இயற்கைக்கு மாறாகச் செய்த இயற்பகையார்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

நீரின் ஆழமும் தெரியாது. நெருப்பின் சூடும் தெரியாது.புயலும் தெரியாது. பனியும் தெரியாது. மழையும் நனைக்காது. வெய்யிலும் தாக்காது. இனிப்பும் ஒன்றுதான். கசப்பும் ஒன்றுதான். இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். இப்படி எண்ணு பவர்கள் உல கத்தில் இருக்கிறார்களாஇருந்தார்களா என்று எண்ணிடத் தோன்றுகிறதாஆம்.. இப்படியானவர்கள்தான் ஓடும் செம் பொனும் ஓக்க நோக் குபவர்கள்“. இவர்களைப் பெரியவர்கள், அரியவர்கள் என்றும் அழைக்கலாம் அல்லவாஇப்படிப் பெரியவர்க ளையும்அரியவர்களையும் யாவருக்கும் காட்ட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையின் விளைவாக மலர்ந்த துதான் பெரியபுராணம்“. பெரியபுராணம் என்று இப்புராணத்துக்கும் பெயர் அமைந்தமைக்குக் காரணமே பெரியவர்களாக அடியார்களைச் சேக்கிழார் தன்னுடைய மனத்தில் இருத்திக் கொண்டமையே எனலாம்.  இதனை மனதில் வைத்துத்துத்தான் எங்கள் ஒளவைப்பாட்டியும் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே“ என்றாரோ என்று எண்ணிடத் தோன்று கிறதல்லவா?

ஆண்டவனைப் பற்றிய அருட்செயல்களைக் கருவாக்கியே அநேகமான புராணங்களும் இதிகாசங்களும்கதைகளும்வந்திருக்கின்றன. அந்த ஆண்டவனையே அல்லும் பகலும் நினைந்துருகும் அடியாரள் பற்றிய கதையாக நாம் பார்ப்பதுதான் பெரியபுராணம். இங்கே காட்டப்படும் அடியார்கள் அத்தனைபேருமே சமூகத்தின் பல்வேறு வகையினராகவே அமைந்திருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்கள் சிந்தனையும்செயற்பாடுகளும் வெவ்வேறாகவே அமைந்தும் காணப்படுவதுதான் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய கருத்தெனலாம். படித்தவர்கள் இருக்கிறார் கள்பாமரர்கள் இருக்கிறார்கள். வசதியானவர்கள் இருக்கிறார்கள். உயர்குலத்தவர்கள் இருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட குலத்தவர் என்று சொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அனைவரையும் அடியா ர்கள் என்று முத்திரை குத்திக் காட்டிய உத்தி ஒரு புத்தம்புதிய உத்தி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் வருகின்ற அடியார்களின் செயல்கள் சிலவற்றைப் பார்க்கும் பொழுது – அத்தனையுமே இயற்கைக்கு எதிர் மாறான தாய்சாதாரண வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததாகவே தெரிகிறது. இயற்கைக்கு மாறான வகையில் நடந்த அடியார்களை ஏன் சேக்கிழார் காட்ட முயலுகிறார் என்பது பலருக்கும் மனத்தில் எழுகின்ற ஒரு பெருங் கேள்வியாகவே இருக் கிறது! இதற்கு விடை தேடுவதை விட்டுவிடு  – சேக்கிழாரின் மனத்தின் உண்மை நிலையினை உணருவதுதான் மிகவும் பொருத்தமாய் இருக்கும்.

சோழ நாட்டின் முக்கிய பொறுப்பான அமைச்சராக விளங்கியவர் சேக்கிழார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர் சேக்கிழார். நுண்மாண் நுழைபுலம் வாய்ந்தவர் சேக்கிழார். இப்படி எல்லாம் வாய்க்கப் பெற்றவர் வாழ்க்கையிலே எவருமே நினைத் துப்பார்க்கவே முடியாத செயல்களை எப்படி காட்ட எண்ணினார் என்பதுதான் எமது சிந்தனைக்கு விடப்பட்ட பெருஞ்சவாலாகவே இருக்கிறதல்லவா!

அருமையாய்ப் பெற்றெடுத்துச் சீராட்டி வளர்த்த ஆண் பிள்ளையினை, அம்மா பிடிக்க அப்பா அரிவாளால் வெட்டுகின்றார். அதனைக் கறியாகவும் சமைத்துக் கொடு க்கின்றார்கள். ஒருவர் தன்னுடைய கண்களையே பிடுங்குகின்றார். ஒரு கண்ணை மட்டு மல்ல இரண்டு கண்களையுமே பிடுங்குகின்றார். இன்னொருவர் தந்தையின் காலையே வெட்டுகிறார். தான் தாலி கட்டிய தனக்கு வாழ்க்கைத்துணையாகவே வாய்த்திருக்கும் மனைவியின் கையினையே வெட்டுகிறார். நாட்டின் பட்டத்து இராணியின் மூக்கினையே ஒருவர் வாளினால் வெடுகின்றார். இவை எல்லாம் நடக்குமா? என்று எமது மனம் கேள்வி கேட்கத் துடிக்கிறதல்லவா!

இந்த நிலையில் ஒருவரைச் சேக்கிழார் கொண்டுவந்து காட்டுகிறார். சேக்கிழாரால் காட்டப்படுவபரின் இயற்பெயரினை அறிய முடியவில்லை. அவரின் செய்கையின் காரணத்தால் அவர்  “இயற்பகை” என்று பெயரில் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கிறார். வசதியான  குடும்பத்தில் பிறக்கிறார். வசதியாகவே வாழ்கிறார். நல்ல மனைவி நல்ல குடும்பம். ஆண்டவனை நினைப்பதும் அவனது அடியார்களைப் பேணுவதுமே வாழ்வின் இலட்சியம் என்று மனத்தில் இருத்திக் கொண்டு வாழ்பவர். சிவனின் அடியார்களைச் சிவனெனவே சித்தத்தில் இருத்திக் கொண்டவர். நிறைத்துக் கொண்டவர். அடியார்களுக்காக எதையுமே செய்வதைப் பெருவிருப்பமாகக் கொண்ட வர்.அவரின் இலட்சியம் என்னவோ உயர்ந்ததாக இருந்த பொழுதும், அவர் செய்த செயல் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒன்றாகவே இன்றளவும் யாவராலும் கருதப்படுகிறது. அப்படி யாவராலும் கருத முடியாமலும் விமர்சனத்துக்கு உள்ளாவதுமான செயல்தான் எதுவாக இருக்கலாம் என்று எண்ணிட வைக்கிறதல்லவா!

சிவனடியார்களை உபசரிப்பது. சிவனடியார்கள் எதனைக் கேட்டாலும் அதனைக் கொடுப்பது. இதுதான் அவரின் ஆத்மார்த்தமான காரியமாக இருந்தது. பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பலரும் சிவனடியார்களை உபசரித்து அவர்களின் ஆசியினைப் பெறுவதை வழக்கமாக்கியே நிற்கிறார்கள் என்பது பொதுவான ஒரு நிலை எனலாம். இப்படியான சிவனடியார்கள் மத்தியில் இயற்பகையாரின் செயல் முற்றிலும் மாறுபட்டதாகவும் , வேறு பட்டதாகவும், எவராலுமே ஏற்றுக் கொள்ள இயலாததுமாகவே அமைவதுதான் இங்கு மிகவும் முக்கியமாகும். சிவனடியார்கள் சாதாரண நிலையிலே இருப்பவர்கள் என்று மட்டும் கருதிவிடல் பொருத்தமன்று. பெரியபுராணத்தில் வருகின்ற சிவனடியார்கள் சாதாரணமான மனித தோற்றத்தில் இருந்தாலும், சில இடங்களில் அந்தச் சாதாரண மனித உருவினை எம்பெருமானான சிவனே தாங்கி, தன்னுடைய அடியவனின் பக்தி வைராக்கியத்தை உலகினருக்கும் காட்டும் பாங்கில் எழுந்தருளியிருந்திருக்கிறான் என்பதையும் பார்த்திட முடிகிறது.

பெரிய புராணம் பாடப்பட்டதற்கு அடிப்படைக் காரணமே சிவனின் அடியவர்கள் என்பவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து நற்தொண்டினை ஆற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்பதை சமூகத்தில் இருக்கின்றவர்கள் பலரும் உணரவேண்டும் என்பதற்காகவே என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது அல்லவா! அப்படி வாழ்ந்த அடியவர்களில் சிலர் சமூக மே நினைத்துப் பார்க்க முடியாதவாறு செயற்கரிய காரியங் களைஆற்றி அந்தப் பரம்பொருளையே பிரமிக்கச் செய்திருக்கிறா ர்கள் என்னும் புதிய கருத்தைச் சமூகத்துக்குள் விதைக்கும் நோக்கும் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் பிரமிக்க வைக்கும் ஒரு செயலை ஆற்றி இன்று வரையும் விமர்சனத்துக்கு உரிய ஒருவராக விளங்கு கின்றார் “இயற்பகையார்.”

சோதிப்பதும் பின்னர் பக்தனின் சாதனையை மற்றவர்க்கும் வெளிப்படுத்திக் காட்டுவதையும் ஒரு விளையாட்டாக எம் பெருமான் கொண்டிருக்கிறார். அதனைத் திருவிளையாடல் என்று  கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? அத்தகைய திருவிளை யாடலின் பொழுது எம்பெருமானின் வேடமும், அவர் தனது பக்தனைச் சோதிக்கும் பாங்கும் மிகவும் வினோதமாகவும், சில வேளை வெறுக்கத்தக்கதாகவும் அமைவதைப் புராணங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இப்படியான விடயங்களைப் பார்க்கின்ற பொழுது பரம்பொருளானவர் இப்படிச் செய்யலாமா? என்னும் ஐயமும் எமக்குள் கட்டாயம் எழுந்தே தீரும். பரீட்சை வைப்பவர்க்குத்தான் தெரியும் யாருக்கு எந்தவித பரீட்சை பொருத்தமானது என்பது.அடியவர்களுக்கு எப்படியான சோதனை களைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்தான் பரம் பொருள். “நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல  கொல்லவல்ல” இதனைக் கருத்தில் கொண்டால் அத்தனையும் எங்களுக்கு வெளிச்சமாய் தெரியும்.

இயற்பகையாரினை அறிமுகம் செய்யும் பொழுதே சேக்கிழார் எப்படிக் காட்டுகிறார் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

  அக்குலப்பதி குடிமுதல் வணிகர்; அளவில் செல்வத்து
           வளமையின் அமைத்தார்
 செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்
           திரத்தின் மிக்கவர் மறைச்சிலம்படியார்,
 மிக்க சீரடுயார்கள் யார் எனினும் வேண்டும்
          யாவையும் இல்லை என்னாதே
 இக் கடற்படி நிகழுமுன் கொடுக்கும்
         இயல்பின் நின்றவர்; உலகியற் பகையர்

என்று காட்டிய பின்னரும்  , இயற்பகையார்பற்றி இன்னும் காட்டுகிறார் சேக்கிழார் என்பதுதான் முக்கியமாகும்.

” நீறுசேர்திரு மேனியர் மனத்து
   நினைத்து யாவையும் வினைப் படமுடித்து
 மாறிலாத தன்னெறியினில் விளங்கும்
   மனையறம் புரி மகிழ்ச்சியின் வந்த
 பேறெலாம் அவர் ஏவின செய்யும்
    பெருமையே எனப் பேணி வாழ்நாளில் “

இயற்பகையார் எப்படியானவர் அவரின் மனோபாவமும் செயற்பாடுகளும் எப்படியாய் இருக்கும் என்பதையெல்லாம் சேக்கிழார் தெளிவாகக் காட்டியே அவர் செய்யப்போகும் செயற் கரிய செயலினுக்குகான அடித்தளத்தை அமைக்கிறார் என்பது புலனாகிறதல்லவா!

