Tag: எம்.ஜெயராமசர்மா

  • அன்னைத் தமிழ் அகமகிழும்!

    [ம. ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா]

    நன்றி   எனும்   வார்த்தையினை
    நாம்  சொல்லத்  தயங்குகிறோம்
    ” தாங்ஸ் ” அங்கே வந்துநின்று
    தான்  நிமிர்ந்து  நிற்கிறது
    மன்னிக்க  என்று  சொல்ல
    மனம்  எமக்கு  வருகுதில்லை
    ” வெரிசாறி ” என்று  சொல்லி
    வேற்று  மொழி  உதிர்க்கின்றோம்  !

    வந்து    நிற்கும்   விருந்தினரை
    ” விசிட்டர் ” என அழைத்திடுவோம்
    காலை  நேர  உணவதனை
    ” பிரேக்பாஸ்டாய் ” ஆக்கி  நிற்போம்
    மாலை  நேரம் உண்ணுவதை
    ” டிபன் ” என்று மாற்றிவிட்டு
    மனமகிழ்வை ” ஹப்பி ”  என்று
    வாயாரச் சொல்லி  நிற்போம்    !

    அம்மாவின்  தங்கை  வீட்டில்
    ” அன்ரியாய் ”  ஆகி  நிற்பார்
    அப்பாவின்  தம்பி  அங்கே
    ” அங்கிளாய் ”  பெயர் பெறுவார்
    பெரியப்பா  பெரிய  அம்மா
    எனும் அருமை வார்த்தையெலாம்
    ” அங்கிளெனும் ” பெயர்  பெற்று
    அன்னைத் தமிழ் ஒழிந்துகொள்ளும்   !

    பிறந்த     நாள்    விழாதன்னில்
    பெருங்  குரலால்  யாவருமே
    ” ஹப்பிபர்த்டே ”  எனப்   பாடி
    கைதட்டி  மகிழ்ந்து  நிற்போம்
    தமிழ்  மொழியில்  வாழ்த்திருக்க
    அதைத் தவிர்த்து விட்டுவிட்டு
    அன்னியத்தை பாடி நிற்றல்
    அருவருக்கும் செயல் அன்றோ   !

    தொலைக் காட்சி  நிகழ்ச்சிகளில்
    தொகுத்து நிற்க வருபவர்கள்
    ” ஸோவென்பார் ”  ” சொரி ”   என்பார்
    சுவையதனை ” சுவீற் ”  என்பார்
    மூச்சுக்கு ஒரு  தடவை
    பேசி நிற்பார்  ஆங்கிலத்தை
    முன் வந்து  நிற்பதோ
    முக்கியமாய்  தமிழ் நிகழ்வே  !

    தமிழ் அவையில் பேசவரும்
    பேச்சாளர் பல பேரும்
    சரளமாய் ” சிம்பிள் ” என்பார்
    ” சக்சஸ்தான் ”  வாழ்க்கை என்பார்
    அமுதான தமிழ் பேச
    வந்து நிற்கும் அவர்களுமே
    ஆங்கிலத்தை அணைத்து நிற்றல்
    அசிங்கமாய் இருக்கும் அன்றோ !

    நம் தமிழை வளர்ப்பதற்கு
    நாம் அன்றோ முயலவேண்டும்
    நம் தமிழின் வரலாறு
    நமக்கென்றும் பெருமை அன்றோ
    நம் மொழியை புறந்தள்ள
    நாம் வலிந்து நின்றுவிடின்
    நாம் தமிழர் என்றுசொல
    நம் மனது ஏற்றிடுமா  !

    நல்ல  தமிழ்  பேசுதற்கு
    நாம் மனதில் நினைத்திடுவோம்
    சொல்ல வல்ல சொற்கள்பல
    நிறைந்திருக்கு நம் மொழியில்
    அன்னியத்தை நம் பேச்சில்
    அணைப்பதனை விட்டு விட்டு
    அழகு தமிழ் பேசிநின்றால்
    அன்னைத் தமிழ் அகமகிழும் !

    Share
  • இருப்பது பேரின்பமன்றோ!


    எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன்
    புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
    கட்டழகு உடலமைப்பை காணவில்லை
    கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன்
    சிரித்துநின்ற செவ்வாயைத் தேடுகிறேன்
    சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
    என்றாலும் அவளேயென் இணையேயாவாள்
    இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்!

    கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
    கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு
    முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ
    மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள்
    சுவையாக உணவளித்த அவளின்கைகள்
    சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
    அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
    அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு!

    ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள்
    உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
    தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ
    செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள்
    வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள்
    வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
    என்றாலும் உணவதனை ஊட்டும்போது
    என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன்!

    பிள்ளைகளோ  எம்மைவிட்டுப்  பிரிந்தேவிட்டார்
    தொல்லைகளே  என்றுவெண்ணி  தூரவுள்ளார்
    நல்லபிள்ளை என்றேநாம் வளர்த்தேவிட்டோம்
    நட்டத்தை எங்களுக்கே தந்தேவிட்டார்
    அல்லல்தரும் வயோதிபத்தை அடைந்தேவிட்டோம்
    ஆனாலும் அருகருகே இருக்கின்றோமே
    எல்லையிலாத் துன்பமெமை இறுக்கிட்டாலும்
    இணைபிரியா இருப்பது பேரின்பமன்றோ ! 

                    
    Share
  • நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

     

     எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்
    கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்
    நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள்
    எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் !

    அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே
    அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை
    அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே
    அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே !

    தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே
    தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள்
    கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து இணைந்துவிட்டால்
    வெறுப்புடனே ஒதுக்கியவள் விலகியே நடந்திடுவாள் !

    எல்லோர்க்கும் திருமணம் நடந்துவிட்ட போதிலுமே
    இவளுக்கு திருமணம் நடக்கவில்லை எனுமேக்கம்
    அப்பாவின் மனதையே அறுத்துக்கொண்டு இருந்தாலும்
    அவளெண்ணம் நிறைவேற அலையாக அலைந்தாரே !

    கறுப்பான ஆண்கள்பலர் கட்டழகாய் இருந்தாலும்
    வெறுப்பான பார்வையினை வீசியவள் நின்றதனால்
    பொறுப்பான வயதினிலே திருமணமும் ஆகாமல்
    பொழுதெல்லாம் அவளுக்கு வீணாகிப் போனதுவே !

    வீட்டிலே தங்கையின் வளைகாப்பு நடந்ததுவே
    வெளியிடத்தார் பலபேரும் வீட்டுக்கு வந்திருந்தார்
    பட்சணங்கள் செய்வதிலே பலபேரும் ஈடுபட்டார்
    வெள்ளைநிற வடிவழகி விருப்பமின்றி உதவிநின்றாள் !

    சமயலறை தனிலிருந்து சலசலப்புக் கேட்டவுடன்
    சகலருமே அவசரமாய் ஓடியங்கே போனார்கள்
    வெள்ளநிற வடிவழகி முகமதிலே கொதியெண்ணெய்
    விழுந்துவிட்ட காரணத்தால் வேதனையால் அவள்துடித்தாள் !

    கறுப்புநிறம் கொண்டஅப்பா கண்ணீரில் மூழ்கிநின்றார்
    வெறுத்துநின்ற கறுப்பண்ணா விரைந்தோடி வந்துநின்றான்
    வெள்ளைநிற பெண்ணவளை கொண்டுசென்றார் மருந்துசெய்ய
    கொள்ளைநிற அழகங்கே கொட்டிண்டு போனதுவே !

    கொதியெண்ணெய் பட்டதனால் கொப்புளங்கள் வந்தங்கே
    பொலிவான வெள்ளைநிறம் பொசுங்கிக் கறுப்பாகியதே
    தலைமயிரில் தாக்கியதால் முன்மயிரும் கருகியதே
    தளதளத்து அழகுமுகம் தான்கறுப்பாய் ஆகியதே !

    ஓரளவு சுகமாகி வீடுவந்த பின்னாலே
    கண்ணாடி முன்னின்று தன்முகத்தைப் பார்த்தாளே
    ஓவென்று ஓலமிட்டு உன்மத்தம் பிடித்தவளாய்
    ஒருவரையும் பாராமல் உட்கார்ந்தாள் தனிமையிலே !

    அப்பாவும் அண்ணாவும் ஆறுதல்கள் கூறிநின்றார்
    அப்போது தானவளும் அவர்கள்முகம் பார்த்தனளே
    அப்பாவும் அண்ணாவும் அழகெனவே அவள்நினைத்தாள்
    அழுதபடி ஓடிவந்து அணைத்தபடி அவள்நின்றாளே !

    கறுப்புநிறம் அப்போது கட்டழகாய் தெரிந்தது
    வெறுத்துநின்ற வெள்ளழகி வெளிவந்தாள் திரைவிலகி
    நிறமென்னும் பேய்பிடித்து நின்றாடி நின்றஅவள்
    நிறமெல்லாம் அழகெனவே நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

    Share
  • போராட்டம்!

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா


    நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம்
    சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
    போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்
    போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே!

    கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
    கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம்
    சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம்
    சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்!

    மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம்
    மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம்
    நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம்
    போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது!

    கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
    கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
    அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும்
    ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார்!

    ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
    உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம்
    வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம்
    மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார்!

    கதிரையினைப் பிடிப்பதற்கும் போராட்டம் நடக்கிறது
    கதிரையிலே இருப்பாரும் போராட்டம் நடத்துகிறார்
    போராட்டம் என்பதற்கே அர்த்தமின்றிப் போகிறது
    போராட்டம் தனையொழிக்கப் போராட்டம் தேவையன்றோ!

    Share
  • ஆக்கிடுவோம் வாருங்கள் !

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    நீரின்றி வாடுகின்றார்
    நீண்டநேரம் நிற்கின்றார்
    பார்மீது உழைப்பவர்கள்
    பஞ்சமதில் உழலுகிறார்
    அவரைவைத்து சொத்துச்சேர்ப்பார்
    அடுக்குமனை கட்டுகிறார்
    அடுத்தவேளை உணவுக்கு
    அலைந்திடுவார் உழைப்பவர்கள் !

    நிலமீது காணுகின்ற
    நிட்டூரம் ஒழிவதற்கு
    நீண்டதொரு போராட்டம்
    நெடுநாளாய் நடந்ததுவே
    அதன்விளைவாய் உழைப்பவரை
    அனைவருமே கண்டார்கள்
    அத்தினமே மேதினமாய்
    ஆகியதே உலகமெலாம் !

    உழைப்பவரை வாழவைப்போம்
    ஊதியத்தை உயர்த்திடுவோம்
    விலைகுறைவாய் பலவற்றை
    விரைவாகக் கொடுத்திடுவோம்
    நலம்பயக்கும் திட்டங்கள்
    நாங்கள் செய்விருக்கின்றோம்
    நம்புங்கள் எனவுரைத்து
    நம்பவைப்பார் அரசியலார் !

    உரைகேட்ட உழைப்பாளி
    உண்மையென நம்பிடுவான்
    தலைவாநீ வாழ்கவென்று
    தான்குரலை ஒலித்திடுவான்
    உழைப்பாளி அறியாமை
    உரமாக்கித் தலைமையெலாம்
    உல்லாசம் அனுபவித்து
    உவப்புடனே இருந்திடுவார் !

