நல்லதொரு புத்தாண்டை நாடு காணட்டும்!

0
நல்லதொரு புத்தாண்டை நாடு காணட்டும்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

புத்தாண்டு என்றதும் புத்துணர்வு பிறந்துவிடும்
புறப்பட்டு பலவிடங்கள் போகவே மனமெண்ணும்
மொத்தமுள்ள உறவுகளைப் பார்த்திடவே ஆசைவரும்
முழுமையாய் அனுபவிக்க பெருவிருப்பம் எழுந்துவிடும்

எல்லோரும் எண்ணங்களை எத்தனையோ வைத்துள்ளார்
அத்தனையும் நிறைவேற்ற அமைந்திடுமா புத்தாண்டு
புற்றிருந்து புறப்பட்டு வருகின்ற ஈசல்கள்போல்
புதுப்பெயரில் வைரசும் வந்தபடி இருக்கிறதே

சீனாவின் சீதனத்தால் சீரழிவு ஓயவில்லை
சிறகடித்து ஒமிக்கிரோன் வட்டமிட்டுப் பறக்கிறது
ஆபிரிக்கா தந்தகொடை ஆட்டியிப்போ வைக்கிறது
அனைவருக்கும் புத்தாண்டில் இதுபரிசாய் ஆயிருக்கு

ஒமிக்கிரோன் அரசாட்சி இப்போது தொடங்கிருக்கு
உலகமெலாம் ஓலமிட ஒமிக்கிரோன் வைத்திருக்கு
உலக சுகாதார மையமோ ஓடியோடித் திரிகையிலே
உலகிடையே புத்தாண்டு உயிர்த்துடிப்பாய் அமைந்திடுமா

வைரசோ விதம்விதமாய் வடிவெடுத்து வருகிறது
வைத்தியமோ புதுமருந்தைக் கொடுத்தபடி இருக்கிறது
விஞ்ஞானம் தனைவருத்தி ஆராய்ச்சி செய்கிறது
விடமாட்டேன் எனவுரைத்து வைரசும் எழுகிறது

வளர்ந்த நாடெல்லாமே விழிபிதுங்கி நிற்கிறது
வளர்நிலை நாடுகளோ வகையின்றித் திகைக்கிறது
வைரசோ தன்பாட்டில் பயணத்தைத் தொடர்கிறது
வரவிருக்கும் புத்தாண்டு வெளிச்சத்தைத் தொட்டிடுமா

முடக்கநிலை போட்டால் முடங்கிவிடும் செயலனைத்தும்
முடக்கநிலை அகன்றால் முடங்கிவிடும் மக்கள்நலம்
அடக்கமுடன் இருக்கவென அரசுரைத்து நிற்கிறது
அடக்கமதை உடைப்பதற்கும் ஆரவம்பலர் கொண்டுள்ளார்

விலைவாசி உயர்கிறது வீட்டுக்கஷ்டம் பெருகிறது
பலதொழில்கள் போகிறது பஞ்சமெட்டிப் பார்க்கிறது
நிலைதளர்ந்து பலநாடு நெருக்கடியில் தவிக்கிறது
நிலையுணரா நிலையினிலும் சிலநாடு சிரிக்கிறது

தொலைதூரம் என்பதே தொலைதூரம் ஆகிறது
தொலைவிருத்தல் நலமென்றும் மனமெண்ணி நிற்கிறது
வைரசை மனமெண்ணி மகிழ்வோடி ஒழிகிறது
வரவிருக்கும் புத்தாண்டு மனப்பயத்தைப் போக்கிடுமா

பட்டங்கள் கொடுப்பதற்குப் பலரிப்போ வந்துள்ளார்
பட்டங்கள் பெறுவதற்குப் பலரிப்போ காத்துள்ளார்
மாநாடு நடத்துதற்கும் மாத்திட்டம் வகுத்துள்ளார்
மாவெழுச்சி கொள்வதற்கு வைரசும் பார்த்திருக்கு

திட்டமிட்டுத் திட்டமிட்டு திட்டமிடல் திகைத்திறது
நட்டமெலாம் குவிந்தபடி நாளுமே போகிறது
திட்டமிடும் மனமிப்போ புத்தாண்டைப் பார்க்கிறது
புத்தாண்டு புதுத்திட்டம் கொண்டெமக்கு வந்திடுமா

நலம்பெருக வேண்டுமென்று நாமிறையை வேண்டிடுவோம்
நாநிலத்தின் துயரகல நாளுமே வேண்டிடுவோம்
நவநவமாய் பெரிகிவரும் நோயகல வேண்டிடுவோம்
நல்லதொரு புத்தாண்டை நாடுகாண வேண்டிடுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.