அடிவர்களை உபசரித்து அதன் பின்னர்தான் அவரும் மனைவியும் உணவருந்துவதை வழக்கமாக்கியே இருந்தனர். அன்றைய தினம் அடியவர்கள் எவருமே வராதிருக்க அவர்கள் மனங்கலங்கி இருந்த வேளை வாசலில் ஒரு சிவடியாரின் குரல் கேட்கிறது. பேரானந்தத் துடன் ஓடிச் சென்று அவர்கள் வரவேற்கிறார்கள். அப்படி வந்தவர் எப்படியான மனநிலையில்  இருந்தார் அவர் என்ன புகன்றார் என்ப தையும் சேக்கிழார் காட்டுகிறார்.

 ” கொன்றை வார் சடையா ரடியார்கள்
    குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
  ஒன்றும் நீர் எதிர்மறாது உவந்தளிக்கும்
     உண்மை கேட்டு நும்பால் ஒன்று வேண்டி  
  இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு
     இசையலாம் எனின் இயம்பலாம் ”    

சிவனடியாரின் பேச்சினை இங்கு உற்று நோக்குதல் அவசியமாகும். சிவனின் அடியார்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பாய் என்று கேள்விப்பட்டே உன்னிடம் ஒன்றை வேண்டி வந்திருக்கிறேன், விருப்பம் இருந்தால் அதனைத் தரலாம்” என்று ஒரு பொடிவை த்துப் பேசுவதாகச் சேக்கிழார் காட்டுகிறார். சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்று வதையே வாழ்வின் இலட்சியமாய் கருதி வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, சிவனடியாரின் சூட்சுமமான எண்ணமோ அவர் கையாண்ட சொல்லின் தன்மையோ விளங்கவில்லை. அவர் விளங்கும் மனோ நிலையிலையிலுமில்லை. இதற்குக் காரணம் தான் கருதிய காரியம் ஒன்றுதான் அவரின் கருத்தில் நிறைந்து இருந்தமை எனலாம்.

எதைக் கேட்கப் போகிறார்? எப்படிக் கேட்கப் போகிறார்? கேட்டாலும் நம்மால் கொடுத்துவிட முடியுமா? கொடுக்க முடியா விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சிந்திக்கும் மனநிலை யில் இயற்பகையார் இருக்கவே இல்லை. சிவனடியார் கேட்டுவிட்டார். அவர் விரும்பியதைக் கொடுப்பதே அறமாகும் என்பதே அவர் அகத்துள் அமர்ந்திருந்தது என்பதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியார் உடைமை; ஐயமில்லை; நீர் அருள் செய்யும்”

இப்படி உரைக்கிறார் இயற்பகையார்.தன்னிடம் இருக்கும் அத்தனையும் தன்னுடையதல்ல. எம்பிரான் அடியாருக்கே உரியதாகும். ஆதலாம் தாராளமாகக் கேட்கலாம் என்பதுதான் இயற்பகையாரின் விடையாக மலர்கிறது.

சம்மதம் கிடைத்தவுடன் வந்த சிவனடியார்,

  மன்னு காதல் உன்மனைவியை வேண்டி வந்தென இங்கு “

என்று அங்கணர் எதிரே சொன்ன போதிலும்……

எப்படியான கேள்வி! பூகம்பமே வெடிக்கும் அல்லவா! கேட்ட சிவனடியாரை நாமென்றால் என்ன செய்திருப்போம்? அந்த இடத்தி லேயே வெட்டிச் சாய்த்திருக்க மாட்டோமா? ஆனால் அப்படி எதுவுமே இங்கே நடக்கவே இல்லை. இயற்பகையார் மனமகிழ்ந்தார் என்றுதான் சேக்கிழார் செப்புகிறார். தன்னிடம் இருக்கும் பொருளையே சிவனடியார் கேட்டுவிட்டார் என்பதில் பேரானந்தம் உற்றாராம் இயற்பகையார். மனைவியை அவர் வீட்டிலிருக்கும் ஒரு பொருளாகவே கருதிவிட்டார்.தாலிகட்டிய மனைவி என்று எண்ணாமல் மனைவியும் வீட்டிருக்கும், கட்டிலோ, கதிரையோ, பாத்திரமோ என்றுதான் அவர் கருதிவிட்டார். அதனால் சிவனடியார் மனைவியைத் தருவாயா என்று கேட்டவுடன் எந்தவிதப் பதட்டமும் அற்றவராய் தருகிறேன் அழைத்துச் செல்லுங்கள் என்றும் சொல்லும் மனோ நிலை அவருக்கு ஏற்பட்டது.

இறையடியார்கள் “வீடும் வேண்டா விறலுடைடையவர்”. அவர்களுக்கும் ஓடும் சர்தான். பொன்னும் சரிதான். அவர்கள் மனம் முழுவதுமே இறவன் நினைப்பு மட்டுமே நிறைந்திருக்கும். அவர்களுக்கு உயர்திணை எது? அஃறிணை எது என்னும் பேதமே தெரிய வராது. சிவனைன் அடியார்களைச் சிவனெனவே நினைப்பார்கள். அதனால் வந்திருப்பவர்கள் மனிதராக இருந்தாலும், கபடதாரிகளாக இருந்தாலும், கள்வராக இருந்தாலும், கொளைசெய்யும் நோக்கோடு கொடு வாளுடன் வந்தாலும் – அத்தனை பேருமே சிவனடியாராகவே அவர்கள் எடுத்துக் கொள்ளுவார்கள். இதனை சொல்லி விளங்கிப் படுத்தவே முடியாது. இது சிவனடியார்கள் சிலரின் இயல்பாகும். இதற்குக் காரண காரியமோ விளக்கமோ விமர்சனமோ காண்பதென்பது பொருந்தா நிலை என்றே எண்ண வேண்டி இருக்க்கிரது அப்படி ஒரு நிலையித்தான் இயற்பகையாரின் செய்கையினையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.

காதல் மனைவியை அடியவருக்கு வழங்குகிறார். உற்றவரும் ஊராரும் இயற்பகையாரை ஏசுகிறார்கள். தூர்த்தனான சிவனடியார் இயற்பகையின் மனைவியை உடன் அழைத்துச் செல்லுவதை எதிர்த்துப் போரிடுகிறார்கள். எதிர்த்தவர்களையெல்லாம் இயற்பகை யாரும் துணிவுடன் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்துகிறார். சிவனடியார் எந்தவித இடையூறுமின்றி ஊரைத் தாண்டிச் செல்ல உதவி நிற்கிறார்.

இயற்கைக்குப் பகையான காரியத்தை இவர் ஆற்றியிருக்கிறார். சிவனடியார் என்றால் இப்படியும் செய்யத்தான் வேண்டுமோ? என்றெல்லாம் எண்ணியெண்ணி மனந்தடுமாறுவது பொருத்தமற்றது. சிவனடியார்களில் இயற்பகையாரின் செய்கை வேறுபட்டதாக இருக்கிறது என்பதும் அதற்குக் காரணம் அவரின் இயல்புதான் என்றும் எடுத்துக் கொண்டால் எந்தச் சிக்கலும் இருக்காது. அவரின் இந்தச் செயலினால் அடியார்களுள் அவர் ஒப்பாரும் மிகாருமாய் இருக்கிறார் என்று சிந்திந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா!

அவரின் இந்த ஒப்பற்ற செயலினால்தான் இறைவனே அவரை –

   ” இயற்பகை முனிவா ஓலம் ! ஈண்ட நீவருவாய் ஓலம் !
     அயர்ப்பிலாதானே ஓலம் ! அன்பனே ஓலம் ! ஓலம் !
     செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் ! “

“செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம்!” என்று சொல்லு வதாகச் சேக்கிழார் காட்டி இறைவனே அவரை எத்தகைய பெருமைக்கு ஆட்படுத்தி இருக்கிறார் என்று சுட்டி நிற்பதால் இயற்பகையார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவே விளங்குகிறார் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

 ” சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
  வல்லைவந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
  எல்லையில் இன்பவெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி
  தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன “

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *