Tag: இவள் பாரதி

  • சிறுகை அளாவிய கூழ் – 10

    இவள் பாரதி

     

    பசியிலெழுந்து

    பக்கம் ஊர்ந்து

    உறங்கும் தாயை எழுப்புகிறது

    குழந்தை

     

    கனவிலிருந்து

    பதறியெழுந்து

    உன்னைப் பார்க்கிறேன்.. (more…)

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 9

    இவள் பாரதி

    கூடடையப் பறக்கும்

    பறவையின் வேகமொத்து

    பறக்கின்றனயென் கால்கள்

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த

    இப்பெருநகரத்தில்

     

    தாய்ப்பறவையை

    எதிர்நோக்கிக் காத்திருக்கும்

    குஞ்சுப்பறவையின்

    கண்களும் காதுகளும்

    படபடக்கின்றன

    நொடிக்கொருமுறை

    ——

    வாடிக்கிடந்த

    பூவொன்றையெடுத்து

    சிறுவாயில் வைத்து

    எச்சில்படுத்துகிறாள்

    அம்மாகுட்டி

     

    மழைத்துளிபட்டதென

    மணக்கத் துவங்குகிறது

    பூவிதழ்

    ——-

    ஒரே பாடலைத்

    திரும்பத் திரும்பப்

    பாடுகிறேன்..

    முகம்பார்த்து

    முலைப்பாலருந்தும் குழந்தைக்கு

     

    பாடலை நிறுத்துகிறேன்

    குடிப்பதை நிறுத்திவிட்டு

    உன்னிப்பாய் கவனிக்கிறாள்

     

    மீண்டும்

    அதே பாடலைப் பாடுகிறேன்

    பாலைக்குடிக்கிறது குழந்தை

    சிவந்த மென்கால்களை அசைத்துக்கொண்டே

    ——-

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 8

    இவள் பாரதி

    AAA_2661

    வாழைப்பூவிரல்களை விரித்து

    பருப்புக்கடைய

    உள்ளங்கை காட்டும் குழந்தை

    நண்டூறுது

    நரியூறுது சொல்லி

    கிச்சுக் கிச்சு மூட்டுமுன்னே

    சிரித்துவிடுகிறது

     

    ====

     

    இருமல் சத்தத்தை

    இதயத்துக்குள்

    வலிந்தனுப்புகிறேன்

    உன் உறக்கம்

    கலைந்துவிடக் கூடாதென

    ====

     

    விவசாய நிலத்தில்

    விதைக்கப்பட்டு

    துளிர்த்திருக்கும்

    ஒருவார பயிர்களென

    ஒருசேர வளர்ந்திருக்கிறது

    உன் மொட்டைத் தலை

     

    =====

     

    ஒவ்வொருமுறையும்

    விளையாடுகிறேன்

    உன்னிடம் தோற்பதற்காகவே

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 7

    இவள் பாரதி

    AAA_2668பொசுக்கென

    அழுதுவிடுகிறாய்

    பொலபொலவென ஓடும்

    துளிகளைப் பொறுக்க முடியாது

    தடுமாறுகிறதென் கைகள்

     

    ***

     

    சற்றே உதடுகுவித்து

    சடாரென விரித்து

    சத்தமெழுப்பி

    குதூகலமிட்டு

    சிரிக்கிறாள் டோடோ

     

    ஒருமுறை தண்ணீரை

    சிறுவாய்க்குள் வைத்துத் துப்புகிறாள்

    காற்றில் ஊர்ந்துவரும் துளிகள்

    மீண்டும் அவள் வாய்க்குள் செல்ல

    அடம்பிடித்து

    என் மீது விழுந்து நச்சரிக்கின்றன

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 6

    இவள் பாரதி

     
    தூங்கும்போதுpapaa1
    கனவில் அடித்துவிட்டதென
    முகபாவம் செய்து
    உதடு சுழித்து
    அழும் குழந்தை

    வீட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள்
    சாமியுடன் விளையாடும்போது
    சேட்டை செய்ததால்
    ‘சாமி’அடித்து விட்டதென

    அதுசரி
    குழந்தையை அடிக்கும் தைரியத்தை
    யார் கொடுத்தது சாமிக்கு?

    ***

    முதல் முடியிறக்கும்போது
    நீயழுத அழுகையில்
    உன்னெச்சிலிலும் வெண்நுரை வந்தது

    உன் தாத்தாவின் பிடிதளர்த்தலில்
    நீ இலேசாக திமிறியதில்
    உச்சிக்குழி மேவிய
    உன் இளந்தலையில் கீறல்பட்டு
    இரத்தம் பரவியதுகண்டு
    முகந்திருப்பியழுதேன்
    குனிந்தபடியே ஏறிட்ட
    நீ நிறுத்தியிருந்தாய்
    உன் அழுகையை

