அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னையர் திருநாளில்!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

ஐயிரண்டு திங்கள் சுமப்பவள் அன்னை
மெய்வருந்தி எம்மை வளப்பவள் அன்னை
கண்ணிமையாய் எம்மைக் காப்பவள் அன்னை
கருணையின் வடிவாய் ஆனவளும் அன்னை

பொய்மையிலா அன்பைப் பொழிபவள் அன்னை
வாய்மையினை மனத்தில் நிறைப்பவள் அன்னை
தாய்மையெனும் பெருமை பெறுபவளும் அன்னை
தரணியிலே தெய்வ வடிவானவளும் அன்னை

உயிர்போகும் துன்பம் அனுபவிப்பாள் அன்னை
உள்ளிருக்கும் கருவை உயிர்ப்புடனே காண
மடிமீது தவழும் மலர்முகத்தைக் கண்டு
வாழ்வளிக்க வந்த வரமெனவே மகிழ்வாள்

அன்றலர்ந்த மலராய் அழகுமுகம் பார்த்து
அவள்பட்ட துன்பம் அகன்றதென நினைப்பாள்
அவள்வாழ்வில் அமுதம் அமைந்ததென எண்னி
ஆனந்த சாகரத்தில் அவள்மூழ்கி நிற்பாள்

இவ்வுலகில் சொர்க்கம் இறங்கியதாய் நினைப்பாள்
இன்பமெலாம் பெருகி வந்ததென மகிழ்வாள்
தன்வாழ்வில் வரமே வாய்த்ததென எண்ணி
தன்குழந்தை முகத்தைப் பார்த்தபடி இருப்பாள்

மடியிருக்கும் குழந்தை வளரவெண்ணி நினைப்பாள்
மற்றவர்கள் மதிக்க வரவெண்ணி உழைப்பாள்
கற்றவர்கள் சபையில் காணவெண்ணி நினைப்பாள்
கற்றுயர்ந்து வரவே கருச்சுமந்தேன் என்பாள்

பெருமையுடன் பிள்ளை வருவதனைக் கண்டு
பெற்றவுடன் பெற்ற மகிழ்வதனை மறப்பாள்
கற்றறிந்து பிள்ளை கையணைக்கும் வேளை
பெற்றதிலும் பெரிதாய் பேரின்பம் அடைவாள்

உதிரத்தைப் பாலாக்கி உவந்தளிப்பாள் அன்னை
உயிர்கொடுத்தும் எமைக்காக்க உவந்திடுவாள் அன்னை
அன்னையள் உலகமதில் அன்பின் உருவாவாள்
அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னையர் திருநாளில்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *