Tag: எம். ஜெயராம சர்மா

  • உதவி நிற்போம் !

            –எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

              மாண்டவர் கணக்கை எண்ணில்
              மனமெலாம் கலங்கு திப்போ
              மீண்டவர் வாழ்வு கூட
              வீதியில் நிற்றல் ஆச்சே!

              ஆண்டவன் கணக்கில் யாவும்
              அப்போதே இருக்கு என்று
              தோன்றிடும் வண்ணம் பேசும்
              துடுக்கினைக் கேட் கின்றோமே!

              இயற்கையின் சீற்றம் வந்து
              இரக்கத்தை எடுத்து விட்டுத்
              துயரெனும் பரிசைத் தந்து
              துவம்சமே செய்த தங்கே!

              நேபாள மக்கள் வாழ்வில்
              நீண்டதோர் துயர ஆறு
              ஓடிய செயலைக் கண்டு
              உலகமே பதறிப் போச்சு!

              துன்பத்தில் ஆழ்ந்து நிற்பார்
              துயரெலாம் துடைக்க வேண்டும்
              அன்புடன் ஒன்று சேர்ந்து
              அனைவரும் உதவி நிற்போம் !

    Share
  • கைகூப்பிக் கேட்கின்றேன் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம்
    அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம்
    இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை
    இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை

    அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள்
    பழுதெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள்
    கொழுகொம்பு போலவள் கோலாமாய்க் கொண்டிடுவாள்
    முழுவுலகில் அன்னையைப்போல் முன்னிற்பார் யாருமிலர்

    அன்னையவள் அடிதொழுதால் அனைவருக்கும் ஆனந்தம்
    அன்னையினை ஆலயமாய் அனைவருமே எண்ணிடுவோம்
    ஆருமற்று நிற்கின்ற அவலம்தனைக் காணாமல்
    அன்னையினைப் போற்றுதலே அவர்க்காற்றும் அருந்தொண்டே

    காப்பாற்றி நின்றவளைக் காப்பகத்தில் விட்டுவிட்டுக்
    கண்துடைக்கக் கொண்டாட்டம் கனவானே செய்யாதீர்
    கண்ணுக்குள் மணியாகக் காத்துக்காத்து வளர்த்தவளைக்
    கண்கலங்கச் செய்யாதீர் கைகூப்பிக் கேட்கின்றேன் !

     

    Share
  • மறுபடிநீ வரவேண்டும் !

      -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

        மிடுக்கான பார்வையுடன்
        மீசைவைத்த பாரதியாய்த்
        துடுக்காக எழுதிநின்ற
        துணிவான எழுத்துமன்னா!                               Jeyakantan_Tamil_Author

        அடுக்கடுக்காய்ப் பலதந்தாய்
        அனைவரையும் இழுத்துவைத்தாய்
        வெடுக்கென்று பேசிடினும்
        விதம்விதமாய்ச் சொன்னாயே!

        உன்னெழுத்தை விஞ்சுதற்கு
        உள்ளாரோ எழுத்தாளர்?
        மண்ணுலகில் உயிர்பெற்று
        மறுபடிநீ வரவேண்டும்!

        தமிழெழுதி தமிழெழுதி
        தலைநிமிர்ந்து நின்றாயே
        தமிழுலகம் இப்போது
        தலைவணங்கி நிற்கிறது !

       ஜெயகாந்தா மறைந்தாயா?
       நினைக்கவே முடியவில்லை
       ஜெயம்தந்த ஜெயகாந்தா
       நீஎன்றும் வாழுகிறாய் !
       

    Share
  • இறைவனையே எண்ணவைத்தார் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    இசைபாடி எமையெல்லாம்
    இறைவனையே எண்ணவைத்தார்
    அசையாத மனத்தையெல்லாம்
    அவர்பாடி அசையவைத்தார்!

    தனியான குரல்வளத்தால்                         NagoorHaniffa
    தரணியிலே உயரநின்றார்
    தரமாகத் தமிழ்பாடி
    உரமானார் தமிழிசையில்!

    நாகூரில் பிறந்தகுரல்
    நாடெங்கும் ஒலித்ததுவே
    கூவுகின்ற குயில்கூட
    நாகூரை நினைக்கிறதே!

    நாகூரின் நாயகனே
    நீயெங்கே போய்விட்டாய்?
    நாடுள்ளோர் உன்பாட்டால்
    நாளுமுனைத் தேடுகிறார்!

    காசுக்காய்ப் பாடாது
    கடவுளுக்காய்ப் பாடிநின்றாய்
    தேசமெலாம் இப்போது
    தேடுதையா உன்முகத்தை!

     

    Share
  • சகலருமே வேண்டிநிற்போம் !

            -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

            மன்மத வருடமதை மனமகிழ வரவேற்று
            துன்மதி போயிடவே துதித்துமே கடவுளைநாம்
            பன்முறை வணங்கிநின்றால் பலநன்மை வந்துவிடும்
            என்னினிய நண்பர்காள் இவ்வண்ணம் செய்திடுவீர் !

            புதுவருடம் எமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடட்டும்
            எமதுளத்தில் என்றென்றும் எழுந்திடட்டும் நல்லெண்ணம்
            தமதுயிரால் எமைவாழ வைத்துநிற்கும் பெரியோரைத்
            தானினைத்து அவர்பாதம் தனைவணங்கி நிற்போமே !

            நல்லவைகள் ஆற்றவெண்ணி நாமென்றும் நினைத்திடுவோம்
            அல்லவைகள் புறந்தள்ளி உள்ளமதைத் திருத்திடுவோம்
            உள்நுழையும் கள்ளமெலாம் உருக்குலையச் செய்துநிற்போம்
            நல்லவரின் அறிவுரையை நாம்கேட்டு நடந்திடுவோம் !

            கோவில்சென்று கும்பிடுவோம் குறையகல வேண்டிடுவோம்
            கோபமெனும் கொடுநெருப்பைக் குளிர்விக்க முயன்றிடுவோம்
            சாபமிடும் பேய்க்குணத்தை சம்காரம் செய்திடுவோம்
            சன்மார்க்கம் மனத்திலெழ சகலருமே வேண்டிநிற்போம் !

    Share
  • பெம்மானை வணங்கிடுவோம்!

         –எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

         சித்திரையின் பின்னாலே
         சிறப்பெல்லாம் வருமென்று
         பக்குவமாய்ப் பஞ்சாங்கம்
         பார்த்திடுவோம் யாவருமே!

         பஞ்சாங்கப் பலன்தன்னைப்
         பலபேரும் பார்த்துவிட்டு
         நெஞ்சார மகிழ்ந்தாலும்
         சிலநெஞ்சம் மகிழாது!

         பரிகாரம் செய்துவிடின்                                  Nataraja
         பலன்சிறந்து விடுமென்று
         பலன்குறைந்த நெஞ்சத்தார்
         பலவற்றைச் செய்திடுவார்!

         பூசைகள் பலசெய்வார்
         புதுவழிகள் பலபார்ப்பார்
         ஆசையால் உந்தியவர்
         காசையெல்லாம் செலவிடுவார்!

        சித்திரையை யாவருமே
        சிறப்பாக வரவேற்போம்
        சிக்கலெலாம் போகவேண்டிச்
        சிரத்தையுடன் செயல்படுவோம்!

        புத்தாடை உடுத்திடுவோம்
        புத்துணர்வு பெற்றிடுவோம்
        மொத்தமுள்ள நல்லவற்றை
        முழுமையுடன் செய்திடுவோம்!

        சித்திரையின் பின்னாலே
        சீராகும் எனும்நினைப்பால்
        அத்தனை பேருள்ளமுமே
        சித்திரையைக் கொண்டாடும்!

        வாசலிலே கோலமிட்டு
        வரவேற்போம் சித்திரையை
        நீதிநெறி தனைமனதில்
        நீங்காது தேக்கிவைப்போம்!

        தாய்தந்தை மனங்குளிரத்
        தாள்பணிந்து நின்றிடுவோம்
        பேய்மனத்தை ஒழிப்பதற்குப்
        பெம்மானை வணங்கிடுவோம்!

     

    Share
  • குணம் எமக்கு மாறவில்லை!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    காசெல்லாம் செலவு செய்து
    கடவுளை நாம் வணங்குகிறோம்
    நீசக்குணம் போயிட  நாம்
    நினைத்து என்றும் பார்த்தோமா?

    ஆசைவார்த்தை கூறி நின்று
    அனைவரையும் மடக்கு கின்றோம்
    அல்லல் பட்டு நிற்பவரை
    அரைக்கணம் நாம் பார்த்ததுண்டா?

