“யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்
இன்னம்பூரான்
வாலி மோக்ஷம் மிகவும் உருக்கமான நிகழ்வு; ஷைலஜாவின் கருத்தை அசைப்போட்டுக்கொண்டே படுத்தேன், நேற்றிரவு. இன்று அதிகாலை தரிசனம்: ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம். எழுதத்தொடங்கினால், ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அரிய தமிழ் உரை ஒன்று வந்து போனது. (இன்று இணையதள சிக்கல்கள், சில.) ராமாயணம் என்றுமே அதிசயப்படுத்தும். அநேக வீடுகளில் தினந்தோறும் பக்தியோடு ராமாயண படனம் உண்டு. மனம் கலங்கினால், ராமாயனத்திலிருந்து ஏதோ ஒரு பக்கம் எடுத்து படித்தி ஆறுதல் நாடுவதும் உண்டு.
தொடக்கத்திலிருந்தே வாலி ராமபக்தன். அவனுக்கு பகையாக ராமன் -சுக்ரீவன் உடன்படிக்கை செய்ததை எப்படியோ தாரை ‘…நெடுந்துணை உடைமையால்…’ என்று மோப்பம் பிடித்து விடுகிறாள். வாலியை ‘துன்னிய அன்பினர் சொல்லினார்…’ என்று மென்மையாக எச்சரிக்கிறாள். ராமபக்தனுக்கு சினம் பொங்கியது. பெண்புத்தி பின்புத்தி என்று சினந்தான். ‘…வாலியின் கண் வரும் தீயிடை, தன் நெடுங்கூந்தல் தீகின்றாள்…’ என்று கம்பன் சொல்கிறார். கோபம் கொப்பளிக்க, கொப்பளிக்க, வாலியின் கண்களிலிருந்து தீ பறக்கிறது. அதில் கருகிப்போகிறது, தாரையின் கூந்தல். ஐயகோ! ஒரு பெண்ணின் கூந்தல் கருகினால், அது தீநிமித்தம் அல்லவோ!
‘…உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம், இழைத்தவர்…’, ‘இருமையும் நோக்கும் இயல்பினான்…’, அவனுடைய ‘…ஆறுடை தர்மம் தன்னைத்தான் தவிர்க்குமோ? தன்னைத்தான் அரோ!..’, ‘…புன்தொழில் குரங்கோடு புணரும் நட்பனோ?…’, ‘…அம்பு இடை தொடுக்குமோ? அருளின் ஆழியான்…’ என்றெல்லாம் இராமனின் நற்குணங்களை பாராட்டி, தாரைக்கு சமாதானம் கூறுகிறான். இராமபாணம் துளைத்து வீழ்ந்த பின், ‘…இதுவும் தான் ஓர் ஓங்கு தர்மமோ?…’ என்ற வினா அவனுள் எழுகிறது. அப்போது தான் வாலிக்கு ஆண்புத்தி பின்புத்தி என்ற தெளிவு பிறக்கிறது.
(தொடரும்)
இன்னம்பூரான்
31 10 2012