இலக்கியம்கவிதைகள்

அடங்கினால் நன்மை அன்றோ !

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
பருகத் தந்த அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில்வைத்து
கட்டிக் கொஞ்சிய அம்மா
வேலைவேலை என்று சொல்லி
வெளியில் தினமும் போனால்
பாலகரின் நிலையைச் சற்றுப்
பார்த்தல் நன்று அன்றோ!

வேலைக்கார அம்மா வந்து
வீட்டைப் பொறுப்பு எடுப்பார்
பாலைக் காய்ச்சும் அம்மாவப்போ
படுக்கை விட்டு எழுவார்
ஓடியெழுந்து  அங்கு வந்து
உடையை எடுத்து மாட்டி
ஓடிடுவாரே காரை நோக்கி
உரத்துக் கத்திக் கொண்டே!

ஆடியாடி ஐயா வந்து
அரை குறையாய் நின்று
ஆங்கிலத்தில் முணு முணுத்து
அங்கு மிங்கும் திரிவார்
மேசையிலே வைத்த ரொட்டி
மெது மெதுவாய் ஆறும்
வெளியில் செல்ல வந்த ஐயா
வெறுப்புக் கொண்டு முறைப்பார்!

வேலைசெய்ய வந்த  அம்மா
மூலை ஒதுங்கி நின்று
வாலைச் சுருட்டும் நாயைப்போல
மெளனம் ஆகி நிற்பார்
சத்தம்போட்டு சத்தம் போட்டு
காரை எடுக்கும் ஐயா
சப்பாத்தை விட்டு விட்டுச்
சலித்துக் கொண்டே செல்வார்!

தூங்கியெழுந்த பிள்ளை அங்கு
துவண்டு வந்து நின்று
தாங்க வொணாத் தாகத்தோடு
தாயை நினைந்து நிற்கும்
வேலைக்கார அம்மா அங்கே
விரைந்து வந்து நின்று
பாலைக் கையிற் கொடுத்துவிட்டுப்
பருகு என்று சொல்வார்!

பாலைப் பருக விருப்பமின்றி
பார்க்கும் ஒரு பார்வை
வேலைக் கார அம்மாவுக்கு
விசரை ஊட்டி நிற்கும்
கையைக் காட்டி கண்ணையுருட்டி
பாலைப் பருக வைக்க
வேலைக் கார அம்மாதானும்
வேர்த்துக் களைத்துப் போவார்!

பள்ளி செல்ல விருப்பமின்றி
துள்ளி ஓடும் பிள்ளை
கையைப் பிடித்து கூட்டிச்செல்ல
களைத்துப் போவார் அவரும்
மெல்ல ஏதும் சொல்லிவிட்டால்
விக்கி விக்கி அழுதே
பள்ளிசெல்லும் பாதைவிட்டு
தள்ளி ஓடி நிற்கும்!

வீடுவந்து சேர்ந்த பின்னர்
வெறித்து வெறித்து பார்த்துத்
தாறுமாறாய் சேட்டை செய்து
சண்டை செய்தே நிற்கும்
கூறுகெட்ட பிள்ளை என்று
குறைகள் கூறி நின்று
கோபங் கொண்டு கையெடுத்து
குட்டி நிற்பார் மீண்டும்!

ஆறு மணி ஆனதுமே
அம்மா வந்து நிற்பார்
தாறுமாறாய் இருக்கும் வீட்டை
தானே பார்த்துக் கொதிப்பார்
வேலைக்கார அம்மா உடனே
வேலை விட்டுச் செல்வார்
வீட்டுக்கார அம்மா அப்போ
விறகில் தீயாய் நிற்பார்!

பிள்ளையை அம்மா பாரார்
பேயெனக் கத்தி நிற்பார்
பிள்ளையோ தாயைப் பார்த்து
பெரும் பயம் கொண்டேநிற்கும்
அள்ளியே அணைக்கும் பிள்ளை
அலமந்து அங்கே நிற்கும்
அனுதினம் நடக்கும் கூத்து
அடங்கினால்  நன்மை அன்றோ !

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க