சிறுகை அளாவிய கூழ் – 9

இவள் பாரதி

கூடடையப் பறக்கும்

பறவையின் வேகமொத்து

பறக்கின்றனயென் கால்கள்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த

இப்பெருநகரத்தில்

 

தாய்ப்பறவையை

எதிர்நோக்கிக் காத்திருக்கும்

குஞ்சுப்பறவையின்

கண்களும் காதுகளும்

படபடக்கின்றன

நொடிக்கொருமுறை

——

வாடிக்கிடந்த

பூவொன்றையெடுத்து

சிறுவாயில் வைத்து

எச்சில்படுத்துகிறாள்

அம்மாகுட்டி

 

மழைத்துளிபட்டதென

மணக்கத் துவங்குகிறது

பூவிதழ்

——-

ஒரே பாடலைத்

திரும்பத் திரும்பப்

பாடுகிறேன்..

முகம்பார்த்து

முலைப்பாலருந்தும் குழந்தைக்கு

 

பாடலை நிறுத்துகிறேன்

குடிப்பதை நிறுத்திவிட்டு

உன்னிப்பாய் கவனிக்கிறாள்

 

மீண்டும்

அதே பாடலைப் பாடுகிறேன்

பாலைக்குடிக்கிறது குழந்தை

சிவந்த மென்கால்களை அசைத்துக்கொண்டே

——-

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *