Tag: இன்னம்பூரான்

  • சாது மிரண்டால்…

     

    இன்னம்பூரான்

    சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். மக்களின் திரண்ட சக்தி கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்திய ஃபிரெஞ்சுப்புரட்சி இன்றளவும் உலகில் மறக்கப்படவில்லை ~ ‘விடுதலை, நேயம், சமத்துவம்.’ ஒரு தாரகமந்திரம். மக்கள் கொதித்தெழுந்து முசோலினியை தூக்கிலிட்டனர். காந்தி மஹான் அடங்கிக்கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, ஆங்கில சாம்ராஜ்யத்தை ஒடுக்கினார். ரோஸா பார்க்ஸ் அமெரிக்காவில் இனவெறியை ஒழிப்பதற்கு வித்திட்டார். இன்றைய அதிபர் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கன். 

    இன்று எகிப்திலும், பிரேசிலிலும் மக்கள் சக்தியை சித்திர ரூபத்தில் பாருங்கள். 

    எகிப்து: டஹ்ரீர் சதுக்கம்.

    Inline image 2

    ரியோ மக்கள் எழுச்சி.

    எகிப்தில் புரட்சியின் விளைவாக பதவியேற்ற அதிபர் மோர்சி யதேச்சதிகாரம் நாடுகிறார். அரசியல் சாஸனத்தை வரையும் கமிட்டியிலிருந்து லிபரல் சிந்தனையாளர்கள் விலக நேரிட்டது. அதனால் அந்த கமிட்டியின் ஆளுமையை கைப்பற்றியவர்களை வலுவிழக்கும் வகையில் நீதிபதிகள் சுதந்திரமாக இயங்குவதற்கு தடை விதிக்கத்தான் இந்த யதேச்சதிகாரம் நாடுதல். அதை மக்கள் எதிர்க்கிறார்கள்.

    பிரேசிலில், மத்திய அரசு ரியோ மாநாட்டின் எண்ணை வளத்தை மற்ற மாநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. ரியோ மக்கள் எதிர்க்கிறார்கள். 3 பிலியன் டாலர் சொத்தை இழக்க யார் தான் ஒத்துக்கொள்வார்கள்? இங்கு பிரதிநிதிகளுடன், மாநில மக்களின் போராட்டம்.

    இதற்கு மேல், நுணுக்கமாக ‘சாது மிரண்டதின்’ பின்னணியை நான் அலசவில்லை. அதனால் கருத்துக்கூறவில்லை. நான் சொல்ல வருவது மக்கள் திரண்டு வந்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஓரளவுக்கு மேல் ஈடு கொடுக்க முடியாது என்பதே. அதற்கு காலம் பிடிக்கலாம். விலை அதிகமாக இருக்கலாம். உயிர்ச்சேதம் அதிகரிக்கலாம். ஆனால், வெற்றி, மிரண்ட சாதுவுக்கே. இந்தியாவுக்கு இதில் பாடங்கள் நிறைய இருக்கின்றன. சர்வதேச அமைப்புகள், இராஜ்ய பரிபாலனம், சமூகம், சமுதாயம், சட்டசபை, பஞ்சாயத்து, குழாம், சுற்றம் யாதாக இருப்பினும், அநீதி நிலைத்து நிற்காது. சாது மிரளும். வாகை சூடும்.

    தர்மம் சர.

    இன்னம்பூரான்

    27 11 2012

    சித்திரங்களுக்கு நன்றி:

    http://images.fastcompany.com/upload/tahrirsquare.jpg

    http://www.france24.com/en/files/imagecache/aef_ct_wire_image_lightbox/images/afp/photo_1353968672537-1-0.jpg?1353972506

           
    Share
  • தமிழார்வம் திரிகடுகம்: ராஜ தந்திரம்

     

    இன்னம்பூரான்

    தமிழார்வம்

    ராஜ தந்திரம்

     

    7. ராஜ தந்திரம்

    பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

    பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

    காய்வானைக் கை வாங்கிக் கோடலும்,-இம் மூன்றும்

    சாவ உறுவான் தொழில். [4]

     

    7.1. தன் பகைவர் முன்னே செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும்,  தொகுதியாக நின்ற, மாடுகளின் நடுவே,  கோல் இல்லாமல் செல்லுதலும்,  முன்னே (நின்று), தன்னை வருத்துபவனை, முன் விட்டு நீக்கி, பின் அவனை நட்புக் கொள்ளுதலும், ஆகிய இம் மூன்று செயல்களும் சாகவேண்டியவனுடைய, செய்கைகளாம்.

    7.2. அதாவது: பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.

    73. இந்த வெண்பா சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் போல பேசுகிறது, ராஜ தந்திர சூத்திரங்களை பகர்ந்து. பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு போன்ற தீய குணங்களுக்கு, பகை தூபம் போடும். தன்னுடைய செல்வத்தை பகைவனுக்கு முன்னால் விரித்துக்காட்டுவது, அந்த தீய குணங்களுக்கு வித்திடுவது. இத்தாலிய சாணக்யராக கருதப்படும் மாக்கியவல்லி ராஜகுமாரனுக்கு அளிக்கும் அறிவுரை; உன் பகைவனின் தந்தையை கொன்றாலும், அவன் மனைவியையும், சொத்தையும் பறிக்காதே. அவன் மன்னிக்க மாட்டான். பழி தீர்க்க வழி தேடுவான்.  அந்த ராஜ தந்திரத்தின் அலை வரிசை வேறு. அதனுடைய நுட்பம் இந்த வெண்பாவின் துவக்கத்தில் உரைக்கப்படுகிறது.

    7.4. மந்தையும், மாடும், கோலும் என்ற உவமையும் ஒரு போர் யுக்தியே. அடக்கியாளும் தந்திரம். மாட்டு மந்தைக்குள் கோல் இல்லாமல் புகுவது, அபிமன்யு பத்மவியூகத்தில் புகுந்தது போல. பகை, புகையை போல் மண்டிக்கிடக்கும். உள்ளே கனல். அந்த மாதிரி தான் நேற்றைய விரோதியை இன்றைய நண்பனாக, ஆராயாமல் ஏற்றுக்கொள்வது. நல்லாதனார் ‘…சாவ உறுவான்…’ என்ற கொடுஞ்சொல்லை பயன் படுத்தியதற்குக் காரணம், இந்த மூன்று செயல்களும் நல்வழிக்கு ஒவ்வாதவை என்பதே.

    7.5.  மேலே கூறப்பட்டது,உரையையும், விருத்தியுரையும் தழுவி என்னால் எழுதப்பட்டது. அவற்றிலிருந்து சொற்கள் இரவல் வாங்கப்பட்டுள்ளுன. அந்த நூல்களை படிக்க உசாத்துணைக்கு செல்லவும். 

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    18 11 2012

     

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    சித்திரத்துக்குநன்றி:http://1.bp.blogspot.com/-QCNpfDqoeHs/Thxav7Ol5sI/AAAAAAAAAEI/BqaOiy6TX5M/s1600/Sathish0312.jpg

    Share
  • இலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி

     

    இன்னம்பூரான்
    14 11 2012

    சில வருடங்களாகத்தான் எனக்கு தமிழார்வம். தற்செயலாக, அது நிகழ்ந்தது என் பாக்கியம். கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்னால் பரிசாக கிடைத்தது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் கட்டுரை நூல் ஒன்று. அப்பொழுது ஒரு சொல் கூட புரியவில்லை. இப்போது அகஸ்மாத்தாக மறுபடியும் கிடைத்தது; புரிந்தது. அதே மாதிரி இதுவும் கிடைத்தது. வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். ஒரு டால்ஸ்டாய் கதை. ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுகிறான். பத்து வயதில் அதை படித்து விட்டு அழுததின் நற்பயனாக, அப்பா நல்ல நூல்களை மதுரையிலிருந்து கொண்டு வந்து கொடுத்து ஊக்கமளித்தார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள். ஒரு அணா ஒன்று. ராமுலு பிரசுரகர்த்தா என்று நினைவு. ஆங்கிலத்திலும், தமிழிலும் தொகுப்புக்கள். அன்று பிடித்த புத்தகபைத்தியம் என் மக்களுக்கும் இருப்பது எனக்கு திருப்தி.

    அது ஒரு புறமிருக்க, ஒரு கவலை என்னை ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் அகல்யை சாபவிமோசனத்தை பற்றி சொன்னபோது, யார் அந்த பித்தன் என்று மெத்தப்படித்த பெண்மணியொருவர் வினவினார். தமிழுலகில் நடமாடும் நண்பரொருவரிடம் நான் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ பற்றி அளவளாவியபோது அவர் தி.ஜ.ர. பற்றி பேசுகிறேன் என்று நினைத்தபோது, நான் திகைத்துத்தான் போனேன். எனக்கு பாடம் எடுத்த முனைவரொருவர் ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இருக்கிறதா?’ என்று உத்வேகத்துடன் வினவினார். அதன் பிறகு பல தமிழன்பர்களிடம் பேசும்போது, பெரும்பாலோர் இலக்கிய ரசனை, விமர்சனம், ஆய்வு, ஒப்பியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்தது. இந்த இலக்குகளை நாடும் நூல்கள் குறைவு என்றாலும், இருப்பதையாவது படிக்க வேண்டாமா? அப்படி படித்ததைப் பகிர்ந்து கொள்வதால் எனக்கும் மனதில் படியும். அவரவர் சுயவிருப்பப்படி, உருப்படியாக பங்கேற்கலாம். அதான்.

    இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி என்பார்கள். 24 கதைகளும் இரண்டு கட்டுரைகளும் மட்டும் எழுதிய மணி (27.7.1907 ~ 6.7. 1985) உள்மனதைக் குடைந்து, சல்லடை போட்டு அரிந்து, அதை எக்ஸ்ரே படம் போல், சாட்சிக்கூண்டில் நிறுத்துவார். மாயவரத்து ஆசாமி. கும்பகோணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தவர். குடும்பச்சொத்தை பராமரிக்க, சிதம்பரம் வந்து சேர்ந்தார். அவரை தேடிச்சென்ற ‘இலங்கையன்’ பேராசிரியர் எம்.ஏ.நுமான் வீடு தெரியாமல் திண்டாடுகிறார். அவர் வசிக்கும் தெருவிலேயே அவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய புனைப்பெயர் ‘மெளனி’ பொருத்தம் தான்! ஒரு மாவு மில் நடத்தி வந்ததால்,’ மில் மணி ஐயர் என்று சொன்னால் தெரிந்திருக்கலாமோ என்னமோ! தற்கால தமிழிலக்கியத்தின் தூண்களில் ஒன்றான மணிக்கொடியில் எழுத ஆரம்பித்து பிற்காலம் ‘கசடதபற’ விலும் எழுதி வந்த ‘சிறுகதை சிற்பி’ மெளனியை, பிரபல இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யன் அவர்கள் மிகவும் சிலாகித்துள்ளார். க.நா.சு. உலகசிந்தனை படைத்தவர். உலக இலக்கியங்களை ஆராய்ந்தவர். அவரே ஒரு படைப்பாளர். அவரது விமர்சனங்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அவற்றின் அலசல்களை புறக்கணிக்க முடியாது.

    1984ல் பேராசிரியர் எம்.ஏ.நுமான் மெளனியுடன் நடந்த நேர்காணலை விவரிக்கும்போது, தன்னுடைய, தருமு சிவராமு, நமது வெங்கட் சாமிநாதன், சச்சிதானத்தனின் ஆகியோரின் கருத்துக்களயும் தந்துள்ளார். அவற்றின் சுருக்கம்:

    நுமான்:

    முதுமையின் தாக்கம் அதிகம். அவருக்கு ஈழத்து தமிழ் பணி பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். தமிழ் முறையாகப் படித்ததில்லை.  படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு விமர்சகனுக்கு வேண்டும் என்றார். அவருக்கு தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் ஆர்வமிருந்தது. ‘…தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது…’. கதை எழுதிய அவர் தலைப்புகளை பத்திரிகைக்காரர்களிடம் விட்டு விட்டாராம்.’தனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார்…உங்கள் மொழி  நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார்… தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார்…’.

    ‘… சில சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது… ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன…

    தருமு சிவராமு

    ‘மௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி “அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது” என்று கருதினாராம். ‘இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது.’ என்று கூறும் நுமான் அவர்கள், மெளனி தன்னிடம் சொன்னது, இதற்கு முரண் என்று சுட்டுகிறார்.

    வெங்கட் சாமிநாதன்: ‘மௌன உலகின் வெளிப்பாடு’:

    ‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார்… பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.’

    கி.அ. சச்சிதானந்தன்

    “(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”.

    ஒரு இலக்கியவாதியை பற்றி நால்வரின் கருத்துக்களை சுருக்கி அளித்திருப்பதால், பேராசிரிய உசாத்துணையில் இருக்கும் நுமானின் முழுக்கட்டுரையையும்  நீங்கள் படித்தால் நல்லது.

    நன்றி, வணக்கம்.
    இன்னம்பூரான்
    உசாத்துணை:

    http://azhiyasudargal.blogspot.co.uk/2010/10/blog-post_22.html

    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: நச்சு மூன்று

     

    இன்னம்பூரான்

    5. நச்சு மூன்று

     

    கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட

    இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்

    சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும்

    அறியாமையான் வரும் கேடு. [3]

     

    5.1. கற்றறியாதவர்க்கு உறவினனாகி நடத்தலும், மனவுறுதிகொண்ட இல்லாளை   கோலினால் அடித்தலும், தம் வீட்டுள் சிற்றறிவினரை  உடன் கொண்டு, புகுதலும், இம் மூன்று செயல்களும் தன் அறியாமையினாலே விளைகின்ற கேடுகளாம்.

    5.2. அதாவது, மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் தீமைகள் விளைவிப்பன.

    5.3. நல்லறம் தீயதை விலக்கவும் வேண்டும். நச்சுப்பொருள்களை புறக்கணிக்கச்சொல்வதும் மருத்துவ நெறியே. கல்வி அறிவை வளர்க்கும். கற்று அதன் பயனாக அறிவை பெறாதவர்களுடன் நட்பும், உறவும் கொண்டாடுவதைத் தவிர்ப்பது நலம்.

    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டாதவன் நன்மரம்.  (மூதுரை 4: ஒளவையார்)

    5.4. இல்லாளை அடிப்பது என்பது அவளை எந்த வகையில் துன்புறுத்துவதையும், கொடுமைக்கு ஆளாக்குவதையும், அவளுக்கு மன உளைச்சலை கொடுப்பதையும் குறிக்கும். இல் வாழ்க்கையில் விலக்க வேண்டிய நச்சு, அத்தகைய நடவடிக்கை. அன்றாட வாழ்க்கையில் இல்லத்தரசியின் மனதை புண்படுத்தாமல் இருப்பது பண்பு. பிரியமாக இருப்பது இருவருக்கும் சுகம். இவ்வாறு நல்லாதன் அறிவுரைத்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், பெண்கள் பலதுறைகளில் திகழ்ந்தாலும், பேச்சளவில் பெண்ணியம் ஆண்களால் போற்றப்பட்டாலும், இல்வாழ்க்கையில் ஆணாதிக்கத்தின் ஆளுமை இந்தியாவில் அதிகமாக காணப்படுவது துர்பாக்கியமே. அநேக இல்லங்களில் நல்லாதனின் அறிவுரை இயல்பாகவே பின்பற்றப்படுவதை காண்கிறோம். இருந்தபோதிலும், ‘இல்லாளை கோலால் புடைத்தல்’ பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆங்கிலத்தில் chattel என்ற சொல் உண்டு. அதன் பொருள்: ஜங்கம சொத்து/ அடிமை. ஆண்கள் இயற்றிய சட்டம் இல்லாளை chattel என்றது! சில வருடங்கள் முன்னால், அடையார் பிரதான சாலை ஒன்றில் ஒருவன் ஒரு பெண்பாலரை தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தான், ஒரு உருட்டுக்கட்டையால். தடுக்கப்போன எனக்கு பலமான அடி. தெரிந்த கடைக்காரர் ஒருவர் ஓடோடி வந்து என்னை காப்பாற்றினார். ஆனால், ‘அவன் தன் பொண்டாட்டியை அடிக்கிறான். நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’ என்று தான் என்னை கேட்டார். போலீசுக்குப் போனேன். அந்த ‘இல்லாளை கோலால் புடைத்தவனை’ தருவித்தார்கள். அவனுடைய கூற்று,’ என் மனைவியை அடிப்பேன். இவர் யார் கேட்பதற்கு?’ . போலீசும் தலையாட்டியது. சமூகம் பெண்பாலாரை சமமாக நடத்தும் வரை, நம் நாடு உருப்படாது.

    5.5. நமது இல்லம் நமது உறைவிடம். அங்கு அறிவீனரை உபசரிப்பது தீங்கு விளைக்கும். அறியாமையினால் இந்த தீமைகள் விளைவதால், அறியாமையை ஒழிக்கவேண்டும் என்பது தான் அடிப்படை கருத்து. சமூகமே ஒன்று கூடி கல்வியை பரப்ப முயன்றால் தான் அறியாமையை குறைக்க முடியும். ஆரம்ப கல்வி அனைவரைக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும் என்று கூறும் இந்திய அரசியல் சாஸனம், அதை அடிப்படை மனித உரிமையாக பிரகடனம் செய்ய மறந்ததால், கோடிக்கணக்கான இந்தியர்கள் கல்வியைன் பயனை பெறாமலே இறந்து போனார்கள். இன்றைக்கும் சர்வ சிக்ஷா அப்யான் என்ற அரசு கல்வி இயக்கம் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா நமது இல்லம் என்று எடுத்துக்கொண்டால், நாம் நல்லாதனர் அறிவுரையை மதிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    11 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    சித்திரத்துக்கு நன்றி: http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_63019526005.jpg

    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை

     

    இன்னம்பூரான்

    4. தகைமை மூன்று

    தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
    இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
    நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
    மேன்முறை யாளர் தொழில்.

    4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம்.

    4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘…சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே…’ (7-7-3)   என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘… இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார் காலத்திலேயே   வழக்கில்   இருந்தன…’ என்றும் எழுதியுள்ளார்.

