இலக்கியம்கவிதைகள்

வழிவகுத்தல் நல்லதல்ல !

       -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

       விண்ணதிர மண்ணதிர வெளிப்பட்ட விஞ்ஞானம்
       கண்ணெதிரே பலவித்தைக் காட்டிநிற்கும் விஞ்ஞானம்
       எண்ணிநாம் முடிக்குமுன்னம் இயக்கிநிற்கும் விஞ்ஞானம்
       மண்ணுலகில் மனிதனது வாழ்வோடு நிற்கிறது !

      பார்க்கின்ற இடமெல்லாம் பலநிலையில் விஞ்ஞானம்
      பலபேரின் சிந்தனைக்கு மெருகூட்டும் விஞ்ஞானம்
      ஆர்ப்பரிக்கும் கடலையே ஆராயும் விஞ்ஞானம்
      அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிநிற்கும் விஞ்ஞானம் !

      மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் விரைவாகப் பரவுதற்கு
      விஞ்ஞானம் தானிப்போ வித்தாகி நிற்கிறது
      அஞ்ஞானம் கொண்டோரின் அகந்தையைப் போக்குதற்கு
      விஞ்ஞானம் ஊடாக மெய்ஞ்ஞானம் விரைகிறது !

      கணனியெனும் சாதனத்தால் கருத்துக்கள் விரிகிறது
      நினைவிலுள்ள விஷயமெல்லாம் நினைத்தவுடன் செல்கிறது
      உலகிலுள்ள மனிதரிடம் ஓர்நொடியில் கருத்தையெல்லாம்
      உவப்புடனே கொண்டுசெல உதவுதிங்கே கணனியிப்போ !

      மேலோங்கும் விஞ்ஞானம் விந்தைபல புரிந்தாலும்
      நாமதனை நன்குணர்ந்து நல்லவழி காட்டவேண்டும்
      வீணான பாதைதனில் விஞ்ஞானம் போவதற்கு
      வாழ்நாளில் நாமென்றும் வழிவகுத்தல் நல்லதல்ல !

      பணம்பண்ணும் நோக்கமொடு பலபேரும் திரிகின்றார்
      பிணம்விற்றும் காசாக்கும் பித்தருமே வருகின்றார்
      தினம்தினமும் ஆராய்ச்சி தீயவரின் வசமானால்
      நமதருமை விஞ்ஞானம் நலனெல்லாம் இழந்துநிற்கும் !

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க