது எனலாம். என்கடன் பணி செய்துகிடப்பதே என்பதை உணர்த்தி நின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பதை மிகவும் சிறப்பாக அப்பர் காட்டி, அங்கு சென்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யாவருக்கும் நல்ல பாடத்தைப் போதிக்கும் நல்லாசி ரியனாகவும் விளங்கி நிற்கிறார்.

    “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
    புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
    பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
    ஆரூரா என்றென்றே அலறா நில்லே.”

    நிலை பெறுவதற்கு அப்பர் காட்டும் இந்த வழி ஆன்மீகத்தில் மிகவும் முக்கிய வழியாகும் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.

    திருவங்கமாலை என்னும் ஒரு புதிய சிந்தனையை அப்பர் எமக்கெல்லாம் தருகிறார். கோவில் வழிபாட்டின் எங்கள் உடலின் முக்கியத்துவத்தை இங்கே அட்டவணைப்படுத்தி கிளிப்பிள்ளைக்குப் பாடம் கற்பிப்பதுபோல் பக்குவமாய் அருமையான பாடல்களாய் தந்து அடியார்களில் முன்னிற் பவராய் அப்பர் ஆகி நிற்கிறார்.மற்றைய அடியார்கள் காட்டாத புது முயற்சி இது எனலாம்.

    தலையே நீ வணங்காய்
    கண்காள் காண்மின்களே
    செவிகாள் கேண்மிங்களோ
    மூக்கே நீ முரலாய்
    வாயே வாழ்த்துகண்டாய்
    நெஞ்சே நீ நினையாய்
    கைகாள் கூப்பித்தொழீர்
    ஆக்கை யாற்பயனென்
    கால் களாற்பயனென்
    உற்றார் ராருளரோ
    உற்றார் ராருளரோ
    உற்றார் ராருளரோ
    உயிர் கொண்டு போம்பொழுது
    குற்றாலத்துறை கூத்தனல்லால்
    நமக்குற்றார் ஆருளரோ

    இவ்வாறு வழிபட வழிகாட்டுவது அப்பருக்குரித்தான புதுக்கருத்தாக பார்க்க வேண்டி இருக்கிறது.

    இனிப்பிறவியே வேண்டாம் என்றுதான் அடியார்கள் பலரின் நிலையாக இருந் தது. ஆனால் அப்பர்மட்டும்  தனக்கு மனிதப் பிறவி வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டும் வித்தியாசமான சிந்தனையுடைய அடியவராய் விளங்குகின்றார்.

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
    பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
    இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

    ஆண்டவனின் அழகான தோற்றப் பொலிவினைக் காட்டி அதனைக் காண் பதற்காகவே இந்த மாநிலத்தில் மனிதப் பிறவி வேண்டும் என்னும் சிந்த னை புதுமையாய் மலர்கிறதல்லவா!

    நமச்சிவாய வாழ்க என்று பிற்காலத்தில் மணிவாசகர் மொழிவதற்கும் அப்பர் வழிகாட்டி இருப்பாரோ என்றும் எண்ணக்கிடக்கிறது.

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே

    நமச்சிவாய என்று சொல்லும் பொழுது என்னதான் இடைஞ்சல்கள் வந் தாலும் அத்தனையும் வந்த இடந்தெரியாமல் மறைந்தே விடும் என்னும் நம்பிக்கையை அப்பர் அகமிருந்து காட்டி நிற்பதும் நல்ல சிந்தனையாக அமைகிறது அல்லவா!

    அடியார்கள் பலர் தமக்கு அதுவேண்டும் இது வேண்டும் என்ற கேட்ட இடத்தில் எந்தப் பொருளுமே கேட்கா நின்றவர் அப்பர் பெருமான் மட்டுமே. அவர் கேட்டது மனிதப் பிறவி ஒன்றை மட்டுமே. அதுவும் அந்தப் பெருமா னைக் கண்களால் காண்பதற்காகவே. ஓடும் செம்பொன்னும் ஓக்க நோக்கு பவராய் அப்பர் இருந்தார். அடியார்கள் பலர் அனுபவிக்காத பல தண்டனைகளுக்கு ஆளானவரும் அப்பரே. சமணர்களால் தூண்டப்பட்ட அரசனின் பல தண்டனைகளைக் கண்ட அடியவராகவும் அப்பரே இருக்கிறார். வாழ்க்கைத் தத்துவங்களை அதாவது நிலையாமை பற்றிய பல கருத்துக்களை எடுத்து மொழிந்த நிலையிலும் அப்பர் முன்னிற்கிறார் எனலாம். அதற்குக் காரணம் அவருக்கு கிடைத்த வாழ்வியல் அனுபவங்களே ஆகும். இன்று அல்ல ல்பட்டு ஆற்றா நிற்கும் பலருக்கும் உகந்த ஆறுதலை, தேறுதலை அளிக்கும் அர்த்தநிறை சிந்தனைகளை அப்பர் தன்னுடைய பாடல்களில் காட்டுகிறார் என்பதை மறுத்துரைத்திடல் இயலாது. அப்பர் என்றால் அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். பற்றற்ற அடியார். ஆனால் பரமனைப் பற்றி நின்ற அடியார். புரட்சியை விதைத்த அடியார். புதுமையைப் புகுத்திய அடியார். “எல்லா உலகமும் ஆனாய்  நீயே” என்று விழித்துரைத்த அடியார். அப்பர் என்பவர் தமிழராய் விளங்கி தமிழையே அகமிருத்தி தமிழினால் இறை புகழைப் பரப்பி தமிழ்ப் பக்தி இயக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார் என்பதை யாவரும் மனமிருத்துவது அவசியமாகும்.

    விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை
    மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
    பண்ணுளார் பயிலுந் திருக்கோளிலி
    அண்ணலாரடி தொழுதுய்மினே

    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
    உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  .

    Share
  • புதுவைப் புயல்!

    புதுவைப் புயல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று போற்றப்பட்டவர்தான் எட்டயபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள் பயணப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிஞரும் பாரதியைப் பார்த்த பார்வைகள் அவரவர் சிந்த னைகளாக மலர்ந்திருக்கின்றன. பாரதியாரின் காலத்தில் கவிமணி தேசிக விநாகம் பிள்ளை இருந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார். பாரதிதாசனும் இருந்திருக்கிறார். கவிமணியின் சிந்தனை வேறாயும்நாமக்கல்லார் சிந்தனைவேறாயும்பாரதிதாசன் சிந்தனை வேறாகாவுமே அமைந்திருக்கிறது. இவர்கள் மூவருமே பாரதியைப் போற்றியாவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எட்டய புரத்துத்துப் பாரதிக்கு எட்டவே போகாமல் கிட்டவே நிற்கும் வாய்ப்பு புதுவையில் கால்பதித்த கனகசுப்பு ரத்தினத்துக்கே வாய்த்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்துக்குத்தான் எட்டயபுரத்து மகாகவி பாரதியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்த ஆசீர்வாதம்தான் “பாரதிதாசன்” என்று இன்றுவரை அவரை சமூகத்தில் பார்த்திடக், கொண்டாட, வைத்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பாரதியையும் புரட்சிக்கவி என்று அழைக்கின்றோம். அவரின் வாரிசாக வாய்த்திருக்கும் பாரதிதாசனையும் அழைக்கின்றோம். இருவரையும் புரட் சியின் வடிவமாகவே பார்ப்பதையே சமூகமும் விரும்பி நிற்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும். பாரதி வாழ்ந்த காலமோ முப்பத்தொன்பது ஆண்டுகளேயாகும். ஆனால் பாரதிதாசன் அவரைவிட இருமடங்கு காலம் வாழ்ந்திருக்கிறார். பாரதியின் தாசனாகவே வாழ்ந்திடவே பாரதி தாசன் ஆசைப்பட்டார். அதுவே தனக்கும்தனது வாழ்வுக்கும் மிகவும் பெருமையானது என்றும் கூட அவர் எண்ணியே இருந்தார். பாரதியைப் போலவே அவரும் புதிதாய்புரட்சியாய். சிந்தித்தார். சிந்தித்தவற்றைத் தன்னுடைய படைப்புகள் வாயிலாகச் சமூகத்தில் இடம் பெறவும் செய்தார். பாரதியின் தாசனாய் அவரின் வாரிசாக வாய்த்த பாரதிதாசன் தன்னுடைய காலத்துக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளை புதிதாய் வெளிப்படுத்தினார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. பாரதியார் வாழ்ந்த காலம் பாரததேசம் அன்னியத்துக்கு அடிமைப்பட்டிருந்த காலம். அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசன் காலமே சுதந்திரக் காற்றினைப் பாரததேசம் சுவாசித்த காலமாகிவிட்டது. அதனால் தன்னுடைய குருவின் சிந்தனைகளை விட வித்தியாசமாய் சிந்திக்கும் அவசியம் பாரதிதாசனுக்கு அவசியமாய் ஆகிவிட்டது. அதனால் பாரதியின் சிந்தனைப் பாதையில் பயணித்தாலும் தனக்கென வித்தியாசமான சிந்தனைகளை பாரதிதாசன் வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

    தம்முடைய குருவான பாரதியின் பிரிவை முன்னிட்டு பாரதிதாசன்

    நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
    காடு கமழும் கற்பூரச் சொற்கோ ……
    திறம் பாட வந்த மறவன்புதிய
    அறம் பாட வந்த அறிஞன்

    இவ்வாறு உளமார உரைத்து நின்றாலும் அவரின் சிந்தனையானது மட்டும் பல நிலைகளில் வித்தி யாசமாய் அமைகின்றது என்பதுதான் உண்மையாகும். பாரதி தமிழைப் போற்றுகின்றார். அவரின் வாரிசான பாரதிதாசனும் போற்று கின்றார். பாரதி…

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்”

    என்று உலகத்துக்கு உரத்துத் துணிவுடன் சொன்னவர் என்றவகையில் பாரதி முன்னிற்கிறார் என்பதை எவருமே மறுத்திடல் இயலாது. ஆனால் அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசனோ வித்தியாசமாய் தனது சிந்த னையை முன் வைக்கிறார்.

    தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”

    உலகமொழிகளில் இனிமையானது தமிழென்று குருவானவர் மொழிகின்றார். அவரின் மொழிதல் புதுமை யானதுதான். ஆனால் வித்தியாசமாய் சிந்தித்து தமிழினை உயிர் என்று காட்டுவதும்இன்பத் தமிழ், அமுதம் என்று காட்டுவதும் பாரதிதாசனின் வித்தியாசமான சிந்தனையாய் வெளி ப்பட்டு நிற்கிறதல்லவா! அமுதம் என்பது நிரந்தராமாய் உயிருடன் வாழப் பண்ணுவதாகும். தமிழும் எம்மையெல்லாம் நிரந்தரமாய் வாழப் பண்ணும் என்னும் சிந்தனைவியப்பாய் மலர்கிறதல்லவாபாரதியின் மொழிப்பற்றானது போற்றப் படவேண்டியதே. அன்னிய மொழியான ஆங்கிலத்தை அறவே வெறுத்தார். அன்னை மொழியான தமிழினையே அகத்தில் இருத்தினார். அரியாசனத்தில் அமர்த்தியே பார்த்தார். பாரதி வட மொழியிலும் வல்லமை பெற்று விளங்கினார். அவருக்கு வடமொழியிலும் பற்றிருந்தது. ஆனால் அவரின் வழியில் பயணத்தை ஆரம்பித்த பாரதிதாசனோ முழுக்க முழுக்க தமிழ்மொழிப் பற்றாளராகவே தன் வாழ் நாளெல்லாம் விளங்கினார். வடமொழியினை அவர் ஒதுக்கியே நின்றார். திராவிடமே அவரின் சிந்தையில் நிறைந்து காணப்பட்டது. இது அவரின் வித்தியாசமான சிந்தனை என்றும் சொல்லலாம் அல்லவா!

    குருவான பாரதியின் தமிழ்மொழி பற்றிய சிந்தனையிலிருந்து வித்தியாசமாய் சிந்தனையினைத் தருவ தோடு அதற்காக அவர் பயன்படுத்தும் சொற் கோவைகளும் வித்தியாசமானதாகவே வருகிறது. மரபு யாப் பினைப் பயன் படுத்தினாலும் இங்கு வித்தியாசமாய் சிந்தித்து கூழைக்கூத்தரின் ஆட்டத்தை மனமிருத்தி அதனை ஆட்டத்தோடு கூடிய விதமாய் இசையுடன் பாட க்கூடியவகையில் தமிழையும், தமிழ் சமூகத்தையும் சிந்தித்திந்து அவரால் வழங்கப்பட்ட வித்தியாசமான சிந்தனையாய் இப்பாடல் அமைகிறது.

    திடுகிடும் திடுகிடும் திடுகிடும் திடுகிடும்
    …………………………………………………………………………
    அஃகஃக கும்பிட்றேன் அல்லா ருக்கும்
    அஃகஃக வரிஞ்சலா அமைந்திருங்க
    மக்களெ பெத்த மகரா சருங்க …..

    என்னடா தம்பி?
    ஏண்டா அண்ணா?
    இதோபார் தம்பி எலும்புக்கூடு
    சதையும் இல்லே சத்தும் இல்லை
    ஆமாம் திடுகிடும் அதுக்குப் பேர்என்னா? …
    இந்த மருந்துக்கு என்னா பேரு?
    உள்ளெ தொட்டா உசிரில் இனிக்கும்;
    தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்!
    இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
    தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை!
    திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்

    சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு!
    விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு!
    பாடுது பாரடா பைந்தமிழ் நாடு ….
    தாயி மாரே தக்கப்ப மாரே!
    மாயம் இல்லே மந்திரம் இல்லே
    கருத்து வேணும் நம்ப
    வருத்தம் நீங்க தேடணும் வழியே!

    தமிழினமானது எலும்புக்கூடாய் இருக்கிறதாம். அதில் சதையும் இல் லையாம்! சத்துமே இல்லையாம்! அதற்குச் சதையும் சத்தும் தந்து புத்துயிர் ஊட்டவேண்டும் என்னும் வித்தியாசமான சிந்தனையினைக் காட்டும் பாரதிதாசனை வியக்காமல் இருந்திட முடியுமா!

    பாரதி வாழ்ந்த காலம் அடிமையிருள் சூழ்ந்திருந்த காலம். பாரதியின் பார்வை பாரததேசத்தின் அடங்கிலும் பரவியே இருந்தது.பாரதத்தாயை மீட்டிடும் பாங்கில் பாரதியின் சிந்தனை அமைந்திருந்தது. ஆனால் அவரின் வாரிசான  பாரதிதாசன் காலம் அவரின் சிந்தனையினை வேறு விதமாக்கி விட்டது. பாரதியின் வழியில் பயணித்தாலும் அத்தனையையும் ஏற்று நிற்க அவர் விரும்பாதவராய் வித்தியாசமாய் ஒவ்வொ ன்றையும் வெளிப் படுத்துகிறார். அந்த வகையில் ஒட்டு மொத்த இந்தியாவைவிட்டு அவரின் சிந்தனையானது திராவிட மீட்பாய் மாறுகிறது. பாரதி தமிழைதமிழினத்தைப் போற்றினார். அதற்காக பலவற்றை உரக்கவே சொன்னார். ஆனால் பாரதிதாசனோ திராவிடச் சிந்தனையாளராய்தமிழ்மொழியின் அடையா ளமாய் தனது வித்தியாசமான சிந்தனைகளால் எழுந்து நிற்கிறார்.

    சமய நம்பிக்கையினைதெய்வ நம்பிக்கையினைப் பாரதி கைவிட விரும்பவேயில்லை. மூட நம்பிக்கை களை எதிர்த்தார். வெறுத்தார். ஆனால் தெய்வம் இருக்கிறது என்பதில் ஆணித்தரமாய் பாரதி வாழ் வெல்லாம் இருந்தார். இந்த இடத்தில் அவரின் வாரிசான பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிறறார். ஆரம்ப த்தில் சக்தியைப் பாடியே பாரதியின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர் பிற்பாடு தெய்வீக சக்தியை விட்டு விட்டு மனித சக்தியையே பாடும் நிலைக்குள் வந்து விடுகிறார். பாரதி நாத்திகர் அல்ல. அவருள் ஆத்தீகம் அமர் ந்தே இருந்தது. ஆனால் வித்தியாசமாய் சிந்தித்த காரணத்தால் பாரதிதாசன் முழுதுமே நாத்திகராய் மாறி அதன் வழியில் பயணப்பட்டுஅது சார்ந்த அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றவராய ஆகியேவிடுகிறார். இதனால் அவரின் சிந்தனைகள் தன்னுடைய குருவின் சிந்தனைகளிலிருந்து வித்தியா சமாய் புதிய பார்வையினையே காட்டுவதாகவே ஆகியும் விடுகிறது எனலாம்.

    கல்விபற்றிய பாரதியின் சிந்தனையிலும்கூட பாரதிதாசன் வித்தியாசமாகவே தன்னுடைய சிந்தனை களை விதைக்கின்றார். பாரதியின் கல்வி பற்றிய சிந்தனையினை நோக்கும் பொழுது –

    வயிற்றுச் சோறிட வேண்டும் – இங்கு
    வாழும் மனிதருக்கு எல்லாம்
    பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
    பாரை உயர்த்திட வேண்டும்

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
    அன்னயாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

    வீடுதோறும் கலையின் விளக்கம்
    வீதிதோறும் இரண்டொரு பள்ளி
    நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
    நகர்களெங்கும் பலபலபள்ளி
    தேடு கல்வியிலாத தொருவூரைத்
    தீயினுக்கு இரையாக மடுத்தல்

    என்று தன்னுடைய கல்விபற்றிய சிந்தனையைப் பாரதி இப்படிக் காட்டி நிற்கிறார். பெண்களைக் கண்க ளாய் காணும் பாரதி பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வெளியில் வந்து கற்று தேர்ந்திட கல்விச் சிந்தினையினை விதைத்தும் நிற்கிறார். புதுமைப் பெண்களாய் பெண்கள் வரவும் அழைப்பினை விடுக் கிறார்.

    பாரதிவழியில் கல்வி பற்றிச் சிந்தித்தாலும் தனக்கே உரித்தான வித்தியாசமான சிந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார் என்பதுதான் கருத்திருத்த வேண்டிய விடயமாகும். பாரதிபோல் பெண்கல்வியை வலியுறு த்துகின்றார். பாரதியின் பார்வை வேறு . பாரதிதாசனின் பார்வையோ வேறு.

    கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
    கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்”

    மகளிரெலாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
    மருத்துவமே வேண்டாவாம் பிணிமூப்பு வாரா”

    கல்வியறிவுடைய பெண்கள்
    திருந்திய கழனி அங்கே
    நல்லறி வுடைய மக்கள்
    விளைவது நவில வேநான்”

    கல்வியில்லாத பெண்கள்
    களர்நிலம் அந்நிலத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை”

    கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
    கல்வைத்த நகை தீராத ரணம்”

    பெற்றநல் தந்தைதாய் மாரே – நும்
    பெண்களைக் கற்கவைப் பீரே
    இற்றைநாள் பெண் கல்வி யாலே – முன்
    நேறவேண் டும்வைய மேலே”

    பெண்கள் கல்வியின் சிந்தனையினைப் பாரதிதாசன் வித்தியாசமாய் வெளிப்படுத்துகிறார். சிறுவர்க்குக் கல்விஆடவர்க்குக் கல்விமுதியோர்க்குக் கல்வி உடல் ஊனமுற்றவர்க்குக் கல்வி என்று பாரதிதாசனின் புதிய சிந்தனைகள் எழுந்து நிற்கின்றன.

    பொதுவுடமை பற்றிய வகையிலும் பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிக்கிறார்.

    சித்திரச் சோலைகளே – உமை நன்கு
    திருத்தஇப் பாரினிலே – முன்னர்
    எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
    ஓஉங்கள் வேரினிலே

    நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
    நெல்விளை நன்னிலமே – உனக்கு
    எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
    இறைத்தனர் காண் கிலமே

    தாமரை பூத்த தடாகங் களே உமைத்
    தந்த அக் காலத்திலே – எங்கள்
    தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
    சொல்லலோ ஞாலத்திலே

    சோலைகளைப் பார்க்கிறார். வயல்களைப் பார்க்கிறார். தாமரைத் தடாகங்களைப் பார்க்கிறார். அந்தப் பார்வையையினூடாக அதற்காக உழைத்துப் பாடுபட்ட  உழைப்பாளிகளை அவர் மனம் எண்ணுகிறது. இப்படி எண்ணும் எண்ணமேதான் பாரதிதாசனின் புதிய சிந்தனையாக, வித்தியாசமான சிந்தனையாக  இங்கே வந்து நிற்கிறது அல்லவா !

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
    உடையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

    சமத்துவத்தை இப்படியாய் சிந்திந்து வித்தியாசமாய் பாரதிதாசனால்த்தான் பார்த்திட முடியும்.

    மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
    காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே

    வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
    தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி

    என்று சமூக சிந்தினையினை சீர்திருத்த நோக்கில் பார்த்து வித்தியாசமான சிந்தனையாக தாலாட்டுப் பாடியவர் என்ற வகையில் பாரதிதாசனை வியந்து பாராட்டியே ஆகவேண்டும்.

    கவித்துவம் மிக்கவர் பாரதிதாசன். கவிதை எழுதினார். நாடகம் எழுதினார். கட்டுரைகள் எழுதினார். நூல்கள் பல எழுதினார். திரையிலும் ஜொலித்து நின்றார். எங்கு சென்றாலும் பாரதிதாசன் என்னும் முத்திரையினைப் பதித்தே நின்றார். மகாகவி பாரதியார் தமிழனினத்துக்கு விட்டுப்போன மகத்தான மூன்று சொத்துக்களானவை குயில்பாட்டுகண்ணன் பாட்டு, “பாரதிதாசன்” என்று எழுத்துலக ஜாம்பவான் கல்கி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பாரதிதாசன் பார்க்கப்படுவதற்கு முக்கியமான காரணம் எது தெரியுமா அவரிடம் காணப்பட்ட வித்தியாசமான சிந்தனைகளே.

    Share
  • சிறகடிக்கும் கற்பனைகள்!

    சிறகடிக்கும் கற்பனைகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா. 

    சித்திரையைக் கொண்டாடச்  சிறகடிக்கும் கற்பனைகள்
    எத்தனையே எல்லோரின் மனத்தினிலும் இருக்கிறது
    அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை
    அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகிருக்கு

    தைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
    சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்
    ஊரெல்லாம் கொண்டாட்டம் உறவெல்லாம் கூடிடுவர்
    தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும்

    புத்தாடை எடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
    மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
    கற்றாரைக் கண்டிடுவோம் கைதொட்டு வணங்கிடுவோம்
    பெற்றவரின் ஆசியினைப் பெற்றுமே மகிழ்ந்திடுவோம்

    இனிப்புச் சுவையோடு இங்கிதமாய் பட்சணங்கள்
    காரமும் சேர்த்து களிப்பாகச் செய்திடுவோம்
    கொடுத்து மகிழ்ந்திடுவோம் குதூகலத்தில் மிதந்திடுவோம்
    வீடெங்கும் பட்சணங்கள் விதம்விதமாய் வீற்றிருக்கும்

    வாசலிலே மாக்கோலம் மங்களமாய் வரவேற்கும்
    வீடெங்கும் மகிழ்ச்சியது தென்றலாய் பரவிநிற்கும்
    பூஜையறை பக்தியினை வெளிச்சமாய் காட்டிநிற்கும்
    பொங்கலுடன் அம்மாவும் உள்நுழைவார் அப்பாவுடன்

    மாமாவும் மாமியுடன் வந்திருப்பார் மகிழ்வுடனே
    சித்திரைக்குப் புத்துடுப்பும் சீராகத் தந்திடுவார்
    அவர்காலைத் தொட்டுவிட்டால் அகநிறைவார் மாமாவும்
    ஆசியினை எமக்கீந்து அவரளிப்பார் பணப்பரிசும்

    மாமாவின் பிள்ளைகள் மகத்தான பரிசாகும்
    மலர்ச்சியுடன் ஓடிவந்து வாரியே அணைத்திடுவார்
    ஊஞ்சல்கட்டி ஆடிடுவோம் ஒன்றாகப் படுத்திடுவோம்
    உணர்வுடனே ஒன்றாக உட்கார்ந்து உண்டிடுவோம்

    பட்டாசு மத்தாப்பு பெட்டிகளாய் வாங்கிடுவோம்
    பக்கத்து வீட்டாரும் எங்களுடன் இணைந்திடுவார்
    வெள்ளிக் கம்பிகளாய் மத்தாப்பு விரிந்தேயெழும்
    வெடிவெடிக்கும் சத்தத்தால் தெருவே கலகலக்கும்

    பட்டிமன்றமோடு  பாங்கான இசை நிகழ்ச்சி
    வெட்டவெளி மேடைகளில் விமரிசையாய் நடக்கும்
    பாடிடுவார் ஆடிடுவார் பரவசமாய் ஆகிடுவார்
    சித்திரைக் கொண்டாட்டம் முத்திரையாய் ஜொலித்துவிடும்

    இத்தனையும் நடந்தது எல்லோர்க்கும் நெஞ்சிருக்கும்
    காத்திருப்பு என்பது களிப்பான எதிர்பார்ப்பே
    நாடுபோகும் போக்கினிலே நமக்குச் சித்திரைவாய்த்திடுமா
    ஏக்கமுடன் இருக்கின்ற நிலையிப்போ வந்திருக்கு

    போர்மேகம் ஓர்பக்கம் புதுக்கொரனா மறுபக்கம்
    எரிபொருளால் எல்லாமே ஏறியேறிப் போகிறது
    நாளைக்கு எதுநடக்கும் யாருக்கும் தெரியாது
    என்றாலும் சித்திரையும் வரவேதான் போகிறது

    துன்பங்கள் வாராமல் துணையிருப்பாய் ஆண்டவனே
    இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே உன்கையில்
    சித்திரையில் நல்வெளிச்சம் வருவதற்கு வழிசமைப்பாய்
    நித்தமுமே பணிகின்றோம் நின்பாதம் அடைக்கலமே

    Share
  • ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

    ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பக்திப் பெருவெளியில் அடியார்கள் பலர் வருகிறார்கள். அடியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உண்மைப் பொருளாம். அந்தப் பரம்பொருளை நாடியும்தேடியுமே நிற்கிறார்கள். தேடும் விதமும்நாடும் விதமும் வேறுபாட்டினைக் காட்டி நின்றாலும் அவர்களின் சிந்தையெலாம் இறைவன் மட்டுமே என்பதுதான் மனங்கொள்ளல் வேண்டும். வருகின்ற அடியார்களில் கற்றவரும் இருப்பர். கல்லாதவரும் இருப்பர். அந்தஸ்த்தில் உயர்ந்தவரும் இருப்பர். அதில் குறைந்தவர்களும் இருப்பர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் இணைப்பது ஆண்டவனது அடியார்கள் என்னும் பிணைப்பேயாகும். ஆண்களும் இருப்பார்கள். பெண்களும் இருப்பார்கள். ஆண்டியும் இருப்பர். அரசரும் இருப்பர். அனைவரும் பக்தி என்னும் பாதையில் பயணிக்கும் பக்குவமான பரமனின் பயணிகளேயாவர். அந்தப் பயணிகள் வரிசையில் ஒருவர் சற்று வித்தியாசமானவராக அமைகின்றார். அவர் யாரென்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா? வாருங்கள் அவரைக் காணுவோம்.

    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே”என்று ஆண்டவனையே அடியார்கள் விளித்துப் பாடுவார்கள். ஆண்டவனை அடியார்கள் யாவருமே “அப்பன் நீ அம்மை நீ” என்றுதான் அல்லும்பகலுமே ஆராக்காதலுடன் ஏற்றிப் போற்றியும் நிற்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. அம்மையே அப்பா என்று அடியவர்களால் ஏற்றிப் போற்றி நிற்கும் எம்பிரானே அடியவர் ஒருவரை எம்மைப் பேணும் அம்மை இவள்” என்று;  “அம்மையே” என அருள் சுரந்து அழைத்தாராம். ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்படும் அளவுக்கு உரித்தாய் நின்றவர்தான் “தமிழீன்ற தவப்புதல்வி காரைக்கால் அம்மையார்” அவர்கள்.

    பக்தி உலகிலே நால்வருக்கும் மூத்தவர். நால்வரும் பக்திப் பெருவெளியில் உத்வேகமாய் காலூன்றிப் பயணப்பட முன்னோடியானவர். அவர்களால் பாடப்பட்ட பக்திப் பனுவல்களுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். அவர்கள் எப்படியெல்லாம் தமிழில் இறைவனது திருவருளினைப் பாடலாம் என்பதற்கெல்லாம் பாவடிவுகளைபா இனங்களை யெல்லாம் காட்டி நின்ற பேராளுமை என்று அவரைப் பல நிலைகளில் நோக்கக் கூடியதாகவே இருக்கிறது.

    சைவபக்தி வரலாற்றில் அம்மையாரின் வருகை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். இவர் இறைவனை உருவகிக்கும் பாங்குஇறைவனை விழிக்கும் பாங்கு யாவுமே இவருக்கே தனித்துவமான ஒன்றாகவே விளங்குகிறது என்பதுதான் உண்மையாகும். அன்பினுருவமாய் ஆண்டவனை இவர் காணுகின்றார். இந்த உலகத்தைத் தோற்றுவித்த முதல்வனாய் விளங்குகிறான் என்று போற்றிப்பாடுகின்றார். அத்வைதத்தை ஆதிசங்கரரே பரப்பினார் என்று அறிகின்றோம். ஆனால் காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச்செல்விதான் அத்வைதத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அவரின் பாடல்களின் கருப்பொருட்களால் அறியக்கூடியதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். ஈசனே சகலமும் என்னும் கருத்தினை அம்மையார் சுட்டுவதன் மூலம் அரன்அரிஅயன் என்னும் அத்தனை நிலையும் ஒன்றாய் அடங்குவதையே வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    அறிவானும் தானே அறிவிப்பான் தானே
    அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
    மெய்ப்பொருளும் தானே விரிசுடர் ஆகாயம்
    அப்பொருளும் தானே அவன்

    என்று அற்புதத் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். அறிபவன்அறிவிப்பவன்அறிவாய் இருந்து அறிகின்றவனும்  அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. ஐம்பூதங்களாக விளங்குபவனும் அவனே, என்று அம்மையார் குறிப்பிட்டுக் காட்டும் நிலையினை அத்வைதம் என்று தானே பொருள்கொள்ளல் வேண்டும்.

    காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச் செல்வியின் பக்திப் பெருஞ் சொத்தாய் சைவத்துக்கு வாய்த்திருப்பவை தான்மூத்த திருப்ப திகங்கள்திருவிரட்டை மணிமாலைஅற்புதத் திருவந்தாதிஎன்பனவாகும். எம்பெருமான் சிவனது நடனம் பற்றியதாகவே இவரின் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும். அம்மையார் அவர்களுக்கு முன்பிருந்த தமிழர்கள் சிவனைப் பற்றியோ, அவரது உருவத்தைப் பற்றியோ, அவரொரு வடிவுகடந்த பொருள் என்பதனையோ, அதுமட்டுமல்ல அவர் ஒரு முழுமுதற் பொருள் என்பதனையோ நன்கு உணர்ந்தவாரக இருந்தாலும்; அந்தப் பரம்பொருளுக்கு உரித்தான வடிவம்தான் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உன்னை நான் எப்படித்தான் காட்டுவேனோ என மனமெண்ணி அம்மையார் நிற்பதையும் இங்கு அவரின் பாடல் வாயிலாகவே காணமுடிகிறது.

    அன்றும் திருவுருவம் காணாது ஆட்பட்டேன்
    இன்றும் திருவுருவம் கண்டிலேன் – என்றுந்தான்
    எவ்வுருவோ நும்பிரான் என்பார்க்கு என் உரைக்கேன்
    எவ்வுருவோ நின் உருவம் ஏது

    அம்மையார் இறைவனைப் பார்த்தவிதம் வேறு. ஆனால் மற்றவர்களுக்கும் காட்ட அவர் எம்பெருமானிடமே வழியினைக் கேட்டு நிற்கும் பாங்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறதல்லவா! என்றாலும் அவர் அந்தப்பரம் பொருளை – வேதியனாக,  வேதப்பொருளாக என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறார். உணருவார் உணருங்கள் என்பதும் தொக்கு நிற்பதாய்க் கொள்ளலாம் அல்லவா!

    வேதியனை வேதப் பொருளான வேதத்துக்கு
    ஆதியனை ஆதிரையாநன் னாளானைச் – சோதிப்பான்
    வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
    கில்லேன அமா என்றான் கீழ்

    பக்தியைப் பாடவந்த அம்மையார் தேமதுரத் தமிழினையும் தன்னுடைய அகத்தில் ஆழமாய் வைத்திருந்தார் என்பதும் மிகவும் முக்கியமாகும். அறத்தைப் பாடும் வடிவமான வெண்பாவைக் கையாளுகின்றார். அந்தப் பாவகை உணர்ச்சியைப் புலப்படுத்த உகந்தன்று எனவெண்ணி விருத்தப்பாவைக் கையிலெடுக்கிறார். தமிழின் பாவகைகள் எவற்றுக்கெல்லாம் உகந்தன எனச் சிந்தித்த அம்மையாரின் வழி தமிழ் வழியாக அமைகிறதல்லவா?தமிழால் பக்தியினைக் காட்ட முயலும் அம்மையார் பின்வந்த அடியார்க்கெல்லாம் தலை மகளாய்தமிழ்மகளாய்விளங்குகிறார் அல்லவா! அம்மாயாரின் பதிகங்களை “மூத்த நல் திருப்பதிகங்கள்” என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமைப்படுத்துகின்றார். அம்மையாரின் பின்வந்த சம்பந்தப் பெருமான் பாடிய பக்திப்பனுவல்கள் பதிகங்கள் என்று தான் பெயர் பெறுகின்றன. இதனால் அம்மையின் பாடலையும் பதிகம் என்னாது  “மூத்த நல்” என்னும் அடைமொழி கொடுத்தமை அம்மையின் மீது சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பினையே காட்டுகிறது எனலாம். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவராக சேக்கிழார் இருந்தாலும் அவரும் தேமதுரத் தமிழைத் தமது இதயத்தில் இருத்தி வைத்திருந்தார் என்பதும் நோக்கத்தக்கது. முழுக்க முழுக்க தமிழ்மரபு சார்ந்த சூழலையும்கதையினையினையுமே அவர் பெரியபுராணத்துக்காக எடுத்திருக்கிறார். அப்படியானவர் அம்மையாருக்காகவே காரைக்கால் அம்மையார் புராணம் அமைத்தாரோ தெரியவில்லை. தமிழை விரும்பியவர் தமிழை விரும்பிய அம்மையைஇறைவனே அவரைத் தன் தாய் என்று கூறுமாறு அமைத்தமை மனங்கொள்ளத்தக்கது. தாய் வயிற்றில் தான் எதுவுமே பிறக்க வேண்டும். அந்தத் தாயாக காரைக்கால் அம்மையாரைச் சேக்கிழார் பார்க்கிறார். முழுமையான சைவமும்சிவனின் வழிபாடு என்பதும் காரைக் கால் தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறது என்னும் கருத்தை யாவரும் மனமிருத்தல் அவசியமானதேயாகும். பிற்காலத்தில் தமிழில் சுவையான இலக்கியங்கள் அமை வதற்கு உரிய பாவினமாக விருத்தமே பொருத்தமாய் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அந்தப் பாவினத்தைத் தேர்ந்தெடுத்துக் கைகாண்டு காட்டிய தமித் தாயாகவே அம்மையார் விளங்குகிறார் என்பதும் தமிழுக்குப் பெருமையல்லவா! அம்மையாரையும் அடியார்களையும் பாட வந்த சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தை விருத்தப்பாவினால் பாடுவதற்கு வழிசமைத்தவரும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்லி அம்மையாரே என்பதும் மனங்கொள்ளல் வேண்டும்.

    பின்வந்த அடியார்கள் பக்தியொடு தமிழையும் இணைத்திட அம்மையாரே முதலாசான். திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகத்தின் இறுதிப்பாடலில்

    காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே “

    என்று தமிழினை முன்னிலைப்படுத்துகின்றார். இதனைப் பின்பற்றியே சம்பந்தப்பெரு மானும் “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். மற்றைய அடியார்களும் தமிழைச் சேர்த்துச் சொல்லுவதும் நோக்கத்தகது.

    அத்துடன் அமையாது தமிழின் சுரங்களையும்வாத்தியங்களையும் கூட காட்டி நிற்கிறார் அம்மையார்,

    துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
    உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
    சச்சரி கொக்கரி தக்கை யோடு
    தகுணி தந்துந்தபி தாளம் வீணை
    மத்தளம் கரடிகை வன்க மென்தோல்
    தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
    அத்தனை விரவினொடு ஆடும் எங்கள்
    அப்பன் இடம் திருவாலங் காடே

    அழலாட அங்கை சிவந்ததோ! அங்கை
    அழகால் அழல் சிவந்தவாறோ! – கழலாட
    பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்
    தீயாடுவாய் இதனைச் செப்பு

    சுரங்களை, வாத்தியங்களைக் காட்டிய அம்மையார் இறைவனின் திருநடனத்தையும் அவனின் ஒவ்வொரு அம்சத்தையுமே பக்தியினைக் கலைநயத்துடன் இணைத்து காணுவது நோக்கத்தக்தக்கது. “அம்மையே” என்று அழைத்தவுடன் அவரிடம் அம்மையார் வேண்டும் பாங்கிலும் ஆடற்கலையினை வலியுறுத்தி தன்னுடைய வேண்டு கோளினை முன்வைப்பதும் நோக்கத்தக்கது.

    இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க என்றார்

    பிறவாமையினை வேண்டும் நிலையிலும் – அப்படி ஒரு பிறவியானது வாய்க்குமானால் ஆண்டவனே உன்னயென்றுமே மறவாமலும் இருக்க வேண்டும் அது மாத்திரமல்ல நீ ஆட வேண்டும்! நீ ஆடுவதை உன் அடியின் கீழ் இருந்து பார்க்க வேண்டும். தமிழிலே மகிழ்ந்து நான் பாடவும் வேண்டும். என்று வேண்டி நிற்கும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்வியை ஆண்டவன்  “அம்மையே” என்று அழைத்தமை மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    Share
  • மண்மகிழ, பெண்மகிழ வேண்டும்!

    மண்மகிழ, பெண்மகிழ வேண்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.” மண்மகிழப் பெண்மகிழ வேண்டும். பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை   பூமித் தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம்.  பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம்  செய்கின்ற  சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க்கிறதுஅந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறதுஅந்தப் பெண்மையின் நிலைதான் என்ன?   இவை யெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன!

    உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனால்த்தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் னாலும் ஒரு பெண் இருப்பாள்‘ என்று சொல்லப்படுகிறது. அவள் – தாயாக,   தாரமாக,   சகோதரமாகமகளாகதோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும்ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண்மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் சர்வதேச மகளிர் தினம்” முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.

    பெண்களைப் பற்றிப் பெருமையாய் பேசும் சமூகத்தில் பெண்களின் ஆரம்ப கால நிலைமைகள் எப்படி அமைந்திருந்தனபெண்களுக்கு இந்தச் சமூகம் குறிப்பாக ஆணி னம் எந்த ளவுக்கு சுதந்திரத்தை வழங்கி வந்திருக்கிறது? இவையெல்லாம் வரலாறாகி நீண்டு நிற்கிறது என்பதுதான் இதற்குப் பொருத்தமான விடை எனலாம்.

    தடைகள் பலவற்றைத் தகர்த்தெறிந்துதனித்துணிவுடன் களத்தில் இறங்கிஆணுக்குச் சமமான நிலை பெண்களுக்கும் உண்டு – பெண் களுக்கும் இருக்க வேண்டும் என்று போராடிய பெண்களின் போராட்டம் வெற்றியைத் தொட்ட நாளே “பெண்கள் தினமாக” இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கிறது எனலாம். இவ்வாறான தினம் கொண்டாட் டம் அல்ல ! போராடிப் பெற்ற தினம் என்பதே மிகவும் பொருத்தம் உடையதெனலாம்.!

    பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்ற தென்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமைபெண்களின் நலன்யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலா ளர்களின் உரிமையைபிரச்சினைகளைமனமிருத்தி – உலகெலாம் ஒலிக் கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும் அவர்களின் செயற்பாடுக ளுக்கும் பெரும் உந்ந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரங்கள்பெண்களின் வாக்குரிமைபெண் அடிமை, விடுதலைஎன்னும் கோஷங்களுடன் பேரெழுச்சி யாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும்.இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857 இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண் களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த் தான் அவர்க ளுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919 இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது.   ஜேர்மனி ,   ஆஸ்திரியா,    டென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப் பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் சர்வதேச மகளிர் தினத்தைக்” கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயி ஸின் இணக்கம் தெரிவிக்கப் பட்டது. இது இடம் பெற்றது மார்ச் மாதம் ஆந் திகதியே யாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டு தோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917 ஆம் ஆண்டு மார்ச் ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட் டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகட னப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முனவந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை பெற்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும்தான் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்த படியே தான் தொடர்கதையாய் தொடர்கிறது எனலாம்.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  பெண்கள்” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்குபெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்குபெண் களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல் லும் உரிமை எதற்கு பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள். இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும். அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண் கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணு கிறோம்.ஆனாலும் பெண்க ளுக் கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை எனலாம்.

    பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. நாட்டின் ஜனாதி பதியாகபிரதம மந்திரியாக, உயர்நீதித்துறையின் தலைவராகஅரச பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களாகதொழில் முனை பவர்களாகபல்கலைக்கழக துணை வேந்தர்களாககல்லூரி முதல்வர்களாக,   பத்திரிகைகளின் பிரதம ஆசியர்களாக இன்று உலகம் முழுவதும் பெண்கள்  மிளிர்ந்து நிற்கிறார்கள் எனலாம். மருத்துவம் தொழில் நுட்பம்கலைகள் என்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும்சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்படவேண்டும். ஆணும், பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடை முறை வாழ்வில் கிடைக்காது இருபதால் கிடைத்திடச் செய்திடல் அவசியமாகும். பெண்கள் பொருளாதார ரீதியாகவும்இன சமூகரீதி யாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனை வரதும் தார்மீகக் கடமை யாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும்அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமி க்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்க ளின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது.

    காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. மேலதிகாரிகளால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை இன்றும் காணப்படுகிறது. அதுபோன்று ஏனைய உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கும் – அவர்கள் பெண்கள் என்ற காரணத்தாலேயே அவர்களும் பல மன உழச்சல் களுக்கு ஆளாவதும் – சிலர் மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கே சென்று விடுவதும் – ஏன்.. தற்கொலையே செய்துவிடுவதையும் காணமுடிகிறது. இவை அனைத்துமே சமூகத்தைவிட்டுக் களையப் பட வேண்டியனவாகும்.

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்து வோம்
    வைய வாழ்வு தன்னில் எந்த
    வகையினும் நமக்குள்ளே
    ஆண்களோடு பெண்களும்
    சரிநிகர் சமானமாக
    வாழ்வம் இந்த நாட்டிலே “

    அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம் கற்பு நிலை யென்றால் இரு சாரா ருக்கும் பொதுவாக்குவோம்” என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக் கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செய லாக்குதலே மிகவும்  அவசியமானதாகும். தாயாய்தமைக்கையாய், தங்கையாய்மனைவியாய்மகளாய்மருமகளாய்பேத்தியாய்வாழ்வில் இணைந்திருக்கும் பெண்ணை – பெண்மையினைக் காப்பது அனைவரதும் தலையாய பொறுப்பு அல் லவா ?

    பெண்ணால் நலன் அடையும் நாங்கள் பெண்களைக் காத்திடுதல் கட்டயமான கடன் அன்றோ! பெண்ணைத் தூற்றுவதும்பெண்ணை இழிவு செய்வதும்பெண்ணை மனமுடையச் செய்வதும்பெண்ணை அடிமை என்று நினைப்பதும்பெண்ணைப் போகப்பொருள் என்றே எண்ணுவதும் பொருத்தமுடையதா! அனைவரும் சிந்திப்போம்! மகளிர் தினம் என்பது ஒரு நாளில் மேடை போட்டு  சொற்பொழி வுகள் பொழிந்து நிற்பதல்ல! வாழ்வின் துணையாகஇணையாக இலங்கிடும் பெண்ணை, பெண் மையைக் காப்பதுதான் நம் அனைவரதும் தலையாய கடமையாகும்.

    அவர்களுடைய உரிமைகள் பேணப்பட வேண்டும். ஏனெனில் உலகெங்கும் சிறந்த பெண்களே உள்ளனர். ஆனால் அவர்களு க்கான அழகான வாழ்க்கை கிடைத்திரு க்கிறதா என்பதே கேள்வியாகி நிற்கிறது எனலாம்! .

    Share
  • மகாசிவராத்திரி மகத்துவம்!

    மகாசிவராத்திரி மகத்துவம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்” என்று நம்பிக்கை ஊட்டினார் ஞானசம்பந்தப் பெருமான். அவரால் அப்பரே என்று அழைக்கப்பட்டவர், “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா” என்று அழைத்து கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் – நற்றுணையாவது நமச் சிவாயவே” என்று உபதேசம் செய்தார். அவர்களின் பின்னர் வந்தவர் “மீளா அடிமை உமக்கே ஆளாய்” என்று இறைவனிடம் இயம்பி நிற்கின்றார். “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி – உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரியும் செல்வமாகிய சிவனை”, “நமச்சிவாய வாழ்கநாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று பணிந்து நின்று அதன் வழியில் எம்மையும் ஆற்றுப்படுத்துவராக மணிவா சகப் பெருமான் வந்து நிற்கிறார். இவர்கள் யாவருமே இறை நினைப்பினை மனமிருத்தி வாழ்நா ளெல்லாம் வாழ்ந்தவர்கள். இவர் கள் சமயநெறியின் வழியில் கால்பதித்து நின்றவர்கள் எனலாம். இவர்களை முன்னிறுத்தியே “நால்வர் வழியில் நடப்பது நன்று” என்றும், “நாலு பேர் சொல்லுவதைக் கேள்” என்றும் மரபாக வந்திருக்குமோ என்பதும் கருத்திருத்த வேண்டியதே. இவர்களின் சிந்தனைசெயற்பாடு, வாழ்வியல் முறைகள் அத்தனையுமே கோவிலாகவே இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். கோவிலை மையமாகக் கொண்ட இவர்களின் செயற்பாடுகளிற் கிடைத்த அனுபவங்கள் எங்கள் சமய நெறியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. முழுமுதற் கடவுளாய் எம்பிரான் சிவனையே இவர்கள் யாவரும் பணிந்து போற்றிதங்களின் மனத்தைப் பக்தியால் பிணைத்துஉருக்கமாய் பல தெய்வத் திருமுறைகளாக ஆக்கி எமக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் அகத்தில் அமர்ந்திட்ட அந்த ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியான சிவனைக் குறித்து பல விரதங்கள் அனுடிக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவோம். அப்படி அமையும் அந்த அருட் சோதியான சிவனின் விரதங்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரிய தாகவும்ஆன்மீக. அறிவியல் கருத்துகள் நிறைந்ததாகவும் அமைகின்ற விரதம்தான் வருடந் தோறும் வரு கின்ற “மகா சிவராத்திரி” விரதமாகும்.

    மகிமை வாய்ந்த சிவராத்திரி என்பது  ஐந்துவகையினதாக இருக்கிறது  என்பது நோக்கத்தக்கத்தாகும். திங்கட்கிழமையோடு இணைந்து வருவது “யோக சிவராத்திரி”. வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் வருகின்ற தேய்பிறைவளர் பிறைகளில் வரும் சதிர்த்தசி திதியில் வருகின்ற இருபத்து நான்கு நாட்களையும் “யோக சிவராத்திரி” என்னும் பெயரினால் அழைக்கின்றனர். தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு உண்டுபதினான்காம் நாள் வருகின்ற சதிர்த்தசி திதியன்று முறையாக விரதம் இருப்பதுதான் “பட்ச சிவராத்திரி” என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரி என்பது பெரும்பாலும் அமாவாசை அல்லது சதிர்த்தசி திதியை அண்டியே வரும். ஆனால் “மாத சிவராத்திரி” மாதத்தின் மற்றைய திதிகளிலும் வருகிறது என்பது நோக்கத்தக்கதாகும். இப்படிச் சிவராத்திரிகள் இடம் பெற்றாலும் மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வருகின்ற சிவராத்திரியே “மகா சிவராத்திரி” என்று ஏற்றிப் போற்றி அனுட்டிக்கப்படுகிறது. ஐந்து சிவராத்திரிகள் என்னும் நிலையில் அவற்றுள் ஒன்றான சிவராத்திரிக்கு மட்டும் “மகா” என்று அடைமொழி கொடுத்து அதனை உயர்வாக எண்ணுவது ஏன் என்னும் எண்ணம் எம்முள் எழுகிறதல்லவாஅப்படி அந்த நாளில் சிவராத்திரி அமைவதற்கு ஆன்மீகம் முக்கியமா அல்லது அதனுடன் அறிவியல் முக்கியத்துவப்படுத்தப்படுகிறதா என் னும் சிந்தனைகள் எழுகின்றன அல்லவா!

    எங்களின் சமயம் வாழ்வியல் நெறிகளை முழுவதுமாய் உள்ளடக்கிய சமயமாகும். உணவு சம்பத்தப்படுகிறது. உடை சம்பத்தப்படுகிறது. உடற் சுத்தம் சம்பத்தப்படுகிறது. பரம்பொருளைப் பாடிப்பரவுதற்கு நல்லு டலும்நல்லாரோக்கியமும் அடிப்படையாகும். உடலின் ஆரோக்கியத்துக்கு உணவு என்றுமே இன்றியமை யாததாகும். இவை அனைத்தையும் தாங்கி நிற்பதாகவே எங்கள் சமயம் விரதம்” என்னும் நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். அது கூடத் திட்டமிடப்பட்டே இருக்கிறது என்பது நோக்க த்தக்கதாகும். விரதம் என்று சொல்லும் வேளை அங்கே கோள்கள் சம்பந்தப்படுகின்றன. திதிகள் சம்பந்தப்படுகின்றன. கோள்களினால் நாள்கள் அமைகின்றன. நாட்களும்திதிகளும் ஆன்மீக மார்க்கத்தில் தத்துவத்தை, அறிவியலைக் குறித்திடும் நுட்பமான  சொற்கள் என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இதன் அடிப் படையில்த்தான் நாம் “மகா சிவராத்திரியை ” பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

    சமயத்தின் நுட்பமான கருத்துக்களை யாவரும் விளங்க வேண்டும் என்ப தற்காகவேதான் கதைகள் வந்தன. கதைகளின் இன்னுமொரு நிலைதான் புராணங்கள் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சிவராத்திரி எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல கதைகள் வழக்கில் வழங்கி வருவது  அனைவரும் அறிந்ததேயாகும். கதைகளை வைத்துக் கொண்டு சமயத்தையோ அல்லது அதன் தத்துவத்தையோ விமர் சிப்பதோ அல்லது கேலியாகப் பேசுவதோ ஏற்புடையதல்ல. இனிப்புத் தடவி அதனுள் மருந்தினை வைத்துக் கொடுப்பது போலத்தான்புராணக் கதைகள் சமய உண்மைகளை எடுத்து உரைக்கின்றன என்பதுதான் உண்மை நிலையாகும்.

    திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விஷத்தை எம்பெருமான் ஏற்று – தானே உண்டாரென்பதும்பிரம்மாவும்விஷ்ணுவும் ஆணவத்தால் முரண்பட்டு யார் பெரியவர் என்று நின்ற நிலையில் எம் பெருமான் ஜோதிப் பிளம்பாகத் தோன்றினார் என்றும் அவர்கள் அந்த ஜோதியின் அடியையும் முடியையும் தேடியும் காணொணா நிலையில் எம் பெருமான் அவர்களுக்கு உண்மையினை உணர்த்தினார் என்பதும், கண்ணப்பருக்கு எம்பெருமான் காட்சி கொடுத்தரென்றும்பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு பாசுபாஸ்திரம் கிடைக்கச் செய்தாரென்றும்யமனிடமிருந்து மார்க்கண்டேயரை எம்பெருமான் காத்த தினமென்றும்பல கதைகள் வழக்கில் இருந்து வருகின்றன என்பது நோக்கத்த த்தக்கது. இவைதான் சிவராத்திரி என்றால் இதற்கு அப்பாலும் சிவராத்திரியின் சிறப்பு இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அதுதான் – மகாசிவராத்திரி என்று மாசியில் ஏன் சிறப்பாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள் என்னும் அறிவியல் அணுகு முறையாகும்.

    நாங்கள் அனைவருமே பூமியிலேயே இருக்கிறோம். பிறப்பும், இறப்பும் யாவருக்கும் இந்தப் புவியிலே தான். உலகம் என்பது நாம் வாழுகின்ற இடம். இந்த உலகம் இயங்குவதற்கு ஒரு சக்தி கட்டாயம் தேவையானதுதானே. அந்தச் சக்தியைத்தான் “ஈத்தர்” என்று அறிவியல் சொல்லுகிறது.ஈத்தர் என்னும் சக்தியானது அண்டம் முழுவதுமே நிறைந்தே இருக்கிறது என்று அறிவியல் பகர்கிறது,

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது என்பது வானியல் அறிவாகும். இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக் கு மாறுகின்ற நேரமாகத்தான் எங்களின்   “மகாசிவராத்திரி” வரும் நேரம் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒரு முறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியைமகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச்சக்தியும் கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி   மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் (Self Blessing) செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) ல் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்று க்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத் திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமயரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

    ஆன்மீகத்துடன் அறிவியலைச் சித்தர்கள் இணைத்தே விட்டார்கள். சித்தர்களின் நோக்கில் சிவராத்திரி என்பது மிகவும் முக்கிய தினமேயாகும். அதுவும் மகாசிவராத்திரி உடலையும், உள்ளத்தையும், நல்ல நிலையில் வைப்பதற்கு மிகவும் உகந்த தினம் என்பதே அவர்களின் தீர்க்கமான முடிவாகும். சித்தர்களின் சிந்தனை பலருக்கும் விளங்க மாட்டாது. ஆனால் அவர்கள் உண்மைநிலையினையே உரைத்து நிற்பார்கள்.

    பசித்திருத்தல் என்பதும் தத்துவார்த்தமானது. அதாவது இறையுணர்வினைப் பெறுவதற்கு பசித்திருக்க வேண்டும். தனித்திருத்தல் என்பது தனிமையாக இருப்பதன்று. மனத்தினை அலையவிடாமல்ஒரு நிலையில் வைத்திருப்பதாகும். விழித்திருத்தல் என்றால் நித்திரை செய்யாது இருப்பதல்ல. மனத்தை எங்குமே செல்ல விடாது இறை நினைப்பை நாடி விழித்திருக்கும் நிலையினையே குறிப்பதாகும். இம்மூன்றையும் மகாசிவராத்திரியின் முக்கிய நிலையாக நாம் அனைவரும் கொள்ளுதல் வேண்டும்.

    விரதம் என்றாலே கட்டுப்பாடு என்றுதானே அர்த்தப்படும். கட்டுப்பாடு என்பது உடலுக்கு மட்டுமல்ல. உள்ளத்துக்குந்தான் என்பதை உணர்த்துவதே விரதத்தின் உயர் நிலையாகும். மகாசிவராத்திரியில் உடல் கட்டுப்படுகிறது. உள்ளமும் கட்டுப்படுகிறது. எம்முள்ளே அபரிதமான ஒரு சக்தியும் உள்நுழைகிறது. அந்தச் சக்தியினை உள்வாங்கும் பக்குவத்தை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    “தேடிக் கண்டு கொண்டேன் – திரு மாலொடு நான் முகனும்
    தேடிக் தேடொணத் தேவனை யென்னுளே தேடிக்
    கண்டு கொண்டேன் “

    இதுதான் உண்மையான நிலையாகும். அந்தத் தேவனை நாங்கள் அனைவருமே காணலாம். அதற்காகத் தான் யாவரும் – பசித்து, தனித்து, விழித்து, இருத்தல் அவசியமாகிறது.

    சிவனே முழுமுதற் கடவுள். சிவனே அனைத்துக்கும் காரணமாய் இருக்கிறார். அவரின்றி ஓர் அணுவுமே அசையாது. ஆதியும் அவரே. அந்தமும் அவரே. இருளும் அவரே. அதையகற்றும் பேரொளியும் அவரே. அவரை முன்னிலைப்படுத்தும் பெருவிரதமாக எங்கள் சமய நெறி கைகாட்டி நிற்பதுதான் “மகாசிவராத்திரி” ஆகும். அந்தப் புனிதமான தினத்திலே “தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி – அல்லல் அறுத்து ஆனந்தம்” தரும் வண்ணம், எல்லையில்லா அன்புடன் யாவரும் அந்தச் சிவப்பரம்பொருளை இறைஞ்சி நிற்போம்.

    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே

    Share
  • கண்ணையே கொடுத்த கண்ணப்பர்!

    கண்ணையே கொடுத்த கண்ணப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அந்த மொழிகளில் எங்கள் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமையை எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. எல்லா மொழிகழுமே இலக்கியத்தைக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியத்தால் அந்த மொழிகளும் பெருமையினையும் பெற்றிருக்கின்றது. அப்படிப் பெருமையி னைப் பெற்றாலும், தமிழ் பெறும் பெரு மைக்கு ஈடாக முடியாது என்பதுதான் கவனத்துக்குரியதாகும். ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி அப்படி என் னதான் முக்கியத்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று அறிந் தி டும் ஆவல் ஏற்படுகிறதல்லவா? அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். பக்தி க்கு என்று இலக்கியங்கண்ட உலகின் ஒரே மொழி எங்கள் தமிழ்மொழி மட்டுமேயாகும்.

    இலக்கியம் என்றால் ஒரு இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது என்று தான் அறிஞர்கள் சொல்லுவார்கள். இலக்கியம் என்னும் பொழுது அதில் பக்தி யினைப் புகுத்த வேண்டும் என்னும் சிந்தனை புதியதோர் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனைத் தமிழ் சமூகத்தார் செய்திருக்கிறா ர்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்போக்குப் புலப்பட்டு நிற்கிறதல்லவா. சுவைத்துப் படிக்கும் இலக்கியத்திலும் பக்தியானது இருக்க வேண்டும் என்னும் கருவா னது மிகவும் உன்னதமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதேயாகும். எப்ப டியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கையைவிட இப்படித்தான் வாழ வேண் டும் என்று வாழுதல்தான் சிறந்த வாழ்வாகும். அப்படி வாழும் வாழ்வினைத் தான் “வையத் துள் வாழ்வாங்கு வாழுதல்” என்கின்றோம். அப்படி வாழ்வதற்கு உரிய வழியினைக் காட்டிடக் கைகொ டுத்து நிற்கும் நிலையில் முகிழ்த்ததுதான் பக்தி இலக்கியம் என்னும் புதுக்கரு என்று கூட எடுத்துக் கொள் ளலாம் அல்லவா!

    பக்தியினால் பக்குவம் வருகிறது. பக்தியினால் பண்பு வளர்கிறது. பக்தியினால் அன்பு துளிர்க்கிறது. பக்தியினால் உயர்வு தாழ்வு அகல்கிறது. பக்தியினால் தர்மம் செழிக்கிறது. அறம் மலர்கிறது. பக்தி யினால் விருந்தோம்பல் சிறக்கிறது. பக்தியினால் ஒழுக்கம் உயர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல் லதோர் சமூகமே உருவாகிறது என்பதுதான் கருத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இவை எல்லாவற்றையும் மனமிருத்தி பக்தி இலக்கியப் பாதையிலே ஒருவர் ஆசையுடன் பயணிக்கிறார். அந்தப்பயண த்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் யாவருக்கும் பயன்படும் வண்ணம் ஆக்கியும் விட்டிருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். அப்படி பயணிணித்த அவர் பக்தியினால் ஒரு பரிசினையும் எமக்கெல்லாம் வழங்கியும் நிற்கிறார். அந்தப் பரிசு என்ன என்று அறிந்திடும் ஆவல் எழுகிறதல்லவாஅந்தப்பரிசுதான் “பெரிய புராணம்”. பக்தியின் பரிசாக எமக்கெல்லாம் பயனுற வழங்கியர் தான் “சேக்கிழார் பெருமான்”.. இவரின் பரிசின் பெருமை காரணமாக  “பக்திச்சுவை நனி  சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று தமிழுலகமே இவரை வியந்து போற்றி நின்றது.

    நாயன்மார்களும் பக்தியினைப் பாடினார்கள். ஆழ்வார்களும் பக்தியினைப் பாடினார்கள். அவர்களின் பக்தியின் அனுபவம் வேறாக இருந்தது. அந்த அனுப வங்கள் அத்தனையும் அவர்களுக்கு வாய்த்த அனுபவங்களின் வெளிப்பாடாக வேதான் இருந்திருக்கிறது. ஆனால் சேக்கிழார் காட்டும் பக்தி அனுபவமும் அதற்காக எடுத்துக் கொண்ட முறையும் முற்றிலும் வேறு பட்டதாகவே காணப்படுகிறது. ஆண்ட வனின் அருளினை அடியார்கள் தங்களின் திருப்பாடல்கள் வாயிலாக எமக்கெல்லாம் காட்டி நின்றார்கள். அந்த அடியார்களையும் அவர்களின் பக்தியின் நிலையினையும்பக்குவத்தையும் யாவருக்கும் காட்டும் புதிய உத்தியினையே வெளிப்படுத்தும் நிலையில் சேக்கிழாரின் செயலமைந்தது என்பதுதான் இங்கு முக்கிய திருப்பமாய் அமைகிறது எனலாம்.

    சேக்கிழார் காட்டும் அடியார்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களின் சிந் தனைசெயல்கள் அனைத்துமே மாறுபாடானவை. அது மட்டுமட்டுமல்ல வேறு பாடானவையாயும் அமைந்திருந்தன. ஆனால் அவர்கள் அனைவரையும் பக்தி என்னும் ஒரு குடைக்கீழ் வந்து நிற்கச் செய்கிறார் சேக்கிழார் என்பதுதான் மிகவும் சிறப்பாகும். அப்படி அவரின் குடைக்குள் வந்து நிற்கும் வித்தி யாசமான ஒரு அடியார்தான் , “தன்னையே மறந்து கண்ணையே கொடுத்த கண்ணப்பர்.”

    பெரியபுராணத்தில் பல அடியார்களின் பக்தியின் நிலையினைப் பார்க்கலாம். ஆனால் கண்ணப்பரின் நிலையினை இக்காலச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளுவார்களா என்னும் கோணத்தில், சேக்கிழாரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து, சேக்கிழாரின் சிந்தனை எப்படி அமைகிறது என்பதைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா !

    சரியை, கிரிகை, யோகம், ஞானம், என்னும் படிமுறைகளில் அடியார்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பக்தி செய்யும் பாங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் பொதுமையான கருத்து நிலையாகும். இந்த படி முறைக்குள்தான் ஏதாவது ஒன்றில்த்தான் எங்களின் பக்தியின் பாதையும் அமைந்து இருக்கிறது. இந்தப் படிமுறைகள் பற்றிக் கற்றுணர்ந்தவர்களே பெரும்பாலும் அறிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரணமானவர்களோ தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் பக்தியினை வெளிப்படுத்தி நிற்பார்கள். பக்தியெனும் பொழுது அங்கே அறிவு முக்கியமாக அமையாது உணர்வுதான் மேலோங்கி முக்கியமாகி முன் வந்து நிற்கிறது என்பதுதான் யதார்த்தமாகும். இவ்வாறு உணர்வு எழும் நிலையி லும் எழுகின்றவர்களின் தன்மைக்கு ஏற்பவே அது அமையும் என்பதுதான் முக்கியமாகும். ஒருவர் உணர்வு மேலீட்டால் செய்வது போன்று இன்னொருவரும் செய்வார் என்று எதிர்பார்த்திடவே கூடாது. இந்த நோக்கில்த்தான் சேக்கிழார் கண்ணப்பரை நோக்குகிறார். எங்களுக்கும் காட்டுகிறார்.

    வெல் படைத் தறுகண் வெஞ்சொல்
    வேட்டுவர் கூட்டம் தோறும்
    கொல் எறி குத்து என்று
    ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

    கண்ணப்பர் பிறந்த சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து சேக்கிழார் காட்டுவது மிகவும் முக்கியமான கருத்தெனலாம். “கொல்எறி குத்து ” என்னும் ஓசைதான் அங்கே முன்னிற்கும் ஓசையாகக் காட்டப்படுகி றது.

    மைச்செறிந் தனைய மேனி
    வன்தொழில் மறவர் தம்பால்
    அச்சமும் அருளும் என்றும்
    அடைவிலார் உடைவன் தோலார்
    பொச்சையி னறவும் ஊணின்
    புழுக்கலும் உணவு கொள்ளும்
    நச்சழற் பகழி வேடர்

    கண்ணப்பரின் வேடர் கூட்டம் கரிய மேனியைக் கொண்டவர்அச்சம் என்பது அவர்களிடம் இல்லை. அதேவேளை அருளுங்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் தொழிலே கொடுந்தொழிலாகவே இருப்பதாய் சேக்கிழார் படம் பிடிப்பதுபோல் ஆரம்பத்திலே காட்டி நிற்கிறார். அதுமட்டுமல்ல கண்ணப்பரின் தகப்பன் குற்றமே குணமாகக் கொண்டிருக்கிறானாம். காரணம் அவனின் இந்தப்பிறவியில் அவனுக்கு வாய்த்த சூழலேயாகும். அதனால் அவன் கொலை செய்யவும் அஞ்சா நிலையினை உடையவனாகவே காணப்படுகிறான். அப்படி இருக்க அவனுக்கு எப்படி கண்ணப்பராகப் போகின்றவர் பிள்ளையாகப் பிறக்க முடிந்தது என்னும் ஐயம் எழுத்தானே செய்யும்அதற்கும் பொருத்தமாய் சேக்கிழார் பதிலினைப் பகர்ந்து நிற்கிறார்.

    பெற்றியால் தவமும் செய்தான்
    ஆயினும் பிறப்பின் சார்பால்
    குற்றமே குணமா வாழ்வான்
    கொடுமையே தலைநின் றுன்னான்

    முற்பிறப்பில் செய்த தவப்பயனால்த்தான் கண்ணப்பர் அவனுக்குப் பிள்ளையாக வாய்க்கும் நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம் என்பதையே “பெற்றியால் தவமும் செய்தான்” என்று சேக்கிழார் தகுந்த பதிலாகக் காட்டுகின்றார். ஆனால் இப்பிறப்பில் கண்ணப்பரின் தந்தையின்  இயல்பு வேடர்க்குரியதாகவே ஆகிவிட்டது என்பதையும் சேக்கிழார் காட்டி நிற்கத் தவறவே இல்லை என்பதைத்தான் இப்பாடலின் அடுத்த வரிகள் காட்டி நிற்கின்றன.

    வேடர் குலத் தலைவனுக்கு எல்லாவளமும் இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லா நிலையில் தங்களின் குலதெய்வமான முருகக்கடவுளை வேண்டி நிற்கிறான். அவனின் முன்வினைப் பயனாக ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. வேடர் குலமே ஆனந்தப் பரவசப்பட்டு நிற்கிறது. பிறந்த குழந்தையை தந்தை ஆசையுடன் தூக்குகிறான். அந்தக் குழந்தை மற்றைய குழந்தைகள் போலல்லாமல் கனமாக அதாவது திண்மையாக இருந்தத படியால் “திண்ணன்” என்று பெயர் சூட்டி மகிழ்கிறான். வேடர் குலமே திண்ணன்திண்ணன் என்று வானைத் தொட கோஷமிட்டு நிற்கிறது. திண்ணன் என்னும் பெயரும் கூட பின்னால் வரப்போகின்ற நிகழ்வுக்கு கட்டியங் கூறுவதாக அமைகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டியதேயாகும். தன்னையே இழக்கும் திடம் அதாவது திண்ணம் அவனின் கருவிலேயே கருக்கொண்டு விட்டிருக்கிறது என்பதைத்தான் தந்தையின் வாயிலிருந்து அந்தக் குழந்தைக்குப் பெயராக வாய்ததோ என்றும் எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கிறதல்லவா?

    திண்ணன் வளர்கிறான். வளர்ந்த திண்ணன் வேடர்குல வழக்கப்படி காட்டுக்குக் கன்னி வேட்டையாடச் செல்கிறான். அவனுடன் வேடர்கள் பலர் செல்கிறார்கள் வேட்டை நாய்களும் செல்லுகின்றன. திண்ணனின் அணுகு தொண்டராக நாணன் என்பவனும் காடன் என்பவனும் கூடவே செல்கிறார்கள். வேட்டையின் பொழுது முரட்டுப் பன்றி ஒன்றினால் திண்ணனும் கூட் டமும் களைத்தே போகும் நிலை உண்டாகிறது. களைத்தாலும் திண்ணனின் தீரத்தால் அந்த மூர்க்கமான பன்றி குத்திக் கொல்லப்படுகிறது.களைத்த திண்ணன் நீரருந்தும் இடத்தை நாட நிற்கும் நிலையில் அவனுடன் வந்த நாணன் பக்கத்தில் பொன்முகலி ஆறு இருக்கிறது என்னும் செய்தியைச் சொல்லி அவனை அழைத்துச் செல்லுகிறான். ஆற்றில் நீருண்டு களைப்பாறும் திண்ணனுக்கு அங்கிருக்கும் மலைபற்றிச் சொல்லுகிறான். திண்ணனும் மலையிலேறி மலைவளத்தைப் பார்த்திட விரைகிறான். அங்கு குடுமித்தேவரைக் காணுகிறான். அதன் பின் அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்னும் கதைகளை நாமனைவருமே நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.

    திண்ணன் என்னும் வேடன், ஒரு காடன், எப்படி இவ்வாறு ஆகினான் என்பதுதான் அனைவரின் மனத்திலும் இன்றுவரை எழுந்து கொண்டே இருக்கும் கேள்வி எனலாம். கொத்து, வெட்டு, கொல்லு, என்னும் சூழலைக் கொண்ட இடத்தில் பிறந்தவன். அன்பு என்றால் என்னவென்றே விளங்காதவன், சமயம் தெரியாதவன், தத்துவம் என்றால் என்னவென உணராதவன், எப்படித் தன்னையே மறந்தான். தன் கண்ணையே பிடுங்கினான்! புரியாத புதிராக இருக்கிறதல்லவா? அன்பு என்பது சாதாரணமானது அல்ல! இதனால்த்தான் “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றார் வள்ளுவப் பேராசான் என்று எண்ணத் தோன்றுகிறது. மாறா அன்பு ஒருவரிடம், ஒரு இடத்தில் ஏற்பட்டுவிடுமானால் அந்த நிலையில் செய்யப்படும் அனைத்துமே வியப்புக்குரியதாக,  நினைத்துமே பார்க்க முடியாததாகவேதான் அமைந்துவிடும். அந்த வியப்பினையே திண்ணன் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய நிலையும் எனலாம். தவமிருந்து பெற்ற பிள்ளையை தாய் பிடிக்க தந்தை வாளால் வெட்டுகிறார். நடக்குமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எப்படி நடந்தது? தன்னை மறத்தலும். தன்னையே இழத் தலும்தான் இதன் அடிப்படை எனலாம்.

    முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
    பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

    தன்னை மறக்கும் நிலை பற்றி இத்திருப்பாடலின் கருத்தாகவேதான் திண்ணனின் செயலும் அமைந்திருக்கிறது.

    நல்வினையும், தீவினையும், ஆன்மாவைப் பற்றியபடியேதானிருக்கும். நல்வினை இறை நாட்டத்துக்கு அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அவ்வேளை தீவினை தடுத்திட முன்வந்து நிற்கும். நல் வினையானது முந்திக்கொள்ளும் பொழுது தீவினை செயலற்றுப் போய் விடுகிறது. ஆண்டவனை ஆன்மா அடையும் பொழுது நல்வினையினையையும் விட்டு விட வேண்டும். இருவினைகளும் அறும் பொழுது இறை நிழல் ஆன்மாவுக்கு வாய்க்கிறது என்பதுதான் தத்துவ நிலையாகும். திண்ணன் என்னும் ஆன்மாவைச் சுற்றி நாணன் என்னும் நல்வினையும், காடன் என்னும் தீவினையும் நிற்கிறது. பன்றியைக் கொன்று காடனிடம் ஒப்படைத்த பின்னர் திண்ணன் என்னும் ஆன்மாவுக்கு நாணன் என்னும் நல்வினைதான் மலையைக் காட்டுகிறது. குடுமித் தேவர் இருக்கிறார் என்பதையும் சொல்லுகிறது. திண்ணன் என்னும் ஆன்மாவை நாணன் என்னும் நல்வினை கூட்டிச் செல்லுகிறது ஆனால் ஒரு கட்டத்தில் நல் வினையாகிய நாணணனையே ஆன்மாவாகிய திண்ணன் ஒதுக்கியே விடுவதையே காண்கிறோம். நல்வினையும், தீவினையும், ஒதுக்கப்பட்ட நிலையில்த் தான் இறைவனை ஆன்மாவால் நெருங்க முடிகிறது. இறைவனின் அருளுக்கும் பாத்திரமாகவும் முடிகிறது. இவ்வாறு தான் கண்ணை அப்பிய கண்ணப்பரை நாம் பார்க்க வேண்டும்.

    கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
    ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

    கண்ணப்பரின் நிலைக்கு மிகவும் பொருத்தமாக இத்திருப்பாடல் இருக்கிற தல்லவா! திண்ணன் என்னும் பெயருடன் இருந்த வேடன், கண்டதும் தன்னை இழந்து, தன் கண்ணையே இழக்கிறான் எனும் பொழுது அவனிடத்து ஏதாவது எதிர்பாப்ர்பு இருந்திருக்கிறதா என்றால், அங்கு எதுவுமே இல்லை என்றுதான் விடை சொல்ல வேண்டும். “வீடும் வேண்டா விறல்” என்பதுதான் கண்ணை அப்பிய நிலையில் திண்ணனிடம் காணப்பட்டிருக்கிறது என்பதுதான் பொருத்தமாய் அமைகிறது. குடுமித் தேவரின் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதற்கு உரிய மருந்து தன்னுடைய கண்ணைப் பிடுங்கி வைப்பதுதான் என்று எண்ணினானே அன்றி, பிடுங்கி வைத்தால் தனக்கு அதனால் பெருவரமோ, அல்லது உரமோ கிடைக்கும் என்று அவன் கருதவே யில்லை. இதனால்த்தான் இறைவனாலே ஆட்கொள்ளப்பட்டு ஆறாம் நாளே முத்தியின்பத்தைப் பெறும் நிலை க்கு ஆளாகியும் விடுகிறான்.

    கண்ணை அப்பிய வேடன் திண்ணன் “கண்ணப்ப நாயனார்” என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் குருபூசை செய்து வணங்கும் நிலைக்கு வந்தமை என்பது எதனைக் காட்டுகிறது என்றால் அப்பளுக்கில்லா, ஆசையில்லா அன்பின் உச்சநிலையினையே காட்டுகிறது என்பதுதான் உண் மையாகும். இதனால்த்தான் அன்பு என்று வரும்பொழுது அங்கே கைகாட்டப்படும் நிலை கண்ணப்பருக்கு மட்டுமே உரித்தாகி நிற்கிறது.கண்ணப்பரை அன்புக்காகக் கைகாட்டுபவர்யார் தெரியுமா அவர்தான் “மெய்தானரும் பும் வண்ணம்” திருவாசகம் தந்த மணிவாசகப்பெருமான்.

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
    சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

    கண்ணப்பரை மணிவாசகர் காட்டினார். எம்பெருமானே கண்ணப்பரின் அன்பின் உயர்வினைக் காட்டு வதாக சேக்கிழார் தரும் இச்செய்திதான் மிகவும் உச்சமான உயர்வுடை செய்தியாகும். இது ஒன்றே கண்ணப்பரைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும் அல்லவா!

    அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கம் அன்பென்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
    அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
    அவனுடைய நிலையிவ்வா றறிநீயென் றருள்செய்வார்

    Share
  • தைப்பூசத் திருநாள்!