    உன் காயமாறுகிற
    காலம் தேவைப்பட்டது
    எனதழுகையை
    நிறுத்துவதற்கு
    ***

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 5

    இவள் பாரதி

    அவள் முகத்திலிருந்து
    ஒரு புன்னகை
    வரவழைக்க
    அதிக பிரயத்தனம்
    ஏதும் தேவையில்லை
    உங்களிடமிருந்து
    ஒரு புன்னகை
    வெளிப்பட்டால் போதும்

     

    கொடுக்க நானும்
    குடிக்க நீயும்
    தவித்துக் கிடக்கிறோம்
    கட்டிய பாலை
    வெளியேற்ற
    தோதான இடமின்றி
    யாருமறியாமல் அழுகிறேன்
    அலுவலகத்தில்

     

    Share
  • சிறு கை அளாவிய கூழ் (4)

     

    இவள் பாரதி 

     
    கண்ணெதுpappa
    மூக்கெது
    தலையெது என
    தன் குட்டிவிரலால்
    சுட்டிக் காட்டுகிறாய்
    எப்படி அழுவாய்
    எனக் கேட்க
    கண்கள் இடுக்கி
    உதடு குவித்து
    எழுப்பும் ஒலியும்
    முகபாவமும்
    எந்தத் திரையிலும்
    பதிவு செய்யப்படாதது

    முகத்தருகே வந்து சிரிக்கிறாய்
    சிரித்த கணம் முடிவதற்குள்
    கன்னத்தில் அடிக்கிறாய்
    கண்கலங்கித் துளிவீழுமுன்னே
    கைதட்டிச் சிரிக்கிறாய்
    என்ன செய்ய என்னை?
    என்ன சொல்ல உன்னை?

    Share
  • சிறு கை அளாவிய கூழ் – 3

    இவள் பாரதி

     

    நி​வேதிதா
    நி​வேதிதா

    இயற்பியலும்

    கணிதமும்

    படிக்கும்போது புரியாத

    கோணத்தை

    செல்லமகள்

    தலைசாய்த்துறங்கும் அழகில்

    புரியவைக்கிறாள்

    நேர்கோணத்தில்

    குறுங்கோணம்

    விரிகோணம்

    செங்கோணத்தை

     

    ======

     

    தத்தி தத்தி

    விழுந்து எழுந்து

    தத்தி விழுந்து

    ஊர்ந்து எழுந்து
    தத்தி தடுமாறி

    விழுந்து தடுமாறி

    தத்தி நடக்கிறது

    கைக்குழந்தை

    தேனூறுகிறது

    தாயின் கண்களில்

     

    Share
  • சிறு கை அளாவிய கூழ் – 2

    இவள் பாரதி

    nivethitha (2)
    நி​வேதிதா

    நெற்றி சுருக்கி

    புருவமுயர்த்தி

    உதடு சுழித்து

    அடித்துவிட்டதைப் போல

    ஓசையின்றி

    அழுகிறது

    உறங்கும் குழந்தை

     

    ஆழ்மனவிழிப்பில்

    எழுந்துவிட்ட தாய்

    தூக்கம் விரட்டி

    விழித்திருக்கிறாள்

    இரவெல்லாம்

    அழுவதும் சிரிப்பதுமான

    உறங்கும் குழந்தையை

    ஆறுதல்படுத்தியும்

    மகிழ்வெய்தியும்

     

    =====

     

    உனது

    ஒவ்வொரு முடிக்குமான

    இடைவெளியில்

    ஊர்ந்தூர்ந்து செல்கிறேன்

    புதிதாக விதைக்கப்பட்ட

    காட்டொன்றில்

    இருப்பதான நினைவெனக்கு

    நீ துளிர்க்கும் சிறுமரம்

    ஒரு காடு

    பூவுலகம்

    குட்டி பிரபஞ்சம்

     

    ======

     

    உதடுகளுக்கிடையில்

    நாக்கைத் துருத்தி

    பால் குடிக்கும் பாவனை செய்கிறாய்

    உறக்கத்தில்

     

    மனம் பதறியெழுந்து

    முலையிரண்டும் கசிய

    ஒன்றை உன் உதட்டில் வைக்கிறேன்

    சடாரெனக் கவ்வி

    சப்பிக்கொண்டே உறங்குகிறாய்

     

    ======

     

    Share
  • சிறு கை அளாவிய கூழ் (1)

    இவள் பாரதி

     

    காய்கறிகள்

    நிவேதிதா
    நிவேதிதா

    நாற்காலிகள்
    பொம்மைகள்
    விளையாட்டுப் பொருட்கள்
    துணிமணிகள்
    துண்டுத்தாள்கள்
    என வீட்டிலிருக்கும் யாவற்றையும்
    உன் குட்டிக்கையால் தொட்டு
    சாபம் நீக்குகிறாய்
    பின் புனிதப்படுத்துகிறாய்
    சின்னஞ்சிறுவாயில் எச்சில்படுத்தி

     

    ===

     

    இருமலையும்
    தும்மலையும்
    சத்தமின்றி நிகழ்த்தும்
    அனிச்சை வாய்த்துவிடுகிறது

    உன் உறக்கம் கலையாமல்

     

    Share