    மேதினத்தில் வெளிச்சம்வர
    வேண்டிநிற்போம் வாருங்கள்
    மேதினத்தில் உழைப்பாரை
    உயர்த்திநிற்போம் வாருங்கள்
    பொய்யுரைக்கும் கூட்டத்தார்
    தனைத்தவிர்ப்போம் வாருங்கள்
    மெய்யாக மேதினத்தை
    ஆக்கிடுவோம் வாருங்கள் !

    Share
  • களிப்புற்று நின்றிடுவோம் !

     
    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

     

    விண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்
    மண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல்
    ஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை
    அனைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் !

    மானிட இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்
    வரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்
    காதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்
    காதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் !

    காதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே
    காதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும்
    மோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்
    காதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ !

    காதலில்லா வாழ்வினைநாம் கசப்பென்றே எடுக்கவேண்டும்
    காதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும்
    காதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்
    ஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் !

    காதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு
    காதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்
    காதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்
    காதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் !

    Share
  • ஆன்மீகப் பொக்கிஷம் !

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 
    ஆடைதனைக் குறைத்தார்
    ஆணவத்தைக் களைந்தெறிந்தார்
    நாடிநின்றார் நம்ரமணர்
    நல்வழியைக் காண்பதற்கு
    ஓடிவந்தார் அண்ணாமலை
    ஒடுக்கிநின்றார் மனமதனை
    வாடிவிடா அவரிருந்தார்
    வழங்கிநின்றார் அருளையெலாம் !

    தன்னையே அறிவதற்குத்
    தவமிருந்தார் ரமணரிஷி
    தனிமைதனை இனிமையாய்
    தவமுனிவர் ஏற்றுநின்றார்
    பொய்மையாம் உடலுக்குள்
    மெய்மையைத் தேடிநின்றார்
    மெய்மையை உணர்ந்தவவர்
    மேதினியில் ரிஷியானார் !

    அத்வைத தத்துவத்தை
    அனைவருக்கும் காட்டிநின்றார்
    ஆடம்பரம் அனைத்தும்
    அவர்க்கு வெறுப்பாச்சு
    ஆசைதனைக் குறைத்த
    ஆன்மீகப் பொக்கிஷமாய்
    அகிலமே போற்றும்வண்ணம்
    ஆகிவிட்டார் ரமணரிஷி !

    சொத்துக்கள் சேர்க்கவில்லை
    சுகதுக்கம் நோக்கவில்லை
    சத்தான உணவேதும்
    தானவரும் உண்ணவில்லை
    மாடிமனை ஆடம்பரம்
    மனமதிலும் இருக்கவில்லை
    மாசில்லா வழிதேடி
    மாமுனிவர் தவமிருந்தார் !

    Share
  • வாய்த்திடட்டும் தைப்பொங்கல் !

    எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

    download 
    பொங்கலென்று நினைத்துவிடின்
    பூரிப்பே வந்துநிற்கும்
    மங்கலங்கள் நிகழ்வதற்கு
    பங்களிப்பை நல்கிநிற்கும்
    எங்களது வாழ்வினிலே
    என்றுமே இன்பம்வர
    எல்லோரும் பொங்கலிட்டு
    இறைவனயே எண்ணிடுவோம் !

    தைபிறந்தால் வழிபிறக்கும்
    தரமான வார்த்தையிது
    எதிர்காலக் கனவுகளை
    எங்கள்தையும் ஈய்ந்திடட்டும்
    வருடத்தின் தொடக்கமதை
    வாழ்த்திநின்று வரவேற்போம்
    வையகமே விடிவுபெற
    வாய்த்திடட்டும் தைப்பொங்கல் !

    புத்துடுப்பு உடுத்திடுவோம்
    புத்துணர்வு பெற்றிடுவோம்
    மத்தாப்புப் பட்டாசு
    வகைவகையாய் வெடித்திடுவோம்
    சொந்தபந்தம் சூழ்ந்துநிற்க
    சுவைபயக்கப் பொங்கல்பொங்கி
    சூரியனை வணங்கிநின்று
    சுகம்பெறவே வேண்டிடுவோம் !

    வளம்பெருக வேண்டுமென்று
    மனமார வேண்டிடுவோம்
    வானவரும் வாழ்த்துரைக்க
    வாழ்ந்துமே காட்டிடுவோம்
    வையகத்தில் அமைதிவர
    வடிவாகப் பொங்கல்பொங்கி
    வாழ்ந்திடுக தமிழென்று
    வாயார வாழ்த்திநிற்போம் !

    பால்பொங்கி வருவதுபோல்
    பலநலனும் பெருகவென
    பச்சரிசி தனையெடுத்து
    பானையிலே இட்டிடுவோம்
    இச்சையுடன் சர்க்கரையை
    எங்கள்கையில் எடுத்துவைத்து
    உச்சமுடன் வாழவெண்ணி
    உள்ளுக்குள் சேர்த்திடுவோம் !

    மாவிலை தோரணங்கள்
    வாசலிலே கட்டிவைத்து
    மனம்முழுக்க மகிழ்வுடனே
    பொங்கிடுவோம் வாருங்கள்
    ஊணுறக்கம் தனைமறந்து
    உழைத்துநிற்கும் யாவரையும்
    உள்ளமதில் நினைத்தபடி
    உணர்வுடனே பொங்கிடுவோம் !

    உலகெங்கும் அமைதிவர
    உழைப்புயர மனமெண்ணி
    நிலமெங்கும் நீதிவர
    நிம்மதியும் நிறைந்துவர
    நலமில்லா அத்தனையும்
    நாட்டைவிட்டே அகன்றோட
    நாம்பொங்கல் பொங்கிநின்று
    நாடிடுவோம் இறையருளை !

    Share
  • ஆனந்த சுதந்திரம் !

     

    சுதந்திரதின நல்வாழ்த்துகள் !

    unnamed

     எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     
    unnamed (4)ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே
    அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே
    அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே
    ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !

    பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே
    பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே
    நிலமீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்
    பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !

    சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே
    சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே
    இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்
    இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் !

    வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்
    பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்
    யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை
    நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே !

    புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்
    அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே
    உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்
    உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !

    இமையும்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்
    இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்
    தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்
    தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !

    சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்
    சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்
    சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்நிதிடுவோம்
    சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்திடுவோம் !

    ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட
    ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்
    ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட
    அன்புபாசம் நேசமொடு அஹிம்சைதனை அரவணைப்போம் !

    Share
  • தொழுது நிற்போம் !

     

     எம் .ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    unnamed (2)

    பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
    பருகத் தருவார் அம்மா
    பாடசாலை கூட்டிச் சென்று
    படிக்க விடுவார் அப்பா
    வேலை செய்து வேலைசெய்து
    காசு சேர்த்து அப்பா
    விருப்பம் உள்ள பொருளையெல்லாம்
    விரும்பிக் கொடுப்பார் நாளும் !

    அம்மா எம்மை அடித்திட்டாலும்
    அணைத்து நிற்பார் அப்பா
    சும்மா கூட திட்டுதற்கும்
    துணிய மாட்டார் அப்பா
    இந்தமண்ணில் எம்மைக் காக்க
    ஏற்ற தெய்வம் அப்பா
    இன்ப துன்பம் எதுவந்தாலும்
    ஏற்று நிற்பார் அப்பா !

    படிக்க வேண்டும் என்றுசொல்லி
    பாடாய்ப் படுவார் அப்பா
    படிப்பதற்கு உரிய தெல்லாம்
    கொடுத்து நிற்பார் அப்பா
    உடுப்பு என்று கேட்டுவிட்டால்
    குவித்து நிற்பார் அப்பா
    ஓடி ஓடி எந்தநாளும்
    உழைத்து நிற்பார் அப்பா !

    அடுத்தவர்கள் எம்மைத் திட்ட
    பொறுத்திடார் நம் அப்பா
    அசிங்கம் உள்ள காரியத்தை
    அழித்திடுவார் நம் அப்பா
    பொறுமை காத்து பொறுமைகாத்து
    பொறுத்து நிற்பார் அப்பா
    பொல்லாத செயலைக் காணின்
    பொங்கி நிற்பார் நம்மப்பா !

    பண்டிகைகள் என்று வந்தால்
    பல உடுப்புத் தருவார்
    உண்டு மகிழ பட்சணங்கள்
    ஒழுங்காய் வாங்கித் தருவார்
    தின்று நிற்கும் அழகைப்பார்த்து
    சிரித்து நின்று மகிழ்வார்
    பொங்கி வரும் பூரிப்பாலே
    பொலிந்து நிற்பார் அப்பா !

    அப்பா வரத் தாமதிதால்
    அம்மா ஏங்கித் தவித்திடுவார்
    அங்கு மிங்கும் ஓடியோடி
    அவரைக் காணத் துடித்திடுவார்
    அப்பா வீட்டில் இல்லயென்றால்
    அமைதி அங்கே அமைந்துநிற்கும்
    அப்பா வந்து சேர்ந்தவுடன்
    அகமும் முகமும் மலர்ந்தேவிடும் !

    அப்பாவும் அம்மாவும் அனைவருக்கும் துணையாவர்
    அவரில்லா உலகமது ஆருக்கும் துணையாகா
    ஒப்பாரும் மிக்காரும் உலகத்தில் அன்னைதந்தை
    உளமிருத்தி உயர்த்திவைத்து உன்னதமாய் வாழ்ந்திடுவோம் !

    தந்தையில்லா வாழ்வெமக்குத் தளர்வினையே தந்துவிடும்
    நொந்துவிடும் போதெல்லாம் பந்தமுடன் வந்துநிற்பார்
    இந்தப்புவி மீதினிலே ஏந்திநிற்கும் தந்தையினை
    எல்லோரும் வாழ்வினிலே ஏற்றிநின்று போற்றிடுவோம் !

    வலுவிழந்து போனாலும் வயதுசென்று போனாலும்
    கிழடென்று மனமெண்ணி கீழாக எண்ணாமல்
    நமதுடலை வளர்த்தெடுத்து நாமாக வாழுதற்கு
    தமதுழைப்பை ஈந்தளித்த தந்தையினை தொழுதுநிற்போம் !

    அப்பாவை அரவணைத்து அவர்பாதம் தொழுதெழுந்து
    நித்தமுமே செய்வதுதான் சத்தியமாய் வாழ்வாகும்
    கொண்டாட்டம் செய்துநின்று குவலயத்தில் இத்தினத்தை
    குறைவாக்க நினையாமல் கும்பிடுவோம் அப்பாவை !

    Share
  • காத்திடுவோம் !

     

    எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    பறவைகள் தங்கிய காடு – இப்போ
    பார்க்கின்ற இடமெல்லாம் வீடு
    குருவிகள் தேடுது காடு – ஆனால்
    குலைக்கிறார் மனிதரோ நாளும் !

    விளைநிலம் எல்லாமே போச்சு – இப்போ
    வீடுகள் எழும்பல் ஆச்சு
    பசுமைகள் அழிக்க நாளும் – இப்போ
    பார்க்கிறார் பெரிய வேலை !

    மண்ணினைத் தோண்டியே நாளும் – இப்போ
    வளத்தினைக் கெடுக்கிறார் பலபேர்
    எண்ணிடும் போதுமே நெஞ்சம் – இப்போ
    ஏங்கியே நிற்குது இங்கே !

    தொழிற்சாலை என்கின்ற பெயரால் – இப்போ
    கெடுக்கிறார் குடிநீரை எல்லாம்
    கழிவுகள் சேர்ந்திட்ட நீரால் – இப்போ
    கண்ணீரில் நிற்கிறார் மக்கள் !

    மரம்வெட்டி பணம்புரட்டும் பலரால் – இப்போ
    வரண்டநிலை வந்துவிட்ட தெங்கும்
    வரமாக அமைந்திட்ட மரத்தை -இப்போ
    தம்நலமாக மாற்றுறார் பலபேர் !

    ஆறுகள் குளத்தைக் காணவில்லை – இப்போ
    அங்கெல்லாம் மாடிகள் எழும்பிருக்கு
    சேறு நிலத்தையும் விட்டாரில்லை – இப்போ
    கூறுகள் போடுறார் பூமியையே !

    ஏழையெளியவர்கள் இருக்கவிடம் இல்லாமல்
    வாழ்ந்துவந்த இடமெல்லாம் வளமிளந்து போனதனால்
    நாளையென்னும் பொழுதவர்க்கு நஞ்செனவே இருக்கிறது
    நாட்டிலுள்ள நல்லவரே காட்டிடுங்கள் அக்கறையை
    வீட்டைக்கட்டிப் பணம்குவிக்கும் வித்தைக்காரர் வினையாலே
    நாட்டுவளம் எல்லாமே நாசத்தோடு இணைந்தாச்சு
    காட்டினையும் அழித்து கழனிகளையும் அழித்து
    காசுகாசாய் சேர்பதிலே காணுமின்பம் இழிவன்றோ !
    இயற்கையாய் வளர்ந்தமரம் எமக்குத்துன்பம் தருவதில்லை
    தலைக்கனத்தைக் கொண்டோரால் தான்துன்பம் வருகிறது
    மலைகாடு மாநதிகள் மாவரமாய் வந்தனவே
    மாவரத்தைக் கருவறுத்தல் மானிடர்க்கு இடரன்றோ
    கொள்ளை அடிப்பதற்கும் கோடிகோடி குவிப்பதற்கும்
    குவலயத்தின் இயற்கையினை கொள்ளையிடல் முறையாமோ
    நல்லபடி சிந்திப்போம் நாட்டுவளம் காத்துநிற்போம்
    எல்லோரும் சேர்ந்திருந்து இயற்கைதனைக் காத்திடுவோம் !

    Share
  • உளமிருத்தி வணங்கிடுவோம் !

     

     

    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    201705131355450623_mothers-day._L_styvpf

    உதிரத்தைப் பாலாக்கி
    உயிர்கொடுத்த உத்தமியை
    உலகத்தில் தெய்வமென
    உளமிருத்தி வணங்கிடுவோம் !

    நலமுடனே வாழ்வதற்கு
    பலதுயரை அனுபவித்து
    எமைவளர்த்த அம்மாவை
    ஏத்திநின்று வணங்கிடுவோம் !

    சான்றோனாய் ஆக்குதற்கு
    தன்னையே அர்ப்பணித்து
    தலைவனாய் உயரவைத்த
    தாயினது கழல்தொழுவோம் !

    Share
  • மாற்றம் – பகுதி 1

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா 

    மாற்றம் என்பது மனிதவாழ்வில் இன்றியமையாதது. மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது. அந்த மாற்றமும் – தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும். சிலவேளை – ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத்தோன்றும். இதனால் – மாற்றம் என்பது வந்தால், யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும். அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம். அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன்பெறுமளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.

    அப்படியான மாற்றங்கள்பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா? அப்படியான மாற்றங்கள் எந்தவகையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.

    சமயம் என்றால் என்ன? அது ஒரு “வாழும்நெறி.” வாழ்க்கை என்றால் என்ன? எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. எப்படியும் வாழலாம் என்றால் – அதனை வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. விலங்குகள் போல மனிதன் வாழமுடியாது.

    விலங்களுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது மட்டுமல்ல, புரியவும் மாட்டாது. ஆனால் பகுத்தறிவு மிக்க மனிதனுக்கு வாழ்க்கை பற்றித் தெரிய வேண்டும். தெரியாமலும், புரியாமாலும் வாழும் வாழ்வு மனித வாழ்வு அல்ல. இது விலங்கு வாழ்வேயாகும். அந்த விலங்கு வாழ்வைவிட்டு – மனிதன் மனிதனாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும் வல்லமை சமயத்துக்கே உண்டு. இதனால்தான் சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகவும் வாழும் நெறியாகவும் அமைந்திருக்கிறது.

    சமயம் உண்மையா? பொய்யா? கடவுள் உண்டா? இல்லையா? இப்படிப்பட்ட கேள்விகள் காலங்காலமாகக் கேட்கப்பட்டுக் கொண்டே வருவதைக் காண்கின்றோம். இதற்கான சரியான பதில்களும் அவ்வப்போது உரியவர்களால் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.

