ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

பக்திப் பெருவெளியில் அடியார்கள் பலர் வருகிறார்கள். அடியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உண்மைப் பொருளாம். அந்தப் பரம்பொருளை நாடியும்தேடியுமே நிற்கிறார்கள். தேடும் விதமும்நாடும் விதமும் வேறுபாட்டினைக் காட்டி நின்றாலும் அவர்களின் சிந்தையெலாம் இறைவன் மட்டுமே என்பதுதான் மனங்கொள்ளல் வேண்டும். வருகின்ற அடியார்களில் கற்றவரும் இருப்பர். கல்லாதவரும் இருப்பர். அந்தஸ்த்தில் உயர்ந்தவரும் இருப்பர். அதில் குறைந்தவர்களும் இருப்பர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் இணைப்பது ஆண்டவனது அடியார்கள் என்னும் பிணைப்பேயாகும். ஆண்களும் இருப்பார்கள். பெண்களும் இருப்பார்கள். ஆண்டியும் இருப்பர். அரசரும் இருப்பர். அனைவரும் பக்தி என்னும் பாதையில் பயணிக்கும் பக்குவமான பரமனின் பயணிகளேயாவர். அந்தப் பயணிகள் வரிசையில் ஒருவர் சற்று வித்தியாசமானவராக அமைகின்றார். அவர் யாரென்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா? வாருங்கள் அவரைக் காணுவோம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே”என்று ஆண்டவனையே அடியார்கள் விளித்துப் பாடுவார்கள். ஆண்டவனை அடியார்கள் யாவருமே “அப்பன் நீ அம்மை நீ” என்றுதான் அல்லும்பகலுமே ஆராக்காதலுடன் ஏற்றிப் போற்றியும் நிற்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. அம்மையே அப்பா என்று அடியவர்களால் ஏற்றிப் போற்றி நிற்கும் எம்பிரானே அடியவர் ஒருவரை எம்மைப் பேணும் அம்மை இவள்” என்று;  “அம்மையே” என அருள் சுரந்து அழைத்தாராம். ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்படும் அளவுக்கு உரித்தாய் நின்றவர்தான் “தமிழீன்ற தவப்புதல்வி காரைக்கால் அம்மையார்” அவர்கள்.

பக்தி உலகிலே நால்வருக்கும் மூத்தவர். நால்வரும் பக்திப் பெருவெளியில் உத்வேகமாய் காலூன்றிப் பயணப்பட முன்னோடியானவர். அவர்களால் பாடப்பட்ட பக்திப் பனுவல்களுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். அவர்கள் எப்படியெல்லாம் தமிழில் இறைவனது திருவருளினைப் பாடலாம் என்பதற்கெல்லாம் பாவடிவுகளைபா இனங்களை யெல்லாம் காட்டி நின்ற பேராளுமை என்று அவரைப் பல நிலைகளில் நோக்கக் கூடியதாகவே இருக்கிறது.

சைவபக்தி வரலாற்றில் அம்மையாரின் வருகை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். இவர் இறைவனை உருவகிக்கும் பாங்குஇறைவனை விழிக்கும் பாங்கு யாவுமே இவருக்கே தனித்துவமான ஒன்றாகவே விளங்குகிறது என்பதுதான் உண்மையாகும். அன்பினுருவமாய் ஆண்டவனை இவர் காணுகின்றார். இந்த உலகத்தைத் தோற்றுவித்த முதல்வனாய் விளங்குகிறான் என்று போற்றிப்பாடுகின்றார். அத்வைதத்தை ஆதிசங்கரரே பரப்பினார் என்று அறிகின்றோம். ஆனால் காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச்செல்விதான் அத்வைதத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அவரின் பாடல்களின் கருப்பொருட்களால் அறியக்கூடியதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். ஈசனே சகலமும் என்னும் கருத்தினை அம்மையார் சுட்டுவதன் மூலம் அரன்அரிஅயன் என்னும் அத்தனை நிலையும் ஒன்றாய் அடங்குவதையே வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன்

என்று அற்புதத் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். அறிபவன்அறிவிப்பவன்அறிவாய் இருந்து அறிகின்றவனும்  அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. ஐம்பூதங்களாக விளங்குபவனும் அவனே, என்று அம்மையார் குறிப்பிட்டுக் காட்டும் நிலையினை அத்வைதம் என்று தானே பொருள்கொள்ளல் வேண்டும்.

காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச் செல்வியின் பக்திப் பெருஞ் சொத்தாய் சைவத்துக்கு வாய்த்திருப்பவை தான்மூத்த திருப்ப திகங்கள்திருவிரட்டை மணிமாலைஅற்புதத் திருவந்தாதிஎன்பனவாகும். எம்பெருமான் சிவனது நடனம் பற்றியதாகவே இவரின் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும். அம்மையார் அவர்களுக்கு முன்பிருந்த தமிழர்கள் சிவனைப் பற்றியோ, அவரது உருவத்தைப் பற்றியோ, அவரொரு வடிவுகடந்த பொருள் என்பதனையோ, அதுமட்டுமல்ல அவர் ஒரு முழுமுதற் பொருள் என்பதனையோ நன்கு உணர்ந்தவாரக இருந்தாலும்; அந்தப் பரம்பொருளுக்கு உரித்தான வடிவம்தான் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உன்னை நான் எப்படித்தான் காட்டுவேனோ என மனமெண்ணி அம்மையார் நிற்பதையும் இங்கு அவரின் பாடல் வாயிலாகவே காணமுடிகிறது.

அன்றும் திருவுருவம் காணாது ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் கண்டிலேன் – என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்க்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம் ஏது

அம்மையார் இறைவனைப் பார்த்தவிதம் வேறு. ஆனால் மற்றவர்களுக்கும் காட்ட அவர் எம்பெருமானிடமே வழியினைக் கேட்டு நிற்கும் பாங்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறதல்லவா! என்றாலும் அவர் அந்தப்பரம் பொருளை – வேதியனாக,  வேதப்பொருளாக என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறார். உணருவார் உணருங்கள் என்பதும் தொக்கு நிற்பதாய்க் கொள்ளலாம் அல்லவா!

வேதியனை வேதப் பொருளான வேதத்துக்கு
ஆதியனை ஆதிரையாநன் னாளானைச் – சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன அமா என்றான் கீழ்

பக்தியைப் பாடவந்த அம்மையார் தேமதுரத் தமிழினையும் தன்னுடைய அகத்தில் ஆழமாய் வைத்திருந்தார் என்பதும் மிகவும் முக்கியமாகும். அறத்தைப் பாடும் வடிவமான வெண்பாவைக் கையாளுகின்றார். அந்தப் பாவகை உணர்ச்சியைப் புலப்படுத்த உகந்தன்று எனவெண்ணி விருத்தப்பாவைக் கையிலெடுக்கிறார். தமிழின் பாவகைகள் எவற்றுக்கெல்லாம் உகந்தன எனச் சிந்தித்த அம்மையாரின் வழி தமிழ் வழியாக அமைகிறதல்லவா?தமிழால் பக்தியினைக் காட்ட முயலும் அம்மையார் பின்வந்த அடியார்க்கெல்லாம் தலை மகளாய்தமிழ்மகளாய்விளங்குகிறார் அல்லவா! அம்மாயாரின் பதிகங்களை “மூத்த நல் திருப்பதிகங்கள்” என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமைப்படுத்துகின்றார். அம்மையாரின் பின்வந்த சம்பந்தப் பெருமான் பாடிய பக்திப்பனுவல்கள் பதிகங்கள் என்று தான் பெயர் பெறுகின்றன. இதனால் அம்மையின் பாடலையும் பதிகம் என்னாது  “மூத்த நல்” என்னும் அடைமொழி கொடுத்தமை அம்மையின் மீது சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பினையே காட்டுகிறது எனலாம். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவராக சேக்கிழார் இருந்தாலும் அவரும் தேமதுரத் தமிழைத் தமது இதயத்தில் இருத்தி வைத்திருந்தார் என்பதும் நோக்கத்தக்கது. முழுக்க முழுக்க தமிழ்மரபு சார்ந்த சூழலையும்கதையினையினையுமே அவர் பெரியபுராணத்துக்காக எடுத்திருக்கிறார். அப்படியானவர் அம்மையாருக்காகவே காரைக்கால் அம்மையார் புராணம் அமைத்தாரோ தெரியவில்லை. தமிழை விரும்பியவர் தமிழை விரும்பிய அம்மையைஇறைவனே அவரைத் தன் தாய் என்று கூறுமாறு அமைத்தமை மனங்கொள்ளத்தக்கது. தாய் வயிற்றில் தான் எதுவுமே பிறக்க வேண்டும். அந்தத் தாயாக காரைக்கால் அம்மையாரைச் சேக்கிழார் பார்க்கிறார். முழுமையான சைவமும்சிவனின் வழிபாடு என்பதும் காரைக் கால் தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறது என்னும் கருத்தை யாவரும் மனமிருத்தல் அவசியமானதேயாகும். பிற்காலத்தில் தமிழில் சுவையான இலக்கியங்கள் அமை வதற்கு உரிய பாவினமாக விருத்தமே பொருத்தமாய் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அந்தப் பாவினத்தைத் தேர்ந்தெடுத்துக் கைகாண்டு காட்டிய தமித் தாயாகவே அம்மையார் விளங்குகிறார் என்பதும் தமிழுக்குப் பெருமையல்லவா! அம்மையாரையும் அடியார்களையும் பாட வந்த சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தை விருத்தப்பாவினால் பாடுவதற்கு வழிசமைத்தவரும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்லி அம்மையாரே என்பதும் மனங்கொள்ளல் வேண்டும்.

பின்வந்த அடியார்கள் பக்தியொடு தமிழையும் இணைத்திட அம்மையாரே முதலாசான். திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகத்தின் இறுதிப்பாடலில்

காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே “

என்று தமிழினை முன்னிலைப்படுத்துகின்றார். இதனைப் பின்பற்றியே சம்பந்தப்பெரு மானும் “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். மற்றைய அடியார்களும் தமிழைச் சேர்த்துச் சொல்லுவதும் நோக்கத்தகது.

அத்துடன் அமையாது தமிழின் சுரங்களையும்வாத்தியங்களையும் கூட காட்டி நிற்கிறார் அம்மையார்,

துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரி தக்கை யோடு
தகுணி தந்துந்தபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்க மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினொடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங் காடே

அழலாட அங்கை சிவந்ததோ! அங்கை
அழகால் அழல் சிவந்தவாறோ! – கழலாட
பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்
தீயாடுவாய் இதனைச் செப்பு

சுரங்களை, வாத்தியங்களைக் காட்டிய அம்மையார் இறைவனின் திருநடனத்தையும் அவனின் ஒவ்வொரு அம்சத்தையுமே பக்தியினைக் கலைநயத்துடன் இணைத்து காணுவது நோக்கத்தக்தக்கது. “அம்மையே” என்று அழைத்தவுடன் அவரிடம் அம்மையார் வேண்டும் பாங்கிலும் ஆடற்கலையினை வலியுறுத்தி தன்னுடைய வேண்டு கோளினை முன்வைப்பதும் நோக்கத்தக்கது.

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்

பிறவாமையினை வேண்டும் நிலையிலும் – அப்படி ஒரு பிறவியானது வாய்க்குமானால் ஆண்டவனே உன்னயென்றுமே மறவாமலும் இருக்க வேண்டும் அது மாத்திரமல்ல நீ ஆட வேண்டும்! நீ ஆடுவதை உன் அடியின் கீழ் இருந்து பார்க்க வேண்டும். தமிழிலே மகிழ்ந்து நான் பாடவும் வேண்டும். என்று வேண்டி நிற்கும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்வியை ஆண்டவன்  “அம்மையே” என்று அழைத்தமை மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.