    மோசடிகள் பல செய்து
    முழுவதையும் சுருட்டு கின்றோம்
    காசில்லா நிற்கும் அவர்
    கஷ்டமதை பார்த்த துண்டா?

    ஊரில் உள்ள அத்தனையும்
    காரில் சென்று விலைபேசி
    நீதிநெறி தனை  மறந்து
    தாறு மாறாய் வாங்குகின்றோம்!

    வாரி வாரிச் சுருட்டுகின்றோம்
    வயிற்றில் எல்லாம் அடிக்கின்றோம்
    சாமியையும் விலை பேசிச்
    சந்தை தனில் விற்கின்றோம்!

    கோயில் சென்று வந்தாலும்
    குணம் எமக்கு மாறவில்லை
    பாவிகளாய் இருப் பார்க்குப்
    பணம் இருந்தும் என்னபயன்?!

     

    Share
  • அடங்கினால் நன்மை அன்றோ !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
    பருகத் தந்த அம்மா
    காலைத் தூக்கிக் கண்ணில்வைத்து
    கட்டிக் கொஞ்சிய அம்மா
    வேலைவேலை என்று சொல்லி
    வெளியில் தினமும் போனால்
    பாலகரின் நிலையைச் சற்றுப்
    பார்த்தல் நன்று அன்றோ!

    வேலைக்கார அம்மா வந்து
    வீட்டைப் பொறுப்பு எடுப்பார்
    பாலைக் காய்ச்சும் அம்மாவப்போ
    படுக்கை விட்டு எழுவார்
    ஓடியெழுந்து  அங்கு வந்து
    உடையை எடுத்து மாட்டி
    ஓடிடுவாரே காரை நோக்கி
    உரத்துக் கத்திக் கொண்டே!

    ஆடியாடி ஐயா வந்து
    அரை குறையாய் நின்று
    ஆங்கிலத்தில் முணு முணுத்து
    அங்கு மிங்கும் திரிவார்
    மேசையிலே வைத்த ரொட்டி
    மெது மெதுவாய் ஆறும்
    வெளியில் செல்ல வந்த ஐயா
    வெறுப்புக் கொண்டு முறைப்பார்!

    வேலைசெய்ய வந்த  அம்மா
    மூலை ஒதுங்கி நின்று
    வாலைச் சுருட்டும் நாயைப்போல
    மெளனம் ஆகி நிற்பார்
    சத்தம்போட்டு சத்தம் போட்டு
    காரை எடுக்கும் ஐயா
    சப்பாத்தை விட்டு விட்டுச்
    சலித்துக் கொண்டே செல்வார்!

    தூங்கியெழுந்த பிள்ளை அங்கு
    துவண்டு வந்து நின்று
    தாங்க வொணாத் தாகத்தோடு
    தாயை நினைந்து நிற்கும்
    வேலைக்கார அம்மா அங்கே
    விரைந்து வந்து நின்று
    பாலைக் கையிற் கொடுத்துவிட்டுப்
    பருகு என்று சொல்வார்!

    பாலைப் பருக விருப்பமின்றி
    பார்க்கும் ஒரு பார்வை
    வேலைக் கார அம்மாவுக்கு
    விசரை ஊட்டி நிற்கும்
    கையைக் காட்டி கண்ணையுருட்டி
    பாலைப் பருக வைக்க
    வேலைக் கார அம்மாதானும்
    வேர்த்துக் களைத்துப் போவார்!

    பள்ளி செல்ல விருப்பமின்றி
    துள்ளி ஓடும் பிள்ளை
    கையைப் பிடித்து கூட்டிச்செல்ல
    களைத்துப் போவார் அவரும்
    மெல்ல ஏதும் சொல்லிவிட்டால்
    விக்கி விக்கி அழுதே
    பள்ளிசெல்லும் பாதைவிட்டு
    தள்ளி ஓடி நிற்கும்!

    வீடுவந்து சேர்ந்த பின்னர்
    வெறித்து வெறித்து பார்த்துத்
    தாறுமாறாய் சேட்டை செய்து
    சண்டை செய்தே நிற்கும்
    கூறுகெட்ட பிள்ளை என்று
    குறைகள் கூறி நின்று
    கோபங் கொண்டு கையெடுத்து
    குட்டி நிற்பார் மீண்டும்!

    ஆறு மணி ஆனதுமே
    அம்மா வந்து நிற்பார்
    தாறுமாறாய் இருக்கும் வீட்டை
    தானே பார்த்துக் கொதிப்பார்
    வேலைக்கார அம்மா உடனே
    வேலை விட்டுச் செல்வார்
    வீட்டுக்கார அம்மா அப்போ
    விறகில் தீயாய் நிற்பார்!

    பிள்ளையை அம்மா பாரார்
    பேயெனக் கத்தி நிற்பார்
    பிள்ளையோ தாயைப் பார்த்து
    பெரும் பயம் கொண்டேநிற்கும்
    அள்ளியே அணைக்கும் பிள்ளை
    அலமந்து அங்கே நிற்கும்
    அனுதினம் நடக்கும் கூத்து
    அடங்கினால்  நன்மை அன்றோ !

     

    Share
  • அடியோடு புகை ஒழிப்போம்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வண்டி இழுப்பாரும் வயல்வேலை செய்வாரும்
    வாயிலே சுருட்டுவைத்து வகைவகையாய் புகைவிடுவார்
    சண்டித்தனம் செய்வாரும் சமையல்வேலை செய்வாரும்
    சளைக்காமல் சுருட்டதனை தம்பாட்டில் சுவைத்துநிற்பர்!

    வங்கிகளைப் பார்த்தாலும் வைத்தியரைப் பார்த்தாலும்
    அங்குமே சுருட்டுவகை அமோகமாய் இடம்பிடிக்கும்
    தங்கிநிற்போம் எனவெண்ணித் தனியாக மரமொதிங்கின்    cigar
    அங்கிருந்து பலபேரும் அமர்ந்திருந்து புகைத்துநிற்பர்

    பார்க்கிலும் புகைத்துநிற்பர் பஸ்ஸ்டாப்பிலும் புகைத்துநிற்பர்
    போக்குவரத்தில் எல்லாம் புகைவிட்டே கொன்றொழிப்பர்
    நீக்கமற புகைப்பதிலே நீள்சுகத்தைக் கண்டதனால்
    பார்க்குமிடம் எல்லாம் பயமின்றிப் புகைத்துநிற்பர்!

    பேருந்தில் ஏறியதும் பெரும்சிரிப்பைத் தந்தபடி
    பெரியதொரு பைக்கற்றைப் பிரித்துமே எடுத்திடுவார்
    வெள்ளையாய்த் தலைநீட்டும் வெண்சுருட்டை அணைத்தெடுத்து
    விதம்விதமாய் வாயில்வைத்து விட்டிடுவார் புகையனைத்தும்!

    ஊதிவிடும் புகையனைத்தும் உட்கார்ந்து இருப்போரின்
    மூக்காலே உட்புகுந்து மூச்சுக்குழல் வரைசெல்லும்
    உட்புகுந்த புகையாலே உபாதைகொண்டு நிற்போரை
    ஓரக்கண்ணால் பார்த்தபடி உறிஞ்சிநிற்பார் புகைவிட்டோர்!

    பணிமனைக்குச் சென்றாலும் பலபேரும் புகைத்துநிற்பார்
    பணிபார்க்க வருவோர்கள் தலைசுற்றி அங்குநிற்பார்
    துணிவாக எடுத்துரைக்க யாருமே வரமாட்டார்
    துணிவாகப் புகைவிடுவோர் பணிமனையை நிரப்பிடுவார்!

    புகைகக்கும் வண்டியிப்போது போயுமே நாளாச்சு
    புகைவிடுவோர் கூட்டத்தால் வண்டியிப்போ புகையாச்சு
    ஏறிவிடும் கூட்டமதை எவருமே பார்ப்பதில்லை
    தாறுமாறாய்ப் புகைவிட்டு தத்தளிக்கச் செய்துநிற்பார்!

    படித்தவரின் கைகளிலும் பாமரரின் கைகளிலும்
    அடுக்கடுக்காய்ச் சுருட்டுவகை அமர்ந்துமே இருக்கிறது
    நடிக்கின்றார் கைகளிலும் படம்பிடிக்கின்றார் கைகளிலும்
    நாகரிகச் சுருட்டுவகை நளினமுடன் அமர்கிறது!

    காலைமாலை பார்க்காமல் கணக்கின்றிப் புகைபிடிக்கும்
    காளையரின் மத்தியிலே கன்னியரும் சேர்ந்துகொண்டார்
    நாலுவேளை குடிப்பதற்குக் கஞ்சியின்றி இருப்பாரும்
    நரகமாம் சுருட்டதனை நாளுமே குடித்துநிற்பார்!

    பாடசாலை செல்வோரும் படிப்பிக்கும் ஆசானும்
    பாங்காகச் சுருட்டையெலாம் பைகளிலே வைக்கின்றார்
    கிடைக்கின்ற நேரமெலாம் எடுத்ததனைக் கையில்வைத்துத்
    துடுக்கெனவே வாயில்வைத்துத் துள்ளுநடை போடுகிறார்!

    மங்கலமாம் நிகழ்ச்சிகளில் வந்திருக்கும் பலபேர்கள்
    வாயிலே சுருட்டைவைத்து வட்டமாய்ப் புகைவிடுவார்
    அங்கிருக்கும் குழந்தைகளை அன்பான தாய்மாரை
    வந்திருக்கும் யாரையுமே மனத்திலவர் கொள்வதில்லை!

    நோயிலே தாய்படுத்து நூறுமுறை இருமிநிற்பார்
    பாயிலே தாயோடு பால்குடித்துத் தூங்கும்பிள்ளை
    யாரையுமே பொருட்டெனவே தன்மனதில் நினையாது
    வாயிலே சுருட்டோடு வலம்வருவார் அவ்வீட்டார்!

    இருமுகின்ற நோயாளி இருதயத்தைச் சோதிக்கும்
    எங்களது வைத்தியரும் இருமலுடன் சோதிப்பார்
    சோதித்த பின்னாலே துண்டெடுத்து மருந்தெழுதிச்
    சுவைத்திடுவார் சுருட்டதனைச் சுருண்டுநிற்பான் நோயாளி!

    நம்வாயில் சுருட்டிருப்பின் நாகரிகம் எனநினைப்பார்
    நலன்கெட்டுப் போகையிலே நாகரிகம் என்னசெய்யும்?
    நலன்வருமே எனவெண்ணி நாம்செய்யும் வேலையெலாம்
    நாளடைவில் நம்சுகத்தை நசுக்கியே விட்டுவிடும்!

    பலபோதைச் சரக்குகளைப் பதப்படுத்திக் கலந்தெடுத்துப்
    பற்பல உத்திகொண்டு பாங்காக உட்செலுத்தி
    விதம்விதமாய்ச் சுருட்டையெல்லாம் விளம்பரத்தின் ஊடாக
    விற்கின்றார் சந்தைகளில் விறுவிறுப்பு வெளிப்படவே!

    அதைவாங்கிக் குடிப்பவர்கள் அடிமை நிலைக்காளாகி
    வதைபட்டு வதைபட்டு வாழ்க்கையினை இழக்கின்றார்
    இதையாரும் உணராமல் இன்னுமே வாங்கிவாங்கி
    சிதையிலே போகும்படி சீரழந்தே நிற்கின்றார்!

    காலையிலே சுருட்டடித்தால் களைப்பெல்லாம் நீங்குமென்றும்
    வேலையிலே புகைவிட்டால் விறுவிறுப்பாய் இருக்குமென்றும்
    நாளதுமே எண்ணியெண்ணி நன்றாகப் புகைத்துவிடின்
    நாளாக நாளாக நம்முடம்பு படுத்துவிடும்!

    புகைப்பிடிக்கும் யாவருக்கும் பலநோய்கள் வருமென்று
    பொழுதெல்லாம் பிரசாரம் நடக்குதிப்போ நாடெல்லாம்
    புகைப்பிடித்தால் கேடென்னும் விளம்பரத்தை ஒட்டுபவர்
    புகைப்பிடித்தே ஒட்டுவதால் போதனையால் என்ன பலன்?

    குடியோடு புகையும்சேர்ந்து குடிகளை அழிக்குதென்று
    குடிகளே உணரும்போதே குடியோடு புகையும்போகும்
    துணிவுடன் எழுந்துவாரீர் தூயதைச் சமைப்போம்நாங்கள்
    அணியென ஒன்றுசேர்ந்து அகற்றுவோம் புகைத்தல்தன்னை!

