இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
இந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது –
”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா? என்ற அச்சம். ஆனால் படிக்கப் படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்” – என்று திருமதி சுபாஷிணி குறிப்பிட்டு பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே மனிதர்கள் பல விதானங்களில் சிந்திக்கிறார்கள். இது உலக மாந்தர்களுக்குண்டான சிறப்பு. பல சிந்தனைகள் சித்தாந்தங்களாக மாறுகிறதுதான். அந்த சித்தாந்தங்களில் சில காலத்தின் கோலத்திற்கேற்ப மிக அதிக அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களால் அதற்கு மாறாக உள்ள இன்னொரு சித்தாந்தத்தை மனதாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான்.
அதே சமயத்தில் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றினாலும் மாற்றார் கருத்தையும் நாம் படித்து அறிய வேண்டும். இதற்கு பொதுவாக மனது இடம் கொடுக்காது. மறுக்கும்.. சில சமயம் அலட்சியப்படுத்தும், சிலசமயம் பயப்படுத்தும் ஆனால் படித்தபின்னர், அதுவும் முடிந்தவரை பொறுமையாக ஒரு திறந்த மனதில் படிக்கப்படும்போது அந்த சித்தாந்தத்தில் உள்ள பல நல்ல கருத்துகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்தான். இப்படிப்பட்ட கருத்து நம் மனதுள் வந்தவுடன் நமக்குள் முதலில் தோன்றுவது மாற்று சித்தாந்தத்தில் உள்ள நல்ல கருத்துகளும் நல்ல மதிப்பும் உண்டாகும்., இதனால் நம் எண்ணங்களையும் செம்மையாக்கிக்கொள்ள உதவுகிறது. மாற்று சித்தாந்தங்களையும் மதிக்கத் தோன்றுகிறது. நம்முள் உள்ள ஒரு எதிர்மறையை நீக்கிக் கொள்ள சந்தர்ப்பமும் தருகின்றது.
அப்படிப்பட்ட ஒரு கருத்தை நம்முன் நிறுத்தி வாசகர்களுக்கும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துரையைப் பதிப்பித்த திருமதி சுபாஷிணி அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நல்வாழ்த்துகள். அவர் கட்டுரையை முழுதும் படிக்க இதோ அவரது இணைப்பு – https://www.vallamai.com/?p=42999
கடைசி பாரா: பிச்சினிக்காடு இளங்கோ’வின் சொல்லும் சொல்லும் கவிதை.
சொற்களெல்லாம்
சிக்கிமுக்கிக் கற்கள்
விருட்சமாய்
விளையும் விதைகள்
ஒவ்வொரு சொல்லும்
வாமன வடிவம்
ஒவ்வொரு சொல்லும்
சுரங்கம்
ஒவ்வொரு சொல்லும்
ஒரு
சூத்திரம்
சூத்திரம் விரிந்தால்
சூட்சுமம் விளங்கும்