உலகத்தில் சிறந்தது தாய்மை …
–கவிஞர் காவிரிமைந்தன்.
எத்தனையோ பாடல்கள் எழுதப்படுகின்றன… எல்லாப் பாடல்களும் நம் நெஞ்சைத் தொடுவதில்லை… இதோ இந்தப் பாடல் நெஞ்சைத் தொடுவது மட்டுமல்ல… நெஞ்சில் நிறைகிற வகையைச் சார்ந்தது! அன்பின் தொடக்கம் அன்னையிடமே… இதை எந்தப் பிள்ளையும் மறப்பதில்லையே!
பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் நடைபெறும் போட்டிப் பாடல் ஒன்று தருகின்ற விளக்கங்கள் கேட்டுப் பாருங்கள்… முதலில் நாகேஷ் அவர்கள் வட்டிக்காக வாங்குகிற வக்காலத்து.. அட.. இது சரிதானே என்று சொல்ல வைக்கும்! அடுத்து வருகிற கே.ஆர்.விஜயா … காதலை முன்மொழிந்து சபையில் கரவொலி வாங்கும்போது… அட… ஆமாம் என்றே நமக்குப்படும்! முத்தாய்ப்பாக ஜெய்சங்கர் மேடையேறி… தாய்மைக்காக வாதிடுகிற ஒவ்வொரு வரியும் கோபுரவாசல்போல உயர்ந்துநிற்கும்! இத்தகு எளிமையான வரிகளிட்டு தாய்மைக்கு ராஜகோபுரம் கட்டிவைத்திருப்பவர் கவியரசு கண்ணதாசன்! ஆர். கோவர்த்தனன் இசையில்…. டி எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா மற்றும் ஏ.எல்.ராகவன் குரல்களில்…
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
காணத் துடிப்பது அது…
சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்தாலும்
இதயத்தில் இருப்பது அது…
இதயத்தில் இருப்பது அது.. .
அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
அகிலத்தின்பெருங்கதை அது
அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
ஆனந்த மாளிகை அது
உலகத்தில் சிறந்தது காதல்…
அந்தக் காதல் இல்லையே சாதல்…
உலகத்தில் சிறந்தது காதல்…
அன்பின் உன்னதம் எங்கு அதிகமாக மிளிர்கிறது என்று பார்க்கும்போது வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும்தான்… ஆனால் அது தாய்மையிலன்றோ கோவில் கொண்டிருக்கிறது!
உலகப் பொருளாதாரத்தின் மூலகாரணியாய் விளங்கும் பணம்… ஆதாம் ஏவாளில் தொடங்கி இன்றும் தொடரும் அற்புத உணர்வு காதல்… இவையிரண்டையும் மிஞ்சி நிற்கும் தாய்மை! பாட்டுமன்றத்தில்கூட ஒரு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பையும் இனிதே வழங்கியிருக்கும் பெருமை எல்லாம் கவியரசே உனக்கே கைவந்த கலை! உன் கவிதைகள்… பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்காக நீ வடித்த அர்த்தமுள்ள சொல்லோவியங்கள்!!
இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் …
தன் தாய் தனக்காக பட்டபாடுகள் நெஞ்சில் எழாதவர் எவரிங்கே?
கண்ணில் நீர்சொரியும் கருணை மேகம் அவள்தானே..
கவியரசின் வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்களை ஆராதிக்காமல் இருக்க முடியுமா? கவிதா தேவியின் தலைமகனே உன்னிடத்தில் பூத்த உணர்வுப்பூக்கள் இன்றும்கூட உதிராமலிருக்கின்றன! இந்த பூமியில் இன்னும் கலப்படமாகாதது… அப்பழுக்கற்றது தாய்ப்பால் என்பார்கள்… அந்தத் தாய்ப்பாலுக்கு இணையான வரிகளாகவே இவற்றை நான் காண்கிறேன்… கேட்கும்போதெல்லாம் ஜீவன்வரை நனைகிறேன்!!
உள்ளே உயிர் வளர்த்து…உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளி இடும்போதெல்லாம்… அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லிடும் தேவதையின் கோவிலது
பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
பால்தரும் கருணை அது – சிலர்
பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
பழம் தரும் சோலை அது
இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது – தினம்
துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம்தந்து
அணைக்கின்ற தெய்வம் அது
அண்மையில் ஓரிடத்தில் படித்தேன்… ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. ஒரு ஆண்… ஒரு பெண் … என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆண் குழந்தை உயிருடனும் பெண் குழந்தை இறந்தும் என்று மருத்துவர்கள் சொல்ல… அந்தத் தாய் இறந்த பெண் குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்து இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக அழுகிறாள்… ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்… இறைவனின் காதில் அந்தத் தாயின் குரல்கேட்டதுவோ என்னவோ… அந்தப் பெண் குழந்தை சிணுங்கத் தொடங்குகிறது… மருத்துவர்களே அதிசயத்த இந்த நிகழ்வில் நாம் அறிந்துகொள்வது… அந்தச் சிசுவுக்கு மீண்டும் உயிரூட்டியது தாயின் அரவணைப்புதானே… தாய்மையைின் மேன்மைக்கு நிகராக இத்தரணியில் ஏதுமில்லை… ஏதுமில்லை… ஏதுமில்லை…
படம்: பட்டிணத்தில் பூதம்
பாடல் : கண்ணதாசன்
இசை: கோவர்த்தனன்
குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன்
நடிகர்கள்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ்
_______________________________________________
உலகத்தில் சிறந்தது எது?
எது.. எது.. எது?
உலகத்தில் சிறந்தது எது – ஓர்
உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது.. (உலகத்தில்)
ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு
நல்ல நல்ல திட்டங்களும் வருவதுண்டு
அது இல்லையென்றால் எதுவும் இல்லை
தொழில்லை… முதலில்லை… கடனுமில்லை
சொல்லப்போனால் உலகமெங்கும்
வரவில்லை… செலவில்லை… வழக்குமில்லை…
அதன் ஆயுள் கெட்டி …
மெல்லப் பார்க்கும் எட்டி …
அதன் பேர்… …டி..
தெரியல்லே.. ..ட்டி…
இன்னுமே தெரியலே…
. . . . வட்டி..
வட்டி… உலகத்தில் சிறந்தது வட்டி
ஒர் உருவமில்லாதது வட்டி…
உலகத்தில் சிறந்தது வட்டி
வட்டி.. வட்டி.. வட்டி (உலகத்தில்)
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
காணத் துடிப்பது அது…
சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்தாலும்
இதயத்தில் இருப்பது அது…
இதயத்தில் இருப்பது அது… (உலகத்தில்)
அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
அகிலத்தின்பெருங்கதை அது
அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
ஆனந்த மாளிகை அது
உலகத்தில் சிறந்தது காதல்…
அந்தக் காதல் இல்லையே சாதல்…
உலகத்தில் சிறந்தது காதல்…
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
மறக்க முடியாதது – காதல்
கட்டி அணைப்போரும் கலந்து மிதப்போரும்
மறக்க முடியாதது – காதல்!
உள்ளே உயிர் வளர்த்து… உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளி இடும்போதெல்லாம்… அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லிடும் தேவதையின் கோவிலது
பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
பால்தரும் கருணை அது – சிலர்
பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
பழம் தரும் சோலை அது
இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது – தினம்
துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம்தந்து
அணைக்கின்ற தெய்வம் அது
அது தூய்மை…
அது நேர்மை…
அது வாய்மை…
அதன் பேர் தாய்மை…
உலகத்தில் சிறந்தது தாய்மை… அதை
ஒப்புக் கொள்வதே நேர்மை…
உலகத்தில் சிறந்தது தாய்மை..
உலகத்தில் சிறந்தது தாய்மை..
உலகத்தில் சிறந்தது தாய்மை..
காணொளி : https://youtu.be/c0toeUW9fEs
https://youtu.be/c0toeUW9fEs