    குடியோடு புகைசேர்ந்து குடியனைத்தும் குலைக்கிறது
    அடியோடு அதையொழித்து ஆனந்தம் பெற்றுநிற்போம்
     படுகுழியில் வீழ்த்துகின்ற பாதகனைக் களைந்தெறிந்தால்
    விடிவெள்ளி எம்வாழ்வில் விரைவெனவே தோன்றிவிடும்!

     

    Share
  • மணி ஓசை!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    மணி ஓசை கேட்டவுடன்
    மனமெல்லாம் மகிழ்கிறது
    துணி வெல்லாம் பிறக்கிறது
    தூயநிலை வருகிறது!

    மால்மருகன் கோவில் மணி                              temple bell
    மருந்தாக இருக்கிறது
    தோல்வி எலாம் தொலைகிறது
    துவண்டநிலை போகிறது!

    வேலவனின் கோவில் மணி
    வினையெல்லாம் போக்(கு)கிறது
    நால்வேதப் பொருளை எல்லாம்
    நயமாகத் தருகிறது!

    சிவனாரின் கோவில் மணி
    சீர்திருத்த முயல்கிறது
    அவமானச் செயல் எல்லாம்
    அதுபோக்க முயல்கிறது!

    மாதாவின் கோவில் மணி
    மனங்குளிர வைக்கிறது
    ஆதாரம் தான் எனவே
    அதுஒலித்து நிற்கிறது!

    விகாரையின் கோவில் மணி
    விண்ணென்று ஒலிக்கிறது
    வீண் வார்த்தை பேசுவதை
    விட்டுவிடு என்கிறது!

    கோவில்மணி ஓசை கேட்டால்
    குணமெல்லாம் மாறுமையா
    குவலயத்தில் நாம் வாழ
    கோவில்மணி உதவும் ஐயா!

    ஆதலினால் கோவில் தன்னை
    அனைவருமே நாடிநிற்போம்
    ஆண்டவனின் அருள் பார்வை
    அனைவருக்கும் கிட்டும் ஐயா!

     

    Share
  • வழிவகுத்தல் நல்லதல்ல !

           -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

           விண்ணதிர மண்ணதிர வெளிப்பட்ட விஞ்ஞானம்
           கண்ணெதிரே பலவித்தைக் காட்டிநிற்கும் விஞ்ஞானம்
           எண்ணிநாம் முடிக்குமுன்னம் இயக்கிநிற்கும் விஞ்ஞானம்
           மண்ணுலகில் மனிதனது வாழ்வோடு நிற்கிறது !

          பார்க்கின்ற இடமெல்லாம் பலநிலையில் விஞ்ஞானம்
          பலபேரின் சிந்தனைக்கு மெருகூட்டும் விஞ்ஞானம்
          ஆர்ப்பரிக்கும் கடலையே ஆராயும் விஞ்ஞானம்
          அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிநிற்கும் விஞ்ஞானம் !

          மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் விரைவாகப் பரவுதற்கு
          விஞ்ஞானம் தானிப்போ வித்தாகி நிற்கிறது
          அஞ்ஞானம் கொண்டோரின் அகந்தையைப் போக்குதற்கு
          விஞ்ஞானம் ஊடாக மெய்ஞ்ஞானம் விரைகிறது !

          கணனியெனும் சாதனத்தால் கருத்துக்கள் விரிகிறது
          நினைவிலுள்ள விஷயமெல்லாம் நினைத்தவுடன் செல்கிறது
          உலகிலுள்ள மனிதரிடம் ஓர்நொடியில் கருத்தையெல்லாம்
          உவப்புடனே கொண்டுசெல உதவுதிங்கே கணனியிப்போ !

          மேலோங்கும் விஞ்ஞானம் விந்தைபல புரிந்தாலும்
          நாமதனை நன்குணர்ந்து நல்லவழி காட்டவேண்டும்
          வீணான பாதைதனில் விஞ்ஞானம் போவதற்கு
          வாழ்நாளில் நாமென்றும் வழிவகுத்தல் நல்லதல்ல !

          பணம்பண்ணும் நோக்கமொடு பலபேரும் திரிகின்றார்
          பிணம்விற்றும் காசாக்கும் பித்தருமே வருகின்றார்
          தினம்தினமும் ஆராய்ச்சி தீயவரின் வசமானால்
          நமதருமை விஞ்ஞானம் நலனெல்லாம் இழந்துநிற்கும் !

     

    Share
  • தலைநிமிர்ந்தென்றும் வாழ்க !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்  

    மண்ணிலே நல்ல வண்ணம்
    வாழ நாம் வேண்டுமாயின்
    கண்ணிலே பெண்ணை வைத்துக்                       indian woman
    காத்திடல் வேண்டும் அன்றோ? 

    உண்டிடும் சோறும் ஆகி
    உணர்வுடன் கலந்து நின்று
    மண்ணிலே எம்மைக் காக்கும்
    மருந்துமே பெண்கள் தானே! 

    சிவனது பக்கம்தன்னில் உமையவள் இல்லாவிட்டால்
    அவனது சக்தியெல்லாம் அசைவிலா நின்றேபோகும்
    எமனது கையிற்பட்ட இன்னுயிர்க் கணவன்தன்னைப்
    புவிதனில் மீட்டுவந்த புனிதமும் பெண்மையன்றோ! 

    பாரதிகண்ட அந்தப் பக்குவம்வந்த பெண்ணை
    நாமெலாம் காணும்போது நமக்கெலாம் பெருமையன்றோ?
    ஊரெலாம் பெண்கள்வாழ்க உலகெலாம் போற்றவாழ்க
    தாரணிமீது பெண்கள் தலைநிமிர்ந் தென்றும்வாழ்க! 

    மங்கலம்தருவார் பெண்கள் மதியுமாயும் இருப்பார்பெண்கள்
    பொங்கிட இன்பம்தந்து பொறுப்புடன் இருப்பார்பெண்கள்
    இங்கிதம்தருவார் பெண்கள் எதையுமே பொறுப்பார்பெண்கள்
    எங்களின் வாழ்விலென்றும் இலட்சுமி பெண்கள்தானே!

     

    Share
  • ஆட்கொள்ள வேண்டும் ஐயா !

    -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    கரத்தினில் வேலும் கொண்டு
    அருமையாம் தமிழைக் காக்கும்              lord muruga
    அழகுடைக் கந்த வேளே
    உரிமையால் உன்னைப் பாட
    உவப்புடன் நிற்கும் என்னைக்
    கரிசனை கொண்டு நாளும்
    காத்திட வாரும் ஐயா !

    பாயிலே படுக்கா முன்னம்
    பன்னிரு கையா உன்னைக்
    காவியம் ஆக்கி நானும்
    கற்பவர்க் கீதல் வேண்டும்
    சேயென நினைத்து என்னைத்
    தினமுமே காக்க வேண்டி
    மாமயில் ஏறும் கந்தா
    மலரடி போற்று கின்றேன் !

    செந்தமிழ்க் கொண்டு நாளும்
    நின்றனைப் போற்ற வேண்டும்!
    வந்தஎன் வினைகள் போக
    சந்ததம் உதவு கந்தா!
    அந்தமில் உருவம் ஆனாய்
    அனைத்து மாய் நிற்கின்றாயே
    கந்தனே நாளும் என்னைக்
    காத்திட வேண்டும் ஐயா!

    ஆணவம் போக்கி என்னை
    ஆட்கொள்ள வேண்டும் ஐயா!
    அலைபாயும் மனத்தை நாளும்
    அடக்கிட வேண்டும் ஐயா!
    நாளெலாம் உந்தன் நாமம்
    நான் சொல்லி நிற்கவேணும்
    நீயெனக் கருள்வாய் ஐயா
    நித்தமும் கந்த வேளே !

     

    Share
  • மனநிலை தெளிய வேண்டும் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

     உரசல்கள் ஒழிய வேண்டும்
     விரிசல்கள் விலக வேண்டும்
     தெருதனில் தீய தெல்லாம்
     சிதறியே ஓட வேண்டும்!

    மொழியலை ஓய வேண்டும்
    முரணிலை ஒழிய வேண்டும்
    மருணிலை நீங்க வேண்டும்
    மனநிலை தெளிய வேண்டும்!

    அழிவுகள் அகல வேண்டும்
    அனைவரும் இணைய வேண்டும்
    தெளிவுகள் பிறக்க வேண்டும்
    சிறப்பெலாம் சேர வேண்டும்!

    சமயங்கள் யாவும் சேர்ந்து
    சமரசம் பேண வேண்டும்
    இமயமாய் உள்ள சிக்கல்
    இறந்துமே போக வேண்டும்!

    பெருமைகள் பேசி நிற்போர்
    பிதற்றலை விடவே வேண்டும்
    கருவதில் நல்ல எண்ணம்
    பெருகியே நிற்க வேண்டும்!

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் 

      ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல்
    ஏற்றம் பல பெற்றார்.இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால்
    என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.
    வாழவைத்த தெய்வமானார்.கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப் 
    பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

    images (7)

    அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம் பியதாகும்.அவர் தென்றலைத் தீண்டியதில்லை.தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை.பசியாற உண்டதும் இல்லை.அரைவயிறு,கால்வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டைவிட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது.தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார். பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது.பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியைவிட்டு நாடகத்துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது.வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது. எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன்  எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரா னார்.
    நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார்.1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான  ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள். 1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.

    இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம்.சாதாரண எம்ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளே- தான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார் .முரண்டு பிடிக்க மாட்டார். பரியாதை கொடுப்பார்.சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட்டார்.காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்து காணப்பட்டது. அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது.உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுக வில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும் … கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறை கூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.

    ” பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள்.மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை “ என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர்  திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார்.எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது
    கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள் …… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவையில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம்.இயலாத வர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.

    எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம்.அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக் கொள்ளுவாராம்.கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளமாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டு கிறார்.

    எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச்சிந்தனை இருந்து கொண்டே வந்திருக்கிறது. ஆனால் வெளியே அதனை விளம்பரப் படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது.இந்த ஆத்மீகபலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.

    நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு.அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத்தொடங்கினார்.எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.

    மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கினார்.காஞ்சிப் பெரியவரே எம்ஜிஆரை ” இவர் நல்லமனுஷன் ” என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்திகத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால்தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து …. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே ” பொன்மனச் செம்மல் ” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக்குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது அவிப்பிராயமாகும்.

    தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது , தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது …. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி அர்ச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம்ஜிஆரிடம் வந்து கொடுக்கிறார்.

    எம்ஜிஆரும் தேவர் கொடுத்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல் … அதனைவாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல
    எடுத்துக்காட்டுகள் அல்லவா ?

    பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும்.ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது.” முன்னேறியஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள்.அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும் “என்று எம்ஜிஆர் கூறினார்.ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கைதான்.
    கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.

    எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததேயார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !

    எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?
    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத்தொடங்கினார்.திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.
    திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்கு, இவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.
    ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.அதே வேளைதனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர்.ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது.பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை.அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?

    எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை.

    ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர் விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.

    அதற்கு வாலி சொன்னார்- அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக .. வாலிஅவர்களே கூறியிருக்கிறார்கள்.
    தனது கருத்தைச் சொன்னார்.ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவேஇருந்ததை யாவரும் அறிவர்.

    எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர்.ஒழுக்கமாக வாழ்ந்தவர்.ஏழ்மையை நன்கு அனுபவித்தவர்.வீடு இல்லாமல், படிக்கமுடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர்.இல்லாமை இல்லாமல் போகவேண்டும்.

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும்.ஏழைஎன்று சொல்லும் நிலை இருக்கவே கூடாது.கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் ,உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.

    அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.

    எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன்றினார்.வெற்றியும் கண்டார்.அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக்கொடுத்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய
    தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவனாக,சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய , யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள்,காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.

    இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.

    இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும் கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்களொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை.எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது. இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட .. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.

    எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது … அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து ..

    தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும்.மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.

    அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார்.தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை.எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞ்ஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை.நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது.அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.

    தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார்.கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார்.சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார்.

    அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார். எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கின்றார்.இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.

    மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது.எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது.எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.

    அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல.ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார்.அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறியவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.

    அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள்ளுவார்கள்.கலைஞ்ஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார்.

    எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதையே நினைப்பார்.தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை.அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.

    படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார்.அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்கள்.ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடைவள்ளல் எம்ஜிஆர் அவர்கள்.தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாமனிதர்மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தைவிடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.

    ” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

    நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு
    ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடிநடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக்காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.

    அதுமட்டுமல்ல .. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?

    குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை.

    ” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மையெல்லாம்உற்சாகப்படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்’ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” ” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்’ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டுகொண்டு இருக்கிறார் !

    Share