    தைப்பூசத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    எம்மைப் படைத்த பரம்பொருளினை வாழ்வெல்லாம் எண்ணிட வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் விடியும் ஒவ்வொரு நாளினையும் அந்தப் பரம்பொருளுக்கு உரிய நாளாகவே ஆக்கி அதற்கென்று ஒரு பெயரினையும் சூட்டி பக்தியின் பாதையிலேதான் பயணித்து வந்திருக்கிறார்கள்.  அந்த வகையில் வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை தெய்வத்துக்குரிய மாதமாக்கி – திருவெம்பாவை என்றும்திருப்பாவை என்றும் பக்திப் பனுவல்களை அதிகாலை வேளையிலே ஆலயத்தில் பாடிப் பரவி நின்றார்கள். சைவம் என்றோ, வைணவம்என்றோ பார்க்காமல் அந்தப் பரம்பொருள் புகழ்பாடும் மாதமாகவே வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை ஆக்கி விட்டார்கள். வருடத்தின் இறுதி மாதம் பரம்பொருளின் புகழ்பாடும் மாதமாக அமைத்த எங்கள் முன்னோர் வருடத்தின் தொடக்கத்தையும் பரம்பொருளினை எண்ணி பக்திவழியிலேயே தொடங்கும் வண்ணம் ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். பூமாதேவியைத் தொட்டு ஆதவனை அகமிருத்தி பஞ்சபூதங்களையும் வணங்கி நன்றி நவிலும் முகமாக தைப்பொங்கல்த் திருநாளினை வருடத்தின் தொடக்கமாகவே அமைத்த முன்னோர்களின் மகத்தான வாழ்வியல் நெறியினை வியந்துதான் பார்க்கவேண்டி இருக்கிறதல்லவா!

    நட்சத்திரங்களைநாட்களைதிதிகளை எல்லாம் மனமிருத்தி அவை ஒவ்வொன்றும் உரிய வகையில் பரம்பொருளினைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பக்தித் திருநாட்களை ஒழுங்கமைத்த பாங்கினைப் பாராட்டியே ஆதல் வேண்டுமல்லவா! மார்கழியில் ஆதிரை நட்சத்திரத்தை சிவனுடன் இணைத்து திருவாதிரைத் திருநாள் வருகிறதல்லவா! மார்கழிமூலம் ஆஞ்ஞனேயருக்கு உரியதாக்கி அதனையும் திருநாளாக்கினார் களல்லவா! தைப்பொங்கல் தைமாதப் பிறப்பாக அமைகிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது மனத்தைரியத்தையும்எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினையும் நல்கிறதல்லவா! ” ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்பது யாவர் மனத்திலும் பதிந்திருக்கும் பெரு மந்திரம் அல்லவா! அந்த மந்திரச் சொல்லுக்கு உரித்தான தகம்பன் சாமியான முரு கனுடன் தையில் வரும் பூச நட்சத்திரத்தை எங்கள் முன் னோர்கள் இணைத்திருக்கிறார்கள். பொங்கலில் பிறந்த நம் பிக்கைக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது இருக்க வேண்டுமேயானால் அதற்கு பெருந்துணை அந்தக் கந்தப்பெரு மானேதான். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகக் காட்சிதருபவர் எங்கள் கந்தப்பெருமானே! அந்தப் பெருமானின் திருநாளாய் மலர்வதுதான் தைப்பூச நன்னாள்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும் அல்லலகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கும் என்று அடியார்கள் அனைவருமே பெரு நம்பிக்கையுடனேதான் இருக்கிறார்கள். அடியார் ஒரடி நடந்தால் ஆண்டவன் நூறடி வருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமே நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பெரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

    இதனால்தான்  கலியுகத்தில் எவர்வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை எது தெரியுமா? “முருக ” என்பதேயாகும். ஓம் முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவித பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன. மயிலேறி அந்த மால்மருகன் நிச்சயம் வந்திடுவான். வாழ்விருக்கும் வினையனைத்தையும்  வேல் கொண்டு ஒழித்திடுவான்! என்னும் தெளிவு அனைவருள்ளத்திலும் பிறக்கிறது.

    அழகுஆற்றல், கருணைநிரம்பிய முருகப்பெருமானுக்கு என்று  பல விசேட தினங்கள் அமைந்திருக்கின்றன ஆனாலும் “தைப்பூசம்” என்னும் திருநாளானது அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாகக் கொள்ளப்பட்டுவருகிறது என்பது நோக்கத்தக்கத்தக்கதாகும். தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்ததினமாகக் கொள்ளப்பட்டு  நீண்ட காலமாக தைப் பூசம் என்பது  பெருவிழா வாக தெய்வத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நோக்கத்தக்கது.

    தைப்பூசத் திருவிழா என்பது  இன்று, நேற்று,  ஏற்பட்டதல்ல என்பது மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இந்தத் திருநா ளானது, எங்கள் தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தப் பெருமானது  காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அது மட்டுமன்றி பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    பல தெய்வங்கள் பற்றிய வழிபாட்டினை நோக்கும் பொழுது  முருக வழிபாடு என்பது மிகவும் பழைமை வாய்ந்தது என்றுதான் அறிந்த்து கொள்ள முடிகிறது. தைப்பூசம் என்னும் திரு நாளோடு  முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார் என்பது இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது. முருகு – என்றால் இளமை. முருகன்  – என்றால் அழகன் என்றும் என்றுமே இளமையானவன் என்றும் கருத்துக்கள் நிறைந்தே சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரினை எங்களின் அன்னைத் தமிழுடன் இணைத்துப் பார்க்கும் அடியவர்களும் பலர் இந்த அவனியிலே நிறைந்திருக்கிறார்கள். அந்த வகையிலே  தமிழில் காணப்படுகின்ற எழுத்துக்களை – வல்லினம், மெல்லினம், இடையினம் என்று இலக்கணத்தார் வகைப்படுத்தியிருக்கிறார்கள். “முருகன்” என்னும் பெயரினை உற்று நோக்கினால் அங்கே தமிழ்ன் மூவின வகை யான தன்மையும் ஒருங்கே இணைவதைக் கண்டு கொள்ளமுடியும். இதனால் முருகப் பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஒரு எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

    பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, படாத வேதனைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு – அந்தப் பரம்பொருளை நோக்கி தவமிருந்து  வரம்பெற்று – அப்படிப் பெற்ற வரத்தினால் பரம்பொருளின் அனுக்கிரகத்துக்கு ஆளாகி  வந்தவர்கள் – பெற்ற வரத்தினைப் பேணாது அதனை தங்களின் சுய இச்சைகளுக்காகப் பயன்படுத்துவது பொருந்தக் கூடியதா? அது மட்டுமன்றி அந்தவரத்தை நல்வழியில் பயன்படுத்தாது – ஆணவத்தால் அற வழியை மறந்து தம் மனம்போன போக்கில் செயற்பட நினைந்தால் என்னாகும். முடிவில் அழிவுதானே வந்து நிற்கும். பெற்ற வரத்தினைப் பேணிக் காக்காமல் மறவழியில் ஆணவத்துடன் செயற்பட்டான் சூரபதுமன். தேவர்களையே சிறைப் பிடித்தான். வரம் கொடுத்த பரம் பொருளையே மதியாது ஆணவத்தின் உச்சியில் ஏறி நின்றான். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு – வரமளித்த அந்த ஆண்டவனின் சக்தியானது எப்படியோ தோன்றி மறத்தை அழித்து அறத்தை ஓங்கச் செய்யும் என்பதுதான் உண்மையாகும். அரத்தினை நிலைநிறுத்த ஒரு சக்தி வெளிப்பட்டது. அந்தச் பெருஞ் சக்திதான் “முருகப் பெருமான்” என்னும் நிலையில் வந்தமைந்தது. ஆணவ இருளை, அகத்தை இருளை அகற்ற வேண்டுமேயானால் அங்கு ஒரு பேரொளி தோன்ற வேண்டும் அல்லவா! அந்தப் பேரொளி எப்படி அவதாரமாக அமைந்தது என்பதைக் காண்போமா!

    அருவமும் உருவமாகி
    அனாதியாய் பலவாய் ஒன்றாய்
    பிரமாய் நின்றஜோதி
    பிளம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும்
    கரங்கள் பனிரெண்டும் கொண்டு
    ஒருதிரு முருகன் வந்தாங்கு
    உதித்தனன் உலகம் உய்ய”

    என்று அந்தப் பேரொளியாக  முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது. பேரொளியாக முருகப் பெருமான் வந்த நாளாகவே தைப்பூசத் திருநாள் அமைகிறது என்பதுதான் முக்கியமாகும். இதனால்  முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் தைப்பூசத் திருநாள் பக்திபூர்வமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்று தைப்பூசத்துக்கும் முருகனுக்குமான தொடர்ப்பைப்பற்றி ஒரு கதை நெடுங்காலமாகவே வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும் நோக்கத்தக்கது.

    ஆணவத்தின் உச்சியிலிருந்து அட்டூழியம் செய்யும் அரக்கரை அழித்திட பரம்பொருளாம் சிவனால் உருவக்கப்படுகிறார் முருகப் பெருமான். வரம் கொடுத்த தான் போகாமல் தன்னிலிருந்து வெளிப்படுத்திய சக்தியான முருகனைக் கொண்டே சரியான பாடம் புகட்டிட இறைவன் எண்ணுவதும் இங்கு நோக்கத் தக்கது. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியான சக்தியாய் முருகப் பெருமான் விளங்குகின்றார். பாலகனாய் இருக்கும் அவரை வரமும் உரமுமுடைய அரக்கரை அடக்கி ஆணவத்தை அழிக்க அனுப்பும் பொழுது – அவருக்கு உறுதுணையாக ஒரு பெருஞ்சக்தியாக உமையம்மன் ஒரு வேலினைப் பாலகனான முருகனுக்குக் கொடுக்கின்றார்.   அம்மை கொடுத்த சக்திவாய்ந்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து முருகப் பெருமான அறமென்னும் வெற்றியினைப் பெற்ற தினமாகவும் தைப்பூச விழாவானது  அமைகிறது என்று ஒரு கதையும் மரபாக வழக்கில் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    இதுமட்டுல் அல்லாமல் இன்னுமொரு கதையும் தைப்பூசத்துடன் முருகப் பெருமானை சம்பந்தப் படுத்த சொல்லப்படுவதும் நோக்கத்தக்கது. எம்பெருமான் சிவனால் பார்வதிதேவியாருக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. உபதேசிக்கும் வேளை அதனை முருகப்பெருமானானவர் மறைந்திருந்து கேட்ட தாகவும், இதனை அறிந்த பார்வதிதேவி – கோபங்கொண்டு முருகனைச் சபிக்கின்றாராம். இதனால் முருகன் கோபித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் சென்று அமர்ந்துவிடுகிறார். முருகனின் கோபத்தை நீக்க சிவனும், பார்வதியும்  முருகன் இருக்கும் இடமான திருப்பரங்குன்றம் சென்று சிவனும், பார்வதியும்  கொடுத்த சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் ஒரு கதை வழக்கில் இருந்து வருகிறது.

    கதைகள் என்னும் பொழுது அத்தனையும் பலகாலமாகவே வழக்கில் நிறைந்தே வந்திருக்கின்றன. அந்தவகையிலேதான் முருகப் பெருமான் பற்றிய பலவித கதைகளும் மக்கள் மத்தியில் உருவாகி அப்படி உருவான கதைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தைப்பூசத்துடன் இணைக்கப்பட்டு விட்டன என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. முருகனது அவதார தோற்றத்தைக் கந்தபுராணம் காட்டுகின்ற பொழுது “பிரம்மாய் நின்ற ஜோதிப் பிளம்பதோர் மேனியாகி – கருணைகூர் முகங்கள் முகங்கள் ஆ றும் கரங்கள் பனிரெண்டும் கொண்டு ஒரு திருமுருகன்” வந்தான் என்று காட்டுவததைக் கருத்துவதுதான் மிகவும் முக்கியம். முருகப் பெருமான் என்னும் பொழுது அங்கே பிரகாசிக்கும் ஜோதியே வெளிப்பட்டு நிறிறது. ஜோதி என்றால் பிரகாசம் என்று தானே அர்த்தமாகிறது. தைப்புசத்தன்று பெளர்ணமி தினமாகும். பெளர்ணமி பெரு வெளிச்சம் அல்லவா! அந்தப் பெரு வெளிச்சத்துடன் பிரம்மமாய் நின்ற ஜோதியாக உதித்த முருகப் பெருமானை இணைப்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    தைபிறந்தால் வழிபிறக்கும்.தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடையது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாக தெரிகிறதல்லவா?

    தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

    மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
    தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் “

    சைவத்தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ்நாடு,  இலங்கை சிங்கப்பூர்மலேசியாதென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியாபோன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப் பகுதிகளிலும்கூட தைப்பூசமானது திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்பது நோக்கத்தக்ததாகும்.                      

    முருகப்பெருமானை முன்னிறுத்தும் தைப்பூசம் தமிழர் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்கும் இடமளிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். வயலில் நெற்பயிர்கள் முற்றி விளைந்திருக்கும் காலமிதுவாகும். முற்றிய நெல்லிருந்து புத்தரசி எடுப்பதும் தைப்பூசத்தில்த் தான் என்பதும் நோக்கத்தக்கது. இதனை “புதிரெடுத்தல்” என்று சிறப்புடன் கொண்டாடி மகிழுவதும் மனமிருத்த வேண்டியதேயாகும். புதிரெடுத்து புத்தரியினைக் கொண்டு பொங்கலிட்டு இறைவனுக்குப் படைத்து மகிழுவதும் தைப்பூச நன்னாளில் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். “புதிரெடுத்தல்” என்னும் சொல்லே மிகவும் ஆழமுடைய வாழ்வியல் தத்துவத்தை அறிவுறுத்தும் சொல்லாகும். அந்தக் கருத்தினை அரங்கேற்றும் நன்னாளாய் தைப்பூசம் இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்.

    தைபிறந்தால் வழிபிறக்கும் என்று சொல்லுவதை நாம் எவருமே மறப்பதேயில்லை. அதற்கான அர்த்தத்தைத் தைப்பூசத் திருநாள் நன்றாகவே நிறைத்தே வைத்திருக்கிறது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவருக்கு வாழ்க்கையிலே கல்வி அறிவு என்பது கட்டாயம் இருந்தே தீரவேண்டும். “கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று ஒரு பாடசாலையில் மகுடவாசகமாய் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் அங்கு “கற்றிடு” என்பதுதான் முக்கியமாய் எனக்குள் உதயமானது. அப்படிக் கற்பதற்கு உரிய பருவத்தில் கற்றலைத் தொடங்க வேண்டும். அதனைத்தான் எங்களின் முன்னோர்கள் வித்தியாரம்பம்” என்று வியந்து நின்றார்கள். அந்த வித்தியாரம் செய்வதற்கு உகந்த நாளாகத் தைப்பூசம் திகழ்கிறது என்பது மிகவும் முக்கியத்துவமாய் வாழ்வில் அமைகிறதல்லவா! ஆலயங்களில் வித்தியாரம்பம் நடைபெறும். வீடுகளில் நடை பெறும். தைப்பூசத்தில் வித்தியாரம்பம் என்பது மிகவும் விசேடமாநது என்னும் கருத்து யாவர் மனத்திலும் பதிந்தே இருக்கிறதல்லவா!

    காது குத்துதல் என்பது அழகுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாகும். அதனால்தான் அக்காலத்தில் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்குக் காது குத்துவதுபோல் குத்தினார்கள். காதுகுத்துதல் என்பது சுற்றஞ்சூழ இருந்து கொண்டாடி மகிழுகின்ற பெருங் கொண்டாட்டமாகவே ஒரு காலத்தில் அமைந்திருந்தது. தாய்மாமன் மடியில் பிள்ளையினை வைத்துக் காதுகுத்துதல் என்பது மரபாகவே இருந்து வந்தது. அப்படிக் காதுகுத்தும் சிறப்பான குடும்ப விழாவினை நடத்து வதற்குயாவரும் காத்திருக்கும் தினம் என்ன தெரியுமா அந்த நல்ல தினந்தான் தைப்பூச நன்னாளாகும். தைப்பூசத்தை மனமெண்ணி காது குத்தக் காத்திருக்கும் சுகமோ அது ஒரு தனியான சுகமாகும். அதனைச் சொன்னால் புரியாது. அனுபவித்தவர்களுக்குத்தான்  அதன் ஆனந்தம் தெரியும். காதுகுத்த லோடு தைப்பூசம் நின்றுவிடுவதில்லை. வியாபாரம் செய்பவர்கள் புதுக்கணக்கினை ஆரம்பிப்பதும் தைப்பூசத்திலேதான். இந்தவகையில் பார்க்கின்ற பொழுது – சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவும், புது முயற் சிகளைத் தொடங்கௌம் உவப்பான தினமாக அமைந்திருப்பது தைப்பூசத் திருநாள்தான் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.

    வாழ்க்கையில் பல நல விஷயங்களுக்கு வழிசமைக்கும் சிறப் பான திருநாளான தைப்பூசத்தினை ஆலயங்களில் பக்தி பூர்வமாகக் கொண்டாடுவார்கள். முருகனுக்கு உகந்த நாளாகவே அமைகின்ற காரணத்தால் முருகப்பெருமானுக்கு உகந்த காவடிகள் பலவற்றை அடியார்கள் அவனது சன்னதியில் எடுத்து ஆடிப் பாடி அவன் புகழ் பாடியே நிற்பார்கள்.  மலேசிய நாட்டில் பத்த மலை என்னும் பதியில் அமைந்திருக்கும் முருகப் பெருமானது ஆலயத்தில் சைவத்தமிழ் அடியார்களுடன் இணைந்து சீனமக்கள் பலரும் பக்தி பூர்வமாகக் காவடி ஆடிவரும் காட்சிபக்திப் பரவசமாகவே அமையும் பாற்காவடி பன்னீர்க் காவடி,  புஷ்பக்காவடி, சந்தனக்காவடிபறவைக்காவடி, என்று அடியார்கள் வகை வகையாய் காவடிகளைத் தாங்கி ஆடலும் பாடலுமாய் இசையுடனும் தாளத்துடன் ஆடிவரும் காட்சியானது தைப்பூச நன்னாளை பூலோக கைலாசமாகவே மாற்றிக் காட்டி நிற்கும்.

    ஆடலும், பாடலும், பக்தியுடன் அமைந்த விழாவாக தைப்பூச திருநாள் அமைகிறது என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. இந்த விழாவுடன் ஜோதிமயமான முருகப் பெருமானும் வந்து இணைகிறார் என்பதையும் கருத்திருத்த வேண்டும். இறைவனை “ஒளிவளர் விளக்கே” என்கிறோம். “மாமணிச் சோதியான்” என்கிறோம். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்கிறோம். “அளம்பரும் ஜோதி” என்கிறோம். “தீபமங்கள ஜோதி நமோ நம” என்று பாடுகிறோம். இவையனைத்துமே இறைவனுக்கு மிகவும் பொருத்தமான இலக்கணங்களேயாகும். அந்தவகையில் முருகன் என்னும் அளப்பருந் தெய்வமும் மிகப்பெரிய ஜோதியே. அந்த ஜோதியினைக் காட்டும் பெருவிழா திருவிழா மாநிலமெங்கணும் பட்டொளி பரப்பும் பெளர்ணமி நன்னாளான தைப்பூசத் திருநாளேயாகும். பக்தியுடன், வாழ்வியலுக்கு பொருத்தமான விஷயங்களையும் இணைத்து நிற்கும் இந்தப் புனிதமான திருநாளுக்கு “தகப்பன் சாமியின் திருநாள்” என்று பெயரிட்டு பெருநிறைவு அடைவோம் வாருங்கள்!

    Share
  • தனித்திருப்பம் அளிக்கும் தைப்பொங்கல்!

    தனித்திருப்பம் அளிக்கும் தைப்பொங்கல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
    தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம்
    பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
    தையெனவே எண்ணித் தான்மகிழ்ந்து நிற்போம்

    தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
    தைப்பொங்கல் வாழ்வில் தனித்திருப்பம் அளிக்கும்
    உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
    உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும்

    பொங்கலெனும் வார்த்தை பூரிப்பைக் காட்டும்
    மங்கலமாய் பொங்கி மகிழ்கவென உணர்த்தும்
    சொந்தமெலாம் சேர்ந்து நிற்கவெனச் சொல்லும்
    சூழ்ந்திருந்து சுவையாய்ச் சுவைக்கும்படி வைக்கும்

    முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்ற வைக்கும்
    மூத்தோரின் கால்தொட்டுப் பணியும்படி வுரைக்கும்
    அத்தையொடு மாமாவின் ஆசியையும் பெற்று
    அனைத்துமே பொங்கென்று அதுவுரைத்து நிற்கும்

    புதுப்பானை எடுத்துப் பொங்கலிடச் செய்யும்
    பொங்கிவரும் பால்பார்க்கச் சுற்றிநிற்கச் சொல்லும்
    பருப்போடு பச்சரிசி பானையிட வைக்கும்
    பக்குவமாய்ச் சர்க்கரையும் சேர்த்துவிடச் செய்யும்

    பொங்கிவரும் பால்பார்த்துப் பூரிப்பு அடைவோம்
    மங்கலங்கள் வாழ்வென்றும் நிறைகவென நினைப்போம்
    சங்கடங்கள் சாம்பலாய் ஆகவென எண்ணி
    சகலருமே இறைவனிடன் தான்வேண்டி நிற்போம்

    அறமுடைய அரசாட்சி அமைந்துவிட வேண்டும்
    ஆன்மீகம் அகமதிலே அமர்ந்துவிட  வேண்டும்
    அறநினைப்பு அகமதிலே எழுந்துவிட வேண்டும்
    அனைத்துக்கும் பொங்கல் வழிசமைக்க வேண்டும்

    மாநிலத்தை வதைத்தெடுக்கும் மாநோயகல வேண்டும்
    மனமார அனைவருமே அதைநினைக்க வேண்டும்
    மனவமைதி மனமகிழ்வு மனநிறைவு பெருக
    மனமுருகி அனைவருமே வேண்டிடுவோம் வாரீர்

    பாலாக இருப்போம் சர்க்கரையாய் இருப்போம்
    பக்குவமாய் யாவருக்கும் சுவைகொடுத்து நிற்போம்
    தேனாக இருப்போம் சேர்கவென அணைப்போம்
    தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர்

    Share
  • நல்லதொரு புத்தாண்டை நாடு காணட்டும்!

    நல்லதொரு புத்தாண்டை நாடு காணட்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    புத்தாண்டு என்றதும் புத்துணர்வு பிறந்துவிடும்
    புறப்பட்டு பலவிடங்கள் போகவே மனமெண்ணும்
    மொத்தமுள்ள உறவுகளைப் பார்த்திடவே ஆசைவரும்
    முழுமையாய் அனுபவிக்க பெருவிருப்பம் எழுந்துவிடும்

    எல்லோரும் எண்ணங்களை எத்தனையோ வைத்துள்ளார்
    அத்தனையும் நிறைவேற்ற அமைந்திடுமா புத்தாண்டு
    புற்றிருந்து புறப்பட்டு வருகின்ற ஈசல்கள்போல்
    புதுப்பெயரில் வைரசும் வந்தபடி இருக்கிறதே

    சீனாவின் சீதனத்தால் சீரழிவு ஓயவில்லை
    சிறகடித்து ஒமிக்கிரோன் வட்டமிட்டுப் பறக்கிறது
    ஆபிரிக்கா தந்தகொடை ஆட்டியிப்போ வைக்கிறது
    அனைவருக்கும் புத்தாண்டில் இதுபரிசாய் ஆயிருக்கு

    ஒமிக்கிரோன் அரசாட்சி இப்போது தொடங்கிருக்கு
    உலகமெலாம் ஓலமிட ஒமிக்கிரோன் வைத்திருக்கு
    உலக சுகாதார மையமோ ஓடியோடித் திரிகையிலே
    உலகிடையே புத்தாண்டு உயிர்த்துடிப்பாய் அமைந்திடுமா

    வைரசோ விதம்விதமாய் வடிவெடுத்து வருகிறது
    வைத்தியமோ புதுமருந்தைக் கொடுத்தபடி இருக்கிறது
    விஞ்ஞானம் தனைவருத்தி ஆராய்ச்சி செய்கிறது
    விடமாட்டேன் எனவுரைத்து வைரசும் எழுகிறது

    வளர்ந்த நாடெல்லாமே விழிபிதுங்கி நிற்கிறது
    வளர்நிலை நாடுகளோ வகையின்றித் திகைக்கிறது
    வைரசோ தன்பாட்டில் பயணத்தைத் தொடர்கிறது
    வரவிருக்கும் புத்தாண்டு வெளிச்சத்தைத் தொட்டிடுமா

    முடக்கநிலை போட்டால் முடங்கிவிடும் செயலனைத்தும்
    முடக்கநிலை அகன்றால் முடங்கிவிடும் மக்கள்நலம்
    அடக்கமுடன் இருக்கவென அரசுரைத்து நிற்கிறது
    அடக்கமதை உடைப்பதற்கும் ஆரவம்பலர் கொண்டுள்ளார்

    விலைவாசி உயர்கிறது வீட்டுக்கஷ்டம் பெருகிறது
    பலதொழில்கள் போகிறது பஞ்சமெட்டிப் பார்க்கிறது
    நிலைதளர்ந்து பலநாடு நெருக்கடியில் தவிக்கிறது
    நிலையுணரா நிலையினிலும் சிலநாடு சிரிக்கிறது

    தொலைதூரம் என்பதே தொலைதூரம் ஆகிறது
    தொலைவிருத்தல் நலமென்றும் மனமெண்ணி நிற்கிறது
    வைரசை மனமெண்ணி மகிழ்வோடி ஒழிகிறது
    வரவிருக்கும் புத்தாண்டு மனப்பயத்தைப் போக்கிடுமா

    பட்டங்கள் கொடுப்பதற்குப் பலரிப்போ வந்துள்ளார்
    பட்டங்கள் பெறுவதற்குப் பலரிப்போ காத்துள்ளார்
    மாநாடு நடத்துதற்கும் மாத்திட்டம் வகுத்துள்ளார்
    மாவெழுச்சி கொள்வதற்கு வைரசும் பார்த்திருக்கு

    திட்டமிட்டுத் திட்டமிட்டு திட்டமிடல் திகைத்திறது
    நட்டமெலாம் குவிந்தபடி நாளுமே போகிறது
    திட்டமிடும் மனமிப்போ புத்தாண்டைப் பார்க்கிறது
    புத்தாண்டு புதுத்திட்டம் கொண்டெமக்கு வந்திடுமா

    நலம்பெருக வேண்டுமென்று நாமிறையை வேண்டிடுவோம்
    நாநிலத்தின் துயரகல நாளுமே வேண்டிடுவோம்
    நவநவமாய் பெரிகிவரும் நோயகல வேண்டிடுவோம்
    நல்லதொரு புத்தாண்டை நாடுகாண வேண்டிடுவோம்

    Share
  • இயற்கைக்கு மாறாகச் செய்த இயற்பகையார்!

    இயற்கைக்கு மாறாகச் செய்த இயற்பகையார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீரின் ஆழமும் தெரியாது. நெருப்பின் சூடும் தெரியாது.புயலும் தெரியாது. பனியும் தெரியாது. மழையும் நனைக்காது. வெய்யிலும் தாக்காது. இனிப்பும் ஒன்றுதான். கசப்பும் ஒன்றுதான். இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். இப்படி எண்ணு பவர்கள் உல கத்தில் இருக்கிறார்களாஇருந்தார்களா என்று எண்ணிடத் தோன்றுகிறதாஆம்.. இப்படியானவர்கள்தான் ஓடும் செம் பொனும் ஓக்க நோக் குபவர்கள்“. இவர்களைப் பெரியவர்கள், அரியவர்கள் என்றும் அழைக்கலாம் அல்லவாஇப்படிப் பெரியவர்க ளையும்அரியவர்களையும் யாவருக்கும் காட்ட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையின் விளைவாக மலர்ந்த துதான் பெரியபுராணம்“. பெரியபுராணம் என்று இப்புராணத்துக்கும் பெயர் அமைந்தமைக்குக் காரணமே பெரியவர்களாக அடியார்களைச் சேக்கிழார் தன்னுடைய மனத்தில் இருத்திக் கொண்டமையே எனலாம்.  இதனை மனதில் வைத்துத்துத்தான் எங்கள் ஒளவைப்பாட்டியும் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே“ என்றாரோ என்று எண்ணிடத் தோன்று கிறதல்லவா?

    ஆண்டவனைப் பற்றிய அருட்செயல்களைக் கருவாக்கியே அநேகமான புராணங்களும் இதிகாசங்களும்கதைகளும்வந்திருக்கின்றன. அந்த ஆண்டவனையே அல்லும் பகலும் நினைந்துருகும் அடியாரள் பற்றிய கதையாக நாம் பார்ப்பதுதான் பெரியபுராணம். இங்கே காட்டப்படும் அடியார்கள் அத்தனைபேருமே சமூகத்தின் பல்வேறு வகையினராகவே அமைந்திருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்கள் சிந்தனையும்செயற்பாடுகளும் வெவ்வேறாகவே அமைந்தும் காணப்படுவதுதான் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய கருத்தெனலாம். படித்தவர்கள் இருக்கிறார் கள்பாமரர்கள் இருக்கிறார்கள். வசதியானவர்கள் இருக்கிறார்கள். உயர்குலத்தவர்கள் இருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட குலத்தவர் என்று சொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அனைவரையும் அடியா ர்கள் என்று முத்திரை குத்திக் காட்டிய உத்தி ஒரு புத்தம்புதிய உத்தி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் வருகின்ற அடியார்களின் செயல்கள் சிலவற்றைப் பார்க்கும் பொழுது – அத்தனையுமே இயற்கைக்கு எதிர் மாறான தாய்சாதாரண வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததாகவே தெரிகிறது. இயற்கைக்கு மாறான வகையில் நடந்த அடியார்களை ஏன் சேக்கிழார் காட்ட முயலுகிறார் என்பது பலருக்கும் மனத்தில் எழுகின்ற ஒரு பெருங் கேள்வியாகவே இருக் கிறது! இதற்கு விடை தேடுவதை விட்டுவிடு  – சேக்கிழாரின் மனத்தின் உண்மை நிலையினை உணருவதுதான் மிகவும் பொருத்தமாய் இருக்கும்.

    சோழ நாட்டின் முக்கிய பொறுப்பான அமைச்சராக விளங்கியவர் சேக்கிழார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர் சேக்கிழார். நுண்மாண் நுழைபுலம் வாய்ந்தவர் சேக்கிழார். இப்படி எல்லாம் வாய்க்கப் பெற்றவர் வாழ்க்கையிலே எவருமே நினைத் துப்பார்க்கவே முடியாத செயல்களை எப்படி காட்ட எண்ணினார் என்பதுதான் எமது சிந்தனைக்கு விடப்பட்ட பெருஞ்சவாலாகவே இருக்கிறதல்லவா!