    ஆனால் உரிய பதில் அளிக்கப்பட்டபோதும் – இம்மாதிரியான குதர்க்கத்தன
    மான கேள்விகள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் சமயம் சம்பந்தமான நடவடிக்கைகளோ, கோவில்கள் கட்டி வழிபாடுகள் செய்யும் நிலைகளிலோ – எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. பதற்றமும் இல்லை. யாவும் அதன் வழியில் செம்மையாக நடைபெறுவதைப் பார்க்கின்ற பொழுது – இதனை ஒரு மாற்றம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

    இன்றைய உலகில் விஞ்ஞானம் பெரும்பகுதியில் வியாபித்து நிற்பதைக் காண்கின்றோம். மனித இயக்கம் முழுமையும் விஞ்ஞானத்தை அண்டியே அமைந்திருப்பதும் கண்கூடு. விஞ்ஞானமில்லாவிடின் மனிதனே வாழ முடியாது என்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்வை விஞ்ஞானத்துடன் இணைத்து விட்டான். இதனால் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றாகிவிட்டது.

    விஞ்ஞானத்தின் உச்சியில் நிற்கும் பல மேல்நாட்டவர்கள் தமது வாழ்க்கையைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர். மேல்நாட்டவர் வழியையே போற்றிநின்ற கீழ்நாட்டவரும் தமது நிலைபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது.

    எதனால் எல்லாமே செய்யமுடியும் என்று எண்ணியவர்கள் எல்லாம் – சற்று நின்று நிதானித்து நிற்க முயல்வதைக் காணமுடிகிறது. அதாவது – ”விஞ்ஞானம், விஞ்ஞானம்” எனப் பேரொலி எழுப்பிய நாடுகளும் – விஞ்ஞானம் சார்ந்தவர்களும், விஞ்ஞானம்தான் எல்லாமென எண்ணியவர்களும் – விஞ்ஞானத்துக்கு அப்பாலும் அதைவிடச் சக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது என்று உணரத் தலைப்பட்டமையைக் காணமுடிகிறது.

    அவர்கள் யாவரும் மெய்ஞ்ஞானம் பற்றியறியவும் – அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் – அதனால்தான் அர்த்தமுள்ள வாழ்வுகிட்டும் என உணரத் தலைப்பட்டு மெய்ஞ்ஞான மார்க்கத்தை நாடி,தேடி, ஓடி வந்துகொண்டிருப்பது – ஒரு பெரிய மாற்றம் அல்லவா?

    வாழ்க்கையில் இரண்டுவிதமான அமைப்புகள் காணப்படுகின்றன. முதலாவது உலகியல் சார்ந்தவாழ்கை. மற்றையது உலகியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. உலகியல் சார்ந்த வாழ்க்கையைத்தான் யாவரும் விரும்புகின்றோம். அதில்தான் பெரும்பாலானவர்களின் நாட்டமும் செல்கிறது.

    அதற்காகவேதான் நாளெல்லாம் உழைக்கின்றோம். அதுவும் ஓய்வற்ற உழைப்பெனலாம். உழைப்பின் முடிவில் காண்பதுதான் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாகும்! இதற்கு நாமெல்லோரும் நம்பியிருக்கின்ற விஞ்ஞானத்தால் விடை சொல்ல முடியாமல் இருக்கிறது.

    விஞ்ஞானம் என்பது ஓர் அளவுடன் தனது பணியை முடித்துக் கொள்கின் றது. அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மெய்ஞ்ஞானம்தான் கைகொடுக்க வேண்டும். மெய்ஞ்ஞானத்தால் அது முடியும் என்று கருதும் நிலை இன்று பரவலாகி வருவதும் நல்லதொரு வரவேற்கத்தக்க மாற்றம்தானே!

    சமயமும் கோவிலும் மாற்றத்துக்கு வழிவகுக்குமா? இது ஒரு முக்கியமான கேள்விதான். அதேவேளை இவையிரண்டையும் விட – நல்லமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய வேறு சாதனங்கள் இல்லையென்று யாவரும் நம்புகின்றனர்.

    விஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நிரந்தரமற்றவை. மெய்ஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்களோ நிரந்தரமானவை. இதனால்தான் “மெய்ஞ்ஞானம்” என்று சொல்லப்படுகிறது. மனிதவாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களுக்கு எல்லாம் சமயமும், அதனைத் தாங்கிநிற்கும் கோவில்களும் என்றுமே உறுதுணையாகி நின்றன. தற்போதும் நிற்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது.

    மனிதவாழ்வின் அடிநாதமே இறையுணர்வுதான். அதை ஊட்டியதும், காட்டியதும், சமயந்தான். இறையுணர்வுஅற்று வாழும் வாழ்வு ஒரு வாழ்வு அன்று; உயிர்த்துடிப்பற்ற வாழ்வாகவே அது அமையும். அதனை வாழ்வு என்று சொல்லவே முடியாது.

    உயிர்த்துடிப்புக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் இறைவனுக்கு உருவம் கொடுத்து – அந்த உருவங்களில் திருவருட் சக்தியை உருவேற்றி அவற்றை வைத்து – வழிபாடு என்னும் மடைமாற்றத்தை ஏற்படுத்த வழிசமைக்க உதவி நிற்பனதான் கோவில்கள். இதனால்தான் –

    “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”

    “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” – என்று சொல்லப்பட்டதோ என என்ணத்தோன்றுகிறது.

    சமூகத்தின் மையமாகக் கோவில்கள் திகழ்கின்றன. இந்த நிலையை அன்று தொடக்கம் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கிறது. எனவேதான் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஊர்கள் தோறும் கோவில்கள் அமைக்கப்பட்டன.

    கோவில்களை மையமாகக் கொண்டு கிராமங்கள் வளர்ந்தன. நகரங்களும் வளர்ந்தன. நாடும் வளர்ந்தது. ஆலயத்தை அரணெனக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக அமைந்தது.

    எதைச் செய்தாலும் – அதனை ஆரம்பிக்கும் முன்னர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னரே செய்யும் வழக்கம் பண்டுதொட்டு நிலவிவந்தது. அதனை தற்போது – சிலர் தேவையற்ற ஒன்று என்றும், மூடத்தனமானது என்று சொல்லுவதையும் கேட்க முடிகிறது. கோவில் என்றும், ஆலயம் என்றும் இறைவனது சன்னிதானத்தை அழைப்பதில் கூட மிகச்சிறந்த பொருள் பொதிந்து இருக்கின்றது.

    “கோ’ என்றால் தலைவன். “இல்” என்றால் இருக்குமிடம். எனவே               “கோவில்” என்றால் உலகத்துக்கும், உயிர்களுக்கும் எல்லாம் தலைவன் ஆகிய இறைவன் இருக்குமிடம் என்ற பொருளாகின்றது.” ஆலயம் ” என்பதன் பொருள் – ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்பதாகும். எங்களது பாரம்பரியத்தில் – வாழையடி வாழையாகக் கோவில்கள் – நல்ல திருப்பத்துக்கும், மனமாற்றத்துக்கும் உறுதுணையாகவே வந்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

    வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல. வாழ்க்கையை – வாழ்க் கையாக எண்ணி வாழ்கின்ற மனிதன் – மனத்தை உடையவன். அந்த மனத்தில் நல்ல சிந்தனைகள் எழுதல் வேண்டும்.

    “எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய்” என்னும் வேத வாக்கை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒரு கூட்டமாகக் கூடி எமது முழு இயக்கத்தையுமே மாற்றிச் சிதைத்துவிடும் வல்லமை பெற்றன. அகத்தோடு தோன்றும் எண்ணங்கள் வழி – புறச் செயற்பாடுகளும் அமைந்து விடுகின்றன. இதனால் அகச் சிந்தனைகள் நல்ல மாற்றம் பெற வேண்டும். அகம் நல்ல மாற்றம் பெறவும் – அதன்வழி புறச் செயற்பாடுகள் நல்லபடி அமைவதற்கான மடைமாற்றம் செய்யக் கோவில்கள் உதவுகின்றன. சமயமும் கோவிலுடன் இணைந்து நின்று மாற்றத்துக்கு வலுவூட்டி நிற்கிறது.

    புராணங்களும், இதிகாசங்களும் எமது சமயத்தின் கருவூலங்கள். இவை யாவும் கற்பனையிலுதித்த கதைகள். விசித்திரமானவை. விளங்க முடியாதவை என்றெல்லாம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் – அவை யாவும் – மனிதகுல மாற்றத்துக்கு அருந்துணையானவை. அருமருந்தாய் என்றும் விளங்குகின்றன.

    ஆதிகாவியமான இராமாயணத்தைப் பாடிய வான்மீகி பற்றிய ஒரு சம்பவம் கதையானாலும் – முக்கியக் கருத்தொன்றை வெளிக்காட்ட உதவுகிறது எனலாம். களவுத்தொழிலையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டிருந்த வான்மீகி – புனிதமான இராமாயணத்தைப் பாடி சமூகமாற்றத்துக்குப் பலவழிகளில் உதவிநின்றபாங்கு – வான்மீகியிடம் ஏற்பட்ட மாற்றமேயாகும். அப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறியும் பொழுது – நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் கிடைக்கின்றதல்லவா?

    ராம நாமத்தையே உச்சரிக்க முடியாத அளவுக்கு கல்வியறிவற்ற கசடன் ஆகவும், கடையனாகவும், இருந்தவனை – மரா மரா என உச்சரிக்கச் செய்து முடிவில் அந்த உச்சரிப்பு “ராம ராம” என உருமாறி ராமாயணம் பாடப்பட்டது என்பது வரலாறாகும். இது கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதன்மூலம் வெளிப்படும் கருத்தே முக்கியமானதாகும். இறைநாமத்தின் பெருமையும், அதனை உச்சரிப்பதால் எப்படிப்பட்ட மனமும் மாறிவிடும் என்பதும் – அப்படி ஏற்படும் மாற்றம் ஒருவருக்கும் மட்டுமே பயன் கொடுக்காது உலகத்துக்கே பயனாகி – உலகிலே பரந்துபட்டளவிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது என்பதை மறுக்கத்தான் முடியுமா?

    வான்மீகி ராமாயணம் பல மொழிகளில் தழுவி மொழிமாற்றம் செய்யப்பட்டோ எப்படியோ எல்லாவிடங்களிலும் பரவிவிட்டது. அக்காவியம்-  தான் எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தன்னிகரற்றதாகவே யாவராலும் ஏற்றிப் போற்றப்படுகிறது. இராமாயணத்தில் வரும் இராமன் – தெய்வமாகிவிட்டான்; குடும்பங்கள் அனைத்தும் – இராமனைப்போலவே தங்கள் பிள்ளைகளும் இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். சீதை கற்புக்கு எடுத்துக்காட்டாகி விடுகிறாள். எத்தகைய வல்லமைகள் இருந்தாலும் நல்லவழியில் செல்லாவிட்டால் யாவும் பயனற்று விடுவதோடு – முடிவில் அழிவையே தந்துவிடும் என்பது – இராவணன் வாயிலாக உணர்த்தப்படுகிறது. இவை எல்லாம் இராமயணம் சமூகத்துக்குக் காட்டும் நெறிகளல்லவா!

    வான்மீகி மாறினான். இராமாயணம் பிறந்தது. இராமாயணத்தால் மாற்றங்க ளுக்கு வழியுமேற்பட்டது. இம்மாற்றமானது சமயத்துடன் இணைந்து சமூகத்துக்கும் சென்றுவிட்டது. இதனால்தான் கோவில்கள்தோறும் இராமாயணம் கதையாகவும், கதாப்பிரசங்கமாகவும், வில்லுப்பாட்டாகவும், நாடகமாகவும் நிகழ்த்தப் பட்டுவருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    இராமாயணம் மாற்றத்துக்கு எப்படி வழிகோலியதோ – அதே போன்றுதான் மகாபாரதமும் அமைகிறது. அரச வம்சங்களின் போட்டா போட்டி, சண்டைபற்றி மகாபாரதம் கூறினாலும்- அதில் இடம்பெறும் “பகவத்கீதை” இந்துக்களின் வேதமாகவும், இருதயமாகவும் விளங்குகின்றது.

    வாழ்க்கையெனும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் யாவருக்கும் பகவத்கீதை மருந்தாக அமைகின்றது. மனத்தில் ஏற்படும் எண்ணங்கள் செயலைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் நல்லதாக அமையின் செயல் நல்லபடி அமையும்.  அல்லாவிடின் தீய விளைவுகள் ஏற்படும். எனவே மனந்தான் யாவற்றுக்கும் அடிப்படை. மனத்தை நல்வழிப்படுத்தக் கீதை வழி சொல்லுகிறது.

    கீதையின் போக்கே தனித்துவமானது. அதனால்தான் யாவரும் பொன்னேபோல் அதனைப் போற்றுகின்றனர். உலகியல் நடைமுறையில் சென்று – உள்ளத்தைத் திருத்தி  உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் அழுக்குகளை அகற்றி – உலப்பிலா ஆனந்தம யமான இறையுணர்வை ஏற்படுத்தும் பெருமாற்றத்தை இன்றளவும் “பகவத்கீதை” ஆற்றிக் கொண்டிருக்கிறது. பாரதத்தில் இடம்பெறும் பஞ்ச பாண்டவர்கள் அறத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றுவரான துரியோதனன் ஆகியோர் மறத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றனர். நோயைக் குணப்படுத்தும் மருந்து அளவில் சிறியதானாலும் – அதன் செயற்பாடு மிகப் பெரியது. இத்தத்துவம் மகாபாரதத்தால் உணர்த்தப்படுகிறது. அருமருந்தாக விளங்கும் இவைகள் மாற்றங்களுக்கு என்றும் வழிவகுத்தபடியேதான் இருக்கின்றன என்பது உண்மையல்லவா?

    ‘பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ ” – என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசபதவி வகித்தபோதும் அவர் மனத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.

    கவித்துவம் மிக்க சேக்கிழார் – தனது சிந்தனையைச் சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்லவிட்டார். அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப்பிரசாதம்தான் “பெரியபுராணம்” ஆக அமைகிறது. தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதற்கு ஒப்ப – சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் – சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம் நாமும் மாற்றத்துக்கு ஆளாகிவிடுவோம்!

    பெரியபுராணத்தில் வரும் அடியார்களின் மாற்றங்கள் யாவும் நிகழ்வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களும்தான்.

    நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில். நாவுக்கரசரை மாற்றியதும் கோவில். சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரர் மனம்மாறி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவில்தான். முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத்ததும் கோவில்தான்.

    அறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு – சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரணமெனலாம்.இதனால்தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணியிலும், கோவிலுடனும் இணைத்துக் கொண்டார்கள்.இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில்கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.

    சம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ்சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான் எமது சைவத் திருமுறைகள். கோவில்தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச்சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும் – இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.

    இவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பலரை மாற்றமுறச் செய்தது. இதனால் நன்னெறி வளர்ந்தது. கோவில் வழிபாடும் சிறப்படைந்தது. நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் – இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் – அறவழியில் செல்லவும் – உதவியதை மறக்கமுடியாது. இவை நல்ல மாற்றங்கள்தானே!

    (தொடரும்)

    Share
  • ஓலமிட்டு அழுகின்றோம் !

     

     எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    26-1448504357-jayalaitha2311-600

    ஜெயமென்னும் பெயர்கொண்டு
    ஜெயித்துவந்த ஜெயாவம்மா
    ஜெயாமுதல்வர் பதவியுடன்
    ஜீவனையே கொடுத்துவிட்டார்
    ஜெகமதனில் ஜெயிப்பதற்கு
    ஜெயலலிதா ஆகிநின்றார்
    ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்
    ஜெயாவம்மா வாழுகிறார் !

    துணிவுகொண்ட பெண்ணானார்
    துயர்பலவும் தான்கண்டார்
    தனிமையிலே தவித்தாலும்
    தமிழ்நாட்டை நினைத்துநின்றார்
    அமுதான தமிழோடு
    ஆங்கிலமும் பேசிநின்றார்
    அதிமுகாவினது ஆணிவேராய்
    அவர் இருந்தார் !

    அஞ்சாமல் ஆட்சிசெய்த
    அம்மாவைக் காண்பதெப்போ
    அவருடைய துணிவான
    அழகுதமிழ் கேட்பதெப்போ
    புன்சிரிப்பு பூத்துநிற்கும்
    பூமுகத்தைக காண்பதெப்போ
    புகழ்பூத்த பெண்மணியே
    உனைக்காணா அழுகின்றோம் !

    ஆளுமைமிக்க அரசியல் தலைவியே
    ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை
    போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை
    காலனைவென்றிடும் வல்லமை இழந்ததேன் !

    உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா
    உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே
    என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்
    உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் !

    Share
  • சிட்னியில் கம்பன் விழா!

    aj1

    22 / 10 / 2016 சனிக்கிழமை சிட்னியில் இடம்பெற்ற கம்பன்விழாவில்
    சான்றோர் விருது வழங்கிய நிகழ்ச்சிகள்.

    ” சான்றோர் ” விருது பெற்ற பிரம்மஶ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

    aj2
    சான்றோர் விருதுவழங்கும் விழாவில் அமைச்சர்களுடன்

    aj4

     

    Share