    5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. ‘இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    07 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    தி.வே. கோபாலையர்:http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=11&pno=5

     

    சித்திரத்திற்கு நன்றி:

    http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-23/namu1.jpg

     

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [4] வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

    இராவணனால் வாலியின் வாலைக் கூட அசைக்கமுடியவில்லை. அத்தனை வலிமை, வாலிக்கு. பாற்கடல் கடைந்த போது தேவாசுரர்கள் களைத்துப் போயினர். ஆபத்துக்கு உதவும் நண்பனாக வந்து அமிர்ததைக் கடைந்த வானரோத்தமன் வாலியை, ஆலகால நஞ்சு போல் முறித்து மாற்றியது, சுக்ரீவனின் வீண்வம்பு அறைகூவல்.  கம்பரின் உயர்வு நவிற்சி அணி எப்படியெல்லாம் வாலியின் பராக்கிரமத்தை வருணித்தது என்பதைப் பார்த்தோம். அதிபராக்கிரமசாலியான வாலியின் இராமபக்தி அபாரம்.

    தாரையின் எச்சரிக்கை உதறித்தள்ளக்கூடியது அல்ல. இளவல் சுக்ரீவனுக்கு பயந்த ஸ்வபாவம். சஞ்சலபுத்தி. அவனொரு அசட்டுப்பிறவி. கிஷ்கிந்தா காண்டத்தில், அவன் சுய அறிவு இழந்தவனாகத் தான் தோற்றம். தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாது, அவனுக்கு. அத்தனை பலவீனம். சந்தேகப்பிராணி. ராமலக்ஷ்மணர்கள் கிஷ்கிந்தையில் நுழைந்ததே அவனுக்கு அச்சம் விளைவித்தது. எளிதில் குழப்பம் அடையும் குணமுண்டு, அவனுக்கு. இராமலக்ஷ்மணர்களை வாலி தான் தன்னைக்கொல்ல அனுப்பினான் என்று அனுமனிடம் புலம்புகிறான். இந்த அசட்டு வானரத்திடம், மிகவும் மரியாதையுடன் தஞ்சம் புகுந்தனர், தசரதனின் மைந்தர்கள். அந்த அசடும், இவர்களின் உன்னத நிலையை அனுமன் சொல்லியும், அதற்கு செவி சாய்க்காமல், இராமனின் தன்னடக்கமான நட்புரிமை நாடும் சொல்லையும் காதில் போட்டுக்கொள்ளலாம், கைலாகு கொடுத்து, தனக்கு சமானமாக அமரச்சொல்கிறான்! என்னே டாம்பீகம்! நான் வால்மீகி ராமாயணம் பக்கம் போகவில்லை. அங்கும் சுக்ரீவனுக்கு பெத்த பெயரில்லை. இராம லக்ஷ்மணர்கள் அவனிடன் தஞ்சம் புகுந்ததாகத் தான் நான் படித்த உரை கூறுகிறது.

    இப்பேர்ப்பட்ட சுக்ரீவன் வாலியை வம்புக்கு இழுத்தால், அவனுக்கு ஏதோ வலிமை மிகுந்த துணை கிடைத்திருக்கவேண்டும் என்பது – சரி – வெள்ளிடை மலை. அந்த துணை இராமன் என்பதால், எச்சரிக்கையின் தீவிரம் வாலிக்கு புரிந்திருக்க வேண்டும்.

    ‘அன்னது கேட்டவள், ‘அரச! “ஆயவற்கு

    இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,

    உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்” என,

    துன்னிய அன்பினர் சொல்லினார்’ [3964]

    என்றாள். இராமன் வந்தது உன் உயிரை பறிக்கவே’ என்று அவள் தெளிவாகத்தான் எச்சரித்தாள்.  

    (‘…தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர் எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும், அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது…’ ~ உரை.)

    அந்த எச்சரிக்கையை உதறிவிட்டான், இராமபக்தனான வாலி. ‘…இயல்பு அல இயம்பி என் செய்தாய்?…’ என்ன பேச்சு இது? ‘…பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்’ என்று அவளுக்கு ஈவிரக்கம் காட்டினான், சினம் மிகுந்த கால கட்டத்தில் கூட. இராமனிடம் உள்ள பக்தியால் தான், தாரையை கடிந்து கொண்டான், வாலி.

    உழைத்த வல் இரு

          வினைக்கு ஊறு காண்கிலாது

    அழைத்து அயர் உலகினுக்கு

          அறத்தின் ஆறு எலாம்

    இழைத்தவற்கு, இயல்பு அல

          இயம்பி என் செய்தாய்?

    பிழைத்தனை; பாவி! உன்

          பெண்மையால்’ என்றான். [3965]
        

    இனி அவன் ஶ்ரீராமசந்தர மூர்த்தியின் கீர்த்தியை சொல்வதை கவனியும்.

    1. ‘… அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு…’

    ~ தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த
    இராமபிரான் என்கிறான், வாலி.

    2.’இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ?

    ~ இராமன் குறுகிய நோக்கம் உள்ளவன் அல்ல. இம்மைக்கும், மறுமைக்கும் உரிய பலாபலன்களை சீர்த்தூக்கிப் பார்க்கும் இயல்பு உடையவன். (சுக்ரீவனுடன் கூட்டு சேர்வதால்) அவனுக்கு பயன் யாதும் இல்லை. (என்ன உளறுகிறாய்?) தரணிதனில் வாழும் உயிர்களின் ரக்ஷகனான தருமமே தன்னை அழித்துக்கொள்ளுமோ? என்றெல்லாம் இராமனின் உன்னத நிலையை தன் புரிந்து கொண்டதைக்கூறி, தாரையை கடிந்து கொள்கிறான்.

    ‘இருமையும் நோக்குறும்

         இயல்பினாற்கு இது

    பெருமையோ? இங்கு இதில்

         பெறுவது என்கொலோ?

    அருமையின் நின்று, உயிர்

         அளிக்கும் ஆறுடைத்

    தருமமே தவிர்க்குமோ

         தன்னைத் தான்அரோ? (3966)

    ‘இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து
    மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன்
    செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே
    உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய
    மாட்டான் என்பதால் ‘தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்’ என்றான்.
    ‘அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்’ (1349) ‘மெய்யற மூர்த்தி வில்லோன்’
    (5882) என்பன காண்க.’ (உரை)

    3. ‘ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்

    மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

    ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

    போற்றலை; இன்னன புகறல்பாலையோ?’ [3967]

    (அடி பேதாய்!) தன்னுடைய மாற்றாந்தாயின் கட்டளைக்கு பணிந்து ராஜ்யபாரத்தை பரதனுக்கு உவகையுடன் தந்துருளிய சான்றோன் இராமனை புகழ்ந்து பாராட்டாமல், நீ அவரை இகழலாமா?)

    ‘பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி’ என்றார் குலசேகரர்.(பெருமாள்திருமொழி-8-5) என்று உரையில் கூறியதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    4. நின்று பேர் உலகு

    எலாம் நெருக்கி நேரினும்,

    வென்றி வெஞ் சிலை

          அலால், பிறிது வேண்டுமோ?

    தன் துணை ஒருவரும்,

          தன்னில் வேறு இலான்,

    புன் தொழில் குரங்கொடு

          புணரும் நட்பனோ? (3968)

    இராமன் நிகற்ற மாவீரன்.  அவனுக்கு தன்னுடையை வில் ஒன்றே போதும், உலகெலாம் திரண்டு வந்து அவனை எதிர்த்தாலும். போய்ம் போயும் இந்த அற்பனாகிய குரங்குடன் அவன் கூட்டு சேர்வானா?

    தம்பியர் அல்லது தனக்கு

          வேறு உயிர்

    இம்பரின் இலது என

          எண்ணி ஏய்ந்தவன்,

    எம்பியும் யானும் உற்று

          எதிர்ந்த போரினில்

    அம்பு இடை தொடுக்குமோ,

          அருளின் ஆழியான்? [3969]

     சகோதர பாசத்தின் அருமையை உணர்ந்தவன் இராமன். கருணைக்கடலான இராமன் தன் சகோதரர்களிடமிருந்து தன்னை பிரித்துப் பார்ப்பதை அறியாதவன். என் தம்பியும் நானும் சண்டை போட்டால், இடையில் புகுந்து என் மீது அம்பு தொடுக்கமாட்டான்.

    ‘தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை
    ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு
    பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற
    நம்பிக்கையில் வாலி ‘எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை
    தொடுக்குமோ’ என்றான். ‘தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்’
    (3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி
    வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி – கருணைக்கடல். இராமனைக்
    ‘கருணைக்கடல்’ (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார்.’ (உரை)

    வாலியின் அதிபராக்கிரமமும், அவன் பார்க்கடலை கடைந்து தேவாசுரர்களை உய்வித்ததும், ராவணனை நசுக்கியதும், அவனுடைய இராமபக்திக்கு முன் சிறிய விஷயங்கள். அத்தகைய பக்தனை பற்றி இராமன் அறியாமலும் இல்லை. அவனை விட்டு விட்டு, சஞ்சலபுத்தியும், டாம்பீகமும் குடி கொண்டுள்ள சுக்ரீவனிடம் இராமலக்ஷ்மணர்கள் தஞ்சம் புகுந்தது ஏன்?

    பழவினையோ?

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    04 11 2012  

    உசாத்துணை (மூலமும், உரையும்): http://www.tamilvu.org/library/libindex.htm

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

    இன்று மின் தமிழில் ‘இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?’ என்ற இழையை படித்தேன். நான் தனி இழை தொடங்கக் காரணம், நான் முன் வைக்கும் கருத்துக்களுக்கும், தவணை முறை தொடருக்கும் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளவே. திரு. தேசிங்கு அவர்களுக்கும், திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

    திரு.தேசிங்கு அவர்கள் இன்று சுட்டிய அவருடைய வாலி வதத்தை பற்றிய கட்டுரையை பலமுறை படித்தேன். வேத வரலாறு என்று அவர் எதை குறிக்கிறார் என்று அறிந்திலேன். அவர் ராமனின் செயலை நியாயப்படுத்தி கூறிய அலசல்களை கூர்ந்து, கவனித்துப் படித்தேன். அவை ஒருதலைபக்ஷமாக இருப்பதாக கருதுகிறேன். ஆத்திகர்களில் சிலர் இராமன் செயலில் நியாயம் இல்லை என்று சொல்லக்கூடும். நாத்திகர்களில் சிலர் வாலியின் கூற்றில் உண்மை இல்லை என்று சொல்லக்கூடும்..

    திரு. ஹரிகிருஷ்ணன், அந்த கட்டுரையின் தொடர்பாக குறிப்பிட்ட http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Vali என்ற அவருடைய கட்டுரை தொகுப்பை ஏற்கனவே பலமுறை படித்திருக்கிறேன். இன்றும் அவற்றை படித்தேன். திரும்பத்திரும்ப படிக்க வேண்டியவை. அதை செய்வேன்.

    மேற்படி பின்னணியில் என் கருத்துக்கள் சிலவற்றை முன் வைக்கத் துணிந்தேன். இது ஆரம்ப கட்டம். மேலும் சொல்ல விழைகிறேன். பொறுத்தாள்க. நான் வால்மீகி ராமாயணத்தின் பக்கம் செல்லவில்லை. எனக்கு வடமொழியை இணைய தளத்தில் படிப்பது கடினம். படித்து குறியீடுகள் இடுவதும் கடினம். பொறுத்தாள்க. நான் கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி, என்னால் இயன்றவரை நடுவு நிலையிலிருந்து, வாலி வதத்தை பற்றி எழுத விழைகிறேன்.

    இன்று ஒரு குறிப்பு மட்டும், இராமனின் திட்டம் பற்றி: தன்னுடைய தகனத்துக்கு பிரதியுபகாரமாக, முன் கூட்டி சொல்லப்பட்ட, கபந்தனின் ஆலோசனையை பற்றி இப்போதைக்கு நான் எழுதவில்லை.

    கம்பநாடரின் இராமகாதை வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பும் இல்லை; தழுவலும் இல்லை. மு.வ. அவர்கள் குறிப்பிட்ட மாதிரி, இது ஒரு புது காப்பியமே. ( இலக்கிய வரலாறு 1972: 2006: பக்கம்:192). வால்மீகியின் சீதை வேறு; கம்பனின் சீதை வேறு என்கிறார், டி.கே.சி. (ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம்:2006: காவ்யா: பக்கம்: 65). கம்பனின் அங்கதன் வால்மீகியின் அங்கதன் அல்ல. கம்பரின் ‘மாயாசனகப்படலம்’ வால்மீகியில் இல்லை. இரணியப்படலமோ கம்பரின் தனிப்படைப்பு. (மு.வ. இ.வ. பக்கம்195). அவர் சுட்டியபடி, ‘இந்த வேறுபாடுகள் கதைச்சுவையையும், பண்புச்சிறப்பையும், கற்பனை வளத்தையும் கூட்டுவிக்கின்றன.’

    வாலி வதைப்படலம் கம்பரின் வாதத்திறனுக்கும், நடுவு நிலைக்கும் நிகரற்ற எடுத்துக்காட்டு. கம்பரை பற்றி நிறைய எழுத ஆர்வம். கை ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால், சிறிய இடுகைகளை, தவணை முறையில் தர அனுமதியுங்கள், இடையில் தாராளமாக பின்னூட்டங்கள் தரலாம். தயை கூர்ந்து, திசை மாற்ற வேண்டாம், இந்த தொடர் முடியும் வரை.

    நான் முன் வைப்பது:

    ஶ்ரீராமசந்திர மூர்த்தி வாலியை வதம் செய்தது தர்மம் இல்லை. கம்பர் இந்த படலத்தை படைத்தபோது மிகவும் சங்கடப்பட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் இராமனுக்கு வாதத்திறன் அளிக்கவில்லை. வாலி அடிப்பட்டு வீழ்ந்த பிறகு, அவனுக்கும், இராமனுக்கும் நடந்த வாதம், இலக்குவனின் குறூக்கீடு உள்பட, 56 பாடல்களில் உள்ளன. அவற்றுக்கு, பிறகு, வருகிறேன்.

    சுருங்கச்சொல்லின், வாலியின் வதை திட்டமிடப்பட்டதே, இராமனால், யாதொருவித பிரமேயம் இல்லாமலே.  சுக்ரீவனை அழைத்து,

        

    அவ் இடத்து, இராமன், நீ

          அழைத்து, வாலி ஆனது ஓர்

    வெவ் விடத்தின் வந்து போர்

          விளைக்கும் ஏல்வை, வேறு நின்று

    எவ்விடத் துணிந்து அமைந்தது; என்

          கருத்து இது’ என்றனன்;

    தெவ் அடக்கும் வென்றியானும்,

          ‘நன்றிஇது’ என்று சிந்தியா. [3944]

    ‘நீ வாலியை வலியப் போருக்கழைத்து வா. நீங்கள் சண்டை போடும்போது, நான் வேறிடத்திலிருந்து அம்பு தொடுப்பேன், இது என் கருத்து” என்கிறான். அவனும் ‘ஆமாஞ்சாமி’ போடுகிறான்.

    இது தகுமோ? இது நியாயமோ? இது தர்மமோ? இது அடுக்குமோ?

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    30 10 2012

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

     

    வாலி மோக்ஷம் மிகவும் உருக்கமான நிகழ்வு; ஷைலஜாவின் கருத்தை அசைப்போட்டுக்கொண்டே படுத்தேன், நேற்றிரவு. இன்று அதிகாலை தரிசனம்: ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம். எழுதத்தொடங்கினால், ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அரிய தமிழ் உரை ஒன்று வந்து போனது. (இன்று இணையதள சிக்கல்கள், சில.) ராமாயணம் என்றுமே அதிசயப்படுத்தும். அநேக வீடுகளில் தினந்தோறும்  பக்தியோடு ராமாயண படனம் உண்டு. மனம் கலங்கினால், ராமாயனத்திலிருந்து ஏதோ ஒரு பக்கம் எடுத்து படித்தி ஆறுதல் நாடுவதும் உண்டு.

    தொடக்கத்திலிருந்தே வாலி ராமபக்தன். அவனுக்கு பகையாக ராமன் -சுக்ரீவன் உடன்படிக்கை செய்ததை எப்படியோ தாரை ‘…நெடுந்துணை உடைமையால்…’ என்று மோப்பம் பிடித்து விடுகிறாள். வாலியை ‘துன்னிய அன்பினர் சொல்லினார்…’ என்று மென்மையாக எச்சரிக்கிறாள். ராமபக்தனுக்கு சினம் பொங்கியது. பெண்புத்தி பின்புத்தி என்று சினந்தான். ‘…வாலியின் கண் வரும் தீயிடை, தன் நெடுங்கூந்தல் தீகின்றாள்…’ என்று கம்பன் சொல்கிறார். கோபம் கொப்பளிக்க, கொப்பளிக்க, வாலியின் கண்களிலிருந்து தீ பறக்கிறது. அதில் கருகிப்போகிறது, தாரையின் கூந்தல். ஐயகோ! ஒரு பெண்ணின் கூந்தல் கருகினால், அது தீநிமித்தம் அல்லவோ!

    ‘…உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம், இழைத்தவர்…’, ‘இருமையும் நோக்கும் இயல்பினான்…’, அவனுடைய ‘…ஆறுடை தர்மம் தன்னைத்தான் தவிர்க்குமோ? தன்னைத்தான் அரோ!..’, ‘…புன்தொழில் குரங்கோடு புணரும் நட்பனோ?…’, ‘…அம்பு இடை தொடுக்குமோ? அருளின் ஆழியான்…’ என்றெல்லாம் இராமனின் நற்குணங்களை பாராட்டி, தாரைக்கு சமாதானம் கூறுகிறான். இராமபாணம் துளைத்து வீழ்ந்த பின், ‘…இதுவும் தான் ஓர் ஓங்கு தர்மமோ?…’ என்ற வினா அவனுள் எழுகிறது. அப்போது தான் வாலிக்கு ஆண்புத்தி பின்புத்தி என்ற தெளிவு பிறக்கிறது.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    31 10 2012

    Share
  • தமிழார்வம் : [2]: திரிகடுகம்: ‘நல்லாதன் மருந்து’

     

    இன்னம்பூரான்

    சிறப்புப் பாயிரம்

    உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
    அலகு இல் அக நோய் அகற்றும், நிலை கொள்
    திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
    மருவு நல்லாதன் மருந்து.

    செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்
    நல்லாதன் என்னும் பெயரானே-பல்லார்
    பரிவோடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,
    திரிகடுகம் செய்த மகன்.

    2.1. உடல் நலம் பேணுவதற்கு, திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகளும் இன்றியமையாதவை. தமிழ்ச்சங்கத்திற்கு ‘நல்லாதன்’ பரிவுடன் கொடுத்த அருமருந்தாகிய திரிகடுகம் என்ற இந்த நூல், மும்மூன்று அறநெறிகளை பகர்ந்து, அவை மனநலம் பேணுவதற்கு ஆதாரமாக அமைந்துளன என்று சிறப்புப் பாயிரம் அருமை சாற்றுகிறது  ‘உயிர் நலம்’ பேணுவது என்பது விருத்தியுரையில் உள்ள பாடம்:

    “… மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைஒத்து, இந் நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இந்த ஒப்புமைகருதியே இந் நூல் திரிகடுகம் என்னும் பெயர் பெற்றுள்ளது…”

    சிறப்புப்பாயிரம் ‘உரையில்’ (1934) காணக்கிடைக்கவில்லை. நல்லாதனார்  பரிவுடன் ஆராய்ந்து, ஆராய்ந்து அளித்த இந்த நூல் ஆத்ம 4:56 AM 10/31/2012விசாரணைக்கும் உதவும் என்பதை விருத்தியுரை கூறுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.   ‘மன மர்ம’ முடிச்சுகளை தளர்த்தி விட (‘அகநோய் அகற்ற’) இந்த ‘திரிகடுகம்’ என்ற நூல் உதவும் என்று தாம் சிறப்புப் பாயிரம் கூறுகிறது என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நிற்கிறது.

    2.2. “திரிகடுகம்’ ஒரு உவமையாகு பெயர். ஒன்றன் பெயர் தனக்குரிய பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ( எடுத்துக்காட்டு: நாடு தவிக்கிறது.)” (தமிழ் இணையக்கழக பாடபுத்தகம்)

    பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
    ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத்
    தொல்முறை உரைப்பன ஆகுபெயரே  [நன்னூல் 290]

    “பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயரை அடிப்படையாகக் கொண்டவையும், எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலான அளவைப் பெயர்களும், சொல், தானி, கருவி, காரியம், கருத்தா முதலானவையும் தம்மோடு தொடர்புடைய வேறு பொருளுக்குப் பெயராகிப் பழங்காலம் முதல் சொல்லப்பட்டு வருவன ஆகுபெயர் என்பது இதன் பொருள்.” (தமிழ் இணையக்கழக பாடப்புத்தகம்)

    (தொடரும்)

    இன்னம்பூரான்
    30 10 2012

    1. மாணவர் தளம்: தமிழார்வம்

    2.தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

     

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (2)

     

    இன்னம்பூரான்

    ‘மேலும் சொல்ல இருக்கிறது’ என்ற எதிரொலி என் காதில் விழ ஒரு வருடம் ஆகி விட்டது. ஆம். வயது ஆக ஆக காது மந்தம். சரி. விஷயத்துக்கு வருவோம்.

    முதற்க்கண்ணாக, சென்னை பொது ஆஸ்பத்திரிக்கும், மதராஸ் மருத்துவக்கல்லூரிக்கும் நன்றி சொல்லவேண்டும். அவற்றின் வரலாறு எழுதிய டாக்டர் சுப்பா ரெட்டி காரு என் நண்பர். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு அது ஒரு தர்ம ஆஸ்பத்திரியாக பணி புரிகிறது. சேவையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. எக்கச்சக்கமான தவறுகள் நடந்து கொண்டு வருகின்றன. அபார சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. டா. ரங்காச்சாரி, டா. ராஜம், டா. பி.ராமமூர்த்தி போன்றோர் செய்த அருந்தொண்டுகள் நிகரற்றவை. அவர்களை பற்றி, பிறகு ஒரு நாள், வாசகர்கள் விரும்பினால், பேசலாம். ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது எப்படி என்று கூட நாம் கலந்தாலோசிக்கலாம்.

    மருத்துவ சேவை இடத்திற்கு இடம் வித்தியாசப்படுகிறது. இலவச மருத்துவ சேவையின் தரம் அபாயகரமாகக் குறைந்து விட்டதால், இந்தியாவில் மருத்துவம் அளிக்கும் கம்பெனிகளும், காப்புரிமை கழகங்களும் செல்வம் கொழிக்கின்றன. அமெரிக்காவில் யானை வாங்கலாம். டாக்டர்களிடம் போக முடியாது. அத்தனை செலவாகும். சர்வம் கலவரப்படுத்தும் காப்புரிமை அல்லது அரோஹரா. உழக்கு தவறினாலும் வழக்கு. இங்கிலாந்தில் மக்கள் நலம் பேணுவதை அடித்தளமாக வைத்து, அனூரின் பீவான், பார்பாரா கேஸில் போன்ற தீர்க்கதரிசிகள் அமைத்த நேஷனல் ஹெல்த் செர்வீஸ் பிரஜைகள் யாவருக்கும் வியக்கத்தக்க வகையில் இலவச மருத்துவப்பணி செய்து வருகிறது, அரை நூற்றாண்டுக்கு மேல். குற்றம் குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், இது ஒரு மாடல் என்பதில் ஐயமில்லை. மக்களுக்குப் புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை, கூவி, கூவி இலவசமாக வழங்குவது இங்கு நல்லதொரு பணி. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.

    நான் டாக்டரல்ல. வாழ்நாள் முழுதும் குடும்பத்திலும், சுற்றத்திலும் உடல் நல சிக்கல்களுடன் போராடவேண்டியிருந்தது. கிடைத்தப் படிப்பினைகள் பல. உகந்த முறையில் அவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நான் எழுதுவதெல்லாம் மருத்துவ வேத வாக்கு அல்ல. விழிப்புணர்ச்சி நாடுமொரு பாதை மட்டுமே என்று எச்சரிக்கை செய்வது என் கடமை. இது ஏதோ என் மனநிறைவுக்காக மட்டும் எழுதப்படும் தொடரும் அல்ல. வாசகர்களுடன் அளவளாவி, வினவிய வினாக்களுக்கு விடை அளித்து, ஆதாரமுள்ள ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அறிவுரைகள பகிர்ந்து கொண்டு இயங்க விழையும் பரஸ்பர சம்பாஷணை மையம். அந்த பணி திறன்பட நடப்பதற்காக உள்ள திட்டம்:

        எந்த கேள்வி எழுந்தாலும் பண்புடன் அதற்கான விடை, தேடல், பகிர்வு, பின்னூட்டங்கள் மூலம்.

        தனி மடல்களில் பிரத்யேக பதில் விரும்பினால், அதை அளிப்பது. வல்லமை ஆசிரியருக்கு அனுப்பலாம். ரகசியம் காப்பாற்றப்படும்.

        அடுத்த பகுதி என்ன என்றும், அது பற்றிய தொடர்புகளையும், முந்திய கட்டுரையில் அளிப்பது. அவரவர் வினா எழுப்ப அது உதவும்.

        தவிர்க்கமுடியாத இடங்களில், தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிலத்திலும் எழுதுவது. நமது இலக்கு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தனித்தமிழ் அல்ல.

        வல்லமை ஆசிரியரும், வாசகர்களும் அளிக்கும் ஆலோசனைகளை முடிந்தவரை ஏற்று நடப்பது.

    இன்றைய விஷயம்: ‘டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரைச் சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும்.’.

    மருத்துவம் செய்ய டாக்டருக்கு உறுதுணை: நாம் கொடுக்கும் எஃப்.ஐ. ஆர். தற்செயலாக, இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நூல்: Dr.Tom Smith (2007) How to Get the Best from Your Doctor: Oxford: ISIS Publishing Ltd. டாக்டருக்கும் அவரை நாடுவோருக்கும் இருக்கும்/இருக்கவேண்டிய உறவை பற்றிய அருமையான நூல், இது. இதிலிருந்து பல விஷயங்களை கறக்கவேண்டியிருக்கிறது. அவ்வவ்பொழுது பார்க்கலாம். அவரிடமிருந்து ஒரு குறிப்பு:  “ நாங்கள் என்றும் மறவாத மருத்துவக்கல்லூரி பாடம், நோயாளிகளுடன் டாக்டர் எப்படி உறவாடவேண்டும் என்பதை பற்றியது… துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஒரு டாக்டர். ஷெர்லாக் ஹோம்ஸுக்கு லாஜிக் ஒன்றே குறி; உள்ளுணர்வு, உணர்ச்சி வசம் ஆகியவற்றிற்கு இடம் கிடையாது. மருத்துவமும் அப்படித்தான். அதற்கான மும்மந்திரங்கள்: PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” இங்கிலாந்தில் பயன்படும் வகையில் அவர் பல விஷயங்களை அருமையாகவும், நுட்பமாகவும் அவர் எழுதியிருக்கிறார். நமக்கு வேண்டியதை, ஒவ்வொரு பதிவிலும், தவணை முறையில், எழுதுவதாக  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதே மாதிரி, என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மாதிரிக்கு ஒன்று: உசிலம்பட்டியில் சின்ன தாலுக்கா ஆஸ்பத்திரி, அந்த காலத்தில். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து, ‘டாக்டர்! முழங்காலில் சிராய்த்துவிட்டது. டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவுங்கள்’ என்றார். டாக்டரும் வினயமாக அதை செய்தார். ஒரே எரிச்சல் என்று முனகினார் காவல் தெய்வம். மருத்துவ சிறு தெய்வம், ‘இதற்கு மருந்து வேறே. நீங்கள் கேட்டதால், டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவினேன்’ என்றதே பார்க்கலாம்! படிப்பினை நம்பர் 1&2.

    இன்று: எஃப்.ஐ. ஆர். பற்றி டா. டாம் ஸ்மித்.

    ‘வலிக்கிறது’ என்று வருகிறார், ஒரு நோயாளி: எங்கே வலிக்கிறது? வலியின் தீவிரம் என்ன? வந்து, வந்து போகிறதா? இல்லை ‘யதாஸ்தானம் பிரதிஷ்டாபயமி’ (வந்துவிட்டேன்; நகரமாட்டேன் என்ற அடம்) என்று வலிக்கிறதா? மந்தமாக நீடித்த வலியா? தாங்கமுடியாத வலியா? அது பகல்/இரவு பேதம் பார்க்கிறதா? எப்போது வலிக்கிறது ~உடற்பயிற்சி/ உணவு உண்ட போது/அசைந்தால்? நீங்களே என்ன செய்தால் வலி குறைகிறது? கத்தி குத்தினமாதிரி வலிக்கிறதா இல்லை தடியால் அடித்த மாதிரி வலிக்கிறதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். இத்தனை கேள்விகளுக்கு பிறகு உங்கள் டாக்டர் மருந்து கொடுத்தாரா அல்லது வலி என்றவுடன் க்ரோசின் அல்லது இபுப்ருஃபென் (Crocin or Ibubrufen) கொடுத்து விரட்டி விட்டு, ‘நெக்ஸ்ட்’ என்று அடுத்தவரின் தொண்டையை பார்க்கப்போய்விட்டாரா?

    இந்த வினாத்தொடரை தலைவலி, வயிற்று வலி, இதய வலி என்று கேட்டுப்பார்த்தால், நான் சொல்வது புரியும்: (அதாவது) டாக்டரிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது என்பது பற்றி ஒத்திகை நடத்திக்கொள்ளுங்கள்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (3) மன அழுத்தத்தை பற்றி. முன்கூட்டியே கேள்விகள் கேட்கலாம். அதற்கு உதவ, சில இணைய தள தொடர்புகள் இங்கே:

    Stress management: International Stress Management Association: www.isma.org.uk

    Stress at work: www.hse.gov.uk/stress

    Saneline: www.sane.org.uk

     

    Share
  • தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

     

    இன்னம்பூரான்

    1.1. பதினென் கீழ்க்கணக்கு என்ற சங்க கால இலக்கியத்தின் பிரிவில், நீதி நூல்கள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றில் திருக்குறள் மிகவும் பேசப்பட்ட, பற்பல உரைகள் கண்ட நீதி நூல். மற்ற நீதி நூல்களில், அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. அநேகமாக யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை என்றால் மிகையாகாது. எனவே, நல்லாதனார் (நல்ல ஆதனார்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) இயற்றிய திரிகடுகம் (‘திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி’ என்கிறது, திவாகரம்.) என்ற நூல், இந்த ‘தமிழார்வ’ இழைத்தொகுப்பை ஆரம்பித்து வைப்பது, ஒரு நன்நிமித்தம். இந்த முயற்சியில், எனக்கு உறுதுணை: திருக்கோட்டியூர் இராமானுசாச்சாரியார்  செய்த உரை ( இனி: உரை): ஶ்ரீல.ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்களின் பொருட்டு திரு.கா.சுப்ரமண்ய பிள்ளை 1934ல் பதித்தது  & வித்துவான், நாவலர் பு.சி. புன்னைவனநாத முதலியாரவர்களின் விருத்தியுரை (இனி:விருத்தியுரை):( சென்னை : திருநெல்வேலி,தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 2003.) அவை இணைய தளத்தில் கிடைக்கின்றன. நிறைகள் அவர்களது. குறைகள் எனது. அவர்களிருவருக்கும் என் நன்றி உரித்ததாகுக.

    1.2. இந்த நூலை உயிர் மருந்து நூல் எனலாம். எடுத்தவுடனேயே, முதற்பாடலிலேயே ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று நல்ல ஆதனார் பெயர்க்காரணத்தை உணர்த்துகிறார். திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது. ‘இல்லறமல்லது நல்லறமன்று’ (கொன்றை வேந்தன் 3: ஒளவையார்)என்பதை 35 இடங்களில் படித்துப் படித்து சொல்லும் இந்த நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவற்றின் கோர்வை ஒரு தனிச் சிறப்பு. அவற்றின் தொடர்பாகவே, ஈற்றடியில் ஒரு பொதுக்கருத்து சொல்லப்படுவது, மேலும் ஒரு சிறப்பு.

    1.3. திரிகடுகம் அறம் சாற்றும் நூல். ‘அறம் செய்ய விரும்பு’ (ஆத்திச்சூடி 1: ஒளவையார்) என்று வழி காட்டும் நூல். நல்லறம் என்பது அறங்கள் பலவற்றின் ஒரு தொகுப்பு. இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது. அங்குமிங்குமாக, அவற்றில் சிலவற்றை முன் நிறுத்துவதை விட, நல்லாதனரின் பட்டியலை அனுசரித்து, அவருடைய வரிசைப்படி பயணித்து அவற்றை புரிந்து கொள்வது நலன் பயக்கும் என்பது என் கருத்து. அவ்வாறே செயல்படுகிறேன்.

    1.4. இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு. அந்த காப்பு செய்யுட்களின் தனித்துவம் போற்றத்தக்கது. கடவுள் வணக்கம் இருவகைப்படும் ~ ஏற்புடைக் கடவுள் வணக்கம், வழிபடு கடவுள் வணக்கம். வழிபடுகடவுள் வணக்கம், இங்கே. காத்தற் கடவுளும் அந்த திருமாலே. இக் கடவுள் வாழ்த்துப் படர்க்கையிற் கூறப்பட்டுள்ளது; பிள்ளையாரும் சிறப்பாக வேண்டப்படுபவர் என்றும் பாடமுண்டு.

    1.5. நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் பாலகர்களுக்குக் கூட தெரியும். அவற்றை கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார், நல்லாதனார். இதனால் அவர் வைணவமரபைச் சார்ந்தவர் என்போர் உண்டு.  எடுத்துக் கொண்ட இந்த நூல் இனிது வர வேண்டி இச் செய்யுளால் கடவுள் வணக்கம் செய்யப்பட்டது. இனி வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.

    திரிகடுகம்
    காப்பு

    கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்

    தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் –

    நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்

    இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.

    1.6. உரைகளிலும் நடையழகு காணலாம். சான்றாக, இந்த மூன்று செயல்களையும் ‘அளந்த பொருள் (மூவுலகம்),சாய்த்த பொருள் (மரம்), உதைத்த பொருள் (சகடம்) என்று கூறுவர். இறைவனின் குணாதிசயங்களை ஒரு வரையறைக்குள் திணித்து வைக்கமுடியாது என்றாலும், ஒரு அனுபவ சுவை தென்படுகிறது, விருத்தியுரையில் கூறிய மாதிரி: திருமால் ஞாலத்தை அளந்தது பேரருளால். மரத்தை வீழ்த்தியது ஒரு பேராற்றல். சகடத்தை உதைத்து பேரறிவினால்(சமயோசிதம்). இறைவனின் குணாதிசயங்களை இவ்வாறு வருணிப்பது ‘பரிபாடல்’ என்ற சங்ககாலத்து பக்தி பாடலை நினைவுறுத்துகிறது.

    1.7. தற்காலத்தில் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இலக்கணம் என்றால் பிடி ஓட்டம்! ஆனால் நண்பர்களே, தமிழிலக்கணத்தின் சுவை அருமையானது. இது ஒரு சிறிய குறிப்பு கடுதாசி என்பதால், ஆங்காங்கே விருத்தியுரை அளித்துள்ள இலக்கண குறிப்புகளில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். # சான்றாக: ‘அளந்ததூஉம்/ சாய்த்ததூஉம்/உதைத்ததூஉம்’ என்று வசன நடையின் புழக்கத்தில் இல்லாத ‘உம்’மில் முடிப்பது ஒரு ஒலி உத்தி. பாடலில் இன்னிசை கூடி வருவதற்காக, தமிழிலக்கணம் அனுமதிக்கும் இந்த அலங்காரத்துக்கு, இன்னிசையளபெடை என்று பெயர். வினையாலணையும்பெயரென்பர். செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுக்குஞ் சொல்லில் “உ” எனும் உயிரெழுத்து இருக்கும். அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.‘அளந்ததூஉம்’ என்ற தொடரில் “து” எனும் குறில் “தூ” என நெடிலாகி அளபெடுத்துள்ளது.  #காமரு  என்னும் உரிச்சொல் உகரச்சாரியை பெற்று ‘காமரு’ ஆயிற்று.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    28.10.2012

    சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/247713.jpg

     

    Share
  • மாணவர் தளம்: தமிழார்வம்

     

    இன்னம்பூரான்

    1.முகவுரை


    1.1. இன்று விஜயதசமி. வித்யாரம்பத்திற்கு உகந்த சுபதினம். துவஜாரோகணம். கொடியேற்றத்துடன் துவங்குவோமாக.

    1.2. மாணவர்கள் படிக்கும்போது குறிப்பு வைத்துக்கொள்வது நல்ல பழக்கம். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அந்த நல்ல பழக்கத்தின் அடுத்த கட்டம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினால், இந்த பயிற்சி மேன்மை பெறும். அதற்கு எல்லை என்பது இல்லை. தொடுவானம், நெருங்க நெருங்க, எட்டக்கூடாமல் நகருவதைப் போல், கற்றுக்கொள்வதற்கு விண்மீன்களை போல கணக்கற்ற விஷயங்கள் உளன. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு. வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது, கல்வி ஒன்றே. ஏன்? அதற்கு பின்னும் கல்வியின் அரும்பணி தொடருகிறது. அதனால் தான் 2012ல் கம்பனுக்கு விழா எடுக்கிறார்கள். இந்த எல்லை கடந்த யாத்திரையை ‘தமிழார்வம்’ துவக்கி வைப்பது ஒரு நன்நிமித்தமே.  

    1.3. தமிழ் மொழி தொன்மையானது. அதனுடைய இலக்கியத்தின் எழிலும், இலக்கணத்தின் கட்டுக்கோப்பும், வழுவமைதியும், நீதி நூல்களின் நன்கொடையாகிய நன்னெறியும் நம் தாய்மொழியாகிய தமிழுக்கு ஒளி வட்டமாயின. காப்பியங்களின் விசால தளங்களும், இயல், இசை, நாடக கலைகளின் கவின் வசீகரமும், பக்தி இலக்கியத்தின் ஆழமும், அதற்குக் கட்டியம் கூறின. பரண்களில் தூங்கிய ஏட்டுச்சுவடி கருவூலங்களும், சி.வி.தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா போன்ற சான்றோர்களின் திருப்பணியால், அச்சுக்கு வந்தன. தமிழார்வலர்களின் உழைப்பினால், இன்று பல நூல்கள் மின் கருவூலங்களில் சேகரிக்கப்படுகின்றன.

    1.4. நூறாண்டுகளுக்கு முன்னால், குடத்திலிட்ட தீபம் போல் ஆங்காங்கு தமிழ் மணம் பரப்பிய புலவர் பெருமக்கள் பலர். அவர்களின் தமிழ்த்தொண்டு, தமிழன்னைக்கு மாலை மரியாதை செய்து, வணங்கியது. குருகுலவாசமும், திண்ணைப்பள்ளிக்கூடங்களும், அணி வகுத்து, அவளை ஆராதித்தன. அதற்கு பின் வந்து நூதனமாக வந்த தமிழ் உரை நடை, நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்ணமாகவும், விரைவாகவே வளர்ந்தது.

    1.5. செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.     நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.

     

    1.6. ‘மாணவர் தளத்தில்’ இயல்பாகவே குற்றம் குறைகள், தவறுகள் இருக்கலாம். திசை மாற்றாமல் அவற்றைக் களைந்தும், மேலதிக விவரங்களை அளித்தும், மேன்மை படுத்துவோர்க்கு என் நன்றி உரித்ததாகுக.

    1.6. அடுத்து வருவது, முதலாவதாக மூலிகைத்தமிழ்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    24 10 2012

    *

    அனுபந்தம் :மாணவர் தளம்: தமிழார்வம்

    புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றிலிருந்து:

    ‘தமிழியல் ஆய்வானது இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, தொல்லியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பன்முகத்தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தமிழியல் ஆய்வுகள் என்பவை இப்பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் நடைபெறுகின்றபோதிலும், அவை தனித்தனி தீவுகளாகவே இருந்துவருகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து வேறு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் பெரும்பான்மையினருக்குப் போதிய அறிமுகம் இருப்பதில்லை. சமகால ஆய்வுப் போக்குகள் குறித்து பரஸ்பர புரிதல் இல்லாத சூழலே இன்றளவும் தமிழியல் ஆய்வுலகில் நிலவிவருகிறது. அவ்வாறான புரிதலை வளர்த்தெடுப்பதற்கான அக்கறையும் அரிதாகவே காணப்படுகிறது.

    ஒரு பொருண்மை குறித்து முன்னர் நடைபெற்ற அல்லது சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுகள், அவற்றில் பின்பற்றப்படும் ஆய்வு முறைமைகள், ஆய்வு முடிவுகள் என இவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாத சூழலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். மாறாகச் சமகால ஆய்வுப் போக்குகளை உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வானது ஆய்வுப் பொருண்மை குறித்த புரிதலை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்வதாக அமையும்.

    பலதரப்பட்ட பொருண்மைகளில் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பான தங்களது கருத்துகளை, ஆய்வு முறைமைகளை, ஆய்வுலகில் சந்திக்கும் சிக்கல்களை இன்ன பிறவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வெளியை உருவாக்குவது இன்றைய தமிழியல் ஆய்வுலகில் அவசியத் தேவையாக உள்ளது. இத்தகு வாய்ப்புகளை ஆய்வாளர்களுக்கு உருவாக்கித்தருவதன் மூலம் அவர்களது சிந்தனையையும் ஆய்வு தொடர்பான புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும்.

    தமிழியல் ஆய்வுலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தங்களுக்குள் ஆய்வு தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழியலின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் ஒரு களத்தை அமைத்துத்தருவதாகக் கருத்தரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கருத்தரங்கை முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்படுகிறது.’

    Retrieved with thanks,on October 24, 2012 and acknowledging their copyright, from

    http://www.ifpindia.org/Research-in-Tamil-Studies-A-Platform-for-Dialogue.html

    சித்திரத்திற்கு நன்றி: http://img129.imageshack.us/img129/7631/tamil3qe.gif

    ===================================================================

     

     

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 14

    இன்னம்பூரான்

    அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே. இன்று (அக்டோபர் 5, 2012) இங்கிலாந்தில் பல வருடங்களாக நிலுவையிலிருந்த வழக்கு ஒன்றில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு இங்கு அலசப்படவில்லை. அந்த வழக்கின் போக்கும், தீர்ப்பின் தன்மையும் மட்டுமே அலசப்படுகின்றன, நமக்குப் பல படிப்பினைகள் இருப்பதால். மனித உரிமையின் சிக்கலான, பல பரிமாணங்களை முன்னெடுத்து வைக்கும் இந்த வழக்கில் விண்ணப்பதாரர்கள் ஐவர். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே உள்ள உடன்பாட்டுக்கிணங்க, இவர்களை, அங்கு நீதி மன்றம் முன் நிறுத்த வேண்டி, அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பாக ஒரு வேண்டுகோள். மனித உரிமை பறி போகிறது. எங்களை அங்கு அனுப்பக்கூடாது என்று ஐவரின் தனித்தனி விண்ணப்பங்கள். ஒரு வழக்கு 14 வருடமாக நடக்கிறது; மற்றொன்று 13 வருடங்களாக. சாற்றப்பட்ட குற்றங்கள் தீவிரமானவை: 1. கிழக்காப்பிரிக்காவில் இரு அமெரிக்கத் தூதரகங்கள் மீது நடந்த தாக்குதலில் 200 பேர் மரணம்;4500 பேர் காயம். 2. யேமன் நாட்டில் சிலரை அபகரிப்பது, அமெரிக்காவின் ஆரகன் மாநிலத்தில் ஒரு பயங்கரவாதி மையம் அமைப்பது போன்ற செயல்கள். 3. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இணைய தளங்கள் மூலமாக பயங்கர வாதத்திற்கு நிதி திரட்டுவது. அது எல்லாம் ஒருபுறமிருக்க, மனித உரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கண்கூடு.

    பதினான்கு பக்கங்களுக்குள் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பின் சாராம்சம், வழக்குகளின் வரலாறு, மனித உரிமை பற்றி இங்கிலாந்து கோர்ட்டுகளிலும், ஐரோப்பிய உயர்நீதி மன்றத்திலும், அமெரிக்க கோர்ட்டுகளிலும் நடைபெற்ற விவரங்கள், தீர்ப்புக்கள், சாட்சியம், மனித உரிமை நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் தெளிந்தோடும் பளிங்கு நீர் போல், துல்லியமாக அலசியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

    ஐந்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. ஏன் என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கையும், தீர்ப்பையும், இன்று நான் எடுத்துக்கொண்டதின் காரணம், ‘அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே’ என்ற கருத்து.
    *

    தீர்ப்பின் நகலைப் படிக்க…

     

    புகைப்படத்துக்கு நன்றி:

    http://rpmedia.ask.com/ts?u=/wikipedia/commons/thumb/1/1a/Royal_Coat_of_Arms_of_the_United_Kingdom_(HM_Government).svg/115px-Royal_Coat_of_Arms_of_the_United_Kingdom_(HM_Government).svg.png

     

    Share
  • நோபெல் திருவிழா ~ பகுதி-2

    இன்னம்பூரான்

    09 10 2012 ( 11 மணி 49 நிமிடம் 34 வினாடி 8756.78 துகள்)

    பெளதிக உலகினிலே வினாடித்துளிகளில் அரிய நிகழ்வுகள் நிறைவேறி விடுகின்றன. கண்மூடிக்கண் திறக்கும் வினாடியை தொல்காப்பியம் ஒரு மாத்திரை என்று குறிக்கும். அதற்குள் பல்லாயிரம் வினாடித்துளிகள்! ஆகையினால் தான் க்வாண்டம் ஃபிஸிக்ஸ் எனப்படும் நுண்துகள் பெளதிகம், பழங்கால பெளதிகத்தின் எல்லைகளை, அனுமார் சமுத்திரத்தைத் தாண்டியமாதிரி, ஒரே தாவலில், கடந்து விட்டது. இந்த பீடிகை எதற்கு எனில், இன்றைய விஞ்ஞானம், பெளதிகத்திக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட வினாடியிலேயே, அதை பிரசுரிக்க வழி வகுத்துள்ளதை மெச்சுவதற்குத்தான்.

    அந்த பரிசு ஸெர்ஜெ ஹரோஷ் (Serge Haroche) என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானிக்கும், டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் (David J. Wineland) என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கும், தனித்தனி நுண்துகள் படைப்புகளை அளந்து, மாற்றியமைக்கக்கூடிய பரிசோதனை வழிமுறைகளை முன்னிறுத்தியதற்காக, இருவருக்கும் சமபங்கில் அளிக்கப்படுகிறது. (for ground-breaking experimental methods that enable measuring and manipulation of individual quantum systems”.). அவற்றை விஞ்ஞானத்தின் அடித்தளத்தையே புரட்டியெடுக்கும், வரலாறு காணாத பரிசோதனை வழிமுறைகள் என்று நோபெல் கமிட்டி புகழாரம் சூட்டி வாழ்த்தி இருக்கிறது. அதில் ஆச்சரியம் யாதெனில், இருவரும், அவரவர் போக்கில், அவர் ஒரு புறம், இவர் ஒரு புறமாக, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார்கள். அவர்களின் புத்தம்புதிய வழிமுறை, அந்த நுண்துகள்களை சோதிக்க/கட்டுப்படுத்த/ எண்ண உதவுகிறது. அந்த நுண்துகள்கள் ஒரு வினாடிக்குள் எண்ணற்ற முறைகளில் மாறி வருபவை. அந்த சிக்கலை இவர்கள் இருவரும் கையாண்ட திறன், அபாரம். இருவரின் வழிமுறைகளில் ஒப்புமை மிக இருந்தாலும், அவற்றின் திசைகள் எதிர்துருவங்கள். டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் மின்சாரம் புகுத்தப்பட்ட நுண்துகள்களை, ஒளியின் உதவியால் (‘light or photons’) இற்செறித்து, கட்டுப்படுத்தி, அளந்தார். ஸெர்ஜெ ஹரோஷ், எதிர்மாறாக, இற்செறிக்கப்பட்ட துகள்களை (atoms/ions) ஒரு ‘கூண்டுக்கிளி’ போல் புகுத்தி அடைத்தபின் கட்டுப்படுத்தி, அளந்தார்.

    அந்த நுண்துகள்களை அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்து தனித்துக் காண இயலாது. அவை தத்க்ஷணமே, தன்னுடைய அதிசய குணாதிசயங்களை, நம்ப முடியாத வகையில் (bizarre) இழந்து விடுகின்றன. அவை துரிதமாக இப்படி அழிவதற்கு முன்னால், ‘நீ பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம்’ என்ற புதிய பாதையில் சோதிக்கும் வழி மகத்தானது. இங்கு தான் நேற்றைய பெளதிகம் பத்தாம் பசலியாக போய்விட்டது. அதனுடைய விதிகள் இங்கு செல்லாது.

    இருவருமே, 1980லிருந்து ஆராயப்படும் நுண்-பெளதிகத்தில் ஆழங்கால் பதித்து அல்லவா, இந்த புதிய பாதையை அமைத்துள்ளனர். அதனுடைய நல்வரவாக, புரட்சிகரமான ஸூப்பர்-கணினி ஒன்றை உருவாக்கமுடியும். அது நமது வாழ்வியலை தடபுடலாக, நாம் தட்டச்சு செய்யும் கணினி நம் வாழ்க்கையை கிட்டத்தட்ட பற்பலமுறைகளில் மாற்றி விட்டது. மாற்றி வருகிறது. அதை விட தடபுடலாக, இந்த ஸூப்பர்-கணினி நம்மை கட்டியாளும் என்பதில் ஐயமில்லை. அதா அன்று. இனி, நாம் மிக மிக துல்லியமான கடியாரங்களை படைக்கமுடியும். நேரத்தை அளப்பதே ஒரு புது விஞ்ஞான துறையாக அமைந்து, நமக்கு உதவலாம். அல்லது பாடாய் படுத்தாலும்.

    ‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே!

    படத்துக்கு நன்றி:

    http://www.kva.se/Global/Bilder_priser/Nobel/2012/fysik/nobel_fysik_2012_200.gif

    Share
  • நோபெல் திருவிழா ~1

     

    இன்ன்ம்பூரான்

    2012 வருட நோபெல் பரிசு திருவிழா இன்று தொடங்கியது. இனி சில நாட்களுக்கு, நாள்தோறும் களைகட்டும். வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இவ்வருட பரிசுகளிலிருந்து ஆரம்பித்து, நோபெல் மஹாத்மியத்தை, சுருக்கமாக, கூறுவதாக உத்தேசம். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்கு விஷயம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று ஒரு அசரீரி கூறுகிறது. வாசகரோ ரக்ஷது.

    இவ்வருட மருத்துவ/உடலியல்(Physiology or Medicine) பரிசு இருவருக்கு:  டாக்டர்  ஸர் ஜான் பி.கார்டன் (கேம்ப்ரிட்ஜ்: இங்கிலாந்து) & டாக்டர் ஷின்யா யாமானகா (க்யோட்டோ: ஜப்பான் & க்ளாட்ஸ்டன் நிறுவனம், சான் ஃப்ரான்சிஸ்கோ)  மூன்றாவது பங்கு கொடுக்கப்படவில்லை. முன்னோடிகளான ஜேமி தாம்சனையும், ரூடி ஜேய்னிஸ்சையும் ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வரும் முன் காப்போன் சிக்கனமாக இருக்கலாம். காலம் கெட்டுக்கிடக்கிறது அல்லவா! இந்த பரிசுகளிலேயே ஐந்தில் ஒரு பங்கு குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். வட்டி வருமானம் மிகவும் குறைந்து விட்டதாம். பரவாயில்லை. அப்படி குறைந்தாலும், பரிசின் மதிப்பு $ 1.2 மிலியன்.

    ஸர் ஜான் தான் செயற்கையாக உயிரூட்டும் வித்தையின் தந்தை. முதல் படைப்பு ஒரு தவளை. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு, (1962: டாக்டர். யாமனாகா பிறந்த வருடம்) இப்போது பரிசு. அவர் இன்றைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

    ஸர் ஜானின் தவளை வந்த விதம் விந்தை. அவர் போட்டது ‘தூபம்’. தாந்தோன்றியாக வளர்ந்தது, தவளை, சுருக்கமாக சொன்னால். அது எப்படி நேர்ந்தது என்பது புரிய 44 ஆண்டுகள் பிடித்தன. 2006ல், டாக்டர் யாமானகா எலிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு, அந்த தவளை வளர்ந்த விதத்தின் சூட்சுமத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அந்த நான்கு மரபணுக் கண்ட்ரோல் புரதங்கள் (Myc, Oct4, Sox2 and Klf4.). அவை வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றும் பணியை செய்தன. இது ஒரு விஞ்ஞானப் புரட்சி.

    ஒரு வேடிக்கையான கொசுறு தகவல்: ஸர் ஜானின் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் அவருக்கு சுட்டுப்போட்டாலும் விஞ்ஞானம் வராது என்று கொளுத்திப் போட்டார்! அந்த ஜான் சிறுவனும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ஆழ்ந்து விட்டான். இருந்தாலும், வண்ணத்துப் பூச்சிகளின் வண்ண அழகில் மனதை பறி கொடுத்து,1956ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புழு, பூச்சி ஆராய்ச்சியில் புகுந்தார். விஞ்ஞானத்தின் அறைகூவல் அவ்வாறு அவரை பிடித்திழுத்து வைத்துக்கொண்டது.

    டாக்டர் யாமனாகோ ஒரு எலும்பு டாக்டர். டாக்டர் வேலை தனக்கு ஒவ்வாது என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்ட அவர் தன் திறனை இந்தப்பக்கம் திருப்பினார். அமெரிக்கா வந்தார். சாதனை படைத்தார். அவரை ஊக்குவித்தது, டாக்டர் சுசுமு டோனெகவா என்ற மற்றொரு நோபலர் (1987). அவரைப் பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. நோபெல் பரிசு வந்த விதமே ஒரு காதை. இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    ஸர் ஜான் கர்டனுக்கும், டாக்டர் யாமனாகோ அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    Share