    அருமையாய்ப் பெற்றெடுத்துச் சீராட்டி வளர்த்த ஆண் பிள்ளையினை, அம்மா பிடிக்க அப்பா அரிவாளால் வெட்டுகின்றார். அதனைக் கறியாகவும் சமைத்துக் கொடு க்கின்றார்கள். ஒருவர் தன்னுடைய கண்களையே பிடுங்குகின்றார். ஒரு கண்ணை மட்டு மல்ல இரண்டு கண்களையுமே பிடுங்குகின்றார். இன்னொருவர் தந்தையின் காலையே வெட்டுகிறார். தான் தாலி கட்டிய தனக்கு வாழ்க்கைத்துணையாகவே வாய்த்திருக்கும் மனைவியின் கையினையே வெட்டுகிறார். நாட்டின் பட்டத்து இராணியின் மூக்கினையே ஒருவர் வாளினால் வெடுகின்றார். இவை எல்லாம் நடக்குமா? என்று எமது மனம் கேள்வி கேட்கத் துடிக்கிறதல்லவா!

    இந்த நிலையில் ஒருவரைச் சேக்கிழார் கொண்டுவந்து காட்டுகிறார். சேக்கிழாரால் காட்டப்படுவபரின் இயற்பெயரினை அறிய முடியவில்லை. அவரின் செய்கையின் காரணத்தால் அவர்  “இயற்பகை” என்று பெயரில் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கிறார். வசதியான  குடும்பத்தில் பிறக்கிறார். வசதியாகவே வாழ்கிறார். நல்ல மனைவி நல்ல குடும்பம். ஆண்டவனை நினைப்பதும் அவனது அடியார்களைப் பேணுவதுமே வாழ்வின் இலட்சியம் என்று மனத்தில் இருத்திக் கொண்டு வாழ்பவர். சிவனின் அடியார்களைச் சிவனெனவே சித்தத்தில் இருத்திக் கொண்டவர். நிறைத்துக் கொண்டவர். அடியார்களுக்காக எதையுமே செய்வதைப் பெருவிருப்பமாகக் கொண்ட வர்.அவரின் இலட்சியம் என்னவோ உயர்ந்ததாக இருந்த பொழுதும், அவர் செய்த செயல் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒன்றாகவே இன்றளவும் யாவராலும் கருதப்படுகிறது. அப்படி யாவராலும் கருத முடியாமலும் விமர்சனத்துக்கு உள்ளாவதுமான செயல்தான் எதுவாக இருக்கலாம் என்று எண்ணிட வைக்கிறதல்லவா!

    சிவனடியார்களை உபசரிப்பது. சிவனடியார்கள் எதனைக் கேட்டாலும் அதனைக் கொடுப்பது. இதுதான் அவரின் ஆத்மார்த்தமான காரியமாக இருந்தது. பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பலரும் சிவனடியார்களை உபசரித்து அவர்களின் ஆசியினைப் பெறுவதை வழக்கமாக்கியே நிற்கிறார்கள் என்பது பொதுவான ஒரு நிலை எனலாம். இப்படியான சிவனடியார்கள் மத்தியில் இயற்பகையாரின் செயல் முற்றிலும் மாறுபட்டதாகவும் , வேறு பட்டதாகவும், எவராலுமே ஏற்றுக் கொள்ள இயலாததுமாகவே அமைவதுதான் இங்கு மிகவும் முக்கியமாகும். சிவனடியார்கள் சாதாரண நிலையிலே இருப்பவர்கள் என்று மட்டும் கருதிவிடல் பொருத்தமன்று. பெரியபுராணத்தில் வருகின்ற சிவனடியார்கள் சாதாரணமான மனித தோற்றத்தில் இருந்தாலும், சில இடங்களில் அந்தச் சாதாரண மனித உருவினை எம்பெருமானான சிவனே தாங்கி, தன்னுடைய அடியவனின் பக்தி வைராக்கியத்தை உலகினருக்கும் காட்டும் பாங்கில் எழுந்தருளியிருந்திருக்கிறான் என்பதையும் பார்த்திட முடிகிறது.

    பெரிய புராணம் பாடப்பட்டதற்கு அடிப்படைக் காரணமே சிவனின் அடியவர்கள் என்பவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து நற்தொண்டினை ஆற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்பதை சமூகத்தில் இருக்கின்றவர்கள் பலரும் உணரவேண்டும் என்பதற்காகவே என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது அல்லவா! அப்படி வாழ்ந்த அடியவர்களில் சிலர் சமூக மே நினைத்துப் பார்க்க முடியாதவாறு செயற்கரிய காரியங் களைஆற்றி அந்தப் பரம்பொருளையே பிரமிக்கச் செய்திருக்கிறா ர்கள் என்னும் புதிய கருத்தைச் சமூகத்துக்குள் விதைக்கும் நோக்கும் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் பிரமிக்க வைக்கும் ஒரு செயலை ஆற்றி இன்று வரையும் விமர்சனத்துக்கு உரிய ஒருவராக விளங்கு கின்றார் “இயற்பகையார்.”

    சோதிப்பதும் பின்னர் பக்தனின் சாதனையை மற்றவர்க்கும் வெளிப்படுத்திக் காட்டுவதையும் ஒரு விளையாட்டாக எம் பெருமான் கொண்டிருக்கிறார். அதனைத் திருவிளையாடல் என்று  கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? அத்தகைய திருவிளை யாடலின் பொழுது எம்பெருமானின் வேடமும், அவர் தனது பக்தனைச் சோதிக்கும் பாங்கும் மிகவும் வினோதமாகவும், சில வேளை வெறுக்கத்தக்கதாகவும் அமைவதைப் புராணங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இப்படியான விடயங்களைப் பார்க்கின்ற பொழுது பரம்பொருளானவர் இப்படிச் செய்யலாமா? என்னும் ஐயமும் எமக்குள் கட்டாயம் எழுந்தே தீரும். பரீட்சை வைப்பவர்க்குத்தான் தெரியும் யாருக்கு எந்தவித பரீட்சை பொருத்தமானது என்பது.அடியவர்களுக்கு எப்படியான சோதனை களைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்தான் பரம் பொருள். “நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல  கொல்லவல்ல” இதனைக் கருத்தில் கொண்டால் அத்தனையும் எங்களுக்கு வெளிச்சமாய் தெரியும்.

    இயற்பகையாரினை அறிமுகம் செய்யும் பொழுதே சேக்கிழார் எப்படிக் காட்டுகிறார் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

      அக்குலப்பதி குடிமுதல் வணிகர்; அளவில் செல்வத்து
               வளமையின் அமைத்தார்
     செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்
               திரத்தின் மிக்கவர் மறைச்சிலம்படியார்,
     மிக்க சீரடுயார்கள் யார் எனினும் வேண்டும்
              யாவையும் இல்லை என்னாதே
     இக் கடற்படி நிகழுமுன் கொடுக்கும்
             இயல்பின் நின்றவர்; உலகியற் பகையர்

    என்று காட்டிய பின்னரும்  , இயற்பகையார்பற்றி இன்னும் காட்டுகிறார் சேக்கிழார் என்பதுதான் முக்கியமாகும்.

    ” நீறுசேர்திரு மேனியர் மனத்து
       நினைத்து யாவையும் வினைப் படமுடித்து
     மாறிலாத தன்னெறியினில் விளங்கும்
       மனையறம் புரி மகிழ்ச்சியின் வந்த
     பேறெலாம் அவர் ஏவின செய்யும்
        பெருமையே எனப் பேணி வாழ்நாளில் “

    இயற்பகையார் எப்படியானவர் அவரின் மனோபாவமும் செயற்பாடுகளும் எப்படியாய் இருக்கும் என்பதையெல்லாம் சேக்கிழார் தெளிவாகக் காட்டியே அவர் செய்யப்போகும் செயற் கரிய செயலினுக்குகான அடித்தளத்தை அமைக்கிறார் என்பது புலனாகிறதல்லவா!

    அடிவர்களை உபசரித்து அதன் பின்னர்தான் அவரும் மனைவியும் உணவருந்துவதை வழக்கமாக்கியே இருந்தனர். அன்றைய தினம் அடியவர்கள் எவருமே வராதிருக்க அவர்கள் மனங்கலங்கி இருந்த வேளை வாசலில் ஒரு சிவடியாரின் குரல் கேட்கிறது. பேரானந்தத் துடன் ஓடிச் சென்று அவர்கள் வரவேற்கிறார்கள். அப்படி வந்தவர் எப்படியான மனநிலையில்  இருந்தார் அவர் என்ன புகன்றார் என்ப தையும் சேக்கிழார் காட்டுகிறார்.

     ” கொன்றை வார் சடையா ரடியார்கள்
        குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
      ஒன்றும் நீர் எதிர்மறாது உவந்தளிக்கும்
         உண்மை கேட்டு நும்பால் ஒன்று வேண்டி  
      இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு
         இசையலாம் எனின் இயம்பலாம் ”    

    சிவனடியாரின் பேச்சினை இங்கு உற்று நோக்குதல் அவசியமாகும். சிவனின் அடியார்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பாய் என்று கேள்விப்பட்டே உன்னிடம் ஒன்றை வேண்டி வந்திருக்கிறேன், விருப்பம் இருந்தால் அதனைத் தரலாம்” என்று ஒரு பொடிவை த்துப் பேசுவதாகச் சேக்கிழார் காட்டுகிறார். சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்று வதையே வாழ்வின் இலட்சியமாய் கருதி வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, சிவனடியாரின் சூட்சுமமான எண்ணமோ அவர் கையாண்ட சொல்லின் தன்மையோ விளங்கவில்லை. அவர் விளங்கும் மனோ நிலையிலையிலுமில்லை. இதற்குக் காரணம் தான் கருதிய காரியம் ஒன்றுதான் அவரின் கருத்தில் நிறைந்து இருந்தமை எனலாம்.

    எதைக் கேட்கப் போகிறார்? எப்படிக் கேட்கப் போகிறார்? கேட்டாலும் நம்மால் கொடுத்துவிட முடியுமா? கொடுக்க முடியா விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சிந்திக்கும் மனநிலை யில் இயற்பகையார் இருக்கவே இல்லை. சிவனடியார் கேட்டுவிட்டார். அவர் விரும்பியதைக் கொடுப்பதே அறமாகும் என்பதே அவர் அகத்துள் அமர்ந்திருந்தது என்பதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

    யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியார் உடைமை; ஐயமில்லை; நீர் அருள் செய்யும்”

    இப்படி உரைக்கிறார் இயற்பகையார்.தன்னிடம் இருக்கும் அத்தனையும் தன்னுடையதல்ல. எம்பிரான் அடியாருக்கே உரியதாகும். ஆதலாம் தாராளமாகக் கேட்கலாம் என்பதுதான் இயற்பகையாரின் விடையாக மலர்கிறது.

    சம்மதம் கிடைத்தவுடன் வந்த சிவனடியார்,

      மன்னு காதல் உன்மனைவியை வேண்டி வந்தென இங்கு “

    என்று அங்கணர் எதிரே சொன்ன போதிலும்……

    எப்படியான கேள்வி! பூகம்பமே வெடிக்கும் அல்லவா! கேட்ட சிவனடியாரை நாமென்றால் என்ன செய்திருப்போம்? அந்த இடத்தி லேயே வெட்டிச் சாய்த்திருக்க மாட்டோமா? ஆனால் அப்படி எதுவுமே இங்கே நடக்கவே இல்லை. இயற்பகையார் மனமகிழ்ந்தார் என்றுதான் சேக்கிழார் செப்புகிறார். தன்னிடம் இருக்கும் பொருளையே சிவனடியார் கேட்டுவிட்டார் என்பதில் பேரானந்தம் உற்றாராம் இயற்பகையார். மனைவியை அவர் வீட்டிலிருக்கும் ஒரு பொருளாகவே கருதிவிட்டார்.தாலிகட்டிய மனைவி என்று எண்ணாமல் மனைவியும் வீட்டிருக்கும், கட்டிலோ, கதிரையோ, பாத்திரமோ என்றுதான் அவர் கருதிவிட்டார். அதனால் சிவனடியார் மனைவியைத் தருவாயா என்று கேட்டவுடன் எந்தவிதப் பதட்டமும் அற்றவராய் தருகிறேன் அழைத்துச் செல்லுங்கள் என்றும் சொல்லும் மனோ நிலை அவருக்கு ஏற்பட்டது.

    இறையடியார்கள் “வீடும் வேண்டா விறலுடைடையவர்”. அவர்களுக்கும் ஓடும் சர்தான். பொன்னும் சரிதான். அவர்கள் மனம் முழுவதுமே இறவன் நினைப்பு மட்டுமே நிறைந்திருக்கும். அவர்களுக்கு உயர்திணை எது? அஃறிணை எது என்னும் பேதமே தெரிய வராது. சிவனைன் அடியார்களைச் சிவனெனவே நினைப்பார்கள். அதனால் வந்திருப்பவர்கள் மனிதராக இருந்தாலும், கபடதாரிகளாக இருந்தாலும், கள்வராக இருந்தாலும், கொளைசெய்யும் நோக்கோடு கொடு வாளுடன் வந்தாலும் – அத்தனை பேருமே சிவனடியாராகவே அவர்கள் எடுத்துக் கொள்ளுவார்கள். இதனை சொல்லி விளங்கிப் படுத்தவே முடியாது. இது சிவனடியார்கள் சிலரின் இயல்பாகும். இதற்குக் காரண காரியமோ விளக்கமோ விமர்சனமோ காண்பதென்பது பொருந்தா நிலை என்றே எண்ண வேண்டி இருக்க்கிரது அப்படி ஒரு நிலையித்தான் இயற்பகையாரின் செய்கையினையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.

    காதல் மனைவியை அடியவருக்கு வழங்குகிறார். உற்றவரும் ஊராரும் இயற்பகையாரை ஏசுகிறார்கள். தூர்த்தனான சிவனடியார் இயற்பகையின் மனைவியை உடன் அழைத்துச் செல்லுவதை எதிர்த்துப் போரிடுகிறார்கள். எதிர்த்தவர்களையெல்லாம் இயற்பகை யாரும் துணிவுடன் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்துகிறார். சிவனடியார் எந்தவித இடையூறுமின்றி ஊரைத் தாண்டிச் செல்ல உதவி நிற்கிறார்.

    இயற்கைக்குப் பகையான காரியத்தை இவர் ஆற்றியிருக்கிறார். சிவனடியார் என்றால் இப்படியும் செய்யத்தான் வேண்டுமோ? என்றெல்லாம் எண்ணியெண்ணி மனந்தடுமாறுவது பொருத்தமற்றது. சிவனடியார்களில் இயற்பகையாரின் செய்கை வேறுபட்டதாக இருக்கிறது என்பதும் அதற்குக் காரணம் அவரின் இயல்புதான் என்றும் எடுத்துக் கொண்டால் எந்தச் சிக்கலும் இருக்காது. அவரின் இந்தச் செயலினால் அடியார்களுள் அவர் ஒப்பாரும் மிகாருமாய் இருக்கிறார் என்று சிந்திந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா!

    அவரின் இந்த ஒப்பற்ற செயலினால்தான் இறைவனே அவரை –

       ” இயற்பகை முனிவா ஓலம் ! ஈண்ட நீவருவாய் ஓலம் !
         அயர்ப்பிலாதானே ஓலம் ! அன்பனே ஓலம் ! ஓலம் !
         செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் ! “

    “செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம்!” என்று சொல்லு வதாகச் சேக்கிழார் காட்டி இறைவனே அவரை எத்தகைய பெருமைக்கு ஆட்படுத்தி இருக்கிறார் என்று சுட்டி நிற்பதால் இயற்பகையார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவே விளங்குகிறார் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

     ” சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
      வல்லைவந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
      எல்லையில் இன்பவெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி
      தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன “

    Share